யோக வாழ்க்கை – 6

  • வேலை தடைப்பட்டு, சிரமமாகி, சிக்கலாகிவிட்டபின், முழு நேரமும் விழிப்பாக இருப்பது வழக்கம். அது உதவும். தடையின் சூட்சுமம் தெரிந்தால், விலக்கலாம். அதன்பின் முழு நேர விழிப்பு தேவைப்படாது. (சாவி கொடுத்தால் கடிகாரத்திடம் வேலையில்லை).
     
  • மனம் உணர்விலிருந்து விலகியதற்கு அடையாளம் ஒன்றுண்டு. நரம்பில் உணர்ச்சி தட்டுப்படாவிட்டால், மனம் விலகியது எனப் பொருள். உடலுக்கும், நரம்புக்கும், மனத்திற்கும் உணர்ச்சியுண்டு. உணர்விலிருந்து மனம் விலகுவதை, மனத்தைவிட்டு நாம் புத்தியை அடைகிறோம் என்று சொல்லாம்.
     
  • நாம் அன்னையை நாடுவது என்பதேயில்லை. எப்பொழுதும் அன்னைதான் நம்மை நாடி வருகிறார். நம்முள் மறைந்துள்ள அன்னை அவ்வப்பொழுது மேலே வருகிறார். அன்னையின் அசைவு நல்லுணர்வாகவும், நல்ல நிகழ்ச்சியாகவும் காணப்படுகிறது. அதை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாம் சுவையான புற நிகழ்ச்சிகளை நோக்கி விரைகிறோம். வருவது நின்றுவிடுகிறது. புற நிகழ்ச்சியின் கவர்ச்சி தவிர்க்க முடியாததாக நமக்கு அமைகிறது.
     
  • கட்டுப்பாட்டை தானே கற்றுக்கொள்வதில்லை. கட்டாயப்படுத்தினால் மட்டுமே நாம் அதை ஏற்கிறோம். கடுமையாகவோ, மென்மையாகவோ கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டும். வலியுறுத்தாவிட்டால் நாம் அதை ஏற்கமாட்டோம்.
     
  • கட்டுப்பாட்டை வலியுறுத்த முடியாதவர்களால், ஒரு ஸ்தாபனத்தை நிர்வாகம் செய்ய முடியாது. கட்டுப்பாடுள்ளவர்களை நியமித்து நடத்தலாம்.
     
  • முன்பிறவியில் சுயகட்டுப்பாட்டைப் பெற்றவர்களால் மட்டுமே யோகம் செய்ய முடியும்.
     
  • தானே சுயகட்டுப்பாட்டை கற்றுக்கொள்வான் என எதிர்பார்ப்பது, தண்ணீர் மேட்டை நோக்கிப் போகும் என எதிர்பார்ப்பதை ஒக்கும்.
     
  • குடும்பத் தலைவர் கட்டுப்பாட்டை வலியுறுத்தாவிட்டால், குடும்பம் உருவாகாது. கட்டுப்பாடு எனும் குடும்பப் பண்பைக் குலைக்க, குடும்ப முக்கியஸ்தர் முனைந்தால் எந்தக் குடும்பமும் அதிக நாள் நீடிக்காது. உயர்ந்த குடும்பம், தாழ்ந்த குடும்பத்தில் சம்பந்தம் செய்தால் இந்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட குடும்பங்கள் உடையாமலிருக்கும் அதிசயத்தை அன்னையின் அருளில் காணலாம்.
     
  • ஆர்வமிருந்தால்தான் படிக்கிறோம். பக்தியோடு கூடிய ஆர்வமிருந்தால் தான் அன்னை நூல்களைப் பயில முடியும்.
     
  • ஆசை, பிராணனின் சக்தி. மனோதிடத்தால் ஆசையை வெல்லலாம். ஆசைக்குரிய வல்லமையுடைய திறனை உடல் பெற்றிருந்தால், உடலும் ஆசையை வெல்லும்.
     
  • அளவோடு சாதிக்க அகந்தை ஏற்பட்டது.தன்னை மட்டும் அறியும் திறனுடையது. அளவிறந்து சாதிக்கும் திறன் பெற்றால் அகந்தையைத் தாண்டலாம். அளவிறந்த நல்ல (பிராண) சக்தியாலும், திறனுடைய விசால புத்தியாலும், அகந்தையை வெல்ல முடியும்.
     
  • பிரிக்கும் கருவி மனம். பிரிவினையால் திறன் பெறுவது மனம். புற வெளியில் உள்ளவற்றின் ஒருமைப்பாட்டை உணர்ந்தால், மனத்தைக் கடக்க முடியும்.
     
  • ஏற்ற செயலை முழுமையாக நிறைவேற்ற வேண்டி ஜீவியம் தன் ஆதியையும், தன்னையும் மறந்து செயல்படுவதை நாம் ‘அறியாமை’ என்கிறோம். ஆதியை உணர்ந்தால் அறியாமையை வெல்லலாம். பூரணமாக அறியாமையை வென்றிட, நம் செயல்களுக்கிடையே ஆதியை நினைவுகூறுதல் தேவை.
     
  • காலமும், இடமும் (time and space) வாழ்வின் அஸ்திவாரம். இடத்தை ஜீவியம் மனத்தின் உணர்ச்சி மூலம் அளிக்கிறது. காலத்தைக் கடப்பதைப் போல், இடத்தைக் கடக்க, நாம் நம்மை நேரடியாக உணர வேண்டும். புலன்கள் மூலம் உணர்ந்தால் இடத்தைக் கடக்க முடியாது.
     
  • சத்தியம் (existence) விளக்கம் பெற்றால் (when comprehends) ஜீவனுள்ள எண்ணம் (real idea) தோன்றும். இவ்விளக்கத்தை நாடாவிட்டால், உணர்வு ஆனந்தமாக நின்றுவிடும். தன்னறிவு (self-awareness) ஜீவியமாகவே இருக்கும்.

    தன்னையறிந்த ஜீவியத்தை விளக்கம் ஜீவனுள்ள எண்ணமாக மாற்றுகிறது.
     
