- அன்னையை வணங்கி, பிரார்த்தனை செய்து பெற்றதைவிட அதிகப் பலனைப் பெற வேண்டும்; வாழ்வில் ஆன்மீகப் பலனைப் பெற வேண்டும்; ஓரளவு வாழ்வை யோக வாழ்வாக மாற்ற வேண்டும் என்பவர்களுக்கு அத்தியாவசியமான self awareness ஞானம் இது.
திறமையைச் சுபாவம் கெடுப்பதையும், திறமை, சுபாவம் இரண்டையும் இராசி கெடுப்பதையும், பூரணமாகப் புள்ளிவிபரத்துடன் அறிந்தபின், இந்த நூறு காரியங்களில் கூடிவந்தவை எத்தனை என்று கணக்கிட முயன்றால், அது எளிதன்று.
அதையும் தெரிந்துகொள்வது நல்லது. கூடிவந்த 100 காரியங்களைத் தெளிவான மனத்தோடு ஆராய்ச்சி செய்து, எவை நம் சக்தியால் கூடிவந்தவை, எவை நண்பர்களால் முடிந்தவை, எவை அந்தஸ்தால் பூர்த்தியானவை, குடும்பத்தால் பூர்த்தியானவை எத்தனை என்று கணக்கெடுத்தால், தன்னிலை பூரணமாக விளங்கும். பொதுவாக, அவை கீழ்க்கண்டவாறு அமையும்:
| தன்னால் மட்டும் முடிவு பெற்றவை | 10 |
| குடும்பத்தின் உதவியால் முடிவு பெற்றவை | 72 |
| நண்பர்களால் முடிந்தவை | 10 |
| சந்தர்ப்பத்தால் பூர்த்தியானவை | 5 |
| காரணம் புரியாமல் காரியம் கூடிவந்தது | 3 |
- இந்த 100 காரியங்களும் இறைவன் அருளால் முடிந்தவை என்றாலும், காரணம் புரியாமல் கூடிவந்தவை இறையருளால் முடிந்தவையேயாகும். இந்த ஆராய்ச்சியால் தன் திறமை தனக்கு விளங்கும். தன்னைப் பற்றிய அதிகமான நினைவுக்கு அஸ்திவாரம் போய்விடும்.
- வாழ்வை தலைகீழாகப் புரிந்துகொண்டவைகளை ஆராய்ந்து உணர வேண்டும்.
Inverted values ஒன்றை மற்றதாகப் புரிந்துகொள்ளுதல் மனிதனுடைய வழக்கம். ஆங்கிலம் சரளமாகப் பேசுவதை புத்திசாலித்தனம் என்று புரிந்துகொள்வது வழக்கம். சரளமாகப் பேசுவதும், புத்திசாலித்தனமாகப் பேசுவதும் வேறு வேறு என்பது தெளிவு. இனிமையாகப் பழகுவதும், நாணயமாக இருப்பதும் வேறு வேறு. நடைமுறையில் இனிமையானவரை நாணயமானவர் என நாம் நினைப்பதுண்டு. ஆனால் அவருக்குத் தம் நாணயம் எந்த அளவுக்கு உண்டு என்று தெரியும். நாணயமில்லாதவரைப் பிறர் அவர் இனிமையைக் கண்டு நாணயமானவர் என்று நினைப்பதைப் போல், தாமே தம்மை நினைத்துக்கொண்டால், அதை தலைகீழாகப் புரிந்து கொள்கிறார் எனலாம். நமக்குள்ள திறமை எது, இல்லாத திறமை எது என்பதை நாம் அறிதல் அவசியம். வாழ்க்கையில் எந்தப் பெரிய காரியத்தைச் செய்ய முற்பட்டாலும், அது அவசியம். வாழ்வில் யோக அடிப்படையை ஏற்படுத்த முயன்றாலும், அன்னையை அதிகமாக நெருங்கி வர முயன்றாலும், அந்த அறிவு அவசியம்.
பொதுவாக தன் மனம் தனக்குத் தெரியும். நீண்ட நாளாக தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அதனால் தன் மனத்தை தலைகீழாகப் புரிந்துகொள்வதுண்டு. இது அனைவருக்கும் உள்ள நிலை. இதைச் சிந்தனையின் மூலம் குறைப்பது நல்லது. தலைகீழாகப் புரிந்துகொண்டவை அனைத்தையும் நேராகப் புரிந்துகொள்ளுதல் யோக வாழ்வுக்கு இன்றியமையாதது.
