பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் பெற்ற அத்தனை ஆன்மீகப் பேறுகளும் அவர்களை வணங்குபவர்கட்கும் உண்டு என்பதை அவர்கள் சொல்லியிருந்தாலும், நம்புவது சிரமமாக இருக்கிறது.
அவர்கட்கு நிரந்தர சித்தியாகக் கிடைத்தது பக்தர்கட்கு ஒரு முக்கிய நேரத்தில் (one time experience) அனுபவமாகக் கிடைக்கும். பாரிசில் அன்னையைப் பஸ் முன்னிருந்து தூக்கி எறிந்து காப்பாற்றியது போலவே சென்னையில் கல்லூரி பிரின்ஸ்பாலை அரை அடி முன்வந்த பஸ்ஸிலிருந்து காப்பாற்ற அதே சக்தி தூக்கிக் கருங்கல் குவியல் மீது போட்டது. அதே அனுபவம் பெங்களூரில் ஒருவருக்கேற்பட்டது.
டீ வேண்டும் என்று நினைத்தபொழுது, பகவான் முன் சுவரில் 3.42 என எழுத்துத் தெரிந்தது. டீ 3.42க்கு வந்தது. அது அவருக்கு நடக்கும், நமக்கு நடக்குமா என்ற கேள்விக்கு அன்னையிடம் இடமில்லை.
தவமிருந்து வரம் பெற்றுப் பெறும் சக்திகளை, ஆன்மாவில் அன்னையுடன் ஒன்றிய நேரம் பிரார்த்தனையின்றி நமக்கு அளிப்பதே அன்னையின் சிறப்பு. ஆன்ம விழிப்பு தியானத்தில் ஏற்படவேண்டும். அது ஏற்படுவதில்லை. ஆபத்து, வேதனை வந்தபொழுது, மனமும், உணர்வும் விலகி ஆன்மா முன் வருகிறது.
பெண் பார்க்க வருகிறார்கள் என்பது பெண்வீட்டாருக்கு tension படபடப்புக் கொடுக்கும் நேரம். பெண்ணுக்கும் அதே நிலை. வருபவர்கள் குறிப்பிட்ட நாளில் வந்துவிட்டால் விசேஷம். அதுபோல் அநேகர் செயல்படுவதில்லை. அதற்கு பலியானப் பெண் ஒருத்தி.
வேதனை அதிகமானால் எதுவும் வேண்டாம் எனத் தோன்றும். விரக்தி உச்சகட்டத்திற்குப் போன அன்று (03-07-96) அவர்கள் வருகிறார்கள் என சுவரில் எழுத்துத் தெரிந்தது. மனம் பூரித்தது.
சுவர் கூறியபடி அவர்களும் வந்தனர். திருமணம் கூடியது. பக்தி மிக்க நேரம் பலன் வருதல்போல், பயம் அதிகமாகிப் பலன் வருவதும் உண்டு. பயம் அன்னையை அணுகவிடாது. ஆனால் அதே பயம் அளவைக் கடந்து சென்றால், அன்னை செயல்படுவார். அந்தச் சட்டம் மற்ற எல்லாக் குணங்களுக்கும் உண்டு. எதுவும் அளவு மீறிப்போனால் அதன் குணம் மாறிவிடும். பயம் அளவுகடந்து போனால், அது மாறித் தைரியம் வந்து அவன் எதிர்ப்பதும் உண்டு. தைரியம் பயத்திற்குத் தெய்வத்தின் உருவம். பக்தர்கட்கு அன்னையே அங்கு வெளிப்படுவார்.
ஒரு ஆபீசர் ஆசிரமம் வந்து பார்த்தபின், தம் குடும்பத்துடன் இங்கு வந்து சேர தீவிர முயற்சி செய்து, தாமும் தம் மனைவியும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு இரு குழந்தைகளுடன் இங்கு வந்து சேர்ந்தார். அவர்களைப் பார்த்தபின் அன்னை அச்சிறு குழந்தையின் போட்டோவைக் கேட்டு வாங்கி, கவனித்து, அது யார் எனக் கூறினார். ஆசிரமச் சாதகர் ஒருவர் சில ஆண்டுகட்கு முன் காலமானார். அவரே அக்குழந்தை என்று அன்னை கூறினார். தகப்பானர் 3 மாதத்தில் மனம் வெறுத்துப் போய்விட்டார். தாயார் ஆசிரம உறுப்பினரானார். பெரிய பெண் குழந்தையும் அதுபோலாயிற்று. அந்தச் சிறு குழந்தையின் ஆத்மா அன்னையை வந்தடைய அவ்வளவு பேரும் வந்தனர் என அன்னை கூறினார்.
