வடநாட்டுச் செல்வர் ஒருவர் ஜாதகம் பார்த்தபொழுது அவர் குரு தென்னாட்டிலிருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைத் தேடிக் கொண்டிருக்கும்பொழுது, ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்தார். அவர் தம்மால், இறந்தவர் உடம்பில் புகுந்து, நடக்க முடியும் என்று கூறி நிரூபித்தார். உடலை விட்டுப்போய் வேறொரு உடலில் புகுவது occultism எனப்படும். பாரிசில் அன்னை occultism பயிற்றுவிப்பவர்களைக் கண்டு, அவர்களுடன் ஆப்பிரிக்கா சென்று சில மாதங்கள் தங்கியிருந்து திரும்பும்பொழுது, கப்பலில் அன்னையும், அவர் குருவும் இருந்தார்கள். கடல் அமைதி இழந்து கொந்தளிக்க ஆரம்பித்தது. மாலுமிகள், அவர்களுடைய கேப்டன் ஆகியவர்கட்குக் கடல் நிலைமை தெரியும். பிரயாணிகளைப்போல் காற்றடித்தவுடன் பயப்பட மாட்டார்கள். கடலையும், காற்றையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அவற்றின் போக்கை அறிவதால், அமைதியாக இருப்பார்கள். அன்று பிரயாணிகளைப் போலவே, மாலுமிகளும் நிலை இழந்தனர். கேப்டனுக்கு நிலைமை கட்டுக்கடங்காது என்று புரிந்தது. கலங்கிய நேரம்.
அன்னையின் குரு, அவரை அழைத்து, போய் நிலைமையைச் சீர் செய் என்றார். அன்னை ஆணையை ஏற்று, அவர் cabin அறைக்குப் போய் கட்டிலில் படுத்து, தாம் குருவிடம் கற்ற வித்தையைப் பயின்று உடலை விட்டு வெளிவந்தார்.
அவரது சூட்சும உடல் கப்பலுக்கு மேலே சென்று நின்றது. கப்பலைச் சுற்றி சிறு சிறு (vital beings) ஜீவன்கள் கும்மாளம் அடிப்பதைக் கண்டார். அந்தத் தேவதைகளுக்குக் கப்பலை ஆட்டிக் கவிழ்ப்பதில் ஆனந்தம். அமர்க்களம் செய்ததைப் பார்த்து, அவற்றை இனிமையாக அழைத்து சுமார் அரை மணி நேரம் பேசினார். ஒரு வழியாக அவை சமாதானமடைந்தன. நிரபராதியான பிரயாணிகளைக் கடலில் அமிழ்த்துவது நியாயமா? என அன்னை அத்தேவதைகளுடன் வாதாடினார். வென்றார். கடல் கொந்தளிப்பு அடங்கியது. ஆபத்து விலகியது.
அரபு நாட்டு வியாபாரி ஒருவர் அன்னையின் குருவைப் பார்க்க வருவதுண்டு. ஒரு சமயம் அவர் அத்துமீறிப் பேசலானார். தாம் பணம் பெற்றவன் என்ற கர்வத்துடன் பேச்செழுந்தது. அடுத்த முறை அவர் வருமுன் ஒரு பெரிய மேஜை, 8 கால்களுடையது, அவரை வரவேற்கக் காத்திருந்தது. அது கனத்த மேஜை. அன்னை, குருவின் மனைவி இருவரும் ஒரு புறம் அமர்ந்திருந்தனர். அரபு வியாபாரி வந்தார். பழைய பாணியில் குருவிடம் பேச ஆரம்பித்தார். குருவின் மனைவி இம்முறை அவருக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார். அவருடைய சக்தி பெரியது.
அன்னையைத் திரும்பிப் பார்த்தார். எதுவும் சொல்லவில்லை. திடீரென ஒரு பயங்கரக் குரல் வியாபாரியிடமிருந்து எழுந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்படைந்தார். பீதியுற்றார். மேஜை தானே நகர்வதைக் கண்டார். அவரால் நம்ப முடியவில்லை. மேஜை சற்று அசைந்தாடியது. பிறகு வேகமாக வியாபாரியை நோக்கிச் சென்று அவரைத் தாக்கியது. பீதியுற்ற வியாபாரி எழுந்து ஓடினார். அதன் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.
