Skip to content
- ** எதற்காக நாம் காத்திருக்கின்றோம் என்றறிவது தன்னை அறிவதாகும். உன்னைப் பொருத்தவரை அதுவே சத்தியம், பிரம்மம்.
ஆழ்ந்த மனம், தன்னை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் பொழுது, மேலெழுந்தவாரியாக மனம் அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுகிறது.
அர்த்தமற்ற அந்தச் சலனங்களும் ஆழ்ந்த மனத்தைப் பூர்த்தி செய்யவே முனைகின்றன.
மேல் நிலையில் ஆழ்ந்த மனம் பூர்த்தியானால், மனிதன் உயர்ந்தவனாகிறான்.
- ** எதை நாடுகிறோம், எந்த நிலையில் நாடுகிறோம் என்றறிவது, நம்மை நாம் உணர்வதாகும்.
- ** மேலெழுந்த மனம், முதிர்ச்சியடைந்து ஆழ்ந்த நிலையை அடையும் வகை, ஒருவருடைய சுபாவத்தை விளக்கும்.
- ** எதை நாம் நாடுகிறோம் என்பது, நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.
- *** அன்னையின் அணுக்களும் சத்தியத்திற்காகத் துடிக்கின்றன.நாம் எதற்காகத் துடிக்கின்றோம், எந்த அளவில், எந்த நிலையில் அத்துடிப்புள்ளது?
- *** வேத ரிஷிகள் பிரம்மத்தைக் கண்டவர்கள்.உடலில் ஆன்மாவைப் பூரணமாக உணரும் சித்தி பெற்றவர்கள்.
- # பகவான் ஸ்ரீ அரவிந்தர் தம் உடலில் பிரம்மம் சித்திப்பதைக் கண்டார்.
- *** சூட்சும உடல் என்பது (true physical) உண்மையான உடலிலிருந்து சற்று மாறுபட்டது.
- # கண்ணை மூடிக்கொண்டு அன்னை பொருள்களைக் காண்பதுண்டு.
- *** சக்தியும், ஜீவியமும் பிரிந்துள்ளன.அவை யோகத்தால் தாமே சேர வேண்டும். ஜீவியத்தை, சக்தி வலிந்து செயல்படச் செய்தால், சத்தியம் பொய்யாகும்.
- உடல் படும் துன்பம் உண்மையானதல்ல.
- உடைந்த பொம்மைக்காக அழும் குழந்தையின் வருத்தம், வளர்ந்தவர்க்கு வராது. அதுபோல் நாம் உடலால் படும் துன்பம், யோக முதிர்ச்சியுள்ளவர்க்கு இல்லை.
- மனித சுபாவம் நாய் வால் போன்றது. அதை நிமிர்த்த முடியாது என்று கூறுவர். (Body Consciousness) உடலின் ஜீவியத்தை மாற்ற முயன்றால் மனித சுபாவமே எளிது என்று தோன்றும்.
- உயர்ந்த கருத்து அறிவை விசாலப்படுத்தும்.ஆழ்ந்த உணர்வு ஜீவியத்தை மாற்றும். நிதானமான உணர்வு உடலையும் மாற்றும். தான் மாற விரும்பும் மனிதனால் பிறரை மாற்ற முடியும்.
- சத்தியம் பொய்யாக மாறும் பாதையைக் கண்டுகொண்டால், பொய்யை மெய்யாக மாற்ற இயலும்.
- உலகப் போரைத் தடுக்கும் சூட்சும சாதனமாக அன்னை ஆரோவில் நகரத்தை நிர்மாணித்தார். நம் வாழ்வின் துர்அதிர்ஷ்டங்களைத் தடுக்க, நாமும் அதே போல் ஒரு சாதனத்தைத் தேடலாம். புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் சாதனங்களையும் ஏற்படுத்தலாம்.
- ஆன்மா அசையும்பொழுது முகத்தில் அற்புதமான களை ஏற்படுகிறது. அசைவு, பக்தியாலும் ஏற்படலாம்; கோபத்தாலும் ஏற்படலாம். ஆன்மா முகத்தில் தெரியும்பொழுது எதனால் அசைவு ஏற்பட்டது என்ற பிரச்சினை இல்லை.
