அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 2

“உலகின் பல பாகங்களினின்றும் குரல் கேட்டபடியிருக்கும். என்னை வந்தடைந்தவுடன் என் பதில் எழுந்து அவர்களை அடையும்.”

“எதுவும் வேலையை நிறுத்தமுடியாது எனக் கண்டேன். உடலின்றியும் வேலை தொடர்ந்தது”.

“இரண்டாம் யுத்தத்தின்பொழுது அபயக்குரல்கள் அதிகமாக என்னை அதுபோல் வந்தடைந்தன”.

“நான் நலிவுற்றுள்ளபொழுது, மரணத்தின் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பியபொழுது ஆன்மீகச் சக்தி செயல்பட்டு அபயக்குரலுக்குப் பதிலனுப்புவதைக் கண்டேன்”.

“பிரான்சிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் குரல்கள் கேட்டன”.

“சக்தி எந்த அளவு செயல்படமுடியும் என்ற சோதனையை உலகின் பல பாகங்களிலும் செய்தேன்”.

அன்னை உலகெங்கும் பரவியுள்ள ஆன்மீகச் சக்தி.

அன்னையைச் சக்தியாக அறிதல்:

அன்னையை அழைத்து நம் குரல் அவர் காதில் விழுந்து, அவர் பதில் நம் ஆன்மாவை அடைவதைக் கண்ட பக்தருக்கு அன்னை சக்தி தம் வாழ்வில் செயல்படுவதைக் கண்டார்.

  • ஜாதகத்தை நம்புவதற்குப் பதிலாக, பெரிய சிபாரிசை நாடுவதற்குப் பதிலாக, வாரப் பலனை ஆர்வமாகப் படிப்பதற்குப் பதிலாக, ஜீவனின் ஆழத்திலிருந்து அன்னையை அழைத்து பதில் பெற்றால், அத்தொடர்பை நிரந்தரமாக்கிக் கொண்டால், அவர் வாழ்வில் கூப்பிட்ட குரலுக்கு அன்னை சக்தி தவறாது செயல்படுவதைக் காணலாம்.
  • வாழ்வில் தீராத முக்கிய பிரச்சினையை ஒரு முறை இதுபோல் தீர்த்துக்கொண்டவருக்கு அதன்பின், அன்னை சக்தி தவறாது பலிக்கும்.
  • வாழ்வில் முக்கிய வாய்ப்பை இதுபோல் பூர்த்தி செய்தவருக்கு எதிர்காலத்தில் எந்த வாய்ப்பையும் தவறாது பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
  • ஓடும் ரயில் நிற்பது, காலில் உள்ள பின் (pin) மறைவது போன்ற நிகழ்ச்சிகள் அன்பர் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகளாகும்.
  • மனதால் இந்தச் சக்தியை நாடமுடியும் என்றபின் ஜீவன் இச்சக்தியை ஏற்குமானால், ஜீவன் இக்குரலை எழுப்பச் சம்மதப்பட்டால் 18 ஆண்டுகளில் ரூ1 கோடி கம்பெனி , ரூ1200 கோடியானதைப் போன்ற சாதனையை அவரால் செய்யமுடியும்.
  • ஜீவன் குரல் எழுப்பினால் அவர் வாழ்வு பூலோகச் சுவர்க்கமாகும்.
  • ஜீவன் குரல் எழுப்பியபின் அவர் யோகத்தை நாடினால், அவர் பகவான் கேட்ட 100 பேரில் ஒருவராவார்.
  • “உன்னைப் போன்ற ஒருவருக்காக நான் காத்திருக்கிறேன்” என்று அன்னை அநேகம் பேரிடம் கூறியுள்ளார்கள். அந்த அம்சமுள்ளவர்கள் பொதுவாக அவ்வாய்ப்பைப் பூர்த்தி செய்துகொள்வதில்லை. அவர் ஜீவன் இக்குரலை எழுப்பினால் அவர் அன்னை எதிர்பார்ப்பதைப் பூர்த்தி செய்வார்.

