அபரிமிதமான செல்வம் – 1

தாழ்த்தப்பட்டவர்கள் இன்று முன்னுக்கு வர முயன்றால் அவர்கட்கு சமூகம் எல்லா வசதிகளையும் வாரி வழங்குவது இன்றைய இந்தியாவில் உள்ள புதிய நிலை. கடலோரம் வெறும் மணல் உதவாது, பயிரிட நினைக்க முடியாத நிலப்பரப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடியாத நிலத்திற்கு லட்ச ரூபாய் விலை வருகிறது. அதுவே ஆரம்பம். முடிவை நினைப்பதற்கில்லை. பணத்தைப் பொறுத்தவரை சமூகம் வளர்ந்து பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. தனிப்பட்ட மனிதனுக்கே அத்திறன் வரும் நேரம் வந்துவிட்டது. எதற்குப் பஞ்சம் வந்தாலும், இனி பணத்திற்குப் பஞ்சமில்லை என்ற கருத்தை விளக்க இந்நூலை எழுதுகிறேன். அதை விளக்கும் வாயிலாகப் பணத்தின் ஆரம்ப வரலாறு, பணம்போல் இதற்குமுன் அபரிமிதமாகப் பெருகியவற்றின் வரலாறு, இதிலுள்ள பொருளாதாரத் தத்துவம், ஸ்ரீ அரவிந்தத்திற்கும் இக்கருத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவை நூலில் இடம் பெறுகின்றன.

மனித மனம் திறம் வாய்ந்தது, அவனுள் ஆயிரம் திறமைகள் மறைந்துள்ளன. அவன் அவற்றை அறிய வேண்டும். தன் திறமைகளை வெளிக்கொணர அறிவுடை முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அளவுகடந்த செல்வத்தை அவனால் அபரிமிதமாக உற்பத்தி செய்ய முடியும். இது ஓர் உண்மை. அறிவுக்குப் புலப்படும். அப்படி விளக்குவது நோக்கம். ஆர்வமுடையவரை அது செயல்படத் தூண்டும். இந்நூலின் சாராம்சத்தை சுருக்கமாகக் கூறினால்,

  • உடலால் ஜடமாக வாழ்ந்த மனிதன் பல வகைகளில் மனத்தால் இன்று வாழ்கிறான்.
  • இந்த ஆயிரம் ஆண்டுகளில் வந்த மாறுதலின் உள்ளுறைசிறப்பை நுணுக்கமாக அறிய முனைந்தால் அம்முன்னேற்றத்தை ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு என்று கூறமுடியாது. அடுத்த கொல்லையில் உள்ளவனை குரல் கொடுத்து அழைத்த மனிதன் இன்று வேறு நாட்டிற்குப் போனில் பேசுவதை எப்படி அளவிட முடியும்? அளவில்லாமல் பெருகியுள்ளது.
  • சமூகம், ஸ்தாபனங்கள், மனத்திண்மை, அறிவு, சமூகத்தின் திறன், சொந்த முயற்சி ஆகியவை அதேபோல் ஏராளமாகப் பெருகியுள்ளன.
  • இவை ஏராளம் என்றாலும், என்ன செய்ய முடியும் என்பதில் இவை கடுகளவேயாகும். சமூகம் மனிதனுக்கு அளிக்கும் வசதிகளை இதுவரை எந்த மனிதனும் முழுமையாகப் பெற்றதில்லை.
  • லட்சம் மடங்கு முன்னேற வாய்ப்பிருப்பதால், முழு முயற்சி செய்பவர் எவரும் 100 மடங்கு வெற்றி பெறலாம்.
  • இந்நூல் பணத்தைப் பற்றியது. ஆனால் இத்தத்துவம் பணத்திற்குப் பொருந்துவதுபோல், திறமை, வசதி, சந்தோஷம், சாதனை ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
  • இந்நூல் இனி கூறப்போகும் வழிமுறைகளை சுருக்கி 5 அல்லது 6 அம்சங்களாகக் கூறலாம்.
  • பணம் எப்படி உற்பத்தியாயிற்று, பணம் என்றால் என்ன, சமூகத்திற்கு இதுவரை பணத்தால் ஏற்பட்ட சௌகரியங்கள் எவை, பணத்தின் திறன் என்ன, இதுவரை பணம் எப்படிப் பெருகிவந்தது என்பவற்றை விவரமாக அறிதல் அவசியம். இது ஞானம்.
  • ஞானத்தைப் பொருளாக மாற்ற வேண்டும்.
  • அப்பொருளை அன்னையின் சக்தியால் நிரப்ப வேண்டும்.
  • Token act இவை வெளிப்படும்படியான செயல் (project) ஒன்றைச் செய்வது அவசியம்.
  • பணம் அபரிமிதமாகப் பெருகும் என்ற உண்மையை இத்திட்டத்தில் அனுபவமாகக் காண வேண்டும்.
  • சொந்தமாக ஒரு நல்ல காரியத்தைச் செய்து முழுப் பலன் பெறவேண்டும்.

