உடலுக்குள் உடல் என்பது யோகத்தில் சூட்சுமப் பகுதியைப் போன்றது. உடலிலிருந்து வெளிவந்து, அவ்வுடலிலிருந்தும் மீண்டும் வெளிவருவது என்பவை யோகம். அதுபோல் 12 முறை செய்ததை அன்னை இங்கு குறிக்கிறார். சூரியனும், சந்திரனும் அவருடலில் தெரிவதை விவரிக்கின்றார்.
புதுவைக்கு வந்த பின்னும் எழுதினார். அதுபோல் அவர் எழுதியவை 5 volumes. எழுதியவுடன் முதலில் படிப்பது ஸ்ரீ அரவிந்தர். அவர் எழுதியவை பிரெஞ்சு மொழியில். பகவானுக்குப் பிரெஞ்சில் அதிகப் பயிற்சியும், பிரியமும் உண்டு. அன்னை எழுதியவற்றில் பல பகுதிகளை, பகவான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மற்றவற்றைப் பிரசுரம் செய்யும்படி அன்னையிடம் கூறினார்.
பகவான் சொன்னபடியே அன்னை செய்தார். Prayers and Meditations என்ற தலைப்பில் அவர் டைரி வெளியாயிற்று. அத்துடன் வேறொன்றும் அன்னை செய்தார். பிரசுரத்திற்கு எடுத்துக் கொண்டவை ஒரு பகுதியே. பிரசுரத்திற்காக அன்னை அனுப்பாத பகுதிகளை அன்னை எரித்துவிட்டார். நம்மால் இன்று நினைத்தும் பார்க்கமுடியாத நிகழ்ச்சி அது. அன்னை தம்மை விலக்கிக் கொண்டு செயல்படுவதற்கு இது பெரிய உதாரணம்.
பகவான் எழுதப் பிரியப்பட்டது சாவித்திரி காவியம் மட்டும். மீதி அவர் எழுதியவை எல்லாம் அவரே விருப்பப்பட்டு எழுதியவை அல்ல. பல்கலைக் கழகப் பேராசிரியராக இருக்க, ஏராளமான புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை scholar அதிகம் படித்தவர்கள் என்பார்கள். thinker சிந்தனையாளராக இருக்க வேண்டும் என்பது scholarக்கு அவசியமில்லை. சிந்தனையாளரைக் கடந்த நிலை தத்துவஞானி original thinker என்பது. பகவான் அதைக் கடந்த நிலையில் இருந்தவர். ரோமாபுரி சரித்திரத்தை எழுத நினைத்தாராம். அதற்கு ஏராளமாகப் படிக்க வேண்டும் என்பதால்
அதை அவர் செய்யவில்லை. தத்துவ ஞானியைக் கடந்த நிலை poet கவிஞனுடையது. யோகி அதையும் கடந்த நிலை. தம்மை ஒரு கவிஞராகவே பகவான் கருதினார். இந்தியாவுக்கு வரும் முன் சாவித்திரி எழுத வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதிலிருந்தது. அதை முதல் எழுதிய போது 14 வரிகளில் காவியம் முடிந்துவிட்டது. sonet என்ற செய்யுள் இலக்கியநெறி 14 வரிகளில் அமைவது. முடிவாக சாவித்திரி 12 புத்தகங்களாகவும், 23,814 வரிகளாகவும் முடிந்தது.
“சூட்சும ஞானமும், ஆன்மீக அனுபவமும் உள்ளவரே ‘சாவித்திரியை‘ விளக்க முடியும். யாரும் அதைச் செய்ய முடியாது. நான் ஒரு நாள் அதைச் செய்ய விரும்புகிறேன்” என்று அன்னை கூறினார்.
சாவித்திரியைப் படித்துவிட்டு, “இது நான் நேற்று பெற்ற அனுபவம்” என்றார் அன்னை. அன்னை முதல்நாள் பெற்ற அனுபவத்தை, பகவான் அடுத்த நாளில் எழுதியது சாவித்திரி.