- பெரிய முக மாறுதல்கள் க்ஷணத்தில் ஏற்படுகின்றன.
- Dec. 5 முதல் Dec. 9 தேதி வரை “ஸ்ரீ அரவிந்தரால் முடியவில்லை. நீ என்ன செய்வாய்?” என்று தீய சக்திகள் வருஷம் தவறாமல் அன்னையைக் கேட்பதுண்டு. சந்தேகத்தை ஏற்படுத்துவதே தீய சக்திகளின் கடைசி ஆயுதம். அதையும் தாண்டிய நிலையில், அவை நம் தன்னம்பிக்கையை அழிக்க முயலும்.
- பரிசு என்பது பொருள்.
உணர்வு பரிசைப் புனிதப்படுத்துகிறது.
உயர்ந்த எண்ணத்தால் அவ்வுணர்வு உன்னதமாகிறது.
அடுத்த நிலையிலுள்ள ஆன்மா அப்பரிசை வழங்கும் திறனை அளித்து, அதை வரமாக மாற்றுகிறது.
- சத்தியஜீவனுடைய ஒளி மனதையும், உணர்வையும் தாண்டிய கடைசி கட்டத்தில் உடலைத் தொடும்பொழுது பொன்னொளியாகிறது.
- அன்னையை அழைத்தால் தீய சக்திகள் விலகும். அதற்கும் அசையாதவை உண்டு. பகவானை அழைத்தால் அவையும் விலகும்.
- ஆழ்ந்த சொந்த உணர்ச்சிகளைக் கிளறினால் நாட்டின் நிலைமையை மாற்றும் சக்திகளும் வெளிப்படும்.
- அருள் அதிகரிக்கும்பொழுது அறியாமையும் அதிகரிக்கின்றது.ஏதோ ஒரு நிலையில் அருளும், அறியாமையும் ஒன்றல்லவா?
- மாறுவது அவ்வளவு கடினமல்ல. எங்கு மாற வேண்டும், மாற வேண்டியது எது, என்று தெரியவே நாளாகிறது.
- பிரகிருதி மனத்தாலும், உணர்வாலும் செயல்படுகிறது. அதுவே செயல்களை நிர்ணயிக்கின்றது. நல்ல நிகழ்ச்சியானாலும், மற்றவையானாலும், சொந்த வாழ்க்கைப் பிரச்சினை என்றாலும், உலகத்துப் பிரச்சினை என்றாலும், அவை பிரகிருதியின் உள்ளக் கிளர்ச்சியின் பிடியில் உள்ளன.
- நம்மைப் பாதிக்காத விபத்துகள் நம் சூழ்நிலையில் ஏற்படுவதுண்டு. எதைக் காண உன் மனம் மறுக்கின்றதோ, அதை வலியுறுத்த இயற்கை நிகழ்த்துவன அவை. சொந்த வாழ்க்கையைப் பாதிக்கும் விபத்துகள், உன்னைப் பிடித்து நிறுத்தி, அடி கொண்டு கிளறி, ஆருளைப் பார்க்கும்படி வலியுறுத்துபவையாகும்.
- அருள் தன்னைச் சூழ்ந்துள்ளதை உணர்பவனுக்கு ஆபத்து வருவதில்லை. அருள் மீது நம்பிக்கையுள்ளவர் தன்னுடன் விபத்து நிகழ முடியாத சூழலைக் கொண்டு வருவார்.
- மனிதனுக்கு விஸ்வாசமில்லை. நம்முள் உள்ள தெய்வ அம்சத்தாலேயே விஸ்வாசத்தை உணர முடியும்.