பணம்

ஆதிநாளில் வேட்டையாடியும், காய் கனியைத் தின்றும் மனிதன் வாழ்ந்தான். அப்பொழுது அவன் தன்னை மட்டுமே அறிவான், தனக்காகச் சுயநலமாக வாழ்ந்தான். ஓர் ஊரின் பகுதியாக அப்பொழுது அவன் வாழவில்லை. தனித்து வாழ்ந்தான். கூட்டமாக வாழவில்லை. பசி, தாகம், தூக்கமே அவனுக்குரிய உணர்வுகள். எண்ணம் என்பது அப்பொழுது தேவைப்படவில்லை. எண்ணமோ, மனமோ அப்பொழுது உற்பத்தியாகவில்லை. ஜடமான மனிதன், உடலுக்குக் கட்டுப்பட்டு, சூழலுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தான். ஊர் என்பது அதுவரை ஏற்படவில்லை. கூட்டமாக சில சமயங்களில் வாழ்ந்தான்.

நாகரீகத்தின் வளர்ச்சியால் விவசாயம் ஏற்பட்டது. ஓர் ஊரில் தங்கினான். நாடோடி வாழ்க்கையை விட்டொழித்தான். ஊர் என்பது வெறும் கூட்டமன்று. சமூகம் எனப்படும். விவசாயம் என்பது அறிவால் பெறப்பட்டது. அதை ஊரார் அனைவரும் சேர்ந்து செய்தனர். தனி மனிதனுக்குக் குடும்பம் ஏற்பட்டது. தன் பசிக்காக அலைந்த மனிதன் தன் குடும்பத்திற்காக வேலை செய்தான். அது அவனுக்குப் புரியவில்லை என்றாலும், செய்தான். சுயநலம் விரிவடைந்து பரநலமாயிற்று – குடும்பத்தின் பரநலம். விவசாயம் என்பது தொழில் அறிவால் செய்வது. குடும்பத்திற்குத் தன் கடமை மனதால் அறியப்படுவது. மனம் உற்பத்தியாயிற்று. தன் தேவைக்கு மேல் சில சமயங்களில் உற்பத்தி செய்தால், அவனுக்கு அது பயன்படாது. அழியும்.

பண்டமாற்று வந்தது. இதன் மூலம் மனிதன் சமூகத்தை அறியும் சந்தர்ப்பம் எழுந்தது. இனி உபரி அழிய வேண்டாம். ஒருவருக்குப் பயன்படாத உபரி அடுத்தவர்க்குப் பயன்பட பண்டமாற்று உதவியது. உபரியான சக்தி வேறு வகையாகப் பயன்பட, வேறு பொருளாகப் பயன்பட பண்டமாற்று உதவியது. மனித வாழ்வில் இது முக்கியமான கட்டம். தனித்த மனிதனை ஊருடன் இணைக்க பண்டமாற்று உதவியது. சமூகம் உருவாக ஆரம்பித்தது. இதன் பயனாக,