இரவில் அன்னை வேறு உலகங்கட்குச் செல்வார். சூட்சும லோகத்தில் போய், பகவானை சந்திப்பார். சாதகர்களைச் சூட்சுமமாகத் தூங்கும்பொழுது போய்ப் பார்ப்பார். இவை சூட்சுமமானவர்களுக்குத் தெரியமே தவிர, மற்றவர்கட்குத் தெரியாது. தாம் உபயோகப்படுத்திய கொசு வலையை ஒரு சாதகருக்கு அன்னை கொடுத்தார். அவர் தூங்கும்பொழுது அக்கொசு வலையில் தம் சூட்சும ஜீவியம் (subtle consciousness) இருப்பதைக் கண்டார்.
ஒருவர் இரவில் அன்னை தம்மிடம் வருவதைக் கண்டு பூரிப்படைந்தார். அடுத்த நிமிஷம் வேறொருவர் வீட்டிற்குப் போய் அவர் கட்டில் அன்னை உட்காருவதைக் கண்டு, அடுத்த நாள் அவரிடம் போய்ச் சொன்னார். “இன்று எனக்குப் பிறந்த நாள். நேற்று படுக்கை விசேஷமாக இருந்தது தெரியும். அன்னையை நான் காணவில்லை” என்றார் பிறந்தநாளுக்குரியவர்.
அன்னையின் சட்டங்களில் ஒன்று வெகு ஜாக்கிரதையாக இருப்பது. முன்கூட்டியே தவறு நடக்கும் சந்தர்ப்பங்களை அன்னை விலக்குவார். அதனால்தான் மோட்டார் பைக்கை அன்னை அனுமதிப்பதே இல்லை. நிலைமையை, தாமே பிற்காலத்தில் மாற்றிக் கொண்டவர்கள் தங்களுக்கே காலத்திற்குரிய சமாதானத்தைச் சொல்லிக் கொண்டார்கள். கத்தி, பிளேடு, கூர்மையான பொருள்களை அன்னை குழந்தைகளிடம் அனுமதிப்பதேயில்லை. முன் ஜாக்கிரதை என்பது அன்னைக்கு முக்கியம்.
ஆசிரமத்தில் சேர்ந்த ஒருவர் தாம் பிரியப்பட்டு வெளிநாட்டில் வாங்கிய ரிவால்வரைப் பற்றி அன்னையிடம் கூறியபொழுது, பீச்சின் தென்கோடிக்குப் போய் அதைக் கடலில் வீசி விடு என்று அறிவுரை கூறினார்.
இன்னும்,
எந்த பாஷையில் பேசினாலும், அன்னை புரிந்து கொள்ள முயன்றால், அன்னைக்குப் புரியும். ஒரு சமயம் தமிழில் ஒரு வார்த்தை அன்னையே பேசினார். குழந்தைகள் அன்னை முன்னிலையில் பலவிதமாக இருப்பார்கள். சிறு குழந்தையை அன்னையின் காலடியில் கிடத்திய பொழுது அது, அவர் கால்கட்டை விரலைப் பற்றிக் கொண்டு விடமறுத்தபொழுது, அன்னை அக்குழந்தையின் போட்டோவை வாங்கி அதன் மூலம் குழந்தையின் முற்பிறவியைக் காண முயன்றபொழுது, எகிப்தில் இக்குழந்தை வாழ்ந்ததாகவும், தாம் எகிப்து ராணியாக இருந்தபொழுது தம்மை அறியும் என்று கண்டார்.
ஒரு வயதுக் குழந்தை பிறந்த நாள் ஆசீர்வாதத்திற்கு வந்த பொழுது, அன்னை ஒரு பை சாக்கலேட் கொடுத்தார். குழந்தை தமிழில், “இன்னும்” என்றபொழுது அடுத்த பை சாக்கலேட் கொடுத்தார். குழந்தை, “இன்னும்” என்று மறுபடியும் கூறியது. நீயே போய் எடுத்துக் கொள் என்றார் அன்னை. குழந்தை ஷெல்பிற்குப் போய் மேலும் ஒரு பாக்கட் எடுத்துக் கொண்டது.
காலேஜ் ஆசிரியை, தன் குழந்தையை ஆசீர்வாதத்திற்கு கொண்டு வந்தபொழுது, குழந்தை அன்னையிடம் அளவுகடந்த பிரியம் காட்டியது. கவனித்து, அன்னை, ஆசிரமச் சாதகர் இக்குழந்தையாகப் பிறந்துள்ளார் என்று கூறி தாயையும் மகனையும் ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அவர்களுடன் வந்த தகப்பனாரும் ஆசிரமத்தில் சேர்ந்து சில மாதங்களில் வெறுப்பு கொண்டு வெளியேறி விட்டார்.
