அபரிமிதமான செல்வம் – 4

  • பொருள்கள் வந்த புதிதில் கிராக்கியாக, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
  • நாளடைவில் கிராக்கி மலிவாகி, விலை குறைகிறது.
  • அந்நேரம் அவை பயன்படும், வேறு உபயோகமில்லை.
  • ஒரு பேனாவை எழுதப் பயன்படுத்தலாம், அதற்கு இன்று வேறு பயனில்லை.
  • பணம் இன்றும் புதியதாக இருப்பதால் (scarce) அதற்கு மதிப்பு, கிராக்கியுள்ளது.
  • ஒரு நாள் பணம் சமூகத்தால் நிறைந்து மலியும். அன்று அதற்கு (exchange value) பொருள்களை வாங்கும் திறன் மட்டுமிருக்கும். சேமித்தால் பயன்படாது.

எவ்வளவு காற்றிருந்தாலும் நாம் தேவையான அளவுக்கே மூக்கால் பயன்படுத்துகிறோம். அதிகமாகப் பயன்படுத்த முடியாது. தேவையான அளவுக்குத் தாராளமாகப் பயன்படுத்த காற்று அபரிமிதமாக இருக்க வேண்டும் என்பது அவசியம். காற்றுபோல் பணம் ஒரு நாள் தேவைக்கு மட்டும் பயன்படும் அளவுக்கு சமூகத்தில் அளவுகடந்து பெருகும். எனவே,

அபரிமிதமான பணம் அவசியம் தேவை.

பணம் பெருகுவதால் என்ன பயன்? ஓரளவுக்குப் பெருகும் வரை நாம் பணத்தால் தேவையான பொருள்களை வாங்குகிறோம். இனி வாங்க வேண்டிய பொருள்களில்லை எனில் பணம் சேமிப்பாகிறது. சேமிப்புக்கு வட்டியாக வருமானம் வருவதால் மனிதனுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை (leisure) என்று ஓய்வுண்டாகிறது. ஓய்வு என்பது நம் மனத்திற்கு ஓய்வு. அதிலிருந்து புதுக் கருத்துகள் எழும். புது எண்ணம் புதுத் தெம்பை அளிக்கும். முன்னேற்றத்திற்கு முடிவில்லை என்பதை புதிய சக்தியை அளவு கடந்து உற்பத்தி செய்யலாம் என்று கூறலாம். சக்தி பணம்.

அளவுகடந்த பணத்தை முடிவில்லாமல் உற்பத்தி செய்யலாம்,

என்ற கருத்து தெளிவாகிறது.

குறைவாகச் சம்பாதிப்பவன் அதிகமாகச் சம்பாதிப்பது அவனுக்கு அதிக வருமானம். சமூகத்தில் உள்ள பணத்தின் அளவு அதனால் மாறாது. சமூகத்தில் உள்ள பணத்தின் அளவு பெருகுவது சமூகத்தின் வருமானம் அதிகரிப்பதாகும். அதையே பணம் பெருகுவது எனலாம்.

  • என்றும்போல் வாழ விரும்புபவர்க்கு அதிக வருமானத்தால் பெரும் பலனில்லை.
  • முன்னேற விரும்புபவன் முன்னேற்றத்திற்குரிய அதிக சக்தியை உற்பத்தி செய்வான். அதிக சக்தியை உற்பத்தி செய்ய லிமிட் கிடையாது. சக்தி பணம், அதிக சக்தி அதிகப் பணம். அவனால் அளவுகடந்த பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.
  • பணம் சரக்கன்று. சரக்குக்குப் பயன் உண்டு. வேறெதுவும் கிடையாது. பணம் சமூகத்தை மாற்றும் கருவி. எந்தச் சரக்காலும் சமூகத்தை மாற்ற முடியாது.

