தியானத்தின் போது உடலில் சக்தி நுழைவதைக் காணலாம். சில சமயங்களில் உடல் நடுங்கும். பல சமயங்களில் மரத்துப் போகும். சில நிமிஷம் அசையாமலிருந்தால் மீண்டும் சரியாகிவிடும். தியானத்தின் போது உடலைவிட்டு வெளியே போவதும் உண்டு. அது அரிது.
இருவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அது கிராமம் சாலை ஒரு மைல் தூரத்திலுள்ளது. பஸ் ஓடுகின்ற ஒலி கேட்பது நின்றது. ஒருவர் அடுத்தவரிடம் உங்கள் மதுரை நண்பர் பஸ்ஸில் வந்து இறங்குகிறார் என்றார். கேட்டவர் நம்பாமல் சிரித்தார். கொஞ்ச நாழிகை கழித்து நண்பர் வந்தார். சிரித்தவருக்கு ஆச்சரியம். எப்படிச் சொன்னீர்கள் எனக் கேட்டார். பஸ்ஸிருந்து அவர் இறங்குவதைப் பார்த்தேன் என்றார்.
ஸ்ரீ அரவிந்தர் அறையில் இருக்கும் பொழுது ஒரு சாதகர் அவரிடம் வந்தார். ஸ்ரீ அரவிந்தர் “நான் ரிஷபசந்த் என்ன செய்கிறார் என்று பார்த்தேன்” என்றார். ரிஷபசந்த் அவர் வீட்டிலிருக்கும்பொழுது பகவான் தம் அறையிருந்து ரிஷபசந்த்தைப் பார்க்கிறார். இது மனதைவிட்டு வெளியே போவதாகும். மனம் சூட்சுமமாக உள்ளவர்கள், தங்களுக்கு அதிக அக்கறையுள்ள மனிதர்களை நினைத்தால், அவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். நினைப்பதை அறிய முடியும், சமயத்தில் பார்க்க முடியும். மனம் தன் இருக்கையிலிருந்து எழுந்து சூட்சுமமாக வெளியே சென்று செயல்படும். அன்னை பக்தர்களில் சூட்சும மனம் பெற்றவர்களுக்கு இது பலிக்கும். பொதுவாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்க்கும், பெண்களுக்கும், பள்ளிக்கூடம் போகாதவர்க்கும் இந்தத் திறமை இருப்பதுண்டு. யோகத்தை அவர்கள் மேற்கொண்டால், இத்திறன் யோகத்திற்கு உதவும்.
சீட்டாட்டம்
சீட்டு ஆடுதல் நம் நாட்டில் ஆடவர்க்கு மட்டும் உரியது. அதுவும் சூது எனக் கருதப்படும். மேல்நாடுகளில் சீட்டு என்பது விளையாட்டு. ஆடவரும், பெண்களும் எங்கும் சமமாகக் கலந்துகொள்வது போல் சீட்டிலும் கலந்துகொள்வார்கள்.
சாப்பிடும்பொழுதும், மற்ற நேரம் தாகம் எடுத்தாலும் நாம் தண்ணீர் குடிக்கிறோம். இந்தியத் தொழிலதிபர் ஜெர்மனிக்குப் போனபொழுது ஹோட்டலில் தண்ணீர் கேட்டார். அவனுக்குப் புரியவில்லை. எதற்காகக் கேட்கிறீர்கள் என்றான். குடிக்க என்றார். அவர் கேட்டதை வியப்பாகப் பார்த்தவன் போய் டம்ளரில் ஓர் அங்குலம் தண்ணீர் கொண்டுவந்தான். அங்குத் தண்ணீர் சாப்பிடும் பழக்கமில்லை. ஜெர்மனியில் பீர் சாப்பிடுவார்கள், பிரான்சில் ஒயின் சாப்பிடுவார்கள், ரஷ்யாவில் வோட்கா சாப்பிடுவார்கள். அதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமில்லை. நம்மைப்போல் தண்ணீர் சாப்பிடும் பழக்கம் அங்கில்லை. இவற்றை மது என அவர்கள் கருதுவதில்லை. பானம் என எடுத்துக்கொள்கிறார்கள்.
