அபரிமிதமான செல்வம் – 5

மனிதன் நல்லெண்ணம் பெறுவதுடன், தானே அவனுள் நல்லெண்ணம் பெருகும் மனநிலையை அடையவேண்டும். அதன்மூலம் சமூகம் பெற்ற திறன் அவனுக்கு அவனுடைய சொந்தத் திறனாக வரும்.

கிராமப்புற வாழ்வையும் பம்பாய்போல் பெருநகர வாழ்வையும் எடுத்துப் பார்ப்போம். கிராமத்திலும், பம்பாயிலும் ஒரே திறனுடையவர் ஒரே வேலையைச் செய்வதானால் இங்கு 10 பேர் வேலை செய்தால், அங்கும் பத்து பேர் வேலை செய்தால் வித்தியாசம் (values) பண்புகள். செய்பவருடைய திறமை சமம். பண்புகள் இங்கு கிராமப்புறப் பண்புகள். அங்கு பம்பாய்க்குரியது. பலன் வரும்பொழுது நகரத்தில் 5 அல்லது 10 மடங்கு அதிகப் பலன் பணமாக வரும். அவ்வதிக வருமானம் பண்புகள் சம்பாதித்தது.

பண்புகள் பணத்தை ஈட்டும் என்பதை ஏற்பது சிரமமில்லை. ஒரே படிப்பு, வயது, திறமை, சந்தர்ப்பமுள்ள இருவர் பண்பால் மாறுபட்டிருந்தால் அவர்கள் சாதனைகள் அதிகமாக மாறுபட்டிருக்கும். அதைப் பணமாகவும் கணக்கிடலாம். அந்த வித்தியாசம் பண்புக்குரியது.

பண்பில்லாமல் செயலில்லை.

நல்லதோ, கெட்டதோ செயலுக்குப் பண்புண்டு.

மேற்சொன்ன உதாரணத்தில் மாறுபடுபவை punctuality, சுத்தம், நியாய விலை, பேரம் பேசாதது, குறித்த நேரத்தில் கொடுப்பது, நாணயம், இனிமை, பாதுகாப்பு, பிறர்நோக்கு ஆகியவை.

ஓர் இடத்தில் தலைக்கு மாதம் ரூ.2000/- வந்தால் அடுத்த இடத்தில் ரூ.20,000/- வருகிறது. பண்புகள் 10 மடங்கு சம்பாதிக்கும் எனக்கூற இவ்வுதாரணம் உதவும். அன்னையை அழைப்பது அன்னையைப் பொதுவாக ஏற்பது. அன்னையின் பண்புகளை ஏற்பது, ஒவ்வொரு வேலையிலும் ஏற்பது நாம் அதிகபட்சம் அன்னையைப் பெறுவதாகும். அன்னைக்கு முக்கியமான பண்புகள் நிதானம், இனிமை, பொறுமை, தெளிவு, பிறர்நோக்கு போன்றவை.

பண்புகள் இரு முனையில் செயல்படுவதாக (double opening) யோக பாஷையில் கூறலாம். மேலே போவது சிறப்பு, அளவு, பரப்பு ஆகியவற்றை வளர்க்கும். மனத்தின் வளர்ச்சியை, கீழே போகும்போது உடலுக்கும், உணர்வுக்கும் தருவது அடுத்தது. தன் பணத்தைத் தானே பெருக்கிக்கொள்ள முன்னோடியாக ஒருவர் கற்றுக்கொண்டால், அது அவருக்குப் பெரிய பலன் தரும். ஆர்ட்டீஷியன் கிணறுபோல தானே பெருகுவது தடை செய்யாமல் பெருகும். ஒரு விதை ஓராயிரம் விதையைத் தருவதைப்போல் அது பெருகும். தானே பெருக ஆரம்பித்தபின் அதற்கு வெளியுதவி தேவையில்லை. தானே வேரூன்றி, பலன் தரும்.