இன்றுவரை உலகில் பணம் பெருகியுள்ளது. இது நம்மையறியாமல் நடந்தது. கல்வி 1900வரை தானே பரவியது. அதன்பின் உலகம் கல்வி முக்கியம் எனக் கருதி முயன்று கல்வியைப் பரப்பியது. தானே நடந்தது (conscious) நாமே முனைந்து நடந்தால் (unconscious) அளவு கடந்து பெருகும். இதுவரை தானே பெருகிய பணத்தை இனி நாமே முனைந்து பெருக்க முயன்றால், பணம் பெருகுவதற்கு அளவில்லை. மனிதன் முன்னேறியுள்ளான். உழைத்தவன் இன்று சிந்திக்கின்றான். உடலிலிருந்து அறிவுக்கு முன்னேறியுள்ளான் என்று கொள்கிறோம். இந்த முன்னேற்றம் உண்மை என்றாலும், இது பூர்த்தியாகிவிட்டதா? இதனால் பெறவேண்டிய முன்னேற்றத்தில் நாம் இதுவரை பெற்றது சிறு பங்கு. மிகச் சிறிய பங்கு. இது உடலுக்கும், அறிவுக்கும் மட்டும் உள்ள நிலையில்லை. கார் வந்து 120 வருஷமாகிறது, போன் வந்து 140 வருஷமாகிறது. இரயில் வந்து 180 வருஷமாகிறது. இவை மேல் நாட்டார் நமக்குக் கொடுத்தது. கல்வி 1000 ஆண்டிற்கு முன் தெரிந்தது. கலை அது போல் நாம் முன்னரேயறிந்தது. குடும்பம் அதற்கு முன் ஏற்பட்டது. நிலத்திற்கு உரம் 60 வருஷமாக உள்ளது. இன்ஸுரன்ஸ் நாட்டில் 100 ஆண்டாகப் பழக்கம். சத்தியம் ஏற்பட்டு எவ்வளவு நாளாகிறது? இவற்றையெல்லாம் நாம் முழுவதும் பயன்படுத்துகிறோம் எனக் கூற முடியுமா? நாட்டின் கோணத்தில் பார்த்தால் இவற்றை 30% முதல் 1% வரைப் பயன்படுத்துகிறோம். போனும், கல்வியும், மருந்தும், நாணயமும் இனி ஏராளமாகப் பரவ இடம் உண்டு. அதேபோல், நாம் பணத்தை ஆயிரமாயிரமாண்டாக அறிவோம். அதை முழுவதுமாக இன்னும் அறியவில்லை.

பணத்தை நாடு பெருக்க முனைந்தால் ஏராளமாகப் பெருக்கமுடியும். அதற்கு முடிவில்லை.

கல்விக்குத் தடையிருந்த காலம் உண்டு. இனி அது இல்லை. லைப்ரரி என்பது பரவி வரும் காலம். தினசரிப் பத்திரிகைகளும், வார இதழ்களும், எளிய புத்தகங்களும் ஏராளமாக வெளிவருகின்றன. Internet கல்வியை உலகில் எங்கிருந்தும் பெறலாம் என்ற நிலையைத் தருகிறது. எந்தக் கல்லூரியிலும், எந்த நாட்டு கல்லூரியிலும் எவரும் பயிலலாம் என்பது இன்றைய நிலை.

படிக்க அளவில்லாத வாய்ப்புண்டு.

மனத்திற்கு இரு பகுதிகள் உண்டு. ஞானம், உறுதி எனப்படும். கல்விக்குரியது ஞானம். பணத்தை உற்பத்தி செய்வது உறுதி. அளவில்லாமல் படித்து ஞானத்தை உற்பத்தி செய்யமுடியும் என்றால், அளவில்லாமல் உறுதி பெருகும். இவை கூறுவது,

அளவில்லாமல் பணம் உற்பத்தியாகும்.

