ஒருவருக்கு 4 பிள்ளைகள். 4வது பிள்ளைக்கு 15 வயதாகி விட்டது. உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள் என்று பேச்சு வரும் பொழுதெல்லாம் எனக்கு 5 குழந்தைகள் என்பார் பிறகு திருத்திப் பேசுவார். அந்த ஐந்தாவது பிள்ளையும் பிறந்தது. வாய்தவறி அன்னைச் சூழலில் சொல் எழும்பொழுது அது எதிர்காலத்தில் நடைபெறப் போவதைக் குறிக்கும் என்பதை அன்பர்கள் கண்டதுண்டு.
வடதுருவத்தில் வளரும் செடிகள் அன்னை ஆரோவில்லில் நடச் சொன்னார். வியப்போடு அவரை எப்படி என்று கேட்டபொழுது ஆரோவில்ல், பனி (snow) வடதுருவம்போல் பெய்யும் என்று கூறினார்.
மனத்துள் அன்னை ஸ்ரீ அரவிந்தரை அழைத்துப் பேசுவதுண்டு. 1950க்குப் பின் அன்னை அப்படிப் பேசினார். 1959க்குப் பின் ஸ்ரீ அரவிந்தர் பதில் கூறுவதுடன் நேரில் வந்து பேசுவது போலவும் அன்னையிடம் பேசினார்.
சில கேள்விகட்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வார். ஓரிரு சமயங்களில் தாம் சொல்வதை எழுதிக் கொள்ளச் சொல்வார். சில சமயங்களில் பதில் சொல்லமாட்டார்.
சாவித்திரியின் பகுதிகளை அன்னை வாசிப்பதை ரிகார்ட் செய்துள்ளனர். The Mother என்ற நூலையும் அன்னையின் குரல் கேட்கலாம். அன்னையின் music இசை ஏராளமாக ரிகார்ட் ஆகியுள்ளன. அவை உடல் வியாதியிருந்தால் குணப்படுத்தும். சூழலைத் தூய்மைப்படுத்தி, உயர்த்தும், தியானம் கொடுக்கும், அமைதி ஏற்படுத்தும். அன்னையின் இசை என்பதால் அன்னைக்குரிய சக்திகள் அனைத்தும் அதற்குண்டு.
இந்த ரிகார்ட்டிங் எடுக்கும்பொழுது அன்னை வழக்கமாக concentrated மிகவும் உன்னிப்பாக இருப்பார். தவறு என்பதே அறியாதது அன்னை செயல். ஒருமுறை இது போன்ற ரிகார்டிங்கில் Forever love, O beautiful slave of God என்ற வரியை அன்னை தம்மையறியாமல் மாற்றி, Forever love, O powerful slave of God என்று படித்தார்.
எப்படி இந்த மாறுதல் வந்தது? என அன்னை மனத்துள் பகவானைக் கேட்டார்.
“நீ வாசித்தது எதிர்காலத்திற்குரிய உண்மை” என்று பகவான் அன்னைக்குப் பதில் சொன்னார்.
அன்னையின் பாதுகாப்பு
Protection பாதுகாப்பு என்ற மலர் செய்தவையெல்லாம் சேர்த்து எழுதினால் ஒரு புத்தகம் எழுதலாம். சமாதியை விட்டு வெளியில் போகும்பொழுது முகம் தெரியாதவர் கொடுத்த 1 பாதுகாப்பு மலர், கொடைக்கானல் ரோட்டில் உருண்டுவந்த பாறையிலிருந்து தன்னைக் காப்பாற்றும், மதம்பிடித்து ஓடிய யானையிடமிருந்து காரைக் காப்பாற்றும், எதிரில் வந்த புலியை மனம் மாறிப் போகச் சொல்லும் என்று அவர் எனக்குக் கடிதம் எழுதும்வரை நினைக்க தெரியவில்லை.
அன்னையின் சூழல் பாதுகாப்பு அளிக்கிறது.
அன்னையை அழைத்தால் அழைப்பு அவரை அறியாமல் பாதுகாப்புத் தருகிறது.
அன்னையே, நான் வருகிறேன், பாதுகாக்கின்றேன் என்று பாதுகாப்பளிக்கிறார்.
புதுவைக் கடலோரத்தில் மாணவர்கள் கடலில் நீந்தும்பொழுது அன்னை ஓரிடத்தைக் குறிப்பிட்டு, இதனுள் என் பாதுகாப்புண்டு என்கிறார். அந்த இடத்தில் பாதுகாப்பு நிரந்தரமாக இருக்கிறது.
