அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 4

அன்னை கருணையே உருவான ஆன்மீக இல்லம்.

புத்திசாலிக்கு மேதாவிலாசத்தையும், சுமூகமானவர்க்கு அதிர்ஷ்டமாகச் செல்வத்தையும் தரும் அன்னை, அடம்பிடிப்பவருக்கும் அவர் ஆசையை அதற்குரிய நேரம் வரும்பொழுது பூர்த்தி செய்கிறார். அறிவு ஏற்பதை உடல் ஏற்க முடியாவிட்டால் அடம் உற்பத்தியாகிறது. மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி என்பவற்றை நாம் அறிவோம். ஜீவனுக்கு வளர்ச்சியுண்டு. உடலும், உணர்வும், அறிவும் ஒருசேர வளர்வது ஜீவனின் வளர்ச்சி. அறிவு வளர்ந்து அது ஏற்பதைச் செயல் – உடல் – ஏற்க முடியாவிட்டால் அடம் உற்பத்தியாகிறது. வாழ்வில் அடம்பிடிப்பவர்கள் நாளடைவில் அதை மறந்துவிடுவார்கள். காலம் அதைச் செய்யும். அடம்பிடித்துச் சாதிப்பவர்கள் குறைவு. அறிவே இல்லாதவர்க்கு, அடம்பிடித்தால் சாதிக்க முடியும். ஆயின், அது குறைவு. அன்னை முறை வேறு.

சொந்த ஊருக்குப் போன தாயார், அடுத்த தரிசனத்திற்கு வந்தார். அன்னை முன் வரிசையில் வந்தார். சற்று தூரத்திலுள்ள பொழுது அன்னை ஒருவரிடம் பேச ஆரம்பித்து 15 நிமிஷம் பேசினார். தாயார் அப்பதினைந்து நிமிஷமும் அன்னையைத் தரிசனம் செய்ய முடிந்தது. அவர் அபிலாஷை பூர்த்தியாயிற்று.

அடம்பிடிக்கும் குழந்தையை தாய் அணைப்பதுபோல் அடம்பிடித்த உடன் விருப்பத்தை அன்னை பூர்த்தி செய்கிறார்.

தோற்றமும் அம்சமும்

எந்தத் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தாலும் அதன்மூலம் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வது அன்னையே என்று அவர் கூறுகிறார்.

பகவானும், அன்னையும் தரிசனம் தரும் நாட்களில் ஒரு குடும்பம் தரிசனத்திற்கு வந்தது. மனைவி கர்ப்பமாக இருந்தார். கர்ப்பினிகளை அன்னை ஏழு மாதம்வரை அனுமதிப்பதில்லை. குழந்தை உருப்பெறும் முன் தரிசனத்திற்கு வந்தால் சூழலின் கனம் தவறான உருவத்தை அளிக்கும் (The child will have a bad formation) என்பதால் ஏழு மாதமான பின்னரே அன்னை அனுமதி தருவார். குழந்தை பிறந்தபின் நான்கு வருஷம்வரை, தரிசனத்திற்கு அன்னை அனுமதிப்பதில்லை. காரணம் அதுவே. இரண்டு வயது குழந்தை மாத்ரு மந்திருக்கு வந்தபொழுது வீல் என அழ ஆரம்பித்தது. காரணம் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் இந்தச் சட்டத்தை நினைவுபடுத்தினார். குடும்பம் மாத்ரு மந்திரை விட்டகன்று கொஞ்ச தூரம் போனவுடன் குழந்தையின் அழுகை நின்றது.

சுபத்திரை வயிற்றிலுள்ள அபிமன்யூ கிருஷ்ண பரமாத்மாவின் மந்திரத்தைக் கேட்டுக் கொண்டதுபோல், தரிசனத்திற்கு வந்த கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தையும் பகவான் ஆசியைப் பெற்றது. இத்தொடர்பு பிற்காலத்தில் அக்குழந்தையை அன்னையிடம் கொண்டு சேர்க்கும்.

