ஒரு சமயம் டிலெம்சன்னிலிருந்து அன்னை தம் உடலைவிட்டு வெளிவந்து பாரிசை அடைந்தார். உடல் தியோன் வீட்டிலிருக்கிறது. உயிர் பாரிசுக்கு வந்துவிட்டது. தம் நண்பர்கள் பலருள்ள இடத்தை அடைந்தார். தாமிருப்பதை அவர்கள் உணரும் வகையாகப் பல காரியங்களைச் செய்தார். அன்னை வந்திருப்பதை அங்குள்ள அனைவரும் சூட்சுமமாக அறிந்தனர். ஒரு பென்சிலை எடுத்தார், சில வார்த்தைகள் எழுதினார்.
பென்சில் தானாக எழுந்து, எழுதுவதை அங்கு குழுமியுள்ளவர் கண்டனர் போலும்!
மற்றொரு சமயம் இதேபோல், (அதாவது உடலை அல்ஜீரியாவில் விட்டுவிட்டு, உயிர் மட்டும் பாரிஸ் வந்து) ரயில் ஏறி, இறங்கினார். அங்கு நடப்பவற்றைக் கண்டார். எவரும் அன்னையைக் காணவில்லை! ஆன்மீக வாழ்வில் சூட்சுமம் கலந்திருப்பதுண்டு. ஆனால் ரிஷிகள் சூட்சும வேலைகளை இரண்டாம் பட்சமாகக் கருதுவார்கள். அன்னை இப்பயிற்சிகளை எல்லாம் பெற்ற பிறகும், அவற்றை முக்கியமாகக் கருதவோ, பயன்படுத்தவோ இல்லை. கல்லூரி மாணவன் கிரிக்கெட் விளையாடினால், கிரிக்கெட் பரீட்சைக்கு உதவாது. அதுபோல் ஆன்மீகப் பாதையில் சூட்சும வேலைகள் கிளையாகும். முக்கிய இடம் அதற்கில்லை.
பிற்காலத்திலும் அன்னை தாம் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தவில்லை. ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு வித்தையைக் கற்றோம், அது நமக்கு முதன்மையானதன்று என விட்டுவிட்டார்.
கடுமையின் இனிமை
ஸ்ரீ அரவிந்தர் புதுவை வந்த பிறகு “பெரும் புரட்சி”யை அவரை அறிந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது அரசியல் புரட்சி. பகவான் மேற்கொண்டது ஆன்மீகப் புரட்சி. கராச்சி, பலுஜிஸ்தான் போன்ற இடங்களிலிருந்து அவரைத் தரிசிக்க வந்தவர்கள், அது முடியாது என்று கண்டு, அவர் தங்கியுள்ள மேல்மாடி ஜன்னல்வரை சுவரில் ஏறி எட்டிப் பார்த்தனர். இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டியவை என பகவான் இந்து பத்திரிகை மூலம் அவர் பக்தர்கட்கு வேண்டுகோள் விடுத்தார். இவையெல்லாம் 1910 முதல் 1920வரை.
1926-இல் நவம்பர் மாதம் பகவான் எவரிடமும் எதுவும் முன்கூட்டிச் சொல்லாமல், அன்னையிடமும் அறிவிக்காமல், “நான் தனிமையை நாடுகிறேன். இனி அன்னை எல்லாப் பொறுப்பையும் ஏற்பார்” என்று பிரகடனப்படுத்திய பொழுதுதான் அன்னையே அவர் முடிவை அறிந்தார்.
புதுவைக்குப் பகவான் வந்தபொழுது புரட்சியை எதிர்பார்த்தவர்கள் பகவான் தனிமையை நாடியபொழுது பெரிய ஆன்மீகப் புரட்சியை எதிர்பார்த்தனர்.
பகவான் தங்கமயமாக மாறுவார்
என்று எதிர்பார்த்தனர். சத்தியஜீவியம் பலிக்கும் என நினைத்தனர். ஆசிரமத்திலிருப்பது பெரும்பாக்கியம் என உணர்ந்தனர். அந்த ஆண்டு முடிவிலிருந்து நவம்பர்வரை நாளுக்கு நாள் பக்தர்கள் நெஞ்சம் மேலும் மேலும் நிறைந்தது. சூழல் தினமும் ஒரு படி கனத்தது. நவம்பர் வந்தது. வழக்கமான தியானம் 4½ மணிக்கு நடப்பது தள்ளித் தள்ளிப் போயிற்று, 6, 7 என நள்ளிரவுக்கும் போயிற்று. இவையெல்லாம் ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காக என அனைவரும் அறிந்தனர்.