அன்னை மருந்து சாப்பிடக்கூடாது என்கிறார். சில சமயங்களில் மருந்து அவசியமாய்ச் சாப்பிடவேண்டும் என்கிறார். ஆப்பரேஷனைத் தவிர்க்கச் சொல்கிறார். சில சமயங்களில் ஆப்பரேஷன் செய்து கொள் என்கிறார். நான் வந்து காப்பாற்றுவேன் என்றும் கூறியிருக்கிறார். அன்னை வருவது நமக்குத் தெரிவதும் உண்டு. தெரியாமலிருப்பதும் உண்டு.
காஷ்மீருக்குப் பனிநாளில் அமர்நாத்திற்குச் சென்றவர் திரும்ப வந்து “அன்னையிடம் அங்கு அதிகக் குளிர்” என்றார். ஆமாம், ரொம்பவும் உடல் குளிரால் நடுங்கியது. நான் உங்களோடு அங்கேயிருந்தேன் என்றும் கூறியுள்ளார். சாதகர் ஒருவருக்கு வயிற்றுவலிக்காக ஆப்பரேஷன் செய்ய முடிவுசெய்து அன்னையிடம் கூறியபொழுது, அன்னை மறுத்துவிட்டார். பிறகு டாக்டர் ரிப்போர்ட் எல்லாவற்றையும் அன்னையே வாங்கிப் படித்துவிட்டு, சரி ஆப்பரேஷன் செய்யலாம், நான் உடனிருந்து பாதுகாக்கிறேன் என்றார்.
ஆப்பரேஷன் தியேட்டரில் சாதகர் அன்னை தம் அருகில் நிற்பதைக் கண்டார். ஆப்பரேஷன் முடிந்து அன்னையிடம் வந்து விவரம் கூறியபொழுது, ஆமாம், எனக்குத் தெரியும். நான் அங்கிருந்தேன் என்றார்.
ஸ்ரீ அரவிந்தர் அறையில் பலர் கூடி அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தபொழுது, ஸ்ரீ அரவிந்தர், ரிஷபசந்த் என்ன செய்கிறார்? என்று பார்க்கிறேன் என்றார். ரிஷபசந்த் அவர் வீட்டிலிருக்கிறார். ஆனால் பகவானுக்கு அவர் செய்வது தெரிகிறது.
சூட்சுமப் பார்வையிருந்தாலும் எல்லா நேரமும் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. தேவையான சமயங்களில் பயன்படுத்துவதே வழக்கம். சூட்சுமப்பார்வை உள்ளவர் அன்னையைத் தரிசிக்க விரும்பினால், தங்கள் மனதில் அன்னையின் உருவத்தை கற்பனை செய்து, கற்பனையை ஸ்தூலத்திலிருந்து (gross body) சூட்சுமத்திற்கு நகர்த்தினால் அன்னை தரிசனம் கிடைக்கும். பகவானை இதுபோல் கண்டவர் தம் concentration மனதை மேலும் சற்று ஆழப்படுத்திய பொழுது பகவான் உருவம் மாறியது. யார் எனப் புரியவில்லை. எழுந்து லைப்ரரிக்குப் போனார், தற்செயலாக என்சைக்ளோப்பீடியாவைப் புரட்டினால் அவர் கண்ட அதே உருவம் தெரிந்தது. அது லியனார்டோவின் படம், அது பகவானின் முன்ஜன்மம்.
இது கலியுகம். மனிதனுக்குச் சூட்சுமப் பார்வை சென்ற யுகங்களிலிருந்தது; இப்பொழுதில்லை. அன்னையைத் தரிசித்தவர், “இவர் பிரெஞ்சுக்காரர், விலையுர்ந்த உடை உடுத்தியிருக்கிறார், லிப்ஸ்டிக் போட்டிருக்கிறார்”, என்றவர் அநேகர். பகவான் ஸ்ரீ அரவிந்தர் “முதல் முறை அன்னையைப் பார்த்ததும் அவர் தெய்வம் என உணர்பவருக்கு ஆன்மா விழிப்பாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
அன்னையின் தெய்வீகம் தெரிவதில்லை. அவர் கொடுக்கும் பிளசிங்பாக்கட்டின் சக்தியை நாம் அறிவதில்லை. ஒவ்வொரு முறை காணிக்கை அனுப்பும்பொழுதும் எனக்கு ஒரு பிளசிங் பாக்கட் வருகிறது. இது ஏராளமாகச் சேர்ந்துவிட்டது. நான் இதை என்ன செய்ய? இனி அனுப்பாதீர்கள்? என்று கூறியவர் பலர். அன்னை சாதகர் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் அவர் கொடுத்த பிளசிங்பாக்கட்டை எங்கெல்லாமோ கண்டு வருத்தப்பட்டு, அதன் மகிமையை நீங்கள் அறியவில்லை என்றார்.
