அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 18

விபத்து

திருமணமாகி கோவாவிற்கு honeymoonக்குச் போகின்றவர்கள் அன்னைக்கு எழுதி பிரசாதம் கேட்டார்கள். இருவருக்கும் இரண்டு பிரசாதங்கள் வந்தன. தங்கள் பர்ஸில் அவற்றை வைத்துக்கொண்டு பிரயாணமானார்கள். 

பக்தர்கள் பல வகையினர்!

  • அன்னையை நினைக்க சந்தோஷப்பட்டு இடைவிடாமல் நினைப்பவர்கள். இவர்களுக்கு இந்நினைவே பாதுகாப்பு. இவர்கட்கு பாதுகாப்பு தேவையில்லை. இவர்கள் உள்ள இடத்தில் இவர்கள் மற்றவர்கட்குப் பாதுகாப்பு.
  • அன்னை பக்தரானாலும், மனம் கேளிக்கை, வேடிக்கைகளில் எளிதில் பாய்ந்து தன்நிலை இழப்பவர்கள். இவர்கட்கு protection flower பாதுகாப்பு மலர், பிளசிங் பாக்கெட் அவசியம். இருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.
  • அன்பரானாலும் ஆபத்து வந்த பிறகே அன்னையை அழைக்கும் பாங்குடையவர்கள் உண்டு. ஆபத்துச் சமயத்தில் குரல் அடி வயிற்றிலிருந்து எழும். அக்குரல் தவறாது அன்னைக்குக் கேட்கும், க்ஷணத்தில் பாதுகாப்பு வரும்.

கூட்டமான பஸ்ஸில் எட்டி கம்பியைப் பிடித்துக்கொண்டு தாவும் மனிதன் தன்னை அன்னை பக்தன் என்பதை மறந்து செயல்படுபவன். பஸ் நகர்ந்தது. தரையில் விழுந்து முன் சக்கரம், பின் சக்கரங்கட்கு இடையே அவர் தரையில் வீழ்ந்தபொழுது, “அம்மா, இதுவே என் கடைசிப் பிரார்த்தனை” என வீறிட்டலறினார். ஆச்சரியவசமாக பின்சக்கரம் தடம்புரண்டு அகன்றது. மார்புமேல் ஏறவேண்டிய சக்கரம் குதிகால் மேல் ஏறியது. மனிதன் உயிர் பிழைத்துக்கொண்டான்.

மன உணர்ச்சி தாழ்ந்திறங்கும்பொழுது விபத்து ஏற்படுகிறது என அன்னை கூறுகிறார்.

  • பஸ் நிறைய அன்பர்கள் ஆசிரமம் வரும்பொழுது டிரைவர் குடித்துவிட்டுத் தாறுமாறாக ஓட்டுவதைப் பலர் எச்சரித்ததையும் கண்டுகொள்ளாமல் வந்தனர். பஸ் புரண்டு விழுந்தது. எவருக்கும் உயிர்ச் சேதமில்லை. இது அன்பர்கள்செய்யக்கூடாதது. எனினும் அன்னையின் பாதுகாப்பு இருந்தது.
  • அன்பர் ஹைகோர்ட்டுக்குக் கேஸ் விஷயமாகப் போகும்பொழுது பஸ்ஸில் முன் சக்கரம் கழண்டு உருண்டோடியது. அன்பர் அன்னையைத் தீவிரமாக அழைத்தார். சக்கரம் கழண்டு போனால் வருவது பெரிய ஆபத்து என அவர் அறிவார். பஸ் ஓடி ஒரு மரத்தில் மோதி காயமோ, சேதமோ இல்லை, அனைவரும் தப்பினர்.

விபத்துக்கள் பலவகையின. அன்பர்கள் நெறியாக இருந்தால் விபத்துகள் அவர்கட்கு விலக்கு. எல்லோருக்கும் அன்னை பாதுகாப்பு வழங்குகிறார். விபத்துகள் பல வகையின என்பதுபோல், அவற்றிருந்து தப்புவதும் பல வகையின.