மொழி, குழந்தை பிறந்தவுடன் பிறப்பதில்லை. குழந்தை நெடுநாள் பேச்சைக் கேட்கிறது. ஒரு நாள் பேச ஆரம்பிக்கிறது. சில சொற்கள், பிறகு மொழியாகின்றன. மனிதன் வளர்ந்தபின் சிலர் பேச்சாளராகின்றனர். எண்ணம் உள்ளே சேர்ந்தால் பேச்சாக வெளிவரும். சக்தி, திறமை, நம்பிக்கை மனதில் சேர்ந்தால், பணமாக வாழ்வில் வெளிப்படும்.

பணம் ஒரு பொருளன்று. அது ஒரு சின்னம். நம்பிக்கையின் சின்னம். பிறரை நம்புவது, பரஸ்பர நம்பிக்கை, சமூகத்தையும், அதன் ஸ்தாபனங்களையும் நம்புவது, பொதுவாக மனித மனத்திலுள்ள நல்லெண்ணத்தை நம்புவது ஆகியவை நம்பிக்கையின் உருவங்கள்.

இன்று கொலை நடக்கிறது, கொள்ளையடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், பிரயாணத்தில் ஆபத்து வருகிறது. புயல், பூகம்பம் வந்தால் சமூகம் உதவுகிறது. இக்கொடுமைகள் குறைந்து வருகின்றன. ஒரு நாள் மனித வாழ்வில் சூறையாடுவதும், கொலையும், கொள்ளையாகவுமிருந்தது. அது மாறி நாகரீகம் வந்தும் அப்பழைய பழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. சமூகம் வளர்ந்து மாறி தன் நல்லெண்ணத்தைப் பிரவாகமாக மனிதனுக்குக் கொடுப்பதை அன்று ஒரு நாள் உலகம் எப்படியிருந்தது, இன்று எப்படி மாறியுள்ளோம் என மேற்சொன்னவை காட்டுகின்றன. இராணுவம் எல்லையைப் பாதுகாக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறது. இவை சமூகத்தின் நல்லெண்ணத்தால் நடப்பவை.

உடல்நலத்தையும், கல்வியையும் கட்டாயமாக சமூகம் நமக்குத் தருகின்றது. இன்ஷூரன்ஸும், பென்ஷனும் சமூகத்தை நம்பலாம் என்பதற்குரிய சின்னங்கள். நம்பிக்கைக்கு ஓர் அளவுகோலிருந்தால், ஆயிரம் மடங்கு நம்பிக்கை வளர்ந்துள்ளதைக் காட்டும். இந்த நம்பிக்கை பணம். முடிவில்லாத வழிகள் மூலம் முடிவில்லாத வளர்ச்சி பணத்திற்குரியது.

முடிவில்லாத பணம் :

பணம் வருமுன் உபரி சக்திக்கு உபயோகமில்லை. பணம் வந்தபின் அது பயன்படுகிறது. தவணை முறை வந்தபின் எதிர்கால உழைப்பைப் பணமாக்கியது. கடன் கடந்த கால உழைப்பால் வந்த சொத்து பணமாகியது. பணம் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும், நிகழ்காலத்திற்குள் கொண்டுவந்து வாழ்வை விரிவுபடுத்தியுள்ளது.

  • அப்படிச் செய்ததில் மனிதத்திறன் (potentials of man) ஓரளவு வசதியாகியுள்ளது.
  • நாமறியாத திறமைகள் ஏராளம்.
  • அவற்றைப் பணமாக்கும் வழிகளும் ஏராளம்.
  • இன்றுள்ள பணம்போல் அது ஆயிரம், லட்சம் மடங்கு.
  • நாகரீகம் தன்னையறியாமல் அப்பணத்தை உற்பத்தி செய்துள்ளது.
  • அறிந்து செய்தால் ஆயிரம் மடங்கு பணம் உற்பத்தியாகும்.
  • கல்வி, பிரயாணம், மருந்து, விஞ்ஞானம், வசதி ஆகியவை அதுபோல் இன்று ஆயிரம் மடங்கு பெருகியுள்ளன. இனியும் ஏராளமாகப் பெருகும். பணமும் அந்தச் சட்டத்திற்குட்பட்டதாகும்.

