அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 15

பிரான்சில் ஈகோல் பாலிடெக்னிக் என்றொரு கல்வி நிறுவனம் உண்டு. இது பிரபலமானது. இங்குச் சிறந்த மாணவர்களை மட்டும் சேர்ப்பார்கள். இன்று நாட்டில் எந்தத் துறையில் முதன்மையாக இருப்பவரும், இங்குப் படித்தவராக இருப்பார்கள். இங்குச் சேர்ந்துவிட்டால், இனி எதிர்காலத் தலைவன் என்பது உறுதி. நம் நாட்டில் டேராடூனில் உள்ள இராணுவப் பள்ளியில் ராஜீவ் காந்தி படித்தார். அந்தப் பள்ளிக்கு அதுபோன்ற பிரபலம் நம் நாட்டிலுண்டு. பவித்திரா அப்பாலிடெக்னிக்கில் படித்தவர்.

11ஆம் வயதில் தகப்பனார் இவருக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் ஒரு ஸ்பானரும் தந்தார். சிறுவன் ஆர்வமாக எல்லா மறைகளையும் திருகினான். மறைகள் ஒவ்வொன்றாய் வெளியில் விழுந்தன. சீக்கிரம் சைக்கிள் அக்கு வேறு, ஆணி வேறாகிவிட்டது. இது 1905ஆம் ஆண்டு, மன்னிக்கமுடியாத குற்றம். அந்த நாட்களில் இந்தியாவுக்குச் சைக்கிள் வந்துவிட்டதா எனத் தெரியவில்லை. எந்தத் தகப்பனாரும் மன்னிக்கமுடியாத குற்றம். பையன் ஆர்வத்தால் செய்துவிட்டான், தகப்பனார் வந்து பார்த்தார். மீண்டும் சைக்கிளை பூட்டு என்றார். வீட்டில் குழாயை எடுத்துவிட்டால், போடமுடியாமல் தவிப்பவர்கட்குப் பவித்திராவின் தகப்பனார் சொல்லியதன் அர்த்தம் புரியும். சிறுவன் ஓரு சைக்கிள் கடைக்குப் போய் சைக்கிளைப் பூட்டுவதாகவும், தண்டனையாகத் தன் pocket பணத்திலிருந்து பணம் தருவதாகவும் கூறியதைத் தகப்பனார் மறுத்து, அவிழ்த்ததைப் பூட்டவேண்டும் என உத்தரவிட்டார்.

21 நாள் போராடி 11 வயது சிறுவன் சைக்கிளைப் பூட்டிவிட்டான். சைக்கிள் சம்பந்தமான எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டான். இளம் வயதில் கற்றுக்கொடுத்த கட்டுப்பாடு, அன்னையுடன் 44 வருஷமிருந்த பாக்கியத்தை பெற்றுத் தந்தது.

செருப்பு விற்றது

நம் நாட்டில் உயர்ந்த குணங்களைக் காண்கிறோம். பிறநாட்டில் மிக உயர்ந்த குணங்களைக் கேள்விப்படுகிறோம். பணம், வாக்கு, பெண்ணின் நடத்தை, குழந்தைகளின் நம்பிக்கை ஆகியவற்றில் மனிதனின் உயர்ந்த குணம் வெளிப்படுகிறது.

மேல்நாட்டு மக்களிடம் கேள்விப்படும் ஏராளமான நல்ல குணங்களுக்கும் மேலாக அவர்கள் அறிவை அன்னை குறிப்பிட்டுப் பேசுகிறார். ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் திறமையைப் பற்றிப் பேசுகிறார். அத்துடன் அன்னை இந்தியர் ஆன்மஓளியைப் பற்றியும் கூறுகிறார். பவித்ரா ஜப்பானிலிருந்த சமயம் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவர் வரலாறு கூறுகிறது.