  • ஒருவருக்கு அடுத்தவருடைய உபரி சக்தி, உபரி உற்பத்தி பயன்பட்டது.
  • தன் உபரி சக்திக்கு உபயோகம் வந்தது.
  • சமூகத்தில் எவரும் பிறர் உபரியைத் தேவைப்பட்டால் பயன்படுத்த முடியும் என்ற நிலை எழுந்தது.
  • மனிதன் இனி தனியனில்லை. சமூகம் உருவாக ஆரம்பித்துவிட்டது. இது ஒரு கூட்டம். கூட்டத்தில் எவருடைய உபரியும் பிறர்க்குப் பயன்படும். அதன் வழி ஒவ்வொருவரும் அடுத்தவருடன் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
  • ஒருவன் ஊரானான். ஒவ்வொருவருடைய உற்பத்தித்திறன் வளர வழி ஏற்பட்டது. ஊருக்கு அடங்கி, ஒத்துழைக்கும் நிர்ப்பந்தம் எழுந்தது.

பணம் என்பது ஒரு ஸ்தாபனம் :

நாட்டில் கல்வி என்பது ஒரு ஸ்தாபனம். அவரவர் குழந்தைகட்குப் படிப்பு போதிப்பது முதல் நிலை. பள்ளிக்கூடம் என்ற ஸ்தாபனம் ஏற்பட்டு எவரும் கல்வி பெறலாம் என்பது அடுத்த நிலை. தனி மனிதனுடைய பொறுப்பை ஊரும் சமூகமும் ஏற்கும் நிலையிது.

ஏற்பது மட்டுமன்று, அப்பொறுப்பை நடைமுறையில் நிறைவேற்ற அதற்கென கல்வி என்ற ஸ்தாபனம் ஏற்பட்டுள்ளது. நாமே நமக்கு வேண்டிய பொருள்களை உற்பத்தி செய்த நாள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தது. இன்று அதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் துணி உடுக்கிறோம், அரிசி, பருப்பு, பழம் சாப்பிடுகிறோம். இவற்றை எல்லாம் நாமே உற்பத்தி செய்ய முடியுமா? மேலும் T.V., பேப்பர், மருந்து எல்லாம் நம்மால் எப்படி உற்பத்தி செய்ய முடியும்? இதற்கு முந்தைய நிலை கிட்டத்தட்ட விலங்கு நிலை. விவசாயம் ஏற்பட்டது, உணவுப்பொருள் அனைவருக்கும் உற்பத்தியாயிற்று. வியாபாரம் ஏற்பட்டது. அது அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. (Industry) தொழில்கள் ஏற்பட்டன. புதிய பொருள்கள் உற்பத்தியாயின. இவைகள் ஸ்தாபனங்கள். இந்த ஸ்தாபனங்கள் நாகரீகத்தின் சின்னம்.

– விவசாயம் உலகில் முதல் ஏற்பட்ட ஸ்தாபனம்.

– இராணுவம் முக்கிய ஸ்தாபனம்.

– விவசாயம் உற்பத்தி ஸ்தாபனம், இராணுவம் பாதுகாப்பு ஸ்தாபனம்.

– வியாபாரம் விநியோகம் செய்யும் ஸ்தாபனம்.

– கல்வி அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஸ்தாபனம்.

அப்படியானால் பணம் என்பது என்ன? விவசாயம், வியாபாரம், இராணுவம், கல்வி ஆகிய ஸ்தாபனங்கள் ஏற்பட அவசியமானது பணம். பணம் இன்றி விவசாயமோ, தொழிலோ ஏற்பட்டிருக்க முடியாது. கல்வி அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஸ்தாபனம் என்பது போல்,

பணம் ஸ்தாபனங்களை உருவாக்கும் அடிப்படை ஸ்தாபனம்.