- செயல்கள் முழுமையானவை. நம் விருப்பங்களால் கட்டுப்படாதவை. அன்றாட வாழ்விலும் அவற்றைக் காணலாம். ஒரு பிள்ளையைப் புறக்கணித்து, மற்றொரு பிள்ளையைச் செல்லமாகக் கருதி, அவனுக்கு மட்டும் கொடுக்க தகப்பனார் விரும்பியது, புறக்கணித்த பிள்ளை வாழ்வில் பூர்த்தியாவதைக் காணலாம். இது தலைகீழாகவும் நடக்கும். காங்கிரஸ் சுதந்திரம் பெற்றது. ஆயுள் முழுவதும் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள், நாட்டை ஆள்வதைக் காண்கிறோம். இந்த அம்சத்தைப் புரிந்துகொள்வது ஞானம்.
- வாழ்க்கை மறுத்ததை அன்னை கொடுக்கின்றார். கொடுக்கும் பொழுது அதன் தரத்தை உயர்த்திக் கொடுக்கின்றார். அன்பைப் பெறாதவர்க்குப் பக்தியை அளிக்கின்றார். முக்கியஸ்தர்களை வாழ்வு உன்னிடமிருந்து விலக்கினால், அன்னை அவர்களின் தலைவரை உன்னிடம் அனுப்புகின்றார். சமாதிக்குப் போவதை வாழ்வு தடுத்தால், அன்னையே உன்னை நாடி வருகிறார்.
- உலகத்திற்குச் சத்தியஜீவியம் வர, பொருள் அவசியம்.
- தியாகத்தில் சிறந்ததொன்றுண்டு. அது சர்வ ஆரம்பப்பரித்தியாகி ஆவது.
- நமக்கு உரிமையில்லாததை நாம் விரும்புகிறோம். மற்றவர்க்கு உரிமை இல்லாததை நாமே முனைந்தளித்தால் அச்செயல் (love) அன்பாக மாறுகிறது.
- இன்று உன் மனநிலையுள்ள இடத்தில் ஆரம்பிக்காவிட்டால், ஆரம்பிக்க முடியாது.
- எதை நம்மால் விட முடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக்காட்டும். (உ.ம்.) பாசம், சுபாவம், தமக்குள்ள முக்கியத்துவம் போன்றவை.
- அன்னை தண்டிப்பதேயில்லை. இருப்பினும் பக்தர்களுக்குச் சிரமம் வருகிறது. அவற்றிற்கான காரணங்கள் பின்வருமாறு:-
- அறிவில்லாத செயலை அடமாகச் செய்வது.
- தெரிந்தும் அன்னையின் பாதுகாப்பை விட்டு விலகுதல்.
- அன்னைக்குப் பிடிக்காது என்று தெரிந்தும், அதைச் செய்வது.
- இம்மாதிரி நிலைகளிலும் அன்னையின் பாதுகாப்பு பெரிய அளவில் தொடரும். அதையும் மீறி வற்புறுத்தலுடன் அடம் செய்வதால்தான் கஷ்டம் வருகிறது.
- கண்ணுக்கு முன்னாலிருப்பதைக் காண மறுப்பவன் மனிதன். 100 முறை சொல்லியதைப் புதியது போல் மீண்டும் கேட்பான். அன்னை இதை (unconscious) கண்மூடித்தனம் என்கிறார்.
- உடலில் உணர்வில்லாதவருண்டு. மேளச் சத்தம் கேட்டவுடன் எழுந்து ஓடுபவருண்டு. அது போலன்றி, மனத்தால் உணர்வைக் கட்டுப்படுத்துபவர் உண்டு. உணர்ச்சியை மனம் கட்டுப்படுத்துவதுபோல் ஜீவியம் மனத்தைத் தாண்டியிருக்கிறது. அன்னை அதுபோன்றே செயல்படுகிறார். சிந்தனை நின்ற பின் ஒரு பெரிய எண்ணம் உதயமாகிறது. எண்ணத்தை நிறுத்தி, ஜீவியத்தால் மட்டுமே செயல்பட முடியும். அதைச் சாதிக்க, சிந்தனையைத் தியாகம் செய்ய வேண்டும்.
- எண்ணத்தைச் சமர்ப்பித்தால், எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம் செயல்பட ஆரம்பிக்கும்.
- உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்தால், அதன் பின்னணியில் உள்ள ஜீவியம் தானே செயல்படும். செயலைச் சமர்ப்பணம் செய்தால், உடலின் ஜீவியம் செயல்படும்.
- எண்ணம், உணர்வு, செயல், மூன்றையும் சமர்ப்பணம் செய்தால் ஜீவனுடைய ஜீவியம் (the consciousness of the being) செயல்படும்.
- மனிதன் சர்வ ஆரம்பப் பரித்தியாகியானால், ஜீவியம் தானே செயல்படும். சர்வ ஆரம்பத்தையும் பரித்தியாகம் செய்த பொழுது மேற்சொன்ன மூன்று சமர்ப்பணத்திற்கும் சேர்ந்த பலன் ஏற்படும்.
- உயர்ந்த செயலையும் தாழ்ந்த மனநிலையுடன் மனிதன் பார்ப்பதால் அவை சிறியனவாகத் தோன்றும். தாழ்ந்த செயலையும் உயர்ந்த மனநிலையுடன் இறைவன் காண்பதால் அவை உயர்ந்து தோன்றும். உயர்ந்த நிலையில் இருந்து உலகத்தின் செயல்களைக் காண முயலும் மனிதன் தெய்வத்தை நோக்கிச் செல்கிறான்.
- மறுப்பு ஆர்வமானால் திருவுருமாற்றம் ஏற்படும்.
- பகவான் “நான்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரிது. பிற்காலத்தில் தம்மை “ஸ்ரீ அரவிந்தர்” எனவும் குறிப்பிட்டார்.
- சூட்சுமப் பார்வையில் பொன்னொளியைக் கண்டால், அது சத்தியஜீவ ஒளி உடலில் வெளிப்படுவதாகும்.
- ஜடம் தெய்வ நிலைக்குப் போக, துன்பத்தைக் கருவியாக நாடுகிறது.
- தொடர்ந்து தரிசனம் கிடைத்தால், அழைப்பையும் மனம் மறந்துவிடும்.
- கருணையும் இனிமையும் தெய்வத்தின் சுபாவம். ஒருவரிடமாவது மனிதன் கருணையுடனும் இனிமையுடனும் இருக்கலாம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வான்.
- கவனத்திற்குப் (attention) பலன் உண்டு. நேரடியான பலனில்லை எனில், அதே குணமுள்ள மற்றொருவர் அதே பலனைத் தருவார்.
- உன் குழந்தை மீது பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வு. அவர்களுடைய நல்ல குணங்களைத் தெரிந்துகொள்ளுதல் தன்னை அறிவதாகும். அவர்களுடைய குறைகளைத் தெரிந்துகொள்ளுதல், தன்னை உயர்ந்த முறையில் அறிவதாகும்.
- மனித முயற்சி முழுமையானதல்ல. தெய்வ முயற்சி முழுமையுடையது. மனத்தின் முயற்சி முழுமையானதல்ல, உடலின் முயற்சி முழுமையானது. நம் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால் நாம் தெய்வமாகிறோம். எல்லாக் கரணங்களிலும் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால், நாம் முழுமையாகத் தெய்வமாகிறோம்.
- எப்பொருள் நமக்கு ஏராளமாக தேவைப்படுகிறதோ அதைச் சுலபமாகப் பெறும் வழியொன்றுண்டு. தெய்வத்திற்கு அப்பொருளைக் காணிக்கையாக அளித்தால் அபரிமிதமாக அது நம்மை நாடி வரும். அதைவிடச் சிறந்த முறை அப்பொருளை அடுத்தவர்க்குக் கொடுப்பதாகும். உதாரணமாக அபரிமிதமான அன்பு தேவைப்பட்டால், உன் அன்பை மற்றவர்க்குச் சமர்ப்பணமாகவும், தெய்வக் காணிக்கையாகவும் செலுத்த வேண்டும்.
