யோக வாழ்க்கை – 11

  1. அனந்தனின் வெளிப்பாடுகள் ஆயிரம்.மனிதனில் தனித்தன்மை (uniqueness) அமையும் வரை அது வரும். அந்நிலையில் அது பொதுத்தன்மையை இழக்கும். இழந்து (infinite possibilities) அனந்தனை முழுமையடையச் செய்யும்.
     
  2. நாம் பரம்பொருளை எண்ணத்தால் அறிய முயல்கிறோம்.எண்ணம் பரம்பொருளை விளக்கும் கருத்தை அறியும். ஒரு சிறப்பான (unique) எண்ணம் அனந்தனை அறியலாம். மனத்தால் பரம்பொருளைப் பார்க்கலாம். அதற்கு மனம் தன் நிலையில் பரம்பொருளை எட்ட வேண்டும். அதாவது சத்தியஜீவியத்துடன் தன் முந்தைய தொடர்பை மீண்டும் பெற்று, அங்கிருந்து தன் ஆதியான ஜீவியத்தை அடைந்து, தன்னையறிவதை நிறுத்தி, சத்தியமாகி, பின்னர் சத்திலிருந்து விலகி பரம்பொருளைத் தொட வேண்டும்.
     
  3. நம் கரணங்கள் பதப்படுத்தப்பட்டவை. ஒரு பழக்கத்தாலோ, ஒரு திறனாலோ அவை செயல்படுகின்றன. பழக்கத்தை விட்டால், திறனைக் கடந்து வந்தால், கரணத்தின் முழுமையால் செயல்பட முடியும். மனிதன் பரம்பொருளை வெளிப்படுத்த அது போன்ற விழிப்பு தேவை.
     
  4. பிரபஞ்சத்தை, சத்தியஜீவியம் நிர்ணயிக்கின்றது.நம் வாழ்வை அகந்தை நிர்ணயிக்கின்றது. சத்தியஜீவிய செயலைக் காண, இன்று நம்மை நிர்ணயிக்கும் அகந்தையை அழித்து, சைத்திய புருஷனால் நாம் ஆளப்பட வேண்டும்.
     
  5. விவேகம் என்பது எல்லோரும் அறிந்ததை நம் அனுபவத்தில் புதியதாகக் காண்பதாகப் பல சமயங்கள் அமையும். சாதாரண மனிதன் யோசனை இல்லாமல் பெரிய விஷயங்களைப் பேசுவதுண்டு. அவனுக்கு அது பழமொழி. அறிவாளிக்கு உலகத்து விவேகம், அறிவுக்குரிய கருத்து. யோகி அதை ஆன்மீக உண்மையாகக் காண்கிறார். எவரும் அனந்தனின் செயலை அங்குக் காண்பதில்லை. எல்லோரும் அறிந்த, எளிய உண்மையாகக் காணும் விவேகம் நடக்கக்கூடியதற்கும், நடப்பதற்கும் இடையேயுள்ள சூட்சும நிர்ப்பந்தத்தை அறிகிறது.
     
  6. சிறப்பை நாடும் திறனும் (skill moving to perfection) சூட்சும நிர்ப்பந்தத்தை அறியும் விவேகமும், சிருஷ்டியை யோக திருஷ்டியால் காண முயல்கின்றன.
     
  7. சர்வம் பிரம்மம். கல்லைச் சிருஷ்டிக்க இறைவன் மனிதனை சிருஷ்டிக்கும் அளவு முயல்கிறான். ஒரு வேலையின் கடைசிச் சிறு பாகத்தில் நுணுக்கம் வெளிப்பட்டால், நமக்கும் அது சற்றுத் தெரியும். இங்கு பெரிய வேலையும், சிறு வேலையும் சமம் என மனிதன் காணலாம். இது பிரம்ம ஞானம்.
     
  8. எண்ணம் – சிந்தனை – திருஷ்டி – ஞானம் – சத்தியஜீவியம் – ஜீவியம் – சத்தியம் – பிரம்மம் என்பது அடுத்தடுத்த உயர் நிலைகள். மனிதன், அறிவு உணர்வின் அனுபவம் – உடலின் திறன் – ஜடத்தின் ஐக்கிய ஞானம் அறியாமை தன்னை அறிவாகக் காண்பது – எல்லாம் உணர்ந்த ஜடம் என்பது அடுத்த வகையில் சொல்லப்படுவது. அவை சந்திக்குமிடத்தில் ஆன்மீகப் பரிணாமம் ஆரம்பிக்கிறது.
     
