அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 1

இறைவன் எல்லாம்வல்லவன், தன்னிகரில்லாதவன் என்று அனைவரும் பேசுவதை அன்னையால் ஏற்க முடியவில்லை. அத்துடன், அப்படியொருவரிருந்தால் அதை எப்படி அறிவிக்கலாம் என்று அன்னை கருதியதால் தாம் நாத்திகரானதாகக் கூறுகிறார்.

ஒரு துக்க வீட்டிற்கு நாம் போனால், அவ்வீட்டினுள் நுழைந்தவுடன் நம்மிடம் அவ்வளவு நேரமில்லாத துக்கம் நம் உள்ளிருந்து பீறிட்டெழுவதை நாம் காணலாம். அது அவ்வீட்டுத் துக்கம் – அச்சூழலுக்குரியது – நம்முள் நுழைவதாகும். பிறருடைய துக்கம், அதுபோல் அன்னையைத் தவறாது பாதிக்கும் என்கிறார் அன்னை. உடனே இது என் சொந்த வருத்தமன்று, பிறருடையது எனத் தாம் அறிவதாகக் கூறுகிறார்.

அன்னையின் இளவயது அனுபவம்

நம் வாழ்க்கையில், மிக அரிதாகக்   கற்பனையில் தம்மைத் தாமே இழந்த குழந்தைகளைக் காண்கிறோம். இதுபோன்ற சில மனிதரும் உண்டு.ஆயின், காண்பது அரிது. அவர்கள் தமக்குத் தாமேப் பேசிக் கொள்வார்கள்.கூர்ந்து நோக்கினால், உதடு அசைவதைக் காணலாம். அன்னைக்கு இப்பழக்கம் சிறுவயதில் உண்டு. “நானே எனக்குக் கதை சொல்லுவேன்” என்கிறார்.

தாம் அப்படிச் சிறுவயதில் கருதியதின் உண்மையைப் பின்னர் ஆய்ந்து அறிந்தார். இவை வெறுங் கற்பனையில்லை. நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகில் நுழைய நாம் கற்பனையைப் பயன்படுத்துகிறோம். அவ்வுலகம் அற்புதமானது, இனிமை நிறைந்தது, அழகு பொருந்தியது, சுமூகமான மணம் வாய்ந்தது. முயற்சியால், அங்குப் போக முடியுமானால் அங்கே தங்கலாம், தங்கி நம் கற்பனைத் திறனால் புதியவற்றைச் சிருஷ்டிக்கலாம். அவை பிறகு வாழ்வில் பலிக்கும். சிறு வயது கற்பனைகள் பின்னர் பலிக்கும் என்ற கவிக் கூற்றின் உண்மையிது என அன்னை விளக்குகிறார்.

அப்படி அன்னை கண்ட கனவுகளில் ஒன்று, ஒரு நகரம் நிர்மாணித்து மனிதனுக்கு அன்றாடத் தேவைகளைச் சம்பாதிக்கும் அவசியத்தை விளக்கி, நிம்மதியாக, அவன் இறைவனை நாட வழி செய்வதாகும். அக்கனவுகளே பிற்காலத்தில், அன்னை வாழ்வில், ஆசிரமமாகவும், ஆரோவில்லாகவும் பூர்த்தியாயின.

மனமே உலகை ஆள்கிறது. சத்திய ஜீவியம் படைத்த உலகத்தை இன்று ஆள்வது மனம். இன்று மனிதன் எதை நாடினாலும் அதை அவனால் சாதிக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். சத்திய ஜீவன் பிறப்பதும் அதனால் முடியும் என்பதும் பகவான் எழுதியது.