  • ஜீவியத்தை உணராத நிலை சத்தியம். சத்தியத்தை உணராத நிலையில் சத்தியம் தன் அமைப்பை இழந்து அசத்தாக மாறுகிறது.
     
  • செயலால் மனிதன் வாழ்வுடன் ஒன்றிவிடுகிறான். செயல்படாத நிலை ஆன்மீக நிலை.
     
  • மனிதன் ஆசையால் நிர்ணயிக்கப்படும் செயலால் கட்டுண்டுள்ளான். அவனால் சச்சிதானந்தத்தைக் கடந்து ஆதியை அடைய முடியும். செயலைத் திருவுருமாற்றம் செய்து, சத்தியஜீவியத்தின் மூலம் இதை நிறைவேற்றலாம். செயலைத் தவிர்த்து அதன் சாரமான ஆன்மாவின் மூலம் தெய்வ லோகத்தின் வழியாகவும் இதை அடைய முடியும். நம் கரணங்களுக்குரிய புருஷன் ஒன்றின் மூலமாகவும் இதைச் சாதிக்கலாம்.
     
  • சைத்திய புருஷன் ஆன்மாவாகும். இது நினைவின் உறைவிடமான மனமாகச் செயல்பட முடியும். பூர்வஜென்ம ஞானமும் இதற்குண்டு. இதற்குச் செயல்திறனில்லை. நினைவு, அறிவு, வழிகாட்டும் திறனுண்டு. முடிவு, செயல், அதிகாரம் இதற்கில்லை.
     
  • தன்னை அறிந்தால் முன்னேற்றமுண்டு. சமூகத்தை அறிவதால் சமூகத்தில் முன்னேற முடிகிறது. விஞ்ஞான முன்னேற்றம் அல்லது செயல்படும் வகையில் முன்னேற்றம் சமூகத்திற்குரியது. தனி மனிதனுக்குக்குச் சமூகத்தைத் தாண்டிய முன்னேற்றமில்லை.
     
  • தனி மனிதன் தன்னையுணர்வதால் முன்னேறுகிறான். அதற்குச் சமூகத்தின் அனுமதி தேவை. சமூகத்தை எதிர்த்து தனி மனிதனால் முன்னேற முடியாது. தான் புதியதாக அறிந்ததை சமூகம் ஏற்க வேண்டும் என முயல்வது தவிர வேறு வழியில்லை.
     
  • சமூகத்தைப் புறக்கணித்து, தான் நினைத்ததை மனிதன் நிறைவேற்றுவதே அடுத்த கட்டம். மார்டின் லூதர், மதத்தில் செய்த புரட்சியும், சாக்ரடீஸ், அறிவில் செய்த புரட்சியும், ஜனநாயகம் அரசியலில் செய்த புரட்சியைப் போல், இனி மனிதன் சமூகத்தைக் கடந்து சென்றால், சமூகம் அவனை ஏற்க வேண்டும்.
     
  • சமூகத்தை மனிதன் ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, தனி மனிதனின் தனித்தன்மையை இனி சமூகம் ஏற்க வேண்டும்.
     
  • சமூகம், தனி மனிதனுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. மனிதன் தன் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். பொருள்களைச் சமூகம் உற்பத்தி செய்கிறது. மனிதன் தன் வாழ்க்கையைத் தானே நிர்ணயித்துக் கொள்கிறான்.
     
  • சமூகத்தை ஏற்றுக் கொள்ளும் மனிதனை சமூகம் ஏற்றுக் கொள்கிறது. சமூகத்தின் திறனைத் தன்னுள் பெற்றிருப்பவனை சமூகம் “தலைவன்” என ஏற்றுக் கொள்கிறது.
     
  • ஒரு விஷயமாக அக்கறையும் நினைவுமிருக்கிறதா என அறிய ஒரு வழி உண்டு. வேறு காரியத்திலீடுபட்டுள்ளபொழுது இக்காரியம் நினைவு வந்தால் அக்கறையிருப்பதாக அர்த்தம். மணிக்கொரு முறை சமர்ப்பணம் செய்ய ஏற்றுக் கொண்டவர்கள் அக்கறையில்லாதவர்களானால், இந்த முடிவை அரை மணி நேரத்தில் மறந்துவிடுவார்கள்.
     
  • தன்னை அறிதல் (conscious) என்றால் ஆன்மாவை அறிதல் எனப்படும். தவசி நிஷ்டையில் ஆன்மாவை அறிவார். கண் திறந்து செயல்படும் பொழுது அவர் (unconscious) தன்னையறிய முடியாத நிலையிலேயே இருக்கிறார்.
     
  • யோகத்தை ஆரம்பிக்க மூன்று தேவை:
    • கடந்த காலத்தை, மனத்தைக் கடந்து வருதல்.
       
    • வாழ்வின் திசையை நேர் எதிராக மாற்றுதல்.
       
    • தடையின்றி எதிர்காலத்தை நோக்கிச் செல்லுதல்.


கடந்த காலம் எண்ணமாகவும், உணர்வாகவும் வருவதால் இம்முயற்சியில் தோல்வி அடைகிறார்கள். அதைக் கடப்பது கடினம். அடுத்தவை அதைவிட சற்று கடினம். யோகத்தில் முன்னேறினால் சிரமம் அதிகமாகும் என்பது சட்டம்.
 

  • கடந்த கால நம்பிக்கை பயனற்றவை என மனத்திற்கு உணர்த்துவது பெரும் பலன் தரும். மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களை அசை போடுவது போல், நினைவால் தடையை நிலைப்படுத்துவதாகும். மன உறுதியால் இதைத் தடுக்கலாம். இருந்தாலும் பழக்கம் மீண்டும் தன்னை வலியுறுத்தும். உடலின் பழக்கத்தைக் கைவிட அதிக உறுதியுடன் அதை மறுத்தால் வெல்லலாம் என்கிறார் பகவான்.
     