பெண் குழந்தை பிறந்தது. உள்ளூர் கான்வென்டில் பெண் படித்தாள். ஆன்மீகம் எனில் விரதம், பட்டினி, எளிமை, வறுமை என்ற சூழல். கான்வெண்ட் அவளுடைய மனநிலையைத் தயார் செய்தது. வயதானபின் குடும்பத்தாரோடு மீண்டும் தரிசனத்திற்கு வந்தபொழுது அன்னையின் உடை விலையுயர்ந்ததாக இருப்பதைக் கண்ட அவளுக்கு மனம் அதை ஏற்கவில்லை. தரிசனச் சமயத்தில் அன்னையின் பாதங்களில் தலையை வைத்து நமஸ்காரம் செய்தாள். தலையில் கைவைத்து அன்னை ஆசீர்வாதம் செய்வதை அவள் அறிவாளாதலால், அதை எதிர்பார்த்தாள். ஏனோ, அது நடைபெறவில்லை. எழுந்து உட்கார்ந்தாள். அன்னை அவள் கண்களை உற்று நோக்கினார். வேறு உலகத்திற்குப் போனது போலிருந்தது அவளுக்கு. பின்னால் பக்தர்கள் நிற்பதால், அன்னை பார்வை அகற்றும்முன் அவள் எழுந்துவிட்டாள். ‘ஏன் அன்னை பார்வையை அகற்றுமுன் எழுந்திருக்கிறாய்?’ என்று பின்னாலிருந்தவர்கள் கேட்டார்கள். ஊருக்குத் திரும்பிய போது  பள்ளியில் விசேஷம். அது கிருஸ்துவப் பண்டிகை. பேர் போனது. பண்டிகையன்று செய்யும் பிரார்த்தனை பலிக்கும் என்பது நம்பிக்கை. பெற்றோர்கள் அவளைத் திருமணத்திற்காக வேண்டிக்கொள்ளச் சொன்னார்கள். அவள் பண்டிகையிலிருக்கும்பொழுது மனம் திருமணத்தை நாடவில்லை. தனக்குத் தெய்வம் வேண்டும் எனத் தோன்றியது. அதையே கேட்டாள்.

மீண்டுமொரு தரிசனத்திற்கு அவர்கள் குடும்பத்துடன் வந்தார்கள். தரிசனத்திற்காக அன்னை அறைக்கு வெளியில் நின்றபொழுது சம்பக்லால் வந்து இவள் பெயரைக் கூப்பிட்டு யார் அது எனக் கேட்டார். எல்லோருடைய தரிசனமும் முடிந்தபின் அன்னை உன்னைக் கடைசியில் வரச் சொல்கிறார் என்றார். அதேபோல் கடைசியில் சென்றார். தரிசனம் ஆத்ம திருப்தி அளித்தது. அன்று மாலை தூங்கும்பொழுது அவள் உயிர் உடலை விட்டெழுந்து அன்னை அறைக்குப் போயிற்று. அன்னையைச் சந்தித்து “என்னை விட்டகலக் கூடாது” என்று வேண்டியது. அன்னை அவள் கேட்ட வரத்தை அளித்தார்.

அவள் பிரார்த்தனை செய்தது கிருஸ்துவப் பண்டிகையில்– பூர்த்தி செய்தது அன்னையின் அறையில்.

செய்யாத பிரார்த்தனை

பிரார்த்தனை செய்து அடுத்த மாதம் அது பூர்த்தியாகிறது. மற்ற பிரார்த்தனை அன்று மாலையே பூர்த்தியாகிறது என்பதை நாம் காண்கிறோம். அன்னையைப் பொறுத்தவரை நேரம் தேவையில்லை என்றாலும், இதுபோல் நடப்பதைக் காண்கிறோம். காரணங்கள் பலவகையின.

அரைகுறை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் நாள் கழித்துப் பலிக்கும். இந்தப் பிரார்த்தனை பலிக்காது எனத் தெரியும், இருந்தாலும் பிரார்த்தனை செய்து வைப்போம் என்ற மனநிலையும் அதற்குக் காரணம். சில சமயங்களில் மனம் தீவிரமாக வேறு முக்கியமான விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும், அது சமயம் செய்யும் பிரார்த்தனை உடனே பலிக்காது. படிக்க பயமுள்ள மாணவனுக்குக் காலேஜில் சேர ஆசையுமிருந்து பிரார்த்தனை செய்தால், பயமும் ஆசையும் போராடுவதால், பலன் தள்ளிப் போகும்.

