பூரணயோகம் சிறிய பாதை மூலம் பெரிய பலனையடைய வல்லது.
- பாதை சிறியதானால் பலன் பெரியது.
- தந்திரயோகத்தின் முடிவான பலனை முதலில் பெறக்கூடியது.
- மனிதன் தன் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்தை இறைவனின் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்திற்கு முழுவதும் அர்ப்பணிப்பது சரணாகதி.
- சரணாகதியால் அகந்தை கரைந்து ஆத்மாவாகிறது அது பிரபஞ்ச ஆத்மாவாகும்.
- அவ்வாத்மா, பிரபஞ்ச வாழ்வை அனுபவிப்பது பூரண யோகம்.
- மேலும் அப்பிரபஞ்ச ஆத்மா பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்ம ஆத்மாவாகும்.
- அதைப் பெற நாம் ஆத்மாவைச் சரணம் செய்ததைப் போல் நம் சுபாவத்தையும் தெய்வீக சுபாவத்திற்குச் சரணம் செய்ய வேண்டும்.
The Synthesis of Yoga நான்கு பகுதிகளைக் கொண்டது. கர்மயோகம் முதற் பகுதி. ஞானயோகம் இரண்டாம் பகுதி. பக்தியோகம் அடுத்தது. பூரணயோகம் முடிவானது. இதில் 25 அத்தியாயங்கள் உள்ளன. மேலே எழுதியது முதல் அத்தியாயம் “பூரணயோகத் தத்துவத்தை” விளக்குவது.
இரண்டாம் அத்தியாயம் ஞானம் – பூரணயோக ஞானம்.
நாம் எதை ஆர்வமாக ஏற்கின்றோமோ நாம் அதுவாக மாறுவோம் என்பது அடுத்த அத்தியாயம்.
அடுத்த பகுதிகள் மனமும், சுபாவமும் தூய்மைப்பட வேண்டும், அப்படித் தூய்மையடைந்தால் Perfection சிறப்படையலாம்.
Perfection பெற்றால் சமத்துவம் எழும்.
சிறப்பையெய்திய ஆத்மா சமத்துவம் பெறுவது faith நம்பிக்கையெழுவது.
நான்கு கரணங்கள் கலந்து சுமுகம் பெறுவது அவசியம்.
பூரணயோகத் தத்துவத்தை அறிந்து, ஞானத்தால் இறைவனாக ஆஸ்ரயித்து, மனமும் சுபாவமும் தூய்மையானால் – அகந்தையழிந்து, இரட்டையொழிந்து – Perfection சிறப்படையும் ஆத்மா சமத்துவம் பெறு நம்பிக்கையால் செயல்பட்டால், சக்தியை நம்மில் செயல்பட அனுமதித்தால், மனம் சத்தியஜீவிய மனமாக உயரும் என்பது இந்த 25 அத்தியாயங்களின் சுருக்கம்.
சத்தியஜீவியத்தைப் பறிய அத்தியாயங்கள் ஏழு.
- ஓர் அத்தியாயம் சத்தியஜீவியச் சுபாவத்தையும் அடுத்தது அதன் நிலைகளையும் கூறுகின்றது.
- அடுத்தது யோகியின் மனம்.
- சத்தியஜீவிய எண்ணம், எண்ணம் செயல்படும் வகை, சத்தியஜீவிய உணர்வு ஆகிய அத்தியாயங்கள் திரிகால திருஷ்டியில் முடிகின்றது. அதை சத்தியஜீவிய கால திருஷ்டி எனத் தலைப்பிட்டுள்ளார்.