  • நாம் சிலரைச் சோம்பேறிகள் எனவும் மற்றவரைச் சுறுசுறுப்புள்ளவர் எனவும் அறிவோம். அவரவர்கள் கண்ணோட்டத்தில் மனிதர்கள் செயல்களைக் கவனமாகப் பார்த்தால், தங்களுக்கு முக்கியமானவற்றில், ஆர்வம் உள்ள விஷயத்தில் முழுச் சோம்பேறிகள் உட்பட அனைவரும் தீவிரமாகவும், கவனமாகவும், சுறுசுறுப்பாகவும், எதையும் தவறாமலும் நாடுகிறார்கள் என்பது தெரியும். பெருந்தலைவரும், உபயோகம் இல்லாதவனும் இந்தக் கண்ணோட்டத்தில் சமம் என்று தெரியும். இதை அறிவது விவேகம். இதுவே பிரம்மஞானம்.
     
  • யானையின் பலம் அதன் உணவிலிருந்து கிடைக்கவில்லை. யானை சாகபட்சிணி. அது சாப்பிடுவது, இலை! உணவால் உடல் வலுவடைவது உண்மையானாலும், உடலின் வலிமை அதன் அமைப்பிலிருந்து வருகிறது. அது பிறப்பிலிருந்து கிடைப்பது.
     
  • சக்தி, திறமை, உரிமை, செல்வம், சந்தோஷம் ஆகியவற்றிற்காக மனம் ஆர்வம் கொள்வதைவிட ஆசை, மரியாதை, புகழுக்காக மனித மனம் அதிகமாகத் துடிக்கும். இவை அகந்தையின் அம்சங்கள்.
     
  • மரியாதை, பிரியம், நன்றி ஆகியவை உயர்ந்தவை, உண்மை என அறிவோம். ஒரு வரம்புக்குள் அவை உண்மையே. வரம்பு மாறினால், அவையும் மாறும். வரம்பு மாறுவதாலோ, சந்தர்ப்பம் மாறுவதாலோ மாறாத பிரியம், நன்றி, அரிது. அப்படிப்பட்டவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மரியாதை தவறாமல், பிரியம் குறையாமல், நன்றி மறக்காமல் செயல்படுவார்கள். அத்துடன் இக்குணங்களை அவர்கள் எல்லோரிடமும் – வித்தியாசமின்றி – வெளிப்படுத்துவார்கள்.
     
  • ஆசைக்கு அறிவை உணர்த்த முயல்வது அறியாமையாகும். இன்று வரும் நஷ்டம் நாளைய இலாபத்தைக் கொண்டு வரும் என விளக்குவது போலாகும் அது. அதிகாரம் செய்யும் மனைவிக்கு அறிவுக்குரிய விளக்கமளிப்பது போலாகும்.
     
  • பிறர் துன்பம் களைய முனையும் பரோபகார எண்ணம் முழுவதும் பயனற்றது என்றுணர்வதே அறிவின் சிகரமாகும். பரோபகாரம் பிறருக்குப் பயன் தருவதல்ல, நம் அகந்தையை வலுப்படுத்துவது என்று அறிய மனத்தைக் கடக்க வேண்டும்.
     
  • ஒருவருக்குக் கட்டுப்பாடாக அமைவது மற்றவர்க்கு எதிராக அமையும். பணத்தைச் செலவு செய்யாதது ஏழைக்குரிய கட்டுப்பாடு. பணத்தைச் செலவு செய்ய முன்வருவது செல்வந்தனுக்குரிய கட்டுப்பாடு. ஒருவரை அழிப்பது, அடுத்தவரை உயர்த்தும். ஏகபத்தினி விரதமும், கற்பும் கட்டுப்பாடாகவும் அமையும், அதற்கு எதிரானதாகவும் இருக்கும்.
     
  • பக்தன் நிலையில் நல்லது மட்டுமே நடக்கும்.யோகத்தை மேற்கொண்டால், நடப்பவை அனைத்தையும் நல்லனவாகக் கருதும் மனப்பான்மை வேண்டும்.
     
  • பற்றற்ற யோகியின் தீவிர தியானமும், உலகை மறந்த நிலையில் தன் நலத்தை மட்டுமே கருதும் சுயநலமியின் சுயநலமும் ஒருவகையில் ஒன்று மற்றதைப் போலாகும். இருவர் தீவிரமும் ஒன்றே. ஒருவர் நாடுவது பரம்பொருள், அடுத்தவர் தேடுவது சுயலாபம்.
     
  • நடக்காதது நடந்த பொழுது – உதாரணமாக, கெட்டுப்போன கல்லீரல் வேலை செய்ய ஆரம்பித்தால், ஆச்சரியமும், நன்றியும் எழுகின்றன. பலனை ஏற்பது முதல் நிலை. நம்பிக்கை பலனளித்தது என்பதை அறிவது நன்றியுணர்வு. மாறுதல்களின் பல நிலைகளை நுணுக்கமாக அறிவது, ஞானம். எத்தகைய மாறுதல்கள் நல்ல பலனை ஏற்படுத்தின என்று அறிவது (process) மாறிய வகையை அறிவதாகும்.
     
  • வாழ்வையும், அதன் வாய்ப்பையும் மனிதன் தன் திறமை, நோக்கம், குறிக்கோளுக்கு ஏற்ப அனுபவிக்கின்றான். அவை பல நிலைகளில் அமைந்துள்ளன. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் அருளும் அதே போல் பல நிலைகளில் அமைந்துள்ளது. நம் நிலையின் பல்வேறு அளவுகளையும், இன்று நாமுள்ள அளவையும் தெளிவாக அறிவது அரிதான அனுபவம்.
     
  • வாய்ப்புகளை உற்பத்தி செய்வது நம் நோக்கம். எதை நாம் நாடுகிறோம் என்பது எந்த வாய்ப்பை உற்பத்தி செய்கிறோம் என்பதை நிர்ணயிக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக மார்க்கட் செழித்து வருகிறது. ஏனெனில் கடந்த இருபது ஆண்டுகளாக நாம் அதிக வசதியை அனுபவிக்க முடிவு செய்துவிட்டோம். எதிர்காலம் அதிக வசதியை அளிக்கப் போகிறது. எனவே எதிர்காலம் அதிக வாய்ப்புகளை உற்பத்தி செய்யும் என்பது திண்ணம்.
     