அன்னையின் மேற்கூறிய அனுபவத்தையும், பகவானின் இக்கூற்றையும் அடிப்படையாகக் கொண்டு நான் கடந்த 15 ஆண்டுகளாக எழுதி வருவதின் சுருக்கம்,

  • அன்னை அவதரித்த பின் கர்மம் தன் வலுவை இழந்துவிட்டது.
  • கர்மத்திற்குரிய குணங்களை விடுவதற்கு முன்வருபவர்க்குக் கர்மம் இல்லை.
  • கர்மத்தைக் கரைக்கும் சக்திக்கு அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும்.
  • அதிர்ஷ்டத்தைத் தன் வாழ்வில் மனிதன் உற்பத்தி செய்ய முடிவு செய்தால், அன்னை கூறும் கற்பனை உலகில் அதை உற்பத்தி செய்யும் திறனை ‘அன்னை சக்தி ‘ அளிக்கவல்லது.

5 வயது முதல் 96 வயதுவரை

சிறு வயதிலேயே தம் தலை மீது ஓர் ஒளி சக்தியுடனிருப்பதை அன்னை அறிவார். தியோன் மனைவி அன்னையைப் பார்த்தபொழுது “இவ்வொளி மகுடம்போல் அமைந்துள்ளது. 12 மணிகளாக அது ஜ்வலிக்கிறது. உலகைச் சிருஷ்டித்த மாதாவின் தலை மீதுள்ள மகுடம் இதுவாகும்” என்றார்.

இந்த ஜோதியே தம்மை வழி நடத்திச் சென்றதாகவும், அந்தச் சக்தியே தம்மைப் பாதுகாத்ததாகவும் அன்னை கூறுகிறார். தாம் செய்யும் எந்தவொரு வேலையையும் இவ்வொளியை அனுசரித்தே செய்ததாகக் கூறுகிறார். தம்மை வழி நடத்திய ஜோதி இதுவே என்கிறார்.

சினிமாவும் சர்க்கஸும்

5 வயதிலிருந்து 7 வயதிற்குள் அன்னை ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். தம் மனதில் தோன்றும் எண்ணங்களை மனக்கண்முன் ஒரு திரையை நிறுவி அதில் சினிமா பார்ப்பதுபோல் அன்னையால் காண முடிந்தது. ஓர் ஆனந்த அனுபவமாக அன்னை இதை அனுபவித்து வந்தார். இதைத் தமக்கு அதிக இன்பத்தைக் கொடுக்கும் அனுபவமாகக் கருதினார், தன் தகப்பனார் சர்க்கஸுக்கு அன்னையை அழைத்தபொழுது, “நான் இங்கு அதிக சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். சர்க்கஸுக்கு வரவில்லை” என்று மறுத்துவிட்டார். நண்பர்கள் விளையாட அழைத்தாலும் இதுவே அன்னையின் பதிலாகும்.

தம் அந்தராத்மாவுடன் வாழ்வதிலும், தமக்கே “கதை” சொல்வதிலும், மனக்கண்முன் “திரைப்படமாக” உணர்ச்சிகளைக் காண்பதிலும் அன்னை 7 வயதுவரை இருந்துவிட்டதால் A, B, C கூட அவர் கற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் அனைவரும் இவரை மூளை வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சியற்ற குழந்தை என நினைத்தனர்.

அன்னையின் அண்ணன் இவரைவிட 1½ வயது பெரியவர். பள்ளியிலிருந்து பெரிய படங்களை எடுத்து வருவார். அதன் கீழ் விவரம் எழுதியிருக்கும். அதைக் கண்ட அன்னையால் எழுதியிருப்பதைப் படிக்க முடியவில்லை. அண்ணன், தங்கைக்கு எழுத்துச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். மூன்றாம் நாளே அன்னை, “படிக்க ஆரம்பித்துவிட்டேன்” என்றார். பல ஆண்டுகளில் பயிலுவதை ஒரு வாரத்தில் அன்னை பயின்றார். பத்து வயதில் பள்ளிக்குப் போய் முதல் மாணவியாக பல பரிசுகள் பெற்றார். பியானோ வாசிக்கவும் கற்றார்.

“அறிவு விரலுக்கு வந்தாலன்றி பியானோ வாசிக்க முடியாது” என்பது அன்னையின் அபிப்பிராயம். எட்டு வயதில் டென்னிஸ் பயின்றார்.

டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்ளும் பொழுதே டென்னிஸில் சிறந்தவருடனே அன்னை விளையாடப் போவது வழக்கம். எவரும் பயிற்சிக் காலத்தில் ஒருபொழுதும் ஜெயிக்க முடியாதன்றோ? ஆனால் அன்னை நன்றாக ஆடக் கற்றுக் கொண்டார்.

எவரும் அன்னையை அலட்சியப்படுத்துவதோ, மரியாதைக் குறைவாக நடத்துவதோ இல்லை. அன்னை சிறு பெண்ணாக இருக்கும் பொழுது அன்னையையும், மற்றொரு பெண்ணையும் வம்புக்காரப் பையன் ஒருவன் கேலி செய்து தொந்தரவு செய்தபொழுது, கோபம் வேகமாக எழுந்து அபார சக்தி ஒன்று அன்னையை ஆட்கொண்டது. அன்னை அப்பையனைத் தூக்கி எறிந்தார்!

ஓவியர்கட்காக நடத்தும் பள்ளியில் அன்னை சேர்ந்தார். பிரபல ஓவியர் ஒருவரிடம் சித்திரம் பயின்றார். நிதானமும், பக்குவமும் நிறைந்தவர் அன்னை. மற்ற மாணவர்கள் அவரை ஆலோசனை கேட்பதுண்டு. அவர் பார்வைக்கு அனைவரும் உட்படுவர். வகுப்பில் தலைவியாக இருந்த மாணவியை பணியிலிருந்து அநியாயமாக விலக்கியபொழுது அன்னை அதை அநியாயம் எனக் கருதினார். அன்னையால் மாணவத் தலைவி மீண்டும் வகுப்பில் சேர்ந்தார்.

இயற்கையோடு இணைந்த நிலை

பன்னிரண்டு வயதில் அன்னைக்கு ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன.

பொருள்களோ, மனிதர்களோ தனித்தனியாகப் படைக்கப்படவில்லை. அனைத்தும் ஒன்றே. அனைவரும் ஒரே பொருளாலானவர்கள். அனைவர் உள்ளமும் ஒரே ஜீவியத்தால் நிரப்பப்பட்டவை. அனைவர் மனத்தையும் உந்தும் உறுதி ஒன்றே என்ற ஞானம் அன்னைக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தால் கிடைத்தது.

தம்மைச் சூழ்ந்துள்ள சூழல் உள்ள சக்தியை அன்னை அறிவார். தனியே நடந்துபோய் மரத்தடியில் உட்கார்ந்து தம்மை மறந்த நிலையில் அன்னையிருப்பதுண்டு. அணில், பறவைகள் அன்னை மீது வந்து உட்கார்ந்து உறவாடும். அன்னை நாடிய இடத்து மரங்கள் 1000 ஆண்டுகளாக உயிருடனிருப்பவை. சில மரங்கள் 2000 ஆண்டும் வாழ்ந்தவை எனக் கூறப்படுகிறது. அன்னைக்கு ஓரளவு அவற்றின் பாஷை தெரியும். ஒரு சமயம் ஒரு பெரிய மரம் அவரிடம் வந்து தன்னை வெட்டப் போவதாகவும், அதனின்று தன்னைக் காக்கவேண்டும் எனவும் முறையிட்டது.

பிற்காலத்தில் அதுபோல் தன்னிடம் முறையிட்ட மரங்களை அன்னை காப்பாற்றியுள்ளார்.

சோக மனிதன் Man of sorrows

இரவில் அன்னை உடலைவிட்டு எழுந்து ஆகாயத்தில் பரவியிருந்து மனித ஜீவன்களின் சோகத்தைப் போக்கி மீண்டும் உடலை நாடும்பொழுது தம் இடப்பக்கத்தில் ஒரு வயதான மனிதர் நீண்ட ஊதா அங்கியை அணிந்து உட்கார்ந்திருப்பதையும், தம்மைப் பிரியமாகப் பார்ப்பதையும் கண்டறிந்தார்.

