தியானத்தில் காணும் காட்சிகள்
எவ்வளவு பக்தி, நம்பிக்கையிருந்தாலும், ஆன்மீக அம்சமிருந்தாலும் சூட்சுமம் இல்லாதவர்க்கு காட்சிகள் (visions) தெரியா. இது குறையன்று. எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், சூட்சுமமுள்ளவர்க்குக் காட்சிகள் தெரிந்தபடியிருக்கும். அன்பர் கண்ட காட்சிகள், கேட்ட குரல்கள், நுகர்ந்த மணங்கள் இப்படிச்சில.
- சமாதி மீது ஸ்ரீ அரவிந்தர் பொன்மயமாகச் சயனிப்பது.
- ஸ்ரீ அரவிந்தர் அறையிலுள்ள போட்டோ உயிர் பெறுவது.
- வரவேற்பு அறை படத்திலிருந்து பகவான் வெளிவருவது.
- அன்னை மூதாட்டியாக மலை மீது நடப்பது.
- சமாதி–மலர்கள் ஒவ்வொன்றிலும் அன்னை உருவம் தெரிவது.
- மனதால் அன்னை என உச்சரிக்கும் பொழுது தூரத்திலிருந்து அன்னை திரும்பிப் பார்ப்பது.
- ஆப்பரேஷனில் அன்னை பக்கத்தில் வீற்றிருப்பது.
- உயிர் பிரியும் நேரத்தில் அன்னையைக் காட்சியில் கண்டு உயிர் பிழைப்பது.
- ஊருக்குப் புறப்படும் குழந்தையை அன்னை “அனுப்பாதே” எனக் குரல் தருவது.
- மரம் நம்மைப் பெயரிட்டு அழைப்பது.
- தியானத்தில் அன்னை ஒளிமயமாகத் தெரிவது.
- வானில் பகவானும் அன்னையும் காட்சியளிப்பது.
- கோபுரம்போல், அன்னை, பகவான் காட்சி தெரிவது.
- வலியுள்ள இடத்தில் அன்னை உருவம் தெரிவது.
மாணவர்கள் அன்னைக்குக் கடிதம் எழுதுவார்கள். அன்னை பதில் எழுதுவதுண்டு. அப்படி ஒருவர் எழுதியது,
- தியானம் செய்யும்பொழுது அன்னை சக்தி வருவதாக உணர்கிறேன்.
- அன்னை இசையின்போது, “சத்திய ஜீவியத்தைப் பெற உன்னைத் தயார் செய்துகொள்” என்று அன்னையின் குரல் கேட்கிறது.
- அன்னையை வானில் காண்கிறேன்.
- தீயசக்திகளிடமிருந்து அன்னை நம்மைக் காப்பாற்றுவதைக் காணமுடிகிறது.
- அன்னை கறுப்பு சக்திகளுடன் போராடுகிறார்.
அன்னை அவருக்குப் பதிலாக எழுதியது,
- நீ கண்ட காட்சி உண்மை.
- தியானம் நிறைந்தால் காட்சி பலிக்கும்.
- உன் ஜீவன் முழுமை பெறும்.
சாதனையும் ஆயுளும்
எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் பலிக்கும் என்ற அன்னை, இறைவனின் நோக்கத்திற்கெதிரான பிரார்த்தனைகள் பலிக்கா என்றும் கூறியுள்ளார். வாழ்வின் நோக்கம் காரியம் கூடிவருவது. தொலைந்த பொருளை நாம் தேடும்பொழுதும், அதற்காகப் பிரார்த்திக்கும்பொழுதும் அது கிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம். கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அன்னை விருப்பம் நிறைவேறட்டும் என்று நாம் பிரார்த்திப்பதில்லை.
உள்ளபடி அப்படிப் பிரார்த்திக்கும்பொழுது, அப்பொருள் உடனே கிடைக்கிறது. கிடைத்தால் மகிழ்வெய்துகிறோம். நாம் உள்ளபடி பிரார்த்தனை செய்தது உண்மை. நம் உண்மையைத் தாண்டி மனம் அது கிடைக்க வேண்டும் என நினைத்ததும் உண்மை. கடைசி கட்டத்திற்கு முன்நிலைவரை (penultimate) அன்னை நம் விருப்பத்தையே பூர்த்திச் செய்வார். அதனால்தான் சுயநலமான பிரார்த்தனைகளும் பலிக்கின்றன. மனித ஜீவனை அன்னை ஜீவாத்மா எனக் கருதுவதால், அதன் சுதந்திரத்தில் அன்னை தலையிடுவதில்லை.