அன்னை யார் மீது அக்கறை காட்டுவார், எந்தப் பொருள் மீது அக்கறை செலுத்துவார், ஏன் அப்படிச் செய்கிறார் என்பது பெரும்பாலும் புரியாத புதிராகவே கடைசிவரை இருந்தது.
தம் பிறந்த நாளன்று அன்னைக்குப் பரிசாக வெல்வெட் மெத்தையும், உயர்ந்த சென்ட்டும் எடுத்துக் கொண்டு தம் குழந்தையுடன் தரிசனத்திற்கு வந்தார். அன்னை பரிசுகளைப் பெற்றுக் கொண்டார். குழந்தையை நோக்கி எனக்கென்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று அன்னை கேட்ட பொழுது, குழந்தை சிறு சென்ட் பாட்டில்களை தன் மூடிய கைகளை விரித்துக் காட்டியது.
பேரார்வத்துடன் அன்னை குழந்தையைப் பாராட்டினார். அவை என்ன சென்ட், எங்கு செய்யப்படுகின்றன, அக்கம்பனியின் வரலாறென்ன என்றெல்லாம் குழந்தைக்கு விவரித்தார். குழந்தையை வருடிக் கொடுத்தார். அன்னையின் இனிமை தகப்பனாரைத் திகைக்கச் செய்தது.
தாம் கொண்டுவந்தவையோ, தாமோ அன்னையைக் கவரவில்லை. ஏன் இந்த சின்ன பாட்டில்களை அன்னை அப்படிப் பாராட்டுகிறார் என அவர் வியந்தார். அன்னை பாராட்டியது அந்த சென்ட் பாட்டில்களில்லை, குழந்தையுடைய ஆத்மாவின் ஆர்வத்தையே என நாம் அறியவேண்டும்.
அன்றே குழந்தை கொண்டுவந்த பாட்டில்களை எல்லாம் திறந்து பார்த்தார். அன்னை அவற்றை வெகுவாக ரசித்திருக்கவேண்டும். அன்றே ஓர் டிரஸ்டி கடைத்தெருவுக்குப் போய் அதுபோன்று கிடைக்கும் பாட்டில்களை எல்லாம் வாங்கி வந்தார்.
அன்னையிடம் ஒரு பொருள் போனால், உலகமே அப்பொருளை நாடும். நாம் அன்னைக்கு ஒரு மலர் சமர்ப்பித்தால், ஏதும் அறியாத பலரும் அம்மலரை நாடுவார்கள். மல்லிகை மலரை தினமும் சமாதிக்கு ஒருவர் சமர்ப்பித்தார். மல்கையை அதிகமாகப் பயிரிட ஆரம்பித்தனர். அன்னையின் எஸ்டேட்டுக்கு 15 வருஷமாக வாராத கரண்ட் கனக்ஷனை ஒரு இன்ஜினீயர் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் புதியதாய் 500 கனக்ஷன் அவர் அவ்வாண்டு கொடுக்க வேண்டியதாயிற்று. தமிழ்நாட்டில் எந்த ஒரு கிராமமும் மின்சாரமில்லாமலிருக்கக் கூடாது எனச் சட்டம் வந்துவிட்டது. இவையெல்லம் தாமே நடந்தவை.
அக்குழந்தை கொடுத்த சென்ட்டை அன்னையே நேரடியாக ஒருவரை அனுப்பிப் பெற்றிருக்கிறார் எனில், அக்குழந்தையின் aspiration ஆர்வம் மிகப் பெரியது.
ஜுரம்
நமக்குப் பிரச்சினைகள் வந்தால் அவை தீரவேண்டும் என நினைக்கின்றோம். மனம் ஓர் அறிவு பெற வேண்டும். உணர்வு ஒரு பக்குவம் பெறவேண்டும், உடலுக்கு ஒரு நல்ல பழக்கம் வேண்டும் என்றபொழுது, இக்குறைகள் புறநிகழ்ச்சிகளில் பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.