விஷயம் புதியதாக இருந்தால் நமக்கு விபரம் தெரியாது. அந்நேரம் செய்யும் பிரார்த்தனைக்கு மனத்தில் தடையிருக்காது. அது அன்றே பலிக்கும். வேறு காரணமாக அன்னையைத் தீவிரமாகச் சில நாட்கள் நினைக்கவேண்டியிருக்கும். அந்த நேரம் எழும் பிரார்த்தனை, இந்தத் தீவிர நினைவின் ஆதரவால் உடனே பலிப்பதுண்டு.

இவற்றைக் கடந்த நிலையில் சில பலன்கள் உள்ளன.

  • காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண் அம்மா என அலறி, காயம்படாமல் எழுந்துவந்தார்.
  • கால் குத்தியிருந்த இரும்புப் பின் தானே மறைந்தது.
  • ஓடும் ரயில் நின்றது.
  • தொலைந்துபோன பர்ஸ் மூன்று நாள் கழித்துப் பலமுறை தேடிய இடத்திலேயே கிடைத்தது.
  • தொலைந்த வைரமோதிரம் பலமுறை தேடிய மேஜை மீதே  மூன்றாம் நாள் கிடைத்தது.
  • மோத வந்த பஸ்ஸின் முன் விழுந்தவரை ஒரு சக்தி தூக்கி அப்புறப்படுத்தியது.

இவை போன்ற நிகழ்ச்சிகள் அதிகமில்லை. ஆனால் அன்பர்கள் அனுபவத்தில் உண்டு.

தரிசனத்திற்கு வந்து திரும்பும் பக்தர் கூடூர் ரயில்வே ஸ்டேஷனில் டீ சாப்பிட இறங்கியபொழுது ரயில் நகரவே ஓடி ஏறியபொழுது வேஷ்டி சிக்கி ரயிலடியில் விழுந்தார். அவர் பிரார்த்தனை செய்யும் நிலையில் இல்லை. அப்படியே அவரை ஆகாயத்தில் தூக்கி ரயினுள் போட்டது ஒரு சக்தி.

அன்னை, செய்யாத பிரார்த்தனையை இதுபோல் பூர்த்தி செய்வதுண்டு. உடல் தன்னை மறந்த நேரம் அன்னையைத் தன்னை அறியாமல் நினைவுகூர்வதால் இது நடக்கிறது. மனம் உண்மையாக இருந்தது என்பதுபோல் உடல் அன்னைக்கு உண்மையாக இருந்ததால் பிரார்த்தனை செய்யாமல் அன்னை செயல்படுகிறார்.

சோகம், ஏமாற்றம்

அன்னை பெயரில் பலர் பள்ளிகள் நடத்துகிறார்கள். ஒருவர் ஆசிரமம் நடத்துகிறார். இங்கு ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். அன்னை முறையைப் பின்பற்றினால் பிரச்சினைகள் இருக்கா. அன்னையை வணங்கினாலும், அவர் முறைகளைப் பின்பற்றுவது கடினம்.

அப்படிப்பட்டவர் ஒருவர் ஆசிரமம் வந்து அன்னையைச் சந்தித்துப் பேசினார். “என் வாழ்வு சோகம் நிறைந்தது. ஒரே ஏமாற்றம், வெறுப்பும், விரக்தியும் அதிகம், எரிச்சல் வருகிறது” என்று தம் நிலையை விளக்கினார்! இதுபோல் அன்னையிடம் முறையிடுபவர்கள் பலர்.