- ஜடம் தெய்வத்தை நாடும் பொழுது துன்பம் என்ற பாதை வழியே செல்லுகிறது. ஜடம் தெய்வத்தை ஏற்றுக்கொண்டு சத்தியஜீவியத்தை நாடினால் துன்பத்தின் வழியே செல்லத் தேவையில்லை. அதன் பாதை ஆனந்தமாகும். அதுவே அன்னையின் அவதார நோக்கம். அன்னையை ஏற்றுக்கொண்டால் துன்பத்தை ஆனந்தமாக மாற்றலாம்.
- சமூகம் கடந்ததை மறந்து நடப்பதைக் கருதும். மனம் கடந்ததை மனதில் கொண்டு இன்று கசங்கும். ஆன்மீக வாழ்வு கடந்ததையும் எதிர்காலத்தையும் சேர்த்து இன்றைய வாழ்வைச் சிறப்பிக்கின்றது. அது முதிர்ந்து திரிகாலத் திருஷ்டியாகிறது.
- நாம், பிறந்த மண்ணின் பகுதி.நம் உடலில் உறையும் ஆன்மாவின் பகுதியாகவும் நாமிருக்கின்றோம். ஆன்மாவைக் கண்டு சித்தி பெறுபவன் யோகி. உடல் பிறந்த மண்ணின் ஆன்மீகத்தைக் காண்பவன், பூரணயோகி.
- சட்டத்தைப் பிறப்பிப்பவன், சட்டத்திற்கு அப்பாற்பட்டவன். எனினும் சட்டத்தை அமுல்படுத்தும் பொழுது சாதாரண மனிதனைவிட தன்னை அதிகமாகச் சட்டத்திற்கு உட்படுத்திக்கொள்கிறான்.
- பெற்றோர் – குழந்தைப் பாசம், தம்பதிகள், நட்பு, குரு – சிஷ்ய உறவு ஆகியவை உறவுகளில் சிறந்தவை. உறவைப் புனிதப்படுத்தும் பொழுது உச்சகட்டத்தை எட்டுவது தம்பதிகளின் உறவு. புனிதப்படுத்தப்பட்ட உறவை ஆன்மீகச் சிகரத்திற்குக் கொண்டு செல்ல குரு – சிஷ்ய உறவே அனுமதிக்கும்.
- அன்னையின் சாந்தி கலவரத்தைக் கலைக்கும். இரு நாடுகளிடையே உள்ள போரை நிறுத்தும்.
- அன்னையை வாழ்வினுள் அழைத்தபின் பொருளின் நிலை மாறுகிறது. பெறுபவர் அளவு கடந்தது என்று கருதும் தொகை, கொடுப்பவருக்குக் கடுகளவு என்று தோன்றும்.
- ஆன்மீக முன்னேற்றம் அருளை அளவுகடந்து கொண்டுவரும். பொதுவாக அதன் அறிகுறியாகப் பெருமழை வரும்.
- 90 வயதில் அன்னையின் புன்னகையும், சிரிப்பும் 15 வயது குழந்தையினுடையது போலிருந்தன. ஆன்மா வெளிப்படும் பொழுது சிரிப்பு போன்ற நம் பழக்கங்கள் இளமையைத் தாங்கிவரும்.
- ஒரு சிலரைத் தவிர, அன்னையை நாடி வருபவர்களில் மற்றவர்கள் கடைசி வரை அன்னையோடிருப்பதில்லை. கடைசி வரை இருப்பவர்கள் அன்னையிடம் நெருங்கி வந்து அவர் இதயத்தில் தங்கிவிடுவார்கள். மற்றவர்கள் விலகிவிடுகின்றனர். அவர்களில் சிலர், அன்னையை மறந்து விடுகிறார்கள். யாரோ ஒரு சிலர் அன்னையிடமிருந்து பெற்றதையும் விட்டுவிடுகிறார்கள். இவர்களில் ஒருவரைக்கூட அன்னை மறப்பதில்லை. எந்த அளவில் தொடர்பு நிற்கின்றதோ, அதே அளவில் அருள் செயல்படுகிறது.
விலகியவர்கள் அன்னை மூலமாக வந்த செல்வத்தை இழப்பதில்லை. ஏற்கனவே தானே வந்த பெருஞ்செல்வத்தை இப்பொழுது பெற அதற்குரிய உழைப்பைக் கொடுத்துப் பெற வேண்டியிருக்கும். அது வாழ்க்கைக்குரிய போராட்டமாக இருக்கும்.
