பிரார்த்தனை – 1

சாவித்திரி:

“மனித வாழ்வு பரம்பொருளின் பேரருளுடன் இணைந்தால் அற்புதம் மலரும். மலர்ந்த அற்புதம் அன்றாடமும் மலரும். அதை நிகழ்த்தவல்லது மேதையின் புதிய கருத்து, வீரனின் தீரச்செயல், பக்தனின் பிரார்த்தனை” என்ற பொருளில் பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய காவியமாகிய சாவித்திரியில் இரண்டு வரிகள் உண்டு. உயர்ந்த செயலுடனும், உன்னதமான எண்ணத்தோடும் பகவான் பிரார்த்தனையை ஒப்பிடுகின்றார். தெய்வங்களைச் சிருஷ்டித்த பரம்பொருளை நாம் பலவாறு குறிப்பிடுகிறோம்; பிரம்மம் என்பது ஒரு வழக்கு; சச்சிதானந்தம் என்பது மற்றொன்று. ஆதி, அனாதி என்றெல்லாம் நாம் அறியும் பரமனைவிட உயர்ந்த ஒன்றை இவ்வுலகம் பெற்றதில்லை. மேல் உலகத்திற்கும் பரமனைவிட உயர்ந்த நிலையொன்றில்லை. மனிதன் பாமரன். அப்பாவி மனிதனுக்கு அனாதியான பரமன் வரம் அருள விழைந்து அதற்குரிய திறனாகப் பிரார்த்தனையை வழங்கியிருக்கின்றான். இதை மனிதன் முழுவதுமாக உணர்ந்தானில்லை; உபயோகப்படுத்துவதுமில்லை. நான் அளித்த கருவியைப் பயன்படுத்தி, என்னை அழைத்து உன் வாழ்வில் செயல்பட அனுமதித்தால், செயல்களை அற்புதங்களாக நான் அனுதினமும் மாற்றிக் கொடுக்கிறேன் என்று அவன் விடும் வானுலக அறிக்கை ஒலிபரப்பப்படாமல் விட்டுப்போன ஒன்று.

வாழ்க்கை நொடித்து, கஷ்டம் வந்த காலத்தே பக்தன்

பிரார்த்தனை செய்வது வழக்கம். சிறப்பாக வாழ்க்கை நடக்கும் பொழுது மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. பழக்கமாக ஏற்றுக் கொண்ட தினசரி வழிபாட்டிற்குமேல் அவன் செல்வதில்லை. கஷ்டத்தை விலக்கப் பயன்படும் பிரார்த்தனை கருவூலம் போன்ற ஆன்மீகச் செல்வத்தை அளவின்றி பெற்றுத்தரும் என்பதை மனிதன் மறந்து விட்டான். கெட்டதை விலக்க மட்டுமே பிரார்த்தனையை நாடும் மனிதன் நல்லதைச் சேர்க்க வேண்டும் எனும்பொழுது பிரார்த்த– னையை நாடுவதைவிட தன் முயற்சியையே பெரிதும் நம்பிச் செயல்படுவான். பிரார்த்தனை செய்ய நினைத்தால் தன் முயற்சி பலிக்க வேண்டும் என பிரார்த்திப்பான். தன் முயற்சி எல்லாம் தோற்ற பின்னரே, பரம்பொருள் தன் வாழ்வில் செயல்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான்.

தெய்வத்திடம் எதைக் கேட்கலாம் என்ற கேள்விக்கு அன்னை பதிலிறுக்கும்வாயிலாக “எதையும் கேட்கலாம்” என்று ஆரம்பித்து, விளக்கியபின் “மனிதன் தானும் தெய்வமாக வேண்டும் என்று மட்டும் கேட்பதே சிறந்த பிரார்த்தனை” என்று அன்னை முடிக்கின்றார். பரம்பொருளே இம்மையிலும், மறுமையிலும் சிறந்ததெனினும், அதை அடைய பிரார்த்தனை உகந்த கருவியெனினும், மனிதனைப் பொருத்த வரையில் பிரார்த்தனைக்கு முக்கியத்துவமில்லை. பெண்டு, பிள்ளை, வீடு, கன்று, மாடு, தனம் மட்டுமே அவன் கவனத்திற்கும், கவலைக்கும் உரியதாக இருக்கின்றன. காலம் மாறியதால் மனிதன் மாறினான் என்றால், அந்த மாறிய நிலையிலும் பரமனுக்கும், பிரார்த்தனைக்கும் இடம் இல்லை. பட்டியல் கன்று, மாடு மாறி, T.V., ஸ்கூட்டராக இருக்கலாம். மனிதனுடைய பட்டியலுக்கு வெளியேயுள்ள விஷயங்கள் எவ்வளவு உயர்ந்தவையானாலும், மனிதனுடைய கவனத்தை அவற்றின் பக்கம் திருப்பும் சக்தி உலகத்தில் இல்லை. மந்திரமானாலும், ஜோசியமானாலும், அரசியல் உரிமையானாலும், அந்தராத்மாவின் குரலானாலும், குறி சொல்வதானாலும், தன் பட்டியலைப் பூர்த்தி