பதிலுக்கு அன்னை, “என் அகராதியில் சோகம், ஏமாற்றம், வெறுப்பு, விரக்தி, எரிச்சல் போன்ற வார்த்தைகள் இல்லை. சந்தோஷம், திருப்தி, அன்பு, நிறைவு, சுமுகம் போன்ற சொற்கள் ஏராளமாக உண்டு” என்று கூறியதுடன் பதிலுக்கு அவற்றைப் போக்க ஒரு முறையையும் விளக்கினார்.

பெரிய அமெரிக்கக்  கம்பனியில் வேலை போய் மனைவி விவாகரத்து செய்யும் நிலையில் மார்க் என்பவர் சோர்ந்து சுருண்டுபோய் உட்கார்ந்திருந்தபொழுது இந்தியாவுக்குப் போய்த் திரும்பிய அவர் நண்பர் வந்து ஆசிரமத்தைப் பற்றியும், அன்னையைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். மார்க் நிமிர்ந்து உட்கார்ந்தார். பல நாட்களுக்குப்பின் லேசாகச் சிரித்தார், “யார் இந்த மதர் (Mother)? நீங்கள் பேச ஆரம்பித்தபின் என் நெஞ்சம் நிறைகிறது. தெம்பு வருகிறது. சந்தோஷமாக இருக்கிறது. மேலும் பேசுங்கள். நான் இந்தியாவுக்குப் போகட்டுமா? ஆசிரமத்தின் விலாசம் கொடுங்கள்” என்று பத்து நிமிடத்தில் தம் சோகத்தை விட்டு வெளிவந்தார்.

அன்னையை நினைத்தால் சோகம் கரையும்.

அவர் பெயரைச் சொன்னால் ஏமாற்றம் போகும்.

அவரை அழைத்தால் சந்தோஷம் வரும்.

அன்னை வந்தவரிடம் இவற்றையெல்லாம் சொல்லவில்லை. அவர் சொன்னது பின்வருமாறு

கடலைப் பார். எப்படி அகன்று பரந்துள்ளது!

மொட்டைமாடிக்குப் போய் வானத்தை நிமிர்ந்து பார். எத்தனை ஆயிரம் நட்சத்திரங்கள் தெரிகின்றன!

பால்–வெளியைப்  (Milky Way) பார்த்திருக்கிறாயா? அதனுள் எவ்வளவு நட்சத்திரங்கள் உள.

எவ்வளவு பெரிய பிரபஞ்சம் இது?

இது அனந்தம், infinity. ஏன் மனம் குறுகலாகவேண்டும்?

இவற்றைப் படைத்தவனுடன் நாம் ஐக்கியமாக வேண்டுமன்றோ?

அப்படிச் செய்தால் மனம் எப்படிச் சிறியதாக இருக்கமுடியும்?

சோகம், விரக்தி, ஏமாற்றம், வெறுப்பு, சிறிய மனத்திற்குரியது.

இதற்கு எதிரானவை பெரிய மனத்திற்குரியவை.

மனம் விசாலமடைய முயல்வது சரி.

விசாலமடைந்த பிறகு உன் கஷ்டம் தீரும்,

என்று அறிவுரை கூறினார்.

ராமனும் சீதையும்

அன்னையைச் சக்தியாக அறிந்து அவர் யோகத்தை ஏற்று, அவர் விரும்பியபடி யோகப் பாதையில் வந்து பூரணயோகச் சாதகராக வருவது சிரமம். அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் பலிக்கும், இதுவரை பலிக்காத பிரார்த்தனைகளும் அற்புதமாகப் பலிக்கும் என்பதை அறிந்தவர்களும் சிலரே.

உலகத்தை ஒரே நாளில் சத்திய ஜீவியமாக்கும் சக்தி அன்னைக்குண்டா எனக் கேட்ட சாதகருக்கு, பகவான் சுருக்கமாக ஆம் என்று கூறினார். அன்னை வந்த ஆரம்பத்தில் அதிசயம்-Miracles- எனப்படும் யோக அனுபவங்களை அன்னை சாதகருக்கு அளித்து வந்தார். அப்பொழுதுதான் கடல்தேவதையுடன் பேசினார். பகவான் அன்னையை அது போன்றவற்றை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு ஓரிரு செயல்கள் தற்செயல்களாக அப்படி நடந்துள்ளன. மிகப்பெரிய ஆச்சரியம், அற்புதம் போன்ற காரியங்களையும் பிறகு அன்னை அறிவுக்கு விளங்குமாறு, இயற்கை நியதிகளை ஒட்டிச் செய்துள்ளார்.