பல சகோதரர்கள் உழைத்து வேலை செய்யும் குடும்பத்தில் ஒருவர் ஊதாரியாகத் திரிந்து வந்தார். திரிவதிலும், அரசியல் தொடர்புடன் அலைந்தார். அவருடைய அரசியல் தொடர்பால் குடும்பத்தில் பல காரியங்கள் நிறைவேறின. பல ஆண்டுகள் குடும்பத்திலுள்ள அனைவரும் அவருடைய செல்வாக்கால்தான் குடும்பம் நடப்பதாக நினைத்தனர். பிறகு அவருடைய செல்வாக்கால் நடந்த காரியங்களை அந்த செல்வாக்கில்லாமல் நடத்திக்கொள்ளும் பொழுதுதான் உண்மை வெளிவந்தது. அவர் தவிர அனைவரும் நன்றாகச் சம்பாதிக்கின்றார்கள் என்ற அபிப்பிராயம் ஏற்பட்ட பின், குடும்பம் அளவு கடந்து செழித்தது. அவரையும் சம்பாதிக்க வேண்டும் என்று மற்றவர்கள் கேட்டபொழுது, தம்மால்தான் மற்றவர்கள் சம்பாதிக்கின்றார்கள் என்று அவர் தீவிரமாக நம்புவது தெரிந்தது. அனைவரும் அவரிடமிருந்த உணர்வால் பிரிந்துவிட்டார்கள். உடன் பிறந்தவர்கள் இலட்சக்கணக்காகச் சம்பாதிக்கும்பொழுது தமக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை என்று அந்த நிலை அவருக்கு உணர்த்தியது. அறிவாலும், ஆராய்ச்சியாலும் அதை உணர்வது சிறப்பு. அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள உதவும் பண்பு அது.
- அன்னையின் எந்தக் கருத்துகளை ஏற்றுச் செயல்படுகிறாய் எனக் கணக்கிடு.
அன்னையை நோக்கிப் பிரார்த்தனை செய்ய எந்தக் குறிப்பிட்ட தகுதியும் தேவையில்லை. அனைவருக்கும் உள்ள உரிமை அது. பீச்சில் சென்று காற்று வாங்க தனித் தகுதி தேவையில்லை என்பதைப் போன்றது அது.
அதிகமாக அன்னையைப் புரிந்துகொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆன்மீகப் பலனையடைய வேண்டும் என்றால், அன்னையின் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் நம்மை அறியாமல் பல்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம். அவை உயர்ந்தனவாகவும் இருக்கும்; தாழ்ந்தனவாகவும் இருக்கும். வாழ்க்கையில் உள்ள கோட்பாட்டிற்கும் அன்னையிடம் ஒரு கோட்பாடுண்டு. பெரும்பாலும் அது இதற்கு எதிரானதாக இருக்கும்; அல்லது மாறுபட்டதாக இருக்கும். இதுவரை பல அன்னை கோட்பாடுகளை நாம் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். நாம் ஏற்றுக்கொண்டவை எத்தனை? அவற்றை நாம் எந்த அளவில் பின்பற்றுகிறோம்? மொத்தமுள்ள கோட்பாடுகள் எத்தனை? அவற்றுள் நாம் ஏற்றுக்கொண்டவை என்ன பகுதி? என்று கணித்தால், நாம் அன்னையிடம் எவ்வளவு நெருங்கி வந்திருக்கின்றோம் என்று தெரியும்.
வாழ்க்கைக் கோட்பாடுகளில் நல்லவை, கெட்டவைகளைக் கலந்து சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்: பொய் சொல்லக்கூடாது, முக்கியமான விஷயத்தில் பொய் சொல்லாமலிருக்க முடியாது, நண்பனுக்குத் துரோகம் செய்யக்கூடாது, பொருள்களை விரயம் செய்யக்கூடாது, ஊருக்கு எதிராகப் போகக்கூடாது, தனக்கு மிஞ்சிதான் தருமம், கல்யாண விஷயத்தில் உள்ளதைச் சொல்வது அறியாமை, வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டும், சர்க்கார் கடனைத் திருப்பித் தாராவிட்டால் பரவாயில்லை, பணத்திற்கு மரியாதையுண்டு, படிப்புக்கு மரியாதையுண்டு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்; எந்தக் காரியத்தையும் நாம் செய்யும் பொழுது தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கோட்பாட்டின்படியேதான் செய்கிறோம். அன்னையை முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள், தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னணியான வாழ்க்கைக் கோட்பாட்டைக் கண்டுகொண்டு, அதற்குச் சரியான அன்னை கோட்பாடு எது என அறிந்து, அதைப் பின்பற்ற வேண்டும். மற்றும் இதுவரை எத்தனை கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம் என்று தெரிந்துகொள்வது நல்லது.
