– ஜீவன் புருஷனாக எழும்.
– இயற்கை இயல்பாகச் செயல்படுவது, தெய்வம் ஆணையிட்டு ஆள்வதாக மாறும்.
– ஞானமும், உறுதியும்; ஒழுங்கும் சுதந்திரமும் உடன் உறையும்.
– கண்டத்தினின்று அகண்டம் எழும்.
– பிரபஞ்சம் மனிதனை சிருஷ்டிக்கிறது.
– பிரம்மம் சத்தியத்தையுடையது, தேடாது.
– சுதந்திரம், சட்டமில்லை.
– அனைத்தையும் உட்கொண்ட பிரம்மம், சுயநலமில்லை.
– கருவியும் வளரும்.
– பிறப்பில் சுயஞானமுண்டு; உலகை நுணுக்கமாக அறியும்.
– சிருஷ்டியில் கட்டங்களுண்டு. திருவுருமாறாத மனிதகுலம் இருக்கும்.
– மேலும் பரிணாமம் சுமுகமாக ஞானத்தில் நடைபெறும்.
தெய்வீக வாழ்வு
1) அகத்தின் சத்தியத்தைக் கண்டு சித்திக்க வேண்டும்.
2) சத்தியஜீவியம் அந்த அகத்தின் சத்தியம். அகம் வளர்ந்து சிறப்பதால் இதையடையலாம்.
3) இயற்கை முழுமை, விழிப்பு, சக்தி, ஆனந்தம், பிரபஞ்ச வாழ்வு ஆகியவற்றைக் கண்ணுக்குத் தெரியாத வழியில் அடைய முயல்கிறது.
4) ஆன்மீக முறை அகத்திற்குரிய முறை. அது இறைவனாவது. இறைவனாகித் தானே சிருஷ்டிப்பது.
5) ஐக்கியம் சக்தி வாய்ந்து தெய்வீக வாழ்வை நிர்வகிக்கும். ஆன்மீக ஞானத்தாலும், உலக ஞானத்தாலும் அகத்தில் ஜீவன் பூரணமடைகிறது.
6) ஐக்கியம், பரஸ்பரம், சுமுகம் ஆகியவை மனத்தின் உயர்ந்த சக்திகளால் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆன்மீக ஞானத்தாலும், உலக ஞானத்தாலும் அகத்தில் ஜீவன் பூரணமடைகிறது.
7) மனம் வாழ்வைக் கடக்கிறது. ஆன்மா ஜடத்தை ஆள்கிறது.
8) சத்தியஜீவனைச் சுற்றி இயல்பான ஜீவனின் ஐக்கியம் எழும்.
9) ஞானம் சாதிக்கும், அறிவால் முடியாது.
10) மனிதன் மையமான இரகஸ்யம். ஆத்ம சுதந்திரமும், சுபாவத்தின் சிறப்பும் நிபந்தனைகள்.
11) ஆன்மா முழுவதும் வெளிவந்து திருவுருமாறுவது தவிர்க்க முடியாதது.
12) உடலும், வாழ்வும் இனி கொடுமைப்படுத்த முடியாது.
13) பிரம்மம் சித்தித்த ஜீவன் ஆன்மீகப் பிரம்மம் கரணங்களை ஆட்சி செய்வது சத்தியஜீவனாகும்.
14) இரட்டை ஜடங்கள் இருளுக்குரியன. அது முடிந்தது. அஞ்ஞானத்தின் ருசி இனியில்லை.
15) புதிய சிருஷ்டி சுயமான சிருஷ்டி. அனந்தனை அனந்தனின் ஞானரூபங்களாக சிருஷ்டிக்கிறது. முடிவற்ற ரஸா எழுகிறது. வாழ்வு அற்புதமாக மாறும். ஜீவனும் வாழ்வும் முழுமை அடைகின்றன. வாழ்வின் பரிணாமம் பிரம்மத்திற்குத் திரும்பி வருகிறது. அதன் முயற்சி முடிந்தது.