மனம் ஜடத்தை உற்பத்தி செய்தது என்பது ஸ்ரீ அரவிந்தம். வாழ்வு ஜடத்தின் பகுதி. பணம் வாழ்வில் கடுகளவு, மனம் பணத்தை உற்பத்தி செய்ய முனைந்தால், அதற்களவில்லை. மனிதன் தெய்வமாவது யோக இலட்சியம். ஸ்ரீ அரவிந்தரது சிஷ்யர்கள் கடவுளாகாவிட்டால், யோகத்தில் தோல்வியடைந்தவராவோம். குறைந்தபட்சம் பணத்தையாவது அபரிமிதமாக உற்பத்தி செய்து யோகத்தில் தோல்வியை ஏற்கலாம். இந்தச் சட்டம் பணத்திற்கு மட்டும் உரியதன்று. அளவுகடந்து பெருக்கும் அனைத்திற்கும் உண்டு. நாம் அளவு கடந்து (infinite) பெருகுவதைச் சில விஷயங்களில்தான் பார்க்க முடிகிறது. அப்பெருக்கம் உள்ள இடங்களிலெல்லாம் காண்பதில்லை. Internet உம்., e-mailம் ஒரு நாளைக்கு 10 லட்சம் செய்திகளை 100 கோடிச் செய்திகளாக மாற்றுகிறது. விமானப் பயணம் அதுபோல் வளர்கிறது. கலைக்களஞ்சியத்தைப் படிப்பவர் எண்ணிக்கையும் அதுபோல் வளர்கிறது. இவை வளர்ச்சியின் முடிவுக்கு முன்னுள்ள கட்டங்கள். அதைக் கடந்து போனால் அபரிமிதம், அனந்தமாகும். பணவளர்ச்சியை நாம் அதுபோல் தொடரலாம். வாழ்வு, காலத்தில் ஏற்பட்டது. நவீனச் சாதனங்கள் காலத்தைச் சுருக்குகின்றன. காலம் சுருங்கினால் வாழ்வு பெருகும். வாழ்வு பெருகினால் பணம் பெருகும். இதன் பலனை அடைபவர் பலர். அவர்கட்கு என்ன நடக்கிறது எனத் தெரியாது. 55 வயதில் ஓய்வு பெற்றவர் மேலும் 10 வருஷமிருப்பதில்லை. அது அரிது. அமெரிக்காவில் ஓய்வு பெற 65 வயதாக வேண்டும். 20 வருஷம், 25 வருஷம், 30 வருஷம் என சர்வீஸுண்டு. 45 வருஷ சர்வீஸும் உண்டு. 20 வருஷம் வேலை செய்து ஓய்வு பெற்றவர் 85 வயதில் 20 ஆண்டு பென்ஷன் பெறுகிறார். நிலைமை மாறுகிறது. 20 ஆண்டு சர்வீசில் பெற்ற தொகையை விட 20 ஆண்டு பென்ஷன் தொகை பெரியதாக இருக்கிறது. நிலைமை மாறி சம்பளத்தைவிடப் பென்ஷன் அதிகமாக வருகிறது. சமூகம் காலத்தைச் சுருக்குவதால் பென்ஷன் அதிகமாக வருகிறது என்பதை விளக்குவது கடினம்.

வேலை : மனிதனுடைய உற்பத்தித் திறன் அதிகமாவதால் மனிதன் தன் உழைப்பால் அதிகப் பணத்தை உற்பத்தி செய்கிறான்.

உறவு : நாளுக்கு நாள் மனிதன் மற்றவர்களுடன் பழகுவது அதிகமாகிறது. உறவு அதிகமானால் உற்பத்தி அதிகமாகும் என்ற கருத்து முழு உண்மையானாலும், பொருளாதாரரீதியாகவோ, தத்துவமாகவோ விளக்குவது எளிதன்று. உறவு அதிகமான இடத்தில் பணம் அதிகமாகப் புழங்குவதைக் காட்டலாம். பாங்க் டெப்பாசிட் 9 மடங்கு வளர்வதுபோல் இருவர் இனிக்கப் பழகுவது ஓர் உற்பத்தி ஸ்தானம். Human exchange is a point of production.

ஒரு புது ஸ்தாபனம் – ரயில்வே, தந்தி, தபால், கல்வி, சர்க்கார், Internet போன்றவை – வந்தால் ஏற்கனவே உள்ள அத்தனை ஸ்தாபனங்களும் அதனுடன் இணைகின்றன. அதனால் அத்தனையும் உயர்வடைகின்றன.

இப்படிப் பார்த்தால் பணத்தின் அளவும் திறனும் உயர்கின்றன. அதன் மூலம் மனிதனுடைய திறமை அதிகரிக்கிறது. அவனால் மேலும் பணம் உற்பத்தி செய்யமுடிகிறது. இதற்கு முடிவில்லை.