பிற்காலத்தில் இம்மனிதர் சோக மனிதன் எனப்படுவார் என அன்னை அறிந்தார். சாவித்திரியில் இம்மனிதரை வர்ணிக்கும் பகுதியொன்றுண்டு.

“என் வேதனையை அனுபவிக்க இறைவன் உலகத்தைப் படைத்தான்” என்று அவர் கூறுகிறார்.

பள்ளியில் அன்னை எழுதிய கட்டுரை

15ஆம் வயதில் அன்னையின் ஆசிரியர் “நாளைக்கு  தள்ளிப் போடுவது” என்ற தலைப்பை மாணவர்கட்குக் கொடுத்து கட்டுரை எழுதச் சொன்னார். “நாளை என்று தள்ளிப்போட்டால், இல்லை என்ற கோட்டையை எட்டலாம்” என விளக்கமும் கொடுத்திருந்தார் ஆசிரியர்.

அன்னையின் கட்டுரை இது: ” வீட்டுப்பாடம் எழுதச் சோம்பேறியான மாணவன் பிறகு செய்யலாம் என முடிவு செய்து தூங்கப் போகிறான். தூங்கி எழுந்தால் தெம்பாக எழுதலாம் என்பது திட்டம். தூக்கத்தில் கனவு வருகிறது. கனவில் ரோடு தெரிகிறது. ரோடு இரண்டாகப் பிரிகிறது. மாணவன் கவர்ச்சியான பாதையை ஆசையோடு மேற்கொள்கிறான். மணம் நிறைந்த தென்றல், இதமான இளஞ் சூரியன் அவனைப் பரவசப்படுத்துகின்றன. உள்ளிருந்து எழும் குரல் “சுலபத்தை நாடாதே” என எச்சரிக்கிறது. எதிர்காலத்தை நினைத்துப் பார் என்கிறது. கனவின் கதாநாயகன் எச்சரிக்கையைப் புறக்கணிக்கிறான். இன்பத்தை நாடுகிறான். பல கேள்விகளை மனம் எழுப்புகிறது. அப்புறம் பார்க்கலாம் எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்கிறான். தன்னையறியாமல் ஓர் ஓடையில் இறங்குகிறான். அது சேரும் சகதியும் நிறைந்த இடம். பேய்க்குரல் எழுகிறது. இருண்ட கோட்டையை அடைகிறான். பயந்து படுக்கையிலிருந்து உருண்டு கீழே விழுந்து விழித்துக் கொள்கிறான். இனி “நாளை” என்பதையே மறந்துவிடவேண்டும் என முடிவு செய்கிறான்.”

சிறு பிராயத்தில் அன்னை எழுதிய கட்டுரை இது. ஆயினும் ஆழ்ந்த கருத்தை வெளியிடுகிறது.

கடவுள் தண்டிப்பாரா?

இன்று நியூயார்க் உலகத்தின் பாஷன் (fashion) தலைநகராக இருப்பதைப் போல் அன்று பாரிஸ் விளங்கியது. அங்கு உயர்குடி மக்கள் பேச்சு, நடை, உடை, பாணி, பழக்கம் போன்றவற்றை அதிக முக்கியமாகக் கருதியவர்கள். உயிர் போலவும் பாதுகாத்தார்கள்.

தர்மகைங்கர்யத்திற்குப் பணம் வசூல் செய்யும் நோக்குடன் ஒரு கண்காட்சி அமைத்தபொழுது அதன் ஒரு பகுதி திறந்தவெளியில் துணிப்பந்தலால் அமைந்தது. நகரப் பெருமக்கள் கூடி, திறந்த வெளியரங்கு மின் விளக்குகளால் ஜொலிப்பதைக் கண்டு வியக்கும் நேரத்தில் மின் பழுதால் கசிவு ஏற்பட்டு (short circuit) தீப்பொறிப் பந்தலைக் கொளுத்தியது. விரலசைவையும் கணக்கிடும் பெருமக்கள் நிலையிழந்து ஆடு மாடுகள் போல அடித்துக்கொண்டு ஓடியதில் ஏராளமான உயிர்ச் சேதமேற்பட்டது.