முடிவுரை
The Life Divineஇல் உள்ள முக்கிய கருத்துகளை பகவான் கூறும் புதிய முக்கிய அம்சம் புலப்படும்படி இதுவரை கட்டுரையை எழுதினேன். வாசகர்கள் அன்பர்கள். அன்னையைப் பற்றி அமுதசுரபி, அன்னை தரிசனம் மூலமாகக் கேள்விப்பட்டவர்கள் அன்பர்களானார்கள். தமிழ் மக்கள் அன்னயை அறிந்தனர். அறிந்தவர் ஏற்றனர். அதன் பலன்,
- இதுவரை பலிக்காத பிரார்த்தனை பலித்தது.
- அன்னை ஜீவியம் சூழலாக அவர் வாழ்வைத் தழுவியது.
அன்னையை அறிவது ஆயிரம் கட்டங்கள், குறைந்தபட்சம் நூறு எனலாம். இது அவற்றுள் முதற் கட்டம். அடுத்த கட்டம் வர மனம் மாற வேண்டும் என்று அறிபவர் மனம் மாற முடியாமல் தவிக்கின்றனர். தாமுள்ள நிலையில் அன்னையை ஏற்றது முதலில் எனில், நம் நிலையை அன்னைக்கேற்றவாறு மாற்றி அன்னையை
ஏற்பது அடுத்தது. இது இரண்டாம் நிலை. அதனால் மனித வாழ்வு எல்லையைக் கடந்து தெய்வீக வாழ்வாக மாறும்நிலை ஏற்பட்டது. முடிவு மிக உயர்ந்தது, தெய்வங்களைக் கடந்தது. அதை 100ஆம் நிலை எனலாம். அன்னையின் வரலாறு, கோட்பாடுகளை அறிந்தவர், அவர் வாழ்வில் பரிச்சயமுள்ளவர் இக் கட்டுரையைப் படித்து, ஊன்றிப் படிப்பதால் புரிவதாகக் கருதினால், மனமாற்றம் ஏற்பட்டால் பெரும்பலனைப் பெறுவர். அப்பெரும்பலன் உள்ள நிலைகள் பல.
1) சத்தியஜீவியத்தில் அது ascent ஆக அல்லது ஆரம்ப descent ஆகத் தெரியும். Ascent என்பது சத்தியஜீவியத்தை எட்டித் தொடுவது. Descent என்பது தொட்டபின் சத்தியஜீவியம் அதனிடத்திலிருந்து நகர்ந்து நம்மை நோக்கி வருவது. இதை நாம் யோகசித்தியாகப் புரிந்துகொள்ளக்கூடாது. நாம் இன்றுள்ள நிலைக்குரிய சத்தியஜீவிய அம்சமாக அறிய வேண்டும். எந்த நிலையிலும் எல்லா நிலைகளும் ஓரளவு உண்டு என்பது தத்துவம். உதாரணமாக கல் ஜடம். அதற்கு அறிவில்லை என நாம் அறிவோம். தத்துவரீதியாக கல்லுக்கும் அறிவுண்டு. ஒரு சிறுவன் விஷமமாக ஆற்றங்கரையில் நாம் உட்கார்ந்திருக்கும் பொழுது ஒரு கல்லை எடுத்து பின்புறமாக நம் முதுகை நோக்கி அடித்தால் அக்கல் அவன் கைதவறி நம்மீது படவில்லை என்றால், 1 வாரம் முன் நாம் அதே இடத்தில் அதே கல்லை எடுத்து அன்புடன் விளையாடியதால் அக்கல் நன்றியறிதலால் நம் மீது பட மறுக்கிறது என்பது தத்துவ விளக்கம். கல்லுக்கும் அறிவுண்டு. அது இப்படிச் செயல்படுகிறது. அதேபோல் சத்திய ஜீவியம் நாமுள்ள நிலையில் இதுபோல் செயல்படுகிறதுஎன அறிய வேண்டும். இதன் முக்கிய vibration சுபாவம் சுமுகம்.
- படிப்பதால் சத்தியஜீவிய சுமுகம் நம்முள் சிறப்பாகச் செயல்படும். பரம எதிரியானவர் சிரித்த முகமாகப் பேசுவார். இச் சுமுகம் ஓரளவு தெரியும்.