கோவா தம்பதிகள் போன பஸ் கோரமான விபத்திற்குள்ளாயிற்று. உயிர்ச்சேதம் அதிகம். காயம் படாதவரில்லை.

அன்பர்கள் இருவரும் காயமில்லாமல் தப்பினர்.

அன்னைக்குத் தந்திமூலம் செய்தியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

தந்தியைக் கண்ட ஆசிரமக் காரியதரிசி “இப்பொழுது இது சர்வ சாதாரணமாகிவிட்டது” என்றார்.

மது

பழக்கம் என்று ஏற்பட்டுவிட்டால் மாற்றுவது சிரமம். 1937இல் மதுவிலக்கு ஏற்பட்டது. 1972இல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. 1937க்குப்பின் வந்த தலைமுறைகள் ’47, ’57, ’67, ’72-இல் மதுவை அறியாதவர்கள். 72இல் கள்ளுக்கடைகள் ஆரம்பித்து பல ஊர்களில் வியாபாரமில்லாமல் மூடினர்.

  • குடிக்கும் பழக்கம், விடமுடியாது.
  • குடிக்காமலிருக்கும் பழக்கமும் மாற்ற முடியாது.

நம் வாழ்வே பழக்கங்களாலானது. குடிப்பது கெட்ட பழக்கம். படிப்பது நல்ல பழக்கம். தினமும் ஓரிரு மணி நேரம் படித்துவிட்டு தூங்கும் பழக்கமிருந்தால், படிக்காமல் தூங்கமுடியாது. படிப்பதும் பழக்கமாகும்.

கெட்டதை விடுவது சிரமம் என நாம் அறிவோம். நல்லதை விடுவது சிரமம் என அறியோம். நல்லதோ, கெட்டதோ, ஏற்பட்ட பழக்கத்தை விடுதல் சிரமம்.

அன்னைக்கும், பூரணயோகத்திற்கும் எந்த பழக்கமும் எதிரி, ஒத்து வாராது.

அன்னையை அறிந்து ஏற்றுக்கொண்டு அவருடைய ஆன்மீகப் பெருமையை உணர்ந்தவர்கள் பெற்ற அனுபவங்களில் சில,

  • கோபம் ஆரம்பத்தில் மிகுதியாகி, பிறகு குறைந்தது.
  • தோல் வியாதியால் சிரமப்பட்டவர் அவ்வியாதி தானே மறைவதைக் கண்டார்.
  • ஞாபக சக்தி அதிகமாவது.
  • அறிவுத் திறன் அதிகமாவது.
  • 15 நிமிடத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழித்த 80 வயதானவருக்கு அது அளவுகடந்து குறைந்தது.
  • புகைப்பழக்கம் மறந்து போனது.

கஸ்டம்ஸ் இலாகாவில் வேலை செய்பவர்கள் கடத்தல் பொருள்களை பிடிப்பார்கள். மது முக்கிய கடத்தல் பொருள். அதனால் அந்த இலாக்காவில் மது தாராளமாகக் கிடைக்கும். பெரும்பாலோர் அப்பழக்கம் உடையவராக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆபீசர் மது இல்லாமலிருக்க முடியாது என்பார்.

மனைவியுடன் ஆசிரமம் வந்தார். 7½ மணிக்கு தியானத்திற்கு வந்தார். மனம் எப்பொழுது வெளியே போகலாம், எந்த மதுக்கடைக்குப் போகலாம் என்று தியானத்தின்போது அவருடன் பேசிக்கொண்டிருந்தது. அவர் மனைவி அதை அறிவார். தியானம் முடிந்தவுடன் அவர் மனைவியிடம் இனி மது அருந்துவதில்லை என்றார். மனைவி அதைப் பொருட்படுத்தவில்லை.

அதன்பிறகு அவர் மதுவைத் தொடவில்லை.

