அன்பர்கள் வழிபாடு – 1

ஒரு முறை அன்னையை எப்படி வழிபடுதல் சிறந்தது என்ற பிரச்சினை பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டபொழுது ஒரு பிரஞ்சுக்காரர் அன்னையிடம் இது பற்றி குறிப்பிட்டார். “Why do you want to worship the divine? Why don’t you become the divine?” இறைவனாகவே நாம் மாற முடியும் எனும்பொழுது, ஏன் நாம் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை அன்னை வெளியிட்டார். அன்னை நாம் அவரிடம் பிரார்த்திகாமலே அளித்துள்ள தெய்வீக வரப்பிரசாதம் அது: சாதகன் யோகத்தால் இறைவனாக மாறலாம்; அன்னையாகவும் மாறலாம்.

இந்த யோகச் சிகரத்திருந்து படிப்படியாக 100 நிலைகளில் உள்ள சித்திகளை அன்னை சாதகனுக்கு அளிக்க விரும்புகிறார். அவற்றுள் கடைசி நிலையில் உள்ளதுகூட மனிதனுக்கு மிகப் பெரியதாகத் தோன்றக்கூடியது. அவையெல்லாம் யோகத்திற்கே தம்மைச் சர்வபரித்தியாகமாக அர்ப்பணித்துக்கொண்ட சாதகர்களைச் சேர்ந்த இலட்சியங்கள்.

ஒரு வருஷமாக மாதம்தோறும் அன்னையின் சூழல் (atmosphere) திரண்டு தியானம் செய்து வரும் அன்பர்கள் அதைப் பொருத்தவரை சிறப்பானவர்களே. அவர்கள் யோக இலட்சியத்தைத் தேடும் சாதகர்கள் இல்லை. ஆனால், அன்னை மீதும், பகவான் ஸ்ரீ அரவிந்தரிடமும் தீராத பக்தியும், குறைவில்லாத நம்பிக்கையும் உடையவர்கள். இவர்களுடைய வீடுகளில், அல்லது பூஜை அறையில்

அன்னையின் சமாதிச் சூழல் ஓரளவுக்குத் தெரியக்கூடும். அன்னாருக்குப் பயன்படக்கூடியவகையில் அன்னையின் முறைகளில் ஒன்றையோ, சிலவற்றையோ, பல முறைகளையோ எடுத்து விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று கருதி இக்கட்டுரையை எழுதுகிறேன்.

பக்தியும், நம்பிக்கையுமே அன்பர் வழிபாட்டின் அடிப்படை. அவை உயர்ந்தவை, சிறப்பானவை, அதுவே போதுமான அஸ்திவாரம். அவையின்றி வழிபாடில்லை; பலன் இல்லை. அவை இருப்பதே வழிபாடுதான்; அதற்குரிய பலன் தானே உண்டு. இதுவே பொதுவான உண்மை.

பொதுவான உண்மைக்கும் மேலாக, குறிப்பான உண்மை என்றும் ஒன்றுண்டு. புத்திசாத்தனம் இல்லாமல் படிப்பு வாராது, புத்திசாலித்தனம் உள்ளவனுக்குப் படிப்பு தானே வரும் என்பது பொதுவான உண்மையானால், அதற்கும் மேலாகக் குறிப்பான உண்மையும் உண்டு. முயற்சி, புத்திசாலித்தனத்தைப் பிரகாசிக்கச் செய்யும் என்பதே அந்தக் குறிப்பான உண்மை. புத்திசாலித்தனம் போதுமான அளவிருந்தும் அதன் முழுப்பலனை எல்லோரும் அடைவதில்லை. பலன், முயற்சியின் அளவைப் பொருத்தது என்பது நாம் அறிந்தது.

அதேபோல் பக்தியும். நம்பிக்கையும் உள்ள அன்பர்கள் தங்கள் சிறப்புக்குரிய முழுப்பலனையும் அடைய உதவும் முறைகள் பல உண்டு. அவற்றை எல்லோரும் அறிவார்கள். அம்முறைகளால் முழுப்பயன் அடைய நாம் செய்யக்கூடியது என்ன என்பதையே இங்கு நான் எடுத்துக்கொள்கிறேன்.

ஈடுபாடும், பக்தியும் உள்ளவர்கள் பலர் பின்வருமாறு சொல்ல நாம் கேள்விப்படுகிறோம்:

“நம்பிக்கைக்கு எல்லாம் குறைவில்லை. நடைமுறையில் மனம்

பல வழிகளில் சென்று, கடைசியில் எதுவும் முடியாமற் போகிறது”.

“எனக்கு எப்பொழுதும் அன்னை நினைவு குறைவது இல்லை. இருந்தாலும் தரிசனத்தன்று உள்ள விசேஷம் மற்ற நாட்களில் இருப்பதில்லை”.

“நானும் பல முறைகளைக் கடைப்பிடிக்கத் தீவிரமாக ஆரம்பித்துள்ளேன். எல்லாம் இரண்டு, மூன்று நாள்கள்தாம். பிறகு பழையபடி இறங்கிவிடுகின்றன”.

“ஆசிரமத்தில் இருக்கும்போது இருப்பதைப்போல், தினமும் எதிர்பார்த்தால் எப்படி முடியும்?”

“எனக்கு ஏதாவது ஒரு விஷயம் என்றால்தான் தீவிர பக்தி வரும்”.

இப்படிப்பட்ட எண்ணங்கள் இயல்பானவை. எல்லா விஷயங்களைப்போல, பக்திக்கும் ஏற்றம், இறக்கம் உண்டு என்பது உண்மைதான். இருந்தாலும் நமக்குள்ள பக்திக்கு உரிய முழுப்பலனையும் நாம் பெற வழியுண்டு என்பதை விளக்க நான் சொல்லும் ஒரே உதாரணம் பரீட்சைக்குப் படிக்கும் மாணவனே. கல்லூரியில் படிக்கும் மாணவன் ஆராய்ச்சி நிபுணனாகலாம் (research scholar), சிறந்த சிந்தனையாளனாக (original scholar) மலரலாம். தன் பாடத்தில் புதிய கருத்துகளைக் காணலாம் (can contribute to his subject), மேதையாகவும் வளரலாம். இவையெல்லாம் உயர்ந்த நிலைகள். அவற்றைத் தவிர்த்து பரீட்சை பாஸ் செய்து பட்டம் பெறுவதே குறிக்கோள் என்று கொண்டால் தன் அறிவின் திறனுக்குரிய அதிகபட்ச மார்க்குகள் வாங்குவது எப்படி? என்பதே என் விசாரம். I class வாங்கக்கூடிய மாணவன் வெறும் பாஸ் மட்டும் செய்தால் அது சரியில்லை, II class- ஐ தவறவிட்டாலும் அது முறையில்லை. State First வரக்கூடியவன் I class ஆகவோ, college first ஆகவோ வந்தாலும் சரியில்லை. பாஸ் செய்யக்கூடியவன் பெயிலாவதும் சரியில்லை. அதாவது ஒவ்வொரு

மாணவனும் தன் தன் திறமைக்குரிய அதிகபட்ச மார்க்குகளை வாங்க ஒரு முறை உண்டானால், அவன் அந்த முறையால் பயன் அடைய வேண்டும்.