சுத்தமான தண்ணீரைச் சாப்பிட்டால் நல்லது. அசுத்தமான குடிநீர் வயிற்றுப்போக்கைத் தரும். வயிற்றுப் போக்கு வந்தால் நாம் டாக்டரிடம் போய் மாத்திரை சாப்பிடுகிறோம். ஒவ்வொரு முறையும் டாக்டர் water infection நீர் சுத்தமாயில்லை என்பார். நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை.
சுத்தமான குடிநீர் சாப்பிடுபவனுக்கும் வயிற்றுப் போக்கு வருகிறது. பிறர் மனம் புண்படும்படிப் பேசுபவன் அவன் எனில், அவன் பேச்சு அடுத்தவர் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறது. அவனைக் கண்டாலே பேசியவனுக்கு வயிற்றைக் கலக்குகிறது. பிறகு அது வயிற்றுப்போக்காக மாறுகிறது எனில், அவனுக்கு வயிற்றுப் போக்கு, “பிறர் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதே” என்கிறது. நாம் அதை அறிய முடிவதேயில்லை. மாத்திரை சாப்பிடுகிறோம். Infection தொற்றுவியாதி என நினைக்கிறோம். காரணத்தை அறியாமல் காரியத்தைப் பார்க்கிறோம், அது முடிவற்றதாகிறது.
அன்னைச் சூழலில் வளர்பவர்கள், அவர் பார்வையில், ஆளுகையிருப்பவருக்குச் சுத்தமான குடிநீர் உண்டு. அவருக்கு வயிற்றுப்போக்கு வர வழியில்லை. பிறர் மனம் புண்படப் பேசுபவரானால், எவரைத் தேடிப் போய் திட்ட நினைக்குமோ, சூழல் அவரை இவர் பார்வையிலிருந்து விலக்குகிறது. வந்து மெனக்கெட்டு, வேண்டுமென்றே அவ்வெண்ணத்தைப் பாராட்டினால், எவராவது வந்து இவரைத் திட்டுவார். இது போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்டால் அன்னை, “வேண்டுமென்றே செய்வது நம்மையே பாதிக்கும்” என்கிறார்.
ஆசிரமப் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு மாதந்தோறும் ஜுரம் வருகிறது. இவன் அன்னை ஸ்தாபனத்தில், அன்னைச் சூழலில், அன்னையின் பாதுகாப்பில் வளர்கிறான். எதுவும் வர வழியில்லை. ஆனால் மாதம்தோறும் வருகிறது. ஒரு மாதம் அன்னையிடம் போய் சிறுவனுக்கு ஜுரம் என்றார் தகப்பனார். அன்னை எவருக்கும் புத்திமதி சொல்வதில்லை. சிறுவனும், பெற்றோர்கள் என்ன செய்தார்கள் எனக் கேட்பதில்லை. தாங்கள் செய்யவேண்டியவற்றைச் செய்திருந்தால் ஜுரம் வாராது. அப்படி வந்தவுடன் தவற்றை விலக்கியிருந்தால் அடுத்தமுறை வாராது. ஒவ்வொரு மாதமும் வருகிறது. ஒவ்வொரு மாதமும் தகப்பனார் அன்னையிடம் போய்க் கூறுகிறார்.
அன்னையின் சக்தியும், நேரமும் இதுபோன்ற காரியங்களால் விரயமாகும். அன்னை பையனை டாக்டரிடம் அழைத்துப் போகவும் என்று கூறினார். பெற்றோர் ஜுரம் வந்தவுடன், அன்னையை “அழைத்திருந்தால்” ஜுரம் போகும், முன்கூட்டிச் செய்ய வேண்டியவற்றைச் செய்திருக்கலாம். அவர்கள் கடமையைச் செய்யாமல் அன்னையிடம் வந்தால் டாக்டரிடம் போ என்கிறார்.
யார் சரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவற்றைக் கடந்து அன்னையின் கருணை செயல்படுகிறது. பையனுடைய ஆத்மா அன்னைக்கு அமைதியாகக் குரல் தருகிறது. அது அன்னைக்குக் கேட்கிறது. அவனுக்குத் திடீரென ஜுரம் வருகிறது. திடீரெனப் போகிறது என்றார் அன்னை. அவர் கேட்ட குரலுக்கு அவர் தரும் பதில் இதுவே. அதிலிருந்து ஜுரம் வருவதில்லை. நாம் conscious ஆக இல்லாதபொழுது அன்னை நம்மை நோக்கி வந்து நம்மை Conscious ஆகச் செய்யும் வழி இது.