ஒரு சமயம் பலர் சீட்டாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் அதிகமாக நஷ்டப்பட்டார். அன்னை ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அன்னையைப் பலரும் ஆட்டத்தில் கலந்துகொள்ளும்படியும், இழந்தவர் இடத்தை ஏற்று அவர் நஷ்டத்தை ஈடு கட்டும்படியும் கேட்டுக் கொண்டனர்.
“நான் வந்தால் உங்களிடம் உள்ள எல்லாப் பணமும் பறி போகும்” என்று அன்னை கூறியதைக் கேட்டு அனைவரும் கேலியாக வாய்விட்டுச் சிரித்தனர்.
அன்னை ஆட்டத்தில் கலந்துகொண்டார். மற்றவர் கைகளில் உள்ள எல்லாச் சீட்டுகளும் அவர்கள் பார்ப்பதுபோலவே அன்னைக்கும் தெரிகின்றன. அன்னை கூறியதுபோல் அன்னை தொடர்ந்து ஜெயித்தார். எல்லோருடைய பணமும் இவர் கைக்கு வந்தது. மற்றவர்கட்கு ஒன்றும் புரியவில்லை.
“போதும், போதும், நிறுத்துங்கள்”,
என்று அனைவரும் கூக்குரலிட்டனர். சற்றுமுன் கேலியாகப் பேசியது மறந்துவிட்டது.
- அன்னைக்குச் சூட்சுமப் பார்வையுண்டு.
- பிறர் கையிலுள்ள சீட்டின் மறுபுறம் தெரியும்.
- பிறர் மனதிலுள்ள எண்ணங்கள் தெரியும்.
- ஜடப்பொருள்களின் உணர்வை அன்னை அறிவார்.
- ஜடப்பொருள்களின் குரல் அன்னைக்குக் கேட்கும்.
- விலங்குகளின் எண்ணங்களுக்கு அன்னை பதில் சொல்லும் பழக்கம் உண்டு.
- ஆபத்து நேரத்தில் மரம், செடி, கொடிகள் அன்னையிடம் வந்து முறையிடுவதுண்டு.
- தெய்வங்களும் தங்கள் குறைகளை அன்னையிடம் வந்து குறைப்பட்டுக் கூறுவதுண்டு.
பயம்
அன்னையிடம் வந்தபின் நம்மிடமிருந்து துன்புறுத்திய குறைகள் கரைந்துபோகும். சிறு அளவிலுள்ள நல்லது அதிகமாக வளரும். இதற்கு மாறானதும் உண்மை.
தன் வேலைக்காரனைக் கண்டு பயப்படும் மேனேஜர், யார் போனில் கூப்பிட்டாலும் பதில் சொல்லப் பயந்து ஒளியும் பெண், போன்ற நிலை மாறி திறமையாகப் பல பேரை வைத்து வேலை செய்த அனுபவம் உண்டு.
சிறு வயதில் பேய்க்கதைகளைக் கேட்டுப் பயந்து பயமே உருவான பெண், பக்தருடன் உட்கார்ந்து அவர் கையைப் பிடித்துக்கொண்ட நேரம் “நான் எங்கோ போய்விட்டேன். பயம் போன இடம் தெரியவில்லை” என்றார். எருக்கம் பூ தைரியத்தைக் குறிக்கும் எனக் கேள்விப்பட்ட பக்தர், எருக்கம் பூவை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டவுடன், பயம் அதிகமானதைக் கண்டு பீதியடைந்து, விவரம் தெரிந்தவரைப் போய்க் கேட்டார். “எருக்கம் பூவை அன்னை படத்திற்கு முன் வைத்திருந்து, அடுத்த நாள் எடுத்து வைத்துக்கொண்டு பாருங்கள்” என்றார். அப்படிச் செய்த பொழுது பூ தைரியத்தைக் கொடுத்தது, பயத்தை அழித்தது. எருக்கம் பூ தைரியம் என்றாலும், தைரியத்தைப் பெற தெம்பில்லாதவருக்கு அது பயத்தைக் கொடுக்கிறது. ரிவால்வர் நமக்குத் தைரியமளிக்கும். முழு பயந்தாங்கொள்ளியிடம் தற்காப்புக்காக ரிவால்வரைக் கொடுத்தால், ரிவால்வரே அவருக்குப் பயத்தை எழுப்பும்.