அதுபோல நம் பக்தியின் திறனுக்குரிய அதிகபட்ச வரப்பிரசாதத்தை எப்படிப் பெறலாம் என்பதற்குச் சில யோசனைகளையே நான் சொல்லுகிறேன். அவற்றை வரிசைப்படுத்தி முதலில் சொல்லிவிட்டு பிறகு விளக்கங்களைத் தனித்தனியாகவும், சேர்த்தும் சொல்லுகிறேன்.

  1. நம் பக்தியின் திறனுக்குரிய அன்னையின் அருள் பிரசாதங்கள் எவை என்பதை ஓரளவு தெளிவாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது அவசியம். இது தெரிந்துவிட்டால் அளவுக்கு மீறிய செயலைத் தவிர்க்கலாம். நமக்கு உரியதை விட்டுப் போகாமல் காப்பாற்றலாம்.
  2. அன்னையின் முறைகளில் நம்மால் தொடர்ந்து ஏற்றுப் பயிலக்கூடியவை எத்தனை என்பதை உத்தேசமாகவோ, அனுபவத்திலோ நிர்ணயித்துக்கொள்ளுதல் நலம்.
  3. நமக்குரிய முறைகள் எவை (to what type I belong & what methods are best suited for me) என தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. தினமும் எவ்வளவு நேரம் நிச்சயமாகத் தியானத்திற்கு ஒதுக்க முடியும் என்பதை நிதானம் செய்து தீர்மானிக்க வேண்டும். அந்தக் கால அளவு (duration) குறிப்பிட்ட நேரத்திலேயே இருக்க முடியுமானால் அது சிறந்தது.
  5. அன்னையின் எந்த முறையும் பக்குவமானவர்களுக்கே உரியது. அதனால் நமக்குப் பக்குவம் எந்த அளவுக்கு இருக்கின்றதோ, அதே அளவுக்குரிய முறைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் (சில்லறையான மனப்பான்மை, சிறிய புத்தி,

விளையாட்டு புத்தி, நினைத்து நினைத்துச் செயல்படுதல், எடுத்ததற்கெல்லாம் மனம் உடைந்து போவது போன்ற குணங்களுக்கும் அன்னை முறைகளுக்கும் ஒத்து வாராது. அப்படிப்பட்டவர்கள் இம்முறைகளைக் கையாள விரும்பினால் தங்கள் குண விசேஷங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்).

  • எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், எந்த அளவில் எடுத்துக்கொண்டாலும், கடைசிவரை அதைத் தவறாமல், முறையாக, நெறியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேற்சொன்னவற்றைக் கடைப்பிடித்து, ஒரு முறையைத் தேர்ந்தெடுத்துப் பயின்றால் தினமும் தரிசனம் போல் பெரிய அளவுக்கு மனம் உணரும். அதற்குரிய வாழ்க்கைச் சிறப்பும் இருக்கும். அப்படி நாம் கையாளக்கூடியவை சுமார் 30, 40 வழிகள் உள்ளன. அவை யாவன:

  1. காலை, மாலையில் தியானம்.
  2. நாம ஜெபம்.
  3. அழைப்பு (calling Mother).
  4. பொதுவான ஆத்ம சமர்ப்பணம்.
  5. ஒரு குறிப்பிட்ட செயலைப் பூரண சமர்ப்பணத்துக்கு எடுத்துக்கொள்ளுதல் (complete consecration of one type of act).
  6. நம் முக்கியப் பிரச்சினையைச் (major work) சமர்ப்பணம் செய்தல்.
  7. தொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்.
  8. வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது.
  9. தரிசனங்களுக்கு ஆசிரமம் செல்வது.
  10. மாதந்தோறும் காணிக்கை செலுத்துவது.
  11. நினைவே வழிபாடு.
  12. சுத்தம்.
  13. ஒழுங்கு.
  14. தணிவான பேச்சு.
  15. சண்டைகளைத் தவிர்த்தல்.
  16. குறை கூற மறுத்தல்.
  17. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அன்னையின் கருத்தை அறிந்து கொள்வது.
  18. மற்றவர் நோக்கில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயல்வது.
  19. நம் வீட்டில் அன்னையை எல்லா அறைகளிலும் பிரதிஷ்டை செய்வது.
  20. நம் குடும்பத்தினர் அனைவர் உள்ளத்திலும் அன்னையை நிரந்தரமாகப் பிரதிஷ்டை செய்வது.
  21. பகவான் ஸ்ரீ அரவிந்தர் நூல்களை முறையாகப் பயில்வது.
  22. பராசக்தி அன்னையின் கட்டுரைகளைப் பயனடையும் வண்ணம் படித்து உணர்வது.
  23. மந்திர ஜெபம்.
  24. புற நிகழ்ச்சிகளை நம் உள்ளுணர்வின் பிரதிபலிப்பாக அறிதல்.
  25. நமக்கு அமைந்த கடமையில் முழு ஆர்வம் காட்டுதல்.
  26. புரளி பேசாதிருத்தல், சில்லறையாக நடப்பதில்லை என்ற முடிவு.
  27. ஒவ்வொரு நாளும் அன்னையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தல்.
  28. நன்றியறிதல்.
  29. செயல்களுக்குள்ள அர்த்தபூர்வமான தொடர்பு.
  30. சிந்தனைக்குரிய ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சிக்குரிய சிந்தனை.
  31. தீராத பிரச்சினை.

சில முறைகளைக் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் பல சேர்க்கலாம். ஒருவர் ஒரு முறையை முழுவதுமாக, பூரணமாகக் கடைப்பிடிப்பது சிரமம். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை எல்லோராலும் பூரணமாகக் கடைப்பிடிக்க இயலாது. முயற்சி தீவிரம் உள்ளவர்களால் மட்டுமே முடியும். எனவே, ஒவ்வொரு முறையாக எடுத்துக்கொண்டு, அம்முறை பூரண பலனைக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்த நினைக்கிறேன். நாம் பெறும் பலன் நம் முயற்சியைப் பொருத்தது. இந்த முறை – உதாரணமாக சமர்ப்பணம் – எந்த அளவு பலன் கொடுக்கும் என்பதை இங்கு முக்கியமாகக் கருதாது இம்முறை எனக்கு, நான் இருக்கும் சந்தர்ப்பத்தில் அதிகபட்சம் எவ்வளவு பலன் கொடுக்கும் என்பதே நமக்கு முக்கியம். முறைக்குரிய அதிகபட்சத் திறன் வேறு, நமக்கு அதே முறை கொடுக்கக்கூடிய அதிகபட்சப் பலன் வேறு. நமக்குரிய அதிகபட்சப் பலன் கிடைக்க, நாம் நம் முழுச் சக்தியையும் (energy) நமக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்; சிதறவிடக்கூடாது. சக்தியின் (energy) அளவு பலனின் அளவை நிர்ணயம் செய்யும். நம் பங்குக்குச் சக்தியை முழுமையாகக் கொடுத்த பின், அந்த அளவு சக்தியால் நாம் எடுத்துக்கொண்ட முறை அதிகபட்சப் பலனைக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதே கீழே காணும் முக்கியக் கருத்தாகும்.