ஜப்பான் வாசம்

Dr. ஷு மெய் என்பவர் ஜென் மதத்தைப் பின்பற்றுபவர். இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்ற கொள்கையுடையவர். அவருடன் அன்னை ஜப்பானில் 1916இல் ஓராண்டு தங்கியிருந்தார்.

“தினமும் 7 மணி நேரம் நான் ஷு மெய்யுடன் தியானம் செய்தேன்“, என்கிறார் அன்னை.

“ஜப்பானிய பெண்களுக்கு” என்ற தலைப்பில் அன்னை ஒரு சொற்பொழிவாற்றினார்.

லியோ டால்ஸ்டாய் உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். War & Peace “போரும் சமாதானமும்” என்ற நாவலை எழுதியவர். மகாத்மா காந்தி அவரைக் குருவாக ஏற்று தாம் நடத்திய பண்ணைக்கு டால்ஸ்டாய் பண்ணை எனப் பெயரிட்டார். டால்ஸ்டாய் ஒரு கவுண்ட் (count) பெருநிலம் பெற்ற அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தம் சொத்தை நிர்வாகம் செய்ய ஆரம்பித்தவுடன் ஏழை எளியவருக்குப் பரிந்து ‘எவரும் தம் அரண்மனையில் வசிக்கலாம்‘, என்றார். விலையுயர்ந்த பொருள்களுள்ள அவ்வரண்மனை அறைகளில் ஏழைகள் படுத்துறங்குவது வழக்கமாயிற்று. உலகம் ஒன்றுபடவேண்டும், ஒரே மாதிரியான உடை உடுக்கவேண்டும், ஒரே மொழியைப் பேசவேண்டும், ஒரே மாதிரியான வாழ்வை (life style) மேற்கொள்ள வேண்டுமென்ற இயக்கத்தை மேற்கொண்ட அவர் பிள்ளைகள், அச்சமயம் ஜப்பான் வந்திருந்தார்கள். அன்னை, அவர்களைச் சந்தித்தார். ஒருமைப்பாடு புறத்தோற்றத்தால் ஏற்படாது என அவர்கட்கு அன்னை விளக்கினார்.

ரவீந்திரநாத் டாகூர் அப்பொழுது நோபல் பரிசு பெற்றிருந்தார். பெற்றபின் உலகப் பயணத்தை மேற்கொண்டு ஐன்ஸ்டீன் போன்றவர்களைச் சந்தித்தார். அவரும் அப்பொழுது ஜப்பான் வந்திருந்தார். தாம் ஆரம்பிக்க இருக்கும் விஸ்வபாரதியில் அன்னையை வந்து உதவி செய்யும்படிக் கேட்டார். அன்னை இசையவில்லை. தாகூரும், அன்னையும், மற்றவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ஜப்பானில் உள்ள மிகப் பெரிய புத்தர் சிலைக்கு தெய்புட்ஸு எனப் பெயர். அதனடியில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.

தாகூர் ஸ்ரீ அரவிந்தரைப் பிற்காலத்தில் சந்தித்து “உலகம் உங்கள் உத்தரவுக்காகக் காத்துள்ளது” என்றார். அப்பொழுது – 1933இல் – அன்னை ஸ்ரீ அரவிந்தருடன் இருந்தார். யோகத்தின் பலனாக அன்னையின் உடல் கருத்திருந்தது. தாகூருக்கு அன்னையை அடையாளம் தெரியவில்லை. ஸ்ரீ அரவிந்தருடனிருந்தது யார் என மற்றவர்களைக் கேட்டு அன்னை என அறிந்து தாகூர் வியப்படைந்தார்.

ஜப்பானில் தாகூரும் அன்னையும் “ஆர்யா” பத்திரிகையைப் பற்றி பேசினர். “ஆர்யாவில் ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை நடைமுறைக்கு ஒத்து வராது” என்று அன்னையிடம் தாகூர் கூறினார். புதுவையில் பிறகு ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். “I bow down to Sri Aurobindo” “நான் ஸ்ரீ அரவிந்தருக்குத் தலை வணங்குகிறேன்” எனவும் தாகூர் ஒரு சமயம் கூறியுள்ளார்.

