அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 3

பிப்  29, 1956-இல் சத்தியஜீவிய சக்தி உலகில் வந்தபின் அன்னை,

“இப்பொழுதிலிருந்து பிப்ருவரி 29, இறைவனின் திருநாளாகும்”

என்று பிரகடனப்படுத்தினார். பகவான் 1959, மே மாதத்தில்  மேற்சொன்ன நிபந்தனையற்ற பாதுகாப்பைப் பிரகடனப்படுத்தினார்.

தவம் பலித்தது

ஸ்ரீ அரவிந்தர் தவம் பலித்து, 1956-இல் சத்தியஜீவிய சக்தி புவியில் இறங்கித் தங்கியது. ஒருவருக்குத் தவம் பலிக்க அவர் தவம் செய்யவேண்டும். ஒருவர் தவப்பலன் அடுத்தவருக்கில்லை. ஆனால் ஸ்ரீ அரவிந்தர் “ஒருவர் பெற்ற தவப்பலனால் உலகம் உய்யும்” என்று கூறியிருந்தார். 1950-இல் அவர் யோகம் அவருக்குப் பலித்தது. 1956-இல் சூட்சும உலகில் ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் பூமிக்கே பலித்தது.

1958இல் அன்னை கூறுகிறார்

இன்று உலகில் வாழ்வது அதிர்ஷ்டம். சத்திய ஜீவியச் சக்தி புவியில் பரவியுள்ளது. உலகமாந்தர் அனைவரும் அதைப் பெறுகின்றனர். மனிதன் விடும் மூச்சு வழியாக அச்சக்தி அவனுள்ளே சென்றபடியிருக்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சத்திய ஜீவிய அருள் (Supramental Grace) மனிதனுள் சென்று செயல்படுகிறது. அதைப் பெற மனிதன் முயன்றால் பெரும் பலனுண்டு.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவனுக்குக் கிராமத்திலில்லாத நகரத்து வசதிகள் அனைத்தும் பயன்படுகின்றன. பார்க், பஸ் வசதி, எலக்ட்டிரிக் ரயில், காஸ் அடுப்பு, மின்சாரம், ரோடு வசதி, குடிநீர் சப்ளை என பல்வேறு வசதிகளை அவனை அறியாமல் பெறுவதுபோல் சத்தியஜீவிய அருள் மனித வாழ்வில் செயல்படுகிறது. 1962-க்குப் பின் பிறந்த குழந்தைகள் சத்திய ஜீவியத்தை அதிகமாகப் பெறும் தகுதியுடையன என அன்னை கூறுகிறார்.

நகரத்திற்கு வந்தவன் பாங்கில் தன் பணத்தை பத்திரமாக வைக்கலாம், நல்ல பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கலாம், உயர்ந்த பொருள்களை உள்ளூரிலேயே வாங்கலாம், உயர்ந்த உணவுப் பொருள்களை எளிதில் பெற்று அனுபவிக்கலாம். பொழுதுபோக்கு தயாராயுள்ளது. சுகாதாரம், போலீஸ், பாதுகாப்பு, கல்வி, கடைத்தெரு ஆகியவை உயர்ந்த தரத்தில் நகரவாசிக்குக் கிடைக்கும். அதற்கு அவன் தகுதி பெற்று முயலவேண்டும்.

வீடு கட்ட அந்நகரவாசி முயன்றால் அது பலிக்கும். மனிதன் கிராமவாசி போலிருக்கிறான். அன்னை பெருநகரத்தின் உயர்ந்த வசதிகளை வழங்குகிறார். அவனை அறியாமல் பெறுவது அதிகம். தகுதி பெற்று முயன்றால் அனைத்தும் பெறலாம்.

புற்றீசல், வார்த்தை பலிக்கும்

அன்பர்கள் வாய் தவறிச் சொல்பவை உண்மையாவதைக் காணலாம். இங்க் போடுவதற்காக எடுத்து வைத்த பேனாவை, இங்க் தீர்ந்ததையறியாமல் அங்கு வந்த பக்தர் எடுத்து எழுதினால், அது ஒரு பக்கம் எழுதும்.