  • பணம் பெற்றவரை மற்றவர் திட்டத்தில் முதலீடு செய்யச் சொல்வது எளிதல்ல. பொது நன்மைக்காக, கூட்டாளியின் உரிமையைத் தானே விட்டுக்கொடுக்கச் சொல்வது முடிவில்லாத போராட்டம். பொதுவாக, பலன் தருவதில்லை.

    உனக்குக் கீழே வேலை செய்தவரிடம் விஸ்வாசமாக இருக்கும் பொழுதும், மனைவி மேல் பாசம் அதிசமான பொழுதும், உன் மரியாதையை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என நினைப்பது நிரந்தர படபடப்புக்கு அடிப்படை. தன் அறியாமையை அறிவாக இன்றுவரை கருதிப் போற்றுகிறேன் என்று காண்பது ஞானம். அந்த ஞானத்தை நடைமுறையில் பின்பற்றுவது யோகம்.
     
  • “ஞானமும், வீரமும், அற்புதங்களை அன்றாட நிகழ்ச்சிகளாக்கும் “.

    அடுத்தவர் எனக்குக் கொடுக்கும் தொந்தரவுகளுக்கு நானே அஸ்திவாரம் என்பது ஞானம். உன்னைத் தொழிலிருந்து விலக்க விரும்பும் கூட்டாளிக்கே உன் தொழிலைக் கொடுக்க முன்வருதல் தீரம். எண்ணமற்ற அமைதிக்கும், சிந்தனைக்கும் புலப்படாததைத் தெளிவாக அறிவதும், அன்னையை அடுத்த நிலையிலிருந்து அழைத்தால் அது ஞானத்தைக் கொடுப்பதுடன், பிரச்சினைக்குத் தீர்வையும் கொடுக்கும் என்று அறிவதும், ஞானம், வீரம், தீரமாகும்.
     
  • கீழ்க்கண்டவை முறைகளின் பல நிலைகள்:
    • நம் உளநிலையின் உச்ச நிலையை, சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலை வெளிப்படுத்துவதால், அதுவே தலையாய முறை.
       
    • அந்த வேலையை எப்படிச் செய்வது? அதன் ஞானபூர்வமான அஸ்திவாரம் எது? என நிர்ணயிப்பது அடுத்த சிறப்புடையது.
       
    • இவை முடியாத பொழுது, ஸ்ரீ அரவிந்தர், அன்னை நூல்களைப் பயில்வது நல்லது.
       
    • அடுத்த நிலையிலுள்ளது தியானம்.
       
    • எதுவும் முடியாதவர், நாம ஜெபத்தை மேற்கொள்ளலாம்.
  • (Perfect) சிறப்பானதைத் தவிர மனம் மற்றதை ஏற்காது. பூரணச் சிறப்பில்லாவிட்டால் மனம் மகிழ்வுறாது. தேவையைப் பூர்த்தி செய்வதால் உடல் ஏற்றுக் கொள்ளும், சிறப்பை நாடாது.

    மனம் இலட்சியவாதி, உடல் யதார்த்தவாதி. மனத்தைக் கடந்து சத்திய ஜீவியத்தை அடைந்தால், இலட்சியமும், யதார்த்தமும் சேர்ந்து, இலட்சிய நடைமுறையை ஏற்படுத்தும்.
     
  • நம் செயல்களை, யோகச் சட்டப்படி புரிந்துகொள்ளுதல் ஞானயோகம். அதை அன்னையின் சட்டப்படி விளங்கிக் கொள்ளுதல் பூரண ஞானயோகம். நிஷ்காம்ய கர்மத்தால் மட்டும் பூரண கர்மயோகத்தை முடிக்க முடியாது. அதற்கடுத்த கட்டமாகிய சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலையால்தான் அதைப் பூர்த்தி செய்ய முடியும். இறைவனின் ஆனந்தத்தில் லயிப்பதால் மட்டும் பூரண பக்தியோகம் பூர்த்தியாகாது. இறைவனை நம் உணர்வில் அனுபவித்தால்தான் அது பூர்த்தியாகும். உடலைத் தூய்மைப்படுத்துவதால் மட்டும் உடலின் யோகம் பூர்த்தியாகாது. உடலின் உள்ளே புதைந்துள்ள ஆன்மீகம் வெளிப்பட்டுச் செயல்பட்டால்தான் உடலின் திருவுருமாற்றம் பூர்த்தியாகி, பூரணயோகம் உடலில் பூர்த்தியாகும்.
     
  • ஓர் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளுதல், அதன் சிறப்பை உணர்தல், அதன் மீது ஆசைப்படுதல், அதற்கென ஆர்வம் கொள்ளுதல் ஆகியவை நாம் உள்ள நிலையில்தான் (plane) முடியும். நமக்கு மேற்பட்ட அல்லது கீழ்ப்பட்ட நிலையிலுள்ளவற்றின் மீது அது போன்ற ஆர்வம் ஏற்படாது. உணர்ச்சி வசப்பட்ட காரியங்களை மனம் நம்புவதில்லை. அவற்றை அர்த்தமற்றதாக அறிவு கருதும். பகவான் சொல்லும் யோக முயற்சி, வளரும் ஆன்மாவுக்குரியது. நாம் மனத்திலிருந்து செயல்படுகிறோம். இடையில் 9 அல்லது 10 நிலைகளிலிருப்பதால் யோகத்தை மனம் முழு ஆர்வத்துடன் புரிந்து கொள்ள முடிவதில்லை.
     
  • ஜடம் சக்தியால் முழுவதும் ஆளப்படுகிறது. நாம் அதை விட்டு விலகி உள்ளோம். மனத்தால் அதை அறிய முற்படுகிறோம். அதனால் நமக்கு, சக்தியின் முழுமை விளங்குவதில்லை.
     
  • “என்னால் முடியாது; எனக்குத் தாங்காது” என்று சொல்பவன் யோகத்திற்குப் புறம்பானவன்.
     
  • புறவாழ்வில் எதுவும் உன்னைக் காந்தம் போல் கவரவில்லை என்றால், புற வாழ்வால் உனக்குத் தீங்கு செய்ய முடியாது. (i.e.) இறைவனை நோக்கிச் செல்பவனைத் தடுக்கும் ஆசையை அது இழந்துவிடும்.
     