ஹார்லிக்ஸ்

குழந்தை நலிந்து போகிறான் எனத் தாயார் அன்னைக்கு எழுதிய கடிதத்தின் பேரில் ஸ்ரீ அரவிந்தர் ஹார்லிக்ஸ் கொடுக்கச் சொன்னார். அந்தக் குழந்தை அதையும் சாப்பிடவில்லை.

எதுவும் முடியாத நேரம் தெய்வம் செயல்படும் என்பது இந்த குழந்தை விஷயத்தில் பலித்து அன்னை “குழந்தையை எடுத்து வா, நானே பால் புகட்டுகிறேன்” என்றார். குழந்தை தெளியும்வரை அதைத் தொடர்ந்து செய்தார்.

எதை நாம் சிரமம் எனக் கருதுகிறோமோ அதை சரியாகப் பயன்படுத்தினால் அந்நிகழ்ச்சி தெய்வத்தை அடைய உதவும் என்பது இவ்விஷயத்தில் உண்மை.

இந்தக் குழந்தைக்கு ஒரு வினோதமான எண்ணம். தினமும் தனக்கொரு புதுப் பெயரிட்டுக்கொண்டு இன்று என் பெயர் இது என சொல்வதில் அதற்கொரு பிரியம்.

நாம் பெயரிடுவதை முக்கியமாகக் கருதினாலும், ஊரில் பிரபலமான பெயரையே குழந்தைக்குச் சூட்டுகிறோம்.

ஜாதகம், நட்சத்திரப்படி நாமம் சூட்டுவது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது. குருவைக் கேட்டுப் பெயர் வைப்பது சிஷ்யர்களுக்கு வழக்கம். பாட்டனார் பெயரை பேரனுக்கு வைப்பதால் அவனுக்குப் பேரன் – பெயரைத் தாங்கி வருபவன் – என்று வழங்குகிறது.

லட்சியக் கணவர் குழந்தைக்கு விவேகானந்தன், பெண்ணுக்கு சங்கமித்திரை என்று பெயரிட்டார். மனைவி அக்குழந்தைகளை பாபு, ராணி எனக் கூப்பிட்டார்.

குரு பெயரிட்டபின், பேஷனை ஒட்டி பெயரோடு ஸ்ரீ சேர்த்து வைத்தார் ஒருவர். சைதன்யம் என்பது உன்னதமான பெயர். குரு அப்பெயரைச் சூட்டியபின் அவர் வீட்டார் “சைத்தான்” எனக் கேலி செய்தனர்.

தினமும் ஒரு பெயர் வைத்துக்கொள்ளும் குழந்தையை மற்றவர்கள் அன்னையைப் பெயர் வைக்கச் சொல் என்றனர். குழந்தை அன்னையைக் கேட்டாள். “நான் பெயரிட்டால் நீ அதை மாற்றாமலிருப்பாயா?” என்று கேட்டு அன்னை கௌரி எனப் பெயரிட்டார்.

கௌரி என்றால் அழகு எனப் பொருள். அன்னை அதற்கு அக அழகு என விளக்கம் தந்தார்.

வயதானவர்

4 ½ மணிக்கு ஆசிரம வாயில் திறக்கும்பொழுது 5, 6 பேர் உள்ளே நுழையக் காத்திருப்பார்கள். அவர்களில் ஒரு வயதானவர், நடக்கவே சிரமப்பட்டுக்கொண்டு உள்ளே நுழைவார். நீல கால்சட்டையும், தோளில் புரளும் நீண்ட முடியுடன் அவர் உள்ளே தியான மண்டபம் வந்து கதவு, ஜன்னல், படங்களைத் துடைப்பார். இந்த வயதில் இவர் இதைச் செய்யவேண்டுமா என நினைக்கத் தோன்றும்.