சவங்கள் அடக்கம் செய்யப்பட்டபொழுது ஒரு பிரமுகர், “இறைவனின் சட்டப்படி நடக்காதவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டார்கள்” என்று பேசினார்.

இறைவன் தண்டிப்பார் என்ற கருத்தை ஏற்காத அன்னை, அவர் பேச்சை மறுத்தார். ஏற்றுக் கொள்ளவில்லை.

“இறைவன் தண்டிப்பதில்லை. ஒழுங்கு, சுமுகம் குறையுமிடத்தில் ஆபத்து, விபத்துகள் நேரிடும்” என்பது அன்னையின் கருத்து. பலமுறை இதை வலியுறுத்தி அன்னை எழுதியிருக்கிறார், பேசியிருக்கிறார்.

அன்னையின் முற்பிறப்புகளைப் பற்றி அதிகமாக ஒரு சமயம் பேசியதுண்டு. அப்பொழுது அன்னை சாதகர்களுடைய முற்பிறப்பைப் பற்றியும் பேசினார். பகவான் அதை நிறுத்தும்படிச் சொல்லி விட்டார். அது சமயம் அன்னை,

பூமியில் அது‘ உற்பத்தியானதிலிருந்து எப்பொழுது ஓர் இழை ஜீவியம் consciousness வெளிப்படும் நிலை இருந்ததோ அப்பொழுதெல்லாம் நான் அங்கிருந்தேன்,

என்று கூறியுள்ளார். அன்பர்கள் அன்னையிடம் வந்தபின் தங்கள் வாழ்வை நினைத்துப் பார்த்தால் எப்பொழுதெல்லாம் ஒரு பெரிய நல்லது நம் வாழ்வில் ஏற்பட்டாலும் அங்கு அன்னை செயல்பட்டார் என அறியலாம். அன்னை வாழ்வில் அதுபோல் இறைவன் தவறாது செயல்பட்ட பல நிகழ்ச்சிகளை நாம் அறிவோம். நம் வாழ்வில் அன்னை அதுபோல் செயல் பட்டவற்றை அறிவது நம்பிக்கை, உணர்வது பக்தி.

அன்னை தம் காட்சி (vision) ஒன்றை விவரித்த பொழுது பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் அன்னை எகிப்து ராஜகுமாரியாக இருந்தார் எனத் தெரிய வருகிறது.

ஒரு சிறு குழந்தையை அன்னையிடம் கொண்டு வந்தார்கள். ஒரு வயது இருக்கும். குழந்தை அன்னையை ஆர்வமாக நாடியது. தரையில் போட்டபொழுது அன்னையின் கால் கட்டை விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. குழந்தையின் செயல் அன்னைக்கு வியப்பூட்டியது. சில நாள் கழித்து அதன் போட்டோவைக் கொண்டுவரச் சொல்லி அன்னை தம் தியானத்தில் அக்குழந்தையின் பூர்வோத்திரத்தை அறிய முற்பட்டார்.

இது சம்பந்தமாக அவர் காட்சியாகக் கண்டது

அன்னை அரண்மனை போன்ற பிரம்மாண்டமான கட்டிடத்திலிருக்கிறார். அற்புதமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு குழந்தை சாக்கடையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு உடையில்லை. குழந்தையைக் கவனிப்பவரிடம் அன்னை கோபமாகப் பேசுகிறார். அவர், “குழந்தைக்கு இது பிடிக்கிறது” என்கிறார். அது அன்னையின் குழந்தை.