ஐரோப்பிய சிஷ்யர்கள்
ஒரு புது இடம், ஸ்தாபனம், கட்சி, மதம் ஏற்பட்டால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? அதன் தத்துவம் என்ன? கொள்கைகள் எவை? எந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றனர்? என்றறிந்து அவை நமக்கு ஏற்புடையவையாக இருந்தால் நாம் ஏற்க வேண்டும்.
அதுபோல் நாம் செயல்படுவதில்லை. நம்மூரில் அங்கு யாராவது சேர்ந்திருக்கிறார்களா? அவர் யார்? அவர் நல்லவரா? அவர் அந்தஸ்து என்ன? அவரே சேர்ந்தால் நாமும் சேரலாம் என்று நினைக்கிறோம்.
1914இல் அன்னையும், அவர் கணவரும் ஸ்ரீஅரவிந்தரைச் சந்திக்க, அவரிடம் வந்தபொழுது,
இரு ஐரோப்பியர்கள், பிரான்சு நாட்டிலிருந்து வந்தவர்கள், சமூகத்தின் உச்சகட்டத்திலுள்ளவர்கள் ஸ்ரீ அரவிந்தரின் சிஷ்யர்களாகிவிட்டனர்,
என்ற செய்தி புதுவையிலும், சென்னையிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்ரமணிய பாரதியும், அவருடனிருந்த மற்ற தேசீயத் தலைவர்களும் இந்நிகழ்ச்சியை முக்கியமாகக் கவனித்தனர். நாட்டில் ஏற்பட்ட பரபரப்புக்கு அவர்களும் ஆளானார்கள். ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்திலிருந்து ஒருவர் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று மகாத்மா காந்தியைச் சந்தித்தார். இவர் குஜராத்தி, காந்தியின் சீடர். ஏற்கனவே, காந்தி ஆசிரமத்திலிருந்தவர். மகாத்மா முதலாகக் கேட்ட கேள்வி,
குஜராத்திருந்து எத்தனை பேர் அங்கிருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் யார்?
என்பது. நம்மூர்க்காரர் யார் இருக்கின்றார்கள், எத்தனை பேரிருக்கின்றார்கள் என்பதிலிருந்து நாம் அந்த ஸ்தாபனத்தைக் கணக்கிட முயல்வது இயல்பு. ஐரோப்பியர் இருவர் பகவானுக்குச் சிஷ்யர்களாகி விட்டனர் என்பது நம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்துவது இயற்கை.
பால்பிரண்டன் என்ற ஆங்கிலேயர் திருவண்ணாமலை வந்து ரமண மஹரிஷியைச் சந்தித்து, அங்கே தங்கிய பின்னரே, ரமணர் பிரபலமானார். Paul Brunton பத்திரிகை நிருபர். அவருக்கு ஆன்ம விசாரம் உண்டு. தொழிலை விட்டு இமயமலையை அடைந்து பல மகான்களைப் பற்றிக் கேள்விப்பட்டு தாம் குருவாக எவரையாவது ஏற்கமுடியுமா? என நினைத்தபொழுது எவரும் அவருக்குத் திருப்தி தரவில்லை. தென்னிந்தியாவில் பயணம் செய்தபொழுது, காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரைக் கண்டவுடன், இவரே தமக்குரிய குரு என மனதில் முடிவு செய்து தம்மை ஏற்கும்படிக் கேட்டுக் கொண்டார். “உங்களுக்கு குருவாக இருக்கும் தகுதியுள்ளவர் இருவர். ஒருவர் மோனத்தில் புதுவையிலிருப்பதால், அவர் உங்களை சந்திக்க முடியாது. ஏற்க மாட்டார். அடுத்தவர் ரமண மகரிஷி. அவரைப் போய் விசாரிப்பது நல்லது” என்று உபதேசம் செய்தார். பால் பதிலாக, “நான் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்துவிட்டேன். எனக்குத் திருப்தி இல்லாவிட்டால் திரும்பி வருவேன். என்னை அவசியம் ஏற்க வேண்டும்” என்றார். “அந்த சந்தர்ப்பம் – திருப்தியில்லை என்ற சந்தர்ப்பம் – எழாது” என்றார் சங்கராச்சாரியார். பால் ரமணருடன் இறுதிவரை தங்கியிருந்தார்.