  9. மனிதனுக்குத் துரோகம் செய்பவன் இறைவனுக்கு விஸ்வாசமானவன்.
     
  10. நமக்குத் துரோகமிழைத்துவிட்டான் என நினைப்பது அறியாமை; அறியாமையில் இறைவனுக்குக் கருவியாக இருப்பதே துரோகம் செய்வது.
     
  11. துரோகத்திற்குப் பின் அன்னையைக் காண்பது, தன்னுள் அன்னையைக் காண்பதாகும். எனவே மனிதனுடைய துரோகம் அன்னைக்கு விஸ்வாசமாக மாறக்கூடும்.
     
  12. பரிணாம வளர்ச்சி நிலையில் கருவியின் நிலையைப் பொருத்து, கருவி திருவுருமாற்றமடையலாம், அல்லது கரையலாம், அல்லது நம்மை விட்டு அகலலாம்.
     
  13. துரோகத்தை விஸ்வாசமாகவும், விஸ்வாசத்தைத் துரோகமாகவும் காண்பது, பூரண ஞானம்.
     
  14. விஸ்வாசத்திற்கு விஸ்வாசமாக இருப்பவரையே துரோகம் நாடுகிறது.
     
  15. உணர்வு மையம் விஸ்வாசத்தை நாடுகிறது.நல்லதோ, கெட்டதோ, உணர்வுக்கு யோகமில்லை.
     
  16. ஒருவரிடமுள்ள விஸ்வாசம், அகத்திலுள்ள அன்னைக்குரிய பக்தியாக மாற வேண்டும். அது சைத்திய புருஷனிலிருந்து எழும்.
     
  17. சைத்திய புருஷன் வாழ்வின் சாரத்தைச் சேர்ப்பது, படிக்காத நகரவாசி நகர வாழ்வை அறிய முற்படுதல் போன்றது.
     
  18. குடும்பம் மனிதனைத் தயார் செய்வது போலவும், பல்கலைக்கழகம் மாணவனைத் தயார் செய்வது போலவும் யோகம், சாதகனை உருவாக்குகிறது.
     
  19. மனிதனின் ஜீவிய நிலைக்கேற்ப, திருடன் அன்னையின் ஸ்பர்சத்தைப் பரிசாக அளிக்கின்றான்.
     
  20. முறையான சமூகத்தில் வீரியமான மனிதனுடைய ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், விபசாரி, இறைவனின் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்ய ஆண்மையின் வீரியத்திற்குச் சேவை செய்கிறாள்.
     
  21. ஆன்மா முதிர்ந்து உடலால் வெளிப்பட்டால், திருமண வரையறையை மீறி, பவித்திரமாகப் பக்குவம் பெற்ற மற்ற ஆன்மாவுடன் உடலால் ஐக்கியப்படும் நிலை, விபசாரியின் நிலையாகும்.

    பக்திக்கு ஜாதியில்லை. உடல் பக்தியை வெளிப்படுத்தினால் உலகத்தார் அனைவருக்கும் அது உடையதாகும்.
     
  22. சமூகக் கட்டுப்பாட்டையும், உள்ளத்தின் பொன்னான உணர்வுகளையும் மீற முடியாதவனால் அன்னையின் ஆன்மீகச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.
     
  23. கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு, கம்பளிப்பூச்சியைப் போல் கூட்டில் இருக்கும் நிலையில், சட்டத்தை மீறினால், அது முழு அழிவைத் தரும்.
     
  24. அநாகரிகமாக அதிகப் பிரசங்கம் செய்பவனை நோக்கி, “அன்னையின் குரலை எழுப்பியதற்கு நன்றி” என்று நாம் சொல்ல வேண்டும்.
     
  25. நம்மால் “அம்பாள் வெற்றிலைப் பாக்கு எச்சிலை” ஆர்வத்தோடும் நன்றியோடும் ஏற்க முடியுமா?
     