சூட்சும உலகத்தில் அன்னை எழுதுவது

வாயால் பேசும் முன் அவ்வெண்ணங்கள் மனதில் கருத்தாய் உதிக்கின்றன. பத்திரிகையில் வரும் செய்திகளை அச்சடிக்கும் முன் அவை நிகழ்ச்சிகளாக நடக்கின்றன. நாம் காணும் போட்டோ நெகட்டிவாக இருந்தது. ஒரு செயல் நடக்கும் முன் முந்தைய நிலையில் அவை இதுபோன்று உருவாகின்றன.

உலகில் நடப்பவை எல்லாம் முதலில் சூட்சும உலகில் உற்பத்தியானபின் வெளிப்படுகின்றன. நாம் வாழும் உலகில் மோட்சத்தின் வாயில் நின்ற விவேகானந்தர் அதை மறுத்தார். மோட்சத்தை ஏற்றிருந்தால் அவர் பூவுலகை விட்டகன்றதுபோல, சூட்சும உலகையும் விட்டகன்று இறைவனை அடைந்திருப்பார். அவர் உலகம் ஒளிமயமாகும் வரை தம் ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடிவு செய்தவர். அதனால் சூட்சும உலகில் தங்கியிருந்தார். அப்படியிருந்த பொழுது ஸ்ரீ அரவிந்தரை ஜெயிலில் “சந்தித்து” கீதோபதேசம் செய்து சத்தியஜீவியத்தை நாடும்படி வழி நடத்தினார்.

பகவான் 1950இல் சமாதியானார். 1959இல் அன்னை முதலில் பகவானை சூட்சும உலகில் சந்தித்தார். அதன்பின் தினமும் அவரைச் “சந்தித்தார்”. இரவில் அன்னை சூட்சும உலகிற்குப் போவதுண்டு. அங்கு சாதகர்கள் சந்திப்பதுண்டு. “இவர்கள் சூட்சும உலகிலும் சண்டை போடுகிறார்கள்!” என அன்னை கூறியதுண்டு!

இந்த உலகை அன்னை விளக்குகிறார்.

  • அங்கு ஜன்னல், கதவு, சுவரில்லை.
  • எழுத ஆரம்பித்தால் கையில் பேனா வருகிறது.
  • எழுதினால் எழுத்தின் அடியில் பேப்பர் இருக்கிறது என்று சொல்கிறார்.

சூட்சும உலகில் பகவானைக் கண்டபொழுது ஒருமுறை அவருக்கு டிபன் வழங்குகிறார். இன்னொரு முறை பகவான் கார் ஓட்டுகிறார். ஒரு சமயம் அன்னையின் புடவையை உடுத்துக்கொண்டிருப்பதை அன்னை வினோதமாகப் பார்த்தபொழுது “ஏன், நான் புடவை கட்டியிருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?” எனக் கேட்டார். இடுப்பெல்லாம் கட்டுடன் பகவானை அங்கு அன்னை கண்டு ஏன் அப்படி என்று வினவியபொழுது “நான் எழுதிய எல்லாவற்றையும் திருத்துகிறார்களாம்” என்று பகவான் பதிலளித்தார்.

சாதகர்கள் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலுக்கு வந்து எழுந்தபின் சூட்சுமத்தில் நடந்ததை மறந்துவிடுகிறார்கள். அன்னை அப்படிப்பட்டவரைச் சந்திக்கும்பொழுது “நான் உங்களைச் சூட்சுமத்தில் சந்தித்தேன்” என்று கூறுவதுண்டு. கேட்பவருக்ககோப் புரியாத புதிர். அன்னைக்கு அன்றாட அனுபவம்.

சூட்சுமத்தில் ஒரு காரியத்தை இன்று உற்பத்தி செய்துவிட்டால் தானே அது பிறகு நனவுலகத்தில் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் திறனுடையது.

சாதகர்களால் அன்னை பெற்ற அனுபவம்!

ஒரு காரியத்தைச் செய்தால் அது அனுபவம் தருகிறது. பிறர் பெற்ற அனுபவத்தால் பயனடைய விவேகம் வேண்டும். ஒருமுறை தவறு செய்துவிட்டால் அந்த அனுபவம், அடுத்த தவறைத் தடுக்கிறது என்பது போன்று பல்வேறு அனுபவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அன்னையிடம் ஆசி பெற, சாதகர்கள் போகிறார்கள். அவர்களால் அன்னை என்ன அனுபவம் பெறமுடியும்?