எதிர்பார்த்த சத்திய ஜீவியம் அவருள் பலித்தது. அவருடல் தங்கமேனியாக மாறியது.
ஜெயதேவ் என்பவர் நவம்பர் தரிசனத்தில் பகவான் முன்வந்து “பிரபோ, சிறிது நாளாக சாந்தியும், ஆனந்தமும் என்னுள் வளர்கிறது” என்றார். பகவான் புன்னகையுடன், “உங்களால் அதை உணரமுடிகிறதா?” எனக் கேட்டார். “நான் மட்டுமன்று, எல்லாச் சாதகர்களும் அதை உணருகிறார்கள்” என்றார். “மனம் ஆனந்தத்தால் துள்ளுகிறது” எனவும் குறிப்பிட்டார். கடுமையான தவம் இனிமையான ஆனந்தப் பெருக்கை ஏற்படுத்துகிறது.
“பொறு, இது மேன்மேலும் அதிகரிக்கும்”
என்று பகவான் தரிசனத்தில் பதிலிறுத்தார்.
சூட்கேஸ்
ஆசிரமம் இன்றுள்ளதுபோல் பெரிய ஸ்தாபனமாக அன்றில்லை.ஆனால் ஆசிரம வேலைகளுக்காக அன்னை சொந்தமாக ஓர் ஒர்க்ஷாப் வைத்திருந்தார். அங்கு, சாதகர்கள் வேலை செய்தனர். பகவானும் அன்னையும் தரிசனம் தரும் நாட்களில் வெளியிலிருந்து வருபவர்கள் பகவானை ஒரு மகானைத் தரிசிப்பதுபோல் தரிசிக்க வருவதுதான் அதிகம். அவருடைய புத்தகங்களைப் பயின்றவர்கள், கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள் வெளியிலிருந்து வருபவர்களில் குறைவு.
அதுபோல் வந்த பக்தர் ஒருவர் தம் சூட்கேஸ் சாவியைத் தொலைத்துவிட்டார். வந்தவர் ஓர் ஆசிரமச் சாதகருடன் தங்கினார். 25 பைசா விலையுள்ள பூட்டு போட்டு பூட்டியிருந்தார். பூட்டை உடைக்க ஓரிடம் தேடினார். சாதகர், ஆசிரம ஒர்க்ஷாப்புக்கு வந்தவரை அழைத்துப் போனார். அங்கு வேலை செய்யும் சாதகரிடம் பூட்டையும், தொலைந்துபோன சாவியையும் பற்றிச் சொல்லி, பூட்டை உடைத்துவிடும்படிக் கேட்டார்.
“சாதகர்கள் எண்ணிக்கை 150வரை இருந்தபொழுது, நான் அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் என் கையில் வைத்திருந்தேன்” என்று அன்னை ஒருமுறை சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட இடத்தில் எந்தக் காரியத்தை அன்னையின் உத்தரவு இல்லாமல் செய்வார்கள்? வந்தவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? சாதகர் தாம் அன்னையிடம் உத்தரவு பெறவேண்டுமென்றது வந்தவருக்கு விந்தையாயிருந்தது.
பெட்டியை ஆசிரமக் காரியதரிசியிடம் எடுத்துப் போனார்கள். நடந்ததைச் சொன்னார்கள். அவர் சற்றுப் பொறுத்து வரும்படிச் சொன்னார். இடை நேரத்தில் காரியதரிசி அன்னை உத்தரவைப் பெற்று ஒர்க்ஷாப்புக்குச் சொல்லி அனுப்பினார்.
வந்தவர் இவ்விந்தை மனிதர்களை வேடிக்கையாகவும், மரியாதை உணர்வோடும் பார்த்து, ஒரு பூட்டை உடைக்க இத்தனை சாங்கியமா? என நினைக்கும்பொழுது ஒர்க்ஷாப் சாதகர் சாவிக்கொத்து ஒன்றைக் கொணர்ந்து பூட்டைத் திறக்க முயன்று, ஓரளவு பொருத்தமாக, சாவியை எடுத்து ராவினார்.