2) சத்தியஜீவியத்திற்கு அடுத்தது தெய்வீக மனம் (Overmind). இது கடவுள்கள் வாழும் லோகம். இந்த லோகத்திற்கு ஞானம் உண்டு. அத்துடன் உறையும் அஞ்ஞானமும் ஓரளவுண்டு. இருந்தாலும் அஞ்ஞானத்தால் சிரமமில்லாமல் ஞானம் செயல்படும் திறன் உண்டு. இக்கட்டுரையைப் படிப்பதால் தெய்வீக மனத்தின் திறனும் நமக்குச் சிறிதளவு வரும். நடைமுறையில் நமக்குத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் உறவினர், உடலின் வேலை செய்பவர் நமக்கு வந்த இத்திறனால் அவர்கள் தொந்தரவு பலிக்கவில்லைஎனக் காண்பர்.
3) அடுத்த நிலை யோகியின் மனம். இது நேரடியாக விஷயத்தை The Life Divine சாரத்தை இக்கட்டுரை தருவதால், intution நேரடி ஞானமும் நமக்கு மின்னல்போல் தோன்றும். M.A. படித்து 8 வருஷம் வேலையில்லாமல் இப்பொழுது ரூ.4000/-த்திற்கு வேலை செய்பவர் இதைப் படித்தால் intuitive mind யோகியின் மனம் செயல்பட்டு அவர் மனத்தில் intution மின்னலாகத் தோன்றும். அவர் மனம் வேலையிலிருப்பதால் அவருக்குத் தகுந்த வேலை அமெரிக்காவில் மாதச் சம்பளம் ரூபாய் 1 லட்சத்திற்கு காத்திருப்பது சூழல் மூலம் அவர் கண்ணில் பட்டு வேலை பெற்று அமெரிக்கா செல்வார்.
4) அடுத்தது ஞானதிருஷ்டியுள்ள ரிஷி மனம். இக்கட்டுரையைப் படிப்பவருக்கு ஞான திருஷ்டி ஆன்மீகமாக இருக்காது. IAS பரீட்சை 1962இல் எழுதியவர் கண்முன் 8 கேள்விகள் தோன்றின. அவை இரண்டு நாள் கழித்து பரீட்சையில் வந்தன. அதன் சூட்சுமமறிந்து அவர் தயாரானதால் IAS இல் அந்த பேப்பரில் முதலாக வந்தார்.
5) முனிவர் மனம் மௌனம் நிறைந்தது அடுத்த நிலை. பல நாள் யோசனை செய்து புரியாதவை யோசனையில்லாமல் – மௌனத்தில் – இப்பொழுது புரியும்.
6) மனித மனம், கட்டுரை முகத்தைப் பிரகாசமாக்கும். அறிவு தீட்சண்யம் பெற்றது தெரியும்.
7) உயிர் அடுத்தது. உடல் முடிவானது. உயிர் சந்தோஷமாக இருக்கும். உடலில் உள்ள வியாதி போய், ஆரோக்கியம் பெருகும்.
இவை பெரிய பேறுகள் என்றாலும் மனதைத் தொடா. ஸ்ரீ அரவிந்தத்தின் மகிமையை நம் மனத்திற்கு உணர்த்தா. அது பிரமோஷன், எலக்ஷன் வெற்றி, சொத்து, பணம், பரிசு, பதவி இவற்றில் வெளிப்பட்டால்தான் தெரியும். The Life Divine பகவானுடைய Magnum Opus, பெரு நூல். அதன் சாரம் மனதில் பதிவதால் செல்வம் பெருகும். அது அனைவருக்கும் புரியும். செல்வம் என்பது மனத்தின் திறமை. குணத்தின் சிறப்பு. இந்நூலில் 30 பெரிய சிக்கல்களும் 770 பெரிய கருத்துகளும் மொத்தமாக 1452 இதர இனிய கருத்துகளும் உண்டு. முக்கியமானவை அறிவுக்குப் புரியுமாறு அவற்றுள் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளதால் அது புரிந்தால் குணத்தில் அக்குறை நீங்கி முடிச்சு அவிழும். அதனால் செல்வம் பெருகும். அதன் அளவுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் உண்டு. அமெரிக்காவிலும் இன்று 1 மில்லியன் டாலர் பணம் பெரியது. அது குறைந்தபட்சம். அதிகபட்சம் 100 மடங்கு. இந்நூல் இக் கட்டுரையால் புரியும். கட்டுரையை நிதானமாகப் படித்து மனம் சிறந்தால் 1 முதல் 100 வரை எந்தக் கட்டத்திலும் இச்செல்வம் பலிக்கும். எந்த அளவு பலிக்கும் என்பது படிப்பவர் Personality பர்சனாலிட்டியைப் பொருத்தது. பொதுவாக இந்நூல் போன்ற நூல்களை Scriptures படிப்பவர் சத்தியசீலர்களாகவும், நல்ல மனமுடையவர்களாகவுமிருப்பார்கள். நிபந்தனை என்றால் அவையிரண்டுமே நிபந்தனைகள்.
