மனநிம்மதி என்பது கிடைக்க பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எது கிடைத்தாலும் கிடைக்கும், மனநிம்மதி கிடைப்பது அரிது என்பது நம்முடைய அனுபவம். பதவி உயர உயர நிம்மதி குறைவது இயல்பு. சொத்து, பதவி, அந்தஸ்தை எல்லோரும் விரும்புகிறார்கள். அத்துடன் இன்றுள்ள அமைதி அவை எல்லாம் கிடைத்தபின் இருக்குமா என்றால், இருப்பது கடினம் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
கடவுள் சிருஷ்டியை வர்ணிக்கும் செய்யுள் ஒன்று. கடவுள் மனிதனைச் சிருஷ்டிக்கின்றார். பின்னர் தன்னருகேயுள்ள பல பாத்திரங்களிலுள்ள செல்வங்களை அவன் மீது வர்ஷிக்கின்றார். முதலில் ஆரோக்கியம்‘ என்ற பாத்திரத்தை எடுத்து அவனுக்கு அபிஷேகமாகத் தலை மீது கொட்டினார். பின்னர் கல்வி‘, தைரியம்‘, செல்வம்‘, சந்தோஷம்‘ என அங்கிருந்த அத்தனைப் பாத்திரங்களிலும் உள்ளதை, ஒன்று போக, மீதியை அவனுக்குக் கொடுத்துவிட்டார். அருகே இருந்தவர், கடைசிப் பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முற்பட்டு, அதிலுள்ளது நிம்மதி‘ என்று அறிகிறார். கடவுள் அதை அவனுக்குக் கொடுக்கப்போவதில்லை என அறிந்த அவர், “ஏன் அதைக் கொடுக்கவில்லை?” என்று கடவுளைக் கேட்டதாகச் செய்யுள் எழுதப்பட்டுள்ளது. “அதையும் கொடுத்து விட்டால் மனிதன் என்னை மறந்துவிடுவான்” என கடவுள் பதிலிறுத்ததாகச் செய்யுள் முடிகிறது. உலகத்தில் மனநிம்மதி பெறுவது அரிது என்ற கருத்தை ஆண்டவன் செயலாகவே வர்ணிக்கும் செய்யுள்
அது. நம்மை ஆழ்ந்து நோக்கினால், நாம் வாழும் உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி நினைத்துப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். இது போன்ற பெரிய உண்மைகளை அன்னை எப்பொழுதும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அதையே முடிவானதாகக் கொள்ள மாட்டார். அன்னை இது சம்பந்தமாக நமக்கு அறிவுறுத்துவது வேறு. ஆரோக்கியம், சக்தி (energy), அறிவு, உணர்வு, உற்சாகம், சந்தோஷம் ஆகியவை நம் வாழ்வில் அளவிறந்து ஏற்பட்டுள்ளன. அதேபோல் மனநிம்மதியும் எல்லையற்ற அளவில் நம் வாழ்வில் இருக்கின்றது. நாம் வாழ்வை அமைத்துக்கொண்ட வகையால், இயற்கையையும், இறைவனையும் விட்டுக் கொஞ்சம் அகன்று வருவதால் ஆரோக்கியம், சந்தோஷம் ஆகியவை குன்றிவருகின்றன. அதேபோல் மனநிம்மதி குறைவதும் நாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையால்தானே தவிர, நம் நிம்மதிக்குக் குறைவில்லை என்பது அன்னையின் கருத்து. தன்னிடம் வரும் அன்பர்களுக்கு இந்தக் கருத்தைச் செயலில் விளங்குவது போல் முதலேயே அன்பரின் மனத்தில் நிம்மதியை உற்பத்தி செய்து, அன்னையைப் பற்றி நினைத்தமாத்திரம் மனம் நிம்மதியடைகிறது‘ என்று சொல்லும் வகையில் மனத்தை மாற்றிவிடுகிறார். தாமிருக்கும் இடம் வந்தாலும், தம்மைப் பற்றிப் படிப்பவருக்கும், தன்னை மனதார நினைப்பவருக்கும் மனதில் உடனே நிம்மதியை உற்பத்தி செய்வது அன்னையின் இயல்பு.