செய்வதானால், மனிதனுக்கு அதில் ஆர்வமிருக்கும்; மற்றதெல்லாம் அவனுக்கு அவசியமில்லை. முனிவர்கள் உலகத்தைத் துறந்தார்கள் எனில், மனிதன் தெய்வ வழிபாட்டை இம்மையில் துறக்க முயல்கின்றான். மனிதனுடைய தெய்வம் அவனது அன்றாட வாழ்வு. அதில் உயர்ந்த கட்டங்களை அடைவதே அவனுடைய குறிக்கோள்.

ஆன்மீகம் உலகத்தைத் துறந்தது; துறவறம் பூண்டது. அன்னை உலகத்தைத் துறக்கவில்லை. மாறாக, அன்னை தம் ஆன்மீக வாழ்வை அன்றாட மனித வாழ்வில் நிலைநிறுத்தப் பாடுபடுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பரம்பரையான ஆன்மீக மரபிருந்து அன்னை முற்றிலும் மாறுபடுவதைப்போல, மனித வாழ்விருந்தும் அன்னை வாழ்வு முற்றிலும் மாறுபடுகிறது.

மரபு, இல்லறத்தைத் துறந்தது. மக்கள் இல்லறத்தை நடத்த எதையும் துறக்கத் தயாராக இருக்கிறார்கள். இல்லறம் செம்மையாக நடக்குமானால், வாழ்க்கை வளம் பெற்றதாக இருக்குமானால், மனிதனுக்கு அதைக் கொண்டுவரும் மார்க்கங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. நியாயமாகச் சம்பாதிக்காத பணம் தேவையில்லை; சிபாரிசு மூலம் உத்தியோகம் பெறக்கூடாது; பணத்தால், சிபாரிசால், அந்தஸ்தால், குறுக்கு வழியால் சாதிக்கப் பட்டவை விலக்கப்பட வேண்டியவை என்று கருதுபவர்கள் குறைவு. பணத்தைச் சம்பாதிப்பது அவசியம்; உத்தியோகம் அத்தியாவசியம்; அவற்றையடைய உபயோகப்படும் சாதனங்கள் சிறந்தவை என்ற மனப்பான்மைக்கு மெஜாரிட்டி உண்டு.

அன்னை மனிதனிலிருந்தும், மரபிலிருந்தும் வேறுபட்டவர். வாழ்க்கையை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட அன்னை, மனிதனுடைய அத்தியாவசியமான அனைத்தையும் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்கிறார். அவற்றை அவனுக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்கிறார். ஆனால் வாழ்க்கை இருளாலும், பொய்யாலும் சூழப்பட்டது. வாழ்க்கையிலுள்ள ஒளியும்,

மெய்யும் கண்ணுக்குத் தெரியும் அளவிலில்லை. பாமரனையும், பாமரனின் அத்தியாவசியங்களையும், அவனது இல்லறத்தையும் ஏற்றுக்கொள்ளும் அன்னை, அவற்றைப் பவித்திரமான பாத்திரமாக ஏற்றுக்கொள்கிறார். பரமனையடையும் பாதையில் முதற்படியாக ஏற்றுக்கொள்கிறார். இருளுக்கும், அகந்தைக்கும் மரபு வழிவந்த ஆன்மீகம் அளிக்கும் அளவுக்குக்கூட அன்னை மனிதனுடைய இல்லறத்தில் கொடுக்கத் தயாராக இல்லை. அதற்காக அவன் பிரார்த்தனையை எப்படிப் பயன் தரும் வகையில் பயன்படுத்துவது என்பதே இக்கட்டுரையின் மையக்கருத்து.

அன்னையின் இல்லறம்:

மனிதன் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும். மறுமையில் இறைவனடியை விழையும் உலக மாந்தர், இம்மையில் இறைவனின் திருவுள்ளத்தை இல்லறத்தில் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும். பாதையின் போக்கு பரமனை நோக்கி அமைய வேண்டும். அகந்தைக்கு இடம் இல்லை. ஆன்மீகச் சிறப்பானாலும் அடக்கத்திற்கே உயர்வு. அகந்தைக்கு ஆசனமில்லை. வறுமையும், வெறுமையும் நிறைந்த மனித வாழ்வை வளமும், நிறைவும் உள்ளதாக மாற்ற அன்னை மஹாலட்சுமியாக வரக் காத்திருக்கின்றார். ஆனால் அசுரனுடைய பிடியிலிருந்தும், மருளின் மயக்கத்திலிருந்தும் மனிதன் விலகி வந்து, பரமனையும், பகவானையும் நோக்கிப் புறப்பட்டால் அன்னை அவன் மனதை ஆன்மீக ஞானத்தால் நிரப்பவும், அவன் உயிரைக் காளியின் வீரியத்தால் காக்கவும், வாழ்வை மஹாலட்சுமியின் வரப்பிரசாதம் ஆக்கவும், செயல்களைச் சரஸ்வதியின் திறத்தால் மிளிர வைக்கவும், ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்.