வெகு நாள்வரை பகவான் தாமே அதை எழுதினார். பார்வை மங்கிய பின் தாம் சொல்வதை எழுத ஒருவரை நியமித்தார். 1950இல் ஜுன் மாத அளவில் பகவான் சாவித்திரியை உடனே முடிக்க வேண்டும் என்று அவசரப்பட்டதை, டிசம்பரில் அவருடைய முடிவின் முன்னோடியாகக் கருதுகிறார்கள்.
1946வரை சாவித்திரியை, பகவான் தவிர யாரும் பார்க்கவில்லை. ஆசிரமக் கவி ஒருவருக்கு மட்டுமே அது தெரியும். ஏன் அத்தனை வருஷமாக யார் கண்ணிலும் படாமல் வைத்திருந்தார். யாருக்கும் தெரியக்கூடாது என்று பெருமுயற்சி எடுத்தார் என்பதை அவர் கூறவில்லை.
அன்னை சாவித்திரியைப் படித்து ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள். அந்த ரிகார்டிங் செய்ய ஆங்கில உச்சரிப்புச் சரியாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்பையும் டிக்ஷனரியைப் பார்த்து அறிய தாம் பெருமுயற்சி செய்ததை விவரித்துள்ளார்.
ஷேக்ஸ்பியர் சகஸ்ரதளத்திற்கு கீழ் உற்பத்தியானது, வேதம் சகஸ்ரதளத்திற்கு மேலிருந்து எழுதியது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். சகஸ்ரதளம் என்பது மனிதனுடைய உச்சி நிலை. அந்நிலையைக் கடந்தது முனிவர் நிலை. சாவித்திரியை overmind தெய்வ நிலையிலிருந்து கூடியவரை எழுத முயன்றேன் என்கிறார். எவ்வளவு வரிகளை overmind கொண்டு போக முடியுமோ அவ்வளவையும் மாற்றி எழுதியதாகச் சொல்கிறார்.
வேதம் உற்பத்தியான இடத்தைவிட 3 நிலை உயர்ந்தது சாவித்திரி உற்பத்தியான இடம் என்பதே நாம் அறிய வேண்டியது. அளவு கடந்த மந்திரச் சக்தி சாவித்திரிக்கு இருப்பது அது பெரும்பாலும் overmind poetry என்பதால்தான்.
ஞானம், யோகம், சித்தி
வறட்சியான கிராமத்தை வளமான இடமாக்க முனைந்தார் ஒரு சிப்பாய். மழை நீர் ஓடுவதைத் தடுக்க, கரை கட்டினால் கிணற்றில் நீர் மட்டம் ஏறும், பிறகு மோட்டார் போடலாம் என்பதைக் காதால் கேட்டு, மனதால் புரிந்து செயல்பட்டு மகாராஷ்டிராவில் அந்தக் கிராமத்தை அவர் வளமாக்கினார், ஞானத்தால் பலன் பெற்றார் இவர்.
ஒரு நகைக்கடை வளமாகச் சம்பாதிப்பதைப் பார்த்து ஜவுளிக்கடை, மளிகைக்கடை, ஷாப், பேப்பர் கடை எல்லாம் நகைக் கடைகளாக மாறின. இது போட்டி. இவர்களுக்கு ஞானம் பயன்படாது. அறிவால் விளங்கிக் கொள்ளாமல் அனுபவத்தால் அறிபவர் இவர்.
எல்லோரும் கரும்பு போட்டுப் பலனடைகிறார்கள், நீ மட்டும் ஏன் சும்மா இருக்கிறாய் என்றால் யார் இதெல்லாம் செய்வது என்பவருண்டு. அவருக்கு ஒரு கூட்டாளி, பங்காளி வந்து தாமே அவர் நிலத்தில் கரும்பு போட்டுப் பலன் பெற்றுக் கொடுப்பதும் உண்டு. அது பலனையே நேராகப் பெறுவதாகும். பங்காளி போனால் கரும்பும் போய்விடும்.
தத்துவம் தெரிந்து அதை யோகப் பயிற்சியாக்கிச் சித்தி பெறுபவர் அபூர்வம். Life Divine இந்தத் தத்துவத்தைக் கூறுகிறது.