  • ஒருவருக்கு சிரமம் வந்தால் குடும்பத்தாரும், நண்பரும் உதவுவது பெருந்தன்மை என்று நாம் கருதிச் செய்கிறோம்.
  • மேல்நாட்டார் அவ்வுதவியைப் பெறுவது மரியாதை குறைவு எனப் பெற மறுக்கின்றனர். கொடுக்க முயல்வது புண்படுத்துவதாகும் எனப் பிறர் நினைக்கின்றனர்.
  • ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வை என்பது நாம்.
  • பொய் சொல்லிவிட்டால் தன்மானம் போய்விட்டது என்பது ஐரோப்பியர்.
  • Force சக்தியை அனுப்பினால் மேல்நாட்டார் பெற்று தம் செயலை அளவுகடந்து உயர்த்துகிறார்கள் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.
  • இந்தியர்கட்குத் தம் சக்தியை அனுப்பினால் மயக்கம் போட்டு விழுந்தவன் தெளிந்ததைப்போல் எழுந்து கொஞ்ச நாளில் மீண்டும் விழுந்துவிடுகிறான். சக்தியைப் பெற்றுப் பலனடையும் திறமை நம்மவர்க்கில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
  • ஆங்கிலேயர் எத்தனை வருஷம் பார்த்தாலும் அறிமுகப்படுத்தாவிட்டால் பேசமாட்டார்கள்.
  • நாம் பஸ்ஸில் போகும்பொழுது எதிரிலுள்ளவரிடம் பேச ஆரம்பித்துவிடுகிறோம்.
  • இந்தியர் உடல் ஜோதியுள்ளது. தெரிந்ததை எடுத்துச் சொல்லும் அறிவுக்குரிய திறமையில்லை என்கிறார் அன்னை.
  • மேல்நாட்டாருக்கு அவ்வறிவு ஏராளமாக உள்ளது. எடுத்துச் சொல்ல உள்ளே எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்.

ஜப்பானில் மலை ஏறும்பொழுது சாதாரண செருப்பைக் கழற்றிவிட்டு, வைக்கோலாலான செருப்பைப் போட்டுக்கொள்வது சௌகரியம் என்று பொழுதுபோக்குக்காக மலை ஏறுபவர்கள் செய்வது வழக்கம். வைக்கோலால் செய்யப்பட்டது என்பதால் கொஞ்ச தூரம் நடந்தாலும் செருப்பு தேய்ந்துவிடும். அதனால் புதிய செருப்புகள் தேவைப்படும். மலையிடுக்குகளில் சில மைல்கட்கொரு முறை பல செருப்புகளை வைத்து, அதன் விலையை அதன்மீது எழுதியிருப்பார்கள். செருப்பு தேவைப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டு, விலையை அதனருகில் வைத்துவிடுவார்கள். செருப்பை வைத்தவர் வந்து எடுத்துக்கொள்வார். இது நம் நாட்டில் முடியுமா?

இந்தியருடல் அளவு கடந்த ஆன்மீக ஒளியுண்டு. மனத்திறமை இல்லை. செயலில் உண்மையில்லை. இரண்டும் இருந்தால், ஒளி வெளிவந்து வாழ்வைப் பொலிவுபடுத்தும். உள்ளொளியில்லாத அமெரிக்கர் புறமுயற்சியால் சிகரத்தை எட்டியுள்ளனர்.

செயலை முடிக்கும் திறமை, சுயகௌரவம், நாணயம், வாய்மை நம் வாழ்வில் நிறைந்திருந்தால், அன்னை பக்தராகவுமிருந்தால், அவர் வாழ்வு அமெரிக்கர் வாழ்வைவிட உயர்ந்து விளங்கும்.

ஜப்பான் நாட்டில் நாணயம் பெயர்போனது. பவித்ரா ஜப்பானில் தாம் கண்டதாகக் கூறிய நிகழ்ச்சி மேற்சொன்னதாகும்.

விமானப் பயணம்

பஸ்ஸில் பர்ஸைத் தொலைத்ததை அறியாமல் பஸ்ஸைவிட்டு இறங்கியவர் செய்வதறியாமல் அன்னையைக் கூப்பிட்டபொழுது ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் பஸ் நின்றது. பின்னால் நடந்து வந்தவர் ஏறி பர்ஸை எடுத்துக்கொண்டார்.

துறைமுகத்திலிருந்து போன கப்பல் திரும்பிவந்து லேட்டாக வந்த அன்பரை ஏற்றது, ஏர்போர்ட்டில் விஸாவை வைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் அபயக்குரலுக்குப் பதிலாக விமானம் திரும்பி வந்ததும் அன்பர்கள் அனுபவம்.