1. காலை, மாலை தியானம்:

தியானம் உயர்ந்தது. பெரும்பாலோர்க்கு அது பலிப்பதில்லை. தியானத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள், தங்களுக்கு ஓரளவு தியானம் பிடிபட்டால்தான் அதைத் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தியானத்திற்குரிய சிறப்பான நேரம் காலை 6 மணிக்கு முன் உள்ள நேரம். 6 மணிக்கு முன், அதாவது 5 அல்லது ஐந்தரை மணிக்குள் குளித்துவிட்டு, தியான அறையைச் சுத்தம் செய்துவிட்டு தியானத்திற்குரிய மனச் சூழ்நிலையுடன் தயாராக முடியும் என்பவர்களுக்கு இது உகந்தது. மனச் சூழலைப் போல் புறச் சூழலும் (house circumstances) பெரிய அளவுக்கு அமைதியாக இருத்தல் நலம். நேரமும், மனமும், சூழ்நிலையும், எழுந்திருக்கும் பழக்கமும் ஒத்து வந்தபின், தியானத்தின் அடுத்த அம்சங்களைப் பார்ப்போம்.

எல்லா முறைகளுக்கும் பெரும்பாலும் பொதுவான ஒரு நிலையுண்டு. அதாவது முறைகளுக்கு ஜீவன் உண்டு. முறை என்பதே நாம் ஏற்படுத்தியதுதான் என்றாலும் அவற்றிற்கும் ஜீவன் உண்டு. தியானம் என்பதற்கு ஜீவன் பூரணமாக உண்டு. நாம் தியானத்தை மேற்கொண்டு முழுப் பலன் அடைய வேண்டுமானால், தியானம் ஜீவனுள்ளதாக இருக்க வேண்டும். தியானத்தின் ஜீவனும், நாமும், உயிருள்ள, உணர்வுள்ள தொடர்பு கொள்ள வேண்டும். அது போன்ற தொடர்பு ஏற்பட வேண்டியவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

மேஜைக்கும், நாய்க்குட்டிக்கும் உயிரைப் பொருத்தவரை ஒரு வித்தியாசமிருந்தால் குட்டியை நாம் உயிருள்ள ஜீவனாக நடத்துகிறோம். அதேபோல் தியானத்தை உயிருள்ளதாக அறிந்து அறிவிலும், உணர்விலும் அத்துடன் ஒரு ஜீவனுள்ள தொடர்பை உள்ளூர ஏற்படுத்தி, அதை நாளாவட்டத்தில் வளர்த்து வர வேண்டும். இதற்குச் சில உபாயங்கள் உதவும்.

  1. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் தியானத்தைப் பற்றி சுமார்

100, 200 இடங்களில் குறிப்பாகவும், சிறப்பாகவும், பொதுவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார்கள். ஒரு சிரமத்தை மேற்கொண்டு அவையெல்லாவற்றையும் திரட்டி, (a small booklet “Meditation” is sold by Sri Aurobindo Society) அவற்றைப் பயின்று, அங்குள்ள கருத்துகளை வெறுங் கருத்தாக எடுத்துக்கொள்ளாமல், யோக ரகஸ்யங்களாகக் கருதி, மனதில் பதிய வைத்து, ஜீவனில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு புத்தகங்களில் தியானத்தால் பல மகான்கள் அடைந்த சிறப்புகளைத் திரட்டிப் படித்து, தியானத்தின் உன்னதமான மேன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • நம்முள் தியானத்துடன் ஓர் உறவு பிறந்து வளர வேண்டும்.
  • நாள் முழுவதும் தியானத்தின் நினைவு நம் செயல்களுக்குப் பின்னணியாக இருந்தால், அது அன்றைய தியானத்திற்கு உதவும். 4 நாள் கழித்து வெளியூரிருந்து மகன் வரப் போகிறான் என்றால், அவ்வெண்ணம் நம் மனத்தின் அடியில் இருப்பதைப் போல், தியானம் இருக்க வேண்டும்.
  • எந்த இடத்தில், எந்த முறையில் (pose) உட்கார்ந்தால் தியானத்திற்கு அதிகப் பொருத்தமாக இருக்குமோ, அந்த முறையை நாமே நமக்கு வகுத்துக்கொள்ள வேண்டும் (most comfortable sitting posture is best suited).
  • தியானம் வரும்பொழுது குறுக்கிடும் எண்ணங்களைக் கவனித்தால் பெரும்பாலானவற்றை விலக்க முடியும். உதாரணமாக ஒரு கடிதம் எழுதும் எண்ணம் தியானத்தில் குறுக்கிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த முறை அதுபோன்ற கடிதம் எழுத வேண்டியிருந்தால், அதை முன்கூட்டி எழுதிவிட்டால், அவ்வெண்ணம் விலகிவிடும். நம்மால் முடிந்த விஷயங்களைச் சரி செய்து தியானம் பூரணமாக உதவ வேண்டும்.
  • மனத்தில் குறையாக ஒரு பிரச்சினையிருந்தால் – e.g. எதிர்பார்த்த ஆர்டர் வரவில்லை, வராது போலிருக்கிறது – அதைத் தியானத்திற்கு முன் பிரார்த்தனையாகச் செய்தால் நல்லது. அப்பிரச்சினையைத் தீர்க்கும் திறன் தியானத்திற்கு ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அந்நிலைக்கு வந்துவிட்டால், அந்நிலையைக் காப்பாற்றும்படி நாம் நம் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். தியானத்தின் திறனைப் பாதிக்கும் எந்தக் காரியத்தையும் விலக்க வேண்டும்.

இந்த அளவில் தியானத்தை மேற்கொண்டால், நாம் இருக்கும் நிலையில் தியானம் அன்னையின் அருளை எவ்வளவு அதிகமாகப் பெற்றுத் தர முடியுமோ அதைத் தரும் திறனுடையதாகும்.

2. நாம ஜெபம்:

மிக எளிமையான முறை. எல்லோரும் கையாளக்கூடியது. எளிமையான முறை என்பதால் இதனால் பெரும்பலனை அடைய முடியாது என்றில்லை. எளிமையான முறையை, எளிமையாகப் பின்பற்றினால் பெரும் பலன் கிடைக்காது. எளிமையான முறையானாலும், அதற்குரிய கரு உருப்பெறும்வண்ணம் அதைக் கடைப்பிடித்தால் அதனால் அதிகபட்சம் நாம் எவ்வளவு பெற முடியுமோ அதைப் பெறலாம்.

நாம ஜெபத்தின் தத்துவம் என்ன? மனிதனுடைய அழைப்புக்கு ஆண்டவன் செவிசாய்க்கின்றான் என்பதே இதன் அடிப்படைக் கரு. நாம ஜெபம் செறிந்து அடுத்த கட்டத்திற்குப் போனால் அழைப்பு எழும். ஜெபத்தின் அதிகபட்சப் பலனைப் பெற நாம் ஜெபம் செய்யும்பொழுது நம் முழுச் சக்தியும் (energy) அதில் வெளிப்பட வேண்டும். அது வேண்டுமானால் மனம் மௌனமாக இருக்க வேண்டும். அது உயர்ந்த நிலை. அது இல்லை என்றால், மனம் ஒரு நிலையாக இருக்க வேண்டும். பொதுவாக நாம ஜெபத்தை