பிறரைக் கண்டு போட்டி போட்டு பலன் அடைபவர் ஏராளம். அவர்கட்குப் பயிற்சி வேண்டும். அப்பயிற்சியைக் கொடுப்பது Synthesis of Yoga
யாரோ வந்தார்கள், என் வேலையைச் செய்தார்கள் நான் பலன் பெற்றேன் என்பவர் மற்றவர். சாவித்திரி தத்துவத்தையும், பயிற்சியையும் பலனாக மாற்றிக் கொடுக்கிறது. புரிந்தாலும், புரியாவிட்டாலும் பலன் தரும் யோக நூல் சாவித்திரி.
கடவுளைக் காட்டு நம்புகிறேன் என்ற நாத்திகவாதம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. இந்தக் குதர்க்கவாதிகட்குக் குதர்க்கமாக சொல்லிய பதில் ஏராளம். அவை எல்லாம் வாதம் ஜெயிக்க உதவியது. மனம் மாறவோ, ஞானம் பெறவோ உதவவில்லை.
பகவானும் இவர்கட்குப் பதில் கூறுகிறார் அறிவுக்குப் புலப்படவில்லை எனில், இல்லை என்று கூற முடியாதன்றோ? கண்ணால் கண்டதை மட்டும் நம்புவேன் என்றால் டெல்லிக்கு போகாதவர்கள் டெல்லியில்லை என்று கூற முடியுமா? அறிவுக்கு எட்டாதது அறிய அறிவின் பிறப்பிடமாகிய ஜீவியத்திற்குப் போனால் புலப்படும் என்று விளக்கம் எழுதுகிறார். ஞானத்தைத் தேடுபவர்க்கு இது தெளிவை அளிக்கக் கூடும்.
வேதம் விளக்காதது, உபநிஷதம் கேட்காதே என்று கூறுகிறது, கீதை சொல்லாமல் விட்டது, புத்தர் எனக்குத் தேவையில்லை என்றது, சங்கரருடைய மாயை, ஏன் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்று அன்று முதல் இன்றுவரை எழுந்த தத்துவங்களுக்கு ஞானம் உதயமாகும் அளவில் LIfe Divine விளக்கம் அளிக்கிறது. ஆனால் ஞானம் யோகமாகாது.
யோகத்தை LIfe Divineஇல் எழுதவில்லை.
யோகம் என்பதை எப்படிப் பயில வேண்டும் என்பதை தன் Synthesis of Yoga என்ற நூலில் பகவான் பயிற்சியாகக் கூறுகிறார்.
சரணாகதியே பகவானுடைய கருவி, கீதை சொல்லும் சரணாகதி மோட்சமடைய, பகவான் சொல்லும் சரணாகதி திருவுருமாற்றமடைய. இதை Life Divineஇல் எடுத்து விளக்க அவர் முயலவில்லை. சரணாகதியே தத்துவம் என்று மட்டும் கூறுகிறார்.
சத்தியஜீவியம் (Supramental Being)
“நான் சத்தியஜீவியத்துள் கொல்லைப்புறமாக நுழைந்தேன். அன்னை தெரு வாசல் வழியாக உள்ளே வந்தார்” என்றார் பகவான்.
ஆப்பிரிக்காவில் தியோனோடிருக்கும்பொழுதே அன்னை சத்திய ஜீவனைக் கண்டார். தியோனைக் கண்டபொழுது இவர் தாம் குருவாக வேண்டிய “கிருஷ்ணா” என்ற ஐயம் அன்னைக்கிருந்தது. “தியோனுக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் சாயல் ஒன்றாக இருந்தது” என்றும் அன்னை கூறுகிறார்.