இதன் சுருக்கத்தில் மனத்தின் மூன்று நிலைகளைக் கூறுகிறார். முதல் நிலை இன்று நாமுள்ள நிலை. ஜாக்கிரதா என்பது. இரண்டாம் நிலை நாம் மறந்துள்ள மனம். அதாவது “உலகத்து ஞானம் உள்ளே” என்பது. அறிய வேண்டியது அனைத்தும் அகத்துள் என்ற நிலை. உள்ளே போனால் உலகம் இருக்கிறது என்ற நிலை. திரிகால திருஷ்டி என்பது அதைக் கடந்தது. யோக முதிர்ச்சியில் முடிவாகக் கருதப்படுவது. இதுவரை திரிகால திருஷ்டி எனப்படும். பகவான் கூறும் திருஷ்டி இதுவரை உலகிலில்லாத மூன்றாம் நிலைக் காலத்திற்குரிய திருஷ்டி. இது அற்புதம். உலகம் திருவுருமாறி, தீமையழிந்த நிலையில் உள்ள திருஷ்டி. நாமறிந்த திரிகாலம் கடந்த காலத்தைப் போன்றது. அது முதல்நிலை காலத்திற்குரியது. முதல் நிலை காலத்தில் நாம் வாழ்கிறோம். இங்கு, காலம் கட்டம் கட்டமாக நகர்கிறது (successive movements). காலத்தைக் கடந்த நிலை – ரிஷியின் நிலை – அதி வேகமானது. ஆனால் முதல்நிலை காலத்தைப் போன்றது. ரிஷி நட்ட விதை உடனே மரமாவது போன்றது. அது Supramental Time Vision சத்தியஜீவிய திருஷ்டியாகாது.
- நாம் வாழும் காலம் முதல் நிலை காலம். நாம் ஓர் ஆபீசில் வேலை செய்வதை உதாரணமாகக் கூறலாம். இந்த வேலையில் பிரமோஷன் சீனியாரிட்டியால் வரும். கிளார்க், ஆபீசர், பெரிய ஆபீசர்என சர்வீஸ் பேரால் வரும்.
- காலத்தைக் கடந்த நிலை பெரிய ஆபீசராக நேரடியாக வேலையில் சேர்ந்து இலாக்காத் தலைவராவது. அது பெரியது என்றாலும் ஆபீசர் வாழ்வாகும். அரசியல் அதிகாரம் பெற்றதாகாது.
- பகவான் கூறுவது ( next plane) அடுத்த உயர்ந்த சத்தியஜீவியப் பரிணாமக் கட்டம். அது அரசியல். தொண்டன் தலைவனாகும் லோகம். இதுவரை ரிஷிகள் கண்டறியாத லோகம்.
1947 க்கு முன் நம்மவர் முனிசிபல் சேர்மனாக இருந்தனர். MLA யாக இருந்தனர். டெல்லி சட்ட சபையில் மெம்பராக இருந்தனர். மாநிலத்தில் மந்திரியாக, முதன் மந்திரியாகவும் டெல்லி சர்க்காரில் மத்திய மந்திரியாகவுமிருந்தனர். அவை வைஸ்ராய் தயவால் கிடைத்த பதவிகள். எலக்ஷன் மூலம் பெற்ற இடமானாலும், அடிமை நாட்டுத் தேர்தலில் அன்னியன் கொடுத்த சலுகை. இன்று அதே பதவிகள் சுதந்திரமான நாட்டில், நாம் நடத்தும் தேர்தலில், நாம் பெறும் பதவிகள். அதுவே பழைய மௌனம், ஞானம், திரிகால திருஷ்டிக்கும், ஸ்ரீ அரவிந்தர் தரும் மௌனம், ஞானம், திரிகால திருஷ்டிக்கும் உள்ள வித்தியாசம். உலகம் அறிந்த திரிகாலம் காலத்திற்குரியது. ஸ்ரீ அரவிந்தர் கூறும் திரிகாலம் முழுப் பிரம்மத்திற்கும், மூன்றாம்நிலை காலத்திற்கும் உரியது. ஆயிரமாண்டுமுன் உலகம் சுற்றியவருண்டு. இன்றும் உலகம் சுற்றுபவருண்டு. அதே வித்தியாசம் வாழ்வுக்கும் ஸ்ரீ அரவிந்தத்திற்கும் எல்லா இடங்களிலும் உண்டு.