ஞாயிற்றுக்கிழமையைச் சனிக்கிழமை என்று தவறாக நினைத்து போஸ்ட்டாபீஸ் போன பக்தர் அங்கு ஸ்டாம்பு வாங்கியபின் அது ஞாயிறு – ஒரு சிறப்புச்  சோதனைக்காக அன்று ஆபீஸ் திறக்கப்பட்டது என்று அறிந்தார்.

அன்னை சொல் பலிக்கும்.

அன்னை எண்ணம் பலிக்கும்.

அன்னையை ஆழ்ந்து நினைப்பவர் சொல் பலிக்கும்.

இதுபோல் கடைசி பஸ் போனபிறகும், ஸ்பெஷல் பஸ் வந்தது— கூட்டத்திற்கு முடிந்தபின் தாமதமாகப் போனவர், ஏதோ காரணத்தால் கூட்டத்தைத் தள்ளிப்போட்டு ஆரம்பித்ததை அறிந்தது—ஞாயிறு அன்றும் தபால் வந்தது—போன்ற நிகழ்ச்சிகள் அன்னை பக்தர்கள் வாழ்விலுண்டு.

சில சமயம், மழை நாட்களில் ஈசல் கிளம்பி வீடு முழுவதும் நிரம்பும் நாட்களுண்டு. சாப்பிட உட்காரும் நேரமானால் சிரமம். அன்னை பூக்களை அதிகம் விரும்புவார். பூ வந்தால் உடனே எறும்பு வருகிறது அப்புறப்படுத்தி விடுவார்கள்.

மேல் நாடுகளில், ஈ, எறும்பு, கொசு, வீடுகளில் பார்க்கவே முடியாது. அன்னை பாண்டியில் அவற்றால் பட்ட துன்பம் அதிகம். அதுபோன்ற நாள் ஒன்று. அன்னை சாப்பிடும் நேரம் ஈசல் ஏராளமாக அறையுள் நிரம்பியது.

“இத்தனைப் பூச்சிகள் பறந்தால் நான் எப்படிச் சாப்பிட முடியும்?”

என்றார் அன்னை. அதே கணத்தில் அத்தனை ஈசல்களும் மாயமாய் மறைந்துவிட்டன.

தவறாமல் பலிப்பது அன்னை சொல்.

அன்னையை ஏற்றவர் செயல் தவறாமல் ஜெயிக்கும்.

அவர் சொல்லும், அன்னை சொல்போல் பலிப்பதுண்டு.

சப்தம் பிரம்மம். சப்தம் அன்னையை வெளிப்படுத்தினால் பிரம்மம் செயலில் வெளிப்படும்.

நல்லாசிரியர்

ஆசிரமப் பள்ளியில் மாணவர்கள் தங்கள் பாடங்களைத் தாங்களே தேர்ந்தெடுப்பதுடன், ஆசிரியர்களையும் அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

  • ஒரு நல்ல ஆசிரியராக ஒருவர் ஞானியாக இருக்கவேண்டும்.
  • உயர்ந்த ஆசிரியராக அவர் யோகியாக இருக்கவேண்டும்.
  • ஒருவர் யோகத்தைப் பூர்த்தி செய்யவே அவரை நான் ஆசிரியராக ஆசிரமப் பள்ளியில் நியமிக்கிறேன்.
  • சுயக்கட்டுப்பாடுள்ளவரே, கட்டுப்படாத மாணவனைக் கட்டுப்படுத்த முடியும்.
  • ஆசிரியராக இருப்பது அருளைப் பெறும் வாய்ப்பு என்பவை அன்னை கூறியவை. பாடத்தை மட்டும் போதிப்பவர் உபாத்தியாயர். மாணவனின் சுபாவத்தை உயர்த்துபவர் ஆச்சாரியர். ஞானக் கண்ணைத் திறப்பவர் குரு. இவர் மூவரும் ஒரே தொழிலை மூன்று நிலைகளில் பூர்த்தி செய்பவர்.

தெரியாத விஷய ஞானத்தை உபாத்தியாயர் அளித்தால், தெரியாத பழக்கத்தை ஆச்சார்யன் கூறினால், இல்லாத ஆத்ம ஞானத்தை குரு அளிக்கிறார். அன்னை என்ன செய்கிறார்?