1962இல் அன்னை உடல்நலம் குன்றியதால் பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட் தரிசனம் தரவில்லை. பம்பாய் அன்பர் ஒருவரிடம் அன்னை அதிக ஈடுபாடாக இருந்து அவரைத் தம்முடையவர் என்பார்.

நவம்பர் தரிசனத்தின்போது அவருக்கு அன்னை அழைப்பு மனதை நிரப்பியதால், கணவரிடம், நான் போகவேண்டும், அன்னை என்னை அழைக்கிறார் என்று கூறினார். சென்ற ஆண்டு நவம்பரில் உங்கள் திருவடியிலிருந்தபொழுது இடையே ஒரு வருஷ இடைவெளிவரும் என நான் நினைக்கவில்லை. தரிசனம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் பாண்டிக்கு வரவேண்டும் என அன்னைக்கு எழுதினார்.

விமானத்தில் பயணம் செய்ய தாமும், கணவரும் டிக்கட் வாங்கினார்கள். சீனா போர் வந்தது. போர் முன்னணிக்கு விமானங்கள் தேவைப்படுவதால், உள்நாட்டில் வேலை செய்த விமானங்கள் அங்கு போயின. டிராவல் ஏஜெண்ட், அன்பரை போனில் கூப்பிட்டு விவரம் கூறி, ஆபீசுக்கு வந்து டிக்கட்டுக்குரிய பணத்தைத் திருப்பிப் பெறுமாறு கூறினார்.

விமானம், போர், தடை எல்லாம் அன்பர் மனதில் இல்லை. மனத்தில் அன்னையிருந்தார். அன்னையின் அழைப்பை மனம் உணர்ந்தது. இனி என் செய்வது, ரயிலில் கூட்டம் ஏராளமாக இருக்கும். கப்பலில் போகலாம் என்று அவருக்குத் தோன்றியது.

டிராவல்ஸ்க்கு சென்று டிக்கட் பணத்தைத் திருப்பிப் பெறப்போனவர் வரிசையில் கடைசியிலிருந்தார். “சென்னைக்கு விமானத்தில் ஓரிடம் உள்ளது, வேண்டுமா?” என்ற குரல் திடுக்கிடச் செய்தது. அதை வாங்கிக்கொண்டவருக்கு, அடுத்த நாள் இன்னொரு டிக்கட்டும் கிடைத்தது.

அன்பர் அன்னைக்குத் தந்திமூலம் தம் வருகையைத் தெரிவித்தார். தரிசனங்களை நிறுத்திவைத்த அன்னை பக்தர்களைப் பார்ப்பதையும் இம்மாதங்களில் நிறுத்தியிருந்தார்.

பம்பாய் அன்பர் டிக்கட் கான்சலானபொழுது அன்னைக்குத் தபால்மூலம் விபரம் தெரிவித்தார். “இங்கு நீ வந்திருந்தால், நான் உன்னைப் பார்க்காமல் அனுப்பியிருக்கமாட்டேன்” என அன்னை பதில் எழுதினார்.

ஸ்ரீ அரவிந்தருடைய படத்துடன், தம் படத்தையும் கடிதத்துடன் இணைத்து, கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்ப ஏற்பாடு செய்தார் அன்னை. கடிதத்தைக் கொடுத்துப் பதிவு செய்து அனுப்பு என மீண்டும் வற்புறுத்தினார்.

கடிதத்தை அனுப்புமுன் அவர் வருவதாகத் தந்தி வந்தது. “அப்படியானால் நானே நேரில் கையில் கொடுத்துவிடுகிறேன்” என அன்னை தபாலை பெற்றுக்கொண்டார்.

தெம்பு தரும் அருள்

மகனை இழந்தவர் உடல் நலம் இழந்தார், ஒடுங்கிப் போனார். மருந்தும், மாத்திரையும் உயிரை உடலில் வைத்திருந்தன. இவர் அன்னை பக்தரில்லை. இவர் பிள்ளைகள் பக்தர்கள். எழுந்து நடக்க முடியாது. இருபக்கமும் இருவர் பிடித்துக்கொண்டு நடக்கும் நிலையில் அவருக்கு அன்னை தரிசனம் செய்ய ஆவல் எழுந்தது. அவரை புதுவைக்கு அழைத்து வந்தனர். சுமார் 1500 மைல் பயணம். கார், ரயில், விமானப் பயணங்கள்.