அன்னையை மறந்தவர்கள் ஏதோ ஒரு சமயம் மீண்டும் அன்னையை நினைவுபடுத்தும் பொழுது அருள் முன்போல் மழையாகப் பொழிந்து செயல்படுவதைக் காணலாம். அருளை வீசி எறிந்தவர்கள் மீண்டும் அதை அடைய அதற்கே உரிய பிரம்மப்பிரயத்தனத்தை மேற்கொண்டு கண்ணால் இரத்தம் சொரிய வேண்டியிருக்கும்.
- அகம் புறத்தைப் பிரதிபலிக்கும் நிலைகள் மூன்று. முழு சக்தியுடைய அகம் அதன் பிரதிபலிப்பாகப் புறத்தை ஏற்படுத்துகிறது. வலிமை இல்லாத அகம் புற நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும் பாங்குடையது. இவற்றிற்கிடையே இந்த இரண்டு அம்சங்களும் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளன.
- பிரம்ம ரிஷி உலகத்தை பிரம்மமாகக் காண்கிறார்.பூரணயோகி உலகத்தை, பிரம்மத்தின் வெளிப்பாடாகக் காண்கிறார். பிரம்ம ரிஷி பிச்சைக்காரன் மனத்திலுள்ள ஆன்மாவைக் கண்டால், பூரணயோகி பிச்சைக்காரனையே பிரம்மமாகக் காண்கிறார்.
- கண் எதிரேயுள்ள வாய்ப்பைக் கண்டுகொள்ளாமலிருப்பது கண்மூடித்தனம். அதிலிருந்து மீண்டு வந்து, அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கும் பொழுது அது நமக்கு எட்டுவதில்லை. நம்மை அது புறக்கணிப்பதைக் காண்போம். கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், ஆர்வத்தின் ஆரம்பம். “புறக்கணிக்கப்படுகிறேன்” என்ற உணர்வு, புத்தி வந்ததின் அறிகுறி.
- அருள் செல்படும் பொழுது கேட்டது மட்டும் கிடைப்பதில்லை, பல நல்லவை நடக்கும்.
- தான் பெற்ற முழு அறிவை அறியாமை என்றுணர்பவன் ஞானி. தன் அறியாமையை அறிவாகக் கொண்டவன் மனிதன்.
- நம் நிலையின் உச்சகட்டத்தைத் தியானத்தில் தொடுகிறோம். அடிமட்டத்தை அன்றாட வாழ்வில் வெளிப்படுத்துகிறோம். நம் குறைந்தபட்ச நிலை ஆன்மீக முன்னேற்றத்தை நிர்ணயிக்கும்.
- நாம் யாருக்குப் பணிகிறோமோ அவரே நம்மை அதிகாரம் செய்ய முடியும். சூட்சும உலகில் உன் எதிரியிடம் தொடர்பு கொண்டாலும் அவனால் உன்னை அதிகாரம் செய்ய முடியும், அழிக்க முடியும். எந்த அளவில் தொடர்பேற்பட்டாலும் எதிரிக்குச் சாதகமாக முடியும். சில சமயங்களில் நினைத்தாலும் அத்தொடர்பு ஏற்படும்.
- கணவனைத் தொழுது எழுபவள் பெய்யெனப் பெய்யும் மழை. அதே சக்தியை அன்னை தம் பக்தர் அனைவருக்கும் அளிக்கின்றார். பக்தன் மழை வேண்டுமென்றால், அது பெய்யும்.
- அறியாமை நஷ்டத்திற்கு வித்து. அதை வலியுறுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.
- அன்புக்குக் கட்டுப்படுவதைவிட மனிதன் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவான். உயர்ந்த மனிதன் தன்னைப் பிறர் அதிகாரத்திற்கும் அன்பால் கட்டுப்படுத்திக் கொள்வான். அதிகாரத்திலும் அன்பைக் காண்பது அமிர்தமான இதயம் (Iswara Sakthi).