கனடாவின் தலைநகர் குயூபெக்கா, டொராண்டோவா என்று தெரியாதபொழுது எப்படி அதை அறிவது எனத் திகைத்தவர், அன்னையை நினைத்து, அருகிலிருந்த புத்தகத்தைத் தற்செயலாய் எடுத்துப் பிரித்தார். அப்பக்கத்தில் கனடாவின் தலைநகர் குயூபெக் என இருந்தது. இது உபாத்தியாயராக அன்னை செயல்படுவதாகும்.

கெட்ட சுபாவமுள்ளவன் முக்கிய நேரங்களில் அசம்பாவிதமாகப் பேசி காரியத்தைக் கெடுப்பவன். அடுத்த முக்கிய நேரத்தில் அவன் அன்னையை அழைப்பதை மேற்கொண்டு பேசியபொழுது அழகான சொற்கள் வெளிவந்தன. காரியம் பூர்த்தியாயிற்று. அனைவரும் பாராட்டினர். அன்னை ஆச்சாரியனாகச் செயல்படுவது இது.

ஒவ்வொரு செயலைச் செய்யும்பொழுதும், அச்செயல் நம்மை மனிதராகச் செய்யலாம், அல்லது தெய்வமாக்கலாம். அன்னையை முன்வைத்துச் செய்யும் எச்செயலும் மனிதனை அவ்விஷயத்தில் தெய்வமாக்கும். குருவாக அன்னை செயல்படுகிறார்.

“நான் எப்பொழுதும் மறுத்துப் பேசுவேன். ஒரு முக்கிய காரியத்தில் நான் மறுக்கவில்லை. அதனால் இன்று இவ்வுயர் பதவியிலுள்ளேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றும் தெரியவில்லை?” என்ற அன்பர் அன்னை தம்மை வழிநடத்திச் செல்லும் மானசீக குரு என்று அறியார்.

துள்ளி எழும் அன்னை

நாற்காயில் உட்கார்ந்திருக்கும் அன்னை சிறு வயதில் எழவேண்டிய பொழுது துள்ளி எழுவார். அவர் நண்பர்கள் அதை ஆச்சரியமாகக் கவனிப்பார்கள். அன்னை வெளியில் போய்க்கொண்டிருந்த பொழுது பால்ப்  பண்ணை, தோட்டம் போன்ற இடங்களில் விரைவாக நடப்பார். அவருடன் உள்ள சாதகர்கள் அவரைவிட 20, 25 வயது குறைவாக இருந்தாலும் பின்தங்கி விடுவார்கள், பல நேரங்களில் ஓடிப் பிடிக்கவேண்டிய நிலை. 

நரசிம்மராவ் பிரேசில் போயிருந்தபொழுது அந்நாட்டுச் சிப்பாய்கள் அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்தார்கள். 70 வயதான பிரதமருடன் அவர்களால் நடந்து ஈடுகொடுக்க முடியவில்லை. நம் ஆபீசர்களைப் பார்த்து, “உங்கள் பிரதமரைக் கொஞ்சம் மெதுவாக நடக்கச் சொல்லுங்கள்” என்றனர். பொதுவாக ஆரோக்கியமுள்ளவருண்டு. பதவியிருக்கும்பொழுது வேலை அதிகமாக இருந்தாலும், பதவி தெம்பைக் கொடுக்கும். ராஜீவ் இறந்த அன்று பிரதமர் ஒரிசாவிலிருந்தார். அவர் வேலை நள்ளிரவாகியும் முடியவில்லை. அதற்குள் ராஜீவ் மரணம் அவருக்குச் செய்தியாகக் கிடைத்தது. அது சம்பந்தமாக எல்லா உத்தரவுகளையும் கொடுத்து முடிக்க காலை 5 மணியாயிற்று. மறுநாள் அதனால் அதிக நேரம் தூங்க முடியாது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர்கள் பகல் முழுவதும் பிரயாணம், கூட்டம், கமிட்டி வேலை, பேச்சு போன்றவற்றில் மூழ்கி விடுவார்கள். வேலை இரவிலும் தொடரும். தேர்தலுக்கு முன் அவர்கள் தினமும் சில மணி நேரமே தூங்கமுடியும். ஆனால் தெம்பாக வேலை செய்வார்கள். தேர்தல் முடிந்த மறுநாள் தோற்ற வேட்பாளர்களால் எழுந்திருக்க முடியாது. ஜெயித்தவருக்கும் முன்போல தெம்பிருக்காது. பதவி உற்சாகம், தெம்பைத் தரும்.

