நாம் இன்று பொன்போல் போற்றும் பல விஷயங்கள் நம்முடையதல்ல. வெளிநாட்டிலிருந்து வந்து நம் வாழ்வின் பகுதிகளானவை. அவற்றுள் சில
- சைவம் என்பது தமிழ் மக்களுக்கு உயிரானது. திருநெல்வேலி வெள்ளாளர்கள் தங்களை சைவப்பிள்ளைமார் என்பார்கள். சைவம் தமிழ்நாட்டிற்குரியதல்ல. புத்தம் வடநாட்டில் ஆரம்பித்தது. சமணம் தமிழ்நாட்டில் பரவியபொழுது தமிழர் ஏற்றுக்கொண்டது. ஆரியர்கட்கு சைவம் உரியதல்ல. ஆரியர் வருமுன் தமிழ்நாட்டு கேளிக்கைகளில் முதலிடம் பெறுவது இறைச்சி.
- மிளகாய் இல்லாமல் சமையலில்லை. நமக்கு உரியது மிளகுதான். அதுவும் தமிழ்நாட்டில் கேரளப்பகுதியில் பயிராவது. சில்லி என்ற தென் அமெரிக்க நாட்டிலிருந்து மிளகாய் வந்தது. அதனால் அதற்கு ஆங்கிலத்தில் சில்லி எனப் பெயர். நாமறிந்த காரம் மிளகு. அதனால் இதைப் பார்த்த தமிழர் அதை மிளகு போன்ற காய் என்று நினைத்து மிளகு + காய் = மிளகாய் என்றனர்.
- ரவிக்கை ஆங்கிலேயர் மூலமும், மேலாடை 12-ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் வந்து பெண்கள் மேலாடை தரிக்கவேண்டும் என வற்புறுத்தியதாலும், சப்பாத்தி, லட்டு, ஆகியவை வடநாட்டிலிருந்தும், டீ சைனாவிலிருந்தும், பஞ்சகச்சம் வடநாட்டிலிருந்தும், கிராப்பும், பேண்ட்டும் மேல்நாட்டிலிருந்தும் வந்தது. நாம் அவற்றை விரும்பி ஏற்றுப் போற்றுகிறோம்.
சாப்பாட்டு அறை சிறு மேஜைகள் அன்னை ஜப்பானிலிருந்து கொணர்ந்தவை. அன்னை பக்தர்களிடம் அது பரவியுள்ளது.
அன்னையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய உயர்ந்த அம்சங்களில் முக்கியமான இரண்டைச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் பகவானிடம் கொண்டிருந்த நன்றியுணர்வு, அவரைச் சரணடைந்த பாங்கு ஆகிய இரண்டையும் பிரதானமாகக் குறிப்பிட வேண்டும்.
நமக்கு நன்றியறிதல் எனில் ஒருவர் செய்த உதவிக்குப் பிரதிபலனாக நாம் உணர்வதை நன்றி என்கிறோம்.
‘இறைவன் வாழ்வில் வெளிப்படுவதை‘,
அன்னை நன்றி என்கிறார். பகவானை அன்னை ஒரு முனிவராகவோ, ரிஷியாகவோ கருதாமல் இறைவனின் ஜோதி உலகுக்கு வரும் வாயிலாகக் கருதினார். அவர் வசிக்கும் வீட்டை அன்னைக்குக் காட்டியவர் இறைவன் திருவுள்ளத்தை வெளிப்படுத்தும் வாயிலாகச் செயல்பட்டார் எனக் கொண்டார். இதோ இந்த வீட்டில் அரவிந்தர் இருக்கிறார் என்று அந்த வழிப்போக்கர் சொன்ன சொற்கள், அன்னையின் அந்தராத்மாவில் ஒளிப் பொறியாக வந்து, தொட்டு, உள்ளே நுழைந்து, நிரந்தரமாகத் தங்கியதால், நிரந்தரமாக அன்னை அந்த வழிப்போக்கருக்கு நன்றியை மாதம் தவறாமல் செலுத்தினார்.