சிகரெட் பிடிப்பது
மது, புகை, அரசியல், தாம்பத்யம் கூடாது என்பது அன்னை தன்னிடம் வந்து யோகத்தை நாடுபவர்கட்கு விதித்தது. பக்தர்கள் குடும்ப வாழ்விலிருப்பதால் இந்த கடைசி நிபந்தனையை அவர்கள் தீவிரமாகப் பின்பற்றுவது என்பதை எதிர்பார்க்க முடியாது.
அரசியல் பொய்யால் வளர்வதால் அன்னை தம் சாதகர்கள் நேரடியாக அரசியலில் பங்கு கொள்ள அனுமதிக்கவில்லை. என்றாலும் ஏராளமான அரசியல்வாதிகள் அன்னையிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றுள்ளனர்.
மதுவும், புகையும் மனஉறுதியைப் பாழ்படுத்துபவை. யோகம் மனஉறுதியை அதிகப்படுத்தி, அதன் மூலம் ஆத்ம உறுதியை (spiritual will) உயர்த்தி, ஜடத்தை ஆள முயல்வதாகும். மனிதன் தன் தேவைகளுக்காக உழைத்து, தேவைகளை நாடிப் பெறுவது மனித வாழ்வு. யோகத்தை மேற்கொண்ட பின்னும் இதுவே சட்டம் என்றாலும், ஓரளவு தானே அவன் தேவை அவனை நாடி வருவதைக் காணலாம். அந்த அளவுக்கு அவன் மனம் உறுதியுள்ளது எனலாம்.
மது அருந்தினால், மீண்டும் அருந்தச் சொல்லும், அதை மனம் மீற முடியாது என்பதால் மனம் அந்த அளவுக்கு உறுதியை இழந்து விட்டது. நாளாக நாளாக மனஉறுதி குறைந்துகொண்டே வரும்.
புகையை slow poison மெதுவாக நம்மை அரிக்கும் விஷம் என்கிறார் அன்னை. பக்தர்களாக அன்னையை ஏற்றபின் இது போன்ற பழக்கமுள்ளவர்கள் தானே அப்பழக்கம் மறந்து விடுவதைக் காண்கிறார்கள்.
அன்னை சக்தி எந்த அளவு பரவுகிறது எனில், பக்தர்களுடன் வேறு வகையில் தொடர்பு கொள்ளும் பீப்பாய் குடியன் என்று பெயர் வாங்கியவரும், chain smoker இடைவிடாது சிகரெட் பிடிப்பவர் என்பவரும் அவற்றை நெடுநாள் தாமே விட்டு விடுகிறார்கள்.
மனித சுபாவம் எல்லா நிலைகளிலும் இருப்பதால் அன்னையின் அருளும் எல்லா நிலைகளிலும் இருக்கின்றது. அன்னை சொல்வதை அப்படியே ஏற்பவர்கள் சிலர், மனம் ஏற்காவிட்டாலும் செயலில் ஏற்பவர்கள் சிலர், ஏற்காதவர்கள், எதிராக நடப்பவர்கள், அதை அன்னையிடமே sincere உண்மையாகக் கூறுபவர்கள் என சுபாவம் எல்லா நிலைகளிலும் செயல்படுகிறது. அவரவர்கேற்ப அன்னை அனைவருக்கும் அருள் செய்கிறார்.
புகையை விட முடியாதவரை மனைவி கடிந்து கொண்டாள். விடப்பிரியப்பட்டாலும், முடியவில்லை என்றால் என்ன செய்வது, எல்லாவற்றிற்கும் அன்னையே கதி, அன்னையே துணை என அன்னைக்கே பிரார்த்திக்கலாம். ஒருவர் அன்னையிடம் போய் தம் இயலாமையைக் கூறுகிறார். இது நல்லதன்று என அன்னை பதில் கூறுகிறார்.
அன்னையிடம் கூறியதில் மனப்பாரம் இறங்கியது. ஆனால் சுபாவம் இனி புகையைத் தொடரலாம் எனக் கூறுகிறது. மனைவி கடிந்துகொண்டு அன்னையிடம் சொல்லிய பின்னும் இதைத் தொடரலாமா என்று கேட்ட பின்னும் மீதியிருந்தவற்றைப் புகைத்துவிட்டு அத்துடன் மறந்துவிடுகிறார்.
அன்னையின் அருள் அவருக்குப் புகையை விடும் சக்தியை அளித்தது. என்றாலும் சுபாவம் போட்டி போட்டது. போட்டுத் தோற்றது.