- சொல், எண்ணம், உணர்ச்சி, செயல், ஜீவியம் தூய்மையான சத்தியத்தால் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். எளிய பாஷையில் ஒரு பொய் சொல்லக் கூடாது.
- சொல், எண்ணம், உணர்ச்சி, செயல், ஜீவியம் Goodness நல்லெண்ணத்தால் மட்டும் நிரம்ப வேண்டும். கெட்ட எண்ணம் அறவே கூடாது.
என் கட்டுரைகளில் போர் முதலியார், வால்டர் என்ற அமெரிக்கர், 12,000 மார்க்கட் விலையுள்ள நிலத்தை 27,000 ரூபாய்க்கு 10 வருஷமாக விற்க முடியாமல் 81,000க்கு விற்றவர் நிகழ்ச்சிகளை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். 30 ஆண்டு வருமானம் முதலியாருக்கு ஒரு ஆண்டில் வந்தது. பெற்றுக் கொடுத்த அன்பரை தூஷித்துப் பேசினார் முதலியார். 1 கோடி வியாபாரம் 800 கோடியான பொழுது வால்டர் காணிக்கை கொடுக்க மறுத்தார். 81,000 ரூபாய்க்கு நிலத்தை விற்றவர் உதவிய அன்பர் மனம் நோகப் பேசினார். இவை மனிதச் சுபாவம். உதவியவருக்கு உபத்திரவம் செய்வது. இந்தச் சுபாவம் அந்த அருளைத் தடுக்கும். நன்றியறிதல் பொருத்தமான பரிகாரம். இம்மூவரும் அன்பர்களில்லை. பக்தியுள்ள குருக்கள் மகள்கள் திருமணம் ஆச்சரியமாக நிறைவேறியது. லாட்டரி பரிசைக் கையால் தொட மாட்டேன் என்ற சாஸ்திரி போன்றவர் மனம் தூய்மையானது. அப்படிப்பட்டவருக்கு உடனே பலிக்கும்.
ஆன்மீகம், சத்தியஜீவியம், சரணாகதி, திருவுருமாற்றம் ஆகியவை உயர்ந்த இலட்சியச் சிகரங்கள். இது போன்ற உன்னத குறிக்கோள்களை பணம், செல்வம் போன்ற லௌகீக முறைகளால் அடைய முயல்வது அறிவுக்குப் பொருந்துமா என்பது கேள்வி. இவை உன்னதமான யோக லட்சியங்கள். செல்வம் யோக வாழ்வில் யோக இலட்சியம். உலகம் புறக்கணிப்பது செல்வமில்லை. செல்வம் மகாலட்சுமி. உலகம் செல்வத்தைப் புறக்கணிக்கவில்லை. உலகம் புறக்கணிப்பது தவறான முறையில் பெற்ற செல்வம். துறவி செல்வத்தைப் புறக்கணிக்கிறான். நமது இலட்சியம் துறவறமன்று, மோட்சமன்று. மோட்சம்பெற செல்வம் புறக்கணிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை நான் எழுப்பவில்லை. வேண்டாம் என்பது உண்மை. சத்தியஜீவியத்தையடைய செல்வம் இன்றியமையாத கருவி என்பது பகவான் வாக்கு.
- செல்வம் ஆன்மீகமயமானது.
- தவறு செல்வத்திலில்லை.
- செல்வத்தை ஈட்டும் மனம் தவறாக இருக்கலாம். அது தவறு.
- நல்ல முறையில் ஈட்டிய செல்வம் ஆன்மீக இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் கருவி.