வழிப்போக்கரின் சொல்லில் இறைவனை அன்னை கண்டார். பகவான் வீட்டினுள் நுழைந்து மாடிக்குப் போய் அவரைக் காணப்படிக்கட்டை நெருங்கும் நேரம், பகவான் எழுந்து படிக்கட்டின் தலைப்புக்கு வந்த பொழுது, அவரைப் பார்த்த கணமே,
‘இவரே நான் கண்ட கிருஷ்ணா‘,
என அறிந்தார். பார்த்த மாத்திரத்தில், சிந்தனை செய்யாமல், தயங்காமல், ஆயத்தமின்றி அறிவதும், அறிந்து செயல்படுவதும் ஆன்மாவின் பாங்கு. ஜீவாத்மா பரமாத்மாவைப் பார்த்து கலந்த நேரம் அது. நூறாண்டாகப் பெய்யாத மழை புதுவையில் அப்பொழுது பெய்தது. மாடிக்குப் போய், கணவரும், பகவானும் மேஜையருகே நாற்காலிகளில் உட்கார்ந்து பேசும்பொழுது, மேல்நாட்டார் வழக்கத்திலேயே இல்லாதது போல் அன்னை தரையில் உட்கார்ந்தார். பகவான் எதிரே அவரால் நாற்காலியில் உட்கார முடியவில்லை. பேச்சு நடக்கும்பொழுது அகண்ட மௌனத்தை அன்னைக்கு பகவான் வழங்கினார். கடைசி வரை தம்மைவிட்டு அம்மௌனம் அகலவில்லை என்று கூறியுள்ளார். பேச்சு முடிந்து எழுந்தவுடன், சாஷ்டாங்கமாக அன்னை பகவானைத் தரையில் விழுந்து வணங்கினார். அப்படியொரு பழக்கம் நம் நாட்டிலிருப்பதாக அன்னை அன்று அறியார்.
சரணாகதி முதிர்ந்து உடலின் ஆழத்திற்குப் போனதை முதலில் அன்னையிடம் கண்டேன்
என்றார் பகவான். அன்று மார்ச் 29, 1914, அன்னை தன் டைரியில், ஆயிரக்கணக்கான ஜீவன்கள் இருளில் மூழ்கியிருந்தாலும் ஸ்ரீஅரவிந்தர் உலகில் இருப்பதால், ஒளிமயமான அவருருவம் நம்மிடையே இருப்பதால் இறைவன் திருவுள்ளம் பூமியில் பூர்த்தியாகும் என்பதில் ஐயமில்லை என எழுதினார்.
ஆசிரம வீடு ஒன்றில் இரு குடும்பங்கள் வசித்தன. மாடி வீட்டுக் குழந்தை மீது கீழ்வீட்டுப் பெண்ணுக்குப் பிரியம். தினமும் குழந்தையோடு வந்து விளையாடுவார். குழந்தைக்கு வயிற்றுப் போக்கு. ஆசிரம டாக்டர் வைத்தியம் செய்கிறார். 10 நாட்களாயின. பலனில்லை. 10-ஆம் நாள் கீழ்வீட்டுப் பெண், குழந்தையைப் பார்க்க வந்தவர் குழந்தை துவண்டு கிடப்பதைக் கண்டு திகைத்து, கண்கள் வருத்தத்தால் நிறைந்துவிட்டதைப் பார்த்து, அவருடனிருந்தவர் நேரே விளையாட்டு மைதானத்திற்குப் போனார். அன்னை அப்பொழுது அங்கிருந்தார். குழந்தையின் நிலைமையை அன்னையிடம் சொன்னார்.
அதே நிமிஷம் குழந்தை துள்ளி எழுந்தான்.
வேறொருவர் டாக்டரிடம் சென்று, அவரை அழைத்து வந்தார். வந்த டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பத்து நாளாகப் பலிக்காத மருந்து அன்னையிடம் கூறிய அதே நேரம் பலித்தது என்பது டாக்டருக்கு வியப்பாயிற்று.