அன்னை தினமும் விளையாட்டு மைதானம் வரும் நாட்கள். இப்பெண்மணியை அன்னையிடம் அழைத்து வந்தனர். அன்னை ஆன்மாவுடன் தொடர்புகொள்ள கண்களை உற்றுநோக்குவார். இப்பெண்ணின் கண்களை நெடுநேரம் உற்றுநோக்கினார். ஒரு பிரசாத பாக்கெட்டைக் கொடுத்தார். இருவர் பிடித்து அன்னையிடம் அழைத்துவந்த நிலை மாறியது. உடலில் புதுத் தெம்பு வந்தது. பிடிக்கவேண்டிய அவசியம் இனி இல்லை. மைதானத்திலிருந்து நடந்து ஆசிரமம் வர அவரால் முடிந்தது. சாப்பாட்டு அறைக்கும் நடந்து வந்தார். மறுநாள் பால்கனி தரிசனத்திற்கு காலையில் நடந்தே வந்தார். ஏராளமாகச் சாப்பிட்ட மருந்துகளை நிறுத்தினார்.

அன்னை சமாதியானபின் அருளின் சக்தி

அன்னை இருந்தபொழுது நடந்தவற்றைக் கேள்வியுற்றால், இன்று அன்னையில்லையே, இப்பொழுது எப்படி அந்தச் சக்தி இருக்கும் என நினைப்பது இயல்பு.

ஒரு தலைவர் உயிரோடு இருந்தபொழுதிருந்த செல்வாக்கு அவருக்குப் பின்னிருப்பதில்லை. ஏனெனில் அது அவருடைய சொந்தச் செல்வாக்கு. அன்னையின் அருள் அன்னையின் சொந்தத் திறன் என்பதுடன் அது அருளின் திறனும் ஆகும். (It is a personal and impersonal force). பக்தர்கள், அன்பர்கள், சாதகர்கள் அன்னையிருக்கும்பொழுது அவரை அறிந்தவர்கள், உடனிருந்தவர்கட்கு அவருக்குப்பின் ஓர் அனுபவம் உண்டு. அன்னையிருந்தபொழுது 1 மணி நேரப் பிரார்த்தனையால் பலித்த பிரார்த்தனை இன்று அதைவிடக் குறைந்த நேரத்தில் பலிக்கின்றது என்ற அனுபவம் உண்டு.

அன்னை சமாதியானபின் அவர் அருள் சூட்சும உலகில் தொடர்ந்து வளர்கிறது.

இந்திராகாந்தி அன்னையைக் கண்டு 250 பார்லிமெண்ட் சீட் வேண்டும் என்றார், 350 கிடைத்தது. மீண்டும் 1977இல் தோற்றார். 1980இல் ஒரு பக்தர் இந்திரா ஜெயிக்கவேண்டும் எனக் கங்கணம் கட்டியதன் விளைவாக இந்திரா ஜெயித்தார். 2/3 மெஜாரிட்டி கிடைத்தது. அன்று அன்னைமட்டும் பெற்றிருந்த திறன் இன்று அத்தனை பக்தர்கட்கும் உள்ளது.

1975இல் blood கான்சர் வந்த 19 வயது பையனை, சமாதிக்கு அழைத்துவர நாற்காயில் உட்காரவைத்து பஸ் ஏற்றி அழைத்து வந்தனர். இறக்க பஸ் ஸ்டாண்டில் தகப்பனார் நாற்காலி தேடியவர் வருமுன் பையன் நடந்துவந்தான். அன்று சுமார் 1 மைல் நடந்தான்.

அன்னை தாம் மட்டும் வழங்கிய அருள் இன்று அவர் atmosphere சூழலுக்கேயுள்ளது.

பத்து ஆண்டுகட்கு முன் வந்த பக்தர்கள் இன்று அன்னை அருள் அதிக சக்தியுடன் செயல்படுவதைக் காணலாம்.