மனிதனும், பிரபஞ்சமும்
மனிதன் தனித்த ஜன்மம். அவன் உலகத்தின் பகுதி. உலகம் பூமியின் பகுதி. பிரபஞ்சம் என்பது சூரிய மண்டலங்களைத் தன்னுள் பகுதியாகக் கொண்டது. ஸ்ரீ அரவிந்தம் பிரம்மம், பிரபஞ்சம்,
மனிதன் – Transcendent,Universal, Individual எனவும் கூறும் பொழுது மனத்தில் பிரபஞ்சம் என்பது பிரம்மம் அப்படி மாறியது, பிறகு பிரபஞ்சம் மனிதனாயிறு என்று கொள்கிறது. அதாவது மனிதனுள் பிரபஞ்சமும், அதனுள் பிரம்மமும் உள்ளது என்பது கொள்கை, அடிப்படை. மரபு சொல்வது வேறு. உடல், உயிர், மனம், ஆத்மாவாலான மனிதன் மரணத்தால் உடல் அழிந்து மண்ணோடு மண்ணாய் மக்கும். உயிர் ஆவியாகி உலவி ஆவியுலகத்திலிருக்கும். மனம் செய்த சிந்தனைகள் அழியா. அவை உலகத்தில் சூட்சுமமாகச் செயல்படும். ஆத்மா தவத்தால் மோட்சம் பெறும்.
ஸ்ரீ அரவிந்தம் கூறுவது: மனிதன் ஆத்மா. அதுவே பிரபஞ்சமும், பிரம்மமுமாகும். தன்னைக் கண்டு பிரபஞ்சத்தில் விரிந்து, பிரம்மமாக உயர்ந்து இவ்வுலகில், இவ்வுடலில், இதே உயிரில், இம்மனத்தில் வாழ்வது தெய்வீக வாழ்வுஎன ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.
அகந்தை Ego
சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து சிருஷ்டி ஏற்பட்ட பொழுது மனம் ஏகனான பரமாத்மாவை அநேகனாகப் பிரித்தது. இது பிரியாத பிரிவினை. பிரியாத பிரிவினையை பிரியும் பிரிவினையாக்குவது அகந்தை. மகனுக்குத் திருமணமாவதால் குடும்பம் பிரியும் அவசியமில்லை. தனிக்குடும்பம் போவதாலும், வெளிநாடு போவதாலும் பிரிய வேண்டாம். வீட்டிலேயிருந்தாலும், ஊரிலேயே இருந்தாலும் பிரியப் பிரியப்பட்டால் குடும்பம் பிரிந்துவிடும். பிரியப் பிரியப்படுவது, நான் வேறு, மற்றவர் வேறு என்ற எண்ணம் பிரிக்கும். அதுவும், அது போன்ற எண்ணங்களும், செயல்களும் அகந்தைக்குரியன. காலம் பிரிக்கும், மனம் பிரிக்கும். அவை கடுமையான – மீண்டும் சேர முடியாத – பிரிவினையன்று. அகந்தை பிரிப்பது, மீண்டும் கூடாது. அகந்தை அழியாமல் கூடாது.
சச்சிதானந்தம்
பணம் வைத்திருப்பவன் தொழிலாரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. அறிவுள்ளவன் புத்தகம் எழுதும் நிர்ப்பந்தம் உடையவனில்லை. பாடும் திறமையுள்ளவரை எவரும் பாட வேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடியாது. இது எல்லாக் கட்டங்களிலும் உண்டு. தானே பிரியப்பட்டால்தான் இது நடக்கும். சத்திலிருந்து, ஜடம்வரை, நாம் என்ன சாப்பிட வேண்டும், என்பதுவரை நிர்ப்பந்தமில்லை. நாமே உட்படுத்திக் கொள்ளாவிட்டால் கட்டாயமில்லை. பிரம்மம் சிருஷ்டிக்கும் என்ற கட்டாயமில்லை.