ஜப்பானிய கட்டிடக்கலையைப் பின்பற்றி ஆசிரமத்தில் கோல்கொண்டா என ஒரு கட்டிடம் உண்டு. அது இங்குள்ள விடுதிகளில் மிக உயர்ந்தது. அங்கு ஒரு பக்தர் வந்து தங்கினார். இவ்விடம் அமைதிக்குப் பேர் போனது. இரண்டு மணிக்கு ஒரு முறை அலறும் பேய் பிடித்த பெண் இங்கு வந்து தங்கிய பொழுது பகலெல்லாம் அலறவில்லை. இரவு ஒரு முறை அலறினார். இவ்விடுதியிலுள்ள அமைதி அதிகம்.
ஆனால் இப்புதிய பக்தருக்கு இரவு சிம்ம சொப்பனமாக இருந்தது. ஓர் இரவு கனவில் சிங்கம் தம் மார்பு மீது வந்து உட்கார்ந்ததைக் கண்டார். அன்னையிடம் கூறினார். அடுத்த நாள் ஸ்ரீ அரவிந்தர் சிவந்த உடையணிந்து கனவில் தோன்றி நீங்கள் இறந்து விடுவீர்கள் என்றார்.
தொடர்ந்து பயங்கரக் கனவுகள் வருவதைக் கண்டு பயந்து அன்னையிடம் முறையிட்டார். பேசும் பொழுது அவருக்கு நிலையில்லை. அன்னையிடம் பேசுகிறோம் என்ற அமைதியுமில்லை. ஆரவாரமாகப் பேசி முடித்தார்.
இப்படிப் பயப்படுகின்றவர்கள் இந்த யோகத்திற்கு விலக்கு என்றார் அன்னை. விஞ்ஞானத்தைப் பற்றியும், யோகத்தில் அது போன்ற சோதனைகள் செய்ய முடியுமா என்ற கேள்விக்குப் பதிலாக ஸ்ரீ அரவிந்தர், “யோகத்தில் சோதனையை நம்மீது செய்யவேண்டும். எல்லாவிதமான ஆபத்தும் உண்டு. சித்தசுவாதீனம் போவது சகஜம். உயிரும் போகும். இந்த ஆபத்தை எல்லாம் பொருட்படுத்தாதவர்க்கே யோகத்தில் சோதனையை மேற்கொள்ள முடியும்” என்று கூறுகிறார்.
பேராசிரியர் பெற்ற வேலை
சாதகர்கள் கர்மயோகம் செய்யவேண்டி பல்வேறு துறைகளை அன்னை ஏற்படுத்தினார். அன்னை அவர்களுக்குக் கொடுக்கும் வேலை அவர்கள் சுபாவத்தைத் திருவுருமாற்றம் செய்யுமாறு அமையும். பொறுமையில்லாதவருக்கு அன்னை கொடுக்கும் வேலை ஜெனரேட்டரின் அருகில் உட்கார்வது போலிருக்கும். கரண்ட் எப்பொழுதோ ஒரு சமயம் தவறுகிறது. அந்தச் சாதகர் ஜெனரேட்டர் பக்கத்திலுள்ள ஸ்டூல் எப்பொழுதும் இருப்பதாக ஏற்பாடு. யாருடைய பொறுமையையும் அது சோதனை செய்யும்.
எந்த வேலையையும் சரியாகச் செய்யாதவருக்கு எழுத்துப் பிழைகளைக் (proof reading) காணும் வேலை அமையும். எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்பவருக்கும் முடியாத வேலை அது.
வேலையைச் சேவையாக செய்வது ஒரு நிலை. வேலையைக் கர்மயோகமாகச் செய்வது அடுத்த நிலை. அதனால் உயர்ந்த வேலை, தாழ்ந்த வேலை என்ற பாகுபாடு அடிப்படையில் இல்லை.
ஹைக்கோர்ட் நீதிபதி விடுமுறைக்கு ஆசிரமம் வந்திருந்தார். அவருக்கு, வாயிலில் வருபவர்களை வரவேற்கும் வேலை அமைந்தது. “உ.பி.”- இல் ஒரு சாமியார். அவர் ஒரிசா வந்தார். அம்மாநிலம் முழுவதும் அவர் பக்தர்களானார்கள். அவர் ஆசிரமம் வந்தார். சாப்பாட்டு அறையில் பாத்திரம் தேய்க்கும் வேலையை அன்னை அவருக்கு அளித்தார். தரிசன நாட்களில் அவர் வேலை செய்யும் பொழுது அம்மாநிலப் பக்தர்கள் வரிசையாக வந்து அவரை நமஸ்கரிப்பார்கள்.