  26. சிந்தனைக்கு உரிமையில்லாத நேரம், மனம் ஓய்தல் ஒழிதலில்லாமல் எதிர்பார்க்கிறது. வெளிவர முயலும் எண்ணம் உணர்வால் உந்தப்படும் பொழுது மனம் எதிர்பார்க்கும்.
     
  27. வெற்றியின் இரகஸ்யத்தை விரும்பி அளித்தால், “இரகஸ்யம் வேண்டாம்; வெற்றியைக் கொடு” என்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தரத் தோல்வி நிச்சயம்.
     
  28. ஒரு விஷயம் புரிய நாம் சிந்திக்கின்றோம். புரியாவிட்டால் ஆழ்ந்து சிந்திக்கிறோம். மனிதனுக்குப் புரியாத பிரச்சினைகளுண்டு. தீர்வு கிடைப்பதில்லை என்பதுடன் சிந்தனைக்கு அவை எட்டுவதில்லை. அதைத் தீர்க்க நாம் சிந்திப்பதை நிறுத்தி, மௌனத்தைக் கடைப்பிடிக்கிறோம். மௌனம் விடை காண்கிறது.

    தன் ஆழ்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க மனிதகுலம் சிந்தனையைக் கைவிடுகிறது.
     
  29. வாழ்வு ஆசையாலானது. சிறு ஆசை, மனிதனை உத்வேகப்படுத்துகிறது. நாம் சும்மா இருந்தால், ஆழ்மனம் தன் சிறு ஆசைகளில் தீவிரமாக உழல்கிறது.
     
  30. பரநலம், சுயநலம் என்பவை, கொடுப்பது, பெறுவதாகும். அது சௌகரியமாகவோ, தொந்தரவாகவோ வெளிப்படும். தன்னலமற்றவனின் நட்பு, மற்றவர் வாழ்வை மலரச் செய்யும். சுயநலமானவனின் தொடர்பு, வாழ்வில் சிரமங்களை உற்பத்தி செய்யும்.
     
  31. வெட்கமின்றிக் கேட்பது, உணர்வின் கர்வமாகும். அதை ஏற்பது கண்மூடித்தனமான பாசமாகும்.
     
  32. பகவான், அன்னை எழுதியவற்றை சத்திய வாக்காக ஏற்பது யோகமாகும்.
     
  33. தன் தத்துவம், பயிற்சி ஆகியவற்றைச் சொன்னபின் காவியமாக அவற்றை இலட்சியக் கருத்தாகவும் பகவான் சொன்னார். சத்திய வாக்காக அவற்றை ஏற்று, இலட்சியவுணர்வாக அவற்றைக் கிரஹித்து, யோகப் பயிற்சியாக உள்ளத்தில் வைப்பது, பூரண யோகமாகும்.
     
  34. லௌகீக வாழ்விலிருந்து ஆன்மீக வாழ்வுக்குப் போக பண்புகள் படிகளாக அமைகின்றன. எந்நிலைக்குரிய பண்பையும் ஏற்கும் திறன் நமக்குண்டு. பண்பை ஏற்பதால் காலம் சுருங்கும். முன்னேற்றத்தையும் முன்பாக முடிக்கலாம். பரிணாம இலட்சியத்தையும் சுருக்க முடியும்.
     
  35. மிகஉயர்ந்த பண்பை, மிகச்சிறிய செயலில் ஏற்பது அதிகபட்ச அக வாழ்வின் முன்னேற்றம்.
     
  36. இலட்சியத் தலைவர் தம் இலட்சியத்தைப் பரப்ப இளைஞர்களைத் தயார் செய்வது இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. இலட்சியமாகவே இருக்கிறது. இலட்சியத்திற்கு எதிரானவர் தலைவரைச் சூழ்ந்து இலட்சியத்தையும், தலைவரையும் தங்கள் பிடியில் வைத்து, உலகுக்கெட்டாமல் செய்வதே இன்று வரை உலகம் கண்டது. அடுத்த தலைமுறையில் இலட்சியம், கூட்டிலிருந்து விடுபடுவதுண்டு.
     