பொருள்களுக்கும் ஜீவன் உண்டு என்ற அன்னை, பூட்டை உடைக்க அனுமதிக்கவில்லை. பூட்டை உடைத்து எடுப்பது வன்முறை என்பது அன்னையின் கொள்கை. வந்தவர் ஒருபக்கம் அவசரப்பட்டாலும், மற்றொருபுறம் ஆச்சரியத்துடன் பொறுமையை கஷ்டப்பட்டுக் கடைபிடித்தபொழுது, சாவி பூட்டைத் திறந்தது. அவர் புறப்பட்டார்.
“எனக்கு இரண்டு சாவிகள் செய்ய உத்தரவு” என்று கூறிய சாதகர் அடுத்த சாவியை தயார் செய்ய முனைந்தபொழுது, வந்தவர் பொறுமையை இழந்தார்.
- பூட்டு போன்றவற்றை உடைக்கக் கூடாது.
- இரண்டு சாவி இருப்பது நல்லது.
என்று உத்தரவிட்ட அன்னை, சாவியைத் தொலைப்பதுகண்மூடித்தனம் (unconsciousness) என்பதை வந்தவருக்குச் சொல்லவில்லை. வந்தவருக்கு, நடந்தவற்றையெல்லாம் பார்த்து அது புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.
தம்மிடம் வந்த பொருள்கட்கும் அருள் செய்யும் அன்னை, அதைத் தம் சொந்த பொருள்போல் கவனித்தும், பிறர் குறையைச் சுட்டிக்காட்ட முற்படவில்லை.
மல்லிகை மாலை
ஜட்ஜ் ஒருவர் தமிழ்நாட்டுச் சுவாமியாரைப் பார்க்கப் போனார். ஜட்ஜுக்கு சுவாமியார் மீது மரியாதையுண்டு, நம்பிக்கையில்லை. சுவாமியாருக்கு அது தெரிந்ததால், சூட்சுமச் சக்திகளால் தம்மால் எதையும் செய்யமுடியும் என்பதை ஜட்ஜுக்கு விளக்க நினைத்து,
“உலகில் எந்த இடத்திருந்து ஒரு பொருள் வேண்டுமானாலும், அதை வரவழைக்கலாம். அப்படி ஒன்றைச் சொல்லவும்” என்றார்.
“நியுயார்க் டைம்ஸ் இன்றைய இதழ் அப்படிக் கிடைக்குமா?” என்றார் ஜட்ஜ்.
அன்றிரவு ஜட்ஜ் தூங்கிக்கொண்டிருந்தபொழுது கதவு மீது படாரென்ற சப்தம், எழுந்து திறந்தார். நியூயார்க் டைம்ஸ் அன்றைய இதழ்! மெஷினிலிருந்து எடுத்ததுபோல் ஈரமாக இருந்தது. அச்சடிக்கப்பட்ட இங்க் காயவுமில்லை.
சூட்சும உலகில் இதுபோல் செயல்பட ரிஷிகளால் முடியும். மந்திரவாதிகளாலும் முடியும். ரிஷிகள் செயல்படுவது கல்லூரியில் மாணவன் மார்க் பெற்று இடம் பெறுவதுபோல். மந்திரவாதிகள் செய்வது, கிளார்க் எவனுக்காவது உரிமை உள்ள இடத்தை மாற்றி அதில் நம் பெயரைப் போட்டு, இடம் பெற்றுத் தருவது போலாகும்.
பக்தருடைய மனநிலை அவருக்கேற்ற குருவிடம் கொண்டுவிடும். அல்ஜீரியாவில் அன்னை மேடம் தியான் உடன் சூட்சுமப் பயிற்சி எடுத்தபொழுது, அப்படி நடந்தவை பல.
ஒரு நாள் தம் அறையைப் பூட்டிவிட்டு மேடம் தியான் வீட்டுக்குப் போய் பயிற்சியை முடித்துவிட்டு, தம் அறைக்கு வந்தார். திறந்து உள்ளே போனார். மேடம் தியான் தாம் அன்னைக்குப் பயிற்சி அளிக்கும்பொழுது, சூட்சுமமாக அறையைவிட்டு வெளியே போய் மலர் கொய்து, மாலை தொடுத்து, பூட்டியிருந்த அன்னை அறையில் நுழைந்து, அதை அன்னையின் தலையணை மீது வைத்திருந்தார்!