  • உடல் உழைப்பு உடலுக்கு உரத்தை அளிக்கும், அதனால் வரும் தெம்பு உடலால் மட்டும் உழைக்க உதவும்.
  • உணர்வு நிறைந்தவனுக்கு அதைவிடத் தெம்பு அதிகம். அது பல மடங்கு அதிகம். அது உயர்ந்த தெம்பு.
  • அறிவால் வேலை செய்பவனுக்குள்ள தெம்பு அதனினும் உயர்ந்தது.

ஆன்ம விழிப்புள்ளவர் பெறுவது தலைசிறந்த சக்தி, அதற்கு முடிவில்லை. அன்னை அவதாரப் புருஷர். அவருக்கு அளவில்லாத தெம்பிருந்தது.

மகான்களுக்கு நோய் வருவது சொற்பம். அவர்கள் பெறும் தெம்பு தவத்தால் பெறுவது. தவம் அக்னி, உலகை உற்பத்தி செய்த சக்தி அக்னி. தினமும் தியானம் செய்யும் வழக்கமுள்ளவர்கள் ஆபீசில் அதிகச் சுறுசுறுப்பாய் வேலை செய்வதைக் காணலாம்.

தியானத்தின் போது ஆத்மசக்தி உடலில் பாய்வது தெரியும். பகவான் பகலெல்லாம் வேலை செய்வார். இரவெல்லாம் எழுதுவார். இரவு 12 மணிக்கு மேல் குளித்துச் சாப்பிடும் நாட்களுண்டு. 2½ மணிக்கு எழுந்து மேலும் 6 மணிவரை எழுதுவார்.

பக்தர் ஒருவரை உடன் வேலை செய்பவர் பார்க்க வந்தார். ஆபீஸ் முடிந்தபின் பக்தர் 10 பேரைச் சேர்த்து வேலை செய்துகொண்டிருந்தார். ஆபீஸ் போகுமுன்னும், அதேபோன்று வேலை. இது தவிர அவருக்குத் தினமும் நேரில் போய்ப் பார்க்கும் சொத்துக்கள் இரண்டிருந்தன. வந்தவர், பக்தர் மாலையிலும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்து, “நாங்கள் ஆபீஸ் வேலையை மலையாகக் கருதுகிறோம். நீங்கள் அதைச் சுண்டைக்காயாக மாற்றிவிட்டு காலையிலும், மாலையிலும், வேறு இடங்களிலும் வேலை வைத்திருக்கிறீர்கள். ஆசிரமத்தில் அடிக்கடி நான் உங்களைப் பார்க்கிறேனே, எப்படி இதெல்லாம் முடிகிறது?” என்று கேட்பார்.

ஆன்மீகம் தெம்பு நிறைந்தது.
அது நிறைந்தால் உடல் துள்ளும்.

Feb 29, 1956 – சத்திய ஜீவியம் உலகில் பிறந்த நாள்

அரசன் ஆண்டபொழுது, அரசனுக்குச் சேவை செய்வதே மற்றவர் கடமை. அரசனாக வேண்டும் என நினைப்பதும் இராஜத்துரோகம். ஜனநாயகம் ஒவ்வொருவரும் அரசனாகும் உரிமையை அளித்து, அவ்வுரிமையை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருவதால் தச்சனுடைய மகன் போலந்தில் ஜனாதிபதியானார், பேப்பர் போட்ட பையன் அமெரிக்க ஜனாதிபதியானார், கிராமத்தில் பிறந்த வசதியற்றவர் இந்தியப் பிரதமரானார்.

வேதம், உபநிஷதம், கீதை, புராணம், இதிகாசம், மதம், தவம், மகான்கள், ரிஷிகள், அவதாரப் புருஷர்கள் அனைவரும் கூறியது,

மனிதன் பிறப்பிலிருந்து விடுதலை பெற்று மோட்சம் அடையவேண்டும், இறைவனின் திருவடிகளில் சேரவேண்டும்.