அன்னைக்குச் செய்தி எட்டியவுடன் பிரச்சினை இதுபோல்
தீருவதே அன்னை தடையின்றி செயல்படுவதாகும்.
மனிதன் அறிவால் செயல்படுகிறான், அன்னைக்கு அறிவு தடை; உணர்வால் செயல்படுகிறான், உணர்வு தடை; பழக்கத்தால் செயல்படுகிறான் அது பெருந்தடை. இவற்றுள் உணர்வின் தடையே மிகச் சிறியது. தடையின்றி ஆன்மாவால் எப்படிச் செயல்படுவது?
குழந்தை அவதிப்படுகிறான், என்ன செய்தால் சரி என்று சிந்தித்தால், அது அறிவால் செயல்படுவதாகும். அவன் வேதனை எனக்குத் தாங்கவில்லை என்றால் உணர்வால் செயல்படுவதாகும். பிரச்சினை என்றால் டாக்டரைக் கூப்பிடுவது பழக்கம் என்றால் உடலால் செயல்படுவதாகும். குழந்தையைப் பார்த்து, ‘எனக்கு எதுவுமே தோன்றவில்லை, அன்னை நினைவுதான் வந்தது‘, என்றால் ஆன்மாவால் செயல்படுவதாகும். அப்படி நடக்கும்பொழுது அன்னைக்கு யாரும் போய்ச் சொல்ல வேண்டியதில்லை. கடிதம் எழுத வேண்டியதில்லை. விழிப்புற்ற ஆன்மா அன்னைக்குச் சொல்லும். பிரச்சினை உடனே தீரும். இயல்பாக வாழ்வின் அஸ்திவாரத்தை அறிவு, உணர்வு, செயலிலிருந்து, ஆன்மாவுக்கு மாற்றுவதை யோகம் எனவும், அம்முறையை, சரணாகதி எனவும் அறிகிறோம்.
அன்னையிடம் கூறியவுடன் குழந்தை எழுந்துவிட்டான் என்பது பலனைப் பெறுவதாகும். இப்பலனை மட்டும் பெறுவதால், ஆன்மாவுக்குப் பலனில்லை. அன்னைக்குச் சக்தியுண்டு என அறிய இது ஒரு சந்தர்ப்பம் ஆகிறது. சத்திய ஜீவிய லோகமாகிய மகர லோகத்திலிருந்து, அன்னை நம்மிடையே வந்து வாழ்வதன் குறிக்கோள் என்ன? நம் குறைகளை டாக்டர் வரும் முன் தீர்க்கவா? இல்லை. அன்னை சக்தி நம்முள் இருப்பதை நாம் அறிவதில்லை. அதை அறிவிக்க கீதையும், வேதமும் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. வேதம் வேத இரகஸ்யமாக இருந்தது. பிறருக்கு இரகஸ்யமாக வைக்கப்பட்டால், அது அனைவருக்கும் இரகஸ்யமாகி விடும் என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. வேத ஞானம் மனிதனை எட்டவில்லை. அதை சாஸ்திரமாகச் சொல்வதில் இதுவரை பலன் ஏற்படவில்லை. அவதாரங்களும் அப்பலனை மனிதனுக்குத் தரவில்லை. அதைத் தம் வாழ்வு மூலம் நம்முள் எழுப்ப அன்னை நம்மிடையே வாழ்ந்து, நாம் அறியும்படி செயல்படுகிறார். குழந்தை எழுந்தவுடன், நாம் ஆன்மாவால் அன்னையை அழைக்கக் கற்றுக் கொண்டால், அன்னையின் அவதாரம் பூர்த்தியாகும். அதைச் செய்தவருக்கு அன்னை தவறாது தரிசனமளித்துள்ளார்.
பலன் முடிவல்ல. பலனைத் தரும் அன்னையே முடிவு.