  • எனக்குத் தாங்காது என்ற நிலையிலிருந்து கட்டுப்பாட்டுக்கும், சமத்துவத்திற்கும் போக மூன்று நிலைகளுண்டு. அவை உடற்கவர்ச்சி, உணர்ச்சியின் வேகம், மனம் பொறுக்க முடியாதது. சில சமயங்களில் புற நிகழ்ச்சி, உடலை அசைக்கும். அப்படியானால் பின்னர் உணர்வும், மனமும் புறநிகழ்ச்சியால் அதே போல் பாதிக்கப்படும். நீயே அவற்றை நாடாதது நல்லது. ஆனால் சிறப்பெய்த அவை வெளியிலிருந்து வரும் பொழுது அவற்றால் பாதிக்கப்படாமலிருக்க வேண்டும்.
     
  • எந்த நிமிஷம் நமக்கு நிகழ்ந்தது – எதுவானாலும் – அருள் எனப் புரிகிறதோ அதே நிமிஷம் மனத்திலிருந்து நாம் சைத்திய புருஷனை அடைகிறோம். கோபம் நம்மை மனத்திலிருந்து பிராணனுக்கு அழைத்துச் செல்கிறது. அதனால்தான் “கோபம் வரும்பொழுது, சிந்தனை செய்” என்கிறார்கள்.

    அடுத்தவரும் நம்மைப் போல் ‘பிரம்மம்’ என்ற எண்ணத்தை ஏற்றுக் கொண்டவுடன், நேரடியாக சத்தியஜீவியத்தை நம் எண்ணம் தொடும்.
     
  • அன்பு, தெய்வீக அன்பாக மாறும் பொழுது, அனந்தனின் இரகஸ்யம் வேணுகானமாக வெளிப்படும்.
     
  • சமூக அந்தஸ்தை நிர்ணயிப்பது படிப்பு. படிக்கும் பொழுது அந்த வயதிற்குரிய கவர்ச்சிகள் ஏராளமாக நம்மை ஈர்க்கும். அவற்றைக் கடப்பவருக்கே படிப்பு, பட்டம். படிப்பு முடிந்தபின், படிக்காத பழைய நண்பர்களுடன் சகஜமாகப் பழக முடியாது. எந்த வாழ்வோடு (social stratum) நாம் கலந்து கொள்ள முடியவில்லை என்று நிச்சயமாகத் தெரிகிறதோ, அதன் கவர்ச்சிகள் ஆயிரம். அதுவே பக்தனுடைய நிலையும்.
     
  • பக்தனுக்குத் தீராத பிரச்சினையில்லை. நோய் வராது, பிரார்த்தனை பலிக்கும். யோகத்தை மேற்கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் பலிக்காமல் போகும். எந்த வியாதியும் வரும். எந்தச் சிறிய பிரச்சினையும் தீராமல் நிற்கும்.
     
  • தன் இராசியை அறிந்து மாற்ற முன்வருவதை உண்மை (sincerity) எனலாம். தவிர்க்க முடியாத வேகத்தைத் தடுக்கும் கட்டுப்பாடு எனவும் அதைச் சொல்லலாம். முரண்பாடுகளைக் கண்டு அவற்றைத் தீர்க்க முயல்வதையும் உண்மை எனலாம்.
     
  • தனி மனிதனுடைய சுயநலம், இலாபம், அகந்தைக்கு ஆதரவில்லாத எதுவும் பூர்த்தி அடையாது. இறைவனுடைய பணிக்கு இவையெல்லாம் விலக்கு. அகந்தைக்குரிய வேலை எதுவும் இறைவனுக்குச் சேவை செய்யாது. அகந்தையை அழித்தே அதைச் செய்ய முடியும். அழிக்க உரிமையுள்ள அகந்தை நம் சொந்த அகந்தை மட்டுமேயாகும்.
     
  • எல்லாச் செயல்களிலும், அசைவுகளிலும் வாழ்வின் எதிரொலியைப் பார்க்கலாம். வேலைக்குரிய நேரம், நிகழ்ச்சியின் தொடர், அவற்றுள் ஒவ்வொன்றும் பூர்த்தியாவது, சக்தி, திறன், பலன், செயல் நடக்கும் நிலைகள், தேவைப்படும் இடம், உணர்வு, சூட்சுமங்கள், சூழல், அதற்குரிய அறிவு, காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் ஆகியவற்றில் எதிரொலியைக் காணலாம். காரியத்தை தேவைப்படும் நேரம், நிபந்தனைகளை நிர்ணயிக்கும். ஆரம்பிக்க
     
  • மனிதனுடைய வளர்ச்சி கண்ணுக்குத் தெரியும். பரிணாமம் கண்ணுக்குத் தெரியாது. ஆழ்ந்த மனதில் ஆன்மா பரிணாம வளர்ச்சியடைவதாகக் கூறுகிறார் பகவான். வாழ்க்கை தனக்கு வேண்டிய ஆன்மீக வளர்ச்சியைப் பெற முனைந்ததில் பெற்ற பலன், மனோமய புருஷன். ஆனால் அது முடிவல்ல. பகவான் “தனி மனிதனிலுள்ள ஆன்மா வளர வேண்டும்” என்கிறார். இதை எய்த ஆன்மாவே தன்னையுணர வேண்டும், தன் பரிணாம வளர்ச்சியை நாட வேண்டும். அதன் பலனாக, சைத்திய புருஷன் வெளிப்படுவான், ஈஸ்வரனும் அடுத்த கட்டத்தில் வெளிப்படுவான்.
     
  • தீவிரமானவை, சுருக்கமாக முடியும். போர், திருமணம், அறிவு இல்லாதவனுடைய சிந்தனை, ஆரம்ப நிலையில் தியானம், உணர்ச்சி அற்றவரின் விஸ்வாசம், இதைப் போன்றவை.

    அடுத்த உயர்ந்த நிலைக்குப் போனால், இவை திரும்பத் திரும்ப வர வேண்டும். நிரந்தரமாக இருக்க வேண்டும். அரிதான தீவிரத்தை அன்றாட நிகழ்ச்சியாக்கினால், அடுத்த நிலைக்குப் போக முடியும்.
     