மனித வாழ்வு, அதன் வெற்றிகள், நிறைவுகள், ஆயுள் ஆகியவை சாதாரண மனநிலைக்குரியன. ஆத்மா அதைக் கடந்தது. அன்னையிடம் போய் யோசனை கேட்பவர்கள், ‘அன்னை சொல்வதை அப்படியே செய்வோம்‘ என்றாலும் அவர்கள் மனம் தன் விருப்பம் அதன் மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கும். கடைசிக்கட்டம்வரை மனித அபிலாஷையைப் பூர்த்தி செய்யும் அன்னை கடைசி கட்டத்தில் ஆத்மாவின் அபிலாஷையைப் பூர்த்தி செய்கிறார்.
உடல்நிலை சரியில்லை என டாக்டரிடம் போனவர்கள், டாக்டர் சரியில்லை, தென்னிந்தியாவில் வேலூருக்குப் போவோம் என முடிவு செய்து, அன்னையிடம் முடிவைக் கூறினர். அன்னை அவர்கள் முடிவை ஆமோதித்தார்.
ஆப்பரேஷன் நடந்தது. நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. அன்னைக்குச் செய்திகள் வந்தபடியிருந்தன. அன்னை சாப்பிடும்பொழுது ஸ்பூன் கையிலிருந்து கீழே விழுந்தது. ஆஸ்பத்திரியில் அவர் உயிர் பிரிந்தது. புதுவைக்கு உடலை எடுத்து வந்து தகனம் செய்தனர்.
குடும்பம் அவர் பிழைக்க விரும்பியது. அவர் ஆத்மா விரும்பியது வேறு. கடைசி 3 நாளும் அவர் அன்னையை இடைவிடாது அழைத்தார். போன ஜென்மத்தில் புத்தபிக்ஷுவாக இருந்தவர், வாழ்நாள் முழுவதும் செய்யாத சரணாகதியை, கடைசி 3 நாளில் செய்ததாக அன்னை கூறினார். அவர் ஆத்மா சரணடைய விரும்பி அன்னையை வந்தடைந்தது.
- குடும்பம் விரும்பியது ஆத்மாவின் குரலை மீறி நடக்காது.
- அன்னையின் அருளை ஆத்மா மட்டுமே பெற்றதால் ஆத்ம நிறைவடைந்தது.
- கடைசிவரை நாம் நினைப்பதுபோல் நடந்தாலும், கடைசி கட்டம் மாறிவிடுகிறது எனில் கடைசிவரை நாம் சாமானியராக இருக்கிறோம் என்று அர்த்தம்.
- முதலிலிருந்தே அன்னை விருப்பத்தை மட்டும் நாடும் பக்தன் சாதகனாக மாறுகிறான். அது முழுமையானது என்பதால் அம்முழுமைக்குள் உடலும் அடங்கும்.
தூக்கம்
அயர்ந்து தூங்குபவருண்டு. அன்னை அதை ஜடமாகத் (unconscious sleep) தூங்குவது என்பார்.
லேசான சப்தம் (Light sleepers) கேட்டாலும் எழுபவர்கள், ஆழ்ந்த நித்திரையிலாழ்பவர்கள். இவர்கள் இருவகையினர். மிகவும் ரோஷக்காரர்களாகவும், உஷாரானாவர்களாகவும் இருப்பார்கள். அடுத்த வகையினர் மனதில் ஆழ்ந்த பயம், குற்றவுணர்வுள்ளவர்களாக இருப்பார்கள்.
வயதானவர்களில் பலருக்கும் தூக்கம் வாராது. தேவாரம், பிரபந்தம் மனப்பாடம் செய்து பாடிக்கொண்டிருப்பார்கள். இல்லையெனில் இரவு சிம்மசொப்பனம்தான்.
உடல் தேவையான ஓய்வைத் தானே பெறும். நாம் அதற்காகக் கவலைப்பட வேண்டாம்.
பரீட்சைக்குப் படிப்பவனுக்குத் தூக்கம் வரக்கூடாது. மாணவர்கள் மாத்திரை சாப்பிட்டுக் கண் விழிப்பார்கள். தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கம் வாராதவர்கள் தூங்குவார்கள். அன்னை அவற்றை விஷம் என்கிறார்.
தூக்கம் வரவில்லை எனக் கூறியவர்கட்கு “உனக்கேன் தூக்கம்?” என அன்னை கேட்டுள்ளார்.