நம்பிக்கை ஆரம்பத்தில் சிறியது. நாளாக ஆக நம்பிக்கை அதிகரிக்கிறது. சர்க்கார் நெல்லை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்றால் நம்பிக்கை மேலும் உயர்கிறது. நம்பிக்கை உயர்ந்தால், பணம் பெருகும்.

அதேபோல் வேகம், ஆயுள், ஸ்தாபனம், சக்தி, எண்ணம், ஏற்றுமதி ஆகியவை அதிகரித்தால் பணம் பெருகும்.

அகந்தையை வெளிப்படுத்த அனுமதியில்லை. தானே கொண்டாடலாம். வெளியில் நானே பெரியவன் என்று கூற இனி இடமில்லை. அகந்தை அழிந்தால், பணம் பெருகும்.

பணமும், பண்பும் : நெல், கம்பு, மணிலா, உளுந்து போன்ற தான்யங்கள் பணம். மேஜை, நாற்காலி, பாத்திரம், மிக்ஸி போன்ற பொருள்கள் பணம். தையல், வைத்தியம், கூலிவேலை, கல்வி போதிப்பது, வழக்காடுவது போன்ற services சேவைகள் பணம். பொருள்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்பவன் பணம் சம்பாதிக்கின்றான். நாணயம், நல்லெண்ணம், நட்பு, கடமை, கட்டுப்பாடு, ஆகியவை பண்புகள். பொருள் பணம் என்பதை ஏற்கலாம். பண்பு பணம் என்பது விளங்கவில்லை. பண்பு என்பது மனித உறவில் மட்டுமன்று, வேலையிலும், வியாபாரத்திலும், ஆபீசிலும், தர்ம நியாயத்திலும், தனிப்பட்ட முறையிலும், ஆன்மீகத்திலும் பண்புண்டு. வேலையை அழகாகச் செய்வது (Work value) வேலைக்குரியது. ஸ்டூல் ஆடினால், கால் தரையில் படியாவிட்டால் அது வேலையில்லை. ஸ்டூல் அழகாக நன்றாக இருப்பது அவசியம். வீட்டுக்கு வருபவரை யார், ஏன் வந்தீர்கள்? என யாரும் கேட்கமாட்டார்கள். வருபவரை அன்பாக உபசரித்து வரவேற்பது (Social value) பழக்கத்திற்குரிய பண்பு. வியாபாரத்தில் விலையின் நேர்மை, பொருள் தரமாக இருப்பது (Commercial value) வியாபாரத்திற்குரிய பண்பு. பண்பில்லாத மனித உறவில்லை. வியாபாரிக்குப் பண்பில்லாவிட்டால் வியாபாரம் நடக்காது. ஆபீசில் வருபவர்களிடம் முகம் சுளித்தால் கெட்ட பெயர் வரும். பழகத் தெரியாவிட்டால் ஒதுக்கப்படுவோம். பண்பு நிறைந்தவர் வசதியாகவும், குறைந்தவர் வசதி குறைவாகவுமிருப்பார்கள். பண்பு பணம்.

பொருளை உற்பத்தி செய்தால் அதன் மூலம் வேலை வரும். தான்யம் பத்திரப்படுத்தப்பட வேண்டும். பேப்பர் உற்பத்தி செய்தால் லாரி மூலம் அனுப்ப வேண்டும். உற்பத்தி, பொருள் எனில் வேலையுண்டு. வேலைக்குரிய பண்புண்டு. வேலைக்குரிய பண்புகள் (Functional values) என்பன அலமாரியைத் திறந்தால் மூடவேண்டும், சாவியை உரியவரிடம் தரவேண்டும். அது தவிர மனிதனுக்குரிய பண்புண்டு. சிறியவரிடம் சாவியைக் கொடுக்கும் போது அன்பாகக் கொடுக்க வேண்டும். பெரியவரிடம் தரும்போது பணிவாகத் தரவேண்டும். பெண்களிடம் தரும்பொழுது பெண்ணுக்குரிய மரியாதை வேண்டும். இவை (Pure values) பண்புகள், மனிதத் தன்மைக்குரிய பண்புகள். பொருள் உற்பத்தியாவதும், வேலை செய்வதும் மனிதனுக்குரியது. பண்பு என்பது சூட்சுமமானது. அது மனிதனுடன் நிற்பதில்லை. அதற்கு முடிவில்லை. மரியாதைக்கும், நாணயத்திற்கும் எல்லையில்லை. அவை முழுமை பெறும்வரை, முடிவில்லாமல் வளர்பவை. பண்பு பணமானால், பண்புக்கு முடிவில்லை என்றால், பண்பால் உற்பத்தியாகும் பணத்திற்கும் முடிவில்லை.