இவர் ஆசிரமத்தில் சேர்ந்தவுடன் அன்னை இவருக்குக் கொடுத்த வேலையிது. அன்னை வெளியில் போகும் நாட்கள் அவை. மாடியிலிருந்து அன்னை இறங்கி வரும்பொழுது – டென்னீஸ் விளையாடப் போகும்பொழுது – ஆசிரமக் கட்டிடத்தில் வேலை செய்யும் சாதகர்கள் ஓடி வந்து அன்னையைத் தரிசனம் செய்வார்கள்.

சில சமயங்களில் யாரெல்லாம் வருவது என அன்னை முன்கூட்டியே அனுமதி அளித்திருப்பது வழக்கம். அன்னைக்கு

வேலை தெய்வம்,

கடமை தெய்வம்,

ஒழுங்கு தெய்வம்.

தரிசன நாட்களில் வெளியூரில் வேலையிருந்தால் அன்னை அவர்களிடம் தரிசனம் முடித்துவிட்டுப் போகலாம் என்று கூறமாட்டார்கள். வெளியூருக்கு அனுப்பிவிடுவார்கள். அன்னை உத்தரவை ஏற்பவர்கட்கு போகும் இடத்தில் “தரிசனம்” கிடைக்கும். அன்னையின் கோட்பாடுகளை ஏற்க விரும்புவர்கட்குத் தலையாய கடமை வேலைக்கு முதலிடம் தருவது.

கொல்லையில் அறுவடையை மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருவதைவிட, அறுவடையை முக்கியமாகக் கவனிப்பவருக்கு அன்னை அறுவடையில் “தரிசனம்” தருவது வழக்கம்.

மேற்சொன்ன வயதானவர், இளைஞராக இருந்த நாளில் ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது வேலையைப் போட்டுவிட்டு தியான மண்டப மாடிப்படிக்கருகில் அன்னை வருவதை அறிந்து வந்து காத்திருந்தார்.

அன்னை இறங்கி வந்தபொழுது இவரைப் பார்த்து “ஏன் இங்கு வந்தாய்?” எனக் கேட்டார்.

“தரிசனம் பெற வந்தேன்” என சந்தோஷமாகப் பதிலுரைத்தார்.

“வேலை முக்கியம். அதை விட்டுவிட்டு இங்கு வரக்கூடாது. போய் வேலையைச் செய்” என்றார் அன்னை.

அன்னை அன்று இட்ட கட்டளையை வயதான காலத்திலும் நடக்கமுடியாதபொழுதும் இந்தச் சாதகர் நிறைவேற்ற காலை 4½ மணிக்கு ஆசிரமவாயிலில் வந்து நிற்பது வழக்கம்.

குறை கண்டுபிடித்தல்

காவியுடுத்து, தாடி முடியுடன், கமண்டலத்துடன் யோகிகள் நடமாடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு ஆசிரமம் வருபவர்கள் ஏமாற்றமடைவார்கள். எதுவும் புரிவதில்லை. Modern ashram இக்காலத்து ஆசிரமமாக இருக்கிறதே என வியப்படைவார்கள். வெறுப்படைபவரும் உண்டு.

கவர்னர் K.M. முன்ஷி ஸ்ரீ அரவிந்தருடைய மாணவர். அவர் வந்தபொழுது அன்னை லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரிசனம் செய்தபின் அவர் அவதாரச் சிறப்பை அறிந்து “அன்னை லிப்ஸ்டிக் போடாமல் காவியுடுத்தால், இந்தியா அவர் காலடியிலிருக்கும்” என்றார்.

ஒருவருடைய குறையை நாம் காணும்பொழுது நம் நோக்கில் அவர் வாழ்வைக் காண்கிறோம். அவர் நோக்கில் அவரை அறிய முயன்றால் நமக்குக் குறையாகத் தெரிவது குறையாக இருக்காது.