செலவுக்குப் பணம் வரும், சேமிப்புக்கு வாராது :
 

சேமிப்பு என்பது பழங்காலத்திற்குரியது. ஜாதி அழிய வேண்டும், மூடநம்பிக்கை அழியவேண்டும் என்பதில் எதிர்காலத்தில் சேமிப்பும் சேரும். சேமிப்பு அர்த்தமற்றதாகிவிட்டால், பணத்திற்கு என்ன செலவு? பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய மனிதன் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. பொருள்கள் விலை இறங்குவதால் பணம் உபரியாகும்.

தானே பெருகும் பணம் :

இயற்கையில் பிராணிகளும், தாவரங்களும் பெருகுகின்றன. மனித குலம் தானே பெருகி வருகிறது. இது வேறு தலைப்பு. அதேபோல் சமூகத்தில் உற்பத்தியாகும் எந்த அம்சமும் – கல்வி, கலை, பொருள்கள் – தாமே பரவுகின்றன. பணமும் அதுபோல் பரவுகிறது. ஒரு கட்டத்தில் தாமே அவை பெருகுகின்றன (self-multiplying). பணம் கொஞ்ச நாட்களாக அந்நிலையை அடைந்துள்ளது.

இயற்கையிலும், சமூகத்திலும், ஆன்மீகத்திலும் இவ்வுண்மையைக் காண்கிறோம் (One becomes the many). இறைவன் சிருஷ்டியாவதால் குறைவதில்லை. பரமாத்மா, ஜீவாத்மாக்களை குறைவின்றி உற்பத்தி செய்கிறது. அதனால் பரமாத்மா குறைவதில்லை. குறையாத தன்மை (infinity) மனம், வாழ்வு, ஜடத்திற்குண்டு. எல்லாவற்றிற்கும் உண்டு என்பது தத்துவம். சக்திக்கும், ரூபத்திற்கும் முடிவில்லாமல் வளரும் குணம் உண்டு. பணம் அதற்கு விலக்கன்று.

பணம் முடிவில்லாமல் வளரும் தன்மையுடையது.

மனித வாழ்வு மற்றவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. கண்மூடியுள்ளவரை சூழல் வாழ்வை நிர்ணயிக்கும். நாம் நம்மையறிந்தால் (conscious) நம் சூழலை நிர்ணயிக்கலாம். இன்று பணம் தானே பெருகுகிறது. நாம் கண்ணைத் திறந்தால் பணத்தை முடிவின்றிப் பெருக்கலாம்.

சமூகத்திற்கு உடல் உண்டு. ஜடமான பொருள்கள் – வீடு, ரோடு – சமூகத்தின் உடல். பணம் சமூகத்திற்கு உயிர். உடல் மந்தமானது, உயிர் வீர்யமானது. உடலும் பெருகும், மெதுவாகப் பெருகும். உயிர் வேகமாகப் பெருகும். பணம் வேகமாகப் பெருகும்.

வளர்ச்சிக்கு இரு நிலைகள் உள்ளன. (multiplication, self-multiplication) உணவால் வளர்வது வளர்ச்சி, உணர்வால் வளர்வது தானே பெருகுவது. தானே பெருகுவது உள்ளுணர்வின் தன்மையைப் பொருத்தது.

சமூகத்தின் திறமை :

நாளுக்கு நாள் சமூகத்தின் திறமை அதிகரிக்கிறது. அதை மனிதனுக்கு சமூகம் கொடுக்கிறது. அதனால் சமூகம் மனிதனைக் கட்டுப்படுத்தியது. நாகரீகம் வளரும்பொழுது கட்டுப்பாடு தளர்ந்து, சுதந்திரம் வருகிறது. முன்னேறிய நாடுகளில் சுதந்திரம் அதிகம். தன்னிஷ்டப்படி வெளிநாடு போக, தான் விரும்பிய கடவுளை வணங்க, தான் இஷ்டப்பட்டதை கற்க, பல நாடுகளில் சுதந்திரம் உண்டு. பல நாடுகளில் இல்லை.