அன்னை பயிற்சி பெற்ற பொழுது, பலனாக மல்லிகை மாலையையும் பெற்றார். அன்னை அல்ஜீரியாவிலிருந்தபொழுது, பனி அரசன் மேடம் தியானைத் தேடி வந்ததும், மேடம் வயிற்றின் மீது வைத்த பழம் சுருங்கி தன் சத்தையெல்லாம் அவருடல் சேர்த்ததும், தவறாகப் பேசிய வியாபாரி மீது மேஜை தானே நகர்ந்து போர் தொடுத்ததும், மேடத்தின் செருப்பு அவர் இச்சைக்குட்பட்டு அவர் காலில் வந்து சேர்ந்ததும், ஆகியவற்றை வாசகர்கள் ஏற்கனவே அறிவார்கள்.
விலங்குகளின் ஆன்மா
தரிசன சமயங்களில் அன்னை வானை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பார். பால்கனியில் வந்தவுடன் கூடியுள்ள சாதகர்களைப் பார்ப்பார். அநேகமாக அனைவரையும் அன்னை பார்த்துவிடுவார். அன்னையின் பார்வை சாதகர் மீது பட்டவுடன் நெஞ்சும், ஆன்மாவும் நிறைவதை அறியலாம். அக்கௌண்ட்டண்ட் ஜெனரல் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்த பக்தர் ஒருவர் தினமும் பால்கனி தரிசனத்திற்கு வருவார். ஆபீஸ் வேலையாக சில நாள் வெளியில் போய்விடுவார். மறுநாள் வரும்பொழுது “ஒரு நாள் பால்கனி தரிசனத்திற்கு வராவிட்டால், ஏதோ இழந்தது போலிருக்கிறது” என்றார். புதுவையை விட்டு மாற்றலானபின் அவர் ஒரு தரிசனத்திற்கும் வரவேயில்லை. அவர் ஆத்மநிறைவு அடைந்துவிட்டார் போலும்.
ஒரு சமயம் வண்ணான் ஒரு கழுதையையும், ஒரு குட்டியையும் அவ்வழியாக அழைத்துக் கொண்டு போனபொழுது, அன்னை பால்கனியிலிருந்தார். அக்குட்டி நின்று நிமிர்ந்து அன்னையைப் பார்த்தது, வெகு நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தது.அன்னை அதை கவனித்தார். விலங்குகளிலும் சில சமயம் ஆன்மா இருப்பதுண்டு. வயதான மரங்களில் 100 ஆண்டைத் தாண்டிவிட்டால் ஆன்மா உற்பத்தியாகும் என்கிறார் அன்னை. அதே காரணத்தால் மலைச்சாரல் தவத்திற்கு சிறந்த இடமாகிறது.
“கழுதைக் குட்டி என்னிடம் வர விரும்புகிறது. அதை வாங்கி வரவேண்டும்” என அன்னை உத்தரவிட்டார். அதை வாங்கினார்கள். தியான மண்டபத்திற்கு கிழக்குப் பக்கமுள்ள வாயில் அருகில் குட்டியைக் கொண்டுவந்தார்கள். அன்னை குட்டியைத் தட்டிக் கொடுத்தார், தடவிக் கொடுத்தார். அதன் பக்தியார்வத்தை ஏற்றுப் போற்றினார். அதைக் கண்ட சாதகர்கள் “நம்மை எல்லாம் அன்னை இப்படிப் பாராட்டுவதில்லையே” என்று குறைபட்டனர்.
அதன்பின் பல சமயம் பால்கனி தரிசனத்திற்குக் கழுதைக் குட்டியை அழைத்து வந்தனர். பால் பண்ணையில் அது வளர்ந்தது. அதற்கு ஏதேனும் வேலை கொடுக்க முயன்றால் பிடிவாதமாக மறுத்துவிடும்.
ஆசிரமத்தில் வேலையைப் பொருத்தவரை அன்னை மிகக் கண்டிப்பாக இருப்பார். வேலையில் தரம் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என வற்புறுத்துவார். ஆனால் சாதகர்களைக் கண்டிப்பதில்லை. பூரண சுதந்திரம் உண்டு. தாமே முன்வந்து கடினமாக உழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்.