சமையலறைப் பொறுப்பை ஏற்றவர் பொருளாதாரப் பேராசிரியர். ஆசிரமப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சாப்பாட்டு அறையில் தட்டு கழுவும் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கிறார்.
வேலை தெய்வம். அதைச் செய்யும் பொழுது செய்பவரின் கைகள் அன்னையின் கையாக மாறுவதுண்டு. வேலை நடக்கும் இடத்தில் தியானத்தின் போதுள்ள சூழல் இருக்கும். பாக்டரியில் பவித்திரமாக வேலை செய்தவருக்கு மெஷின் அருகில் பொன்னிறமாக ஸ்ரீ அரவிந்தர் காட்சி அளித்தார்.
ஆசிரமத்தில் சேர்ந்தவர் தாம் முன்பு செய்த வேலையே இங்கும் வேண்டும் என்பவருண்டு. அது தவிர வேறெதாவது வேண்டும் என்பவருண்டு. இரண்டிற்கும் இடமில்லை.
அமையும் வேலை, அன்னை அளிப்பது.
அதுவே திருவுருமாற்றத்திற்கு உதவும்.
தத்துவப் பேராசிரியர் ஆசிரமத்தில் சேர்ந்தார். சாப்பாட்டறையில் தட்டு, கிண்ணம் அலம்பும் இடத்தில் வேலை கொடுத்தார்கள். அவருக்குப் பிடிக்கவில்லை. மாலை விளையாட்டு மைதானத்தில் அன்னையைப் பார்த்துத் தமக்கு எங்கு வேலை எனக் கேட்டார்.
‘டைனிங் ரூமில் வாஷிங் பகுதியில் போய் வேலை செய்யவும்,’
என்றார். தாம் பேராசிரியர். இந்த வேலை பாத்திரம் கழுவுவது என அவர் ஏமாற்றமடைந்தார். ஆசிரமத்தின் அடிப்படையை நன்குணர்ந்தால் இந்த ஏமாற்றமிருக்காது.
பிரமாதம்
தெய்வத்தின் கருணையை மனிதன் வியந்ததுண்டு. மனிதனின் பக்தியைத் தெய்வம் வியந்ததும் உண்டு. ஏழை விவசாயி அனுப்பிய ஒரு ரூபாய் காணிக்கையைப் பெற்ற அன்னை “இப்படிப்பட்ட பக்திக்குத் தெய்வம் என்ன கைம்மாறு செய்யமுடியும்?” என உணர்ச்சிப் பெருக்கால் பேசியதும் உண்டு.
நெடுநாளாக அன்னையோடு தொடர்புள்ள பெண் ஒருவர் ஆசிரமம் வர இயலவில்லை. வரமுடிவெடுத்தபின் அவருடைய 11 வயதுப் பெண் அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து தானும் வரவேண்டுமென்று சாதித்தாள். தாயும் பெண்ணும் வந்தனர். அன்னை, ஆசிரமத்திலிருந்து கார் அனுப்பி விமான நிலையத்திலிருந்து அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்தார்.
வந்தபின் முதற்காரியமாக தரிசனத்திற்கு விண்ணப்பித்தார். அன்னை அனுமதி அளித்தார். தாயும் குழந்தையும் தரிசனம் பெற்றனர். அன்னை குழந்தையைக் கண்டு பிரமித்து, ஓஹோ, ஆஹா, பிரமாதம், சபாஷ், என்று நாம் கூறுவதுபோல் பிரெஞ்சு மொழியில் மெல்லிய குரலில் தம் ஆச்சரியத்தை வெளியிட்டார். பக்தர்கள் தெய்வ தரிசனத்திற்கு வந்தனர்.
தெய்வம் மனித ஆர்வத்தைக் கண்டு பிரமித்தது.
தாய்க்கும், குழந்தைக்கும் அன்னையின் சொல் காதில் விழவில்லை. விழுந்திருந்தாலும் புரிந்திருக்காது.அன்னை அறையிலிருந்தவர் குழந்தையிடம் அன்னையின் திகைப்பை விளக்கினார். அன்னை கூறிய சொல்லைச் சொன்னார். அச்சொல்லின் முழு முக்கியத்துவத்தை அறிய குழந்தை பிரெஞ்சு கற்றுக்கொண்டாள்.