சென்னையிலிருந்து வடநாடு சென்ற ஆபீசர் ஒருவர் அன்னை பக்தர். அங்கு அவர் குடியிருந்த இடத்தில் எவரும் அவரைக் கண்டு கொள்வதில்லை. அன்னை பக்தர்களுக்குப் புதிய இடத்தில் இரண்டு விதமான அனுபவங்கள் உண்டு. ஒன்று போகுமிடமெல்லாம் நம்மை நெடுநாள் தெரிந்தவர்கள்போல் அன்பாகவும், மரியாதையோடும் நடத்துவார்கள். நம் அந்தஸ்திற்குரிய மரியாதையைவிட அதிகமான மரியாதை கிடைக்கும். அடுத்தது எவரும் நம்மைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். அன்னையின் மகிமையை ஏதோ ஒரு வகையாக அறிபவர்கள் அதிக அன்பு செலுத்துவார்கள். அறியவே முடியாதவர்கள் பாராமுகமாக இருப்பார்கள்.
இந்த ஆபீசருக்குக் குழந்தைகள் மீது பிரியம். எல்லாக் குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். அன்னை படத்தைப் பார்த்து யார் அது எனக் கேட்பார்கள்.
அவற்றுள் 2 வயதுக் குழந்தைக்கு உடல்நிலை மோசமாகி ஆஸ்பத்திரியிலிருக்கும்பொழுது அவர் தகப்பனார் இவரிடம் ஓடி வந்தார். குழந்தையை வந்து பார்க்கும்படி அழைத்தார். ஒரு பிளசிங் பாக்கெட்டுடன் வேகமாகப் போனார். I.C.U.இல் குழந்தை பிரக்ஞையற்று கிடந்தது. நர்சிடம் பிளசிங்பாக்கெட்டைத் தலையணை அடியில் வைக்கும்படிக் கேட்டார். அவர் மறுத்துவிட்டார்; டாக்டரிடம் சென்றார். அவர் அன்னை பக்தர். டாக்டர் நர்சை அழைத்து இவரைக் குழந்தையிடம் அழைத்துப் போ என்றார். குழந்தை கண்திறந்து பார்த்தாள். ஆபத்தான நிலையைக் கடந்துவிட்டாள் குழந்தை என்று பார்த்த நர்ஸ் ஆச்சரியமாகக் கூவினாள். குழந்தை பிழைத்துக் கொண்டாள் என கூச்சட்டு நர்ஸ் ஆரவாரப்படுத்தினாள்.
பிளசிங்பாக்கெட் செய்தவற்றையெல்லாம் சேர்த்து ஒரு நூலாக எழுதினால் அது அன்னையின் ஆன்மீக மகிமையை வர்ணிப்பதாக அமையும்.
பிரசாதம்
வாழ்க்கையில் நல்லதுண்டு; ஏற்றுக்கொள்கிறோம், கெட்டதுண்டு. விலக்குகிறோம். நல்லதும் கெட்டதும் கலந்திருந்தால் மனம் குழப்பமடைகிறது. நல்லதற்காகக் கெட்டதை அனுபவிப்பவர் சிலர்; கெட்டதால் நல்லதை விட்டுவிடுபவர் பலர். நல்லது ஒரு பகுதி. கெட்டது அடுத்த பகுதி. நல்லதும் கெட்டதும் சேர்ந்ததே முழுமை,
கெட்டதை நல்லதாக அறிந்து இரண்டையும் ஏற்பதே முழுமை.