சமூகம் பக்குவப்பட்டு அறிவால் வளராவிட்டால், அங்குப் பணம் உற்பத்தியாக முடியாது. பணத்தை ஒரு சமூகம் உற்பத்தி செய்ய அதற்கு உற்பத்தித் திறன், பல்வேறு உற்பத்திகளையும் இணைக்கும் திறன், மனவளர்ச்சி வேண்டும். ஒரு சமூகத்தில் பணம் ஏற்பட்டால் அதன் நாகரீக நிலைமையை பணம் எடுத்துக் காட்டும். ஊர் திறமையாகும், வலுவாகும். பணமில்லாமல் இராணுவமில்லை. பணம் நாட்டை விரிவுபடுத்தப் பயன்பட்டது. இராணுவம் அடுத்த நாட்டை வெல்லப் பயன்பட்டதுபோல் பணம் பிறநாட்டு வாணிகத்தை வெல்லப் பயன்பட்டது. பணம் சமூகத்தின் கருவி. பண்டமாற்று வந்தபின் ஒருவருடைய உபரி நெல் அடுத்தவர்க்குப் பயன்பட்டது. அதனால் உபரி நெல்லுள்ளவர் பிறர் உற்பத்தி செய்யும் பருப்பு, பழம் போன்ற பொருள்களை பண்டமாற்றில் பெறலாம். பண்டமாற்றுக்கு அளவுண்டு. பொருள்கள் அழியாமலிருக்கும்வரை பண்டமாற்று பயன்படும். பழம் சில நாட்களுக்குப் பின் அழுகும். நெல் சில மாதங்களுக்குப் பின் பயன்படாது. பணம் அழுகாத, அழுகமுடியாத பண்டம். பணத்தை நெடுநாள் வைத்திருக்கலாம். அதனால் காலத்தை வெல்லும் திறன் பணத்திற்கு ஏற்பட்டது. இளம் வயதில் சேர்த்த பணம், வயோதிகத்தில் பயன்படும். பணம் நம்மைக் காப்பாற்றும் வாரிசு. காலத்தை வெல்வதுபோல், பணம் வயோதிகத்தை வெல்லும். நாளாவட்டத்தில் பணம் மனிதனுடைய குறைகளை, பலஹீனங்களை வெல்லும் கருவியாக மாறிவிட்டது. மனிதன் தன் ஆட்சியை வளர்க்கும் கருவியாகப் பணம் மாறிவிட்டது. பணத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மனிதன் உடன் பிறந்தவன், பெற்றெடுத்தவன், உடன் உறைபவன் என்ற உறவுகளோடு வாழ்ந்தவன். உற்பத்தியால் மனிதனுக்குப் பணம் உறவை ஏற்படுத்தியது. பணம் மனித உறவைப் பல மடங்கு உயர்த்திப் பக்குவப்படுத்தியது. ஒருவருடைய பயிர் ஒரு வருஷம் அழிந்து போனால், அடுத்த ஆண்டுவரை அவன் குடும்பம் உயிரோடு இருக்காது. பணம் வந்தபின் சமூகம் தனிக் குடும்பம் அழிவதைத் தடுக்க வழியேற்பட்டது. பணம் நாணயமாக ஆரம்பித்தது. இது சமூகம் முதிர்ச்சியடைந்ததின் அடையாளம். காலத்தை வென்றதின் கட்டம். உபரியைப் பயன்படுத்தும் முறை. தனிமனிதனுக்குச் சமூகம் தரும் ஆதரவு. நமக்குப் பணம் பயன்படும் கருவி. ஆனால் பணம் என்பது,

– சமூகம் வளர உதவும் அமைப்பு, ஸ்தாபனம்.

– இராணுவம் எல்லையை விரிவுபடுத்துவதுபோல், பணம் நாட்டின் வாணிபத்தை விரிவுபடுத்துகிறது.

– பண்டமாற்று பண்டத்தால் செய்ததை, பணம் அடுத்த கட்டத்தில் நிறைவேற்றியது.

– காலத்தை வெல்லும் கருவி பணம்.

– குறைகளைக் குறைத்து மனிதனுக்கு நிறைவுகளை நிரப்பும் கருவி பணம்.

– உடலால் வாழ்ந்த மனிதனை உறவாலும், உணர்வாலும், ஊருடன் இணைத்தது பணம்.