ஆசிரமம் வந்த வடநாட்டார் அன்னையைக் கண்டு பிரமித்தனர். வீடு திரும்பியதும் பக்கத்து வீட்டில் 10 வயதுவரை நடக்கமுடியாத பையனுக்கு அன்னையைப் பற்றிச் சொன்னார்கள். மூளை வளர்ச்சியில்லாதவன். ஒரே பிள்ளை. ஆசிர்வாத மலரினை-Blessing packet- பையனிடம் கொடுத்தனர். இதுவரை படுக்கையாக இருந்த பையன் அன்று எழுந்து நின்றான்! பெற்றோருக்கு மகன் இனி மனிதனாவான், நடப்பான், படிப்பான் என நம்பிக்கை வந்துவிட்டது. அது நடக்கவில்லை. அத்துடன் அவன் இறந்துவிட்டான்.

ஒரே பிள்ளை இறந்த சோகத்தால் தாய்க்குச் சித்தபிரமை வந்தது. அவரை ஆசிரமம் கொண்டுவந்து ஒரு மாதம் வைத்திருந்தனர். மீண்டும் வீட்டுக்குப் போனார்கள். 10 வருஷமாகக் கருத்தரிக்காத பெண் கருவுற்றாள். இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அன்னை அக்குழந்தைகளுக்கு ராமன், சீதை எனப் பெயரிட்டார்.

பகவான் இரண்டாம் உலக யுத்தத்தை அன்னையின் யுத்தம் என்பார். இரண்டாம் உலக யுத்தத்தை பகவான் நடத்தினார். தம் யோக சக்தியால் அதை வென்றார். அதைப் பற்றி வெகுநாள்வரை குறிப்பிடவில்லை.

ஏராளமான பிரிட்டிஷ் துருப்புகள் டங்கர்க் என்ற இடத்தில் ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்டபொழுது, மூடுபனி துருப்புகள் மேல் கவிழ்ந்தது. துருப்புகள் தப்பி விட்டன. அதைப்பற்றிப் பேச்சு எழுந்த பொழுது பகவான் ஒன்றும் அறியாதவர்போல் ‘மாயமாய்ப் பனி வந்து உதவியது‘ எனக் கூறினார். தாம் துருப்புகளைக் காப்பாற்றியதாகக் கூறவில்லை. தூய்மையான நம்பிக்கையால் பக்தர்களுக்கு இன்றும் ஆச்சரியமான பலன்கள் கிடைக்கின்றன. இன்று கிடைக்கும் பலன் அதிகமானது. காலில் 20 நாட்களிருந்த சிறுஊசி– pin- மாயமாய் மறைந்தது போல பல காரியங்கள் நடக்கின்றன.

பலன் கருதித் தேடுபவர்கட்கு இது அதிகமாகக் கிடைப்பதில்லை. விவரம் தெரியாதவர்களுக்கு ஏதோ ஒரு சமயம் நிச்சயம் கிடைக்கிறது. அன்னையை அன்னைக்காக ஏற்க விழைபவர், அன்னையின் திருவடிகள், தங்கள் தலைமீது கற்பனையாகப் பட்டவுடன் புளகாங்கிதமடைபவர்கள், அன்னையைப் பக்தியால் நெருங்க விழைபவர், தங்களுக்குத் தீராத பிரச்சினைகளான – கால் ஊனம், 20 வருஷத்திற்கு முன் தொலைந்த நிலப்பத்திரம், பிறவியிலேயே பார்வையில்லாத கண் – போன்றவை இருந்தால், பலனுக்காக இல்லாமல் பக்திக்காக அவை தீரப் பிரார்த்தித்தால், அவை ஆச்சரியமாகத் தீருவதைக் காணலாம். அதைச் சோதனையாகச் செய்வதைவிட பக்தியாகச் செய்வது மேல். பலன் கால் ஊனம் நீங்கி நடப்பதன்று, அன்னையை ஆத்மாவில் நெருங்கி வருவதாகும்.