1) பிரம்மம் சிருஷ்டிக்க விரும்பியது.
2) அதனால் அது சத் (existence) ஆயிற்று.
3) பிரம்மத்திற்கு சிருஷ்டிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதது போல் சத்திற்குச் சித்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. சத்தாகவேயிருக்கலாம். சித்தாக மாற சத் முடிவு செய்தால், அது தன்னையறிய வேண்டும் (must become conscious). சித் என்பதிலிருந்து சிந்தனை வந்தது. தான் யார் என சத் அறிய விரும்பினால் அவ்விருப்பம் அதைச் சித்தாக மாறுகிறது. Sat is existence.It can exist without knowing what it is.When Sat wants to know what it is-to become conscious of what it is-it becomes consciousness. மூளை மூளையாக இருக்கலாம், அறிவு பெறும் கட்டாயம் அதற்கில்லை. மூளை அறிவு பெற முடிவு செய்தால் அது பெற முடியும். அது அறிய ஆரம்பித்தால் மூளை அறிவாக மாறுகிறது.
4) பிரம்மத்திற்கு சிருஷ்டிக்கும் அவசியமில்லை. தானே இச்சைப்பட்டு சத்தாயிற்று.
5) சத்திற்குச் சித்தாகும் கட்டாயமில்லை. தான் சித்தாகப் பிரியப்பட்டதால் சித்தாயிற்று. இதைச் செய்ய அது தன்னை அறிந்தது.
6) சத் என்பது ஜீவன். அதகு ஜீவியமில்லை. ஆனந்தமில்லை.
ஜீவியம் ஜீவியமானபின் தன்னை அனுபவிக்கும் அவசியமில்லை.
திருமணம் செய்து கொள்ள எவருக்கும் கட்டாயமில்லை.
ஜீவனான ஜீவியம் தன்னை அனுபவிப்பது ஆனந்தம்.
ஜீவியம் தன்னை அனுபவிக்க முடிவு செய்வது ஆனந்தத்தை நாடுவது.
ஜீவியம் அகம். ஆனந்தம் புறம்.
7) சச்சிதானந்தம் என்றால் சத், சித், ஆனந்தமாகும்.
8) இது பிரம்மத்தின் முதல் நிலை வெளிப்பாடு.
9) சத் என்பதை சித், ஆனந்தமாகப் பிரிப்பது சத்தியஜீவியம். அதைச் செய்ய வைப்பது தெய்வீக மாயை.
10) சத், சித், ஆனந்தம் – அகம் சத்தியஜீவியம் – புறம்
அகம், புறமாகும் பொழுது சத் என்பது சத், சித், ஆனந்தமாக அதன் புறமான சத்தியஜீவியத்தால் பிரிக்கப்படுவது தெய்வீக மாயையின் செயல்.
முதலாளி கம்பனியை உற்பத்தி செய்ய டைரக்டர்கள் நிறைந்த போர்டையும், ஜெனரல் மேனேஜரையும் நியமித்து கட்டடங்களும் மெஷின்களும் நிறைந்த கம்பனியை ஆரம்பிக்கிறார்.
முதலாளி – பிரம்மம்
கம்பனி – சத்
டைரக்டர்கள் – சித்
கட்டடம் – ஆனந்தம்
– சத் செயல்படுவது சித்தால், அனுபவிப்பது ஆனந்தத்தால்.
– கம்பனி செயல்படுவது டைரக்டர்களால், அவர்கள் ஆனந்தப்படுவது கம்பனி என்ற கட்டடம், மெஷின் உற்பத்தி செய்வதால்.
பிரம்மம் சிருஷ்டிக்கிறது
பிரம்மா உலகை சிருஷ்டித்தார்என நாம் அறிவோம். பிரம்மா தெய்வீக மனத்திற்குரிய கடவுள். பிரம்மா சிருஷ்டித்தார் எனில், மனம் சிருஷ்டித்ததுஎனப் பொருள்.