“தியோன் அன்னைக்குக் குரு என்பது உண்மை. ஆனால் சூட்சும சக்திகளைப் பயிற்றுவிக்கும் குரு. அதுவும் அவர் மனைவிக்கே அதிகமாகத் தெரியும். தியோனுக்கு இலட்சியம் புரியவில்லை. புரிந்தவற்றைத் தலைகீழே புரிந்து கொண்டுள்ளார்” என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
சத்தியஜீவியத்திற்கு முக்கிய அடையாளம் நினைவும், செயலும் இணைந்திருப்பதே. நாம் ஒன்றை அறிந்து, பின்னர் அதை செயல்படுத்துவது மனத்தின் இயல்பு. நாம் ஒன்றை அறிந்தவுடன் பலிப்பது சத்தியஜீவியம். நாம் அதை,
வார்த்தை பலிக்கிறது,
நினைப்பது நடக்கிறது,
என்கிறோம். அன்னை முதலில் ஸ்ரீ அரவிந்தரைக் கண்டபொழுது இப்பிரச்சினையை எழுப்புகிறார். சத்தியஜீவியத்தில் உள்ளவை எதிர்காலத்தில் நடக்க வேண்டியவற்றைக் கண்டு அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் கூறுகிறார். ஸ்ரீ அரவிந்தரிடம் கூறியவுடன் எதிர்காலத்தில் நடக்க வேண்டியவை அப்பொழுதே நடக்க ஆரம்பிக்கின்றன. அதுவே சத்தியஜீவியத்தின் முத்திரை.
நம் அனுபவம், அறிவு ஏற்கும் வாய்ப்பு எவ்வளவு பெரியதானாலும், எவ்வளவு நம்மால் நம்ப முடியாவிட்டாலும், அவை நம் அறிவுக்கும், அனுபவத்திற்கும் பொருந்தும் – உதாரணமாக வருமானம் 10 மடங்கு பெருகும் – என்பதை எடுத்து, நம்மை விலக்கி, அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், அது பலிக்க ஆரம்பிப்பதை நடைமுறையில் காணலாம். நமக்குச் சத்தியஜீவியம் என்பது நேர்மையாக, நம் வருமானம் அளவுகடந்து பெருகுவதாகும். நாம் செய்யவேண்டியது,
- மனம் தூய்மையாக இருக்க வேண்டும்,
- கேட்பதை அனுபவம் ஏற்க வேண்டும்,
- நம்பிக்கை மற்ற எதிலிருந்தும் மாறி அன்னையில் மட்டுமிருக்க வேண்டும்,
- அந்நம்பிக்கை சந்தோஷம் கொடுக்கும் நேரம் விஷயம் பலிக்கும்,
- அதுவும் பலனைவிட அன்னை முக்கியமானால் அளவுகடந்து பலித்து நின்று நிலைத்துப் பெருகும்.
முரடன்
அன்னை ஆசீர்வதிக்கும்பொழுது with my blessings என்று எழுதுவார்கள். With my love and blessings எனவும் எழுதுவதுண்டு. நகரத்தில் நடமாடும் நமக்கு அன்னையின் பாதுகாப்பு முக்கியம். Gasஐ மூடாமல் விபத்து ஏற்படுவது, பிரேக்கில்லாமல் மோட்டார் பைக் விழுவது, மலைப்பகுதியில் போகும்பொழுது பாறை உருண்டு வருவது, டிராபிக்கில் மோதவரும் லாரி, சக்கரம் கழண்டு ஓடுவது போன்ற விபத்துகளிலிருந்து அன்பர்கள் தப்பியதை எனக்கு எழுதுகிறார்கள்.
விபத்தினின்று பாதுகாப்பை அன்னை நாம் கேட்காமலேயே அளிக்கிறார். முனைந்து விதிமுறைகளைப் புறக்கணித்தவரும் தப்பியது உண்டு. தரிசனத்திற்கு வர ஏற்பாடு செய்த பஸ்ஸை மாற்றி முதலாளி அனுப்புகிறார். இது வெகுதூரம் போன வண்டி நேரடியாக ஜனவரி முதல் தேதிக்கு வருகிறது. டிரைவர் குடித்துவிட்டு ஓட்டுகிறான். எப்படி அன்பர்கள் இந்த வண்டியை ஏற்கலாம்? இரவில் பஸ் குறுக்கும் நெடுக்குமாக ஓடும்பொழுது பஸ் நிறைய அன்பர்கள் அதை ஏற்பது தவறன்றோ? எதிரில் வரும் கார், பஸ்ஸின் நிலையைப் பார்த்து பயந்து, பஸ்ஸை நிறுத்த முடியாது எனக் கண்டு, காரை ரோட்டில் குறுக்கே நிறுத்தி பஸ்ஸை நிறுத்தி, இது ஆபத்து என்று எச்சரிக்கை செய்த பின்னும் அதில் பிரயாணம் செய்வது சரியா? அந்த பஸ் உருண்டு அனைவரும் அடிபட்டனர். பஸ்ஸிலிருந்த நிலையைக் கண்டவர்கள், சிறு காயங்களுடன் அன்பர்கள் தப்பித்ததை நம்ப முடியவில்லை என்றனர். அன்பர்கள் வாழ்விலில்லாதது. முறைகளை அலட்சியமாக மீறவே கூடாது.