அதுபோன்ற பலன் பெற்ற – பலிக்கும் பிரார்த்தனைகள் பலவற்றைக் கவனித்தால் எல்லாப் பிரார்த்தனைகளும் பிறவிக் குருடனுக்குப் பார்வை வந்தது போலவே பலிப்பது அவருக்குப் புரியும். பலனைவிட –  புரிவதைவிட, அன்னையை ஆத்மா அறிவது முக்கியம் என்ற மனநிலைக்கு அது உண்டு.

உடலைவிட்டு வெளியே போவது

“நான் தூங்கும்பொழுது சில சமயங்களில் என்னுடலை நானே பார்ப்பதுண்டு,” என்று கூறுபவர்கள் உண்டு. அவர்கள் உடலை விட்டு வெளியே போகும் திறனுடையவர்கள்.

இறந்த பிறகு நடக்கும் கரும காரியங்கள் ஆத்மா சாந்தியடையச் செய்யப்படுபவை என நாம் கூறுகிறோம். ஆவி சாந்தப்படுவதற்காகச் செய்யப்படும் சாங்கியங்கள் அவை. ஆவி வேறு, ஆத்மா வேறு. ஆத்மாவுக்கு சாங்கியங்கள் தேவையில்லை. சாங்கியங்களைக் கடந்தது ஆத்மா.

யோகத்தை மேற்கொண்டபின் உடலைவிட்டு வெளிவரும் திறமையுள்ளவர்கள், அதை யோகானுபவம் என நினைப்பார்கள். ஒரு சாதகருக்கு அப்பழக்கம் உண்டு. அன்னைக்கு எழுதினார். “இனி அதுபோல் செய்யக்கூடாது,” என அன்னை கூறினார்.

பாரிசில் ஒரு சமயம் டின்னரில் கலந்து கொண்ட அன்னை, ‘இங்கு புழுக்கமாக இருக்கிறது, நான் காற்றுக்காக வெளியே போகவேண்டும்,’ என நினைத்தார். அடுத்த நிமிஷம் திறந்த வெளியிலிருந்தார். அவர் நினைவு பலித்தது. அவர் உடல் மயக்கமாக விழுந்தது. இது சரியில்லை எனத் தோன்றி தம் உடலைக் கடிந்துகொண்டு மீண்டும் நினைவு பெற்றெழுந்தார்.

இதுபோல் உடலைவிட்டுப் போவது ஆத்மா இல்லை. ஆத்மாவை மனிதன் அறியமாட்டான். இது சூட்சுமச் சரீரம் (subtle physical),  ஆவியும் (subtle vital) வெளியே போவதுண்டு. இதற்கும் யோகத்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறினார்.

வெளியே போனபின் உடலுக்கும் ஆவிக்கும் இடையே ஒரு மெல்லிய தொடர்புண்டு. அது துண்டிக்கப்படக் கூடாது. அது அறுந்துவிட்டால் மீண்டும் உடலுக்குள் நுழைய முடியாது. உயிர் பிரிந்துவிடும்.ஆவி வெளியே போனால் தானே திரும்பும். உடலை யாராவது அசைத்தால், பிடித்து ஆட்டினால் உயிர் திரும்ப முடியாது, என அன்னை எச்சரிக்கிறார். இப்படிப்பட்டவர் தனியே தூங்குவது நல்லது.

ஆப்பிரிக்காவுக்குப் போய் குரு தியோன் மனைவியிடம் உடலை விட்டு வெளியே வரும் கலையை அன்னை அறிந்தார். உடலைவிட்டு வெளியே வந்தபின் அவ்வுடலை விட்டு மீண்டும் வெளிவருவதும் உண்டு. அதுபோன்று அன்னை 12 முறை சூட்சும உடலை விட்டு வெளிவந்தார். அப்படி வந்தபொழுது தலைக்கு மேல் சூரியனையும் அதற்கு மேல் சந்திரனையும் கண்டார்.