இங்கு வந்து தங்கி யோக வாழ்வைச் சாதகர்கள் நடத்துவதைக் கண்டவர்கள்,

“நான் இதை ஆசிரமம் என நினைத்தேன். அது தவறு, நான் போகிறேன்”,

“இவர்கள் சொல்வனவெல்லாம் நமக்கு விளங்காது. எனக்குத் தாங்கவில்லை. எனக்கு இது வேண்டாம்”,

என்பன போன்ற பல விமர்சனங்களைக் கூறியவர்கள் அநேகர். வேறு சிலர் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

எதையும் ஹாஸ்யமாக மாற்றி, கேலியாகப் பேசும் ஒருவர் ஆசிரமம் வந்தார். அவர் திறமைக்கு ஏராளமான வாய்ப்பு கிடைத்தது. வாய் ஓயாமல் கேலி செய்தார். அன்னையை தரிசிக்க அவர் அறை எதிரில் காத்திருந்தபொழுது உள்ளே போகும்வரை கேலி செய்வதை நிறுத்தவில்லை.

  • உள்ளே போய் தரிசனம் முடித்து வெளியில் வந்தபின் அவர் கேலி செய்யவில்லை.
  • அவர் பேசவுமில்லை.
  • ஊருக்குப் போய், “நான் ஏன் ஆசிரமம் வந்தேன் என இப்பொழுது புரிந்துகொண்டேன்” என எழுதினார். 

அன்னை சட்டப்படி,

  • நாம் பிறரில் உண்டு எனக் காணும் குறை நம் குறையே ஆகும்.
  • ஆசிரமம் வருவது புண்ணியம். நாம் திருவுருமாறவே இங்கு வருகிறோம். நம்மில் உள்ள குறை மாறி நிறைவாகவே இங்கு வருகிறோம்.
  • அப்பெண் – வாய் ஓயாமல் கேலியாகப் பேசியவள் – அக்குறையைப் போக்கிக்கொள்ளவே தாம் ஆசிரமம் வந்ததை உணர்ந்துவிட்டாள்.

அன்னையின் இதயம் ஆத்மாவின் உறைவிடம்

சாதகர்கள் காலமானபின் அன்னை இதயத்துள் வாசம் செய்வதாகக் கூறிய அன்னை “அங்கு ஒரு கூட்டமேயிருக்கிறது” என்று கூறுகிறார்.

யோகம் முதிர்ச்சியடையும்பொழுது தூரத்து விஷயங்கள் கண்களில் காட்சியாகத் தெரியும். அந்தராத்மா குரல் எழுப்பும். ஒரு சமயம் ஸ்ரீ அரவிந்தர் தம் அறையிலிருந்தபொழுது வேறு சில சாதகர்களுமிருந்தனர். ஒருவரை நோக்கி ஸ்ரீ அரவிந்தர் “நான் ரிஷபசந்த் என்ன செய்கிறார் அவர் வீட்டில் எனப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். ஸ்ரீ அரவிந்தருடைய பார்வை ஊடுருவிச் செல்கிறது.

பொதுவாக நாம் ஒரு விஷயத்தை அன்னையிடம் கேட்க விரும்பிச் சென்றால், அன்னையே அவ்விஷயத்தை ஆரம்பித்துப் பேசுவார். நம் மனத்திலுள்ள எண்ணங்களை அறிந்து அதற்குரிய பதில் தருவது அன்னையின் வழக்கம்.

நமக்குத் தேவை என்று ஏற்பட்டால் நாம் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்கிறோம். அன்னையுடன் மனதாலோ, நேரடியாகவோ, நமக்குத் தொடர்பிருந்தால், அத்தேவைகள் தாமே பூர்த்தியாகும்.

சூழலிலுள்ள அன்னை நம் தேவையை அறிந்து நாம் கேட்காமல் பூர்த்தி செய்வது அன்னைக்குரிய பாணி.