– மனிதன் அழிவதை மற்றவர்கள் தடுக்கும் கருவியாயிற்று பணம்.

– நாணயம் மனிதனுக்கு நாணயத்தை ஏற்படுத்தியது.

அடிப்படையில் பணம் இன்றுவரை இப்படியேயிருக்கிறது. புதிய அம்சங்கள் அதிகமாக ஏற்படவில்லை. ஆனால் நடைமுறை வழக்கங்கள் (usage) ஆயிரமாயிரம் உற்பத்தியாகிவிட்டன.

கடன், பாங்க்

ஒருவர் அழகை இன்று அடுத்தவருக்குத் தரமுடியாது. ஒருவர் புத்திசாலித்தனத்தையும் அடுத்தவருக்கு தர இயலாது. அதுபோல் பிறருக்குத் தரமுடியாதவை பல. கடன் கொடுப்பது என்ற பழக்கம் ஏற்படும்வரை ஒருவரால் அடுத்தவருக்குப் பலனில்லை. கல்வி போதிப்பதால் ஒருவர் புத்திசாலித்தனம் ஓரளவுக்கு அடுத்தவருக்குப் போகும். டாக்டர் சிகிச்சை செய்வதால் டாக்டரால் நமக்கு ஆரோக்கியம் தரமுடிகிறது. ஆனால் ஒருவர் உடல் நலத்தை அடுத்தவருக்கு தரமுடியாது. கடன் தருவது என்ற பழக்கம் நெடுநாள் முன் ஏற்பட்டது.

கடன் உலகை நாகரீக உலகமாக்கியது.

ஒருவர் வாழ்வில் அடுத்தவர் பங்கு கொள்ள வழியாக அமைந்தது கடன். கடன் நாகரீகத்தின் சின்னம். ஒத்துழைப்புக்கு உருவம் தருவது கடன். கடன் தரும் பழக்கம் ஏற்பட்டபின் உலகம் நாகரீகத்தில் ஒரு படி முன்னேறியது. இன்று கடன் தரும் பழக்கம் வேண்டாம் என உலகம் முடிவு செய்தால், எந்த அளவுக்கு வாழ்வு சுருங்கும் என விளங்கும். கடைத்தெருவில் பாதி கடைகளை மூடிவிடுவார்கள். ரோட்டில், லாரி, பஸ், கார் 100 போகுமிடத்தில் ஒன்று, இரண்டுதான் போகும். 1500 A.D.யில் இருந்ததுபோல் வாழ்வு மாறும்.

  • பணம் வந்தபிறகு வாழ்வுக்கு உயிர் வந்தது என்றால்,
  • கடன் வந்தபிறகு பணத்திற்கு உயிர் வந்தது என்று கூறலாம்.
  • கடனில்லாமல் பணத்திற்கு மகத்துவமில்லை.
  • கடன், அடமானம், போக்கியம், தவணை விற்பனை ஆகியவை பணப்புழக்கத்தை பல மடங்கு இன்று பெருக்கி விட்டன.

10 லட்சம் போட்டு வீடு வாங்கினால் குடியிருக்கிறோம். 10 லட்சம் வீடாயிற்று. வீட்டுக்குப் பயன் உண்டு, மதிப்புண்டு. அடமானக் கடன் என்பது முதலிலில்லை. இன்றுண்டு. 10 லட்ச ரூபாயை ஒரு வீட்டில் போட்ட பின், அந்த வீட்டை அடமானம் வைத்து 6 லட்சம் வாங்க முடியும். 6 லட்சத்திற்கு வேறு வீடு வாங்கலாம். அப்படி அனைவரும் செய்வதில்லை. அதை அடமானம் வைத்து 4 லட்சம் கடன் வாங்கலாம். 4 லட்சத்திற்கு மற்றொரு வீடு வாங்கலாம். அதன் மீது 2 லட்சம் கடன் வாங்கி 2 லட்சத்திற்கு வீடு வாங்கலாம். எவரும் இப்படியெல்லாம் செய்வதில்லை. வியாபாரத்தில் ஓரளவு செய்வதுண்டு. 10 லட்சம் பணம் மேலும் 8, 6, 4, 2 என 20 லட்சம் பெறுமான வீடுகளை வாங்க உதவும் என்பது இந்த விளக்கம். ஒரு பாங்கில் ஒருவர் 1 கோடி டெபாசிட் போட்டால் அந்த பேங்க் 90 லட்சத்தை அடுத்த பேங்கிலும், அந்த இரண்டாம் பாங்க் 81 லட்சத்தை வேறொரு பாங்கிலுமாக, 90% அடுத்த அடுத்த பாங்கிற்குப் போனால் முடிவில் 1 கோடி டெப்பாசிட் 9 கோடி ரூபாய் டெப்பாசிட்டாக மாறுவதாக பாங்க் அனுபவம்.