இருளை விட்டு ஒளியை நாடும் மனிதனுடைய இல்லறம் அன்னையின் ஆன்மீகச் சிறப்புள்ள அற்புதமான துறவறமாகும்.

வழிபாடும் சரணாகதியும்:

எந்த உதவியும் பிறரைக் கேட்காமலிருப்பதே சிறந்த கோட்பாடு; நம் மரபில் வந்த உயர்ந்த இலட்சியம். மனிதனையே உதவி கேட்கவில்லை என்றால், தெய்வ சந்நிதியில் நிற்கும்பொழுது எப்படி இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பது? மனிதனைக் கேட்பவரும் இறைவனைக் கேட்க கூச்சப்படுவார்கள். சிறப்பானவர்கள் இறைவனை நினைத்தபின் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். மறந்த நிலையே சிறந்த நிலையாகும். எதை வேண்டுமானாலும் தெய்வத்தைக் கேட்கலாம் என்ற அன்னை, அத்துடன் நிற்காமல் எதையும் கேட்காமலிருப்பது சிறந்தது என்றார். இவற்றையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வது?

முயற்சி என்பது சிறந்தது. முயற்சி செய்து ஒரு காரியத்தைச் சாதிக்க முடியும் என்ற நிலை இருக்கும்வரை முயற்சிக்கு இடம் உண்டு. அந்த முயற்சி தெய்வத்திற்கு விருப்பமானது. தெய்வச் சேவைக்கு நிகரானது. உடலின் முயற்சியை உழைப்பு என்கிறோம். உழைப்புக்கு உலகத்தில் எங்கும் சிறப்புண்டு. அறிவின் முயற்சியை ஆராய்ச்சி என அறிவோம். ஒருவனுடைய ஆராய்ச்சி உலகை உயர்த்தக்கூடியது. கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. பிரார்த்தனை ஆன்மீக முயற்சி. எனவே முயற்சிகளில் முதன்மை ஆனது.

தன் முயற்சியைப் பூர்த்தி செய்த மனிதன் மீதியை இறைவனுக்குச் சரணம் செய்கிறான். தன் முயற்சியில் குறை வைத்தவனுக்குச் சரணாகதியில் இடம் இல்லை. தன் முயற்சியைப் பூர்த்தி செய்தவனே சரணாகதிக்கு உரியவனாகிறான் என்பதால், சரணாகதியை ஏற்றுக்கொண்டவனுக்கு முயற்சி இனி இல்லை. எனவே ஆன்மீக முயற்சியான பிரார்த்தனையும் இல்லை.

மழை வேண்டும் என்று நினைக்கும் விவசாயி, மழையைத்

தேடுமுன் விதையைத் தேடியிருக்க வேண்டும்; உழுவதற்குரிய ஏர், கலப்பையைத் தேட வேண்டும். மழை அவனுடைய முயற்சியிலில்லை. விதை, உழவு, ஏர், கலப்பை, உழைப்பு அவனுடையன. தன் பங்கை எல்லாம் குறைவறச் செய்தபின் அவன் மழைக்காகப் பிரார்த்தனை செய்தால், உடல் உழைப்பையும், அறிவின் பொறுப்பையும் பூர்த்தி செய்தபின் ஆன்மீக முயற்சியான பிரார்த்தனையை அவன் நாடுவதாக அர்த்தம். ஒரு முறை பிரார்த்தனை செய்தால் பெருமழை பெய்யும். தன் கடமையை நிறைவேற்றியதால், விவசாயி பிரார்த்திக்க ஆரம்பிக்குமுன் மழை தானாகப் பெய்யும்; பிரார்த்தனை தேவை இல்லை. உழைப்பும், பொறுப்பும் உயர்ந்த பிரார்த்தனைகளாகும்.