  37. சிறிய மனிதனுக்குப் பிரபஞ்சத்தை அனந்தன் அளிக்க முன்வந்தால், அனந்தனைத் தன் வாழ்வுள் சுருக்க மனிதன் முனைகிறான். தன்னைக் காப்பாற்றுவதே சரி என்பது அனந்தனுக்கும், மனிதனுக்கும் பொது.
     
  38. இலட்சியமும் வெற்றி பெற அதற்கெதிரான முறையைக் கையாள வேண்டும். இலட்சியம் அக வாழ்வுக்குப் போய் வலிமை பெற்று, புற வாழ்வை மீறினால், வெற்றி பெறும். வலிமையே வெற்றி பெறும் என்ற லௌகீகச் சட்டமே அப்பொழுதும் நிலைக்கிறது.
     
  39. இலட்சியத்தின் கனவுலகத்தைவிட லௌகீகத்தின் யதார்த்தம் அஸ்திவாரமானதாகும்.
     
  40. சரியான குறிக்கோளைத் தவறான யுக்தியால் இலட்சியம் பின்பற்றுகிறது.
     
  41. யதார்த்த இலட்சியம் சரியான யுக்தியையும், சரியான குறிக்கோளையும் நாடும்.
     
  42. வலிமை எளிமையை ஆள்வதால் – லௌகீக வாழ்வு வெற்றி பெற்றதால் – அதுவே சரியான யுக்தி.
     
  43. பற்றாக்குறையில் தேவைகள் பூர்த்தியாவதில்லை. உபரியான நேரத்தில் பொருள்களை முழுவதும் பயன்படுத்த முடிவதில்லை. இரு நேரங்களிலும் பூர்த்தியாகாத தேவை நிலைக்கிறது.
     
  44. நமக்குள்ள எல்லாப் பொருள்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வாழ்வு பூரணமானதாக இருக்க வேண்டும்.
     
  45. பற்றாக்குறையை உபரியாக்கி வாழ்வைப் பூரணப்படுத்த முடியாது. பகுதியை முழுமைப்படுத்தினால் முடியும்.
     
  46. பிரம்மம் ஜடத்தில் சித்தித்தால் வாழ்வு பூரணம் பெறும். அல்லது அறியாமை ஞானத்தைவிடப் பெரியது எனக் காண வேண்டும்.
     
  47. பிரம்மமும் சிருஷ்டியும் ஒன்றே; நம் பார்வைதான் மாறுகிறது என்று அறியும் நேரம், வாழ்வு பூரணம் பெறுகிறது.
     
  48. மனம் தானிழந்த சத்தியஜீவியத் தொடர்பைப் பெற்றால் நமக்கு அந்த ஞானம் எழும்.
     
  49. முரண்பாட்டை உடன்பாடாகக் கண்டால் அதுவே ஆரம்பம். இது சிந்தனையை ஸ்தம்பிக்கச் செய்யும் (முனிவர்).
     
  50. முரண்பாடு இருளை இழந்து உடன்பாடாகும் பொழுது ஜோதி உற்பத்தியாகி, சிந்தனை காட்சியாகிறது (ரிஷி).
     
  51. ஜோதியும் தடை. நேரடி ஞானம் வந்தால் ஜோதி மறையும் (யோகி).
     
  52. அறியாமையால் பாதிக்கப்படாமல் ஞானத்தைச் சேர்த்துச் செயல்படும் திறனை மனம் பெற்று  சத்தியம் மனத்தைக் கரைத்து, தானிழந்த சத்தியஜீவிய தொடர்பைப் பெற முனைகிறது (தெய்வம்).
     
  53. மனம் தன் ஆதியை அடைகிறது (சத்திய ஜீவியம்).
     
  54. மனத்தைக் கரைத்து, பிரம்மத்தை அதிகமாகக் கண்டால் மனம் சத்தியஜீவியமாகிறது.
     
  55. ஜடமான மனிதன், தன் கண்ணோட்டத்தை மாற்றினால், ஜடம் திருவுருமாற்றமடைகிறது. அந்நேரம் பிரம்மமும், சிருஷ்டியும் ஒன்றென அறிகிறோம்.
     