சமீபத்தில் அன்னையிடம் வந்த அந்தக் குழந்தை,  தான் காட்சியில் எகிப்தில் கண்ட குழந்தை என அன்னை தெரிந்துகொண்டார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதிய நூல்களைப் படித்த வடநாட்டினர் சிலர், இவற்றைக் கடவுள்தான் எழுதியிருக்க முடியும் என்று முடிவு செய்து வடநாட்டிலிருந்து புறப்பட்டு பகவானைத் தரிசனம் செய்ய வந்தனர். வழியில் இரயிலில் ஒரு குழந்தைக்கு ஜுரம், வாந்தி போன்ற தொந்தரவுகள் எழுந்தன. திரும்பப் போகலாம் எனவும் நினைத்தனர். சிறுமி சற்று தெளிந்துவிட்டதால் சிரமத்துடன் புதுவை வந்து சேர்ந்தனர். எனினும் குழந்தை தெம்பேயில்லாமலிருந்ததால், அறையிலேயே குழந்தையை விட்டுவிட்டு மற்ற மூவரும் அன்னையைத் தரிசிக்கப் போனார்கள். மனம் மட்டும் ஒரு கேள்வியை எழுப்பியபடியிருந்தது. அன்னைக்கு எழுதி 4 பேருக்கு அனுமதி பெற்றோம். இப்பொழுது மூன்று பேர் போகிறோம். அன்னை கொடுத்த அனுமதிக்கு என்ன பொருள்? தெய்வமும் தவறு செய்யுமா? என்ற கேள்விகள் எழுந்தன.

தரிசனம் முடிந்தது. அனைவரும் அறைக்குத் திரும்பினர். சிறுமியிடம் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தனர். அவள், “எனக்குத் தெரியும். நான் அன்னையைத் தரிசித்தேன்” என்று கூறி அன்னை முன்னிலையில் நடந்ததை விவரமாகக் கூறினாள். அவள் முகம் பிரகாசமாக இருந்தது. ஜுரமில்லை, தெம்பாகப் பேசினாள். அவள் கூறிய விவரங்கள் அனைத்தும் உண்மை. பெற்றோருக்குப் புரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து,

“அன்னை நான்கு பேருக்கு அனுமதி கொடுத்தார். நாம் போனது மூன்று பேர். என்றாலும் நான்கு பேருக்கும் தரிசனம் கொடுத்துள்ளார்” என அறிந்தனர்.

பிறப்பு

எகிப்திலிருந்து மாரிஸ் அல்பாசா என்பவரும் அவர் மனைவி மட்டில்டா அல்பாசா என்பவரும் பாரிஸ் வந்து தங்கினர். வந்த ஒரு வருஷ காலத்தில் அவர்கட்குப் பிறந்த பெண் குழந்தைக்கு மிரா Mirra எனப் பெயரிட்டனர். மாரிஸ் துருக்கியில் பாங்க் நடத்தியவர். மட்டில்டா எகிப்தில் பாங்க் நடத்திய குடும்பத்தில் பிறந்தவர். இவர்கள் அன்னையின் பெற்றோர்கள். அன்னையின் தாயார் எகிப்து ராஜ வம்சத்துடன் தொடர்புள்ளவராகக் கருதப்படுகிறார்.

அன்னை பிறந்த நேரம் காலை 10.15

நாள் பிப்ரவரி 21, 1878

அன்னையின் சிறுபிராயம் மற்ற குழந்தைகளினின்றும் மாறுபட்டதாகும். அதிகமாகப் பேசுவதில்லை. சாப்பாட்டை வலிய ஊட்டுவது அன்னைக்குப் பிடிக்காது. “குழந்தைகட்கு என்ன சாப்பிடவேண்டும், எவ்வளவு சாப்பிடவேண்டும்” என்று தெரியும் எனப் பிற்காலத்தில் அன்னை கூறியுள்ளார்.

மெத்தையிட்டுத்  தைத்த நாற்காலி அன்னைக்காக ஒன்று இருக்கிறது. சிறு வயதில் தம் நாற்காயில் உட்கார்ந்து அன்னை தியானம் செய்வார். ஜோதி, மழையாக தம் தலைமீது பொழிவதையும், அது தலையினுள் ஒரு புரட்சி செய்வதையும் அன்னை காண்பதுண்டு.