நம்பிக்கை
நம்பிக்கை இலட்சியமாக, அன்னை சொல்வதை அப்பட்டமான உண்மை என எடுத்துக் கொள்ள வேண்டும் என நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நடைமுறையில் நாம் அதுபோல் இருப்பதில்லை.
தவறிய பின், விழுவதற்கு முன் என்னைக் கூப்பிட்டால் காப்பாற்றுவேன் என்ற அன்னை சொல்லை நடைமுறையில் நம்ப முழு நம்பிக்கை வேண்டும். பஸ்ஸுக்கு அடியில் விழுந்து விட்டவருடைய அம்மா என்ற அலறல் என்ன செய்யும்? டயர் 1 அங்குலத்திற்கப்பால் நின்றது. உயிர் பிழைத்தார். பிளாட்பாரத்தில் நின்றவர் மீது மோதிய கார் அடியில் அவர் போன பின் இழுத்துப் போடும்பொழுது மகள் அருகில் நின்று எழுப்பிய அபயக்குரல் அன்னைக்குக் கேட்டது. குரலை எழுப்பியவரால் தாயார் சிறு காயங்களுடன் எழுந்து நடப்பதைக் கண்டும் நம்ப முடியவில்லை.
தொலைந்த பர்ஸ், ஆட்டோ டிரைவர் திரும்ப தம்மைத் தேடி வந்து கொடுத்த தொலைந்த பொருள், பல வருஷமாக இருந்த வீக்கமும், அரிப்பும் மனமுருக செய்த பிரார்த்தனையால் மறு நாள் காலையில் மறைந்தது போன்ற நிகழ்ச்சிகளை அநேக பக்தர்கள் கண்டிருக்கிறார்கள். ஆபத்தில் எழும் குரல் ஆழத்திலிருந்து எழுவதால் தவறாது அன்னைக்குக் கேட்கும். நடந்த பிறகும் நமக்குப் புரியாது, நம்பிக்கை முழுமையாவதில்லை.
புதுவைக்கு, தரிசனத்திற்கு வந்து திரும்புபவர் ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இவர் எப்பொழுதும் கையில் Water bottle கொண்டு வருவார். குளிர்ந்த நீரை விரும்பிப் பருகும் அன்பர் அவர். நீர் காற்றில் குளிர வேண்டும் என்று ஜன்னலுக்கு வெளியே பாட்டிலை தொங்கவிடுவது அவர் பழக்கம். திடீரென பாட்டில் விழுந்தது. தண்ணீர்பாட்டிலுக்காக என்ன செய்யலாம்? எதுவும் செய்ய முடியாது. அம்மா, என் தண்ணீர் போய்விட்டதே என தீனமாகக் குரல் எழுப்பினார். ரயில் வேகம் குறைந்து மெதுவாகப் போக ஆரம்பித்தது! அன்னைக்கு என் குரல் கேட்டுவிட்டாற்போருக்கிறது என்று ஆச்சரியப்பட்டார். ஆனால் என்ன செய்யமுடியும்? பெண் பிரயாணி. ஆணாக இருந்தாலும் இறங்கி எடுக்க எல்லோராலும் முடியுமா? யாரோ ஒரு சிறுவன் விழுந்த பாட்டிலை எடுத்து ஓடி வந்து அவரிடம் கொடுத்தான். அப்பொழுதுதான் அன்னையின் சொல் அப்பட்டமான உண்மை என அவர் அறிந்தார்.
எழ வேண்டிய இடத்திலிருந்து குரல் எழுந்தால், தவறாது அன்னையின் காதில் விழும். நடக்குமா? என்ற கேள்வியில்லை. பெரிய விஷயம், ஆபத்து, நடக்க முடியாதது, நடக்கவே முடியாதது என்ற விஷயங்களிலும் நடக்கும் என்பதை அன்பர்கள் கண்டுள்ளனர். கண்டதுடன் விஷயம் நின்றுவிடுகிறது.
இதுவே அன்னை எப்பொழுதும் செயல்படும் வகை என மனம் அறிவதில்லை.
இனி எல்லாக் காரியங்களும் இப்படியே நடக்க முயலவேண்டும் என்று நினைப்பதில்லை.
இனி என் வாழ்வின் அமைப்பை இந்த அடிப்படையிலேயே நடத்தவேண்டும் என்று தோன்றினால் அது ஞானோதயம்.