1 கோடி பணம் பாங்க்கால் 9 கோடியாக மாறுகிறது. கடன் என்ற முறை 1 கோடி பணத்திற்கு 9 கோடி புழக்கம் தருகிறது.

பணம் வேறு, பணப்புழக்கம் வேறு. கைமாறினால் பணம் பிரள்கிறது. பணம் பிரண்டால் பணத்திற்கு உபயோகம் அதிகம். 1 லட்ச ரூபாய் சரக்கு 1 வருஷத்தில் விற்றால் 10,000 ரூபாய் இலாபம். ஒரு மாதத்தில் விற்றால் வருஷத்தில் 1,20,000 ரூபாய் இலாபம். பணம் வேகமாக நடமாடினால் பெருகும் என்பது வியாபாரம் அறிந்த செய்தி. நாள்கணக்கில் ஒரு பாங்க்கிருந்து அடுத்த ஊர் பாங்க்கிற்குப் போன பணம் இப்பொழுது கம்ப்யூட்டரில் நிமிஷக்கணக்கில் மாறுகிறது. பணம் பெட்டியிலிருப்பதை விட கைமாறினால், நடமாடினால், புழக்கம் அதிகமாகும், பணத்தைப் பலரும் பயன்படுத்துவார்கள்.

  • வேகம் அதிகரித்தால் பணம் பெருகும்.
  • அதிகமாகக் கைமாறினால் பணம் பெருகும்.
  • நாட்டில் எந்த முன்னேற்றம் வந்தாலும் அதன் மூலம் பணம் பெருகும்.

ஏற்றம் போட்டு தண்ணீர் இறைத்த நிலத்தில் ரூ.1000 முதலீடு செய்தால் 200 ரூபாய் பலன் தருகிறது. ஏற்றம் மோட்டாரானால் அதே ரூ.1000க்கு அதே நிலம் 400 ரூபாய் பலன் தரும். டெக்னாலஜி முன்னேறினால் பணம், பணம் ஈட்டும் திறனை அதிமாகப் பெறும். 5 வகுப்பு படித்தவனிடம் இலட்ச ரூபாய் முதல் கொடுத்தால் அவன் ரூ.5000 இலாபம் சம்பாதித்தால், அதிகம் படித்தவன், அதே இலட்ச ரூபாய்க்கு ரூ.10,000 இலாபம் சம்பாதிப்பான். நாட்டில் படிப்பு வளர்ந்தாலும், நகர வாழ்வு அதிகப்பட்டாலும், நாகரீகம் உயர்ந்தாலும், டெக்னாலஜி பெருகினாலும், எந்த முன்னேற்றம் ஏற்பட்டாலும், ஓட்டுரிமை வந்தாலும்,

பணத்திற்கு பணம் சம்பாதிக்கும் திறன் வளரும்.

பணம் பெருக நாம் நமக்குள்ள அத்தனை திறமைகளையும் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். 1969இல் பாங்க் தேசீய உடமையாக்கப்பட்டபொழுது இந்தியாவிலிருந்த அத்தனை பாங்குகளிலும் 4000 கோடி ரூபாய் டெபாசிட்டாக இருந்தது. இன்று 12 லட்சம் கோடி ரூபாய் என்ற கட்டத்தைக் கடந்துவிட்டது. இப்பணத்தை 10 மடங்காக்கும் திறன் இப்பாங்குகட்குண்டு. அதற்கு தேவையானது பணப் புழக்கம், நாணயம்.