அன்னையின் சட்டம்

அன்னை தாம் இயற்றும் சட்டங்களைத் தவறாது பின்பற்றுபவர். அதை மீற அனுமதிப்பதில்லை. ஆன்மா அச்சட்டங்களை மீறினால் அதை அன்புடன் அன்னை வரவேற்பார். மனித எண்ணமும், தெய்வச் சிந்தனையும் மாறுபடும் நேரம் அருள் செயல்படும் நேரம். நாகலிங்கப் பூவை நான் 1968, 1969 வரை பார்த்ததில்லை. எனக்கு மலர்களில் நாட்டமேயிருந்ததில்லை. மேற்சொன்ன ஆண்டுகளில் ஒரு சமயம் அன்னை தமக்கு நாகலிங்கப் பூ வேண்டும் எனவும், அதைக் கடலூரிலிருந்து நான் கொண்டுவரவேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். காலை 8 மணிக்கு அன்னையிடம் செல்பவர் எடுத்துச்செல்ல, நான் அதற்குமுன் பாண்டிக்கு வந்து சேரவேண்டும். அப்பொழுதெல்லாம் பஸ் இப்பொழுதுபோல இல்லை, 1 மணிக்கு 1 பஸ் போகும். கூட்டமான நேரங்களில் 2, 3 பஸ் போகும். ஒரு பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டால், மலர் அன்னைக்குப் போய் சேர்வது நிலையில்லை. அடையாளத்திற்கு எனக்கு ஒரு மலரும் கொடுத்தார் செய்தியைச் சொன்னவர். இம்மலரைத் தேடிக் கண்டுபிடிக்கப் பெரிய பாடுபட்டு எங்குமில்லை என்று செய்தி வந்தது. அதன்பின் சிவனுக்கு உரிய மலர் என்பதால் சிவன் கோயிலில் பார்க்கலாம் என்று போனபொழுது அங்கு ஒரு மரம் இருந்தது. இதன் பெயர் Prosperity என்று அப்பொழுது கேள்விப்பட்டேன். தினமும் அன்னைக்கு இம்மலரைக் கொண்டுவரும்பொழுது ஒரு நாள் இளஞ்சிவப்பு மலர் வந்தது. எடுத்துச்செல்லும் சாதகர் அது நன்றாக இல்லை, சிவப்பு மலரே வேண்டும் என்றார். சிவப்பு மலர் இல்லை, இளம் சிவப்பு மலர்தானிருக்கிறது என்பது நிலை. அன்னையிடம் விஷயம் போயிற்று, எனக்கு இளஞ்சிவப்பு நாகலிங்கமலர்தான் வேண்டும். அது தன்னலமற்ற செல்வமாகும். சிவப்பு மலர் சுயநலமான வளமாகும் என்று அன்னை கூறினார்.

அந்த நாளில் ஆசிரமத்திற்கு வர ஒரு சட்டம் உண்டு. முதலில் கட்டாயமாகக் கடிதம் எழுதி பதில் பெறவேண்டும். பல சமயங்களில் பதில் வாராது. வந்தால் வாராதே என வரும். அதனால் கடிதம் எழுதாமல் நேரடியாக வந்தால் அன்னையிடம் எவரும் செய்தி எடுத்துப் போகமாட்டார்கள். அது அன்னைக்குப் பிடிக்காத விஷயம் என்பதால், எவரும் அன்னையிடம் அதைக் கொண்டு போக மறுப்பார்கள்.

தன் மாமன் ஆசிரமத்திலிருப்பதால் ஆசிரமம் வர விரும்பிய இளைஞன் முறைப்படி ஆசிரமத்திற்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டான். கடிதத்தைப் பாராட்டிப் பதில் வந்தது. அத்துடன் உள்ளூர் ஆசிரமச் சென்டருக்கு அடிக்கடி போகும்படியும் கூறியது கடிதம். சில ஆண்டுகள் கழித்து எதுவும் எழுதாமல் நேரே 20 வயது இளைஞன் ஆசிரமத்திற்கு வந்து நின்றான். “ஏன் கடிதம் எழுதாமல் வந்தாய்?” என்று கடுமையாகப் பதில் வந்தது.

“தயவுசெய்து அன்னையிடம் கூறுங்கள். அவர் போகச் சொன்னால் நான் திரும்பப் போகிறேன்” என்றான் மாணவன்.

அன்னை அவரை இருக்கச் சொல்லி வேலையும் கொடுத்தார். மீண்டும் அவன் திரும்பப் போகவே இல்லை.

