உள்ளே வேலையிருக்கின்றது – 1

எல்லா விஷயங்களிலும் பலிக்கும் பிரார்த்தனை, ஒரு விஷயத்தில் பலிக்காவிட்டால், அவ்விஷயத்தில் மனத்தில் தடை, அல்லது குறையிருக்கிறது எனலாம். அந்தத் தடை எது என்று தெரியாது. வேறு சில சமயங்களில் தடையை நாம் கடமை என நினைத்துப் பின்பற்றுவோம். நமக்குத் தெரியாதது பிறருக்கு நம்மைப் பற்றித் தெரியும். அவர்கள் நாகரீகம் கருதிச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்லும் சமயத்தில், நமக்கு அவர்கள் அநாகரீகமானவர்கள், நம் பண்பின் உயர்வு புரியவில்லை அல்லது, நம் வீட்டுப் பண்பின் நுணுக்கம் இவர்கள் அறிய முடியாது என்று தோன்றும். அவர்கள் சொல்லும்பொழுது நம் தவறு புரிவதும் உண்டு. அடுத்த நிமிஷம் மறந்து விடுவோம். நம்மைச் சூழ்ந்துள்ள அனைவரும் சரி என நினைப்பது அன்னைக்குத் தவறு என்பது படிக்கும்பொழுதுதான் தெரியும். அதை அறிந்து அப்படியே பிரமித்துப் போவோம். மனம் மாறத் தோன்றாது. பிரச்சினை அப்படியே இருக்கும், பிரார்த்தனை பலிக்காது. எதை நாம் புனிதமாக நினைக்கிறோமோ அதை அன்னை தவறு என்கிறார் என அறிந்தவுடன் தலை சுற்றும். மாறும் பேச்சே இருக்காது. ஆனால் பலன் நம் தவற்றைக் காட்டியபடி இருக்கும். நம்மைச் சுற்றி நிகழ்பவை நேரடியாகவும், சூசகமாகவும் நமக்கு நம் குறையை உணர்த்தியபடியிருக்கும், அவை நம் கண்ணில் படா.

நிலைமை எதுவானாலும், பிரார்த்தனை பலிக்காதவரை உள்ளே வேலையிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

ஆசிரமத்திற்கு லட்ச ரூபாய் காணிக்கைக் கொடுத்துவிட்டு வெளியில் போனால் நம் கடையில் வாங்கிய சரக்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதே லட்ச ரூபாய் கைவிட்டுப் போகிறது என்றால், நாம் செய்ததில் தவறு இருக்கிறதா? என நாம் யோசிப்பதில்லை. எரிச்சல் வருகிறது. இது என்ன சாமி என்று தோன்றுகிறது. காணிக்கையை மனம் கருதியபொழுது இயல்பாகக் கருதியது உண்மை. இயல்பான நினைவு காணிக்கையை பவித்ரமாக்கியது உண்மை. அதன்பின் நடந்தது நினைவுக்கு வருவதில்லை. காணிக்கை ஆசிரமம் போகும்பொழுது அதை அறிந்தவர்கள், காணிக்கை போகுமுன் பலரிடம் பெருமையாகச் சொன்னது நினைவில்லை. இப்பொழுதும் நினைவுக்கு வரவில்லை. கொடுக்கப் போகும் காணிக்கையைப் பலரும் அறியவேண்டும் என்ற கருத்து, காணிக்கையைத் தடம் புரட்டி விடுகிறது. காணிக்கை அன்னையிடம் போய்ச் சேராது. நம் பெருமைக்குக் காணிக்கைச் செலுத்திவிட்டோம். அன்னை பெருமையை அழித்துவிட்டார். காணிக்கைத் தன் வேலையைச் செய்துவிட்டது. காணிக்கை பணமில்லை, பக்தியின் சின்னம். பக்தி செலுத்துபவருக்கும் பெறுபவர்க்குமுள்ள தொடர்பு, அங்கு அடுத்தவர்க்கு வேலையில்லை. எவர் கண்ணில் பட்டாலும் காணிக்கையின் பவித்திரம் குறைந்துவிடும். இவை நம்முள்ளே உள்ள நிலை. அவற்றை மாற்றாமல் பிரார்த்தனை பலிக்காது.