சாதாரண மனிதன் எப்படி இந்த நிம்மதியைப் பூரணமாக, நிலையாகப் பெறலாம்? அவன் நிம்மதியிலிருந்து விலகுவது எதனால்? எப்படித் திரும்ப வரலாம்? அதை நிலைபெறச் செய்யலாம்? அறிவும், உணர்வும், செயலும், பிரார்த்தனையும், அன்னை நினைவும் அதற்கு எப்படி உதவி செய்யும் என்பதைப் பற்றியதே இக்கட்டுரை. 62 வயதான அமெரிக்கப் பெண்மணி தம் உறவினர்கள் ஆசிரமத்தில் வந்து கொஞ்ச நாள் தங்கியிருக்கின்றார்கள் எனக் கேள்வியுற்று, ஒரு மாதம் தம் வேலையிலிருந்து லீவு பெற்று, தாமும் ஆசிரமம் வர வேண்டும் என்று வந்தார். இங்குள்ள அமைதி அவரை
ஆட்கொண்டது. இது போன்ற அமைதியுணர்வை தம் வாழ்நாளில் ஒரு நிமிஷம்கூடக் கண்டதில்லை என்பதைப் பல முறை பலரிடம் சொன்னார். தம் 3 வருஷ சர்வீஸை முன்னதாகவே முடித்துக் கொண்டு, அமெரிக்காவிலுள்ள தம் வீட்டைக் காலி செய்து, நிரந்தரமாக அந்த அமைதியை அனுபவிக்க வேண்டி, பாண்டிச்சேரிக்கே வந்துவிட்டார். அவரைவிட வயது அதிகமான இந்தியப் பெண்மணி ஒருவர் மாதம் ஒரு முறை சமாதி தரிசனத்திற்கு வந்து, ஒவ்வொரு முறையும் சில நாள் தங்குவார். ஒரு முறை நெடுநாள் தங்கி, “கடந்த 25 வருஷகாலமாக நான் பெறாத நிம்மதி எனக்கு இப்பொழுது இங்கே கிடைக்கிறது. அளவுகடந்த நிம்மதியுடனும், சந்தோஷத்துடனுமிருக்கின்றேன்” என்று மகளுக்குக் கடிதமெழுதினார். “நிம்மதியும், சந்தோஷமும் கிடைத்தற்கரியவை. செல்வமும், பதவியும்கூட கிடைக்கலாம். கிடைத்தற்கரியவை உங்களுக்குக் கிடைத்திருப்பது பாக்கியம்” என மகள் பதிலெழுதினார். பொதுவாகத் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு இயல்பாக அன்னை அளிக்கும் நிம்மதி என்ற பரிசு இது.
பயம், கவலை, சோகம், வறுமை, ஏமாற்றம், விரக்தி, சந்தேகம், சோர்வு போன்ற உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து வரும். ஒன்று மற்றதை உற்பத்தி செய்யும். ஒன்று மற்றதை அதிகப்படுத்தும். நிம்மதியைக் குலைப்பது கவலை. எனவே முக்கியமாக நாம் கருத வேண்டியது கவலை. இது எப்படி ஏற்படுகிறது? இதை எப்படி அழிக்கலாம்? என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. என்றாலும், இரண்டாம்பட்சமாக மற்ற மேற்சொல்லிய குணங்களும் கலந்து வரும். அவற்றுள் பயம், சந்தேகம் முக்கியமானவை. நிம்மதியை ஏற்படுத்த முக்கியமாகக் கவலையையும், அடுத்தபடியாக பயம், சந்தேகம் ஆகிய இரண்டையும் எப்படி அழிப்பது என்று விளக்கமாகக் கருதுவோம். நிம்மதியை நேரடியாக அதிகப்படுத்தும் முறைகளையும், அதற்கு எதிரானவற்றை அழித்து, அதன் மூலம் அதிகப்படுத்தும் முறைகளையும் சில உதாரணங்கள் மூலம் சொல்லலாம். பல
நிகழ்ச்சிகளுக்குப் பொதுவான முறைகளை பொதுவாகவும், குறிப்பிட்ட உதாரணத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறைகளை அதனுடன் இணைத்தும் விளக்க முயல்கிறேன்.