பண்புகளை முடிவில்லாமல் உற்பத்தி செய்பவன், பணத்தைமுடிவில்லாமல் உற்பத்தி செய்ய முடியும் என்பது தத்துவம்.

தரமான பொருள், குறித்தபடி கொடுப்பது, அழகான பேக்கேஜ், நாணயமான வியாபாரம், நம்பிக்கையான கொள்முதல், இனிய பழக்கம் ஆகியவை சரக்குக்கு மரியாதை தரும். அதேபோல் டாக்டர், வக்கீல், ஆடிட்டர், ஆசிரியர், ஆபீசர் ஆகியவர் செய்யும் வேலைகளும் பணியால் சிறப்படைகின்றன. பண்பு பொருள்களிலிருந்து வேறுபட்டன என்றாலும், வேலையுடன் கலந்து வரும் பண்புகளே அதிகம். மனம் ஜடத்தை உற்பத்தி செய்தது. பண்பு பொருள்களை உற்பத்தி செய்தது. நாம் பொருள்கள் என்று கூறுவது மனிதனுக்குரிய பல்வேறு பண்புகளால் உற்பத்தி செய்யப்பட்டவை. நாம் பொருள்களை ஜடமாகவும், வேலையை உழைப்பாகவும், பண்புகளை மனத்திற்குரியனவாகவும் கருதுகிறோம் என்றாலும், முடிவாக அனைத்தும் ஒன்றே.

சமூகம் பொருள்கள் மூலம் பணம் உற்பத்தி செய்வதுபோல், பண்புகள் மூலமும் பணத்தை உற்பத்தி செய்கிறது. சமூகம் பண்பால் பணத்தை உற்பத்தி செய்தால், மனிதன் பண்பால் பணத்தை உற்பத்தி செய்யலாம். பண்புள்ளவர் பண்பற்றவரைவிட அதிகமாகச் சம்பாதிப்பதைக் காண்கிறோம். பண்பு தனியாகப் பணம் சம்பாதிப்பதைக் காண்பது அரிது. ஒரு புதிய பழக்கம், ஸ்தாபனம் சமூகத்தில் உற்பத்தியானால், சமூகம் ஓரளவுக்கு அதற்குத் துணை செய்யும். அப்பழக்கம் வேரூன்றிவிட்டால், அதுவே தானாக வளரும். ஒரு செடியை நட்டால் நாம் அது வேரூன்றுவதுவரை தண்ணீர் விடுகிறோம். அதன்பிறகு தானே வளர்வதுபோல் சமூகப் பண்புகள் ஓரளவுக்கு வளர்ந்தபின் தாமே வளரும்.

ஆயிரம் ஆண்டுகட்கு முன் மனிதன் பேச்சை அதிகமாக அறியவில்லை. ஓரூரில் கொஞ்சம் பேர்தான் சரளமாகப் பேசுவார்கள். மற்றவர்கள் எளிய சொற்களை மட்டும் அறிவார்கள். அன்று ஒருவன் சளைக்காமல் பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தனர். ஒரு நாள் ஊரிலுள்ள அனைவரும் அவன்போல் பேசுவார்கள் என்று அன்று கூறியிருந்தால், எவரும் நம்பியிருக்கமாட்டார்கள். இன்று ஓரூரில் ஒரு கோடி பணம் உள்ளவர் சிலர். ஒரு நாள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி சொத்திருக்கும் என்று இன்று கூறினால் நம்புவது கஷ்டம். மொழி பரவியதுபோல் பணமும் பரவும். மொழி வளர்ந்து வேரூன்றி தானே வளர ஆரம்பித்துவிட்டது. தன்னையறியாமல் வளர்கிறது.