கெட்டதை நல்லதாக மாற்றுவது அன்னை சக்தி. அதைச் செய்ய உதவுவது சமர்ப்பணம், சமர்ப்பணத்தின் அடிப்படை நம்பிக்கை. சமாதிக்குப் போனால் மயக்கம் வருகிறது. எப்படிப்பட்ட மயக்கத்தையும் அழிக்கும் சமாதிக்குப் போனால் மயக்கம் வந்தால் என்ன செய்வது? சமாதிக்கு அடிக்கடி போவதால், அங்கு அதிக நேரம் இருப்பதால் பெறும் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் தீய சக்தி மயக்கத்தை அளிக்கிறது. அன்னையை இடைவிடாது அழைத்தால் மயக்கம் நீங்குகிறது. ஒரு சக்தியால் அல்லது ஒருவரால் மயக்கம் வருகிறது எனில் நம்முள் மயக்கத்தை ஏற்படுத்த ஒன்றிருக்கவேண்டும். அதைக் கண்டு விலக்கினால் மயக்கம் வருவதில்லை, அன்னையின் முறைகள் பல
- கெட்டது கலந்திருப்பதால் அதனுடன் சேர்ந்து வரும் நல்லதை அதற்காக விலக்குவது எளிய முறை.
- அன்னையைத் தீவிரமாக அழைத்து, கெட்டதை அழிப்பது சிறந்தது.
- கெட்டதை ஏற்பது நம்முள் எது என அறிந்து விலக்குவது அதனினும் சிறந்தது. இதனால் கெட்டதே நல்லதாக மாறும்.
ஒரு சாதகருக்குத் தினமும் அன்னையிடமிருந்து பிரசாதம் வரும். அவர் நண்பர் அப்பிரசாதம் பெறுவதற்காகத் தினமும் அவரிடம் வருவார். வருபவரிடம் சாதகர் பிரசாதத்துடன் வீண்வம்பு பேசுவார். பிரசாதமும் வம்புப்பேச்சும் கலந்திருப்பதால் என்ன செய்வது என்று குழப்பம். அந்த நாளில் அன்னை ஆசிரமக்கட்டிடடத்துள் பல இடங்களுக்கும் வருவார். எந்த இடத்திற்கு எந்த நேரம் வருவார் என்று அனைவரும் அறிவார்கள். குழப்ப மேலீட்டில் அன்னைக்குக் கடிதம் எழுதினார்; அன்னையிடம் கொடுக்கும்பொழுது தனியே பார்த்தால் நல்லது என நினைத்தார், பிரார்த்தனை செய்தார், உடனிருந்தவர் (வம்பு பேசுபவர்) உடனே வேறெங்கோ போய்விட்டார், அன்னையைக் கண்டதும் கடிதத்தை நீட்டினார், கடிதத்தைக் கையில் வாங்கிய அன்னை, பிரித்துப் படிக்காமல்
“பிரசாதம் பெற இனி அங்குப் போக வேண்டாம்”
என்றார். தம் மனதிலிருந்த கேள்விக்கு அன்னை பதில் சொல்லியதும், வம்புப் பேச்சை விலக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியதும், கடிதம் எழுதியவருக்கு வியப்பூட்டியது.
ஸ்தாபனத்தின் ஜீவன்
விவசாயி அறுவடை செய்தால் முதலில் குலதெய்வத்திற்குப் பொங்கலிடுவான். வேலைக்குப் போனால் முதல் சம்பளத்தைக் காணிக்கையாக்குவது நம் மரபு. அன்னைக்கு அது போன்ற காணிக்கை முதல் அறுவடை, முதல் பழுத்த பழம், முதற் சம்பளம் மிக முக்கியமானது. முழுமனதோடு கொடுக்கும் காணிக்கை முழுச்சம்பளமானாலும் அன்னை, பக்தனை சேவைக்கு அழைத்து அதையே கடைசிச் சம்பளமாக்கிய நிகழ்ச்சியும் உண்டு.
அன்னை ஆசிரமத்திற்கு நிர்வாகத் தலைவியாக மட்டும் இல்லை, பொறுப்புள்ள நிர்வாகியாக எல்லாவற்றையும் நேரிலே தாமே கவனிக்கும் தலைவியாக மட்டுமில்லாமல், எல்லா நடவடிக்கைகட்கும் தாமே ஆன்மீகப் பொறுப்பை (conscious responsibility) ஏற்றுக் கொண்டார். ஆசிரமம் வந்த ஒருவர் தம் brief case கைப் பெட்டிச் சாவியைத் தொலைத்துவிட்டு, யாராவது பூட்டை உடைத்துத் தருவார்களா என்று ஆசிரமம் ஒர்க் ஷாப்புக்குப் போனபொழுது அங்கு வேலை செய்பவர் அன்னை அனுமதி வேண்டும் என்று அவரைத் திகைக்க வைத்தார். “பூட்டை உடைக்கக்கூடாது, புது சாவி – இரண்டு சாவி – செய்து கொடு” என அன்னை உத்தரவிட்டார். ஜடப் பொருளானாலும் ஆசிரமச் சூழலில் வந்த பூட்டுக்கு அன்னையின் பாதுகாப்பு உண்டு.