  • உயிரைக் காப்பாற்றுதல், வளர்ச்சி, அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சி, பரிணாம வளர்ச்சி.

    நாம் வாழும் நிலையில் எல்லாத் திறமைகளும் குறைந்தபட்ச அளவில் பூர்த்தியானால்தான் உயிர் வாழ முடியும். அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சி பெற இத்திறமைகள் அதிகபட்ச அளவில் பூர்த்தி பெற வேண்டும். வளர்ச்சி இவற்றிற்கு இடைப்பட்டது.

    அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சி, மனிதனை அவனுள்ள நிலையில் உள்ள பல சிறு நிலைகளுக்கு உயர்த்த வல்லது. திறமையை வளர்த்தால் அனுபவம் பெற்று நிலைக்குப் போகலாம்.

    பரிணாம அனுபவத்தின் சாரத்தால் வளர்வது, அந்த சாரம் ஜீவனின் மூலை முடுக்குகளில் சேருகிறது.
     
  • ஒற்றன் சர்க்காருக்கு இன்றியமையாத கருவி. கோள் சொல்லுதல் மட்டமான மனித சுபாவம். அடிப்படையில் இரண்டும் ஒன்றே.
     
  • திறமையை வெளிப்படுத்த கட்டுக்கடங்காத ஆர்வம் எழும். திறமை குறைந்த நிலையில் அது அழிவை நாடும் ஆட்டமாக மாறும். இதில் வெளிப்படுவது சக்தி. இவர்கள் திறமை பெற விரும்பமாட்டார்கள்.
     
  • பரிணாம வளர்ச்சியின் முதல் ஸ்பர்சத்தைப் பெறுவது, நம்முள் உள்ளவற்றில் மிக உச்சகட்டத்திலிருப்பதாகும். உதாரணமாக நம்மில், மனம் வளர்ச்சியை விரும்பும்; பிராணனோ, உடலோ விரும்பாது. சமூக அந்தஸ்தில் உயர விரும்புவது மனம். மனம் விரும்புவதால் உடல் உழைக்கிறது.
     
  • மனம் உடலை உற்சாகப்படுத்துமானால் உடலில் வளர்ச்சி ஏற்படும். உடலிலுள்ள மனம் அதைச் செய்தால் வளர்ச்சி அல்லது அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சிக்குப் பதிலாக, பரிணாம வளர்ச்சி ஏற்படும். உடலில் மேலெழுந்தவாரியாகவுள்ள மனம் (skill) திறமை பெற உதவுகிறது.
     
  • ஏழாம் நிலையிலுள்ள உடல் மனம் (subconscious skill) ஆழ்மனத் திறனை அறிய உதவும். மனத்தில் – 3ஆம் நிலை – உள்ள மனம் திறமையை அறிவதில் முதல் நிலையிலுள்ளது. ஏழாம் நிலை திறனை அறிகிறது. ஏழாம் நிலை விரும்பி 3ஆம் நிலை மனத்தை ஏற்பது வளர்ச்சி. விரும்பி ஏற்பது விரும்பிப் பணிவதனால் பலன் அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சியாகும். ஒன்பதாம் நிலைக்குப் பின்னால் உள்ள ஆன்மா கிளம்பி ஜீவனை நடத்துமானால், அது பரிணாம வளர்ச்சியாகும்.
     
  • சென்ற நூற்றாண்டில் ஜாதி, பணம், அந்தஸ்து முக்கியமாகக் கருதப்பட்டன. சுதந்திரத்திற்குப் பின் ஜாதிக்கிருந்த மரியாதை குறைந்து விட்டது. ஆசிரமத்தை ஏற்படுத்தியதால் அன்னை, பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை தகர்த்தெறிந்தார். உள்மனத்திலும், ஆழ்மனத்திலும் உள்ள இது போன்ற நிலைகளை உடைத்துவிட்டால், யோகத்தை மேற்கொள்ளலாம்.
     
  • கண்மூடிச் செயல்படும் சக்தியைத் தன்னை உணரச் செய்வதே ஒருநிலைப்படுதல் என்று பூரணயோகத்தில் கொள்ளப்படும். விழித்தெழுந்த சக்தி, ஜீவனின் மையத்திலுள்ள ஒளியை நாடுவது சமர்ப்பணம்.
     
  • ஜீவனின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள சக்தி விழித்தெழுவது முழுமையான ஒருநிலைப்படுதல் எனலாம்.
     
  • விழித்தெழுந்த சக்தியை ஜீவனின் எல்லாச் சிறு பகுதிகளும் தடையின்றி ஒளியை நோக்கிச் செல்ல அனுமதிப்பதை அகண்ட பெருவிழிப்பு என்கிறார் பகவான். சக்தி விழித்தெழுதல் ஜீவியமாகுதலாகும்.
     
  • கடந்த நாட்களின் அனுபவத்தின் சாரத்தை முழுமையாகப் பெறுதல் சைத்திய புருஷனை அடைய உதவும். எந்த அளவில் இதைச் செய்ய முடிகிறதோ அந்த அளவில் சைத்திய புருஷன் வெளிப்படும்.
     
  • தன்னை தவறாது வலியுறுத்தும் கடந்த காலக் கர்மத்தை 9 நிலைகளாகப் பிரிக்கலாம். கர்மத்தை எண்ணமாக மாற்றி மனம் இடைவிடாது திரும்பத் திரும்ப நினைக்கும். உணர்ச்சி அதே கர்மத்தைத் துள்ளி எழும் வேகமாக்குகிறது. ஒவ்வொரு முறையும் அது தவறாது தலைதூக்கும். உடலில் இதே கர்மம் மௌனமாக மீண்டும் மீண்டும் செயல்படும் பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கத்திற்கு உணர்வோ, எண்ணமோ இல்லை.
     