மேற்சொன்னவற்றுக்குப் பொருத்தமான அன்னை கோட்பாடுகளையும் எழுதுகிறேன்: மெய் மட்டும் சொல்ல வேண்டும், எந்த விஷயத்திலும் பொய்யே சொல்லக்கூடாது, தெய்வத்திற்குத் துரோகம் செய்யக்கூடாது, பொருள்களை தெய்வமாகப் பாவிக்க வேண்டும், ஊர் நேராக இருந்தால் அதனுடன் சேர வேண்டும், சமர்ப்பணம் அனுமதியளித்தால் தர்மம் செய்யலாம், கல்யாண விஷயத்திலும் உள்ளதை மட்டும் சொல்ல வேண்டும், பணத்திற்கு மரியாதையில்லை, படிப்புக்கு மரியாதையில்லை, பெருமையுள்ளவர்க்கெல்லாம் மரியாதை உண்டு, வயதால் உயர்ந்தவர்க்கு உயர்வுண்டு, எல்லாக் கடனையும் திருப்பித் தர வேண்டும்; இவை வாழ்க்கைக்குரிய அன்னை கோட்பாடுகள்.
இடைவிடாத நினைவு, இடைவிடாத தரிசனம், ஆத்ம சமர்ப்பணம், தாழ்ந்த குரல், பொறுமை, மற்றவரின் கருத்தை ஏற்றல் போன்றவை யோக வாழ்வுக்குரிய அன்னை கோட்பாடுகளாகும்.
அன்னையின் எந்தக் கருத்தை (அல்லது எத்தனை கருத்துகளை) நீ ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றாய் என்று கணக்கிடு.
அன்னையை அறிந்த நாள் முதலாய் அன்னையை வணங்குகிறோம் என்பது உண்மை. இந்த முதல் கட்டத்திலிருந்து அன்னையை நோக்கி நெருங்கி வந்து இரண்டாவது கட்டத்தை அடைவதே இப்பொழுதுள்ள நோக்கம். இது பக்தனுக்கு அத்தியாவசியமானதொன்றில்லை என்றாலும், யோகத்தை மேற்கொண்ட சாதகனுக்குரியதன்று. வணங்குதல் முதல் கட்டம். அன்னை இதை வழிபாடு என்கிறார். இதுவரை நாம் எப்படி தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருந்தோமோ அதே போல் இன்று அன்னையை வணங்குகிறோம். அது சரி. இங்கிருந்து யோகப் பாதை முடிவு வரை சுமார் 10, 15 உயர்ந்த கட்டங்களுண்டு. அவை நமக்குப் பொருட்டல்ல. வாழ்க்கையின் அடிப்படையை யோகமாக மாற்றி, யோக வாழ்க்கையாக அமைத்து, அதன் ஆரம்ப நிலையை எய்துவதே நோக்கம். இது பக்தனுக்குரிய உயர்ந்த நிலை. ஆனால் சற்றுக் கடினமானது. இதையடையத் தேவையான ஆரம்ப நிபந்தனைகளை இப்பகுதியில் எழுதி வருகிறேன். அவற்றுள் ஒன்று அன்னையின் கோட்பாடுகள்.
நான் அடுத்த கட்டத்தை எட்ட வேண்டுமானால், அன்னையின் கோட்பாடுகளை ஏற்றுப் பயில வேண்டும். எத்தனைக் கோட்பாடுகளை நான் முழுவதும் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன் என்ற கேள்விக்குப் பதிலாக எதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று மனம் கூறுகிறது. எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை, முடிவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், எத்தனைக் கோட்பாடுகளை அரைகுறையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றேன் என்ற கேள்வி என்னைத் திணற வைக்கின்றது. பதிலுக்காகத் திணற வேண்டியிருக்கின்றது என்றால், அம்முயற்சியை மேற்கொள்ளவில்லை என மனம் உணருகிறது.
நான் தவறாது அன்னையை வணங்குகிறேன், தரிசனங்களுக்குப் போகிறேன், அன்னையைத் தெய்வமாக மனம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றால், இவையெல்லாம் நல்ல செயல்கள்; ஆனால் வழிபாட்டுக்குரியவை.
“ஒவ்வொரு செயலுக்கு முன்னும் அன்னையை நினைக்க வேண்டும்” என்பது ஒன்று. அது என்னால் முடியவில்லை; ஏதோ ஓரளவுக்குத்தான் முடிகிறது. “பிறரும் பிரம்மம் என்பதால், மற்றவருடன் பழகும்பொழுது அவர்களுடைய நோக்கில் விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு கொள்கை. அதை முயன்று பார்த்த பொழுது நம் உரிமைகளையெல்லாம் பிறருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று கண்டு, அதை விட்டுவிட்டேன் என்று நினைவு வருகிறது. “அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு” என்பது அடுத்தது. இதை முயன்றேன்; ஆரம்பிக்க முடியவில்லை. இவற்றைத் தவிர வேறெதையும் பயிற்சியாக எடுத்துக்கொள்ளவில்லை என்று இப்பொழுது தெரிகிறது.