  • சமூகம் எந்தப் புதியதை ஏற்றாலும், மனிதனுக்கு அவ்வசதி வரும்.
  • அது பணத்தைப் பெருக்கும்.

உலகில் நாகரீகம் வளர்வதால் மனிதன் பெறும் வசதிகளும், சுதந்திரமும் பெருகுகின்றன. இவை தாமே நடப்பவை. அதற்குப் பதிலாக மனிதன் தன்னையறிந்து செயல்பட்டால், வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்தச் சட்டம் எல்லா அம்சங்களுக்கும் உண்டு.

  • நம் கருத்து பணம். பணம் பெருகக் கூடிய அளவில் சிறு அளவே பெருகியுள்ளது. முயன்றால் அளவுகடந்து பெருகும்.

சூட்சும ஞானம் தரும் பாதுகாப்பு :

வசதியும், இலாபமும், அதிகாரமும் ஏராளமாக உள்ள இடத்தில் ஆபத்து, ஏமாற்றுதல் ஏராளமாக இருக்கும். எந்தத் துறையில் இலாபம் இருந்தாலும் அதே துறையில் உள்ளவர்க்கே அது பயன்படும். மற்றவர்க்குப் பயன்படாது. ஏனெனில் அதே துறையில் உள்ளவர்க்குத்தான் அத்துறையின் சூட்சும ஞானமிருக்கும். சூட்சும ஞானமிருந்தால்தான் பாதுகாப்பிருக்கும். பொதுவாக இதை அனுபவம் என்போம்.

மேடைப் பேச்சிலிருந்து சமையல்வரை துறை தெரியாதவர் அதிக நாள் அங்கிருக்க முடியாது. மேடைப் பேச்சின் நுணுக்கமறியாதவர்களைக் கேலி செய்து அனுப்பிவிடுவார்கள். சமையலில் அஜாக்கிரதையாக இருந்தால் கை கால் சூடு விழும், சமையல் வாராது. எல்லாத் துறைகளிலும் அனுபவம் உண்டு. அனுபவத்தின்மூலம் சூட்சும ஞானம் உண்டு. அதில்லாதவர்க்கு அத்துறை தன் பரிசைத் தாராது.

நாம் பணத்தை அபரிமிதமாக உற்பத்தி செய்யலாம் என்கிறோம். உற்பத்தி செய்வது திறமை. திறமை மட்டும் போதாது. பணத்திற்குச் சூட்சும ஞானமில்லாவிட்டால் அது பாதியில் தோற்கும். அது முழுவதும் பலித்த பிறகு தொந்தரவாக முடியும். பொதுவாக சூட்சும ஞானம் என்ன என்பதையும், பணத்தில் அது என்ன என்பதையும் அறிவது அவசியம்.

எந்த வேலையையும் சொல்லிக் கொடுக்கலாம், காட்டிக் கொடுக்கலாம், பயிற்சி அளிக்கலாம். சொல்லையும் பயிற்சியையும் கடந்து நாமே கற்றுக்கொள்ளக்கூடியன எல்லா வேலைகளிலும் உண்டு. அவற்றை சூட்சுமம், ரகஸ்யம் என்கிறோம். அரசியல் திறமை, நிர்வாகம், தலைமை என்பவற்றைக் கடந்து பிரபலம் என்பது இப்படிப்பட்டது. எழுத்தாளருக்கு நடை, சமையல் பதம், சங்கீதத்தில் பிரபலம் போன்றவை சூட்சுமத்தைச் சேர்ந்தன.

  • சூட்சும ஞானமில்லாவிட்டால் பலிக்காது.
  • சூட்சும ஞானமிருந்தால்தான் பலித்தாலும் பாதுகாப்பிருக்கும்.

பொதுமக்கள் இதை இராசி என்பார்கள். இராசி என்பது சூட்சுமத்தின் பகுதி. இதைப் பலவகைகளாகக் கூறலாம்.

  • நம் நிலைக்கு மேம்பட்ட ஞானம்.
  • நம் சூட்சும நிலைக்குரிய ஞானம்.
  • அனுபவ ஞானம்.
  • பகுதியை அறியும் முழுமையின் ஞானம்.
  • சாரத்தை அறியும் ஞானம்.
  • உணர்ந்து அறியக்கூடிய ஞானம் என விவரிக்கலாம்.