தூக்கமாத்திரை சாப்பிடுபவரை “தூக்கம் வேண்டுமானால் ‘பிரார்த்தனையும் தியானமும்‘ என்பதைப் படி” என்று கூறியுள்ளார். படித்தவர் நன்கு தூங்கினார். அன்னை முறைகளைத் தூக்கம் வேண்டும் என்பவருக்கும், விழிக்கவேண்டும் என்பவருக்கும் பொதுவாகச் சொன்னால்,
- தூக்கத்தை அழைத்தால் – “தூக்கம், தூக்கம்” என அழைத்தால் – தூக்கம் வரும்.
- சாந்தியை அழைத்தாலும் தூக்கம் வரும்.
- தூக்கம் வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தாலும் போதும்.
- பகவான் எழுதியவை, அன்னை புத்தகங்களைத் தூக்கம் வேண்டுமென படித்தால் தூக்கம் வரும்.
- தூக்கத்தைப் பற்றி அன்னை எழுதியவற்றை ஆராய்ச்சியுடன் படித்து புரிந்துகொண்டால் தூக்கம் பிரச்சினையாக இராது.
- புருவ மையத்தில் அன்னையை உருவமாகப் பார்த்தல் நலம்.
- பாடத்தில் ஆர்வம் எழுந்தால், பிரார்த்தனை பலித்து நெடுநேரம் விழித்திருக்கலாம்.
- வேலையைச் சமர்ப்பணம் செய்து ஈடுபட்டால், களைப்பின்றி இரவு நெடுநேரம் செய்யலாம். முடிந்தபின் உறக்கம் தியானமாக மாறும்.
- தூக்கம் வேண்டாம், வேண்டும் என்பதைவிட்டு சந்தோஷமாக இருந்தால் உள்ள பிரச்சினை போய்விடும்.
- தூக்கம் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும், உடல் தன்னைப் பாதுகாக்கும் என நம்பினால் தூக்கம் பிரச்சினையாக இருக்காது.
- அன்னையின் இசை (Mother’s music) தூக்கம் வாராத நிலையில் உறுதுணை.
- ஊதுவத்தி, வாராத தூக்கத்தை வரவழைக்கும், வரும் தூக்கத்தைப் படிக்கும் மாணவனுக்கு கலைக்கும்.
சரணாகதி
சரணாகதியைப் பயிலும் முறையை யோகநிலை வெளிப்பாடு நூலில் (Synthesis of Yoga) சமர்ப்பணம் (Consecration) என்ற அத்தியாயத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். அதன் சுருக்கம்,
- அழைப்பிருந்தால் யோகத்தை ஏற்கலாம்.
- All inclusive concentration எல்லாக் கரணங்களும் ஒருமுகப்படும் (concentrate) சமர்ப்பணத்தை ஏற்க வேண்டும்.
- ஒருமுகப்படுவது சரியானால், wide massive opening ஜீவன்அகன்று விரிந்து இறைவனை நோக்கி விழிப்புறும்.
- நினைவு, உணர்வு, செயல் இனி உள்ளே விழிப்புற்ற இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
- சமர்ப்பணம் பூர்த்தியானால் ஜீவாத்மா சித்திக்கும்.
- அடுத்த நிலையில் பிரபஞ்சத்தின் ஆத்மா சித்திக்கும்.
- முடிவில் பரமாத்மா சித்திக்கும்.
இப்பயிற்சியைப் பெற ஞானம் தேவையில்லை. ஞானம் உதவும், ஆனால் அவசியமில்லை. சமர்ப்பணம் ஓர் உதாரணம். எல்லா யோகப் பயிற்சிகளையும் இந்நூலில் இதுபோல் விளக்கமாகக் கூறுகிறார்.
எனக்கு ஞானம் ஏற்காது, பயிற்சி முடியாது என்று கூறும் பக்குவமான ஆத்மாவும் உண்டு. அவர்கட்கும் பயன்படுவது சாவித்திரி. ஞானத்தைப் பெறும் அறிவோ, பயிற்சியைப் பெறும் நெறியோ இல்லாவிட்டாலும் ஆத்மா பக்குவமாக உள்ளவர் உண்டு. சாவித்திரியில் Surrender is the only strength என்கிறார். சாவித்திரி ஆன்ம விழிப்பை அளிக்கிறது. இந்தச் சொல் நம்முள்ளே சென்று விழிப்பான ஆத்மாவைச் சரணம் செய்யச் சொல்கிறது. சரணாகதி பூர்த்தியாகிறது. யோகம் சித்திக்கிறது. சித்தி பெற்றவர் தெளிவில்லாதவராக இருப்பதால் மற்றவர் அதிசயப்படுகிறார்கள். அவர், “எனக்கு ஒன்றும் தெரியாது. ஒரு நாள் சாவித்திரியில் A vast surrender is his only strength என்று படித்தேன். அது ஆழமாகப் பதிந்துவிட்டது. அதன் பிறகு எனக்கு சரணாகதி சித்தியாயிற்று. இனி எனக்கு ஒன்றுமில்லை. எல்லாம் அவன் பாரம்” என்கிறார். அதுவும் புரியாத நிலையில் உள்ளவரும் உண்டு.
எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அன்னையை ஏற்றுக்கொண்ட பின் சரணாகதியையும் ஏற்றுக் கொண்டேன். பகவான் சொல்வதெல்லாம் எனக்குப் பலிக்கிறது. எப்படி என்று தெரியாது என்றும் கூறுவதுண்டு. Life Divine கொடுப்பது ஞானம், சாவித்திரி அளிப்பது சித்தி, synthesis பயிற்சி வேண்டியவர்க்குரியது.
நம்மால் இதன் பலனை – ஞானம், பயிற்சி, சித்தி – பெற முடியுமா? என்றால் பெறலாம். வாழ்க்கை விளக்கம் பெற, வாழ்வு யோக வாழ்வாக, வாழ்வு வளம் பெற இதைப் பயன்படுத்தலாம். அதற்கு முன் ஒரு நிபந்தனையுண்டு. நிபந்தனையைப் பூர்த்தி செய்தால் ஆரம்பிக்கலாம், பலிக்கும்.
நாம் அறிந்த அளவில் மனம் தூய்மைக இருந்தால் வாழ்வு பலிக்கும். அதைக் கடந்தும் மனம் தூய்மையானால் யோகம் பலிக்கும்.
அன்னை மனச்சாட்சியைப் பொன் விலங்கு என்கிறார். வாழ்வில் வளம் பெற மனச்சாட்சி போதும். அதைக் கடக்க வேண்டுமானால் அது தடை.
வாழ்வில் நமக்கு இரு பலன்கள் உண்டு
1. பிரச்சினை தீர்வது, 2. வாய்ப்பு பலிப்பது.
எனக்கு 38 வயதாயிற்று. திருமணமாகவில்லை என்பது ஒரு பிரச்சினை. என் வயதையோ, வசதியையோ, அனுபவத்தையோ நம்பாமல் அவற்றை விட்டகன்று, நான் எதையும் கருதவில்லை. அன்னையை மட்டும் நம்புகிறேன் என்றால் அவருக்கு ஒரு வாரத்தில் நிச்சயமாகும். அப்படி ஒருவருக்கு ஆயிற்று.
நான் சம்பளம் ரூ. 350 பெறுகிறேன். வயது 30. வீட்டில் எவருக்கும் எனக்குத் திருமணம் செய்ய விருப்பமில்லை. என் நிலை, வயது, வீட்டு நிலையை மனதால் ஒதுக்கி, அன்னையை மட்டும் நம்பினேன். 60,000ரூபாய் சம்பளம் பெறுபவர் என்னைத் திருமணம் செய்துகொண்டு, இதுபோன்ற பெண் கிடைத்ததற்கு நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும் என்றார் என்பது அடுத்த அனுபவம். இது பிரச்சினை தீர்ந்து வாய்ப்பு உடன் வந்ததாகும்.
Life Divineஇல் முதல் 288 பக்கத்துடன் முதல் பாகம் முடிகிறது. அதிலிருந்த 150 கருத்துகளை எடுத்துப் போட்டிருக்கிறேன். அவற்றுள் 60 கருத்துகளுக்கு விளக்கம் எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறேன். அவற்றுள் எந்த ஒரு கருத்தும் பயன் தரும். மனம் ஜடத்தை ஆள்கிறது என்ற கருத்தை எப்படி தன் பாக்டரி பிரச்சினை தீர்வதற்குப் பயன்படுத்தினேன் என்றொருவர் தம் அனுபவத்தை நீண்ட விளக்கமாக 3 பக்கம் எழுதியதை அன்பர் கடிதம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.