அடிக்கடி ஆசிரமம் வரும் பக்தர் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தியானத்தில் கலந்துகொண்டு 8 மணிக்கு வெளியே வந்தால், அவர் ஊருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸைப் பிடிக்க முடியாது எனக் கண்டார். கடைசி பஸ் 8 மணிக்குப் புறப்படும் எனில் அது 7.35, 7.50க்கு நிறைந்தாலும் புறப்பட்டுவிடும். 8.00 மணிக்குத் தியானம் முடிந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போக 8.15 ஆகும். எனவே தியானம் நடக்கும் நாட்களில் ஆசிரம விடுதிகளில் தங்க விரும்பினார். அதற்கான அனுமதியைப் பெற்றார். அடுத்த வியாழக்கிழமை வரும்பொழுது பஸ்ஸில் அன்று முதல் 9.00 மணிக்குக் கடைசி பஸ் ஒன்று புதியதாகப் போகும் என்று கேள்விப்பட்டார். ஆசிரம விடுதியில் தங்கும் அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.

ஒரு பிரபலமான இன்ஜீனியர். அவர் ஒரு அணைக்கட்டில் சீப் இன்ஜீனியராக வேலை செய்தார். தாமோதர் பள்ளத்தாக்கு அணை அது. முக்கியமான இடத்தில் அணை விரிசல் விட்டது எனத் தெரிந்து பல ஏற்பாடுகள் நடக்கும்பொழுது அவர் அன்னையிடம் கூறினார். ஓர் கல்லை அன்னை எடுத்துக் கையில் கொடுத்து “இதை விரிசல் உள்ள இடத்தில் போடவும்” என்றார். இன்ஜீனியர்கள் செய்த முயற்சி பலன் தந்தது.

அவர் மனைவி இறந்து போனார். அன்னை அவர் வீட்டிற்குப் போய் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். “நான் என் மனைவியை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்” என்றார் இன்ஜீனியர். 

அன்னை “என்னிடமில்லை. என்னுள் அவரை ஏற்கிறேன். என்னுள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். பிரபஞ்சமே என்னுள்ளே இருக்கின்றது” என்றார்.

ஆத்மாவின் அபயக்குரல் அன்னைக்குக் கேட்கும்

ஆசிரமத்தில் சேர்ந்து நெடுநாளானபின் மானேஜர் சொல்லும் கோள், செய்யும் கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் இரவெல்லாம் மனம் வெதும்பி காலை 4 மணிக்கு இந்த இடத்தைவிட்டுப் போய்விடுவது என்று முடிவு செய்த சாதகரின் கண்முன் அன்னை தோன்றி, “எனக்கு நீ வேண்டும், போகக்கூடாது” என்று தத்ரூபமாகக் காட்சியளித்ததும், கொஞ்ச நேரத்தில் மானேஜர் வந்து மன்னிப்பு கேட்டதும் வாசகர்கள் அறிந்தது. 90 வயது தாண்டி வாழ்ந்து ஆசிரமத்திலேயே தம் வாழ்நாளை அவர் முடித்துக்கொண்டார்.

வாழ்க்கையில் உள்ள அநியாயங்களும் கொடுமைகளும் அன்னையை அறிந்தவுடன் மறைந்துவிடும். யோகத்தை ஏற்றால் அவை அளவுகடந்து பெருகும். கொடுமை, அன்பின் மறுபுறம், அநியாயம், ஆண்டவனின் நியாயம் என்ற ஞானம் உதயமாவது யோகம்.

  • எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் தவறாது அன்னையின் காதில் விழும்.
  • பக்தன் ஆபத்து வந்தபொழுது ஆழ்ந்து பிரார்த்திக்கிறான்.
  • யோகி, அனுதினமும் ஆழ்ந்த பிரார்த்தனையை மேற்கொள்ளவேண்டும்.
  • பிரார்த்திக்கத் தவறினால் பிரார்த்திக்க வேண்டிய சந்தர்ப்பம் எழும்.
  • நாம் அதைத் துர்அதிர்ஷ்டம் என்கிறோம். ஸ்ரீ அரவிந்தர் அதை அதிர்ஷ்டம் என்கிறார்.