இது மொழிக்கும், பணத்திற்கும் மட்டும் உரிய சட்டமன்று. கல்விக்கும் உரிய சட்டம் இதுவே. நாணயத்திற்கும் அதுவே பொருந்தும். நம்பிக்கைக்குரிய சட்டமும் அதுவே. சமூகம் ஏற்படுத்துகிற ஸ்தாபனங்களாகிய விவசாயம், வியாபாரம், மார்க்கட், போக்குவரத்து, விளையாட்டு, கல்வி, குடும்பம், பணம், மொழி ஆகிய அனைத்து ஸ்தாபனங்கட்கும் இது பொது விதி. ஆயிரமாண்டாக மார்க்கட் வளர்ந்தது. கடந்த 20 வருஷமாக மார்க்கட் வளர்வது, tourism வெளிநாட்டுப் பிரயாணிகள் எண்ணிக்கைக் கூடுவது இந்தச் சட்டப்படிதான். நாம் வளர்ச்சியைக் காண்கிறோம், வளர்ச்சியின் காரணத்தை அறிய முயல்வதில்லை. பொருள்கள் பணம், தொழில் பணம். பண்பு பொருள்களுக்கு அதிக விலை தரும், தொழிலுக்கு அதிக பீஸ் தரும் என்பவை விளங்கும். பண்புகள் மட்டும் பணம் என்பது விளங்காது. கடந்த 20 அல்லது 30 ஆண்டுளாக இந்திய மார்க்கட் அது போன்ற பண்புகள், வியாபாரத்திற்குரிய பண்புகளை – punctuality, சுத்தம், நாணயம், அழகான பேக்கேஜ் போன்ற பண்புகள் – ஏற்றதால் விரிவடைந்துள்ளது. எந்த நாட்டில் மார்க்கட் வளர்ந்தாலும், இப்படித்தான் வளர்கிறது. பண்பால் வளர்ந்தன என எடுத்துக் கூறலாம். எந்தக் கோணத்தில் விளக்கினாலும், பண்புகள் அதனுள் அடக்கம்.

கம்ப்யூட்டர் அசுர வேகத்தில் வளர்கிறது. வேகத்திற்குரியது கம்ப்யூட்டர். வேகம் வளர்ச்சி. வேகத்தை வளர்க்கும் கம்ப்யூட்டர் வளர்வதில் ஆச்சரியமில்லை. வேகம் காலத்தைச் சுருக்குகிறது. சக்தியைக் குறைக்கிறது. வேலையைக் குறைக்கிறது. இவையெல்லாம் பணம் பெருகும் வழிகள். பொருளாதாரம் ஒரு நாட்டில் முன்னேறுவதை டெக்னாலஜி மூலம் அறிகிறோம், முதலீடு மூலம் அறிகிறோம், நிலக்கரி, எண்ணெய் போன்றவை கிடைத்ததன் மூலம் புரிந்து கொள்கிறோம். பண்புகளால் பொருளாதாரம் வளர்வதை நாம் கவனிப்பதில்லை.

சமூக வளர்ச்சிக்குப் பல அங்கங்களுண்டு. பொருளாதாரம் அதில் ஒன்று. அரசியல் வளர்ச்சி முக்கியமானது. ராணுவம் அடுத்தது. கல்வி, கலை எனப் பல அம்சங்களில் பொருளாதாரம் ஒன்று என்பதை நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.

குழந்தை தானே வளர்வதுபோல் சமூகம் தானே வளர்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்குச் சாப்பாடு, கவனம், காற்று என்பவை துணை செய்கின்றன. அதேபோல் சமூகம் தானே வளர்கிறது. டெக்னாலஜி, மூலதனம், கனிப்பொருள்கள், பணம், போக்குவரத்து என்பவை துணை செய்பவை. சமூக வளர்ச்சியில் பொருளாதார வளர்ச்சி ஒன்று. தானே வளராத சமூகத்திற்குப் பணமோ, டெக்னாலஜியோ, மற்ற எதுவோ பயன் தாராது. சமூகத்தின் வளர்ச்சி தன்னிச்சையாக வளர்வது.