ஒரு சாதாரண குடும்பத்துப் பெண் திருமணமாகி மாமியார் வீடு சென்றாள். மாமியாருக்கு மருமகளை அளவுகடந்து பிடித்து விட்டது. மற்ற 4 மருமகள்களையும் விட்டுவிட்டு மாமியார் தன் மகளிடம் செலுத்தாத அன்பையும் இந்த மருமகளிடம் காட்டினாள். கணவன், மனைவி மீது உயிரையே வைத்திருந்தார். 6 மாதம் கழித்து அப்பெண் தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் இவற்றையெல்லாம் விவரித்துவிட்டு தனக்கு எந்தக் குறையுமில்லை. ஆனால், “நம் வீட்டில் இருந்த ஆழ்ந்த அமைதி மட்டும் ஏனோ இங்கில்லை” என்று எழுதி இருந்தாள். அவள் குடும்பம் ஆழ்ந்த அன்பும், பண்பும் இயல்பாக நிறைந்துள்ள இடம். பல தலைமுறைகளாக முறையாக வாழ்ந்த குடும்பம் என்பதால் அன்பையும், பண்பையும் சிறப்பானதாகக் கருதாமல், இயல்பான ஒன்றாகக் கருதிய இடம். அக்குடும்பத்தினர் ஆழ்ந்த நிம்மதியைத் தாங்கள் அனுபவிப்பதை உணராமலேயே என்றென்றும் பெற்றிருந்தனர். அன்பு (affection) என்பது தெய்வீக இயல்பு. பாசம், பற்று என்பது மனித குணம். அன்புக்குரியது ஆன்மா எனப்படும் சைத்திய புருஷனேயாகும். சைத்திய புருஷனுக்கு அன்பு எப்படி இயல்பானதோ, அதேபோல் சாந்தமும் இயல்பானது. அன்பு நிறைந்த குடும்பம் அமைதி தவழும் இடமாகும்.
இந்தப் பெண் புகுந்த வீடு எல்லா வகைகளிலும் இவளுக்குப் பொருத்தமானதென்றாலும், உயர்ந்த குடும்பங்களுக்குரிய சிறந்த இலட்சணமான அன்பைப் பரம்பரையாகப் பெற்றதன்று. அவளுடைய அகவுணர்வு அதை அவளுக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது. “என் வீட்டில் சண்டை, சச்சரவு என்று நான் பார்த்ததேயில்லை” என்று ஒருவர் தம் 30வது வயதில் சொன்னால், அவருடைய குடும்பம் அன்பான ஒன்று என்று அர்த்தம். நிம்மதியை நிலையாக வாழ்வில் அனைவரும் பெற வேண்டுமானால், குடும்பம் அன்புக்கும், பண்புக்கும்
உறைவிடமாக இருக்க வேண்டும். இது வாழ்வின் நியதி. இதை எட்டியவர்கள் உண்டு. நிலையான மனநிம்மதியை நிறைவாக அனைவரும் அன்னை வழிபாட்டின் பலனாகப் பெறுவதெப்படி என்று நாம் கருதும்பொழுது சிறப்பான சிலருக்கு மட்டும் பொருந்தும் உயர்ந்த நிலைகளை மட்டும் முறையாக வற்புறுத்த இயலாது. அனைவராலும் முடியக்கூடிய முறைகளையே நாம் குறிப்பிட வேண்டும்.
ஒரு நாள் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், சலூனுக்குப் போய் தலைமுடியை அலங்காரம் செய்துகொள். ஒரு வாரம் சந்தோஷம் வேண்டுமானால் குதிரை வாங்கு. ஒரு மாத சந்தோஷத்திற்குக் கல்யாணமும், ஒரு வருஷ சந்தோஷத்திற்குப் புதிய வீடு கட்டுவதும், நிரந்தரமான சந்தோஷத்திற்கு நேர்மையைக் கடைப்பிடித்தலும் தேவை‘ என ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. நேர்மை நிலையான சந்தோஷத்தையும், அதன் அடுத்த பலனாக மனநிம்மதியையும் தவறாமல் கொடுக்கும் என்பது நெடுநாள் வாழ்ந்தவர்களுடைய அனுபவம். அதுவே இங்கிலாந்தில் பழமொழியாக வழங்குகிறது. இதில் உள்ள