அடுத்த கட்டத்திற்குரிய தகுதிக்குத் தீவிர முயற்சி எடுக்கவில்லை என்று தெரிவது ஒரு வகை ஞானம். இதை எட்ட விரும்புவோர்க்குத் தேவையான பயிற்சி இது.
- அதிகாரம், வழக்கம், சட்டம், பழக்கம் ஆகியவற்றால் சாதித்தவையனைத்தும் மனித சாதனைகள். அவற்றுள் எதுவும் யோகத்திற்கு உதவா; யோக வாழ்க்கைக்கும் உதவா.
மனித வாழ்விலும், நாட்டின் வாழ்விலும், மரத்தின் வாழ்விலும் ஜீவனற்ற பகுதிகள் உண்டு; ஜீவனுள்ள பகுதிகளும் உண்டு. ஜீவனுள்ள நேரத்தில் சிருஷ்டியானதை ஜீவனற்ற வாழ்வு கட்டிக்காக்கின்றது. ஜீவனற்ற வாழ்வால் புதியது பிறக்காது.
காந்தியும், நேருவும் நாட்டின் வாழ்வுக்குப் புத்துயிர் அளித்தார்கள். சுதந்திர இயக்கம் நாட்டை உயிர்ப்பித்தது. ஆகஸ்ட் 15, 1947இல் வந்த சுதந்திரம் இந்தியாவுக்குப் “பாரதம்” என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது. தீண்டாமையை ஒழித்த நேரம் நாட்டின் வாழ்வில் புனித நேரம். பசுமைப் புரட்சி நாட்டிற்குப் புதிய ஜீவனை அளித்து, புதிய திறனைக் கொடுத்தது. இவை ஜீவனுள்ள நேரம்.
இந்நேரத்தில் சிருஷ்டித்ததை மற்ற நேரத்தில் நாம் முயன்று காப்பாற்றுகிறோம். அது ஜீவனற்ற நேரமாக அமையும்.
விதை முளைக்கும் நேரமும், துளிர்க்கும் சமயமும், மலரும் தருணமும், பழுக்கும் தினமும் மரத்திற்கு உயிர்ப்பானவை. முளைத்ததை வளர்க்க, துளிர்த்தது தழைக்க, மலர்ந்தது பழுக்க, பழுத்தது பலன் தர மற்ற சாதாரண நேரம் பயன்படுகிறது.
மனிதனுக்கும் ஜீவனுள்ள நேரங்களுண்டு; ஜீவனற்ற நேரமும் உண்டு. ஜீவனுள்ளவை க்ஷணங்களாகவும், ஜீவனற்றவை வருஷங்களாகவும் அமைகின்றன. உடலைப் பொருத்தவை, உயிரைப் பொருத்தவை, மனதைப் பொருத்தவை, ஆன்மாவைப் பொருத்தவை என அவை பிரியும்.
உடல் வளர்ச்சி ஜீவனற்றதானால், மலர்ச்சி ஜீவனுள்ளதாகும். முறைமையுடன் பழகுதல் ஜீவனற்ற உணர்வானால், இனிமையாக இருப்பது ஜீவனுள்ள உறவாகும். அதிகாரம் ஜீவனைக் கொல்லும். அன்பின் பிணைப்பு ஜீவனை வளர்க்கும். சட்டம் ஜீவனில்லாதது; நியாயம் சட்டத்திற்கு ஜீவனையளிக்கும்.
பழக்கத்தில் உயிரில்லை; உயிரில்லாத பழக்கத்தை உயிர்ப்பிப்பது பண்பு.
கடுமையான கட்டுப்பாட்டில் வளர்ந்து முதல் மாணவனாக வரலாம். அதனால் அவன் அறிவு மலராது. அன்பு நிறைந்த கவனத்தைப் பெறும் மாணவனின் அறிவு மலர்ந்து, அதில் மேதை பிறக்கும் வாய்ப்புண்டு.
அதிகாரம், வழக்கம், சட்டம், பழக்கம் ஆகியவை அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. ஆனால் அவற்றிற்கு மனித மனத்தையோ, ஆன்மாவையோ மலரச் செய்யும் திறமையில்லை. அன்னையை நெருங்கி வர வாழ்க்கைக்கு இன்றியமையாத எதுவும் உதவா; ஜீவனுள்ளவை மட்டுமே உதவும். வளர்ச்சியும், முறைமையும், அதிகாரமும், சட்டமும், பழக்கமும் அன்னையை அதிகமாக ஏற்றுக் கொள்ள உதவா; தடையாகவும் இருக்கும். மலர்ச்சியும், இனிமையும், அன்பின் அரவணைப்பும், நியாயமும், தர்மமும், பண்பும், அவை போன்ற மற்றவைகள் மட்டுமே உதவும்.