- பிறர் அறியாமையைக் காணும் பொழுது அறியாமையின் புறத் தோற்றத்தைக் காண்கிறோம். நம்முடைய அறியாமையைக் கண்டால் அறியாமையின் உள்ளுறை இரகஸ்யங்கள் தெரியும்.
- எல்லாவற்றையும் தன்பால் ஈர்த்துப்பிடிக்கும் அமைப்பும் சக்தியும் கொண்டது அகந்தை. அதன் அமைப்பு பூரணமானது. சுதந்திரத்திற்காக வேலை செய்தாலும், விலங்குகளையே உற்பத்தி செய்யும் திறனுடையது.
- அன்னையிடம் வந்தவர்கள், பிற்காலத்தில் அன்னையை விட்டுப் போயிருந்தாலும், தங்கள் வாழ்வின் சூட்சுமங்களை ஆராய்ந்து பார்த்தால், அன்னையின் காலடிச்சுவடுகள் முக்கிய இடங்களில் இருப்பதைக் காண்பார்கள். ஒரு நிலையில் அன்னையை விட்டகன்றாலும், அடுத்த நிலையில் அன்னை நம்மை விட்டகலாமல் இருப்பதைக் காணலாம்.
- முடியாது என்று கருதினால் ஒரு சுலபமான முறையுண்டு.அகந்தையை, தான் கரைய வேண்டும் என்று பிரார்த்திக்கச் சொல்வது அம்முறை. பொய்யால் ஏற்பட்டது அகந்தை. அதை மெய்யாக இருக்கச் சொன்னால், அதன் அஸ்திவாரம் வீழ்ந்துவிடும்.
- அகந்தை தான் அழியப் பிரார்த்தனை செய்வதை ஏற்றுக்கொண்டால், மின்னல் போன்ற ஒளி நம்மிடமிருந்து கிளம்பி, அனந்தம் வரை வீசுவதைக் காணலாம்.
- பிறர் நமக்கிழைக்கும் தீங்கில் அகந்தை அழிந்தவனின் விஸ்வாசம் இருப்பதைக் காண முடியும்.
- உலகை அற்புதக் காட்சியாகக் காண முயல்பவர் சில சாதாரண நிகழ்ச்சிகளில் அதைக் காண வேண்டும். ஜீவனற்ற அன்றாட காரியங்களில் ஆன்மீக ஜீவனைக் காணும் திறன் ஆன்மா விழிப்புற்றதற்கு அறிகுறி.
- அந்தத் திருஷ்டிக்கு வறுமையில் செல்வம் தெரியும், துரோகத்தில் விஸ்வாசம் தெரியும், சோம்பேறியின் சுறுசுறுப்பு விளங்கும், பக்காத் திருடன் பெரிய ஆத்மா எனப் புரியும், பொது மகளிரின் கற்பு விளங்கும்.
- நம் தீவிர ஆர்வம் பல நிலைகளில் அமைந்துள்ளது.
உழைப்பு தீவிர ஆர்வம் பெற்றால் பெருஞ்செல்வத்தில் முடியும்.
தைரியமான தலைமை தீவிர ஆர்வம் பெற்றால் தலைமைப் பதவியைக் கொடுக்கும்.
அறிவு தீவிர ஆர்வம் பெற்றால் புதிய கருத்துகள் உற்பத்தியாகும்.
ஆன்மீகம் தீவிரமடைந்தால் ஆழ்ந்த தியானம் நிலைக்கும்.
ஆன்மா மனதில் தீவிர ஆர்வம் பெற்றால் மேதையாக மனிதன் மாறுவான்.
ஆன்மா உணர்வில் தீவிர ஆர்வம் பெற்றால் வீரன் பிறப்பான்.
ஆன்மா உடலில் தீவிர ஆர்வம் பெற்றால் அவதார புருஷன் பிறப்பான்.