ஏராளமாக விவரம் தெரிந்தால் அதன் மூலம் இதைப் பெறமுடியும். பணம் முதல் பொருளாக இருந்தது. பிறகு வேலையாயிற்று. முடிவாகப் பண்பாயிற்று. இவை ஒவ்வொன்றிற்கும் சூட்சுமப் பகுதிகள் உண்டு. அவற்றை எல்லாம் அறியவேண்டும்.

பழம் என்பது பொருள். அதை வாங்கி விற்பவன் பழம் எத்தனை நாளைக்கு வரும், விற்க எத்தனை நாளாகும், எவ்வளவு அழுகிப் போகும் என்பதை அறிந்து கொள்முதல் செய்யவேண்டும். அப்பொழுதுதான் இலாபம் வரும். வேலையில் சூட்சுமம் உண்டு. ஹோட்டல் சர்வரிலிருந்து ஹைகோர்ட் வக்கீல்வரை வாடிக்கைக்காரரை அறியமுடியாதவருக்குத் தொழில் பலிக்காது.

எந்த வேலையிலும் நல்லது, கெட்டதுண்டு. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் சூட்சுமம் மிஞ்சி நிற்கும். மனை விற்குமிடங்கள், ரொக்க லாவாதேவி, புரோக்கர் வேலை செய்யுமிடங்களில் சூட்சுமம் மிச்சமாக இருக்கும். அங்கெல்லாம் திருட்டுத்தனம் அதிகமாகப் பலிக்கும். குற்றவாளிகட்கு சூட்சுமம் அதிகம். வேலையின் எல்லா அம்சங்களும் தெரியும் நேரம் பகுதியின் சூட்சுமம் விளங்கும்.

மார்க்கட் என்பது பெரியது. பண்டமாற்று அதன் பகுதி. மார்க்கட் புரிந்தால் பண்டமாற்று புரியும். உபரியான சக்தியைச் சேகரம் செய்வது நம் திறமையை வளர்ப்பது. பணம் என்பதில்லாவிட்டால் மனிதன் தனக்கு வேண்டியதை மட்டும் உற்பத்தி செய்வான். உபரியை உற்பத்தி செய்யமாட்டான். பணமாக உபரியை மாற்றலாம் என்பதால் உபரியை உற்பத்தி செய்கிறான். பணம் சம்பாதிக்கும் ஆசையால், அதிகபட்சம் வேலை செய்கிறான். நாணயம் வந்தபிறகு உள்ளூர் சரக்கை வெளியூரில் விற்க முடிந்தது. நோட்டு வந்தபிறகு வெளி மாநிலத்தில் விற்க முடிந்தது. பணம் இவை மூலம் மனிதனுடைய ஆட்சியை விரிவு செய்கிறது.

வெகு தூரத்தில் பொருள்களை விற்றால் பாங்க்மூலம் பணம் வசூலாகும். ரயில்வேமூலம் சரக்கு போகும். பணம் வசூல் செய்ய கோர்ட்டிற்குப் போக வேண்டிவரும். சுங்க வரி கட்டுகிறோம். பாங்க், ரயில்வே, கோர்ட், சர்க்கார் ஆகிய ஸ்தாபனங்கள்மூலம் பணம் செயல்படுகிறது.

நேரடியாகப் பணம் செலாவணியாவதற்குப் பதிலாக ஒரு ஸ்தாபனத்தின்மூலம் பணம் செயல்பட்டால், பணத்திற்கு சக்தி வளரும்.