ஒரு கட்டத்தில் முயற்சி நமக்குரியது. அதில் உயர்ந்த முயற்சி, ஆன்மீக முயற்சியான பிரார்த்தனை. நமக்கு முயற்சிக்குரியது என்ற வரைக்கும் பிரார்த்தனைக்கு இடம் உண்டு. அடுத்த கட்டத்தில் நம் முயற்சி முடிந்துவிட்டால், சரணாகதியை மேற்கொள்கிறோம். அங்கு முயற்சியில்லை. எனவே ஆன்மீக முயற்சியான பிரார்த்தனைக்கும் இடமில்லை. அன்னை இதே கருத்தை யோக மொழியில் சொல்லும் பொழுது “(ego) தான் எனும் உணர்வு உள்ளவரை முயற்சி அவசியம். தான் எனும் உணர்வு அழிந்தபின் முயற்சியும், அதன் வடிவமான பிரார்த்தனையும் தேவையில்லை” என்கிறார். தான் அழிந்தபின், மனித முயற்சியை அவனுள் உறையும் தெய்வமே நேரடியாக மேற்கொள்கிறது என்கிறார். முதற்கட்டத்தில் முயற்சியைக் குறைப்பதும், இரண்டாம் கட்டத்தில் முயற்சி எடுப்பதும் சரியில்லை. தவறாகவும் கருதப்படும். நாம் முதற்கட்டத்தை மட்டும் கருதுவதால், அதில் சிறந்த முயற்சியான பிரார்த்தனையை எப்படி மேற்கொள்வது என்பதை மட்டும் இக்கட்டுரையில் கருதுவோம்.

அன்னையிடம் நாம் காணும் முறையின் சிறப்பு ஒன்றை மட்டும் பிரார்த்தனையுடன் தொடர்புள்ளதால் கூறிவிட்டு மேலே போகிறேன். வாழ்க்கையில் ஒரு முயற்சியை மேற்கொண்டால் பிரார்த்தனை என மனிதன் அறிந்தது என்னவென்றால் அந்த முயற்சி உரிய காலத்தில்

வெற்றியடைவதே. கல்லூரியில் சேரும் மாணவன் பிரார்த்தனை செய்து அது பலித்தால், அவனது படிப்பு இடையூறின்றி முடிந்து, எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். அன்னை முடிவில் கிடைக்க வேண்டிய பலனை முதலிலேயே கொடுத்துவிடுவார்.

பிரார்த்தனை உயர்ந்தது, அற்புதங்களை நிகழ்த்தவல்லது என்பதனால், அதைச் சிறந்த முறையில் பயன்படுத்துமுன் எதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். ஆன்மீகப் பலன்களை அடைவதற்காகப் பயன்படுத்துவதே தலையாயது. தியானம் பலிக்க, சாந்தம் நிலவ, மௌனம் சித்திக்க, பக்குவம் பெற பிரார்த்தனையைப் பயன்படுத்துவதே அதற்குச் சிறப்பாகும். அதற்கு அடுத்தபடியாக, அறிவு வளர, நேர்மையைக் கடைப்பிடிக்க, கற்பனை சிறக்க, புது எண்ணங்கள் மனதில் உதிக்க பிரார்த்தனையைக் கையாளலாம். அடுத்த நிலையில் கலைவளம் பெருக, தைரியம் அதிகமாக, உற்சாகம் வளர பிரார்த்தனை செய்யலாம். கடைசியாக ஆயுள் வளர, ஆரோக்கியம் பெருக பிரார்த்திக்கலாம். ஆன்ம நலம், மன விசாலம், உயிர், உயிர் சிறப்பு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட பிரார்த்தனைகள் இவை. இக்கட்டுரையில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளையே முக்கியமாகக் கருதி, அதற்குப் பிரார்த்தனையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதுவதால் மேற்சொன்னவற்றை விளக்காமல் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறும் அளவுக்கே அவற்றை எடுத்துக்கொள்வோம்.

மனிதனுடைய பிரச்சினைகள் நமக்குப் பரிச்சயமானவை. அவற்றைப் பாகுபாடு செய்து சில உதாரணங்கள் மூலம் விளக்குமுன் பிரார்த்தனைக்குரிய முறையைக் கருதுவோம்.

பிரார்த்தனைக்கு ஜீவன் உண்டு:

பிரார்த்தனை சிறப்புற வேண்டுமானால் அதற்குரிய ஜீவன் சிறப்புறும் வகையிலும், நம்முடைய ஜீவனோடு பிரார்த்தனையின்

ஜீவன் சக்தி வாய்ந்த தொடர்புகொள்ளும் வகையிலும் பிரார்த்த– னையை நாட வேண்டும். பிரார்த்தனையின் சிறப்பை நாம் உணர்ந்து, அதன் ஜீவனின் உயர்வை நம் ஜீவன் உணர்ந்தால் முதல் கட்டம் வெற்றி பெறுகிறது. எளிய மொழியில் சொன்னால், “அவருக்குப் பிரார்த்தனை என்றால் உயிர். அது சம்பந்தமான விஷயங்களை லேசாகப் பேசாதே” என்று பிறர் சொல்லும்பொழுது நம் ஜீவனில் பிரார்த்தனையை இஷ்ட தெய்வமாக பிரதிஷ்டை செய்துவிட்டோம் என்று பொருள். நம் வாழ்க்கைக்குப் பிரார்த்தனை மையமாகவும், உயிருள்ள மையமாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாகத் திருமணம் ஆக வேண்டும், பரீட்சை பாஸாக வேண்டும் என்பன போன்ற பிரார்த்தனைகளை மேற்கொள்வதெப்படி என்பதைக் கருதுவதன் முன்பு பிரார்த்தனை என்ற முறையை எப்படி அனுஷ்டிப்பது என்பது அவசியம். இதற்குக் காலம், இடம், பிரச்சினை என்று பல அம்சங்களிருந்தாலும், பிரார்த்தனையை மிகவும் உயர்ந்த முறையில் கையாள அதன் ஜீவனுடன் நம் ஜீவன் தொடர்புகொண்ட பின் முதலாவதாகச் செய்ய வேண்டியது பிரார்த்தனைக்கு நம்முள் இடம் அளிப்பதாகும். பிரார்த்தனையின் பலன் இரு விஷயங்களைப் பொருத்தது. ஒன்று, இறை அருள். மற்றது, நம்முடைய தீவிரம். இறையருள் என்றும் ஒரே நிலையிலுள்ளது. நம் தீவிரத்தின் அளவு நம்மிடம் இருப்பதால், நம் தீவிரத்தை அதிகபட்சமுள்ளதாகச் செய்துகொள்ளுதல் முக்கியம்.