அன்பர்கள் அன்னையிடம் வந்தபின் பெறும் அனுபவங்கள் பல. சில அவர்கட்குச் சந்தோஷம் கொடுக்கும். பல புரியா. அனுபவம், நாம் unconscious கண் மூடியாக இருக்கும்பொழுது – பின்னணியிலிருக்கும், என்ன என்ற விபரம் தெரியாது – நல்லாயிருக்கு, என்போம்.
அன்னை அறையைச் சுத்தம் செய்ய பலருக்கு அனுமதியுண்டு. ஸ்ரீ அரவிந்தர் அறைக்கும் அதுபோல் பலர் உண்டு. சம்பக்லால் வெளியே போனபின் அவர் தம்பி பான்ஸிதார் ஸ்ரீ அரவிந்தர் அறையில் அன்பர்களை அழைத்துச் செல்வார். பிரம்மசாரிகளுக்கு அடையாளமாகச் சில ஆசிரமங்களில் நீண்ட அங்கியுண்டு. அது போன்ற அங்கியும் Skull cap தலைமுழுவதும் மூடிய குல்லாயும் வெள்ளைநிறத்தில் அணிந்தவர் ஒருவர் ஸ்ரீ அரவிந்தர் அறைக்கு வெளியேயுள்ள இரண்டு தாழ்வாரங்களையும் துடைப்பார். பான்ஸிதார் ஒரு வாரம் வெளியே போக வேண்டி அவர் பொறுப்பை இவரிடம் ஒரு வாரம் அளித்திருந்தார். தினமும் பகவான் அறைக்குச் செல்லும்பொழுது இவர் முகம் one degree ஓரிழை அதிகமாகப் பொன் நிறமானதை நான் கவனித்தேன். என்னுடன் தினமும் வருபவர், “எத்தனை வருஷமாக இதே அறையில் அடுத்த வராந்தாவில் சேவை செய்கிறார். இந்த ஒரு வாரம் பகவான் அறைக்கே வந்தது என்ன பெரிய மாறுதல். His face looks as if it is gold plated. தங்கத்தகடாக முகம் மாறிவிட்டதே” என்றார்.
அன்னை அறை என்பது 3, 4 இடங்கள். அதிலோர் இடத்தை வாரம் ஒரு நாள் சுத்தம் செய்பவர், “நான் தியானம் செய்யும்பொழுது என் உடல் ஐஸ்போலச் சில்லிட்டு விடுகிறது. நெஞ்சில் தங்கநிற ஊற்றாக ஒளி புறப்படுகிறது” என்றார்.
அன்னை விளையாட்டு மைதானத்திலிருக்கும்பொழுது, தம் கடமைகளை முடித்த ஒருவர் மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடினார். பொன்நிற முத்துகள் பொல பொல என உதிர்ந்தன. கண்ணைத் திறந்தால் மறையும், மூடினால் தெரியும். இவருடைய ஜாதகப்படி ஆயுள் முடிந்துவிட்டது. ஏனோ அன்னையிடம் இவர் அதைக் கூறவில்லை. ஆனால் ஜாதகம் விலக வேண்டுமென்ற அவா. அன்னை முன்வரும் சந்தர்ப்பம் வந்தபொழுது அதை ஏதாவது ஒரு வகையாகச் சொல்ல வேண்டும் என்ற விருப்பம், இலட்சியம் பூர்த்தியாவதை நான் காணமுடியுமா? என்று கேட்பார். நிச்சயமாக முடியும். உன் ஜாதகத்தை கடலில் போடு என்று அன்னை கூறியவுடன் அவருக்குப் புரிந்தது.
நாம் செய்யாத பிரார்த்தனைக்கு அன்னை பலன் தருவதுபோல், செய்ய மறுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் தருகிறார். நமக்கு எது பிரச்சினை என்றே தெரியாத நிலையிலும் அன்னை நம்மை ஆன்மிக அனுபவமாக வந்தடைகிறார். முடிந்த ஆயுள் வளரவேண்டும் என்பதற்காக அன்னை இவருக்குப் பொன் முத்துகளைக் காட்சியாகக் கொடுத்தார் என்பதை முதலில் இவர் அறியவில்லை.