பூரணயோக அடிப்படைகளில் ஒன்று, புற நிகழ்ச்சிகள் அகவுணர்வின் பிரதிபலிப்பாகும். நம் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையில் இல்லாதது, நமக்கு ஏதோ ஒரு பயன் தராதது, நம் சுபாவத்தோடு தொடர்பில்லாதது, நம்மை நாடி வாராது என்று இவ்வடிப்படையை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பது அன்னை வாழ்ந்த வாழ்வு நமக்குக் கூறுகிறது.

நம்மிடம் ஒருவர் கோபப்பட்டால், என் சுபாவத்தில் கோபமிருப்பதால் இவர் என்னிடம் கோபப்படுகிறார் என்று அறிகிறோம். நம் சுபாவத்தைக் கோபத்திலிருந்து மீட்க முயன்று வெற்றி கிட்டும் நேரம் ஒருவர் நம்மீது கோபப்பட்டால், இன்னும் கோபத்தின் சுவடு நம்மிடமுள்ளது என அறியலாம். நாம் கோபத்தை முழுவதும் வென்றபின், எக்காரணத்தை முன்னிட்டும் கோபம் வருவதில்லை என்றபின் கோபக்காரர்கள் பலர் நம்மிடம் வந்து கோபத்தால் ஏற்பட்ட விளைவுகளைச் சொன்னால் எப்படிப் புரிந்துகொள்வது! நாம் கோபத்தை வென்றதால், கோபக்காரர்கள் தம் கோபம் அழிய நம்மை நாடுகிறார்கள் என்று பொருள்.

கோபத்தை வென்றவர்க்கு அவசரமிருக்கும். அவசரத்தின்மூலம் ஏற்கனவே அழிந்துபோன கோபம் தலைதூக்கும். அதனால் வரும் நிகழ்ச்சியைச் சோதனை செய்தால் அவசரக்காரர் கொண்டுவரும் செய்தி மறைமுகமாக நம் கோபத்தைத் தொடும் எனத் தெரிகிறது.

அப்படியானால் மேலும் ‘உள்ளே வேலையிருக்கிறது‘. அன்னையின் கருத்துக்களான இவற்றை எல்லாம் பக்தர்கள் எப்படி புரிந்து கொள்வது?

1962க்குப் பின் அன்னை அறையைவிட்டு வெளியே போக முடியாத உடல்நிலை. அப்பொழுது அர்த்தமற்ற சிலர், அவசியமில்லாத பல கேள்விகளை அன்னையிடம் எழுப்பி நெடுநேரம் பேசுவதுண்டு. “ஏன் இந்த அறிவற்ற கேள்விகளை அத்தனை நேரம் கேட்டுப் பதில் சொல்கிறீர்கள்?” என உடனுள்ளவர்கள் கேட்பதுண்டு. “அவற்றிற்கெல்லாம் அர்த்தமுண்டு, அர்த்தபுஷ்டியான கருத்துண்டு. அவை எனக்குத் தேவையான அனுபவத்தைத் தருகின்றன. அதனால்தான் என்னை நாடி வருகின்றன. நான் அவற்றை மறுக்கக்கூடாது. மறுத்தால் நான் பெறவேண்டிய அனுபவத்தை இழப்பேன்“, என்பார் அன்னை.

‘அவர்களைத் திருத்தக் கூடாதா?’ என்று ஒரு கேள்வி.

அன்னை பதில்:

திருத்த நினைப்பது தவறு. வருவதை அப்படியே பெறவேண்டும். திருத்துவது எனில் நாம் ஒன்றைச் செய்ய முயல்கிறோம் எனப் பொருள். எதையும் செய்ய நினைப்பது பாதையிலிருந்து விலகுவதாகும். பாதை நேரானது. மடத்தனமாகப் பேசுவதை ஏன் கேட்டுக் கொள்கிறீர்கள்? என்பார்கள். “அதில் நான் அறிய வேண்டியவையுண்டு. இவரிடம் நான் எப்படி நேராக நடப்பது என்பதை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் இது” என்பார்.