கடுந்தவம் புரிந்து பெறும் தெய்வ தரிசனம் ஆன்ம விழிப்போடு அரைக்கணம் அன்னையை நினைத்தால் கிடைக்கிறது என்பதை மனிதனுக்குணர்த்த அன்னை எடுத்த அவதாரம், நம் நினைவால், நினைவின் அடிப்படையில் ஏற்பட்ட செயலால் பூர்த்தியாகிறது. யோக வாழ்வுக்கு அடிப்படை அன்னை நினைவால் எழும் செயலாகும்.
அன்னையை நாம் அறிவோம், ஆனால் அவருடைய சக்தியை அறியோம்.
அன்னையை நாம் மகான்களை வணங்குவது போல் வணங்குகிறோம்.
கோவிலில் கண் மூடி, கை கூப்பித் தொழுவதைப்போல் நாம் அன்னையை வணங்குகிறோம்.
கோவிலைப் பிரதட்சிணம் வருவதுபோல் சமாதியை, ஆசிரமத்தை வலம் வருபவருண்டு.
கீதையைப் பாராயணம் செய்வதுபோல் சாவித்திரியைப் படிக்கிறோம்.
திருவிழாவுக்கு வருவதைப்போல் சமாதிக்கும், தரிசனத்திற்கும் வருகிறோம்.
மந்திரம் உச்சரிக்கப் பிரியப்படுகிறோம்.
‘ஓம் நமோ பகவதே‘ சொல்வது ஆத்ம திருப்தியளிக்கிறது.
தேங்காய் உடைப்பதைப்போல் வத்தி கொளுத்துகிறோம்.
இவையெல்லாம் மகான்களும், கோவில்களும் தரும் பலனைவிட அதிகப் பலன் தரும். எந்தக் கோவிலில் செய்த பிரார்த்தனையும் பலிக்காதபோது, இங்கு பலிக்கும். ‘இது கர்மவினை– அனுபவிக்க வேண்டும்‘, என குருமார்கள், பீடாதிபதிகள், ஜோஸ்யர்கள், மகான்கள், சாமியார்கள், சித்த புருஷர்கள், யோகிகள் சொல்லிய வினையும் தீரும். சிறு வயதிலிருந்து ஜெபம் செய்த பெரிய மந்திரங்களால் பலிக்காதது பலிக்கும்.
ஆனால், இவை எதுவும் அன்னை சக்தியைப் பெற்றுத் தரா, அன்னை சக்தி உலக அளவை விடப் பெரியது, அது நமக்குரியது, பெறுவது சரி, முறை, நல்லது.
1946 முதல் 1948 வரை பஞ்சாப், பீகார், டெல்லி, வங்காளம் ஆகிய இடங்களில் இந்து முஸ்லீம் கலவரத்தால் அழிந்து 50 இலட்சம் பேர்கள் இறந்தனர். பேய் ஆட்டமாடிற்று. அந்த நேரம் கல்கத்தாவில் கடை வியாபாரம் செய்த பக்தர் ஒருவருக்கு அவருடைய வீதியில் கொள்ளை போகிறது என்ற செய்தி வந்தது. உயிருக்கே ஆபத்து என்றபொழுது உடைமையை நினைக்க நேரமில்லை. ஆனாலும் நினைக்காமலிருக்க முடியவில்லை. போலீஸ் போய் இராணுவம் வந்தது, கொள்ளை, சூறை, தீ, கலவரம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அங்கு போய் ‘கடை எப்படியிருக்கிறது எனப் பார்க்கலாம்‘ எனவும் நினைக்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்துக் கலவரம் அடங்கிய பின், பக்தர் தம் கடைக்குப் போக நினைத்தார். எதிர் வரிசையைக் காணோம். தீயும், கொள்ளையும் பக்கத்துக் கடையோடு நின்றுவிட்டது.
அன்னை அசுர சூறாவளியைத் தடுத்ததுபோல் ஆர்ப்பாட்டத்தைத் தடுத்துவிட்டார்.