உலகம் தற்செயலாய் சிருஷ்டிக்கப்பட்டதுஎன விஞ்ஞானம் கூறுகிறது.
கடவுள்என ஒருவர் உலகுக்கு அப்பாலிருக்கிறார். அவர் உலகை சிருஷ்டித்தார் எனவும் கூறுகின்றனர்.
கடைசி வாதத்திகுப் பதிலாக பகவான் கேள்வி எழுப்புகிறார் – ஏன் தீமை, கொடுமையைப் படைத்தார், அப்படிப்பட்ட உள்ளம் உள்ளவரா கடவுள்?
தற்செயலாய் எழுந்ததுஎனில் உலகம் ஒரு சட்டத்திற்குட்பட்டு உள்ளதை நாம் காண்கிறோம்.
பிறந்தவன் இறக்கிறான்.
பருவம் தவறாமல் வருகிறது.
தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடுகிறது.
ஒரு முறையும் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஓடுவதில்லை,
என்ற ஆயிரம் சட்டங்கள் செயல்படும் பொழுது
தற்செயலாய் சிருஷ்டிக்கப்பட்டது என்றால்,
எப்படி இரண்டும் ஒரே சமயத்தில் செயல்படும்?
இறைவன் தானே உலகமானான் எனக் கொண்டால் (hypothesis) அகண்டம் கண்டமாயிற்று என்றாகிறது. முடிவற்ற
இறைவன் சிறு அணுவானான் என்றாகும். அனந்தம் அணுவாக மாறும். மீண்டும் அணுவிலிருந்து அனந்தம் பரிணாமத்தால் வெளி வரும். இக் கொள்கையை உண்மைஎன நிரூபித்தால்,
1) தற்செயல் என்ற கருத்தும், மீற முடியாத சட்டம் செயல்படுகிறது என்பதும் இக் கொள்கைக்கு உட்பட்டு நாம் ஏற்கும்படி அமைகிறது.
2) இதற்குரிய வாதத்தால் இக் கொள்கையை பகவான் நிரூபிக்கிறார்.*
3) இதன் முடிவு மனம் உடலைவிட முக்கியமானதுஎன முடிகிறது.
4) அந்த மனம் பிரம்மா என்ற மனமில்லை, Supermind சத்தியஜீவியம் என முடிக்கிறார்.
5) முடித்தபின் அதுவே முடிவில்லை. சச்சிதானந்தம் அதற்கும் மேலுள்ளது என்கிறார்.
6) சத்தியஜீவியம் சிருஷ்டித்ததுஎன்ற வாதம் பிரம்மம் (Absolute) சிருஷ்டித்தது என்றாகும் என்கிறார்.
Indeterminates,Cosmic determinants,Indeterminable என்பது அத்தியாயத் தலைப்பு. புரியாதபுதிர் என்பது பிரபஞ்சத்திற்குரியது. அது எதனாலும் நிர்ணயிக்க முடியாத பிரம்மத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்ற விளக்கம் தத்துவத்தின் தலை சிறந்த நெறி. இவ்வத்தியாயம் தனிக்கட்டுரையாக விளக்கி எழுதப்பட்டுள்ளது.
மேற்சொன்னது இரண்டாம் புத்தகத்தில் முதல் அத்தியாயம். இரண்டாம் புத்தகம் ஞானமும் – அஞ்ஞானமும் ஆன்மீகப் பரிணாமம் செயல்படும் வகை என்ற தலைப்பையுடையது. இதன் முதற் பகுதி ( 14 அத்தியாயங்கள்) எப்படி ஞானம் அஞ்ஞானத்தினின்று பரிணாமத்தால் வெளிவருகிறது என்பது.
_____________________________________________________________________________________ * வாதம் சிக்கலானது. அத்தியாயம் விளக்கமாகப் பேசும். இவ்விளக்கத்தை இந்த அத்தியாயத்தின் (Book II,Chapter I) விளக்கமான கட்டுரையில் காணலாம்.