வடநாட்டில் காட்டுவழியாக மோட்டார் பைக்கில் ஒரு இளைஞனும், அவன் பின் ஒரு பெண்ணும் சென்றனர். ரோடு ஒரு கிராமத்தைக் கடக்க வேண்டும். கொலைக்கும், கற்பழிப்புக்கும் பேர் போன இடம். நான்கைந்து பேர் ரோட்டில் கூடி மோட்டார் பைக்கை நிறுத்தினர். ஆண் மகனுக்கு தைரியமில்லை. தைரியமிருந்தாலும் 5 பேருடன் எப்படிச் சமாளிப்பான்? முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டான். நினைவுக்கு வந்த தெய்வங்களை அழைத்தான்.
முரடர்கள் அப்பெண்ணை அழைத்தனர். அவள் அன்னையை அறிவாள். மனதில் அன்னையை தீவிரமாக அழைத்துக் கொண்டிருக்கும்பொழுது ஒருவன் அவளைப்பற்றி இழுத்தான். அவளுக்குப் பயம் எழுந்து அடங்கியது. நானும் உன் உடன் பிறந்தவளில்லையா, என்னைத் தொந்தரவு செய்வது நியாயமா? என நிதானமாக அவள் கேட்கும்பொழுது, எனக்குச் சகோதரியில்லை என்ற பதிலுடன் வேகமாக இழுத்தான். மேலும் தீவிரமாக அன்னையை அழைத்தாள். என்ன நினைத்தானோ, தெரியவில்லை. சரி, போ, இனி இந்தப் பக்கம் வாராதே என்றான். முரடன் மனம் மாறி, கையில் கிடைத்ததை வலிய விட்டுக்கொடுப்பது அன்னை முத்திரையாகும். With my protection என்று அன்னை எழுதாத ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு.
கோயிலுக்குப் போய் வந்த பஸ், குடிகார டிரைவர் போன்ற ஆபத்தான விஷயங்களை அன்பர்கள் எச்சரிக்கையுடன் விலக்க வேண்டும்.
ஓம்
சச்சிதானந்தத்தின் சத்புருஷனை பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் என மூன்றாகப் பிரித்துக் கூறுகிறார் ஸ்ரீ அரவிந்தர். ஈஸ்வரன் சிருஷ்டிக்குரியவன். கர்மயோகத்தால் அடையக் கூடியவன். அவனுக்குரியவள் சக்தி.
புருஷன் சாட்சியாக இருப்பவன். சாட்சி புருஷன் எனப்படுபவன். பக்திக்குரியவன். இவனது உயர்ந்த நிலை புருஷோத்தமனாகும். புருஷோத்தமன் பிரம்மத்தைத் தன்னுட் கொண்டவன். புருஷனுக்குரியவள் பிரகிருதி.
பிரம்மம் ஞானத்திற்குரியது. க்ஷரப்பிரம்மம், அக்ஷரபிரம்மம் எனும் இரு நிலைகளில் உள்ளது. அக்ஷரபிரம்மம் க்ஷரபிரம்மத்தைத் தன்னுட்கொண்டது. அவ்வக்ஷரபிரம்மத்தையும் புருஷோத்தமன் தன்னுட் கொண்டவன்.
க்ஷரபிரம்மம் உலகம். அக்ஷரபிரம்மம் உலகத்தைக் கடந்தது. அக்ஷர பிரம்மம் க்ஷரபிரம்மமாகும்பொழுது சிருஷ்டி எழுகிறது. அது முதலில் சப்தமாக எழுவதால் அதை சப்தப் பிரம்மம் என்பர்.