தடுத்தது சக்தி. மந்திரமல்ல, ஆசனமல்ல, உடைத்த தேங்காயில்லை, பாராயணமில்லை, சாஷ்டாங்க நமஸ்காரமில்லை.
சக்தியை அழைத்துச் செயல்பட வைத்தது நம்பிக்கையோடு கூடிய பக்தி.
நாம் செய்வனவெல்லாம் மூட நம்பிக்கைக்குரியன, மடச் சாம்பிராணி எனத் தானேப் பட்டம் கட்டிக் கொள்வது, நடைப்பிணமாக ஊர்வலம் வருவது, மூட நம்பிக்கையை வழிபடும் தெய்வமாக ஏற்பது.
‘பக்தியும் நம்பிக்கையும் சக்திக்குரியன.’
ரவீந்திரநாத் தாகூர் ஒருவருடைய இசையைக் கேட்டு மெய் மறந்து பாராட்டுகிறார் என்பது வசிஷ்டர் வாயால் ‘பிரம்ம ரிஷி‘ எனப் பட்டம் வாங்குவது. அப்படிப்பட்ட ஒருவரை பகவான் தன் மகன்போல் நடத்தினார். சாதகர்களிடமிருந்து வரும் கடிதத்தை நிறுத்திய பின்னரும் அவருக்கு கடிதம் எழுதும் அனுமதி அளித்தார். அவர் நேருவின் நண்பர். 1934-இல் நேரு பாண்டிக்கு வந்தபொழுது தம் நண்பரைச் சந்திக்க முயன்றபொழுது, ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது என்பதால் அவருக்கு அனுமதியில்லை.
வேறொரு பெண்ணின் இசையையும் ரவீந்திரர் கேட்டு தன் வயமிழப்பார். 12 பெண்களே ஆசிரமத்திலிருந்த காலம் அது. அவர் அன்னையை நாடி ஆசிரமம் வந்தார். ஆசிரமக் கட்டிடத்தில் நுழைந்தவுடன் ஆழ்ந்த மௌனம் அவரை ஈர்த்தது. ஒரு வார்த்தை பேசினாலும் நம் காதிலேயே கரகரப்பாக விழுகிறதே, இந்த இடத்தில் எப்படி வாயைத் திறந்து பேச முடியும் என்று நினைத்தார்.
அன்னையைக் காண்பது ஆத்ம தரிசனம் பெறுவது.
அவரைக் காணும் நேரம் காலத்தைக் கடந்த நேரம்,
என்பதை அவர் அன்னையைக் காணும்வரை அறியவில்லை. அன்னையிடம் அப்பெண் பாடகரை அழைத்துச் சென்றனர். புடவை உடுத்து முந்தானையால் தலையை மூடிக் கொண்டு அன்னை உட்கார்ந்திருந்தார். தெய்வீகப் புன்னகை செய்த அன்னையின் பாதங்களில் தலையை வைத்தார். அன்னையின் கரம் தலையை தொட்டவுடன் தலையும், உடலும், ஜீவனும் கரைந்துவிட்டதை அறிந்தார். அன்னையின் ஊடுருவும் பார்வை ஜீவனின் அந்தரங்கங்களை எட்டியது. பக்தர் கூறியதெல்லாம் கேட்ட அன்னை அவர் தலையை இரு கரங்களாலும் எடுத்து முத்தமிட்டார். சாதகரின் கண்கள் நீராலும், உயிர் ஆனந்தத்தாலும் நிரம்பியது.
நவம். 24, 1926
பகவான் ஸ்ரீ அரவிந்தர் உடல் தெய்வலோக சக்தி ஊடுருவிய நாள் இது. இதை சித்தி (Siddhi), பெற்ற நாள் என்றார் அன்னை. அன்றே பகவான் தனிமையை நாடி கடைசிவரை 24 ஆண்டுகள் தனிமையும், மௌனமும் பூண்டிருந்தார். அன்னையை அதுவரை மிரா என்றழைத்த பகவான் அன்றைய தினம் Mother அன்னை என்று குறிப்பிட்டார். தியானத்திற்கு வரச் சொல் என்றவுடன் யாரை அழைப்பது என்ற கேள்விக்கு அனைவரையும் அழைத்து வா, எல்லோரும் வர வேண்டும் என அன்னை உத்தரவு பிறப்பித்தார்.