அன்னையைக் கண்ட கருநாகம் விரைந்து வந்து படமெடுத்து, தலையால் தரையில் அடித்து வணக்கம் செலுத்தியபொழுது அன்னை அதன் அழகைக் கண்டு வியந்தார். 7, 8 மைல் தூரத்திலிருந்து அன்பின் ஆர்வம் தழலாக எழுவதை டென்னீஸ் ஆடும்பொழுது கேட்ட அன்னை, அவ்விடத்தை நோக்கிப் போய் தன்னை நோக்கி வந்த வயதான பெண்மணியைச் சந்தித்து அவர் பக்தியைப் பூர்த்தி செய்தார். “உங்களைப் பார்க்கவே இந்த ஜன்மம் காத்திருந்தது. இனி எப்பொழுது போனாலும் கவலையில்லை” என அப்பெண் அன்னையிடம் தமிழில் கூறியதை அன்னை மொழிபெயர்ப்பின்றி புரிந்துகொள்ளும் அளவிற்கு அவ்வாத்மாவோடு ஒன்றிப் போனார்.
பூஜை, ஸ்தோத்திரம், ஸ்லோகம் மூலம் நாம் “பக்தி”யைக் காண்கிறோம். ஆரோவில் ஆலமரம், சாப்பாட்டு ரூம் மாமரம், அடைத்து வைக்கப்பட்ட தென்னைமட்டை, தரையில் விரிக்கப்பட்ட கம்பளம், உயிர் பிரியும் நேரத்தில் பூனை எழுப்பிய குரல், பக்தர் வீட்டு மயிலின் பக்தி, பிஸ்கெட்டை நாடிவரும் காக்கை, தியானத்திற்கு வந்த ரிஷிகள், தெய்வங்கள், புறப்படும் கப்பல் எழுப்பிய ஓங்காரம் ஆகியவற்றுள்ளும் அன்னை பக்தியின் சிறப்பைக் கண்டு போற்றி அருள்பாலித்துள்ளார்.
இக்குழந்தையின் பக்தியே தாயாரை ஆசிரமம் அழைத்து வந்தது, என்ற உண்மை அன்னை மட்டும் அறியும் ஆன்மீக உண்மை.
நம்பிக்கை தீர்ந்தது, நன்றி பிறக்கவில்லை
1930 வாக்கில் ஆசிரமத்தில் 150 சாதகர்களிருந்தனர். அன்னை அதுவரை தாமே சமையல் செய்து பரிமாறினார்கள். “சாதகர்கள் என்னை அறியாமல் எதையும் செய்யமுடியாது. அவர்கள் நினைவையும் என் பிடிக்குள் வைத்திருந்தேன்” என்றார். தினமும் சூப் செய்வார்கள். அன்னை அனைவருக்கும் தாமே சூப் வழங்குவார். வழங்கும் முன் தாம் சூப்பை சுவைத்துப்பார்த்துவிட்டு, சாதகருக்குக் கொடுப்பார். இது நடந்துவரும்பொழுது அன்னையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஸ்ரீ அரவிந்தர் சூப் வழங்குவதை நிறுத்தும்படிச் சொன்னார்.
மனித வாழ்வில் தெய்வம் செயல்படும் வகைகள் பல. உணவைப் பகிர்ந்து கொள்வதன்மூலம் உணர்ச்சியில் தெய்வம் கலந்துகொள்கிறது. தெய்வம் செய்த முயற்சி தெய்வத்தைப் பாதித்தது. மனிதன் பயன் பெறவில்லை. இன்னிலையை விவரிக்கும்படி நம்பிக்கை தீர்ந்தது, நன்றி இன்னும் பிறக்கவில்லை என்ற விளக்கம் எழுந்தது.
இறைவன் ஜடமானான், ஜோதி இருளாயிற்று, ஞானம் அஞ்ஞானமாயிற்று என்பது தத்துவம். ஜடமாகவும், இருளாகவும், அஞ்ஞானமாகவும் உள்ள இறைவன் வெளிவந்து சத்தியமாகவும், ஜோதியாகவும், ஞானமாகவும் மாறுவது பரிணாமம்.
அதே தத்துவம் மனிதனுக்குப் பயன்படும். வறுமையாகவும், பொய்யாகவும், துன்பமாகவும் இன்று இறைவன் வாழ்வில் இருக்கிறான். அதிர்ஷ்டமாகவும், சத்தியமாகவும், இன்பமாகவும் வாழ்வில் மாற அவன் முனைகிறான்.