தரிசனத்திலிருந்து திரும்பி வந்தால் நல்லது நடக்கும் என்பது அனுபவம். நல்லது மட்டுமே நடக்கும் என்பது சட்டம். வந்தவுடன் 2 பழம் அழுகிப் போயிருக்கிறது என்பது சரியில்லை. நிர்வாகம் வீட்டில் சரியில்லை. நம் பழக்கம் அழுகிப் போயிருக்கிறது எனப் பொருள். பக்தர்கள் வீட்டில் பொருள்கள் வீணாகக் கூடாது. அது பொருள்களை அலட்சியப்படுத்துவதாகும். அது போன்ற நிலை வீட்டிலிருக்கும்வரை மனநிலை பிரார்த்தனை பலிக்கத் தடை என்று அறிய வேண்டும். மனம் பிரார்த்தனையை நாடுவதற்கு பதிலாக, இனி பழம் அழுகாமல் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அந்த இடம் குறையாக உள்ளவரை வெளியில் வேலை இல்லை. இது பலருக்கும் தெரியும். நம் மரபில் உண்டு. இதையும் தெரியாதவர்களுண்டு. அவர்களுக்கு வேலை உள்ளே இருக்கிறது.

தரிசனச் சமயங்களில் பல மனிதர்களைக் காணலாம். நாம் அன்னையைத் தரிசிக்க வந்தாலும், மனம் மற்ற நண்பர்களையும், முக்கியஸ்தர்களையும் நாடும். அவை ஸ்தாபனத்தைச் சேர்ந்தவை.

அன்னை வேறு, ஸ்தாபனம் வேறு.

தொழிலதிபர்களாக இருப்பதால், வசதியானவர்கள் என்பதால், பிரபலமானவர் என்பதால், நெடுநாள் பக்தராதலால், சாதகர் என்பதால், அன்னையை நெருக்கமாக அறிபவர் என்பதால் மனிதர்கட்கு முக்கியத்துவம் வருகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் மனம் மனிதனை நாடினால், அது தவறு.

மனம் மாற வேண்டும்.

நான் தரிசனத்திற்குப் போனேன். ஓரு நாள் சாப்பாட்டுச் செலவை அனைத்து பக்தருக்கும் ஆகும் செலவை ஏற்றேன், வீட்டுக்கு வந்தவுடன் பெருந் தொகையைக் காணோம். பதறிப் போய் பல மணி பிரார்த்தனை செய்தேன். அன்னை அருளால் கிடைத்தது என்பதை நாம் கேள்விப்படுகிறோம். முக்கியஸ்தரை நாடக் கூடாது என அறிவுக்குப் புரிகிறது, என்றாலும் மனம் அவரை நாடுகிறது. அதை நினைத்துப் பெருமைப்படுகிறது.

அறிவுக்குப் புரிந்தால் மட்டும் போதாது, மனமும் அடங்க வேண்டும்.

மனம் அடங்கும்வரை வேலையுள்ளே இருக்கிறது.

புது வேலையை ஒப்புக்கொண்டு முதல் நாள் பாக்டரிக்குப் போனால், மெயின் கேட் பூட்டியிருக்கிறது. யாருடைய தப்பு, எப்படித் திருத்தலாம் என்பனவெல்லாம் வேறு. உனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா? அடுத்தாற்போல் வேலை செய்ய ஆர்வமிருக்கிறதா? என்பதே கேள்வி. வேலையே கசப்பு என்றால் தான் இதுபோல் நடக்கும். வேலை பாக்டரியில் இல்லை. உள்ளே மனதில் வேலையிருக்கிறது. வேலையை வெறுப்பவருக்குக் காரியம் கூடிவர வேண்டுமானால், மனம் ஆர்வமாக வேலையை நாட வேண்டும்.

நான் பெரிய பட்டம் பெற்றுள்ளேன், அடுத்தது Ph.D. தான் பாக்கி. எவரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள் எனில், மதிக்காமல் பழகுபவர்க்கு manners அழகாகப் பழகத் தெரியவில்லை என்பது உண்மை. ஓரிடத்தில் மட்டும் உனக்கு மரியாதை இல்லை என்றால், அது மரியாதை இல்லாத இடம். நீ போகும் மற்ற எல்லா இடங்களையும் நினைத்துப் பார். எல்லா இடங்களிலும் மரியாதை இருந்தால், ஓரிடத்தில் இல்லாமலிருப்பதற்கு அவர்கள் மட்டும் காரணம் எனலாம். எல்லா இடத்திலும் மரியாதை எனக்குச் சற்றுக் குறைவாகத்தானிருக்கும் என்பது உண்மையானால், மற்றவர்களை மட்டும் குறை கூறுவது பயன் தாராது.

வேலை உள்ளே இருக்கிறது.