  56. நன்றும், தீதும் ஒன்றென அறியும் நேரம், இந்த ஞானம் பிறக்கிறது. அது தீமையைக் கரைத்து நன்மைக்கு எதிரில்லை என்றாக்குகிறது.
     
  57. நன்றும், தீதும் மனத்தின் தார்மீக நிலைக்குரியன. வலியும் சந்தோஷமும் உணர்வுக்கும் உடலுக்கும் உரியன.

    வலியை (ஆனந்தமாகவும்) சந்தோஷமாகவும், சொரணையை சொரணை இல்லாததாகவும் அறிவது உணர்விலும், உடலிலும் இந்தப் புதிய திருவுருமாற்றத்திற்குரிய நோக்கமாகும்.
     
  58. அகந்தையின் உணர்வுகள் ஆன்மாவுக்கு உழைப்பதில்லை.
     
  59. இன்றுள்ள உறவுகளைக் கரைத்தால், உடலின் ஆன்மா (existence) சத்தியத்தை உணர ஆரம்பிக்கும்.
     
  60. காலம், முரண்பாடு, மரணம் ஆகியவை முடிவானதல்ல என அதற்குத் தெரியும்.
     
  61. உடல் இறவாமை எய்த, உடலின் இன்றைய உணர்வுகள் அழிய வேண்டும்.
     
  62. மடையனின் வருத்தம் நம்மைப் பாதிக்காதது போல் தேவர்கட்கு நம் வேதனை புரிவதில்லை.
     
  63. “அசுரனின் குரல் இனிமையாக இருப்பதைக் கண்டு, அதன் பின் கிருஷ்ணன் ஒளிந்திருப்பது தெரிந்தது” என பகவான் கூறுவதை, நாம் பின்பற்ற, உணர்வின் மறைவில் அதன் எதிரானது ஒளிந்திருப்பதைக் காண வேண்டும்.
     
  64. துரோகியைக் கையும் களவுமாகப் பிடித்தும், அவனைத் தொழிலதிபராக்க முனைவது உடல் உணர்வை, சொரணையற்ற முறையில் விட முயல்வதாகும்.
     
  65. உதாரணத்தால் புரிவது புத்தியில்லை, நடைமுறை அறிவு.
     
  66. மனிதனுக்கோ, ஆன்மாவுக்கோ பரிணாம வளர்ச்சி தேவையில்லை. அதைத் துரிதப்படுத்தும் அவசியமும் இல்லை. இறைவனுக்கு அந்த அவசியம் ஏற்படலாம். தான் பெறும் ஆனந்தத்தின் நிலையை உயர்த்த இறைவன் நினைத்தால், ஆன்மீகப் பரிணாமத்தின் மூலம் ஒளிந்ததைக் காண முன்வந்து, அதைச் சாதிக்கலாம்.
     
  67. “இலட்சக்கணக்காக பிரபஞ்சங்களைத் தன் ஒரு அசைவால் பரமாத்மா நிரப்ப முடியும்” என்று பகவான் சொன்ன பொழுது அவர் தாம் பார்த்ததைச் சொல்லவில்லை, தம் நிலையை விவரித்தார்.
     
  68. நெருங்கிய இனிய உறவில் வேறொருவரைப் பாராட்டிப் போற்றிப் பேசுவது உணர்வுக்குத் தீங்கு செய்வதாகும். அதை நியாயம் எனக் கேட்டுக்கொண்டிருப்பது நல்ல நாகரீகமல்ல, உணர்வில் உதவாக்கரையாகும்.
     
  69. வேலையும், காலமும் உடலுழைப்பால் வாழ்பவனுக்கு மெதுவாக நகரும்; ஆன்மீகவாதிக்குப் பறக்கும்.
     
  70. மேல் எழுந்த ஜீவன் என்பது உடல், உள்ளம், மனம் ஆகும். மனிதன் என நாம் அறிந்தது முழுவதும் மேல் நிலை ஜீவனாகும்.
     
  71. மாயை வரையறுக்கிறது; மனம் துண்டாடுகிறது; அறியாமை அறிவை விட்டு விலகி ஒருமைப்படுகிறது; அகந்தை சேகரம் செய்கிறது. அகந்தை ஒரு பிறப்புக்குரியது. மற்றவை பொதுவான சக்திகள். பிறவி முடிந்தாலும் தொடரும்.
     