இறைவன் மாற முயலும்பொழுது மனிதன்மூலம் செயல்படுகிறான். அம்மனிதனுக்கு உதவியாக வந்தது அன்னையின் அவதாரம்.
- நம்பிக்கையால் செயல்படும் மனிதனின் நம்பிக்கை தீர்ந்தது.
- நன்றியறிதலால் செயல்படக்கூடிய மனிதனுக்கு அது பிறக்கவில்லை.
அன்னையின் அவதாரம் அவனிழந்த நம்பிக்கையை அளித்து, இல்லாத நன்றியறிதலைப் பிறப்பித்து வறுமையை அதிர்ஷ்டமாக்க வந்தது.
தாங்கமுடியாத தலைவலி, மாத்திரை, பிளசிங்பாக்கெட், சமாதி தியானம், ஸ்ரீ அரவிந்தர் அறையில் தியானம், சமாதி புஷ்பம், அன்னை அறைகளுக்கு, இரு நாட்களாக அசையாதபொழுது
நம்பிக்கை தீர்ந்து விடுகிறது.
புதுவைக்கே அழைத்து வந்து, சேவையில் அணைத்து, மனத்துள் நிம்மதியாகப் பிறந்து, வாழ்வில் புத்தொளியைப் பிறப்பித்து, புது வாழ்வு அளித்ததற்கு ஆன்மாவில் இன்னும்
நன்றி பிறக்கவில்லை.
நம்பிக்கையும் போய், நன்றியும் பிறக்காத நிலையில் அருள் செயல்படுகிறது. அன்னை அருளாக மீண்டும் சமாதி புஷ்பமாக, கருணையாக வந்து தலையிலிருந்து வலியைப் பிய்த்து ஏற்கிறார்.
தலைவலி 5 – 7 நிமிஷத்தில் மறைகிறது.
அன்னை அன்பர் வாழ்வில் அனுதினமும் இதைத் தவறாது செய்கிறார். சாதகர் வாழ்வில் 1930இல் சூப் வழங்கி செயல்பட்ட கருணை, இன்று அன்பர்கட்குச் சூழலாக இருந்து பதிலளிக்கிறது. நம்பிக்கைத் தீரலாம்.
நன்றி பிறக்காமலிருக்கலாம்.
அன்னை தவறுவதில்லை, தவறுவதேயில்லை.
சூட்சும உலகில் கையெழுத்து
மாக்ஸ் தியோன் என்பவர் போலந்து நாட்டு யூதர். தியோன் என்றால் கடவுள் எனப் பொருள். நாம் சாமி எனவும், சாமியார் எனவும் கூறுவதுபோல் தியோன் என்ற சொல் வழங்கும். அதுவே அவருக்குப் பெயராக விளங்கியது. தம் பெயர் என்ன, எந்த ஊரைச் சார்ந்தவர் என அவர் யாரிடமும் சொல்லியதில்லை. அவர் மனைவி பெயர் அல்மா. அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். சூட்சுமப் பயிற்சி பெற்றவர் அல்மா. அல்ஜீரியாவில் டிலெம்சன் என்ற ஊரில் இவர்கள் வசித்து வந்தனர்.
28-ஆம் வயதில் அன்னை முதன்முறையாக பாரிஸை விட்டுப் புறப்பட்டு தியோன் உள்ள ஊருக்குச் சென்று அவர்களுடன் கொஞ்சநாள் தங்கியிருந்தார். சூட்சுமம் என்பதை நம் நாட்டில் கூடுவிட்டுக் கூடு பாய்வது என்பார்கள். உடலைவிட்டுப் போய் ஆவி உலகங்களில் சஞ்சாரம் செய்து, அங்கே சித்து விளையாடும் சாத்திரம் அது.
அல்மா அன்னைக்குப் பயிற்சி அளித்தார். உடலைச் சமாதி நிலைக்குக் கொண்டு வந்து, உடலைவிட்டு வெளிவருவதும், பல்வேறு நிலைகளில் வெளிவந்து பல்வேறு உலகங்களை அடைவதும் பயிற்சியாகும். உடலைச் சமாதியாக்குவதையும், உடலைவிட்டு வெளிவருவதையும் அன்னை எளிதில் பயின்றார்.