ஓம் என்ற பிரணவ மந்திரம் எழும் இடம் அதுவே.
மந்திரத்தை வாயால் உச்சரிக்கலாம். அதன் பலன் மிகக் குறைவு. சொல்லைப் புறக்கணித்து, உள்ளே சென்று ஜீவனைத் தொட்டு, ஜீவன் மந்திரத்தை உச்சரிப்பதே உரிய பலனைத் தரும். அப்படிச் செய்யும் பொழுது 4 நிலைகளில் பலன் ஏற்படுகிறது. நான்காம் நிலையைத் துரிய நிலை எனும் சச்சிதானந்தம் எனக் கூறுவர். விடுதலை எனும் மோட்சத்தைத் தரும் ஆன்மீகப் பயிற்சி இது. பூரணயோகத்தில் ஓம் இதுபோல் பயன்படுத்தப்பட்டால், அது சச்சிதானந்தத்தை அடையாமல் Cosmic consciouness பிரபஞ்சத்தின் ஜீவியத்திற்கு நம்மை அழைத்துப் போகும் என்கிறார் பகவான். பூரணயோகத்திற்கு மந்திரம் இல்லை. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் என்பவையே மந்திரங்கள். அவற்றை ஓம் உச்சரிப்பதுபோல் உச்சரித்தால் பயிற்சி,
ஈஸ்வரனுடைய சக்தியிடம் கொண்டு செல்லும்.
பாரிசில் அன்னையும் நண்பர்களும் கூடிய இடத்தில் ஒருவர் ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும்பொழுது அறை முழுவதும் force சக்தியால் நிரம்பியது என்கிறார் அன்னை. ஓம் உயர்ந்த மந்திரம். முடிவில் மோட்சம் தரவல்லது.
Mother, அன்னை என்ற மந்திரம் அன்னையிடம் நம்மை அழைத்துச் சென்று சிருஷ்டியில் பங்கு கொள்ளச் செய்யும். சிருஷ்டியில் பங்கு கொள்வது இறைவனாகும் பாதையாகும்.
பாதுகாப்பு
பாதுகாப்பு என்பது இரு வகைப்படும். ஒன்று security, அடுத்தது protection. இருப்பது போகாமலிருக்கவும், பய உணர்வு எழாமலிருப்பதும் security, ஆபத்திலிருந்து காப்பாற்றுவது protection. இரண்டிலும் அன்னையின் security, அன்னையின் protection உண்டு. எந்த விஷயமும் அன்னையிடம் வந்தால் அது அன்னை விஷயமாகிவிடும்.
ஆசிரமத்திற்கும் போகும் பெற்றோர் குழந்தைகளை வளர்ந்தவர்கள் என்பதால் பாட்டியிடம் விட்டுவிட்டுப் போவார்கள். பாட்டியுமில்லாவிட்டால், ஆபீஸ் பியூனிடம் ஒப்படைப்பார்கள். அதுவும் இல்லாத நேரம் அன்னை பார்த்துக்கொள்வார் என ஒரு சமயம் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்கள்.
பாதுகாப்பு வேண்டிய குழந்தைகள் பூஜை அறையில் தூங்கினார்கள். ஒரு நாள் வந்த உறவினர்கள் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போகும்பொழுது இரவில் திருடன் வந்தால் என்ன செய்வீர்கள்? நாங்கள் துணைக்குப் படுத்துக்கொள்கிறோம் என்றபொழுது அன்னையிருக்கும்பொழுது பயமில்லை என குழந்தைகள் துணையை மறுத்தனர்.
நடுநிசியில் எழுந்த பெண் யாரோ மெதுவாக நடப்பதை அறிந்தாள். திருட்டு பயம் பற்றி பேசியது நினைவு வந்தது. பயம் கவ்வியது. விளக்கைப் போடலாமா என யோசனை செய்தபொழுது, இது அன்னையுள்ள இடம், எப்படித் திருடன் வரமுடியும் என்று மனத்தின் அடுத்த பகுதி கூறியது.