எல்லாம் இறைவன் செயல். திருத்த முயன்றால் நாம் இறைவனின் செயலைத் திருத்த முயல்கிறோம். திருத்த முனையாமலிருக்கப் பயிலும் அனுபவம் இது என்பது அன்னையின் விளக்கம். நாம் இதைக் கடைப்பிடிக்க முயன்றால், பைத்தியம் பிடித்துவிடும் என்பது உண்மை. முயன்றால் அன்னை சூழல் அதிகமாகும், அன்னையை அதிகம் புரிந்துகொள்ளலாம், மேலும் ஏற்றுக் கொள்ள முடியும் என்பது பெரிய உண்மை.

அன்னையின் நோக்கம் அருளின் நோக்கம்.

சாதகியின் நெற்றியில் ஸ்ரீ அரவிந்தர் அடையாளம் (symbol)

பக்தர்கள் கடைசி நேரத்தில் எங்கிருந்தாலும், புதுவையில் அல்லது வெளியூரில் அன்னையை நினைத்தால், அன்னைக்கு அவர் குரல் கேட்கும். அன்னையை விழையும் ஆத்மா அவரை அடைந்து அவர் நெஞ்சில் நிரந்தரமாக உறையும். “அதுபோல் என் நெஞ்சில் ஒரு பெரிய கூட்டமேயிருக்கிறது” என்கிறார்.

ஒரு வேலையாகப் போகும்பொழுது அன்பர்கள் அங்கிருந்தால், உதவி கிடைக்கும் என்பது நிச்சயம். பல ஆண்டுகள் ஆகும் என ஆபீஸில் சொன்ன வேலை அதுபோல் சில மணி நேரத்தில் முடிந்தது.

இந்த வேலை கூடி வருமா என ஐயப்படும் பொழுது மனக்கண்முன் அன்னை உருவம் தெரிந்தால், அவ்வேலை தடையேதுமின்றி கூடிவரும்.

அன்னை சம்பந்தபட்ட பொருளுடன் ஒருவர் தற்செயலாய்த் தொடர்புகொள்ள நேரிட்டால் அது அன்னையின் அழைப்பு என அறியலாம். புத்தகக் கடையில் புத்தகத்தை எடுத்துப் பார்த்தவர் மடியில் வேறொரு புத்தகம் விழுந்தது. அது அன்னை பற்றியது. அவர் ஆசிரமம் வந்தார். ‘சொந்த ஊருக்குப் போகட்டுமா?’ என்று அவர் அன்னையைக் கேட்டபொழுது “இதுவே உன் சொந்த ஊர்” என அன்னை பதிலளித்தார்.

தொந்தரவு வந்தபொழுது “அன்னை” என்ற சொல் பாதுகாப்பு என நாம் அறிவோம்.

ஒரு சாதகி இறந்தபொழுது அவர் ஆத்மா அன்னை முன் வந்து நின்றது. சாதகியின் புருவ மையத்தில் அன்னை ஸ்ரீ அரவிந்தர் சிம்பலைக் கண்டார். அந்நேரம் சூட்சும உலகில் பகவான் குரல், “இதிலிருந்து – ஆசிரமத்தில், புதுவையில் – இங்கு இறப்பவருக்கு என் நிபந்தனையற்ற பாதுகாப்பு நிச்சயமாக உண்டு” என்று கேட்டது.

மூச்சு நின்ற பிறகு டாக்டர் வந்து எல்லாம் முடிந்துவிட்டது என்ற சமயம் ஸ்ரீ அரவிந்தர்– சிம்பலைப் புருவமையத்தில் வைத்தபொழுது மீண்டும் மூச்சு வந்து உயிர் திரும்பியது.

அன்னையின் சாந்தி அழைப்பை ஏற்று உள்ளே நுழைந்தால், வியாதி தீரும் என்று பொருள்.

அன்னையின் ஒளி தெரிந்தால், இதுவரை புரியாதது புரியும், தீராத சிக்கல் அவிழும் எனப் பொருள்.