பணமும் ஸ்தாபனமும்

நர்சரி பள்ளியும், ஆங்கில மீடியமும் வந்தபிறகு கல்விக்கு முக்கியத்துவம் வந்துவிட்டது. அடிமட்டத்திருந்து Ph.D. வரை படிப்புக்கு நாட்டில் முக்கியத்துவமும், மகத்துவமும் ஏற்பட்டுவிட்டது. நைலான், நைலக்ஸ், பாலியஸ்டர் வந்தபின் டிரஸ்ஸுக்கே மரியாதை அதிகமாகிவிட்டது. டிரஸ் என்றும் உள்ளது. நைலான் புதியதாக வந்தது. புதியதாக வந்த நைலான் மனிதன் பிறந்த நாளாக உள்ள டிரஸ்ஸுக்குப் புது மரியாதையைக் கொடுத்தது. ஆங்கில மீடியம் கல்விக்கே மதிப்பை ஏற்படுத்திவிட்டது. இது உலகிலுள்ள வாழ்வு முறைக்குரிய அம்சம். எந்த புது ஸ்தாபனம் வந்தாலும் எல்லா பழைய ஸ்தாபனங்கட்கும் மரியாதை சற்று உயரும். எந்த புதிய ஸ்தாபனம் வந்தாலும், புதிய டெக்னாலஜி வந்தாலும், எந்த மாற்றம் எங்கு வந்தாலும், பணத்திற்கு மதிப்பும், மரியாதையும் உயர்ந்துவிடும். இதுவரை பணத்தின் மதிப்பு உயர்ந்தது ஏராளம். இனி உயரப் போவதை கற்பனை செய்யமுடியாது. எதிர்காலத்தில் சமூகம் பெறப் போவதை அறிவால் ஒருவர் இன்று பெற முடியுமானால் அவர் முன்னோடி, அவர் பெறுவது அளவுக்குட்பட்டதல்ல. அபரிமிதமான செல்வம்.

பேசுவதற்கு முன் மனிதன் சைகை காட்டினான். அது அவனுடைய அன்றைய மொழி. அதனுடன் இன்று வழங்கும் மொழியை ஒப்பிட முடியுமா? அதேபோல் பணமும் வளர்ந்துள்ளதை நாம் கருதுவதில்லை. எதிர்காலத்தில் பணம் அதேபோல் அளவுகடந்து வளரும், பெருகும். 1960இல் M.A. பட்டம் பெற்று வேலையில் உள்ள பெண் தன் குழந்தைகள் கையில் காசு இருப்பதைக் கண்டு, இது என்ன அநியாயம், நான் 1945இல் வேலைக்குப் போகும்வரை நாலணா காசையும் கையால் தொட்டுப் பார்த்ததில்லை. என் குழந்தைகள் 8 அணா காசைக் கையில் வைத்திருக்கின்றன. எனக்குப் பொறுக்கவில்லை என்றார். கொடுப்பது யார், பெற்றோர்கள்தான். 1945ருந்து 1960 வரைக்கும் இந்த மாறுதல். அது போன்ற மாறுதல்கள் ஏற்பட்டபடியிருக்கின்றன. நாட்டில் பணம் பெருகியதை இவை குறிக்கின்றன. 50 ஆண்டுக்குப் பின் என்ன மாறுதலிருக்கும்? சமூகம் அம்மாறுதலையடைந்து பின்னர் தனி மனிதனுக்கு அவ்வுரிமையை கொஞ்ச நாள் கழித்துத் தரும்.

இன்று அதை நாம் பெறலாம்,

என்பது இக்கட்டுரை.