  • யுகங்கள் மாறினால் ஆசை நாடுவதும் மாறுகிறது.விளையாட்டு, உணவு, உறவு, சொத்து, பதவி இதுபோல் பல்வேறு காலங்களில் மனித ஆசையின் மையமாக இருந்துள்ளது. துதிபாடுவதை, பக்தன் இதுபோல் நாடுகிறான். அதைக் கடந்து வந்து, அவனையே நாடும் பொழுது பக்தி மனதில் பிறக்கிறது. துதிபாடுவதை முழுமையாக அனுபவிப்பதே பக்தி. மனித வாழ்க்கையிலிருந்து, தெய்வீக வாழ்வுக்குப் போகும் பாதை அது.
     
  • மரணத்தால் மனம் வெதும்பாவிட்டால், அகந்தை அழிந்ததாக அர்த்தம்.
     
  • தெய்வம் ஆன்மாவைப் பார்த்துச் சிரிப்பதாக, பகவான் கூறுவதிலுள்ள உண்மையை, பிரச்சினைகள் தீர்க்கப் பயன்படுத்தலாம்.
     
  • மோட்சமடைவதற்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம். இந்த வாழ்க்கையின் அம்சங்களை சைத்திய புருஷன் மறப்பது, இம்முறை, பூரணயோகத்தில் பயன்படுத்துவதாகும்.
     
  • உதவி, சேவை என்பவை சமூகத்தின் இலட்சியங்கள். ஆதியில் அவற்றிற்கு அர்த்தம் இல்லை. தன்னலத்திற்காகச் செய்யும் உதவியும் சேவையும் பயன் தரும். அதைக் கடந்த நிலையில் உதவி, சேவையில்லை.
     
  • சேவை என்பது இல்லாமலில்லை.அடுத்தவர் பயனடைவதற்கான செயல் நம் கொள்கைப்படி, சேவையாகாது. தன்னையோ, பிறரையோ கருதாமல் இலட்சியமாகச் செயல் அமைந்தால் அது சேவையாகும். அடுத்தவரிடமுள்ள ஆன்மா அதை ஏற்றுக் கொள்ளும். அடுத்தவருடைய அகந்தைக்கு அது பயன்படாது.
     
  • நம் ஆன்மாவால் மட்டும் சேவை செய்ய முடியும். அது அடுத்த ஆன்மாவைச் சென்றடையும். மனித உறவில் நட்பும், சேவையும் உண்டு. அவை அவர்களுடைய பண்பின் எல்லைக்குட்பட்டது. எல்லையை மீறிய சேவையோ, நட்போ இல்லை. எல்லைக்குட்பட்டு நட்புண்டு, சேவை உண்டு. அவை நாட்டின் பழக்கம், குடும்ப பாரம்பரியம். அவர்களுடைய பண்பு ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. சட்டம் பொது. இது விதிவிலக்கு. விலக்கு, சட்டத்தைப் பொய்யாக்காது. 580. பண்பு மூலமாக மனிதன் தெய்வமாகலாம் என்பதன் தத்துவம் மேற்சொன்னதில் பொதிந்துள்ளது. “பிரபஞ்சமே மனிதனைப் பண்பாகத் தொடுகிறது” என்கிறார் பகவான். உடலுக்கும், உயிருக்குமுள்ள பண்புகள் வாழ வழி செய்யும். மனத்திற்கும், ஆன்மாவுக்குமுள்ள பண்புகளால் தெய்வமாகலாம்.
     
  • ஆசையும் அபிப்பிராயமும் சேர்ந்து நோக்கமாகின்றது (attitude). ஆழ்ந்த நோக்கம் (motives) தன்னுள் எண்ணம், உணர்வு, செயல் திறன் ஆகியவற்றைக் கொண்டது.
     
  • பிரிசம் ஒளியை 7 வண்ணமாகக் காட்டுகிறது. தோற்றவன் சோகமடைகிறான். கைதிக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது. வர்ணத்தைப் பார்ப்பவர்க்கும், தோல்வியடைந்தவனுக்கும், கைதிக்கும் அவரவர் நிலை தெளிவானது, முடிவானது. பிரிசத்தை தலைகீழாக வைத்தால், வர்ணம் மறைந்து வெண்ணிற ஒளியாகிறது. தோல்வியை எதிராகப் புரிந்துகொண்டால் சோகம் சந்தோஷமாக மாறும். நீதிபதியின் அபிப்பிராயம் தண்டனையை விலக்க வல்லது.

    மறுக்க முடியாத உண்மைகள் எண்ணத்திலிருந்து ஜீவியத்திற்குப் போனால் தலைகீழே மாறும். மனித உடலும் சக்தியின் அதிர்வாகும்.
     
  • “மனம் பிரம்மத்தைத் தொட முடியும்”, என்கிறார் பகவான். மனமே பிரம்மத்தாலானது என்பதால் அதனால் முடியும். மனத்தில் பிரம்மமுள்ள இடத்தைத் தொட்டால், அதன் மூலம் பிரம்மத்தைத் தொடலாம்.
     
  • ஆர்வம் அதிகமானால், விலக்கப்பட வேண்டியது அதிகமாகும். ஆர்வம் விலக்கப்பட வேண்டியதைவிட அதிகமாக இருக்கும் வரை, தடையின்றிச் செயல்படும்.
     
  • பொறுமைக்குக் கிடைக்கும் பலன் சுபாவத்தைப் பொருத்தது. எதிரெதிரான முறைகளில், அன்னை, இதை நிறைவேற்றுகிறார். அவசரப்பட்டவனுக்குப் பலனைத் தள்ளிப் போடுகிறார். இது சட்டம். அன்னை, சட்டத்தின் மூலம் செயல்படுகிறார். மனிதன் வலியுறுத்துவது எது? அன்னையா? அவசரமா? என்பது முடிவை நிர்ணயிக்கும். கருமி, ஒரு பேரத்தில் அன்னையை வலியுறுத்தினால், அடுத்தவனுடைய குதர்க்க புத்தி மூலம், தான் விரும்பிய விலையில் பாதி விலைக்கு, அன்னை, பேரத்தைக் கருமிக்குப் படிய வைக்கின்றார்.
     