அன்னையை நன்குணர்ந்தவர்கள் நடக்க முடியாதது என்று ஒன்றில்லை என்பதை அனுபவத்தில் பல சமயங்களில் கண்டுள்ளனர். ஓர் அடி தூரத்தில் பஸ் வந்தபின் தான் ஆகாயத்திலெழுந்து அகன்றது ஒரு நிகழ்ச்சி. கால் குத்திய பின் மறைந்தது மற்றொன்று. முதலாளி மேல் பொய் கேஸ் கொடுத்த 20 பேர்கள் தாமே – பிரார்த்தனையால் – மனம் மாறி முதலாளிக்குச் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தார்கள். அரெஸ்ட் வாரண்ட் போட்ட முதலமைச்சர் மனம் மாறியதுடன் வேண்டியவரானது ஒரு நிகழ்ச்சி.
இடுப்பில் ஒரு பெரிய கட்டி வந்தது. அது உள்ள இடம் அவரை எந்த நிலையிலும் உட்கார அனுமதிக்கவில்லை. இரவு படுக்கப் போகுமுன் மனத்துள் அன்னையிடம் சொன்னார். சமீபத்தில் தரிசனம் வருவதால் கட்டி தரிசனத்திற்குப் போவதைத் தடுத்துவிடும் என்ற பயம் அவருக்கு. காலையில் எழுந்து பார்த்தால் சங்கடமான இடத்திலிருந்து கட்டி வலியில்லாமல் நகர்ந்துள்ளது. மறுநாள் கட்டி உடைந்து, காயம் எளிதில் குணமாயிற்று. எப்படி இது நடக்க முடியும்? என்று ஆச்சரியப்பட்டு அன்னையிடம் கேட்டபொழுது, “எதுவும் நடக்கும். மனம் குறுக்கிடாமருந்தால் எதுவும் நடக்கும். உன் உடல் என் சக்தியை எளிதில் (receives) பெறுகிறது” என்றார்.
பாரிஸில் அன்னையை ஓர் (artist) ஓவியராகவே அறிவார்கள். ஒரு ஸ்டூடியோவை விட்டு வெளியே வரும் பொழுது, எரி விண்கற்கள் விழுவதை அன்னை கண்டார். கண்டவுடன், என் ஜீவன் முழுவதும் இறைவனுக்கே உரியதாக வேண்டும் என இறைவனை வேண்டினார். எரி விண்கற்கள் சில வினாடிகளில் மறைந்துவிடும். அவற்றைக் கண்டு, மறைவதன் முன் மனதிலுள்ள விருப்பத்தைச் சொல் வடிவமாக்கினால், அது ஓர் ஆண்டில் பலித்துவிடும் என்ற நம்பிக்கையுண்டு.
புதுவை வந்த பிறகு இசை, ஓவியம் போன்றவை அன்னைக்குப் பின்னணியில் சென்றன. 1970க்குப் பிறகு, அன்னை தம் திருவுருமாற்றத்தைக் குறிப்பிடும்பொழுது, “நான் சாப்பிட, எழுத, பேச, பார்க்க மறந்துவிட்டேன். அத்திறமைகளைத் திருவுரு மாறிய உடல் மீண்டும் புதியதாய் கற்றுக் கொள்கிறது” என்கிறார். கண்ணை மூடிக் கொண்டால் எனக்குப் பார்வை தெளிவாக இருக்கிறது என்கிறார்.
அன்னை எழுதிய படங்கள், வரைந்த பென்சில் ஓவியங்கள் ஏராளமானவை. அவற்றைக் கண்காட்சியாகவும், சில சமயங்களில் வைப்பதுண்டு. ஆசிரமம் ஆரம்பித்த வருஷங்களில் தினமும் காலையில் அன்னை படம் எழுதுவது, வரைவதுண்டு. ஒரு சமயம் அவருடனிருந்த சாதகர் சம்பக்லால்
படத்தை கண்ணை மூடிக் கொண்டு அன்னை வரைந்தார்.
பென்சில் தானே நகர்ந்தது. படம் அற்புதமாக எழுதப்பட்டிருந்தது. தம்முடனிருந்த சாதகியின் படத்தையும், அதுபோல் வரைந்தார். தம் படத்தை இரு முறை (self portrait) அன்னை வரைந்துள்ளார். அதே சமயத்தில் அன்னை வரைந்த பகவான் படத்திற்கு இணையாக அவற்றுள் ஒன்று அமைந்தது. வேறொரு சாதகர் தூங்குவதை ஓவியமாக எழுதியுள்ளார். பகவான் படத்தை oil portrait ஆக வரையும்படி அன்னையைக் கேட்டுக் கொண்டது ஏனோ நிறைவேறவில்லை.
பகவான் வரைபடம் உயர்வாக அமைந்தது. நெற்றியின் அமைப்பு இவரே பகவான், “புருஷன்” எனும்படி அமைந்தது.