மரியாதை பெறும் தகுதியை மனம் பெற வேண்டும்.

மனம் உயர்ந்து தூய்மையாக வேண்டும்.

வெளியில் மாற்றம் தேடுவது பலன் தாராது.

யோக பாஷையைச் சாதாரண பக்தர்கட்குக் கூற முடியாது. அதன்படி என்னை அனைவரும் மட்டமாகப் பேசுகின்றார்கள், நடத்துகிறார்கள் என்று உண்மையாக நினைத்தால், உன் மனம் பிறரை மட்டமாக நினைக்கிறது என்று பொருள். உனக்கு அது தெரியலாம், தெரியாமல் போகலாம். அதுவே உண்மை. தெரிந்தால், வேலையை அங்கு ஆரம்பிக்க வேண்டும். தெரியாவிட்டால், “எனக்கு இந்த மரியாதைதான் தகுதி” என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

நியாயம்

ஸ்ரீ அரவிந்தர் நியாயம், பூரண நியாயம் என்று இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று நாம் செய்த செயலுக்கு நியாயம் பெறுவது. அடுத்தது, நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் சேர்ந்த பொது நியாயம்.

முதல் ராங்க் வந்தேன், பிரின்சிபால் அதை மாற்றி அடுத்தவனுக்குக் கொடுத்துவிட்டார் என்றால் அது அநியாயம். படித்துப் பெற்ற மார்க்குக்குரிய நியாயம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் படித்ததற்குப் பலனுண்டு. இதைச் சொன்னவர் தமிழ் வித்துவான். அவர் பிற்காலத்தில் வைஸ் சான்ஸலரானார். ஆரம்பத்தில் செய்த காரியங்கள் நியாயம் தரவில்லை. ஆனால் எல்லாக் காரியங்களிலும் செய்த வேலைக்குப், பூரண நியாயமாகத் துணை வேந்தர் பதவி வந்தது.

  • வாழ்க்கை ஒருவருக்கு செய்த செயலில் நியாயம் வழங்குகிறது.
  • அடுத்தவருக்குப் பூரண நியாயம் வழங்க, தனித்தனிச் செயலில் நியாயம் கிடைப்பதில்லை.
  • சிறு நியாயம் இல்லாமல் பெரு நியாயம் பெறுபவர், கீழிருந்து மேலே உயருபவர்.
  • சிறு நியாயம் மட்டும் பெறுபவர், அதே நிலையிலிருப்பவர்.
  • தனிச் செயல்களில் நியாயம் பெற்றுப் பூரண நியாயம் பெறுபவர் உயர்ந்த இடத்தில் ஆரம்பித்து மேலும் உயருபவர்.
  • ஆனால் எல்லோருக்கும் எல்லா விஷயங்களிலும் வாழ்வு நியாயம் வழங்குகிறது.
  • சிறுசிறு விஷயத்தில் அநியாயத்தைக் கண்டு பொருமினால், பூரண நியாயம் வருவது தடைப்படும்.
  • சிறு விஷயத்தில் அநியாயம் பெற்றவர், உள்ளே போய் வேலையை ஏற்றுக் கொண்டால் அவருக்குப் பூரண நியாயம் உரிய காலத்தில் உண்டு.

பலருக்கு ஒருவர் செய்த பிரார்த்தனை பலிக்கும்பொழுது, அவருடைய விஷயம் ஒன்று நகராவிட்டால், வியாபாரத்தைப் பெருக்க முயன்றபொழுது வியாபாரம் சுருங்கினால்; அன்னை பக்தர்கள் ஆர்வமாக வந்து வேலையை மேற்கொண்டபொழுது திருடு போனால்; வேகமாக முன்னேறிய கம்பெனி தலைகீழாக மாறினால், மையத்தை நடத்துபவர் முக்கிய விஷயத்தில் அன்னையை நம்ப மறுத்தால்; வார்த்தை பலிக்கிறது என்று எவரைக் கருதுகிறாரோ, அவருக்கு வீட்டில் ஒருவரிடம் எதுவும் நடக்காவிட்டால்; ஸ்ரீ அரவிந்தர் ரூமில் அன்னை பவித்திரமாக காட்சியளித்த பின்னரும், மேற்கொண்ட வேலையில் பலனில்லை எனில்; அடியோடு போன முதல் இரண்டு முறை திரும்பி வந்த பிறகும் மனம் அதிருப்தி அடைகிறது எனில்; 20 வருஷமாக கம்பெனி சிறியதாக இருக்கிறதெனில்; தொழில் பெருகிய பின்னரும் மனம் முறையை ஏற்காவிட்டால்; வெளிநாட்டு வரன் வந்தும், பலன் கிடைக்கவில்லை எனில்; ஸ்ரீ அரவிந்தர் ரூமை தரிசனம் செய்தபின் இருந்த வேலை போய்விட்டதெனில்; அற்புதமாகக் குணமாக ஆரம்பித்த நோய் பாதியில் நின்றுவிட்டால்;

உள்ளே வேலை அதிகமாக இருக்கிறது

எனப் பொருள்.