உண்மையை எவரும் ஏற்றுக் கொள்வார்கள். இதை மேலும் ஆழ்ந்து கருதவேண்டி, மனநிம்மதியின் தலையாய எதிரி யார் என்று ஆராய்ச்சி செய்தால், அது கவலை என்று தெரியும். கவலையை முக்கியமாக உற்பத்தி செய்யும் புற நிகழ்ச்சிகளைத் தற்சமயத்திற்குக் கருதாது, அதன் உற்பத்தி ஸ்தானம் அகவுணர்வில் எது என்று கவனித்தால், அது சந்தேகம் என்று தெரியும். எந்தக் கவலையையும் அலசிப்பார்த்தால், அதனடியில் ஒரு சந்தேகம் புதைந்திருப்பது உண்டு. மனநிம்மதியை அழிக்கும் கவலையை உற்பத்தி செய்யும் சந்தேகத்தை அதன் வேரிலேயே அழிக்கக்கூடியது ஒன்றுண்டு; அது நம்பிக்கை. நம்பிக்கையை முழுவதும் ஏற்படுத்துவது பெரிய வேலை என்பதால் அதை ஒதுக்கி, நமக்குள்ள சந்தேகத்திற்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்று முயன்றால், அது எல்லோராலும் முடியக்கூடியதாகும். எளிமையான மனிதனும் தன்னால் முடியாது என்று சொல்ல முடியாத
ஒரு முறையாகும். அதுவும் தெய்வ நம்பிக்கையாக அது இருந்தால் பலன் சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கையில் வீடு, பாக்டரி, ஆபீஸ், பொதுவாழ்வு ஆகிய இடங்களில் உள்ள நிம்மதியைக் குலைக்கும் நிகழ்ச்சிகளை எடுத்து, அங்கு எப்படி நிம்மதியை ஏற்படுத்தலாம், அதன் அடிப்படையான சந்தேகத்தை அகற்றலாம், அதன் எதிரியான நம்பிக்கையை உற்பத்தி செய்யலாம் எனக் கருதும் முயற்சியே இது.
அன்னையின் அருளுக்கு மனிதனுடைய பிரச்சினை சிறியது. கவலையை ஒழித்து, நம்பிக்கையை ஏற்படுத்த பல பெரிய வழிகள் உண்டு. மனிதன் எளிமையானவன். பிரச்சினைகள் அவனுக்குப் பயங்கரமாக இருக்கலாம். அவற்றைத் தீர்ப்பது அவ்வளவு சிரமம் இல்லை. ஒரு வகையில் மனிதன் எளிமையானவனானாலும், மற்றொரு வகையில் மனிதன் எதிலும் பிடிபடாதவன். ஒருவரைத் திருப்தி செய்ய முயன்றால், அது எவ்வளவு சிரமம் என்றுத் தெரியும். எவ்வளவு வந்தாலும், எது வந்தாலும் திருப்திபடாத மனம் உண்டு. மேலும் எதிர்பார்ப்பவர்களுண்டு. மனிதன் திருப்திபட வேண்டுமானால், அளவுகடந்து அவன் பெற வேண்டும். 9,000 ரூபாயைக் காணிக்கையாகச் செலுத்தி ஒருவர், “ஆசிரமம் வந்தபின் வாழ்க்கை நல்லவிதமாக இருக்கிறது” என்றார். அவர் சொல்லியதன் பொருளை அவருடைய நண்பர் பின்னொரு சமயம் விளக்கினார். “ஒரு சைக்கிள் வைத்துக்கொண்டு கடை, கடையாகப் போய்க்கொண்டிருந்தார். இங்கு வந்தார். சில வருஷங்களில் 20 இலட்சம் சம்பாதித்துவிட்டார்” என்று அவருடைய நண்பர் சொன்னார். மனிதன் திருப்திபட வேண்டுமானால் அளவுகடந்து, அபரிமிதமாக அவனுக்குச் செல்வமும், வளமும் பெருக வேண்டும். 500 ரூபாயை மொத்தமாக ஒரு மாதத்தில் பார்க்காத குடும்பத்துப் பிரச்சினைகள் அனைத்தும் மாதம் ரூ.1,000 வந்தால் மறைந்துவிடும். மனநிலை லேசாக ஒரு படியுயர்ந்தால், கவலை ஒழிந்து நம்பிக்கை பிறந்துவிடும்; மனநிம்மதி ஏற்பட்டுவிடும். அன்னை அதை அபரிமிதமாக முதலிலேயே கொடுப்பார்.
அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும் நிலைமையில் மாற்றம் செய்யக்கூடியது ஏதாவது உண்டா? மனதை மாற்றிக்கொள்ள இடம் உண்டா? மனப்பாங்கை மாற்றிப் பலனடைய வழியுண்டா? என்று சிந்தித்து, அங்கெல்லாம் நம்மால் முடிந்தவற்றைச் செய்தால், அதற்குள் கெட்டுப்போன மனநிம்மதி மனதில் மலர ஆரம்பிக்கும். அதன்பின் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை முழுவதுமாகப் பலிக்கும். இன்றைய கவலை நாளைய நிம்மதியாகும். மாற்றம் வரும்பொழுது முதலில் கவலை ஒழிந்தது என்றாகும். அடுத்த நிலையில் நிம்மதி ஏற்பட்டது என்றுத் தெரியும். மூன்றாம் கட்டத்தில் சந்தோஷம் பிறக்கும். வேறு வகையாகப் பார்த்தால், நாம் எது செய்தாலும், செய்யா விட்டாலும் அன்னையை ஏற்றுக்கொண்டபின் அதே மூன்று நிலைகளும் ஆண்டுக்கு ஒன்றாகத் தானாக வருவதையும் காணலாம். வேறு கோணத்தில் பார்த்தால், நான் மட்டும் அன்னையை ஏற்றுக் கொண்டபொழுது முதல் கட்டமும், கணவனும் ஏற்றுக்கொண்டபின் இரண்டாம் நிலையும், குடும்பத்தார் அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில் மூன்றாவது பலனும் கிடைப்பதைப் பார்க்கலாம். செயலை தல் நிலையாகவும், உணர்வை இரண்டாம் நிலையாகவும், அறிவை மூன்றாம் நிலையாகவும் கருதினாலும், மேற்சொன்ன மூன்று கட்டங்களும் கவலை ஒழிந்தது, நிம்மதி ஏற்பட்டது, சந்தோஷம் உற்பத்தியாயிற்று என்ற மூன்று கட்டங்களும் படிப்படியாகத் தெரியும். நமக்குப் புரியாவிட்டாலும் நல்ல முறை என்று ஒருவர் சொல்வதை மனம் அறிந்துகொள்ளாவிட்டாலும், செயலால் செய்தால் முதல் நிலை பலனுண்டு. உணர்வு அம்முறையை ஏற்றுக்கொண்டு செய்தால் இரண்டாம் நிலை பலனுண்டு. அறிவும் அம்முறையைப் புரிந்து, மனமார ஏற்றுக்கொண்டபின், அம்முறையை மனமார, உளமார செயல்படுத்த முடியும். அந்நிலையில் கடைசி கட்டப் பலனாக சந்தோஷம் பிறக்கும். கவலையால் பீடிக்கப்பட்ட மனிதனுக்கு எந்தப் பலன் வந்தாலும் போதும்; கவலை அழிந்து நிம்மதி எந்த வழியில் வந்தாலும் போதும். அதற்குரிய முறைகளும், முயற்சியும் எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடியவை; செயல்படுத்தக்கூடியவை.
நம் மீது அநியாயமான பழியைச் சுமத்தியவுடன் மனம் பதறுகிறது; துடிக்கின்றது; கொந்தளிக்கின்றது. நாடி ஜோஸ்யம் பார்த்தவுடன் போன ஜென்மத்தில் நாம் செய்ததன் பலன் அது என்று தெரிந்தவுடன் பதைப்பும், துடிப்பும் அடங்கி, மனம் அதை ஏற்றுக்கொள்கிறது. ஜோஸ்யத்தைப் பார்ப்பவன் கர்மத்தை ஏற்றுக் கொள்கிறான். அனுபவசாலி நாட்டிலுள்ள யதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறான். படித்தவன் சட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக் கொள்கிறான். நமக்கு வந்த கஷ்டத்தைக் கண்டு