ஸ்ரீ அரவிந்தம் கூறுவது:

“மனிதன் பொய்யிலிருந்து விடுபட்டு மெய்யை அடைவதால் வாழ்விலிருந்து உயர்ந்து இறைவனாக முடியும், அதுவும் 30,000 ஆண்டுகளில் நடப்பதை 30 ஆண்டுகளில் நடத்தமுடியும்” என்பதாகும்.

அதை சாதிக்கும் சக்தியான சத்திய ஜீவியத்தை உலகுக்குக் கொண்டுவர ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் யோகம் செய்தனர்.

1956 பிப் 29இல் அச்சக்தி உலகுக்கு வந்தது.

வந்து இறங்கியதை உலகில் மூன்று பேரே உணர்ந்தனர். அவருள் ஒருவர் ஆப்பிரிக்காவில்  இருக்கிறார் என்றார் அன்னை. விளையாட்டு மைதானத் தியானத்தில் அச்சக்தி இறங்கியபொழுது அன்னை தியானத்திலிருந்தார். கண் திறந்தால் அனைவரும் அச்சக்தியை தாங்கமுடியாமல் தரையில் விழுந்திருப்பார்கள் என நினைத்துக் கண் திறந்தார். எவரும் எதுவுமறியாமல் அமைதியாக உட்கார்ந்திருந்ததைக் கண்டு ஏமாற்றமடைந்தார்.

ஒவ்வொரு பிப் 29 அன்றும் அச்சக்தி புவியில் இறங்குவதை நாம் இன்றும் அறியமுடிவதில்லை.அன்னை நம்மை கண்மூடியாக (unconscious) இருப்பதாகக் கூறுகிறார். நமக்கு அது தெரிவதில்லை.

ஆப்பிரிக்காவில் ஒருவர் தாம் கண்டதை, “திடீரென வானத்தில் வெண்மை செறிந்த சக்தி அலைகளைக் கண்டேன். இது ஏதோ ஆன்மீகச் சக்தி என உணர்ந்தேன். சில நாள் கழித்து ஆசிரமத்துக் கடிதம் கண்டு விவரமறிந்தேன்” என்கிறார்.

இரண்டு வகைகளில் நாம் கண்மூடிகளாக இருக்கலாம். பெற்றோர் சம்பாதிக்கப்  பட்ட கஷ்டத்தை அறியவே முடியாத பிள்ளைகளைப் போலும் இருக்கலாம். நேருவும் இந்திராவும் ஆறு ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அளவு கடந்த சேவையைச் செய்தபின் தாங்கள் எதுவும் செய்யவில்லை என நினைத்தனர். ஏனெனில் இனி செய்ய வேண்டியவை எவ்வளவு என நினைத்ததால், தங்கள் குறையை மட்டும் உணர்ந்தனர், தாங்கள் செய்ததை அறியவில்லை. இலட்சியத்தால் அவர்கள் கண்மூடியாக இருந்தார்கள்.

அன்னை உலகில் அவதாரம் எடுத்தததால், லோகமாதா (அன்னை லோகமாதாவின் ஓர் அம்சம்)- சூட்சுமமாக ஆசிரமத்திற்கு வந்து அன்னையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய முனைந்தார். நமக்கு அன்னையையும் தெரியவில்லை. லோகமாதாவையும் தெரியவில்லை. பாராமுகமாக இருந்தால் லோகமாதா திரும்பிப் போய்விடுவார் என்று 1946-இல் அன்னை கூறினார். அவர் போய்– விட்டதாகவும் பின்னர் கூறினார்.

சத்திய ஜீவியம் வந்த பொழுது அன்னை விளையாட்டு மைதானத்தில் தியானத்திலிருந்தார். முதலில் அதன் குரல் பிரெஞ்சில் கேட்டது. பிறகு ஆங்கிலத்தில் கேட்டது. பகவான் குரலானால் அது ஆங்கிலத்தில் கேட்கும் என்கிறார் அன்னை. “நேரம் வந்துவிட்டது” என்றது குரல்.

பொன் கதவைத் திறக்க அன்னை பொன் சுத்தியால் அதை உடைத்தார்.

நாம் செய்யும் வேலைகள் பெயரளவில் கூடி வந்தாலும், நாம் அதற்காக என்ன செய்தோம் என்று அறியமுடியாத நிலையுண்டு.