அவசரமாக வந்தால் நிராகரிக்கும் அன்னை, ஆர்வமாக வந்தால் தம் சட்டத்தை மீறி ஏற்பார். ஆன்மாவின் ஆர்வம் அன்னைக்குரியது.

அன்னை தரிசனம்

திடீரென பக்தர்கள் வீட்டில் அன்னையைப் பற்றிப் பேசுவதும், அருளின் சூழல் செறிந்து தெரிவதும் உண்டு. அன்னை ஒருவரைப் பற்றிப் பேசினால் பக்தர்கள் வாழ்வில் அது நடைபெறும். அன்னையின் தரிசனம் பெற ஒரு விண்ணப்பம் அனுப்புதல் வழக்கம். அதை, தரிசனம் விழைபவர்கள் எழுதுவதில்லை. எடுத்துப்போகும் சாதகர் எழுதுவது வழக்கம்.

அப்படி எடுத்துப் போகும்பொழுது அன்னை என்ன நிலையிருக்கிறார் என்பது பக்தரின் ஆன்மநிலையைப் பிரதிபலிக்கும். ஒரு பக்தர் 72 மணி நேரம் வேலையினூடே அன்னையை அழைத்தார். அவரை அறியாமல் ஒரு சாதகர் பக்தரின் பிறந்த தினமான 25ஆம் தேதியன்று அவர் தரிசனம் பெற, ஒன்றாம் தேதி அன்னையிடம், இவர் விண்ணப்பத்துடன் மற்றும் 10 சேர்த்து கொடுத்ததைக் கையில் வாங்காமல், சாதகர் கையிலுள்ள விண்ணப்பங்களை தள்ளிக்கொண்டுவந்து ஒன்றை மட்டும் எடுத்து கையெழுத்திட்டார். அது அன்னையின் பெயரை 72 மணிநேரமாகச் சொல்லிக் கொண்டிருந்ததன் பலனாகும்.

வடநாட்டுப் பக்தர் ஆசிரமம் வந்தார். ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்பொழுது தாம் அன்னையைத் தரிசிக்கப் போவதாகவும், சில நாள் தங்கப்போவதாகவும் தம் நண்பருடன் பேசிக்கொண்டு ரோட்டில் போனார். பின்னால் வந்த சாதகர், “நீங்கள் பேசியதை நான் கேட்டுக் கொண்டு வந்தேன். என் வீட்டுக்கு வாருங்கள். நானே விண்ணப்பத்தை எடுத்துப்போகிறேன்” என்றார். பக்தருக்கு முதலில் சந்தேகம். அடுத்த நாள் அதே சாதகர் அன்னையிடம் விண்ணப்பத்தை எடுத்துப் போனார். அன்னை நிஷ்டையிலிருந்ததால், மேஜை மீது விண்ணப்பத்தை வைத்துவிட்டு வந்துவிட்டார். பக்தர் சாப்பாட்டு அறையில் சாப்பிட்டுவிட்டு, சமாதிக்கு வந்தார். சமாதியில் தியானத்தில் உட்கார்ந்தார்.

சமாதியில் அவருக்கு ஓர் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.

  • சமாதி திறந்து, ஸ்ரீ அரவிந்தர் வெளியே வந்தார்.
  • பக்தர் தலையில் கையைவைத்து பக்தர் தியானம் கலையும்வரை ஸ்ரீ அரவிந்தர் அதை எடுக்கவில்லை.

அன்னையிடம் அனுமதி பெற்ற சாதகர் தியானத்திலிருந்து எழுவார் என பலமுறை வந்து பார்த்துவிட்டுப் போனார். பக்தர், “இதுபோன்ற சக்திவாய்ந்த தியானத்தை நான் அனுபவித்ததேயில்லை” எனச் சாதகரிடம் கூறினார்.

  • அன்னையிடம் விண்ணப்பம் வரும்பொழுது தியானத்திலிருந்ததால் பக்தருக்கு ஆன்மீக அனுபவம் தியானத்தில் கிடைத்தது.

பக்தர் மனநிலையை அன்னையும், அன்னை மனநிலையை பக்தரும் பிரதிபலிப்பது ஆன்மீக உறவாகும்.