அதன் 14 அத்தியாயங்களை வரிசையாகக் காண்போம். அதன்முன் நூலின் அமைப்பைப் பார்த்தால், முதல் புத்தகம் சிருஷ்டி (ஞானம் அஞ்ஞானமாவது). இரண்டாம் புத்தகத்தின் முதற் பகுதி எப்படி ஞானம் அஞ்ஞானத்திலிருந்து வெளி வருகிறது என்பது. இரண்டாம் பகுதி எப்படி அப்படி வெளி வந்த ஞானம், ஆன்மீகப் பரிணாமத்தால் ஆன்மாவாகி, ஆன்மா வளர்ந்து சத்தியஜீவியமாகிறது என்பதாகும். மேற்சொன்ன முதல் அத்தியாயம்
– ரிஷிகள், விஞ்ஞானிகள் இருவரும் நம்பும் நாத்திகவாதத்திற்குப் பதில் சொல்வதுடன்,
– விஞ்ஞானிகள் திகைப்பை, தர்க்க ரீதியாக விலக்குகிறது.
– ஆன்மா ஆதி அந்தமற்றது, அசைவற்றது, அழிவற்றது, பிறக்காதது, இறப்பில்லாதது என்பது எப்படி மனம் கண்ட ஒருதலைக் காட்சிஎனவும் எடுத்துக் கூறுகிறது.
– பிரம்மத்தின் முழுமை, காலத்தின் மூன்று நிலைகள், மௌனம், ஐக்கியம், ரூபம், சிருஷ்டி, ஆகியவற்றிகு உள்ள நிலைகள் இரண்டல்ல, மூன்றுஎன அறிவைக் கடந்த நிலையை அறிவுக்கு எட்டும்படிக் கூறுகிறார்.
– மாயையின் மூன்று நிலைகள், மாயையின் மூன்று திறன்களை பிரம்மத்தின் மூன்று நிலைகளுடைய சக்தியாக விவரித்து மாயை என்பது இல்லாததில்லை, இருப்பதிலேயே சிறந்தது, அது பிரம்மத்தின் ஜீவியம் என 8 அல்லது 10 வகைகளாக அறிவு ஞானமாக முதிரும்படிக் கூறுகிறார். ஐன்ஸ்டீனும், கோபர்னிகஸ்ஸும் விஞ்ஞானத்தில் ஏற்படுத்திய அடிப்படைப் புரட்சிகள் பெரியவை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மாவில் ஏற்படுத்தும் புரட்சி அவற்றை, சூரியமண்டலத்தின் முன் எறும்புப் புற்றாக்குகிறது.
– நூல் நம் ஆத்மா ஜீவியத்தில் ஏற்படுத்தும் புரட்சியை மனம் பரந்து விரிந்து விரும்பி மலர்ந்து ஏற்பது பக்தி. அது பலிப்பது சித்தி. இப்புரட்சியை மேற்கொள்ள முன் வருபவர்கள் மனத்தை இழந்து தோல்வியடைகின்றனர். அத்தோல்வியும் வாழ்வின் பெரு வெற்றியாகும். தோற்க மறுப்பவர் புரட்சி வீரர். தோல்வி தோற்றால் ஆத்மா மலரும்.
மலர்ந்த ஆத்மா வளரும். அது பரிணாம வளர்ச்சி. ஆன்மீகப் பரிணாமம் உலகம் கற்பனை செய்யாத கருத்து. ஆரம்பத்தில் இது புரியா விட்டாலும், மனம் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டால் நாளடைவில் நூல் புரியும். புரியவில்லை என்ற நிலை விலகி அழியும்.
இந்த நோக்கத்துடன் மற்ற முக்கியமான சிக்கல்களை அவிழ்க்கும் . வகையில் அடிப்படையான விளக்கங்களை எழுதுகிறேன்