ஏற்றுக்கொண்டு அனுதினமும் அனுஷ்டிப்பவர்கள் மனம் ஓரிடத்திலும், ஜெபம் வேறிடத்திலும் எனப் பிரிந்து நிற்கும். அந்நிலையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது வாய் ஜெபத்தைச் சொல்லும், மனம் வேறு சிந்தனையில் இருக்கும். இந்த நிலையில் ஜெபத்திற்குக் குறைந்தபட்ச பலன்கூட வாராது. ஜெபம் செய்பவர்கள் மனத்தை மௌனமாக்கிக்கொள்வது சிறந்தது. அது கடினம் என்பதால் நான் அதைக் கருதவில்லை. அதற்கு அடுத்த படியாக, நாம ஜெபத்தை (Mother, அம்மா, மா, அன்னை) மேற்கொள்ளுமுன் மனத்தை ஒரு நிலைப்படுத்தி, அந்நிலையில் இருந்து ஜெபம் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். அந்நிலை 6, 7 நிமிஷத்தில் கலைந்தால், ஜெபத்தை அத்துடன் நிறுத்திக்கொண்டு அடுத்த முறை ஜெபம் 7, 8 நிமிஷம் வரை ஒரே நிலையிருந்து சொல்ல முயல வேண்டும். அதேபோல் 20, 30 நிமிஷம் வரை பழகிக்கொண்டால், ஜெபம் ஆரம்பித்தவுடன் மனம் அலைவது நிற்கும். இதுவே ஜெபத்திற்குத் திறனளிப்பது. காலை, மாலை தியான நேரத்தில் நிலைத்த மனத்துடன் ஜெபத்தைப் பழகுவது முதற்கட்டம்.

இரண்டாம் கட்டம் முக்கியமானது; திறனுடையது; உயர்ந்தது. அதாவது நாள் முழுவதும் நாம் வேலை செய்யாமலிருக்கும் நேரங்களில் மனம் அலைபாய்வதும், சலனம் அடைவதும், கவலைகளை ஊன்றிப் பார்த்து வளர்ப்பதும் போன்ற காரியங்களில் ஈடுபடும். வேறு வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது, சுமார் 2, 3 நிமிஷம் மனம் நிலைத்து ஜெபம் செய்யப் பழகி, அது பலித்தால், நாம் சும்மா இருக்கும் நேரம் முழுவதையும் ஜெபத்தின் பிடியில் நாளாவட்டத்தில் கொண்டுவந்துவிடலாம். பொறுமையாக நாம் இதைச் செய்து வெற்றி பெற்று, 7 அல்லது 10 நாள் பலித்துவிட்டால், பின்னர் காலை, மாலை அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஜெபம் செய்தால் போதும். நாள் முழுவதும் மற்ற நேரங்களில் ஜெபம் உயிருடன் மனத்தின் அடியில் இருக்கும். முடிந்தவரை ஜெபித்தால் நல்லது. முடியாவிட்டால் மனம் தானே ஜெபிக்கும். நாம ஜெபத்தால்

பெரும்பலன் அடைய இது உதவும். மனம் மௌனமாக (silent repetition) ஜெபத்தை ஏற்றுக்கொண்டால் நாமஜெபத்தின் உச்சியை நாம் அடைவோம்.

3. அழைப்பு:

இதைப் பற்றி ஒரு முழுக் கட்டுரை (அமுத ஊற்றெழும் அழைப்பு) எழுதியிருப்பதால் மீண்டும் இங்கு அதைக் குறிப்பிடவில்லை.

4. பொதுவான ஆத்ம சமர்ப்பணம்:

சமர்ப்பணம் என்பதன் பொருள் மனிதன் தன்னை விலக்கி, அந்த இடத்தில் இறைவனை வைப்பதையே, ஒவ்வொரு செயலிலும் நாம் சமர்ப்பணம் என்று குறிக்கிறோம்.

பரீட்சை அடுத்த மாதம் வரும்பொழுது இந்த மாதமே படிக்க ஆரம்பித்தால்தான் நல்ல மார்க் வாங்க முடியும் என அறிவு சொல்கிறது. டென்னிஸ் விளையாட்டு ஆர்வம் அதைப் புறக்கணித்து விளையாடச் சொல்கிறது. மனிதனுக்குள்ளே அறிவுக்கும், ஆசைக்கும் உள்ள முரண்பாடு இது. இதேபோல, மனிதனுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற நியதியை அவனுடைய ஆசை சில இடங்களிலும், அறிவு சில இடங்களிலும், பண்பு மற்ற இடங்களிலும் நிர்ணயிக்கின்றன. இவையெல்லாம் இறைவனின் நியதியிருந்து வேறுபட்டிருக்கலாம், மாறுபட்டிருக்கலாம், முரணாக இருக்கலாம். ஆதலால் ஒரு செயலைச் செய்யும் முன் ஆசையை, அறிவை, பண்பைக் கேட்பதற்குப் பதிலாக உள்ளுறையும் இறைவனைக் கேட்டு, அவன் நியதிப்படி அதைச் செய்வதே ஆத்ம சமர்ப்பணமாகும். பொதுவான ஆத்ம சமர்ப்பணம் என நான் இங்கு குறிப்பிடுவதும் இதையே என்றாலும், சிறப்பான மற்ற சில சமர்ப்பணங்களிலிருந்து ஓரளவு வேறுபடுகிறது. நம் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து, பின்னர் செயல்படுவதைப் பொதுவான

சமர்ப்பணம் என்றேன். அழைப்புக்கும், சமர்ப்பணத்திற்கும், நினைவே வழிபாடு என்பதற்கும் என்ன வேறுபாடு என்றொரு கேள்வியை எழுப்பி சுருக்கமாகப் பதில் அளித்துவிட்டு மேலும் தொடருகிறேன்.

நினைவே வழிபாடு; சமர்ப்பணத்தைவிட எளியது. அதனால் நினைவை நாள் முழுவதும் மேற்கொள்வதால், அது சமர்ப்பணத்தின் பலனை அளிக்கும். போஸ்ட் ஆபீஸுக்குப் போக வேண்டும் என்றால் அன்னையை நினைத்துப் பிறகு போகிறோம். சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது அண்ணன் நினைவு வந்தால், அன்னையை நினைத்துப் பிறகு அண்ணனை நினைக்கிறோம். இடைவிடாது ஒவ்வோர் எண்ணத்திற்கும், செயலுக்கும் முன்பாக அன்னையை நினைப்பதை “நினைவே வழிபாடு” என்கிறோம். சமர்ப்பணம் என்பதைச் சும்மா இருக்கும்பொழுது செய்வதில்லை. ஒரு காரியத்தைச் செய்யுமுன் அதை ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்து, பின்னர் அது விட்ட வழியே அக்காரியத்தைச் செய்வதை, சமர்ப்பணம் என்கிறோம். ஆகவே நினைவு எப்பொழுதும் உள்ளது. அன்னையை நினைத்துவிட்டு நம் இஷ்டப்படிச் செயல்படுகிறோம். சமர்ப்பணம் என்பது செயல்களுக்கு முன்னர் மட்டுமே எழுவது. சமர்ப்பணம் செய்தபின் அச்செயலை நம் இஷ்டப்படிச் செய்ய முடியாது. ஆத்மாவின் ஆணைப்படியேதான் செய்ய வேண்டும். அழைப்பு என்பதன் மூலம் அன்னையின் சக்தியை நம்முள் கொண்டுவருகிறோம். அந்தச் சக்தி நம் செயலை, நம் விருப்பப்படி, தீவிரமாகச் செய்ய உதவும். நினைவு (Memory) என்பது மனத்தின் ஒரு பகுதி. சமர்ப்பணத்தைச் செய்வது நினைவில்லை, (will power) மனத்தின் செயல் திறன். அழைப்பதும் (will power) அதுதான். (Memory,will) நினைவு, செயல்திறன் என்பவை மனத்தின் வெவ்வேறு பகுதிகள். அழைப்பின் மூலம் அன்னை சக்தி உள்ளே வருகிறது. சமர்ப்பணத்தில் நம் (will) விருப்பத்தை விட்டுக்கொடுக்கிறோம். ஆகவே, நினைவு, அழைப்பு, சமர்ப்பணம் ஆகியவை இந்த அளவில் வேறுபட்டவை ஆகும்.