பதறும் மனம், அதன் காரணத்தைக் கர்மமாகவோ, நடைமுறையாகவோ, சட்டமாகவோ உணரும்பொழுது பதட்டத்தை விட்டுப் பக்குவப்படுகிறது. அன்னை பக்தர்களுக்கும் அதே நியதியுண்டு. ஆனால் ஒரு மாற்றம், வாழ்க்கையில் தன் காரியத்தைத் தோற்று, அதற்குரிய காரணத்தைப் புரிந்து, மனம் அடங்குகிறது. அன்னை பக்தர்களுக்கும் மனம் அடங்கும். ஆனால் அந்த நிலை மூலமாக மனநிம்மதி ஏற்படும். தோல்வியை ஏற்றுக்கொள்வதே வாழ்க்கை அளிக்கும் விவேகம். வெற்றியை மட்டும் உறுதிப்படுத்துவதே அன்னை வழி. நம் காரியங்கள் கெட்டுப்போய் மனநிம்மதி அழிந்த நிலையில் அன்னையை நினைத்து, அவர் முறைகளைப் பரிசீலனை செய்தால், அவர் முறைகளைக் கடைப்பிடிக்கும்முன் நாம் சரி செய்யக்கூடியவற்றைச் சரி செய்தால், அந்தக் காரியம் எப்படிக் கூடிவரும் என்று நமக்குப் புரியும். கூடிவர ஆரம்பிக்கும். அதன் மூலம் நிம்மதி ஏற்படும். வெற்றி மட்டுமே உண்டு என்ற உண்மை அன்னை வாழ்வில் யதார்த்தமாகப் புரியும். அதன் மூலம் ஏற்படும் நிம்மதி, மேலும் நிலையான சந்தோஷத்தை உற்பத்தி செய்யும். வாழ்க்கையில் அனுபவசாலிக்கும், விவேகிக்கும், அறிவாளிக்கும் ஏற்படும் நிம்மதி தோல்வியை ஏற்கும் பக்குவத்தை அளிக்கிறது. அன்னை வாழ்வில் சாதாரண அன்பர்களுக்கு ஏற்படும் நிம்மதி வெற்றியை உறுதிபடுத்தி, மேலும் சந்தோஷத்தை உற்பத்தி செய்கிறது. மனித வாழ்வுக்கும், அன்னை நமக்களிக்கும் வாழ்வுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இது. தெளிவில்லாமல் அன்னையை ஏற்றுக்கொண்ட நிலையிலும் கிடைக்கும் பலன் இது. இதைத்
தெளிவோடு பெற்று, நிம்மதியை நிலைநிறுத்தி, சந்தோஷத்தை நிரந்தரமாக்க அன்பர்களால் முடியும் என்பதைப் பல கோணத்தில் இருந்தும் விளக்கவே நான் முயல்கிறேன்.
கவலையும், பயமும் நிம்மதியின் எதிரிகள். போதுமான படிப்பு இல்லாதவனுக்கு நகர வாழ்க்கையின் அம்சங்கள் விவரம் புரியாததால் பயத்தை உண்டு பண்ணுவது வழக்கம். விவரம் தெரிந்தவுடன் பயமும், அதனால் ஏற்பட்ட கவலையும் போவதுண்டு. உடலைப் பற்றிய விவரங்கள் டாக்டருக்குத் தெரிவதுபோல் நமக்கும் தெரிய முடியாது. நமக்குப் பீதி உண்டுபண்ணக்கூடிய வியாதிகளை டாக்டர் விவரம் தெரிவதால் எளிமையாகக் கருதுகிறார். அவருடைய விளக்கம் நமக்குத் தெரிந்தவுடன் அறியாமையால் ஏற்பட்ட பயம் விலகி, மனம் நிதானமடைகிறது. சொத்து, சட்ட விஷயங்களிலும் அனுபவம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் கலக்கம் வக்கீலைக் கலந்தவுடன் போய்விடும். அதேபோல் வயது முதிர்ந்தவர்களில் சிலர் விவேகியாக இருப்பார்கள்; அனுபவத்தால் வாழ்க்கையின் சூட்சுமங்களை அறிந்து இருப்பார்கள். நிலைகலங்கிய மனிதர்களுக்கு நிதானமாக அறிவுரை சொல்லி, நிமிஷத்தில் அழுகையைச் சிரிப்பாக மாற்றும் பழக்கம் அவர்களுக்குண்டு.
குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள், அனுபவசாலிகள், பழுத்த பழமாக வாழ்வின் கடைசி கட்டத்திலிருப்பவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மலைபோல வரும் கஷ்டங்களைத் தங்கள் அனுபவ முதிர்ச்சியால் பனி போல விலக்குவதுண்டு. அன்னாருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டு, அதன் பலனையடைய ஒரு பெரு முயற்சி தேவைப்படும். முயற்சி என்பது தெய்வீகம். பெரிய அறிவுரையைச் செயல்படுத்த ஏற்கும் முயற்சி அதனினும் சிறப்பானது. அன்னை முயற்சியைப் பெரிதும் பாராட்டுபவர். தெய்வீக முயற்சியைத் தவம் எனக் கருதுபவர். மனித வாழ்வில் ஏற்படும் தெய்வீக முயற்சிக்கு அபரிமிதமாக பலனை அளிப்பது அன்னையின் வழக்கம். நம் மனநிம்மதியைக் குலைத்த பிரச்சினையைத் தீர்க்க இது போன்ற
முயற்சியை மேற்கொண்டு, பின்னர் அன்னைக்கு பிரார்த்தனை செய்தால் நிம்மதி வரும்; பிரச்சினை தீரும். மேலும் ஒரு கட்டம். அனுபவசாலிகளாலும், விவேகிகளாலும், குருவாலும் அறிவுரை சொல்ல முடியாத கட்டங்கள் உண்டு. இதற்கெல்லாம் தீர்வு கிடையாது, அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர்கள் சொல்லும் பிரச்சினைகள் பல உள. அதுபோன்று எல்லா பிரச்சினைகளுக்கும் அன்னை தீர்வு காணும் முறையை வகுத்துள்ளார். அம்முறைகளைத் தெளிவாகப் பின்பற்றினால் முழுவதுமாகக் கவலையும், பயமும் நீங்கி, நிம்மதி ஏற்படுவதுடன் பிரச்சினையும் கரைந்துவிடும்.
ஆன்மா தன் கவலைகளை மறந்தபொழுது, அவை கரைந்து விடுவதைப் பார்த்து திகைப்பதைக் கண்டு இறைவன் சிரிக்கின்றான் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்லுகிறார். ஸ்ரீ அரவிந்தர் மனிதனை இப்படிச் சொல்லியிருந்தால் சரி; ஆன்மாவையே அப்படி வர்ணிக்கின்றார். பூவுலகத்தில் பிறப்பெடுத்தபின் ஆன்மாவுக்கும் மனித குணம் ஏற்படுகின்றதுபோலும். இதனுள் புதைந்துள்ள கருத்தே நமக்கு இங்கு முக்கியமானது. ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் கவலைப்படும்வரை அப்பிரச்சினைக்கு வலுவிருக்கும். நாம் அப்பிரச்சினையை மறந்துவிட்டால், அப்பிரச்சினை கரைந்துபோகும் என்பதே இதன் கருத்து. சாதாரணமாக மனிதன் இக்கருத்தை ஏற்றுக்கொள்வது கடினம்; செயல்படுத்துவது அதிகக் கடினம். இக்கருத்தில் பொதிந்துள்ள உண்மையைச் செயல்படுத்துவதே நான் இதுவரை அன்னைமுறை என்று வர்ணித்தது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை உச்சக்கட்ட உதாரணமாகவும், அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சியை அனைவருக்கும் பொருந்தும் எளிய உதாரணமாகவும் எழுதினால், அதற்கிடைப்பட்ட அத்தனை நிலைகளும் இம்முறைக்குக் கட்டுப்படும் என்றாகும்.
5 குழந்தைகளுக்குத் தாயானவள், 6ஆம் குழந்தைப் பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்கு வந்திருந்தபொழுது, கணவனுக்குப் பிரமோஷன் வந்தது. அத்துடன் அவனுடைய பெற்றோர்களுக்கு,
அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்தால், புதிய உத்தியோகத்தால், அதிக சீர்வரிசைகள் கிடைக்கும் என்ற எண்ணமும் உற்பத்தி ஆயிற்று. கணவனும் சம்மதப்பட்டு, பெண் பார்க்கப் புறப்பட்டுவிட்டார். இந்நிலை மனைவிக்குப் புதியதில்லை. திருமண நிச்சயதார்த்தத்தில் இருந்து குதர்க்கமான செயல்களுக்குப் பலியானவளானதால், கணவன் போக்கு நிரந்தரமாகத் திகிலையும், ஆபத்தையும் உற்பத்தி செய்துவிட்டதை உணர்ந்தாள். இந்நிலையில் அன்னையை வழிபட்டால், அன்னை இருப்பதை அதிகமாக்கிக் கொடுப்பார்கள். அவர்களை வழிபட ஆரம்பித்த பின்னர் கணவனால் தொந்தரவு கொடுக்க முடியாது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டால், இருக்கும் வசதிகளை அதிகமாக்கும் அன்னை, குறைக்க முடியாதன்றோ? என்ற கருத்து பெண்மணியின் மனதைத் தொட்டது; நம்பிக்கை பிறந்தது; திகிலும், கவலையும் ஒழிந்தன. கணவர் திரும்பி வந்தார். கொஞ்ச நாள் கழித்துத் தாமும் அன்னை பக்தரானார். அதிருந்து 25 வருஷ காலம் அவர் உயிரோடிருந்தவரை, மனைவிக்கு அது போன்ற தொந்தரவைக் கொடுக்கவில்லை; வேறெந்தத் தொந்தரவையும் கொடுக்கவில்லை. இந்த மாற்றத்திற்கு வித்து அப்பெண்மணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை; அந்த நம்பிக்கையிலிருந்த உண்மை. நம்பிக்கை கவலையை அழிக்கும்; நிம்மதியைக் கொடுக்கும். “எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அதனால் நிம்மதி வந்துவிட்டது” என்று அவளால் சொல்ல முடிந்தது.