தியானத்தில் – force – சக்தி உள்ளே நுழைந்தபின் நிற்பதும் கடினம். உடல் சக்தியால் நிறைந்து ஜீவன் பூரணமாவதால் அதை கிரகித்துக்கொள்ளும் வரை தடுமாறும். நடப்பதும் சிரமம். அன்னையை தரிசிப்பவர் பலர் நேரடியாகப் போய்ப் படுத்துவிடுவதுண்டு. சக்தியுள்ளே போனால் ஜீவன் நிறைவதால் வேலை செய்வது கடினம். சக்தியெல்லாம் கிரகிக்கப்பட்டவுடன், அளவுகடந்த தெம்பு வரும். அப்பொழுது வேலைச் சிறப்பாக இருக்கும். அவ்வேலை அன்னை சக்தியை வெளிப்படுத்தும். இக்காரணத்தால் சாதகர்கட்கு காலை நேரத்தில் வேலை செய்வது சிரமம். அன்னையின் சுதந்திரத்தைப் பயன்படுத்தி சோம்பேறியாக இருப்பது வேறு. சாதகர்கள் வேலை செய்வது குறைவு என அனைவரும் பரவலாக அறிவார்கள். “இங்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் வேலை செய்வார்கள்” என்று சொல்லும்படி நடைமுறை ஏற்பட்டது. அன்னையோ, பகவானோ அதைக் கண்டித்ததில்லை.
அன்னை கழுதைக்குட்டியைப் பற்றி பகவானிடம் எல்லா விவரங்களையும் கூறி “வேலை மட்டும் செய்ய மறுக்கிறது” என்றார்.
பகவான் “அது நம் சாதகர் போலிருக்கிறது” என்றார்.
ஓவியர் பெற்ற “வெற்றி”
அன்னை சிறந்த ஓவியர். “நான் உலகில் எதுவாக வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால் எனக்கு அந்த ஆசைகளில்லை” என்று அன்னை கூறுகிறார். உலகில் தலைசிறந்த ஓவியராகும் தகுதி அன்னைக்கிருந்தது. அவர் அதைப் பாராட்டவில்லை. அவர் முக்கியமாகக் கருதியது ஆன்மீக வளர்ச்சி.
பாரிசில் அன்னைக்கு எல்லா ஓவியர்களையும் தெரியும். அவர்கள் சங்கத்து உறுப்பினராகவும் இருந்துள்ளார். அப்படிப்பட்ட சங்கம் மூலம் தானறிந்த ஓவியர் அனுபவத்தை அன்னை விவரித்துள்ளார்.
இவர் சிறப்பான ஓவியர். கலை எப்பொழுதும் வருமானம் கொடுத்ததில்லை. கலைஞர்கள், அறிஞர்கள் வறுமை உலகப் பிரசித்தி பெற்றது.காளமேகப் புலவர் போன்றவர்கள் சாப்பாட்டிற்குப் பட்ட கஷ்டம் வரலாறாகும்.இவ்வோவியரும் திறமையிருந்தும், போதிய வருமானமில்லாதவர்.
படங்களை வாங்கும் வியாபாரி ஒருவர் இவரைத் தேடி வந்தார். தன் சிறந்த படைப்புகளைக் காட்டினார் ஓவியர். வியாபாரிக்குத் திருப்தியில்லை. ஓவியருடைய அறையை மூலை முடுக்கெல்லாம் சோதனை செய்தார் வியாபாரி. சட்டென ஒரு துணியைக் (canvas) கண்டார். அது அவர் கவனத்தை ஈர்த்தது. அது சிறப்பானது எனக் கருதினார். “இது மிக நன்றாக இருக்கிறது. இதுபோன்று பலவற்றைச் செய்து தரமுடியுமா? நான் வாங்கிக்கொள்கிறேன்” என்றார். ஓவியருக்குப் பலத்த ஏமாற்றம். எதையோ வாங்கப் போகிறார் வியாபாரி என்பதில் சந்தோஷம். அது வெறும் துணி (canvas), பிரஷ்ஷை அதில் துடைப்பார்கள். அதனால் canvas முழுவதும் வெவ்வேறு வண்ணமாகக் காட்சியளித்தது. அது வியாபாரிக்கு அழகாகப்பட்டது. விலை கொடுத்து வாங்கப் பிரியப்பட்டார். மேலும் ஆர்டர் கொடுத்தார்.
வெள்ளைக்கார கலெக்டரை சங்கீதக்கச்சேரிக்கு அழைத்தனர். சிறந்த வித்துவானுக்குப் பரிசு கொடுக்கும்படி கேட்டனர். பாடகர் மையமானவர். நாதஸ்வர வித்வான் அவர். அவருக்கெனப் பக்க வாத்தியங்களான தவில், தாளம், ஒத்து உண்டு. கச்சேரி முடிந்தது. கலெக்டர் தன் பரிசை ஒத்து ஊதுபவனுக்குக் கொடுத்தார். கச்சேரி கலைந்தபின் கலெக்டரின் நண்பர்கள் எப்படி அவர் பரிசை நிர்ணயித்தார் எனக் கேட்டார்கள். “எல்லோரும் இடைவெளி விட்டு வாசித்தார்கள். இவர்தான் – ஒத்து ஊதுபவர் – இடைவிடாமல் வாசித்தார். அதனால் இவருக்குப் பரிசு கொடுத்தேன்” என்றார்.