  72. மனம் ஆரம்பத்தை இழக்க வேண்டுமெனில் அது மௌனத்தால் நிரம்பியும், அதன் அமைப்பை இழந்தும் நிற்க வேண்டும். அந்நிலையில் (the force) சக்தி மௌனத்தைச் சந்தித்து அதில் கரைந்துவிடும்.
     
  73. ஆரம்பத்தை இழக்கும் நிலையை மௌனம் ஏற்படுத்தும். ஆனால் சக்தியை (force) சைத்திய புருஷனிடம் அனுப்ப அதனால் இயலாது. அது சமர்ப்பணம், ஆர்வத்தால் பூர்த்தியாவது.
     
  74. மனத்தை, சத்தியஜீவியத்திற்கு நேரடியாக உயர்த்தும் அரிதான செயலை நிகழ்த்த, முறைகளைக் கைவிட வேண்டும். இடையேயுள்ள நிலைகளின் அமைப்பைக் கடந்து செல்ல, முறைகள் பயன்படும். அவை மௌனத்தில் கரைந்தால் மனம் நேரடியாக சத்தியஜீவியத்தைத் தொடும்.
     
  75. சுயநலம், செயலை மூன்று நிலைகளில்  பெருந்தன்மை, சாதாரணம், கொடுமையான பாவம் – கணிக்கிறது. தான் பிறருக்குச் செய்யும் அதே காரியத்தைத் தனக்கு வேறொருவர் செய்தால், பெருந்தன்மை கொடுமையாக மாறுகிறது. தான் சம்பந்தப்படாத இடங்களில் அது சாதாரணமான செயலாகிறது.
     
  76. “மனிதன் ஏற்கக்கூடிய பொறுப்பை” நீ மறுக்கும் நேரம் கற்பனைக்கு எட்டாத அதிர்ஷ்டத்தை வலிய விலக்குகிறாய் என நீ அறிவதில்லை.
     
  77. தடி எடுத்தவன் தண்டல்காரன்  சச்சிதானந்தத்திலிருந்து ஜடம் வரை உண்மை. வலிமையுள்ளவனிடம் நியாயத்தை ஒப்படைப்பது அநாகரீகமான கொடுமை என்பது சரி. ஆனால் நியாயத்திற்கு அநாகரீகமான வலிமை வரும் வரை, அது செல்லாது என்பதும் உண்மை. மனம் சச்சிதானந்தத்தைப் போற்றினால், ஜடம் அதற்குட்படுவதில்லை. ஜடமே சச்சிதானந்தமானால் அது நடக்கும்.
     
  78. பெண்ணின் கவர்ச்சி, அவள் பருவத்துடன் அழிகிறது. அகத்தில் பெண்ணின் கவர்ச்சி, சாகும் வரை அழிவதில்லை. உடலாலான வாழ்வை மனிதன் போற்றுவதால் பெண்மை அவனைக் கவருகிறது.
     
  79. உடலின் கவர்ச்சி சாகும் வரை தொடர்கிறது. புருஷனும், ஈஸ்வரனும் அதற்கு விலக்கல்ல.
     
  80. மேலே போகப் போக கவர்ச்சி, இனிமையில் வளர்கிறது.உடலால் பெண்மையை ஆளும் ஆண், “ஆண்மையின் வலிமை சரணாகதியால் பெண்மையில் பூர்த்தியாகிறது” என்கிறான். அதுவே ஈஸ்வர நிலை.
     
  81. புருஷனை அதிகாரம் செய்யும் சுபாவத்தை (force) சக்தி, தானே ஈஸ்வர சக்தியானாலும் கைவிடுவதில்லை. புருஷன் அதிகாரம் செய்தாலொழிய அது பணிவதில்லை.
     
  82. (Force) சக்தி அசைந்தால் அதனின்று power எழுகிறது. ஜீவியம் அசையாத நிலையிலும் திறனைப் பெற்றுள்ளது.
     
  83. தன்னை அறியும் நிலையிலேயே ஜீவியம் பிறக்கிறது.தன்னையறிய வேண்டிய அவசியமில்லாத பொழுதும் சத்தியம் உண்டு.
     