பொதுவான சமர்ப்பணம் நாம் எடுத்துக்கொண்ட நோன்பானால், நம் அனைத்துச் செயல்களும் கதவைத் திறப்பது, ஒருவருக்கு இல்லை என்பது, மற்றொருவருக்கு உடன்படுதல், சாப்பிடுதல், பாங்கில் பணம் போடுதல், பேப்பர் படித்தல், பிரமோஷனுக்கு விண்ணப்பம் போடுதல் ஆகிய அனைத்துச் செயல்களையும், சிறியவை, பெரியவை எல்லாவற்றையும் ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்து, பின்னர் செய்தல் என்று பொருள். அப்படிச் செய்வதால் மனிதனுடைய (ego) அகந்தை விலகி, ஆன்மாவின் ஆதிக்கம் நம் முழு வாழ்வையும் சூழ்ந்து கொள்ளும். அது சிறப்பு. அச்சிறப்பின் மூலம் அன்னை பெருவாரியாகச் செயல்படுவார். இம்முறை ஒரு வகையில் எளிமையானது. சமர்ப்பணம் செய்தபின் சில சமயங்களில் நம் அறிவின்படியே நடக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் நம் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மற்ற சமயங்களில் நம் விருப்பத்திற்கு மாறாக நடக்க வேண்டியிருக்கும். என்றாலும் பொதுவாகச் சமர்ப்பணத்தை மேற்கொள்வது எளிது. வேறொரு வகையாகப் பார்த்தால், கடினமானது. எல்லாச் செயலையும் தவறாது சமர்ப்பணம் செய்ய வேண்டியிருப்பதால், சமர்ப்பணத்தைப் பூரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கடினம் என்றாகும்.

ஒரு செயலைச் சமர்ப்பணம் செய்யும்பொழுது அது சம்பந்தப்பட்ட எண்ணம், உணர்வு, செயல் மூன்றையும் சமர்ப்பணம் செய்வதே முறை. அந்த முறையைக் குறிப்பான சமர்ப்பணம், பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல், வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்தல், ஆகியவற்றில் எடுத்துக்கொள்கிறோம். பொதுவான சமர்ப்பணம் என்பதால் செயலில் செயல் பகுதியை மட்டுமே சமர்ப்பணம் செய்வதை இங்குக் கருதுகிறோம். அந்த வகையில் இது எளிது. வாழ்வின் எல்லாச் செயல்களையும் தழுவுவதால் கடினம். அகலம் கருதுதல் கடினமான முறை. ஆழம் கருதுதல் எளிமையான முறை.

5. ஒரு குறிப்பிட்ட செயலைப் பூரண சமர்ப்பணத்திற்கு எடுத்துக்கொள்ளுதல் (Consecration of a complete act & all acts of that type):

சமர்ப்பணத்தை வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் கைக்கொள்ளுதல் யோகத்தைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். சாதகரில்லை, அன்பர் என்பதால், நான் சொல்லும் முறையின் பூரணப் புனிதம் யோகத்தைச் சார்ந்ததெனினும், அளவை அன்பரின் சந்தர்ப்பங்களைப் பொருத்துக் குறைத்து, சாதாரண பக்தனுக்கும் சாத்தியமாகும்படிச் செய்ய முயல்கின்றேன்.

ஆனால், ஏதாவது ஒரு வகையான காரியத்தை மட்டும் குறிப்பிட்டு அதன் எல்லைக்குள் சமர்ப்பணத்தைப் பூரணமாகக் கடைப்பிடிப்பது என்ற முறை இது.

நம் வாழ்வு, செயல்களால் நிரம்பியது. செயல்கள் பலதரப் பட்டவை. அளவு கருதியும், வகை கருதியும், செயல்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக நம் செயல்களை வீடு, ஆபீஸ், மற்ற இடங்கள் என்று பிரிக்கலாம். பணம் சம்பந்தப்பட்டவை, மனிதர் சம்பந்தப்பட்டவை, விசேஷங்களை ஒட்டியவை எனப் பிரிக்கலாம். குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, படிப்பது, குடும்ப நிர்வாகம், ஆபீஸ் கடமை, கடன் கொடுப்பது, வாங்குவது, கடைக்குச் சென்று சாமான் வாங்குவது, கடிதம் எழுதுவது போன்ற சுமார் 100, 200 செயல்களைக் கொண்டது நம் வாழ்வு. அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். உதாரணமாக, பஸ்ஸில் பயணம் செய்வதை எடுத்துக்கொள்வோம். அது சம்பந்தப்பட்ட எல்லா (1) எண்ணங்களையும், (2) உணர்ச்சிகளையும், (3) செயல்களையும் சமர்ப்பணத்திற்குப் பூரணமாக, நூற்றுக்கு நூறு உட்படுத்துவோம். செயல் சமர்ப்பணத்தால் நிரம்பியவுடன் (saturated) அன்னையின் அருட்பிரவாகம் அதில் தெரியும். அதிசயிக்கத்தக்க முறையில் தெரியும். இந்த யோகப்

பலனைப் பார்த்த பின், நமக்கு எந்த ஒரு செயலும் சமர்ப்பணத்தால் பூரண அருள் பெறும் திறன் ஏற்பட்டு விடுகிறது.

6. நம் முக்கிய பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் என்பது இறைவனை வாழ்வில் நம் தலைவனாகப் பிரதிஷ்டை செய்தல். ராமகிருஷ்ண பரமஹம்சரானாலும், ரமண மகரிஷியானாலும் பகவான் ஸ்ரீ அரவிந்தரானாலும், அன்னையானாலும், இவர்களை நெஞ்சார ஆழ்ந்து உணர்ந்த பக்தரால் நெகிழ்ந்து, வழிபட முடியும். அடுத்த கட்டத்தில் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையை, அதுவும் நம் சுபாவம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிரச்சினையை பக்தன் இப்படிப்பட்ட குருவுக்குச் சமர்ப்பித்து “நீங்கள் எந்த முடிவு சொன்னாலும், நான் அதை தெய்வ வாக்காகக் கருதி, அப்படியே இந்தக் காரியத்தில் கடைப்பிடிக்கிறேன்” என்று சொல்ல முன்வருவாரா, என்று கேட்டால் அதில் தேறுபவர்கள் உண்டு. ஆனால் மிகக் குறைவு. ஞானாநந்தரிடம் அப்படி ஒரு சிறப்பான சிஷ்யர் இருந்தார். அவர் கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை. பக்தர் வீட்டில் பிள்ளை திருமணப் பிரச்சினை. பிள்ளைக்கும் பெற்றவர்களுக்கும் மாறுபாடு. பெற்றவர் ஞானாநந்தரின் அத்யந்த சிஷ்யர். அவரிடம் முறையிட்டார். சுவாமியோ, “பிள்ளை இஷ்டத்தில் தவறில்லை, மறுக்காதே” என்றார். சிஷ்யரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “சுவாமி பெரியவர். எல்லாம் உணர்ந்தவர்தாம். ஆனால், கல்யாணத்தைப் பற்றி சுவாமிக்கு என்ன தெரியும்?” என்று தமக்கே விளக்கம் கொடுத்து, சுவாமியின் அறிவுரையைப் புறக்கணித்தார். இதே காரணத்தால்தான், பெரியவர்கள் தங்களை அணுகி ஆலோசனை கேட்பவர்களுக்கு, அவர்களுடைய சுபாவத்தை ஒட்டி யோசனை சொல்வது வழக்கம்.