ஒருவர் அடிபட்டுவிட்டார், பையன் பெயிலாகி விட்டான், பெருந்தொகை தொலைந்துவிட்டது போன்ற தவறான செய்தி வரும்பொழுது மனம் பதறுகிறது. அனைவரும் பதட்டப்படுவார்கள். சில சமயங்களில் ஒரு சிலர் அதைக் கேட்டு முகம் மலர்ந்து, சிரித்துவிடுவார்கள். அச்சிரிப்பு வயிற்றிலிருந்து எழும். அது உள்ளவர்கள் negative persons தவறானவர்கள். அவர்களை முன்னுக்கு வர அச்சிரிப்பு விடாது. அச்சிரிப்பு அடுத்த ஜென்மத்தில் தான் மாறும். அன்னையிடம் அப்படிப்பட்டவர் வந்தால் இந்த ஜென்மத்தில் positive persons ஆகத் திருந்தலாம். இவர்கட்கு அது போன்ற மாற்றம் வரும்வரை வாழ்க்கையில் எதுவும் கூடி வராது. உணர்ந்து, மாற பிரார்த்தனை செய்தால் உடனே பலன் தெரியும்.

மாறாதவரை இவர்கட்கு வேலை உள்ளே இருக்கிறது.

உள்ளே என்ன வேலை?

மனம் அடுக்கடுக்காக இருக்கிறது. ஒரு நிலையில் சுத்தம் செய்தால் அந்நிலைக்குரிய பலன் வரும். கோபத்தால் காரியங்கள் கெட்டுப் போகும் பழக்கமுள்ளவர், கோபத்தை அடக்கினால், காரியம் கெட்டுப் போவது நிற்கும். இதுவரை வெளிவந்த கோபம், இனி மனதிலிருக்கும். அது அடுத்த நிலை. மனதில் கோபம் உள்ளவரை சிறு காரியம் தடைபடாது. பெரியவை தடைபடும். மனதில் கோபம் தணிந்த பின், கோபம் ஓர் எண்ணமாக வரும். “இவனைக் கண்டால் ஏற்கனவே பொரிந்துவிடுவேன்” இப்பொழுது சரியில்லாதவன் வருகிறான் என்ற எண்ணம் எழுந்தது என்று அடுத்த நிலையில் கோபம் ஒளிந்திருக்கும். அடுத்த நிலையில் அவ்வெண்ணமும் எழாது, ஆனால் முகம் சுருங்கும். இது நிற்கும் அளவுக்கு முன்னேற்றம் வர பல வருஷங்களாகும். அதுவும் நின்றால் அவர் வந்தால் எனக்கொன்றுமில்லை என்ற நிலை எழும். இது போன்று மேலும் பல கட்டங்கள் தாண்டி,

எவரைக் கண்டால் கோபம் பீறிட்டு வந்ததோ

அவரைக் கண்டால் சந்தோஷம் வரவேண்டும்.

அதுவே உள்ளேயுள்ள வேலை. இதைப் போல் மனத்தைக் கலந்து, அறிவால் ஆராய்ந்து, தூய்மையை உற்பத்தி செய்யும் நிலைகள் அநேகம். ஒவ்வொரு முறை மனம் தன்னிச்சைப்படிப் பேசினால், அறிவு அன்னை கொள்கைகளை முன்னிருத்தி மனத்துள் வேலையை ஏற்பதே உள் வேலை.

பல்வேறு மனநிலைகளை எடுத்து அவையுள்ளவர்க்கு உள்ளே என்ன வேலை எனப் பார்ப்போம்.

  1. எரிச்சலாக இருக்கிறது, ஏதாவது படம் பார்த்தால் தேவலை போலிருக்கிறது.