பிரார்த்தனைக்குரிய இலட்சணம்:

பிரார்த்தனையின் தீவிரம் நம்முடைய சக்தி (energy), மனத்தின் நிலை (level of concentration), பிரச்சினையைத் தீர்ப்பதில் உள்ள அக்கறை, பிரச்சினையின் உருவத்தைப் புரிந்து கொள்ளும் அளவு, பிரச்சினையில் நம் பங்கை விலக்க நாம் முன் வருதல் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

காலையில் நாம் தெம்புடன் இருக்கிறோம். அக்காரணத்தால் அந்த நேரம் பிரார்த்தனைக்குச் சிறந்தது. நமக்குச் சக்தி அதிகமாக இருந்தால் பிரச்சினை எளிதில் தீரும். மனம் எந்த அளவுக்கு ஒரு நிலைப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பிரச்சினை எளிதில் வழிவிடும். பிரச்சினை தீர்வதில் நமக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால், அது தீர்வுக்கு உதவும். பிரச்சினை உண்டான வழிவகை நமக்குப் புரியாவிட்டால், அது தீர அது ஒரு தடையாகும். ஏற்பட்ட வகை தெளிவாகத் தெரிந்தால், சுலபமாகத் தீரும். நாமே ஒரு வகையில் பிரச்சினை உருவாகக் காணரமாக இருந்திருந்தால், அதை விலக்கும் வரை பிரச்சினை தீராது. எனவே, பிரச்சினை தீர ஒரு பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன் அதற்குரிய நேரம் நாம் தெளிவு அதிகமாகப் பெற்ற நேரமாக குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டபின் கூடியவரை தினமும் அதே நேரத்தில் பிரார்த்தனையைத் துவக்க வேண்டும். மனம் ஒரு நிலைப்படுதல் அவசியம் என்பதால், பிரார்த்தனையை மேற்கொள்ள சில மணி முன்னர் மனத்தை நிலைப்படுத்தி, பிரச்சினையின் பக்கம் கொண்டுவந்து ஒரு நிலையாக இருக்க நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பிரச்சினையைத் தீர்க்க நம்முடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்று சோதனை செய்து, பிரார்த்தனையை ஆரம்பிக்குமுன் ஆர்வத்தை அதிகபட்சமாக்கிக் கொள்ளுதல் நலம். நமக்குரிய பங்கு என்று ஒன்று அதிலிருந்தால், பிரார்த்தனையை ஆரம்பிக்காமல், நம் பங்கை விலக்க முயன்று, விலக்கிய பின்னரே பிரார்த்தனையைத் துவங்க வேண்டும்.

இவ்வளவையும் நமக்குத் திருப்தியாகத் தயார் செய்தபின், மனத்தைச் சோதனை செய்தால், பிரார்த்தனை ஆரம்பித்த கொஞ்ச நாழிகைக்கெல்லாம் தானும் பேச ஆரம்பிக்கும். நாம் ஒரு பக்கம் பிரார்த்தனையைச் சொல்லிக்கொண்டிருந்தால், மனம் ஒரு பக்கம் வேறு ஒன்றைச் சொல்ல ஆரம்பிக்கும். மனம் 3 நிமிஷம் கழித்துப் பேச ஆரம்பித்தால், பிரார்த்தனையை 3ஆம் நிமிஷமே நிறுத்திவிடுதல் நல்லது. அடுத்த முறை பிரார்த்தனை சலனமின்றி 5 அல்லது 6

நிமிஷம் வரை பலிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக, நிமிஷம் நிமிஷமாக அதிகரித்து, பிரார்த்தனை 30 நிமிஷமானால் 30 நிமிஷமும் மனம் நிலையாக இருக்கும்படிக் கொணர்தல் அவசியம். மனத்தில் சலனம் பின்னணிக்குப் போனால் மௌனம் ஏற்பட்டு பிரார்த்தனையைச் சூழ்ந்துகொள்வது தெரியும். மௌனம் வளர நாம் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வளவு முஸ்தீபுகளையும் நமக்குத் திருப்தியாகச் செய்து, பின்னர் நேரம், இடம் குறிப்பிட்டு பிரார்த்தனையை ஆரம்பித்து, தினமும் தவறாது தொடர்ந்தால், பிரார்த்தனை அதற்குரிய இலட்சணத்துடனிருக்கிறது என்று பொருள்.