பாங்க்மூலம் சரக்கு விற்கப்பட்டால், பணத்தை ஏமாற்றமுடியாது, வசூலிக்கப்படும். ஏமாற்ற முடியாது எனில் பணத்திற்கு பலம் வந்துவிடும். அதிகமான ஸ்தாபனங்கள் மூலமாக பணம் செயல்பட்டால் அத்தனை மடங்கு பணத்திற்கு பலமும், மரியாதையும் வரும். அத்துடன் அதன் சூட்சுமப் பலமும் வளரும். ஊரில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அவர் யாரிடம் கடன் வாங்கியிருக்கின்றாரோ, அவருக்குக் கட்டுப்படுவார். அதாவது பணத்திற்குக் கட்டுப்படுவார். பணம் உற்பத்தியானது, வளர்ந்தது, வளர்ந்து முடிந்தது, அதன் சூட்சும சக்தி ஆகியவற்றிற்குச் சட்டங்களுண்டு. இவை இத்துறையிலுள்ளவர் அறிவர். இந்தச் சட்டங்களையும், அதன் சூட்சுமங்களையும் அறிந்தால்,

  1. பணத்தைப் பெருக்கலாம்.
  2. பெருகிய பணத்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்.

பௌதீகம், ரசாயனம் ஆகிய சட்டங்களுடன் பணத்தின் சட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும். கணிதம் இச்சட்டங்களைச் சூத்திரமாக்கும், தத்துவம் சுருக்கும், கவி காவியநயத்துடன் கூறுவார், யோகி சாதிப்பார்.

பணம் பெருகவேண்டும். பெருகியபின் அதனால் தொந்தரவு வரக்கூடாது. நாம் சம்பாதித்த பணத்தால் நமக்குத் தொந்தரவு வரக்கூடாது. நம் பணத்திலிருந்து நமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பவை அனைவருக்கும் தெரிந்தவை என்றாலும் விளக்கம் அவசியம்.

கோடிக்கணக்காக லாட்டரியில் சம்பாதித்த பலரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அத்தனை பேரும் பணத்தை இழந்தவர்கள். இழந்ததால் தாம் முன்னிருந்த நிலையைவிட மனத்தால் தாழ்ந்தவர்கள். அடுத்த முறை பரிசு கிடைத்தால் ஏற்கமாட்டோம் என்றும் கூறினார்கள். எது உண்மையோ, இல்லையோ அவர்கள் பெற்ற பெரும் பணம் அவர்கட்கு சந்தோஷம் தரவில்லை.

பணத்தால் எப்படித் தொந்தரவு வரும் என்பது இத்தலைமுறையில் சம்பாதித்தவர்கள் அறிவார்கள். பரம்பரை பணக்காரனுக்குண்டான நிதானம், அனுபவமில்லாமல் அந்த அனுபவம் பெற பணத்தை இழந்து, நிம்மதியையும் இழப்பவர் அதிகம். சில கோடி சம்பாதிப்பவர்கட்கு இப்பிரச்சினை அதிகமாக இல்லை. பல ஆயிரம் மடங்கு சொத்து சேரும்பொழுது அதை நிர்வாகம் செய்ய முடியாமலும், அவற்றால் ஏற்படும் மனத்தாங்கலும், டென்ஷனும் பெரிய தலைவலி. பெரும்பாலும் பணத்தை இழந்துவிடுவார்கள். அடுத்த தலைமுறை கட்டுப்படாது. இவை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள். நான் இதை மட்டும் குறிப்பிடவில்லை. பெருந்தொகை, அதற்குரிய இடத்தில் சேர்க்கும். பெருந்தொகைக்குப் பெரிய சக்தியுண்டு. இது அறிவுக்குக் கட்டுப்படாது, வலிமைக்குக் கட்டுப்படும். அதற்கும் சூட்சுமம் வேண்டும். இல்லையேல் இப்பணத்தின் சக்தி பெற்றவரை அழிக்கும். இது பணம், பதவி இரண்டுக்கும் உள்ள தன்மை. நமக்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினையில்லை என்றாலும், இதைக் குறிப்பிடவேண்டியது அவசியம் என்பதால் குறிப்பிடுகிறேன்.

இந்தப் பாதுகாப்புப் பெற சூட்சும ஞானம் வேண்டும் என்பதே நமக்கு இங்கு முக்கியம்.

இந்த அம்சத்தை ஒருவர் விவரமாக அறியவேண்டுமானால், சமூக முன்னேற்றம், சமூகப் பரிணாமம் என்ற நோக்கில் பணத்தை அறிய முன்வரவேண்டும்.