- இன்றுவரை நம் வாழ்வில் நடந்த அனைத்தும் இறைவனைப் பொருத்தவரை நல்ல செயல்களாகும்.
இன்று நாட்டை ஆளும் தலைவர்கள், அன்று சிறைவாசம் செய்தவர்கள். அன்றைய சிறைவாசம் இன்று நாட்டிற்குச் சேவை செய்யும் தகுதியைப் பதவி மூலம் கொடுத்துள்ளது. அதனால் சிறைவாசம் தவறு, பதவி சரி என்பதில்லை. சிறைவாசமும், பதவியும் வாழ்வின் இரு இன்றியமையாத பகுதிகளாகும் என்பது ஓர் உண்மை.
குழந்தை, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துகிறது. குழந்தை சந்தோஷமாக விளையாட வேண்டுமானால், அதற்கான சாப்பாட்டை மற்றொருவர் தயார் செய்ய வேண்டும். “விளையாட்டு சரி, சமையல் தவறு” என்பது குழந்தையின் அறிவு. குழந்தை பெரியவளான பின்னும் “சமையல் தவறு‘ என்ற கருத முடியாது. வளர்ந்த பின் மனம் பரந்த நோக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் சமையலுக்கும் உண்டு என்ற தெரிந்துகொள்ள வேண்டும். இதுவே வளர்ச்சிக்கு அறிகுறி.
வாழ்வை லேசாக ஏற்றுக்கொண்டு, மேலெழுந்தவாரியாக வாழும் பொழுது, உணவு நல்லது எனவும், மலம் கெட்டது எனவும் கொள்ளலாம். வளர்ந்த பின், Physiology உடற்கூற்றைப் பற்றிப் படித்த பின் மனித உயிருக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கழிவுப் பொருளை உற்பத்தி செய்வது என்று அறிகிறோம்.
சந்தோஷத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்; கஷ்டத்தை விலக்க முற்படுகிறோம். இது சாதாரண மனிதனுடைய தெளிவு. மனம் வளர்ந்த பின், மனித வாழ்வின் கூறுகளை அறிவு தெரிந்து கொண்ட பின், சந்தோஷமும், கஷ்டமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனப் புரிகிறது.
ஓர் உடலில் மலம் உற்பத்தியாகவில்லை என்றால், உயிர் தரிக்காது.
ஒரு வாழ்வில் கஷ்டம் ஏற்படவில்லை என்றால், சந்தோஷம் ஏற்பட முடியாது.
நடவை நல்லதாகவும், அறுவடையைக் கெட்டதாகவும் நாம் புரிந்துகொள்வதில்லை. இரண்டும் பயிரிடுவதின் இரு அங்கங்கள்; ஒன்றில்லாமல் மற்றதில்லை.
“கள்ள மார்க்கட்காரரைக் கண்ட இடத்தில் தூக்கில் போடு”என்று கோஷமிட்டார் நேரு. இது பதவிக்கு வரும் முன். வந்த பின், தேர்தலுக்குப் பணம் வேண்டும். கட்சிக்குப் பணம் கொடுப்பவர்கள் கள்ள மார்க்கட்டில் சம்பாதிக்கின்றார்கள். கோஷத்தை நிறுத்தி விட்டார். பணம் வசூல் செய்வதைச் சர்தார் பட்டேலிடம் கொடுத்து விட்டார். பதவிக்கு வந்து, பொறுப்பை ஏற்கும் முன் பேசிய வீரியம் ஜவகர்லால் நேருவுக்கே, பதவிக்கு வந்த பின் இல்லை. அதனால் கள்ள மார்க்கட் சரி என்பதாகாது. பெரிய பொறுப்பு வரும்பொழுது பெரிய நோக்கம் வந்துவிடும். முன்பு நாம் தள்ளி வைத்ததை, இப்பொழுது மனம் ஏற்றுக்கொள்ளும். இதற்கு அனுபவம், முதிர்ச்சி, விவேகம் எனப் பெயர்.
வாழ்வில் பல்வேறு வகைகளில் கஷ்டப்பட்டு, பிறகு தெளிந்து, இன்று வசதியாக இருக்கும்பொழுது பழைய நாட்களை நினைக்கப் பிரியப்படுவதில்லை. இது சாதாரண மனிதனுக்குரிய அறிவு. அன்று பட்ட கஷ்டங்களால்தான் இன்று இந்த வசதி வந்துள்ளது என்பது விவேகமுள்ளவர் அறிவது. அன்னையை ஏற்றுக்கொண்டு, வாழ்வை “யோக வாழ்வாக” மாற்ற முயலும்பொழுது புது ஞானம் பிறக்க வேண்டும். அதை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே யோக வாழ்க்கைக்குரிய அடிப்படை; தேவையான அடிப்படையும் ஆகும். அது உண்மையானால் கீழ்க்கண்டவாறு நாம் கூற வேண்டியிருக்கும்:
என் சிறு வயதில் தகப்பனாரை இழந்தது என் வாழ்வுக்குத் தேவையானதே.
எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு உறவினர் விரட்டியதில் உண்மையுள்ளது.
23 வருஷமாக அடிக்கடி ஆஸ்பத்திரி வாசம் செய்தது எனக்குச் சரி.
15 வயது மகன் அகால மரணமடைந்தது தவறில்லை.
என் மீது பொறாமைப்பட்டு, அநியாயமாக என்னை டிஸ்மிஸ் செய்தது திருவுள்ளம்.
என் சொத்தெல்லாம் பங்காளி பறித்துக்கொண்டதும் தெய்வச் செயலாகும்.
என் கணவன் என்னை விட்டுப் போனது என் ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவையானது!
என் வாழ்வில் நடந்த அத்தனை அநீதிகளும், கொடுமைகளும்,துர்அதிர்ஷ்டங்களும் என் ஆன்மீக வாழ்வை வளப்படுத்த இறைவன் அளித்த பரிசு என்பதை உணர்ந்த பிறகே யோக வாழ்க்கைக்குரிய ஞானம் பிறக்கும். எல்லாம் நன்மைக்கே என்றாகும்.
- சலிப்பு, விரக்தி, ஏமாற்றம், எரிச்சல் ஏற்படும் இடங்களில் எல்லாம் உன் சுபாவம் மாற வேண்டிய இடங்களாகும்.
நமக்கு முழுத் திறமையுள்ள இடங்களில் ஏமாற்றம் ஏற்படுவது இல்லை. அங்கு நாம் செய்யும் காரியங்கள் முழு நிறைவு பெறும். அதனால் திருப்தி ஏற்படும். திறமைக்கேற்ற அளவு எதிர்பார்த்தால் நிச்சயமாகக் கிடைக்கும்; ஏமாற்றமிருக்காது. மனம் ஆசைக்கேற்ப எதிர்பார்க்கிறது. திறமையின் தகுதிக்கு மீறி எதிர்பார்க்கும்பொழுது ஏதோ ஒரு சமயம் கூடிவருகிறது; பல சமயங்களில் கூடிவருவதில்லை. கூடிவாராதபொழுது ஏமாற்றம் ஏற்படுகிறது. நாம் அதிகமாக எதிர்பார்ப்பது தவறு என்று அறிய வேண்டிய நேரம் அது. பாங்கில் 5,000 ரூபாய் போட்டுவிட்டு, பல முறை பணம் எடுப்பவர், ஒரு சமயம் 800 ரூபாய்க்கு செக் அனுப்பினால், “பணம் இல்லை” என்றவுடன் ஆத்திரப்படுகிறார். போட்ட பணத்தில் 4,500 ரூபாயை பல முறைகளாக அவர்தான் எடுத்திருக்கின்றார். மீதி 500 ரூபாய் இருந்தால், அது எவருடைய தவறும் இல்லை. ஆனால் ரூ.800 செக் பாஸாகவில்லை என்றால் அளவு கடந்த எரிச்சல் வருகிறது. அதற்காகப் பாங்கில் சண்டையும் வருவதுண்டு. இது மனித சுபாவம். இந்த நேரம், “நாம் எரிச்சல்படுவது தவறு. நம் கணக்கில் பணம் இல்லாவிட்டால் பாங்க் மீது கோபம் வரும் சுபாவம் மாற வேண்டும்” என்று நாம் அறிய வேண்டும்.