அன்னையை வணங்கும் தெய்வமாகவும், வழிபடும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொள்வது மிகச் சிரமம். அதனால், சிறப்பு, அதுவும் வாழ்க்கையில்

முழுமையான வழிகாட்டியாகக் கொள்வது மிகச் சிரமம். அதனால் அதிக விசேஷம். இரண்டு லட்ச ரூபாயை 1970இல் முதலிட்டு, திட்டமிட்டு, பாங்க் 33 இலட்சம் கொடுக்க இசைந்தபின் பாதி கூட்டாளியாகி, பணம் போட்டவருடன் ஒரு வருஷம் சேர்ந்து உழைத்து 2 இலட்ச முதல் 6 இலட்ச இலாபம் சம்பாதித்த நிலையில், தமக்கும் பணம் முதலிட்டவருக்கும் பிணக்கு ஏற்பட, “இந்த நிலையில் அன்னையின் கருத்தென்ன?” என்று தம்மையே கேட்டுக்கொண்டு, அன்னைக்குச் சண்டை பிடிக்காது என்று பதில் மனதில் கூறி, சண்டையைத் தவிர்க்க, தாம் தம் உரிமை, உடைமை, அனைத்தையும் தாமே முன்வந்து தியாகம் செய்வதே சரி என்று முடிவெடுத்து, கூட்டாளி கேட்காமலேயே, அவரிடம் தாம் நிபந்தனையின்றி விலகுவதாக ஒருவர் சொன்னார். உலகத்திலேயே இல்லாத ஓர் அற்புதம் 10ஆம் நாள் நிகழ்ந்தது. திட்டத்தில் பாதிக்கு உரிமையுள்ளவர் விட்டுக்கொடுத்தார். முழுத் திட்டமும் (project) 10ஆம் நாள் அவரைத் தேடி வந்தது. அன்னையை வாழ்வில் முழுமையாக ஏற்றுக்கொள்வதென்றால் இப்படியெல்லாம் நடக்கவேண்டியிருக்கும். அதற்கு அப்படிப்பட்ட பலன் உண்டு. 7000 ரூபாய் முதலிட்டு 1968இல் தொழில் ஆரம்பித்து, 3 வருஷத்தில் 3 தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியவர் ஆசிரமத்திற்குத் தொழில் சம்பந்தமாக வந்து போகும் பொழுது, அன்னையின் இந்த மேற்கூறிய முறையைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தது. அவருடைய ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் வந்தது. பொறாமைக்காரர்கள் பொங்கி வழியும்படி, கம்பெனியை மூட இன்னும் விரல்விட்டு எண்ணும் நாட்களே உள்ளன, என்று பேசுமளவுக்கு நிலைமை முற்றிவிட்டது. முதலாளிக்கும் அது புரிந்தது. திடீரென ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. ஆசிரமத்தில் அவர் கேள்விப்பட்டதுதான். அதன்படி அன்னைக்கு ஒரு தந்தி கொடுத்தார். அன்றிரவு தொழிலாளிகள் கூட்டம் போட்டு, வேலை நிறுத்தத்தை நிறுத்த முடிவு செய்து, மறுநாள் வேலைக்குத் திரும்ப வந்து, தங்களுக்கெல்லாம் குறையாக எதுவும் இல்லை; பன்னிரண்டு தறுதலைகள் மட்டுமே இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள் என்று

முதலாளி ஏற்கனவே அறிந்ததைப் பறைசாற்றினார்கள். அன்று மாலை, தொழிலாளர் தலைவனை, வாட்ச் திருடியதனால் போலீஸ் கைது செய்து, “உங்கள் முதலாளி ஜாமீன் கொடுத்தால் விடுகிறோம்” என்று சொல்ல, மானேஜ்மெண்டைச் சேர்ந்த அனைவரும், “பொன்னான சந்தர்ப்பம். பன்னிரண்டு பேருடைய ராஜினாமாவை வாங்கிக் கொண்டு ஜாமீன் கொடுக்கலாம்” என்றார்கள். பன்னிரண்டு பேரும் வேலைக்கு வரவில்லை. தாங்கள் ராஜினாமா செய்வதாகக் கூறினார்கள். அதனால் மீண்டும் வேலை தொடங்கியுள்ளது. முதலாளியோ அன்னை பக்தர் இல்லை. ஆசிரமம் வரும் சமயம் அங்குப் பல விஷயங்களைக் கேள்விப் பட்டவர். “தந்தி கொடுத்தேன். வேலை நிறுத்தம் முடிந்தது. இப்பொழுது அன்னை என்ன சொல்வார்?” என்று அவர் நினைத்தபொழுது, பழைய செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் சாரமாவது: தன் கையில் உள்ள பிடியை வைத்துக்கொண்டு பேசுவது நம் பழக்கம். அன்னைக்கு உகந்த முறை அந்தப் பிடியை விட்டுவிட்டுப் பேசுவது. இது நினைவுக்கு வந்ததும், முதலாளி தாம் நேரே சென்று, அவனை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டு திரும்பி வந்தபொழுது, மேனேஜ்மெண்ட், ஆபீஸில் உள்ளவர்கள் முகம் பேயறைந்தது போலிருந்தது. முதலாளியோ, தாம் ஒரு பெரிய காரியத்தைச் செய்துவிட்டதாக உணர்ந்தார். மறுநாள் மாலை 12 பேரும் வந்து தங்கள் ராஜினாமாவை ஆபீஸில் டைப் செய்து கொடுங்கள்; கையெழுத்திட்டுத் தருகிறோம் என்று கூறி, அதன்படிச் செய்தனர். அன்றிருந்து இன்றுவரை அங்கு தொழிலாளர் தகராறு இல்லை.

முக்கியமான பிரச்சினை, முக்கியமான இடத்தில் ஏற்படுகிறது. அதில் முக்கியமான குணம் கலந்திருக்கும். முக்கியமான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்வது என்றால் முக்கியமான குணத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். எவ்வளவுதான் தப்பு என்று தெரிந்தாலும், எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், முக்கியமான குணத்தை மாற்றிக்கொள்ள எல்லோரும் முன்வர

மாட்டார்கள். கன்னிமாரா ஹோட்டலில் I.A.S. ஆபீஸர்களுக்குப் பார்ட்டி நடக்கும்பொழுது 12 வருஷமாகத் தம்மிடமிருந்த டிரைவர், ஆபீஸர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த முதலாளி அவனை டிஸ்மிஸ் செய்து, பின் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் எடுத்துக்கொள்கிறேன் என்றபோது, அவன் அதற்கு உடன்படவில்லை. அவர் ஊரில் இல்லாதபொழுது, அவர் பெயரைச் சொல்லி அவருடைய காரைப் பாதி விலைக்கு விற்க முயன்றவன் அவன். அப்பொழுதும் அவர் மன்னித்துவிட்டார். இப்பொழுது அவனால் மன்னிப்புக் கேட்க முடியவில்லை. அதுவே முக்கியப் பிரச்சினைக்கு அடையாளம்.