மற்றவர்கள் வாசிப்பில் உள்ள அபஸ்வரம் மறைவதற்காக ஒத்து ஊதுபவரை ஏற்பாடு செய்வது வழக்கம். கலெக்டர் முடிவு அது. பல சிறந்த ஓவியங்களை எழுதியவர் வியாபாரியின் செலக்ஷனைக் கண்டு ஏமாந்து போனார். ஓவியத்திற்கு உலகம் அளித்த நிலை அதுவே. அந்நிலையை, பரிதாப உணர்வோடு அன்னை விளக்குகிறார்.
ஆசிரமத்திற்கு வருபவர்கள் அங்குள்ள சூழலின் முக்கியத்துவத்தைவிட மற்ற சிறு விஷயங்களைப் பாராட்டும்பொழுது அன்னை மனம் வருந்தி இதுபோல் பேசுவதுண்டு.
சாப்பாட்டு அறையிலுள்ள தாழ்ந்த சிறுமேஜைகள்
குழந்தைகளுக்குக் காது குத்த வேண்டுமானால் நாம் காது குத்துவதில்லை. அதை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறோம். அதுபோல் நாம் விழாக் கொண்டாடுவது பல. வருஷம் முடிவில் கல்லூரி மாணவர்கள் பிரிந்து போவதற்கு முன் அது ஒரு விழா ஆகிறது. ஜப்பானில் அன்றாடம் டீ சாப்பிடுவது அது போல் ஒருவிழாவாகக் கொண்டாடப்படும். அதற்கு ‘தேநீர் விழா‘ எனப் பெயர்!
அதற்குப் பயன்படும் பாய்கள் சிறியனவாகவும், படம் வரையப்பட்டதாகவுமிருக்கும். அங்குள்ள மேஜைகள் தாழ்ந்த சிறு மேஜைகள். அன்னை ஜப்பானில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். ஜப்பானியப் பண்பை மிகவும் போற்றியவர் அன்னை. ஆசிரமத்தில் சாப்பாட்டு அறையிலுள்ள தாழ்ந்த சிறுமேஜைகள் அன்னை ஜப்பானில் கண்டவற்றைப்போல் இங்கு அமைத்ததாக இருக்கலாம் என அன்னை வரலாற்றை எழுதியவர் கருதுகிறார்.
ஜப்பானுடன் அன்னைக்கு நெருங்கிய உறவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின்பொழுது ஜப்பான் பாண்டிச்சேரி மீது குண்டு வீசுவதில்லை எனக் கூறியது. ஸ்ரீ அரவிந்தரிருப்பதால் – அன்னைக்காக ஜப்பான் எடுத்த முடிவு அது.
சுமார் 40, 50 ஆண்டுகளுக்குப்பின் கல்கத்தாவிலிருந்து வந்த பக்தர்கள் அன்னை ஜப்பானில் எடுத்த போட்டோவைக் காட்டி அதில் தாகூர் இருப்பதையும் கூறினார்கள். அன்னைக்கு ஜப்பான் எவ்வளவு முக்கியம் என்று அவர்கட்கு தெரியாது. அப்பொழுது எடுத்த போட்டோவை அன்னை பத்திரமாக வைத்திருந்தார். அத்துடன் வைத்த இடத்தை நினைவும் வைத்திருந்தார். அதை எடுத்து வந்தவர்களிடம் காட்டினார். பகவானை 10 மாதம் சந்தித்தபின் அவரைவிட்டுப் பிரிவது அன்னைக்கு வேதனையாயிருந்தது. அந்த நாட்களில் பெரும் பகுதியை ஜப்பானில் கழித்தார். அங்கு அவர் கண்ட தாழ்ந்த மேஜைகளை இங்கு சாப்பாட்டு அறையில் ஏற்படுத்தினார்.
சாப்பாட்டு அறை சிறு மேஜைகள் அன்னையின் ஜப்பான் வாசத்தின் நினைவுச் சின்னங்களாகும்.