நமக்கு விரக்தி வரும் ஒவ்வொரு முறையும் நாம் சிந்தித்துப் பார்த்தால் தவறு நம் மீது இருக்கும். குறை என்று ஒன்று இருந்தால் அதற்கு நாமே கர்த்தாவாக இருப்போம். நம் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களை நினைவுபடுத்திப் பார்த்தால், பிறர் மீது குறைபட்ட நேரங்கள், கோபப்பட்ட விஷயங்கள் நினைவு வரும். உதாரணமாக, B.Sc. Ag. I class வாங்கியவர் தம்மை M.P.S.C.இல் செலக்ட் செய்யாமல் II class வாங்கியவரை செலக்ட் செய்ததற்காக ‘M.P.S.C.ஒழிக’ என்று கோஷம் போட்டுவிட்டு வந்ததாகச் சொல்லும் நேரத்தில், ஒரு பெரிய கம்பெனியில் முதன்மையான ஆபீசராக இருந்தார். இவர் கையால் எழுதிய ஆர்டர்கள் ஏராளம். அவற்றில் 90 பங்குக்கு மேல் தகுதியற்றவரையே வேலைக்கு நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. ‘M.P.S.C. ஒழிக’ என்ற கோஷத்தை இவர் வாழ்க்கை அர்த்தமற்றதாக்கிவிட்டது. வேலை பெற மார்க் மட்டும் போதாது. வேறு பல நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை, தாம் வேலைக்கமர்த்திய ஏராளமான பேர் விஷயத்தில் இவர் கண்டுகொண்ட பின்னும், ‘M.P.S.C. தமக்கிழைத்தது அநீதி’ என்றே இவர் மனம் கூறுகிறது. தமக்கு தகுதியில்லாததை மனம் நாடுவது அநீதி என்று இவரால் இத்தனை நாள் கழித்தும் தெரிந்துகொள்ள முடியவில்லை. மார்க் மட்டும் வேலைக்குத் தகுதியளிக்காது. அழகு மட்டும் திருமணத்திற்குப் போதாது. பேச்சு வன்மை மட்டும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. நூறு பேருக்கு மேல் தாம் அமர்த்தியவர்களில், தாம் M.P.S.C. ஆபீஸ் முன் கோஷமிட்ட சட்டப்படி கோஷம் போடும் உரிமையுள்ளவர்கள் என்பதைத் தம் அனுபவத்தில் கண்ட பின்னும் M.P.S.C. மீது கோபம் வருகிறது. இதுவே மனித சுபாவம். இந்தச் சுபாவத்தை மனிதன் மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றிக் கொள்ளாவிட்டால் அது விஸ்வரூபம் எடுத்து, அவர் முன் தீர்க்க முடியாத பிரச்சினையாக நிற்கும்.
சலிப்பு, விரக்தி, ஏமாற்றம், எரிச்சல், கோபம், குறை ஏற்பட்டு அடங்கிய பின் ஆத்ம சோதனை தேவை; மனமாற்றம் தேவை. அதற்கு உட்பட்டவர்க்கே அன்னையை நோக்கி அடுத்த அடி வைக்க முடியும்; மற்றவர்கள் அதற்கு விலக்கு.
- இன்று நீ உள்ள நிலை நீயே தேடிப் போய் பெற்றது என்று நீ உணர வேண்டும்.
“என்னை மெடிக்கல் காலேஜில் சேர்க்கத் தகப்பனார் முடிவு செய்த பின், எங்கிருந்தோ அவர் மைத்துனர், அத்தனை வருஷமாக வாராதவர், திடீரென்று வந்து “வேண்டாம்‘ என்று சொல்லிவிட்டார். அதனால் தகப்பனார் மனம் மாறிவிட்டது; என் வாழ்க்கை தடம் புரண்டது”.
“நான் பாஸ் பண்ணியபொழுது வேலையில்லாத் திண்டாட்டம் உலகெங்கும் பரவியிருந்தது, நம் நாட்டிற்கு மட்டுமன்று. நான் அதற்குப் பலி. B.A. பாஸ் செய்துவிட்டு மணிலா மார்க்கெட் குமாஸ்தாவாக ரிடையரானேன்; என் தலைவிதி”.
“என்னைப் பெண் கேட்டவர்கள் அனைவரும் கெஜடெட் பதவியில் ரிடையராகிவிட்டனர். என் தாயாரின் சுயநலத்தால் படிக்காதவருக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைக்குப் பலியானேன்”.
“எனக்கு அறிவுறுத்துபவர் அன்று எவரும் இல்லை. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இன்று எவ்வளவு உயரத்தில் இருப்பேன்”.
இவை போன்ற குறைகளை நாம் பரவலாகக் கேட்டு இருக்கின்றோம். அந்தத் தத்துவ விசாரம் ருசியானது. நான் அதை மேற்கொள்ளவில்லை. இந்த குறிப்புக்குத் தேவையான அளவுக்கே சுருக்கமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவர்கள் அனைவரையும் பற்றி நமக்குத் தற்சமயம் கவலை இல்லை. இவர்கள் உள்ள நிலையில் நாமும் இருந்தால் நம் இன்றைய நிலையே நமக்கு முக்கியம். அவர்களைக் கொண்டு நம் வாழ்வை நாம் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியுமானால், அதுவே நமக்குப் போதுமானது.