நம்மைச் சேர்ந்தவர்கள் பழைய நிகழ்ச்சிகளைச் சொல்லும் சமயம் எப்படி நமக்கு ஆபத்து உருவாயிற்று, எப்படி அது விலகியது என்பதை சில நேரங்களில் அறியலாம். ஆபத்து வந்ததே நமக்குத் தெரியாத நேரம் அன்னை செயல்பட்டு அதை விலக்கியதையும் நாம் அறியும் சந்தர்ப்பம் வரும். எத்தனை தரம் அன்னை செயல்படுவதைக் கண்டாலும், மனம் மீண்டும் மீண்டும் மனிதர்களையும், மருந்தையும், சட்டத்தையும், பணத்தையும் நம்பும். அன்னை நினைவு வரவில்லை என்றும் தெரியாது.
அன்னை முதல் நினைவு வருவது நம்பிக்கைக்குஅடையாளம்.
இப்பொழுதல்லாம் சென்னை வசதிகள் பாண்டியில் கிடைக்கின்றன. வெளிநாட்டு வசதிகளும் சில நம் நாட்டில் கிடைக்கின்றன. அந்த நாளில் மருந்து வாங்க சென்னை போக வேண்டும். கண்ணாடி போட இந்த ஜில்லாவில் பெரும்பாலும் சென்னைக்கும், மற்றவர்கள் பாண்டிக்கும் போவார்கள். ஆபரேஷன் என்றால் சென்னை பெரிய ஆஸ்பத்திரிக்கு போகும் நாள் அது.
குழந்தைகளை ஆசிரமப்பள்ளியில் சேர்த்துவிட்டு இங்கேயே தாயார் அவர்களுடனிருக்கிறார். தகப்பனார் சொந்த ஊரிலிருக்கிறார். உடல் நலம் குன்றியவுடன் ஆசிரம டாக்டரிடம் கொண்டு போனார்கள். இது ஆப்பரேஷன் செய்ய வேண்டியது என்றார். சென்னைக்குச் செல்வதாக முடிவெடுத்து, கணவனுக்கு தந்தி கொடுக்கச் சொன்னார். செய்தி அன்னைக்குப் போயிற்று.
கணவன் என்ன டாக்டரா? அவர் செய்யக் கூடியது என்ன? ஏன் அவருக்குச் சொல்ல வேண்டும். நானிருப்பது உங்களுக்கெல்லாம் தெரியவில்லை. என்மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை. நான் கவனித்துக் கொள்ளமாட்டேனா? என்று அன்னை கேட்டார். பெரிய ஆஸ்பத்திரியில் ஆசிரமவாசியின் மகன் வேலை செய்கிறார். அன்னை அவரை அழைத்துப் பார்க்கச் சொன்னார். புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மருந்து கொடுத்தார்கள். சற்று குணம் தெரிந்தது. பிறகு பூரணமாகக் குணமாய்விட்டது.
அன்னையின் காலடியிலேயே இருந்தாலும் நம்பிக்கை எழுவது சுலபமன்று. ஒரு பிரச்சினை என்றவுடன் மனம் அன்னையை நினைப்பது முடிவான பக்தி, கடைசி நிலை நம்பிக்கை. அதுபோல் நினைத்தபிறகு அன்னை செயல்படுவதைப் பார்க்க அற்புதமாக இருக்கும்.
மனிதன் ஜோஸ்யம், மருந்து, அம்மன் குறியை மட்டும் நம்புவதில்லை.
தெய்வம் தவிர மற்றெல்லாவற்றிலும் மனிதனுக்கு நம்பிக்கையுண்டு என்றால்
மிகையாகாது. 30 வருஷமாக உள்ள ஒரு பிரச்சனையை மனதில் இன்று கொண்டு வந்து, இது சம்பந்தமாக அன்னையை முதன்மையாக நினைக்கப் போகிறேன் என முடிவு செய்தால், அது முதுகு வலியானாலும், குதர்க்கமான மருமகளானாலும் 3 தலைமுறைக்கு முன் கொடுத்த பணமானாலும், 7 வருஷத்திற்கு முன் இழந்த வேலையானாலும், பாக்கியாகவுள்ள 8 லட்சச் சீதனமானாலும், அன்னையை முன் நிறுத்திய பின் விஷயம் பூர்த்தியாகும். மாதக்கணக்காக தள்ளிப் போகாது. மணிக்கணக்கில் முடியும், தவறினால் நாள் கணக்கில் பூர்த்தியாகும் என்பதைக் காண்பதே ஓர் அற்புத அனுபவம்.