பணம் என்பது நம்பிக்கை

ரூ.100 நோட்டு வெறும் பேப்பர். இந்த பேப்பருக்கு இம்மதிப்பு எப்படி வந்தது? ரூ.1000 நோட்டு இனி செல்லாது என 40 வருஷத்திற்கு முன் ஒரு சட்டம் வந்தது. அன்று ஒரு பெட்டிக் கடைக்காரன் 1000 ரூபாய் நோட்டில் பாக்கு மடித்துக் கொடுத்தான். 40 ஆண்டுக்கு முன்னும் பம்பாய் பெட்டிக் கடையில் 1000 ரூபாய் நோட்டு புழங்கியது. கரன்சி என்பது தாள், பேப்பர். அதற்கு மதிப்பில்லை. அதில் ரிஸர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துள்ளது. I Promise to pay Rs.100 to the bearer இந்த நோட்டைக் கொண்டு வருபவருக்கு ரூ.100 தர நான் வாக்களிக்கிறேன் என்று கவர்னர் கையெழுத்திட்ட பிராமிசரி நோட்டு கரன்சி. சர்க்கார் மீது நமக்கு நம்பிக்கை இருப்பதால் பேப்பர் பணத்திற்கு மதிப்பு வருகிறது. பணம் என்பது நமக்கு சர்க்கார் மீதுள்ள நம்பிக்கை. நாணயம் பவுனால், வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நம்பிக்கை சர்க்கார் மீதில்லை. பவுன் மீது நம்பிக்கை. பவுனுக்கு உலகெங்கும் மதிப்பிருந்தது. ஒரு ரூபாய் நாணயம் வெள்ளியாலானது. அதிலுள்ள வெள்ளி 1 ரூபாய் பெறும். மனிதன் வெள்ளியை நம்பினான், சர்க்காரையில்லை. காகித நோட்டு வெளியிடும்பொழுது ஆயிரம் கோடி நோட்டு அடிக்க, சர்க்கார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பவுனை ரிஸர்வ் பாங்க்கில் வைத்துவிட்டு, நோட்டை அடிப்பது வழக்கம். ஆயிரம் கோடி பவுனை வைத்துவிட்டு, 1100 கோடி ரூபாய் நோட்டு அடிக்க பார்லிமெண்ட் அனுமதிக்காது. அப்படி அடித்தால் 100 கோடி ரூபாய்க்கு மதிப்பில்லை. அதுவே inflation பணவீக்கம் என்பது. 1/11 பாகம் ரூபாய் மதிப்பு குறைந்துவிடும். 1 ரூபாய்க்கு 91 பைசா மதிப்புதான் உண்டு. பவுன் மீதிருந்த நம்பிக்கை உலக யுத்தத்திற்குப் பின் சர்க்கார் மீது வந்தது. உலகில் எல்லா சர்க்காரும் பவுனை ரிஸர்வ் பாங்க்கில் வைப்பதை (gold standard) நிறுத்திவிட்டனர். உலகம் முன்னேறியது. இது நம்பிக்கையால் வந்த முன்னேற்றம். எந்த சர்க்கார் இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கிறார்களோ அவர்கள் கரன்சிக்கு உலகில் மதிப்புண்டு. டாலர் அந்த இடத்தைப் பெற்றுள்ளது. பார்லிமெண்ட் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எந்த அளவு சர்க்கார் தகுதி பெற்றுள்ளதோ, அந்த அளவுக்கு அந்த நாட்டு கரன்சிக்கு உலகில் இன்று மதிப்புண்டு.

  • பணம் என்பது நம்பிக்கை. நம்பிக்கையுள்ளவனுக்குப் பணம் பிரளும். இன்று புதிய கம்பனி ஆரம்பிக்கின்றார்கள். அன்று புதிய கம்பனி ஆரம்பித்தால் அதன் முதல் மீது நம்பிக்கை இருக்கும், முதலில்லாவிட்டால் ஷேர் விலை போகாது.

இன்று கம்ப்யூட்டர் கம்பனிகள் ஆரம்பித்தார்கள். முதலில்லாவிட்டாலும் technologyயை நம்பி கம்பனிகள் 1000 மடங்கு, 10,000 மடங்கு வளர்ந்தன.