இருபத்தி நான்கு சாதகர்கள் ஆசிரமத்திலிருந்தார்கள். அனைவரும் தியானத்திற்கு பகவான் உட்காருமிடத்தின் முன் கூடினர். சூழல் பலமாக கனத்தது. ஒளி வெள்ளத்தைப் பலர் கண்டனர். சூழலில் மின்சாரம் ஓடுவதைப் போன்றிருந்தது. கதவின் பின்னால் பகவானும், அன்னையுமிருந்தனர். அன்னை பகவானை முன்னே போகச் சொல்லியபொழுது, பகவான் உத்தரவின் பேரில் அன்னை முன்னே வெளியே வந்தார். அன்னை ஒரு சிறிய ஸ்டூலில் உட்கார்ந்தார்.
பகவான் மரணத்தை வென்றதாகவும், துன்பத்தைத் துடைத்ததாகவும், அனைத்தையும் வென்றதாகவும் சாதகர்கள் பேசினர். பகவான் உடலிலிருந்து ஜோதி பீறிட்டெழுந்ததைக் கண்டனர்.
ஜுரம்
தினமும் அன்னை விளையாட்டு மைதானத்திற்கு வருவதால், எந்த சாதகரும் அச்சந்தர்ப்பத்தைத் தவறுவதில்லை. ஆசிரம வாழ்வு கடுமையான கட்டுப்பாட்டிற்குட்பட்ட நேரம். அன்னை ஓரிடத்திற்கு சற்று நேரம் வருவார்கள் என்று தெரிந்தால், அங்கு சாதகர்கள் கூடுவார்கள். மேல் நாடுகளில் நமக்கு வருவதுபோல் தலைவலி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சீதபேதி போன்ற சிறு தொந்தரவுகளைப் பார்க்க முடியாது. 50ஆம் வயதில், எனக்கு வயிற்றுப் போக்கு என வந்ததேயில்லை. நான் கேள்விப்பட்டதும் இல்லை என்பவர் பலர். குடிநீர் சுத்தமாகயில்லை, சுத்தம், சுகாதார நிலைகள் (hygienic, sanitary conditions) இல்லை என்பதால் எழும் வியாதிகள் இவை. நம் நாட்டில் இவற்றைப் பெருவாரியாகப் பார்க்கலாம். அன்னை இவற்றை தொத்து வியாதி (epidemic) என்கிறார். பகவானிருந்தவரை இது போன்ற சிரமங்கள் எவருக்கும் ஆசிரமத்தில் வந்ததேயில்லை என்கிறார் அன்னை.
ஒரு சாதகிக்கு அதிக ஜுரம். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலை. ஆனால் அன்னை வரும் இடத்திற்கு எப்படிப் போகாமலிருக்க முடியும் என்று நல்ல ஜுரத்தோடு விளையாட்டு மைதானத்திற்கு வந்தவர் ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தார். ஆயிரம் பேர் இருந்தாலும், அவசியமானவர்கள் மீது அன்னை பார்வை படத் தவறுவதில்லை. அன்னை இந்த சாதகியைக் கண்டு அவர் நிலையை உணர்ந்தார். அன்னையின் சட்டம், கோட்பாடு (rules, approaches to life) வாழ்க்கை நெறி என்பவை வேறு. பொதுவாக நமக்குப் புரியாது. ஓர் இடத்தில் அன்னை செய்வதை அடுத்த இடத்தில் நாம் பின்பற்றவும் முடியாது. வியாதி வந்தால் உடல் ஏற்பது பலஹீனம், வலியேற்படுவது வெட்கத்திற்குரியது என்பது அன்னையின் எண்ணம். வியாதியை எதிர்க்க முடியாத உடல், யோகத்தை ஏற்பதெப்படி? மனஉறுதி உடலை வலுப்படுத்தி வியாதியை விலக்கும் என்பதே அன்னை பின்பற்றிய கொள்கை. அச்சாதகியை அன்னை எழுந்து ஓடச் சொன்னார். அவரும் ஓடினார். ஜுரம் போய் விட்டது. ஓட மனம் முடிவு செய்தவுடன் மன உறுதி எழுகிறது. வலிமையான மனஉறுதி முன் வியாதிக்கு வலுவில்லை. அன்னை சொல்வதால் அவர் சக்தி அவர் சொல் மூலம் உடலுள் பாய்ந்து செயல்பட்டது.