சமூகத்தின் வளர்ச்சியைப் பல கோணங்களில் பார்க்கலாம் என்றாலும், பண்பால் சமூகம் வளர்வதைக் கருதுவோம். பண வளர்ச்சியே நம் கருத்து, சமூகமன்று. மனித வாழ்வு சௌகரியமாவது சமூக வளர்ச்சி. மனிதனுக்கு வசதியும் சௌகரியமும் வருகின்றன. இது சமூகத்தின் நல்லெண்ணம். மனிதன் வசதியாக வாழவேண்டும், நீண்ட ஆயுளுடனிருக்கவேண்டும், சுத்தமான சூழ்நிலையில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், பற்றாக்குறையால் பதறக்கூடாது, படிப்பறிவு பெறவேண்டும் என்பது சமூகத்தின் நல்லெண்ணம். இதன் பிறகு சமூகம் அவனுக்கு அதிக வசதி தரும்பொழுது குறைந்த விலைக்குத் தருகிறது. இன்றைய சமூகத்தின் நல்லெண்ணம் மனிதனுக்கு மலிவுப் பொருளாக வருகிறது. நாம் வாங்கும் பொருள் அதிக வசதி தருவதாகவும், குறைந்த விலையுள்ளதாகவு மிருக்கின்றது. கம்ப்யூட்டரிலும், தினசரி பேப்பரிலும் இதைத் தெளிவாகக் காணலாம். மக்கள் செலவைக் குறைத்து அதிக வசதி பெறுவதால் பணம் உபரியாக அவர்கள் கையிலிருக்கின்றது. ஏராளமாகப் பணம் மக்கள் கையிலும், பாங்க்களிலும், கம்பனிகளிலுமிருப்பதால் வட்டி குறைகிறது. இந்தியாவில் டெபாசிட் போட்டால் 12% வட்டி கிடைக்கும். ஐரோப்பா, அமெரிக்காவில் 3%, 3½% தான் கிடைக்கும். ஜப்பானில் 0% வட்டி. அனைவரும் இதை அறிந்தாலும் சமூகக் கண்ணோட்டத்தில் இதன் காரணம் எவருக்கும் விளங்கவில்லை.

இதை நான் maturity சமூகம் முதிர்ச்சியடைந்தது என்று கூறுகிறேன். இக்கட்டத்திற்குப்பின் பணம் தானே பெருகும் (self-multiply). வேரூன்றிய செடி இனி எவரும் நீர்ப் பாய்ச்சாமல் தானே வளர்வதுபோல் இக்கட்டத்திற்குப் பிறகு பணம் தானே வேறு உதவியோ, காரணமோயில்லாமல் பெருகும்.

இன்று சமூகம் பெறும் திறன் நாளை தனி மனிதனுக்கு வரும்.

மனிதன் தன்னிடம் உள்ள பணத்தை தானே பெருக்கிக்கொள்ள முடியும் என்ற திறன் பெறுவான். அது நடக்க நாளாகும். ஓர் ஆசிரியர் எழுதும் புத்தகம் பிரசுரமானால் அனைவருக்கும் கிடைக்கும். அதற்கு இடைவெளியுண்டு. ஆசிரியருடைய நண்பருக்கு, பிரசுரத்திற்கு முன்பே பிரதி கிடைக்க முடியும். சமூகம் இன்று பெற்ற திறனை – பணம் தானே பெருகும் திறனை – மனிதன் இன்றே பெற வழியுண்டு. அதற்கு மனிதன் சமூகத்தை எட்டவேண்டும், இத்திறனுடைய மூலத்தை எட்டித் தொடவேண்டும்.

  • நல்லெண்ணத்தால் சமூகம் தன் பணத்தைத் தானே பெருக்கிக்கொள்கிறது.
  • நல்லெண்ணமுள்ள மனிதன் சமூகத்தை இவ்விஷயத்தில் தொடமுடியும். அதன்மூலம் இத்திறனைப் பெறமுடியும்.