அழைப்பு
அழைப்பு அன்னை காதில் விழத் தவறுவதில்லை. ஓடும் ரயிலிருந்து விழுந்த தண்ணீர்ப் பாட்டிலுக்கானாலும், காருக்கடியில் கிடந்த உயிரைக் காப்பாற்ற வேண்டுமானாலும் அழைப்பு அன்னை காதில் விழும். அவர் சூழலை எட்டிவிட்டால் சூழலே பதில் சொல்லும். லால்பகதூர் சாஸ்திரி உயிர் பிரியும் தருணத்தில் எழுப்பிய அன்னைக்குக் கேட்டது. தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த 9 வயதுப் பெண் மனதால் அன்னையை அழைத்தபொழுது வெகுதூரத்திலிருந்த அன்னை திரும்பிப் பார்த்தார்.
முதல் தேதி அன்னையைச் சந்திக்கும் நிர்வாகச் சாதகர்கள் அந்த மாதம் அவர்கள் டிபார்ட்மெண்ட்டில் யார் யாருக்குப் பிறந்த நாள் வருகிறதோ, அதைத் தனிதனியாக கார்டில் குறித்துத் தருவார்கள். அன்னை அந்தக் கார்டுகளில் தாம் பிறந்தநாளன்று சாதகரைச் சந்திக்கும் நேரத்தை கார்டில் குறித்து மறுநாள் கொடுப்பார்கள். பார்க்கச் சம்மதிக்காதவர் கார்டுகள் திரும்பக் கையெழுத்தில்லாமல் வரும்.
நான் என் நண்பர் ஒருவரை அவர் பிறந்த நாளன்று அன்னையைத் தரிசிக்க அனுப்ப விரும்பினேன். அது நிறைவேற வேண்டுமானால், அந்நினைவினுள் பக்தி இருக்க வேண்டும். அன்னையை பிறந்த நாளன்று தரிசிக்க முடியும் என்பது என் நண்பருக்குத் தெரியாது. நான் அதற்காக அவரைத் தயார் செய்ய விரும்புவதும் அவர் அறியாதவை. உங்களால் 72 மணி நேரம் இடைவிடாமல் அன்னையை மனதால் அழைக்க முடியுமா? என்று அவரைக் கேட்டபொழுது அவர் அதற்கு ஒத்துக் கொண்டார். அந்த 72 மணி நேரமும் அந்த வாரம் புதன்கிழமை 7.30 மணிக்கு முடிகிறது. புதன்கிழமை நான் சமாதிக்கு வந்து என் தியானம், வேலை ஆகியவற்றை முடித்துக் கொண்டு 7 மணிக்கு நான் வழக்கமாகச் சந்திக்கும் சாதகரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்பொழுது, உங்கள் நண்பர் பெயரென்ன? அவரை நான் அன்னையிடம் அவர் பிறந்த நாளன்று அழைத்துப் போக விரும்புகிறேன். அவர் பிறந்த நாள் எப்பொழுது? என்று கேட்டார். அதற்கு முன் இந்தச் சாதகரை 5 வருஷமாக எனக்குத் தெரியும். வாரம் இரு முறை நான் இவரை சந்திப்பதுண்டு. நான் Synthesis of Yoga படிக்கும்பொழுது அதில் எழும் ஐயங்களை விளக்க ஏற்றுக்கொண்டவர். இந்த 5 வருஷமாக என்னிடம் அன்னையைத் தரிசிக்க முடியும் என்றோ, பிறந்த நாள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகவோ சொல்லவில்லை. நண்பரின் இடைவிடாத அழைப்பு முடிய ½ மணிக்கு முன் அவர் அழைப்பு இந்தச் சாதகரைப் பேச வைத்தது. அம்மாதம் முதல் தேதி இந்தச் சாதகர் அன்னையிடம் 15, 20 பிறந்த நாள் தரிசன விண்ணப்பக் கார்டுகளை நீட்டியபொழுது, அன்னை அவற்றைக் கையில் வாங்காமல், சாதகர் கையிலுள்ள கார்டுகளை விரலால் நகர்த்தினார். ஒரு கார்டை எடுத்தார். மாலை 3.30 என்று எழுதினார். இது என் நண்பர் கார்டு. அழைப்பு அன்னை காதில் விழுந்தது. அது மட்டுமன்று, என்னை 5 வருஷமாக அழைக்காத சாதகரைப் பேச வைத்தது.