1929இல் உலகப் பொருளாதார நெருக்கடி நியூயார்க்கிலும், லண்டனிலும் ஆரம்பித்து, உலகம் பூராவும் பரவி, 1939இல் உலக யுத்தம் வரும்வரை வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம், பட்டினியை அமெரிக்காவிலிருந்து எல்லா நாடுகளிலும் ஏற்படுத்தியது. அப்பொழுது பாங்கில் டெபாசிட் போட்டவர்கள், பாங்கை நம்பாமல் பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். ஓரிரு பேங்க் திவாலானவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை பேங்கிலிருந்து வாபஸ் செய்தார்கள். தினமும் 10, 20 நூறு பாங்குகள் திவாலாகிக்கொண்டு
இருந்தன. அமெரிக்க ஜனாதிபதி ஹூவர் மக்களை, “அப்படிச் செய்தால் நாடு திவாலாகிவிடும்” என்று கேட்டுக்கொண்டார். மக்கள் அதைப் புறக்கணித்தனர். 1929ருந்து 1932 வரை இந்த நிலை நீடித்தது. ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலைமை மேலும் மோசமான நேரம். தொடர்ந்து மக்கள் பணத்தை வாபஸ் செய்தால் நாடு திவாலாகும். பாங்கில் உள்ள பணத்தை எடுக்காவிட்டால் பாங்க் திவாலானபின் எல்லாப் பணமும் போய்விடும். அந்த நிலையில் பணம் போட்டவர்களை எப்படி எடுக்காதே‘ என்று சொல்ல முடியும்? ரூஸ்வெல்ட் தினமும் ரேடியோவில் மக்களிடம் பேசினார். நாட்டின் நிலையை விளக்கினார். பாங்கைப் பற்றியும், மக்களுடைய பணத்தைப் பற்றியும் பேசுமுன் நாட்டின் பொருளாதாரத்– தைப் பற்றி மக்கள் அறிந்திராத உண்மையை எடுத்து விளக்கினார். “ஒரு நாட்டின் செல்வம் அந்த நாட்டு நிலங்களிலும், பாக்டரிகளிலும் மனித உழைப்பால் ஏற்படுகிறது. இதுவரை அமெரிக்கா செல்வர் நாடாக விளங்கியது, நம் நாட்டு விவசாயிகளாலும், தொழிலாளி– களாலுமன்றோ? இன்று அந்த நிலங்கள், தொழிற்சாலைகள், அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களா? அல்லது மறைந்து விட்டார்களா? எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவையிருக்கும் பொழுது பொருளாதாரத்திற்கு நெருக்கடி எப்படி வரும்? நிலமும், தொழிலும், மனிதனும் இருக்கும்வரை நெருக்கடிக்கிடமில்லை. அவற்றைத் தாண்டி எழும் பிரச்சினைகள் அரசுக்குக் கட்டுப்பட்டவை” என்ற விளக்கம் கொடுத்தார். கேட்ட இலட்சக்கணக்கானவர்களுக்கு மனதிலிருந்த குழப்பம் நீங்கியது; தெம்பு வந்தது. அதையுணர்ந்த ரூஸ்வெல்ட் “நீங்களெல்லாம் எடுத்த பணத்தை மீண்டும் பாங்கில் போட வேண்டும்” என்றார். மறுநாள் வரிசை வரிசையாகப் பாங்கில் மக்கள் திரண்டு எடுத்த பணத்தை மீண்டும் டெபாசிட் செய்தனர். அதன்பின் பாங்குகள் திவாலாகவில்லை. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. மக்கள் மனதிலுள்ள அறியாமையையும், குழப்பத்தையும் நீக்கியவுடன் அவர்களுக்குத் தெம்பு வந்தது. நாடு திவாலாகப்போவதைத் தடுக்க முடிந்தது.