அப்படிப்பட்ட பிரார்த்தனை அதற்குரிய பலனைக் கொடுக்கும். அது தீவிரமானதொன்றானால், அதிக பலனை அளிக்கும். பிரார்த்தனையால் மனம் நெகிழ்ந்தால், பலன் உடனே கிடைக்கும். எடுத்த பிரார்த்தனையை ஒரு நாளும் தவறாமல் கைக்கொண்டால் பலன் நிச்சயமாகக் கிடைக்கும். குடும்பத்துப் பிரச்சினையாயிருந்து அனைவரும் பிரார்த்தனை செய்தால், பலன் அபரிமிதமாக இருக்கும். அண்ணனுக்கு வேலை வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்பொழுது, அண்ணன் தானே பிரார்த்தனை செய்ய முன்வந்தால் பலன் அதிகமாகச் சீக்கிரம் கிடைக்கும்.

பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன் நாம் செய்யக்கூடியது என்று ஒன்றிருந்தால், அதைப் பூர்த்தி செய்து பின் பிரார்த்தனை செய்தல் நல்லது. இல்லையெனில் பிரார்த்தனைத் திறனில் ஒரு பகுதி அந்தக் குறையை நிறை செய்யச் செலவாகும்.

ஒரு வேலையில் உள்ள எல்லாப் பொறுப்புகளையும் பூரணமாக நிறைவேற்றினால் பலன் கிடைக்கும். அங்கு பிரார்த்தனை தேவைப்படாது. பிரார்த்தனை தேவைப்பட்ட ஒன்றானாலும், பிரார்த்தனையின்றி பலிக்கும். ஏதாவது ஓர் அம்சம் குறையானால்தான்

பிரார்த்தனை தேவைப்படுகிறது. தன் பங்கைச் சரிவர முடித்துவிட்ட விவசாயி, மழை தன் கையில் இல்லாததால் பிரார்த்தனை செய்தால் உடனே மழை பெய்யும். பிரார்த்தனையே செய்யாவிட்டாலும் கடமைகளை நிறைவேற்றிய காரணத்தால் மழை தானே பெய்யும் என முன்னரே குறிப்பிட்டேன்.

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நம் பங்கைச் சரிவர முடித்துவிட்டோம்; தலைவர் நேரத்தில் வருவதோ, கூட்டம் நடக்கும் பொழுது மின்சாரம் தடைப்படாமலிருப்பதோ, நாம் மேடையில் பேசும்பொழுது பேச்சு நினைவுக்கு வருவதோ, நம் கையில் இல்லை. இதுபோல் ஓர் அம்சம் குறைவுபட்டால், பிரார்த்தனை தேவைப்படுகிறது. நம்மால் முடிந்த அத்தனையும் செய்தபின் நம் கையில் இல்லாத அம்சத்தால் குறை வரக்கூடாது என்று செய்யும் பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும். நம் திறன் முடியும் இடத்தில் அன்னை செயல்பட ஆரம்பிக்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதை அனுபவம் காண்பிக்கும்.

அகவுணர்வும் புற நிகழ்ச்சியும்:

ஒரு காரியத்தில் 10 விஷயங்கள் அடங்கியிருக்கும்பொழுது 9 விஷயங்கள் நம் கையில் இருந்தாலும், பத்தாவது விஷயம் நம் கையில் இல்லாவிட்டால், 9 விஷயங்களிலும் நம்மால் செய்யக்கூடியவற்றை முடித்தபின், அன்னை அந்தப் பத்தாவது விஷயத்தை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்பிக்கையால்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. நம்பிக்கையால் ஏற்றுக்கொண்டால் போதும். இருந்தாலும், அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்கலாம்.