மேற்கூறிய காரணங்களால் பலன் பணமாக வரும்என நான் கூறினேன். இது அனைவருக்கும் புரியும் பாஷை என்பதால் நான் அதை மேற்கொண்டேன்.
1920இல் எழுதி முடித்த The Life Divine 1940 இல்தான் முதலில் புத்தகமாக வெளிவந்தது. பகவானுடைய கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் அன்னை இரு எண்ணங்களைக் கைக்கொண்டார். அவையிரண்டும் நேர்எதிரானவை. இக்– கொள்கைகள் பரப்பக் கூடியவையன்று. அடுத்தது இவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறுவது நல்லது. அர்த்தமற்றவர் பலர் செய்த முயற்சிகளை அன்னை விரும்பவில்லை. பல ஆண்டுகளாக சத்பிரேம் என்பவரை The Adventure of Consciousness என்ற நூலை எழுதத் தூண்டினார். பல ஆயிரக்கணக்கான மேல்நாட்டார் ஆசிரமம்வர உதவிய நூல் அது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. செய்பவரின் நோக்கம் முக்கியமானது. ஆதரவு சேர்க்க விரும்புவது நல்ல நோக்கமன்று. அது பிரச்சாரத்திற்குரியது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது. கடுமையான கருத்துகளை எளிமையாக எடுத்துக் கூறும் அவசியத்தை அன்னை உணர்ந்து மேற்கூறிய நூலை எழுதத் தூண்டினார்.
- சிக்கலான கருத்தை, சிக்கலின்றிக் கூறுவது நல்ல முயற்சி.
- ஆர்வமுள்ள இதயங்களை அணுகும் எண்ணம் உயர்ந்தது.
இவ்விரு நோக்கங்களும் பூர்த்தியாகும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை என்பதால், இக் கட்டுரை அன்னையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்.
நாம் காலத்தில் வாழ்கிறோம். ரிஷி காலத்தைக் கடந்து வாழ்கிறார். சத்தியஜீவிய வாழ்வு இவையிரண்டும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. இன்று அது உலகிலில்லை. உலகிலில்லாத ஒரு லோகத்தை உலகிலுள்ள மக்களுக்கு உணர்த்தும் எழுத்து உண்டா? அப்படி ஒரு எழுத்திருந்தால், அது The Life Divine ஐ விளக்கும். The Life Divine அப்படி எழுதப்பட்டது. இறைவனின் லீலை இப்புதிய லோகத்திலிருப்பதாலும், அதற்குரிய கருவி மனிதனிடம்
இல்லை என்பதாலும் ரிஷிகள் Process of Creation சிருஷ்டி ஏற்பட்ட வகையை அறிய முடியவில்லை. பகவான் 1910இல் அந்த லோகத்தை நாராயண தரிசனமாகக் கண்டார். 1950 இல் உடலை விட்டு நீங்கி சூட்சும லோகத்தில் செய்த தவப்பயனால் 1956 இல் அந்த லோகத்தை பூமிக்குக் கொண்டு வந்தார். அதனால் சிறிதளவு நம் முயற்சி பலன் தரும் என்று நான் இக் கட்டுரையை உலகம் – மோட்சம் – ஸ்ரீ அரவிந்தம் எழுத முற்பட்டேன். இதன் சாரம்
அவனே ஆட்டம், அவனே ஆடுபவன், அவனே அரங்கம்
என்பது. இக்கருத்தை சிறிதளவாவது நாம் நம் அனுபவத்தில் காண முடியுமா? அப்படிக் கண்டால் எழுத்தால் விளக்க முடியுமா? வரலாறு, இலக்கியம் நமக்குத் துணை செய்யுமா? என்று கருதிய பொழுது தோன்றியவறை இக் கட்டுரை கூறுகின்றது.