நம்மை விலக்கி, சக்தியை (Force) அனுமதித்தால் தியானத்தில் சக்தி உள்ளிறங்கி உடலில் பாய்வது தெரியும். மேலும் மேலும் நம்மை விலக்கினால் சக்தி அதிகரிக்கும்.

சக்தியை உணர்பவன் சித்தி பெற்ற சாதகன்.

சக்தியை உணராதவன் தன் வேலை 24 மடங்கிலிருந்து, 12,000 மடங்காகப் பெருகிப் பலன் தருவதைக் காண்பான்.

பலன் பெறுதல் அருள் பெறுதலாகும். அதைப் பெற்றால் நூறு பேரில் ஒருவராகலாம். சக்தியை உணர்ந்தால், யோகம் சித்திக்கும். பலன் பெற்றவர் பலர் அதை அறிவதில்லை. அறிந்தாலும், யோகம் சித்திக்கும் என்பது அன்னையின் பேரருள், பூவுலகில் மனித வாழ்வில் வெளிப்படுவதாகும்.

அடம் பிடிக்கும் அன்பு

ஆசிரமத்திலுள்ளவரின் தாயார், ஊரிலிருந்து வந்திருந்தார். அன்னையைத் தரிசிக்க அனுமதி பெற்றார். அன்று தரிசன தினம். அன்னைக்குப்பின் தரிசனம் என்பது ஆசிரமத் தியானம் (காலை 6.00 முதல் 6.30 மணிவரை), பகவான் அறையைத் தரிசிப்பது. அன்னை பிறந்த நாளானால் அன்னையின் அறையைத் தரிசிப்பது. பிப்  29  சத்திய ஜீவிய நாளானால் (Supramental day) அன்னை, பகவான் அறைகளைத் தரிசிப்பது. 1962வரை தரிசன நாட்களில் பக்தர்கள் வரிசையாக அன்னை முன் சென்று தரிசிப்பார்கள். சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ய அனுமதிக்க நேரமில்லை என்பதால் அனுமதியில்லை. காலையில் 6.15-க்கு அன்னை பால்கனி தரிசனம் தருவது 1962 வரை இருந்தது. 1962-இல் அன்னை அதை நிறுத்திவிட்டார். 1963-இல் மீண்டும் தரிசனம் தர ஆரம்பித்த பொழுது மாலை 5.30 மணிக்கு terrace ஆசிரமத்தின் கிழக்குப் பகுதியில் இரண்டாம் மாடியிலுள்ள பால்கனியில் வந்து 1973 ஆகஸ்ட்டு வரை தரிசனம் தந்தார். பிறந்த நாளைக்கு அனுமதியுள்ளவர்கள் அன்னையைத் தனியே அவர் அறையில் தரிசிப்பார்கள்.

தம் தாயாருடன் ஆசிரமவாசி வரிசையில் நின்றார். தாயார் அன்னை முன் வந்தவுடன் பரவசப்பட்டுவிட்டார். வெளியில் வந்த பிறகு மகனை நோக்கி, “நான் அன்னை முன்பு 15 நிமிஷம் உட்காரவேண்டும்” என்றார். மகனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அன்னை அறைக்கு வெளியே வந்த தாயார் அங்கேயே உட்கார்ந்துவிட்டார். எழும்பவும் மறுத்தார். உண்ணா விரதமிருக்கிறேன் என்றுரைத்தார். மகன் இங்கேயே இருப்பதால் 15 நிமிஷ “தரிசனம்” என்பது, நடக்காத காரியம் என்றறிவார். தாயார் தாம் உணர்ந்த பரவசத்தை நினைத்து, அதையே மேலும் விரும்பி, பிடிவாதம் செய்தார். இக்கட்டான நிலைமை. ஒருவாராகத் தாயாரை மகன் வீட்டிற்கு அழைத்துப் போனார். தாயார் ஊருக்குத் திரும்பினார்.

வீடு நம் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நம்மால் பெறமுடியாத சௌகரியங்களை வீடு பெற்றுத் தருகிறது. அடம்பிடிக்கும் குழந்தை, படிக்காத மகள், சம்பாதிக்காத கணவன், வாயாடி மனைவி ஆகியோருக்கும் வீடு தன் சௌகரியங்களை மறுப்பதில்லை.