மனம் பயப்படக் கூடியது. உணர்வில் தைரியமுள்ளவர்கள் திருடன் எங்கு வருகிறான் எனப் போய்ப் பார்ப்பார்கள். பெண் குழந்தைக்கு அப்படி முடியாதன்றோ? மனத்தைக் கடந்த ஆன்மாவில் விழிப்பிருந்தால் பயமும் எழாது, மனத்தின் தவறான போக்குக்கும் இடமிருக்காது.
சைத்திய புருஷன் என்ற ஆன்மா எப்பொழுதும் விழிப்புடையது. எந்நேரமும் அது அன்னையை நோக்கித் திரும்பக்கூடியது. மனத்தைப்போல் முடியுமா? முடியாதா? என ஐயப்படக் கூடியதில்லை.
சைத்திய புருஷன் தெளிவுள்ளது, விழிப்புள்ளது. அன்னையை மறக்கமுடியாதது.
இப்பெண் குழந்தைக்கு எப்படித் திருடன் இப்புனித அறையுள் வரமுடியும் என்று தோன்றிய எண்ணம் ஆன்மாவில் எழுந்த எண்ணம். அவ்வெண்ணம் எழுந்தவுடன் அன்னை அங்கு வந்தார். Surrender rose ரோஜாவின் மணம் அதிகமாக எழுந்தது. கூடை கூடையாக ரோஜா இருப்பதைப்போல் மணம் அறையையும், வீட்டையும் நிறைத்தது. அது அன்னையின் வருகை.
மனம் அவளுக்கு அமைதியடைந்தது.
காலடி சப்தம் மறைய ஆரம்பித்தது.
ரோஜா வாசனையும் மறைந்தது.
வத்தி கொளுத்தி பெண் அன்னைக்கு நமஸ்காரம் செய்தாள். அன்னை கொடுப்பது security திருடர்களைப் பற்றிப் பேசினால் security மாறி பாதுகாப்பு கிடைக்கிறது.
கட்டுப்பாடு
சென்னை YMCA உடற்பயிற்சிக் கல்லூரியில் Buck என்றொரு பிரின்சிபாலிருந்தார். இவர்தான் இக்கல்லூரியை ஸ்தாபித்தவர். காலை 6.00 மணிக்கு உடற்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகும். மாணவர்கள் வரிசையில் சரியாக 6.00 மணிக்கு வந்து நிற்பார்கள். அதன்பின் வருபவர்கள் மைதானத்தை இருமுறை சுற்றி ஓடிவந்து சேரவேண்டும். ஒரு மாணவன் 6.01க்கு வந்தான். அதை பிரின்சிபல் லேட்டாகக் கருதமாட்டார் என நினைத்தான். அவனை இருமுறை ஓடச்சொன்னார் Buck. அத்துடன், 6.01 is not 6.00 என்றும் கூறுவார்.
இன்று games rules என நாம் வழங்குவது Buck rules எனப்படும். ஆசிரமத்தில் 44 ஆண்டுகளிருந்த பிரெஞ்சுக்காரருக்கு அன்னை பவித்ரா (தூய்மை) எனப் பெயரிட்டார். இவரே ஆசிரமப் பள்ளியை ஸ்தாபனம் செய்தவர். கட்டுப்பாடு மிகுந்தவர். இவர் வாழ்வின் நிகழ்ச்சிகளில் பல வெளி வந்ததுள்ளன. பவித்ரா ஆசிரமத்தில் சேரமுடிவெடுக்கும்வரை தினமும் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து உரையாடுவதை முன்பே வெளியிட்டோம்.
சிறுவயதில் பிரான்சிலிருக்கும்பொழுது இவருக்கு ஒரு பெண் மீது பிரியம், அவர்கள் எப்பொழுது சந்திப்பது என நேரம் குறிக்கப்படும். அவள் தாமதமாக வந்தால் பவித்ரா காத்திருக்கமாட்டார். எழுந்து போய்விடுவார். அல்லது கணக்குப்போட ஆரம்பித்துவிடுவார். தாமதமாக வந்ததால் அப்பெண்ணைச் சந்திக்க மறுப்பார்!