ஒரு மனிதன் ஒரு குடும்பத்தை ஸ்தாபிக்கிறான். கம்பனி, பள்ளி, கல்லூரி போன்ற ஸ்தாபனத்தை நிறுவுகிறான். அந்த ஸ்தாபனத்திற்கு அவனே சிருஷ்டிகர்த்தா. அந்த ஸ்தாபனம் அவனுடைய அரங்கம். அது செயல்படுவது அவன் செயல் எனினும் அதுவும் அவனே. அவனே ஸ்தாபன நிர்வாகம், அவனே அதை நிறுவியவன், அவனே அந்த ஸ்தாபனம் என்பது ஓரளவு இக்கொள்கைகளை விளக்கும். இக்கருத்தை மனம் அறியும், உயிர் உணரும், உடல் செயல்படுத்தும். சிறிதளவு உணர முடிந்தாலும், மயிரிழை செயல்படுத்த முடிந்தாலும் இந்த ஞானம் நம் வாழ்விலிருந்து அஞ்ஞானத்தை அகற்றும். அதாவது தோல்வி குறையும். குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை இதைச் செயல்படுத்த முடிந்தால் அச்சோதனை வாழ்விலிருந்து இச்சக்தி தோல்வியை விலக்கவல்லதுஎனக் காட்டும். காலை நேரங்களில் செல்போனில் நம்பர் கிடைக்க 5 அல்லது 6 முறை அல்லது 10 முறை முயல வேண்டும். ஒரு குறிப்பிட்ட நெம்பர் தேவை எனில் அந்த நம்பரைக் கூப்பிடுமுன் மேற்கூறிய தத்துவத்தை இச்செயலில் உணர முயன்றால், அதாவது அதை நினைத்து நெம்பரைக் கூப்பிட்டால் நம்பர் கிடைப்பதைக் காணலாம். சிறிய செயலுக்கும் பெரிய செயலுக்கும் இச்சக்தியைப் பொருத்தவரை வித்தியாசமில்லை.
டெலிபோனுக்கு அடுத்த கட்டிட நம்பருக்கும், அடுத்த நாட்டு நம்பருக்கும் வித்தியாசமில்லையல்லவா? அதுபோல் பெரிய காரியம் இதற்குப் பெரியதன்று. அதையும் சோதனை செய்து பார்க்கலாம். எந்தச் சோதனை செய்தாலும் ஒரு முறைக்கு மேல் செய்யக் கூடாது. எலக்ஷனில் MLA, MP பதவிகட்கு நிற்பவர் “நானே எலக்ஷன், நானே இப்பதவி, நானே இவற்றை உற்பத்தி செய்தவன்” என்று பிரம்ம ஞானத்தை அறிவாலும், உணர்வாலும், செயலாலும் ஓரளவு அனுபவிக்க முடியுமானால் அவர் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணம் பொதுவாக மேலிட்டபடி ஒருவர் தம் வாழ்வை அமைத்துக் கொண்டால் சூழலினின்று தோல்வி அகலும், வெற்றி நிலைபெறும்.
வேதம் ஞான காண்டம், கர்ம காண்டங்களையுடையது. ஞானமும், கர்மமும் பிரிந்தன. ஞானத்தை ரிஷியும், கர்மத்தை சாஸ்திரியும் ஏற்றனர். ஐக்கியம் சக்தி வாய்ந்தது. பிரிவினை பலஹீனமானது. இப்பலவீனம் சாஸ்திரிகளை ஏழ்மைக்கு உட்படுத்தியது. அதனால் “ஏழைப் பிராமணன்” என்ற பதம் உயிர் பெற்றது. ஏழ்மையை மீறி ஆயிரமாயிரமாண்டுகளாக அந்தணர் கர்மகாண்டப் பயிற்சியை கைவிட மறுத்தனர். இது இமாலய உறுதி. இது இந்திய நாட்டு ஆன்மீகம் பெற்ற கிரீடம். ஞானமும், கர்மமும் இணைவது ஸ்ரீ அரவிந்தம். அங்கு ஏழ்மையோ, தோல்வியோ இல்லை. பகவானுடைய தத்துவங்களில் தலைகீழ் மாற்றம் பெரியது. ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் போகும் பொழுது செயல் மாறும். அதுவும் தலைகீழ் மாறும். அம்மாற்றம் பெரிய சக்தியை மனிதனுக்கு அளிக்கும். விவசாயம், பாக்டரி உற்பத்தி, வியாபாரம், நகரவாழ்வு, பணம், கல்வி ஆகியவற்றில் நாம் அம்மாற்றங்களைக் காண்கிறோம்.