பணத்தை யோகக் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சி செய்தால், அதுவே முடிவானது.

சமையல் கற்பவனைக் கருதுவோம். (recipe) எப்படிச் சமையல் செய்வது என இவனுக்குக் கற்பிக்கலாம். தேர்ந்த சமையல்காரனுக்கு (master cook) பதம்பார்க்க, ருசி பார்க்க தேவையில்லை. கொதிக்கும் பாத்திரத்தைப் பார்த்தவுடன் அவனுக்குப் பதம் தெரியும். சாம்பாரில் என்ன போடவேண்டும் என எழுதித் தரலாம். அதனால் பதம், ருசியைக் கற்றுக்கொள்ள முடியாது. தலைமைச் சமையல்காரனுக்கு அந்த ஞானம் சூட்சுமமாக வருகிறது. வாயால் சொல்லும் தேவையில்லை.

ஒர்க்ஷாப்பில் பல ஆண்டுகள் வேலை செய்து வேலையைக் கற்றுக்கொள்வதை, பயிற்சியால் குறைந்த நாளில் கற்றுத் தரலாம். படிப்பிருந்தால் பயிற்சிக் காலத்தையும் சுருக்கலாம். வேலைக்குரிய சூழல் சூட்சும ஞானம் பெறும் திறனைத் தரும். பணிவு, கீழ்ப்படிதல், அடக்கம் ஆகியவை அந்தரங்கமானவை. குருவின் சூட்சும ஞானம், பணிவால் சிஷ்யனுக்கு சூட்சுமமாக வரும். அடக்கம் அந்தரங்கக் காதலானால் அடிமனம் திறந்து அனைத்தையும் அரை நிமிஷத்தில் குருவிடமிருந்து பெறும்.

லட்சியம், தீட்சண்யம், பணிவு, பக்தி, சேவை, ஆர்வம், நன்றி சூழலிலிருந்தாலும், குருவிடமிருந்தாலும், சிஷ்யனிடமிருந்தாலும் சூட்சுமமாகக் கற்க உதவும். குருகுலம் ஏற்பட்டது அக்காரணத்தால்தான். கல்லூரியின் சூழல் கற்பதைச் சிறப்பாக்கும். அமெரிக்காவில் வசிப்பது பல்கலைக்கழக வாசத்திற்குச் சமம். M.B.B.S. முடித்தபின் டாக்டர் ஓர் ஆண்டு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெறுகிறார்.

பணத்திற்கும் சூட்சுமம் உண்டு. சூட்சுமச் சூழலில் பணம் காலடி எடுத்துவைத்தால் அது தானே பெருக ஆரம்பிக்கும். 1990 முதல் உலகில் அதைக் காண்கிறோம். தானே பெருக முதிர்ச்சியும் பக்குவமும் தேவை (saturation and maturity). மொழியின் வளர்ச்சி இதை நமக்கு அறிவுறுத்தும். குழந்தை மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு (from the physical environment) கற்றுக்கொள்கிறது என்றாலும் அதன் சூழல் சூட்சுமச் சூழலும் கலந்துள்ளது. (Pronunciation,tone,accent,intonation) உச்சரிப்பு, குரல், சொல்நயம், அதன் சுருதி ஆகியவற்றைப் புத்தகத்திலிருந்து கற்கமுடியாது. கேட்டுக் கற்பவை அவை. பிறமொழி பயிலும்பொழுது இவற்றைப் பெறமுடியாது. வடநாட்டிற்குப் போன தமிழன் இந்தி கற்பதற்கும், நம்மூரில் இந்தி கற்பதற்கும் வித்தியாசம் உண்டு. வடநாட்டில் அனைவரும் இந்தி பேசுவதால் சூழல் கனத்துள்ளது. எளிதில் வரும். தாய்மொழியின் சூட்சுமத்தை அறிபவர் அதன்மூலம் பிறமொழியின் சூட்சுமத்தை எட்டினால் எளிதில் கற்கலாம். அது அனைவராலும் முடியாது.