இவை இரண்டு, மூன்று கலந்து வரும். செயலில் தரத்தை உயர்த்துவது முன்னேற்றம். (உ.ம்.) அன்னைக்குச் சேவையாக, சமூகத்தில் பெருங்காரியத்தைச் சாதிக்க முயல்வது, பக்தியின் சாதனை. அதையும் அறிவுபூர்வமாக்கிச் செயலின் சூட்சுமத்தைக் காண முயல்வது (management) செயலின் தரத்தை யோகத்தால் உயர்த்துவதாகும்.
- “சமாதியருகே இருக்கும் பொழுது எல்லாமே மறந்துவிடுகிறது” என்பது பலருடைய அனுபவம். நிறைவடைந்த மனம் மற்றதை மறந்துவிடும் தன்மை உடையது.
- “அன்னையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எல்லாமே மறந்துவிடுகிறது“, “உங்களைப் பார்த்தால் எனக்கு எதுவுமே நினைவில் இருப்பது இல்லை“
– எந்த விஷயம் நம்மை அதன்பால் ஈர்த்து மற்றவற்றை மறக்கச் செய்கிறதோ, அது தெய்வீகமானது.
- நெடுநாளாக உன்னை வாட்டும் குணம் ஒரு முக்கியமான இடம். அது ஒரு கதவு. அது திறந்தால், அளவுகடந்த முன்னேற்றம் ஏற்படும். (உ.ம்.) அவசரம், “தான்” எனும் உணர்வு, கடுமையாகப் பேசுதல். நெடுநாளாக உனக்குப் பயன்பட்ட நல்ல குணங்களும் அது போன்ற ஒரு திறவுகோலாக அமையும். அவை வழிவிட்டால் பெரும் முன்னேற்றம் ஏற்படும். (உ.ம்.) நல்லெண்ணம், விஸ்வாசம், மிருதுவான பேச்சு, நாணயம்.
- சிங்கம் தவிர மற்றதெல்லாம் தன் அறையில் இருப்பதாக அன்னை கூறினார். சிங்கங்களும் சூட்சுமமாக நிறைய இருக்கின்றன.
- “கோபம், பயம், காமம் வெளியிலிருந்து நம்முள் வருகின்றன.நாம் அவற்றிலிருந்து விலக வேண்டும்” என்கிறார் பகவான். அப்படி என்றால் எதுவுமே நம்முடையதில்லை. நமக்கே உரிமையானது எது? நமக்குரியது பிரகிருதி (இயற்கை) அல்ல; புருஷனே நமக்குரியவன். நாமே புருஷன்.
- ஏன் வெளியிலிருந்து நம்முள் எதுவும் வர வேண்டும்? நம் ஜீவனின் அழைப்பு அவற்றை ஈர்த்து ஏற்றுக்கொள்கிறது. அந்த அமைப்பைக் கரைக்க வேண்டும்.
- சத்தியத்தின் அம்சங்களை எதிர்த்தால் அவை வளரும். (அன்பு, சண்டை மூலம் வளரும்).
- எதற்கும் பயனில்லாதவன் எல்லோரும் போற்றும்படி உயர்வதை அன்னை வாழ்வில் காணலாம்.
- மிக முக்கியமானவர் அன்னையை ஏற்றுக்கொண்டால், தம் முக்கியத்துவத்தை இழந்துவிடுவார்.
- நாம் பணத்தை முழுவதும் தியாகம் செய்த பின்னும் மனத்தைப் பணம் ஆட்கொள்வதுண்டு.
- கடமையுணர்ச்சியே வாழ்வில் சிறந்தது. அது யோகத்திற்குத் தடை.
- இனிய உறவும் பாசமும் அன்னையை ஏற்றுக்கொண்டபின் இனிமையாக இருக்காது; விரசமாகவுமிருக்கும்.
- மற்றவர் வாழ்வு மலர்வதில் மகிழும் மனிதனுக்கு, உறவு என்று தனியாக ஒன்றில்லை.
- பாசத்தை ஏற்காதவரில்லை.
- மனிதனுடைய அன்புக்கு அன்னை தம்மை முழுவதும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்.
- நம்பிக்கை உற்பத்தி செய்வதை, திறமை உருவாக்குகிறது.