சாதாரண மனிதன் வேலையை விரும்பமாட்டான். அவருள் உயர்ந்தவர் தங்கள் தொழிலில் திறமையை வளர்க்க முன்வரமாட்டார்கள். பொது அறிவை உயர்த்தமாட்டார்கள். உபயோகமாக ஒரு காரியம் செய்யத் தோன்றாது. அவர்களுள் தாழ்ந்த மனநிலையுள்ளவர் silly, shabby, shallow personalities, சிறு பிள்ளைத்தனமாக, அர்த்தமற்ற போக்குடையவர்கள். அவர்களுடைய மனநிலை இது. Serious, organised, weighty கருத்தான, முறையான, தீவிரமான மனிதராக அவர்கள் முயல்வதில்லை. அதுவே அவர்கள் செய்ய வேண்டியது, பொழுதைப் போக்க நினைக்கக் கூடாது.

  • எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். தனியாக எப்படியிருப்பது, போர் அடிக்கிறது.

இது பேச்சுத் துணையை நாடும் மனநிலை. இவர்கள் ஆபீசில் உள்ள வேலைகளில் பாக்கியுள்ளவர்களாக இருப்பார்கள். மனவளர்ச்சிக்குரிய புத்தகங்களைப் படிப்பதோ, தம் நிலையை உயர்த்தும் காரியங்களைச் செய்வதோ, பிறர் பயன்பட நடப்பதோ இவர்கட்குத் தோன்றாது. அப்படியிருந்தால் வெறுப்பாக இருக்காது.

  • குழந்தைகள் சொல் பேச்சு கேட்கிறதா?

நாம் குழந்தைகட்குச் சாப்பாடு போடுவது, பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர, அவர்களைக் கவனிப்பதோ, அவர்கள் தேவைகளைப் புரிந்து கொள்ள முயல்வதோ, அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்று கண்டு அறிய முயல்வதோ இல்லை. நாம் சொல்வதைக் குழந்தைகள் கேட்க வேண்டும் என்றால் அது அதிகாரம். அன்பெங்கேயுள்ளது? குழந்தைகளைப் புரிந்து கொள்ள முயலாமல், நமக்கு அடங்கியிருக்க வேண்டும் என்பது குழந்தை வளர்ப்பு என்ற கருத்திற்கே மாறுபட்டது. அன்பான பெற்றோர் நமக்குத் தெரியுமானால், அவர்கள் குழந்தைகள் பெற்றோர் சொல்லைத் தட்டவே தட்டா.

  • அதிகாரி என்றால் ஒரேடியாக அதிகாரம் செய்கிறார், அறையலாம் போலிருக்கிறது.

வேலையிடும் அதிகாரி, அதிகாரம் செய்யத் தேவையில்லை என்பது உண்மை. இது உலகம் ஏற்கும் பொது உண்மை. மனத்தூய்மையை நாடும் பக்தன், இதே அதிகாரியிடம் தன் வேலைகளில் குறை வைக்காமல், மனத்துள் தானறிந்த குறையில்லாமல் போனால், அவர் அதிகாரம் செய்வதில்லை என்பதைக் காணலாம்.

  • யார் யாருக்கோ என்னென்னமோ நடக்கிறது, நமக்கு ஒன்றும் வரவில்லையே.

இது போன்று பேசியவர் ஒருவரை அவர் நண்பர்கள் சூழ்ந்து வேலை செய்பவனுக்கு நடக்கிறது. ஓயாமல் வேலை செய்பவனுக்குத் தவறாமல் காரியம் கூடி விடுகிறது. அவர்களை ஓர் picnic-க்குக் கூப்பிட்டால், வேலையில்லாவிட்டால்தான் வருவார்கள். உனக்கு வேலையில் நினைவில்லை. எல்லா என்டர்டெயின்மெண்ட்டும் முடிந்தபின், வேலைக்கு நேரமிருந்தால் செய்வாய் என்று விளக்கம் அளித்தார்கள்.

வேலை செய்பவன் எதிர்பார்ப்பதில்லை, எதிர்பார்ப்பவன் வேலை செய்வதில்லை.

  • நம்மை யார் கண்ணுக்கும் தெரியலை.

பொதுவாக எல்லோருடனும் நல்லபடியாகப் பழகுபவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். சிலர் ஆபீசுக்கோ, விசேஷத்திற்கோ வந்தால் முக்கியமானவர்களிடம் மட்டும் பழகிவிட்டு, மற்றவர்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களை முக்கியமானவர்கள் கவனிப்பதில்லை. மற்றவர்களை இவர்கள் கவனிப்பதில்லை. நாம் சிலரைப் புறக்கணித்தால், உலகம் நம்மைப் புறக்கணிக்கிறது.