எட்டு பெண் குழந்தைகளை அன்னையே தன் நேர்ப்பார்வையில் வளர்த்தார். அவர்கட்கு தலை சீவுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைச் செய்வார். மத்தியானம் அவர்களுடன் சாப்பிடுவார். அந்தக் குழந்தைகட்கு எல்லாப் பயிற்சிகளையும் அன்னை தானேக் கொடுத்தார். எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது, எப்படி நடக்க வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று ஒரு தாயார் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தார். பாடம் சொல்லிக் கொடுப்பார். அவர்கள் அன்னையால் வளர்க்கப்பட்டவர்கள். அன்னையின் அச்சில் வார்க்கப்பட்டவர்கள்.
டிசம். 2 ஆசிரமப் பள்ளிக்கு மிக முக்கியமான நாள். டிசம். 1 பகவான் எழுதிய நாடகம் நடிக்கப்படும். அன்னையே உடனிருந்து அந்த நாடகங்களை இயக்குவது வழக்கம். கட்டுப்பாடு என்பதை எக்காரணத்தை முன்னிட்டும் அன்னை தளர்த்தவே மாட்டார். ஒரு டிசம். 1 டிராமாவில், அன்னை வளர்த்த பெண்களில் ஒருவருக்கு முக்கிய பாத்திரம். 1 மணி நேரம் recitation மேடையில் நின்று ஒரு காவியத்தை மனப்பாடமாகச் சொல்லும் பகுதி அது. அப்பெண்ணிற்கு சில நாள் முன் ஜுரம் வந்து படுக்கையாகி விட்டதால், என்ன செய்யலாம் என்று அன்னையைக் கேட்டனர். வேறு ஒருவருக்கு அப்பாத்திரத்தைத் தரலாமா என்பதற்கு அன்னை மறுப்பு தெரிவித்து விட்டார். நவம் 30 வரை அப்பெண்ணின் நிலையில் மாறுதலில்லை. அன்னைத் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளவில்லை. டிசம். 1 அன்று உத்தரவுக்கு அன்னையிடம் அனைவரும் காத்திருந்தனர். அப்பெண்ணுக்கே உடை அணியச் சொன்னார். அப்பெண்ணால் எழுந்து உட்கார முடியவில்லை. படுக்கையிலேயே மேக்கப் (makeup) போட்டு stretcher-இல் நாடக மேடைக்குக் கொண்டு வந்தனர். அன்னையும் அங்கிருக்கிறார். அவர் நடிக்கும் நேரம் வந்தது. அப்பெண் எழுந்தாள். மேடைக்குப் போனாள். எல்லா வருஷம் போலும் 1 மணி நேரம் மேடையில் தன் பகுதியைக் குறைவற நடித்துப் பூர்த்தி செய்தாள். திரை விழுந்தது.
பார்த்தவர் எவரும் அப்பெண்ணுக்கு ஜுரம் என்று தெரியவில்லை. திரை விழுந்த கணமே பெண் தரையில் துவண்டு விழுந்தாள். மீண்டும் படுக்கைக்கு stretcher-இல் எடுத்துப் போனார்கள். அன்னை உடலின் வியாதியை ஏற்பதேயில்லை. அதை மீறிச் செயல்படுவதே அவர் கட்டுப்பாடு.