பொதுவான சமர்ப்பணம் என்பது எல்லாக் காரியங்களையும் அன்னையை நினைத்துச் செயல்படுதல். இதை வாயால் சொல்வதே பழக்கம். அது ஜீவன் இல்லாத சமர்ப்பணம். “நான் இக்கடிதம் எழுதுவதை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்தச் சாப்பாட்டைச் சமர்ப்பணம் செய்கிறேன்” என்பன போன்றவை. இதையே முழுமையாகச் செய்தால் வியப்பான பலன்கள் கிடைக்கும். இந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற ஒருவரை நான் சந்தித்ததில்லை. நான் பொதுவான சமர்ப்பணம் என்ற தலைப்பில் குறிப்பிடுவதில் முதல் கட்டம் இது. அதில் அடுத்த மூன்று நிலைகள் உள்ளன. முதலில் எண்ணம், அடுத்தது உணர்வு, கடைசியாகச் செயல். சென்னைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பொழுது, அந்த எண்ணத்தைக் கவனித்து, அதை நாம் ஏற்றுக் கொள்ளாமல் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்ய முயன்றால், எண்ணம் சமர்ப்பணத்தை மீறி, எப்பொழுது போவது, யாரைச் சந்திப்பது? என்று வேகமாகப் போய்க்கொண்டிருக்கும். அதன் பயணத்தை நிறுத்தி, வேகத்தைத் தடுத்து, சமர்ப்பணம் செய்ய முடியாது. முடிந்தால் மனம் மௌனத்தில் திளைக்கும். அதீத சக்தி மனதில் அதே க்ஷணத்தில் சேரும். சமர்ப்பணம் அறுந்து போகாமல் தொடர்ந்து மனதில் இருந்தால், மனம் ஓடாது; எண்ணம் மறந்து போகும்; மனம் ஆழ்ந்த நிம்மதியடையும். அரை மணிக்குப் பிறகு யாரைச் சந்திக்கச்

செல்ல வேண்டும் என்ற நினைத்தோமோ அவர் நம்மைத் தேடி வருவதாகக் கடிதம் வரும். இதைப் பலரிடம் சொல்லியிருக்கிறேன். ஒரு முறை வெற்றியாகச் செய்து, பலன் பெற்று, ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். உணர்ச்சி, அடுத்த கட்டம். இதை விடுவது சிரமம்; பலன் அதிகம். சென்னைக்குப் போகலாம், தங்கையைப் பார்க்கலாம் என்றபொழுது அந்தச் செயல் சம்பந்தப்பட்ட எல்லா உணர்ச்சிகளும் ஒரே சமயத்தில் வந்து தலைதூக்கி, நம்மையும், அன்னையையும், சமர்ப்பணத்தையும் மறக்கச் செய்யும். சென்னைக்குப் போய்வந்து பல நாள் ஆனபின் ஒரு குறை ஏற்படும்பொழுதுதான், சமர்ப்பணம் நினைவுக்கு வரும். மாறாக உணர்ச்சிகளை எல்லாம் கவனித்து, ஒதுக்கிச் சமர்ப்பணம் செய்துவிட்டால், உள்ளம் புளங்காகிதம் அடையும். காரணமில்லாத சிறிய செயல்களுக்கெல்லாம் உடல் துள்ளும். சமர்ப்பணம் பலித்த நிலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் சென்னைக்குப் போய், தங்கையைப் பார்த்து, மனம் நிறைந்து, காரியங்களைக் கலந்து முடிவு செய்து, பலன் ஏற்பட்டது போன்ற உணர்வைக் கொடுக்கும் நிகழ்ச்சிகள் பல தொடர்ந்து நடக்கும். சென்னைக்குப் போய் செய்ய வேண்டிய வேலை, போகாமல் முடிந்துவிட்டது தெரியவரும். இந்த ஒரு முறை சமர்ப்பணம் செய்தால், குறிப்பிட்ட வேலை பெரிய அளவில் நிறைவடையும். இதைவிடப் பெரியது உடல் அசைவுகளைச் சமர்ப்பணம் செய்தல். அதையும் ஒருவர் செய்துவிட்டால், அடுத்த கணம் விஷயம் பூர்த்தியாவதுடன், அதன் மூலம் தொடர்ந்து பல நல்ல நிகழ்ச்சிகள் நடந்தபடியிருக்கும். இவையெல்லாம் பக்தி மிகுந்தவரால் செய்யக்கூடியவையே. ஏற்றுக்கொண்டு செய்தால் சிறப்பு. பொதுவான சமர்ப்பணத்தை வாயால், மனத்தின் எண்ணத்தால், உணர்ச்சியால், உடல் அசைவுகளால் பூர்த்தி செய்வதைப் பற்றியவை இவை.

முக்கியமான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்வது கடினம். ஏனெனில் அதில் முக்கியமான குணம் பின்னிக்கொண்டிருக்கும். அந்தக் குணத்தை விடாமல் சமர்ப்பணம் செய்ய முடியாது. இந்தப்

பிரச்சினையைப் பொருத்தவரையாவது அந்தக் குணத்தை மாற்றிக் கொள்ளாமல் இதைச் செய்ய முடியாது. இது கடினம் என்றாலும், சுபாவத்தை மாற்றுவதுபோல அவ்வளவு கடினமில்லை. சுபாவத்தை விட்டுக்கொடுப்பதே அதிகக் கடினம்.

முக்கியமான குணம் நம் பிரச்சினையில் கோபமானால், கோபத்தை இந்தப் பிரச்சினையைப் பொருத்தவரையில் விட்டுவிட முன்வர வேண்டும். எப்படிப்பட்ட கோபக்காரனும், தன் முதலாளியிடம் கோபத்தைக் காட்டுவதில்லை. கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கும் பொழுதும் காட்டுவதில்லை. அதையே பிரச்சினையின் முக்கியத்தைக் கருதி, வாடிக்கைக்காரரிடம், மனைவியிடம், தகப்பனாரிடம், மகனிடம், எளியவரிடம், பக்கத்து வீட்டுக்காரரிடம் பின்பற்றுதல் கடினம். பக்கத்து வீட்டுக்காரன் 3 அடி நம் மனைக்குள் வந்து சுற்றுச்சுவர் கட்டுகிறான். போலீஸ், பஞ்சாயத்து, சிபாரிசு எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. இனி முடியாது என்று கைவிட்ட நிலையில் “இப்பிரச்சினையில் கோபத்தை விட்டுவிட்டு, மனதிலும் கோபப்படாமல், சமர்ப்பணம் செய்ய வேண்டும்” என்று முடிவு செய்து சமர்ப்பணம் செய்தபின், பக்கத்து வீட்டுக்காரன் 3 அடி தள்ளி தன் மனையில் பள்ளம் தோண்டுவதைக் கண்டாலும் நம்ப முடியாது. கோபம் பலருக்கு வரும். ஆனால் மனிதர்களுக்கு முக்கியமான பிரச்சினைகளை வளர்க்கும் குணங்கள் ஏராளம். பிடிவாதம், பிறர் புண்படப் பேசுதல், புரளி பேசுதல், ஒட்டுக் கேட்பது, சுயநலம், அகராதி, தான் செய்ததைச் சரி என்று நிலைப்படுத்துவது, நண்பர்கள் மீது சந்தேகப்படுவது, அவசரம், வரவேண்டிய வருமானத்தைக் கணக்குப் போடுதல், மனக்கோட்டைக் கட்டுதல், தன் நியாய மனப்பான்மையின் உயர்வை நினைத்து வியத்தல், போன்ற தவறான குணங்களால் மட்டும் முக்கியப் பிரச்சினைகள் வரும் என்பதில்லை. நல்ல குணங்களாலும் முக்கிய பிரச்சினைகள் வரும். குணம் நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சியை விட்டு, ஒரு குணத்தால் பிரச்சினை ஏற்பட்டால் அந்தக் குணத்தை விட்டுவிட முன்வர வேண்டும். குறைந்தபட்சம், அந்தப் பிரச்சினையைப்