இரு பிரிவுகளாக இவர்களைப் பிரிக்கலாம். ஒன்று, தெரிந்து தம் வாழ்க்கையை அன்று இதுபோல் அமைத்துக்கொண்டவர்கள் இன்று குறைபடுகிறார்கள். தெரிந்தே அன்று செயல்பட்டதற்குக் காரணம் பல வகைகளில் இருக்கும். அவையெல்லாம் ஒரு வகையில் அன்றுள்ள சிறு சௌகரியத்திற்காகச் செய்தவையாக இருக்கும். இது அவர்கள் மனம் அறியும். அன்று வேண்டுமென்று அவர்கள் நாடிப் போன ஒன்று, இன்று அசௌகரியமாகிவிட்டதாக அவர்கள் புலம்புவதை அவருடன் உள்ளவர்கள் அறிவார்கள்.
நாம் நம் வாழ்க்கையில் குறைபட்டுக்கொள்ளுமிடங்களில் பாதி இது போலிருக்கும். இதில் உள்ள உண்மை நம் மனத்திற்குத் தெரியும் என்பதால், அதை இன்று மனம் ஏற்றுக்கொண்டால்தான் மேலும் அடுத்த பகுதி புரியும்.
அடுத்த பகுதி சற்றுச் சிக்கலானது. அதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தவருக்கு தொழிலில் நல்ல மரியாதை, உயர்ந்த வரவேற்பு. எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம், செல்வாக்கு, அந்தஸ்து எல்லாம் ஓரிரு ஆண்டுகளில் குவிந்தன. ஆனால் இவர் தம் தொழிலைச் சிறிய (clients) வாடிக்கையாளர்களிடம் மட்டும் செய்து வந்தார். 40 கோடிக்குட்பட்ட தொழில்களுக்கே சேவை செய்து வந்தார். நண்பருடைய உற்சாகத்தாலும், தமக்கே ஏற்பட்ட ஆர்வத்தாலும் உலகத்தில் முதன்மையான கம்பனியை வாடிக்கைக்காக நாடினார். எதிர்பார்த்த தடைகள் எதுவுமில்லை. தலைவரிடமே இவருடைய கடிதம் போய்ச் சேர்ந்துவிட்டது. இதன் பின் அவருக்குள் ஒரு போராட்டம். “இவை எல்லாம் மிகப் பெரியன, நிச்சயமாகக் கிடைக்கா” என்று ஒரு குரல், “ஒருவேளை கிடைத்துவிட்டால் என்ன செய்வது?” என்று மற்றொரு குரல். போராட்டமாக ஒரு மாதம் ஓடியது. முடிவாகத் தலைவருடைய ஆபீஸைப் போனில் கூப்பிட்டார். இவர் பெயரை அவர்கள் நினைவு வைத்திருந்தார்கள். எதிர்பாராதவிதமாக நல்ல முறையில் இதமாகப் பேசினார்கள். “தலைவர் உங்களைச் சந்திப்பதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை. உங்கள் கடிதம் அவர் மேஜை மீதிருக்கிறது. இன்னும் 15 நாட்களுக்குள் நாங்களே உங்களைக் கூப்பிட்டு முடிவு சொல்கிறோம்” என்றார்கள். இவருக்கு அளவு கடந்த சந்தோஷம் வருவதற்குப் பதிலாக அளவு கடந்த பயம் வந்துவிட்டது. இந்தத் தலைவரைப் பார்த்துப் பேசும் தைரியமில்லை. ஒரு மணி நேரம் அன்னையிடம் பிரார்த்தனை செய்து “இந்தச் சந்திப்பு கிடைக்கக் கூடாது” என்று வேண்டிக்கொண்டார்.
மனிதனுடைய மனநிலை இப்படி அடிக்கடி இருப்பதுண்டு. இவர் உண்மையானவர் என்பதால் தம் மனத்திலுள்ளதை மறைக்காமல் கூறிவிட்டார். அந்த அளவு உண்மை பொதுவாக இருக்காது.
நமக்குத் தவறிய நல்ல விஷயங்கள், கிடைத்த மட்டமான விஷயங்கள், கிடைக்காத அறிவுரைகள், நம் வாழ்வை பாழ்படுத்திய நாட்டின் சூழ்நிலை, தற்செயலாக எமனாக வந்த அவச்சொல் ஆகிய அனைத்திற்கும் நம் மனம் உள்ளூர உறுதுணையாக இருந்திருக்கும். மேலே சொன்ன முதற்பகுதியையே ஏற்றுக்கொள்ள முடியாதவர்க்கு இது விளங்காது. அந்த உண்மையை ஏற்றுக்கொண்டவர், இக்கூற்றைச் சிந்தித்துப் பார்த்தால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையைக் கண்டுகொள்ளலாம்.
அன்னை இக்கூற்றை வெளியிடுவதால் அன்னை பக்தர்கள் இதை எளிதில் ஏற்றுக்கொள்ளலாம். இதை ஏற்றுக்கொள்வது அவசியம்.