தம் தாயார் தம்மை ஒரு நாள் திட்டும்பொழுது உலகத்துப் பொய்யெல்லாம் சேர்ந்து உலகத்துத் துன்பத்துடன் கலந்து தம்மைத் தாக்குவதாக அன்னை உணர்ந்து கண்ணீர் பெருக்கினார். “உலகம் தன்னைத் துன்பத்திலிருந்து மீட்க என் உதவியை நாடுகிறது” என்று தாயாரிடம் அன்னை கூறினார்.

அன்னை எழுதிய கடிதம்

முதல் உலக யுத்தம் வந்தபொழுது அன்னையும் அவர் கணவரும் இந்தியாவிலிருந்து பிரான்சு திரும்பினார்கள். அன்னை பிரான்சின் தென் பகுதியிலுள்ள லூனல் என்ற ஊரில் தங்கியிருந்தார்.

இந்தியாவில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த அன்னை, “நான் தெய்வீக அன்பின் திருவுருவமான ஸ்ரீ அரவிந்தர் முன் நின்றபொழுது, என் ஆன்மா அவரைச் சரணடைந்தது” என்று கருதினார். பிரான்சுக்குத் திரும்பவேண்டும் என்றால், எப்படி பகவானை விட்டு தம் ஆன்மா பிரியும், பிரிந்து உயிர் வாழ முடியாதே என பேதலித்தவர், தம் ஆன்மாவை அவர் காலடியில் வைத்துவிட்டு பிரான்சு திரும்பினார். ஆத்மாயில்லாமல் நடைப் பிணம் போலிருந்தேன் என்றார். அந்நிலையில் அவருடல் அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு.

அன்னையை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டவர் அடிக்கடி ஆசிரமம் வருவார். மனம் நிறைந்தது. ஒரு சமயம் சமாதியருகில் 10 நாளிருக்கும் வாய்ப்பு எழுந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர் அறியவில்லை; ஆனால் அச்சந்தோஷத்தை மனம் திளைத்து அனுபவித்தார். அளவு கடந்து மனநிறைவு பெற்றார். வீடு திரும்பினார். உடல் நோய்வாய்ப்பட்டது. அவரால் சமாதியைவிட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை என்று புரிந்தது. “I miss it very much”. இது அன்பர்கள் அனுபவம். அன்னை பிரான்சுக்குப் போனபொழுது அந்தப் பிரிவை அனுபவித்தார்.

உடல் நோய்வாய்ப்பட்டபொழுது டாக்டர் வந்தார். அவர் மருந்திற்கு எதுவும் பிடிபடவில்லை. அத்துடன் இனி நம்பிக்கையில்லை என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அன்னை ஸ்ரீ அரவிந்தருக்குக் கடிதம் எழுதினார். கடிதம் எழுதியவுடன் உடல் தேறிவிட்டது. வியாதி போய்விட்டது. ஆனால் வலிமை வர நாளாயிற்று.

அன்பர்கள் ஆசிரமத்திற்குக் கடிதம் எழுதினால் கடிதம் வந்து சேர்ந்தவுடன், பதிலாகப் பிரசாதம் வந்தவுடன், சில சமயங்களில் கடிதம் எழுதி தபால் சேர்த்தவுடன் தங்கள் பிரச்சினை தீர்ந்ததாக எழுதுகிறார்கள். ஆசிரமச் சூழலுடன் ஆத்மா தொடர்புகொண்டவுடன் சக்தி வேலை செய்கிறது. பிரச்சினை தீருகிறது. இது அனுபவம்.

அந்நிலையிலும் அன்னை தம் தெய்வீகப் பணியைத் தொடர்ந்தார். உலகில் எவராவது தெய்வத்தை அழைத்தால், அது அன்னை காதில் விழும். அன்னை “பதிலனுப்புவார்”. பிரச்சினை தீரும்.