பொருத்தவரையிலாவது விட்டுவிட முன்வர வேண்டும். குணத்தை விடாமல், அதாவது பிரச்சினையை உற்பத்தி செய்த குணத்தை விடாமல், சமர்ப்பணம் செய்ய முடியாது. வாயால் சொல்லலாம். அதற்கு மேலே சொன்ன உடனடிப் பலன் இருக்காது. விடாமல் தொடர்ந்து சொன்னால் கொஞ்சம், கொஞ்சமாக நாள்பட்ட பலன் இருக்கும்.

நம்பிக்கை, உண்மை பேசுதல், விருந்தோம்பல், பிரியம், பாசம், பற்று, கடமையைச் செய்தல், மனச்சாட்சிக்குப் பயந்து செயல்படுதல், சட்டத்தைக் கடைப்பிடித்தல் போன்ற உயர்ந்த குணங்களாலும் முக்கியமான பிரச்சினை வரும். பொதுவாக எல்லா மனிதருக்கும் கெட்ட குணங்களால் பிரச்சினை ஏற்படும். நல்ல குணங்களால் ஒருவருக்குப் பிரச்சினை ஏற்படவேண்டுமானால், அவர் ஏற்கனவே உயர்ந்த நிலைக்கு வந்தவராயும், உயர்ந்தவராயும், செல்வம், அந்தஸ்து, நாணயம் உடையவராயும் இருப்பார். அவருக்கும் நல்ல குணங்களால் பிரச்சினை ஏற்படுவது குறைவு. ஆனால், நல்ல குணங்களால் அவர் வாய்ப்பை இழப்பதுண்டு.

1935இல் காந்தி ஆசிரமம் நிறுவி, தம் வீட்டில் ஹரிஜனங்களை வேலைக்கு வைத்துக்கொண்டு, ஹரிஜனப் பெண்ணுக்கு வேளாளர் குல மாப்பிள்ளையை மணமுடித்து ஒரு மிராசுதார் “காந்தி” எனப் பெயர் பெற்று விளங்கினார். இவருடைய பிள்ளை, B.A.. முடித்து விட்டான். ஸ்ரீ R.K.. சண்முகம் செட்டியார் அவருடைய நண்பர். பிள்ளையை ஆக்ஸ்போர்டுக்கு (Oxford) அனுப்ப, செட்டியார் ஒரு வார்த்தை சொன்னால் போதும். மிராசுதாருக்கு உதவி கேட்டுப் பழக்கம் இல்லை. 3 ஆண்டுகளாக பிள்ளையும், நண்பர்களும், உறவினர்களும் அவரை, “செட்டியாரைக் கேளுங்கள். பிரியமாகச் செய்வார்” என்று வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். அவரது குணம், நல்ல குணம். அதனால் பிரச்சினையில்லை; வாய்ப்பு போகிறது. பிறகு அவர் R.K.S..ஐ சந்திக்க நேரிட்டது. கேட்கவே நா எழவில்லை. செட்டியாரே முன்வந்து மிராசுதார் நிலையறிந்து தாமே விசாரித்து உதவி செய்தார்.

அன்னையிடம் நெருக்கம் ஆகும்பொழுது பிரச்சினை தீரும். நல்ல குணத்தால் பிரச்சினை ஏற்படுவது அபூர்வம். ஆனால் நல்ல குணத்திற்கும் முக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் உண்டு. வருமானமில்லாத சகோதரனுக்கு வருஷக்கணக்காக உதவுவது நல்ல குணம். ஆனால் உன் உதவியைப் பெற்ற சகோதரன் “உனக்குப் பச்சையாகத் தீங்கிழைப்பேன்” எனச் சபதமிட்டு உன் கண்ணெதிரே செயல்படுகிறான். உன் உத்தியோகத்திற்கு ஆபத்து, சொத்துக்கு நஷ்டம், நல்ல பெயர் கெடுகிறது, உயிருக்கும் ஆபத்து வருகிறது. உன்னால் உன் நல்ல குணத்தை மாற்றி, உன் உதவியை நிறுத்த முடியவில்லை. உதவியை நிறுத்தினால் சகோதரன் அடங்கிவிடுவான். இது நல்ல குணத்தால் ஏற்படும் தீங்கு.

ஒரு பெருந்தொழில் அதிபர். பழைய நண்பர்களை எல்லாம் தம் கம்பெனியில் உயர்ந்த பதவிகளில் அமர்த்தினார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்குத் தீங்கு செய்தனர்; கவிழ்க்கத் திட்டமிட்டனர். அவருக்கு ஒன்றரைக் கோடி நஷ்டம் வந்தது. அவரிடம் நடப்பதைச் சொன்னால், “ஏதாவது செய்யட்டும். நண்பர்கள் மீது நான் கடுமையாக இருக்க முடியாது” என்றார். அவர் அதிர்ஷ்டம், அவர் தம்மூருக்குப் போகும்போது பாண்டியில் தங்க ஆரம்பித்தார். தெய்வ பக்தியுள்ளவர். சமாதி தரிசனம் செய்வார். அடிக்கடி அது நடந்தது. நண்பர்கள் எல்லோரும் தங்கள் எண்ணம் பூர்த்தி ஆகாததால், ஒவ்வொருவராக அவரை விட்டுப் போய்விட்டார்கள். அதிபர் 10 கோடியிருந்து தம் கம்பெனிகள் 100 கோடிக்குப் போவதைக் கண்டு மகிழ்ந்தார்.

முக்கிய குணங்களால் முக்கிய பிரச்சினை ஏற்படும். அவற்றைத் தீர்க்க அந்த விஷயத்தைப் பொருத்தவரையிலாவது அந்தக் குணத்தை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அப்படி இல்லை என்றால் மேலெழுந்தவாரியாகச் செய்யும் சமர்ப்பணம் நாளாவட்டத்தில் பலன் தரும். அதுவும் இல்லை என்றால், வேறொரு வகையில் – தியானம், சேவை, காணிக்கை போன்றவை – அன்னையிடம் நெருக்கமாக வந்தால் பிரச்சினையின் தீவிரத்தைவிட அன்னையிடம் நெருக்கம் ஆகும்போது பிரச்சினை  தீரும்.