  •  
    • பழமொழி, வழக்கிலுள்ள உண்மையை அறிவது,
       
    • அறிவுக்குப் புலப்பட்டதை, உணர்வு ஏற்றுக் கொள்வது,
       
    • இதுவரை உண்மை என அறிந்ததைப் பூரணமாக அறிவது,
       
    • பொதுவாக மரபிலுள்ள உண்மைக்குச் சொந்த வாழ்வில் உள்ள சூட்சுமம் தெரிவது,
       
    • நம் நம்பிக்கைகளின் எதிரானவற்றை விளங்கிக் கொள்ளுதல்,
       
    • உடலால் கட்டுப்படுத்த முடியாததை, மனதால் கட்டுப்படுத்துவது,
       
    • பொது உண்மையின் சொந்த சொரூபம்,
       
    • அடுத்தவர் உணர்ச்சியை மதிப்பது,
       
    • நமக்கிழைக்கப்பட்ட அநீதியிலுள்ள நியாயத்தை அறிவது,
       
    • நம்முடைய நியாயத்திலுள்ள அநியாயத்தைக் காண்பது,
       
    • மனச்சாட்சி எதிரி என்பது,
       
    • அறியாமையின் ஞானத்தை அறிவது,


விவேகம் எனப்படும்.
 

  • கட்டுக்கு மீறிய தீவிரம் திருவுருமாற்றமடைந்தால் அபரிமிதமான சக்தி ஆகும்.
     
  • சொத்து, பணம், குடும்பம் ஆகியவை உணர்வுக்குத் தெம்பை அளிப்பவை. உண்மையில் இவை நம் நிலையில்லாத நிலையை நிரந்தரமாக்குபவை. போதையை நம்பி வாழ்பவனைப் போன்றது இந்நிலை.
     
  • மோட்சத்தை நாடுவது அகந்தையின் கடைசி ஆட்சி நிலை. பிறருக்கோ, உலகத்திற்கோ சேவை செய்ய முயல்வது, மனத்தின் அறியாமையின் கடைசி நிலை. அது தன்னலமற்ற ஆன்மாவின் அகந்தையின் நிழல் ஆகும்.
     
  • தன்னலமற்ற நம் செயல்களில் அகந்தை மறைந்திருப்பதைக் காண முடிவது அகந்தை அழிந்ததற்கு அத்தாட்சி.
     
  • நீ ஆச்ரயிப்பதை நீ அடைவாய் என்பது ஆன்மீக உண்மை.உன் மனத்தின் சூழலில் எழுவதை உனக்கு அமைந்த அதிகபட்ச வாய்ப்பு என இதிலிருந்து கூறலாம். சமூகச் சூழலிலும், யதார்த்தத்திலும் (physical), மனத்தின் சூழலிலும், ஆன்மீகச் சூழலிலும் எழுபவை நமக்கு அந்த அந்த நிலைகளில் ஏற்படும் அதிகபட்ச வாய்ப்பு எனலாம். உரிய முயற்சி முழுப் பலனைத் தரும். உதாரணமாக யதார்த்தமான வாய்ப்புக்கு உடலுழைப்புத் (physical) தேவை.
     
  • “தாங்க முடியாது”என்பது ஆன்மீக முயற்சிக்கு இல்லை. ஏனெனில் ஆன்மா அனைத்தையும் கட்டுப்படுத்துவது. ‘தாங்க முடியாது, அடக்க முடியாது‘ என்பதை அடங்காத ஆர்வமாக மாற்றுவதே திருவுருமாற்றம் ஆகும். அடக்க முடியாத நிலையில் சக்தி, கண்மூடித்தனமாக இருக்கிறது. கட்டுப்பட்ட பின்னரே தன்னையறிந்ததாகும்.
     
  • யோகம் பலிக்கும், இறைவனுக்குகந்தவனுக்கு, ஆண்டவனின் அழைப்பு உள்ளது என்பதற்கு ஒரு முத்திரையுண்டு. வேலை முடிந்தபின் மனம் அவனை நாடுவதும், வேலையினூடே அவன் மனத்தில் எழுவதும் அந்த முத்திரைகள்.
     
  • தன்னை மீறி கரணங்கள் அவனை நாடுவதே ஆர்வம்.சில சமயங்களில் வரும் நினைவு ஆர்வம் ஆகாது.
     
  • எந்தப் பகுதி தன்னை மீறி ஆர்வத்தால் அவனை நாடுகிறதோ, அது விழிப்படைந்து விடுதலை தரும்.
     
  • முழு ஜீவனும் தன்னை மீறி ஆர்வம் கொண்டால் அது மோட்சம் பெறுவதில்லை. ஆன்மா நிறைவு பெற்று, ஜீவன் பழுத்துப் பழமாகிறது.
     
  • அடக்க முடியாத நிலை, கண்மூடிய நிலை. விழிப்படைந்த நிலை என்பது அடக்க முடியாத சக்தியைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும்.
     
  • ஆசைப்படுவது, ஒன்றை நாடுவது, எரிச்சல், பழிவாங்குதல், என்ன என்று தெரிந்து கொள்ள முனைவது ஆகியவை மனிதச் செயல்கள்; தெய்வம் நம்மை நிர்ப்பந்திப்பதல்ல. இறைவன் நம் கரணங்களைக் கட்டாயப்படுத்தினால், அதுவும் நம்மால் அடக்க முடியாத செயலாகவே இருக்கும். போராட்டமிருக்காது. தாங்க முடியாத ஆனந்தம் உடலெங்கும் பரவுவது தெரியும்.
     
  • (Perfection) சிறப்பு இரு வகைப்படும். உயர்ந்த சிறப்பு அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். தாழ்ந்த நிலையின் சிறப்பு உயர்வை நிச்சயமாகத் தடுக்கும். (E.g.) பூரணமான அறிவு ஆன்மாவை அறிய உதவும். ஆசையைப் பூரணமாக அனுபவிப்பது, அறிவையும் தடுக்க வல்லது.
     
  • நாமே ஆரம்பிப்பது உள்பட அனைத்தையும் செய்வது அருள். அருளை விட்டு மனிதன் வலிந்து விலகினால், அருள் அதைத் தடையும் செய்யும் அல்லது அவனிஷ்டப்படி அழிவை நாடவும் அனுமதிக்கும். எந்த வகையானாலும், அருள் சிறப்பாகச் செயல்படும்.