பக்தியுடன், அன்னையை அழைத்தாலும், அவர் படம் வாங்க நினைத்தாலும், ஒரு புத்தகம் படிக்க விரும்பினாலும், சேவை செய்ய முன் வந்தாலும், ஆசிரமம் வர விரும்பினாலும், சமூகமோ, வீடோ, சூழ்நிலையோ, வக்ரமான மனிதர்களோ, தீயசக்திகளோ, அதைத் தடை செய்ய முடியாது.
கல்லூரி ஆசிரியர் தம் பாடச் சம்பந்தமாக லைப்ரரியில் புத்தகங்களைப் புரட்டியபொழுது ஸ்ரீ அரவிந்தர் புத்தகம் தென்பட்டது. அவர் ஒரு கட்டுரையில் ஸ்ரீ அரவிந்தர் (quotation) எழுதினவற்றைப் பார்த்து, மூலத்தைத் தேடினார். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஒரு பாராவே அவருக்கு (powerful) சக்தி வாய்ந்ததாகத் தோன்றியது. படிக்க முயன்றார். இதன் பலனாக ஆசிரமம் வந்தார். வரவேற்பில் பகவான் படத்தின் முன் நின்றவர் கண்களில் ஊறிய நீர் வடியவில்லை.
கடையில் வாங்கிவந்த பொட்டலம் மடித்த பேப்பர் மூலமாக 1927இல் ஒருவர் வந்தார். ரயிலில் போய்க் கொண்டிருந்தபொழுது மற்றவர் பேசியது காதில் விழுந்ததால், தம் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சேமிப்பை – ரூபாய் 1 – ஒரு விவசாயி எடுத்து அன்னைக்கு அனுப்பினார்.
கப்பற்படையிலுள்ளவர் ஸ்ரீ அரவிந்தர் பற்றிக் கேள்விப்பட்டார். கேள்விப்பட்ட விஷயம் அவரை ஆசிரமம் கொண்டு வந்து சேர்த்தது.
பகவான் எழுதிய புத்தகம் ஒன்றைப் படிக்க விரும்பி, காரியதரிசியிடம் சென்றார். அவர் தம் உதவியாளரிடம் அனுப்பினார். கடற்படை வீரர் ஒரு புத்தகம் வாங்கினார். அன்னையிடம் அனுப்பி அதை ஆசீர்வாதம் செய்யமுடியுமா எனக் கேட்டார். அந்தச் சாதகர் அப்புத்தகத்தை அன்னையிடம் எடுத்துப் போய் அன்னையின் ஆசி பெற்று வந்தார்.
வந்தவர் Life Divine, Synthesis of Yoga, வேறு சில புத்தகங்களையும் வீரரிடம் கொடுத்தார். தாம் வாங்கிய புத்தகமும் ஆசிபெற்று திரும்பி வந்தது. அத்தனைப் புத்தகங்களை வாங்க வந்தவர் நினைக்கவில்லை. அதற்குரிய பணமும் அவரிடம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தம் தயக்கத்தை வெளியிட்டார்.
“இப்புத்தகங்களை அன்னை உங்களுக்குப் பரிசாக அனுப்பியுள்ளார்”
என்று வந்தவர் சொல்யதைக் கடற்படை வீரர் கேட்டுக் கொண்டார். அது காதில் நுழையவில்லை. திகைத்து நின்றார். அன்னையிடம் ஒரு பொருள் போனவுடன் அதை அனுப்பியவர் மனநிலை, ஆன்ம விழிப்பு அவருக்குத் தெரியும். எந்த அளவுக்கு விழிப்புள்ளதோ அந்த அளவுக்கு அருளைப் பொருளாக அன்னை அனுப்புவார். அன்னை அனுப்பும் பொருள் அருளைத் தாங்கி வருவது அருளேயாகும். அவ்வீரர் அத்தனைப் புத்தகங்களிலுள்ள ஆன்மீக ஞானத்தைப் பெறவல்லவர் என அறிந்து அன்னை அனுப்பியிருப்பதால், அவருடைய முயற்சிக்கு அன்னையின் ஆசியும், அனுக்கிரஹமும் உண்டு. திகைப்பு என நாம் அறிவது ஆன்மா விழித்து அருளைப் பெறும்பொழுது, மனம் சொல்லற்று, உடல் செயலற்றுப் போவதாகும்.
ஆன்ம விழிப்பு நமக்குத் திகைப்பாகத் தெரிகிறது.