ஆன்மீக அடிப்படையில் வெளி நிகழ்ச்சிகளும், மன நிலையும் ஒன்றே. நம் கண்ணுக்குத் தெரிவது வெளி நிகழ்ச்சி; அகவுணர்வு

தெரிவதில்லை. தெரிந்தால் புரிவதில்லை. புற நிகழ்ச்சி அகவுணர்வின் பிரதிபலிப்பு என்பது ஆன்மீகக் கருத்து. வேலை போய்விட்டது. போன வேலை திரும்பக் கிடைக்க, பொதுவாக ஒரு வருஷமாகும். இதுவரை என் அனுபவம் அதுவே என்றவர்க்கு மேற்சொன்ன கருத்தைச் சொல்லி, அகவுணர்வைப் பூர்த்தி செய்தால் வேலை கிடைக்கும். அதற்கு ஒரு வருஷம் உங்கள் அனுபவம் எந்த நிமிஷம் அகவுணர்வு பூர்த்தியாகிறதோ, அதே சமயத்தில் வேலை கிடைக்கும்‘ என்று சொன்னால், அவர் நான் வேலை வேண்டும் என்றுதானே நினைக்கின்றேன்; பூர்த்தி செய்ய என்ன இருக்கிறது‘ என்று கேட்கிறார். வேலை வேண்டும் என்பது வேறு. வேலை செய்யப் பிரியப்படுகிறேன் என்பது வேறன்றோ? வேலை செய்யப் பிரியப்படாததால், வேலை போயிற்று. அந்த மனநிலைக்குரிய புற நிகழ்ச்சி வேலை போவது. அந்த மனநிலையை மாற்றி, உண்மையாகவே மாற்றி, இப்பொழுது வேலை செய்ய வேண்டும் என்ற பிரியத்தை மனதில் ஏற்படுத்தினால், அகவுணர்வு பூர்த்தியாகிறது. அப்படி மனத்தை மாற்றி, உள்ளுணர்வைப் பூர்த்தி செய்தபின், வெளிநாட்டிலிருந்து செல்வாக்குள்ள உறவினர் வீட்டுக்கு வந்து உள்ளூரில் பெரிய கம்பெனியில் பெரிய வேலைக்கு ஏற்பாடு செய்து 15ஆம் நாள் வேலையில் சேர்ந்தார் ஒருவர்.

நமக்குப் புற நிகழ்ச்சியாகத் தெரிவது அகவுணர்ச்சியின் பிரதிபலிப்பே. புற நிகழ்ச்சி நம் கையில் இல்லை; அகவுணர்ச்சி நம் கட்டுப்பாட்டுக்குட்பட்டது. அதை மாற்றும் திறன் நமக்குண்டு. அதைச் செய்ய முன்வருவோர்க்கு வெளிநிகழ்ச்சிகள் அதே சமயத்தில் கட்டுப்படும். பிரார்த்தனை பலிக்க உதவி செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று.

ஓர் அமெரிக்கருக்குச் சிறு வயதிலிருந்து ஒரு கதை எழுதி வெளியிட வேண்டும் என்ற அவா அதிகமாகவுண்டு. 6 வயதில் ஒரு கதை எழுதினார். M.A. முடித்தபின் பிரபலமான தினசரி பேப்பரில் நிருபராக வேலை செய்தார். வெளிவரும் ஒவ்வொரு கதையையும்

படிப்பார். தாம் எழுத இருக்கும் கதை‘யுடன் ஒப்பிடுவார். எப்படியாவது ஒரு புத்தகம் தம் பெயரில் வெளிவர வேண்டுமென்ற ஆவல் மிகுந்து இருந்தது. தென் அமெரிக்காவில் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகச் சென்றார். இங்கிலாந்தில் ஒரு சர்வதேச மாத இதழுக்கு 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அபிலாஷை பூர்த்தியாகவில்லை. ஆசிரியராகப் பிறர் எழுதுவதை வெளியிடும் பாக்கியமே கிடைத்தது. மேலும் உயர்ந்த பதவிகளை எட்டினார். வயது 50ஐத் தாண்டியது. அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆசிரமம் வந்தார். ஓர் உயர்ந்த புஸ்தகம் எழுத நிறைந்த கருத்துகளை வைத்துக்கொண்டு, அதை வெளியிடும் தகுதியில்லாமல் தகுதியுடைய ஒருவரைத் தேடிக்கொண்டு இருக்கும் இளைஞரைச் சந்தித்தார். இவருடைய தகுதி மிக உயர்ந்தது. நிருபர், ஆசிரியர் பதவிகளை வகித்து, அதைவிட உயர்ந்தவர். கதை எழுத முடியவில்லை. தம் துறையில் இளைஞர் புதுக்கருத்துகள் சொல்வதைக் கேட்டார். இளைஞருடைய கருத்தும், இவருடைய தகுதியும் சேர்ந்து புத்தகம் வெளிவந்தது. 5 மொழிகளில் பிரசுரம் ஆயிற்று. இவருக்கிருந்த ஆர்வம் பெரியது. அது அபிலாஷையாகவே இருந்தது. அதற்குரிய திறமையில்லை. தம் துறையிலும் எழுதக்கூடிய தகுதியில்லை; வெளியிடக்கூடிய அந்தஸ்து இருந்தது. அன்னையிடம் வந்தவுடன் இவருடைய ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய, இவரிடம் எந்தக் குறையிருந்ததோ அதை இன்னொருவர் நிறைவு மூலம் பூர்த்தி செய்தார் அன்னை. வாழ்க்கை பூர்த்தி செய்யாத விஷயங்களை, பூர்த்தி செய்யத் திறமையில்லாத விஷயங்களை அன்னை பூர்த்தி செய்கிறார். அன்னையின் குறிக்கோள் சிருஷ்டி. அதாவது புதியன படைத்தல். ஒருவருக்கு எழுத்துத் திறமையிருக்கிறது; வெளியிடும் அந்தஸ்து இல்லை. மற்றொருவருக்குப் புத்தகத்தை வெளியிடும் அந்தஸ்து (social status) இருக்கிறது; எழுதும் திறமையில்லை. இவையிரண்டும் சேர்ந்தால் புத்தகம் என்பது சிருஷ்டிக்கப்படும். அது போன்ற சிருஷ்டியை அன்னை அனுதினமும் செய்துகொண்டிருப்பதால் நமக்குள்ள திறமையெல்லாம் செலவு செய்து முயற்சியை முடித்தபின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், நமக்கில்லாத விஷயத்தைக்