  84. சிருஷ்டி வந்த பின்னரே சத்தியம் தன்னை அறியும்.பரம்பொருள் தன்னையறிய வேண்டியவதில்லை.
     
  85. தன்னையறியாமல் ‘தானா‘க இருக்க ‘அது‘ பிரம்மமாக இருக்க வேண்டும்.
     
  86. அசத்திலும் பரம்பொருளைக் காண்பது பூரணயோகம்.
     
  87. பரம்பொருள் சத்தியமாகும் எனில் அசத்தாகவுமாகும்.
     
  88. ஞானத்தை (intuition) எட்டினால் பிரம்மம் சச்சிதானந்தமாகத் தெரிகிறது. தெய்வ நிலையில் அவை சத், சித், ஆனந்தமாகப் பிரிந்து தெரிகின்றன. சத்தியஜீவியத்தில், ஒன்றில் மற்றதாகத் தெரிகின்றன.
     
  89. பிரித்துப் பார்க்கும் திறன் நாம் எந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம் என்பதைப் பொருத்தது. கண்டம் நமக்கு அகண்டமாகத் தெரிந்தால்தான் Life Divine விளங்கும்.
     
  90. அகண்டம் தானே விரும்பி, கண்டமாகக் காட்சியளிக்கிறது.
     
  91. கண்டத்தை முடிவானதாகவும், மாற்றமில்லாததாகவும் கருதலாம். அல்லது அகண்டத்தின் ஒரு வெளிப்பாடாகக் கருதலாம். அகண்டத்தைக் கண்டத்தின் சட்டப்படி புரிவது ஒன்று. அடுத்தது இறைவனை எங்கும் காண்பது.
     
  92. முரண்பாடு, வரையறை, சோகம், நோய், பிரச்சினை, ஜடம், பிரிவினை, அறியாமை ஆகியவை அவற்றிற்கு நேர்மாறானவை. அகண்டத்தின் நோக்கோடு அவற்றைப் புரிந்துகொண்டால் அது தெரியும்.
     
  93. தன் எதிர்காலத்தைத் தானே நிர்ணயித்து, இறைவனின் திருவுருவமாக அதை உருவாக்கும் திறமையை மனிதன் பெற்றிருந்தாலும், தன் பழக்கப்படி வாழவே அவன் விரும்புகிறான். அதுவும் திருவுள்ளமே.
     
  94. தகப்பனார், மகன், வாக்காளர், தலைவர் என்ற பகுதிகளை மனிதன் கொண்டவன் என்று நம்மால் ஏற்க முடிகிறது. ஆனால் அகண்டமாகவும், கண்டமாகவுமானவன் அவன் என ஏற்க முடிவதில்லை.
     
  95. ஆசையை அடக்கும் கட்டுப்பாடு, அகந்தையை எதிராக மாற்றும் திறன், பிரம்மத்தையும் சிருஷ்டியையும் ஒன்றாகக் கருதும் திறன், பல ஜீவிய நிலைகள் ஒரே சமயத்திலிருப்பது ஆகியவை யோகத்திற்குரிய கருவி போன்ற திறன்கள்.
     
  96. புருஷ – பிரகிருதி என்ற இரு நிலை, ஓர் உருவகத்திலிருந்து விடுபட்டு அடுத்த உருவகத்தை நாடும் சுதந்திரத்தை வழங்குகிறது.
     
  97. இன்றைய மனிதப் பிறவி நாம் பெறக்கூடிய பல பிறவிகளில் ஒன்று என்றும், பிரம்மம் ஒரு கோடி – நாமுள்ள நிலை அடுத்த கோடி – என்றும் அறிவது, நாமே விரும்பிப் பெற்றது இப்பொழுதுள்ளது – ஆன்மீக விவேகம்.
     
  98. அவ்வான்மீக விவேகம் ஆர்வமாக மாறுவது யோகப் பாதை.
     
  99. அவ்வார்வம் சித்தியை நாடுவது தவம், யோகம், சாதனை.
     
  100. அப்பாதையிலிறங்க அதன் மீதுள்ள ஆர்வம், வாழ்வின் வளங்களின் மீதுள்ள ஆர்வத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.