கொண்டுவந்து சேர்த்து, பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்.

திறமையில்லாத பணக்கார முதலாளிக்குத் திறமையும், நேர்மையும் உள்ள மானேஜர் அமைந்தால், அதை அதிர்ஷ்டம் என்கிறோம். நேர்மையே இல்லாத வல்லுநரை எவரும் நம்பி வேலை கொடுக்கமாட்டார்கள். வல்லுநராக (expert) இருந்தால் மட்டும் போதாது, நேர்மையும் வேண்டும். நேர்மையான பார்ட்னர் கிடைப்பதை அதிர்ஷ்டம் என்கிறோம். பொறுப்பில்லாத கணவனுக்கு பொறுப்புள்ள மனைவி அமைவதை அதிர்ஷ்டம் என்பது வழக்கம். நமக்கு எது இருக்கிறது, எது இல்லை என்ற பிரச்சினையில்லை. இருப்பதை முழுவதுமாகப் பயன்படுத்தியபின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், இல்லாத அனைத்தையும் மற்றவர்கள் மூலமாகவும், புது சந்தர்ப்பங்கள் மூலமாகவும் அன்னை பூர்த்தி செய்வது வழக்கம். அதுவே அன்னைக்கு உரிய சிறப்பு. சிறப்பால் தவறாது அன்னை நம் வாழ்வில் செயல்பட நாம் செய்ய வேண்டியது பிரார்த்தனை. பிரார்த்தனையை அதற்குரிய ஆன்மீக இலட்சணத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். பிரார்த்தனையை ஆரம்பிக்குமுன் அதற்குரிய நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்ய வேண்டும். நம் கடமைகளையும், திறமைகளையும் முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும் (exhaust) என்பது ஒரு நிபந்தனை. இது போன்ற பிரார்த்தனை தவறியதை நான் 31 வருஷ காலத்தில் ஒரு முறையும் பார்த்ததில்லை. எவரும் கண்டதாக நான் கேட்டதும் இல்லை.

பிரார்த்தனையை எளிதாகவும் கருதலாம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பெரிய விஷயமாகவும் கருதலாம். அப்படிக் கருதினால், பிரார்த்தனைக்குரிய ஒவ்வொரு அம்சத்தையும் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கி எழுத முயன்றால், அது கட்டுரையாக ஆரம்பித்து புத்தகமாக வளர்ந்துவிடும். இக்கட்டுரையில் முக்கியமான எல்லா அம்சங்களையும் குறிப்பிட்டு, சில சிறப்பான உதாரணங்– களையும், குறிப்பான நிகழ்ச்சிகளையும் மட்டும் சொல்கிறேன்.

பிரார்த்தனையின் ஜீவனோடு தொடர்புகொண்டு அதை ஆரம்பிக்க நேரம், இடம் குறிப்பிட்டு, அதற்குமுன் நம் கடமைகளை எல்லாம் பூர்த்தி செய்தபின், நாம் எடுத்துக்கொண்ட பிரச்சினையை அன்னை முன் வைத்தபின், என்ன வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒரு கேள்வி. அதற்குரிய பதில்கள் பல.

கடன் கொடுத்தோம். இனி வாராது என்ற நிலையில், இந்தக் கடன் திரும்பி வர வேண்டும்‘ என்றாவது, வட்டியுடன் வர வேண்டும்‘ என்றாவது, ஒரே மாதத்தில் கிடைக்க வேண்டும்‘ என்றாவது குறிப்பாகப் பிரார்த்தனை செய்யலாம். பெரும்பாலும் பிரார்த்தனை செய்தபடியே பூர்த்தியாகும். அப்படியில்லை என்றால், அதைவிட ஒரு பெரிய நல்லதைக் கொடுப்பதற்கு மட்டுமே அன்னை எதிர்பார்க்கும் பலனை மாற்றுவார்.