12 கோழிகளை வளர்க்க அனுமதித்த அன்னை, “தினமும் முதல் முட்டையை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியிருந்தார். தினமும் 11 மணிக்கு முட்டை வரும். முதல் முட்டை அன்னையை அடைந்தால் எல்லா முட்டைகட்கும், கோழிகட்கும், கோழிப்பண்ணைக்கும் அன்னை அருள் அதன் மூலமாகப் போய்ச் சேரும்.
பட்டுப் போன மாமரம், கோடாரி பொருத்தப்பட்ட ஆலமரம், குவிக்கப்பட்ட தென்னை மட்டைகள், பிரார்த்தனை செய்யாது வயிற்று வலியால் வேதனைப்படுபவர், கடலில் நீந்தும் குழந்தைகள், கடலால் அடித்துச் செல்லப்படும் மதில், பாண்டியிலிருந்து புறப்படும் கப்பல் என தம் சூழல் வந்த அனைத்துடனும் தொடர்பு கொண்டவர் அன்னை. 150 பேர் இருக்கும்வரை என்னையறியாமல் எவரும் சிந்திக்கவும் முடியாது என்றார். ஒரு நாள் காலை 11 மணிக்கு வேறு வேலையாக இருந்த அன்னை வேலையை நிறுத்திவிட்டு
“மணி 11. முட்டை இன்னும் வரவில்லை”
என்றார். ஸ்தாபனத்துடன் ஜீவனுள்ள தொடர்பு கொண்டவர் அன்னை. இன்றும் நாம் நம் வாழ்வை அவருக்கு அர்ப்பணித்தபின் அன்னையின் பொறுப்பை நம் அன்றாட வாழ்வில் காணலாம்.
அன்னையின் திருநாமம்
தாயார் தன்னை விட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டார் என்பதால் அழ ஆரம்பித்த சிறுகுழந்தை சாக்கலேட், பொம்மை, ஐஸ்கிரீம் ஆகியவற்றைத் திரும்பிப்பார்க்காமல் அழ ஆரம்பித்து மணிக்கணக்காய் அழுவதை எவராலும் சமாளிக்க முடியாமல் பசியால் வாடும் குழந்தையைப் பார்க்க முடியாமலிருக்கும்பொழுது, அங்கு வந்த இளைஞன் குழந்தையைக் கண்டு பரிதாபப்பட்டான். ஆறுதல் சொல்ல முனைந்தால் அதிகமாக அழுகிறது குழந்தை. எதுவும் செய்யமுடியாத நேரம் ஒதுக்குப்புறமாய் உட்கார்ந்து Mother, Mother, Mother என்று தீவிரமாய் சொன்னபொழுது குழந்தை களைத்துத் தூங்கிவிட்டது. அன்னையின் திருவுருவத்தைப் புருவமத்தியிலும், குழந்தை நெஞ்சிலும் உருவகப்படுத்தும்பொழுது குழந்தையின் முகம் தெளிவடைந்தது. தூங்கி எழுந்த குழந்தை சிணுங்கியது. சாப்பிட மறுத்தபொழுது, இளைஞன் குழந்தையே Mother என்று சொல்வதாகக் கற்பனை செய்தான். சாப்பிட ஆரம்பித்தது. சாப்பாட்டை அன்னையாக நினைத்தான். குழந்தை வழக்கம்போல் சாப்பிட்டது. குழந்தையை அன்னையின் மடியில் கிடப்பதாக நினைத்தான். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு விளையாட ஓடி வந்தது. இதுபோன்ற அனுபவம் பலருடையது.
யோகத்தை மேற்கொள்பவர்கட்குப் பல்வேறு காரணங்களால் மனநிலை கலைந்து சித்தப் பிரமையடைவதுண்டு – பிறர் பைத்தியம் என்று கருதுவதுபோல் நடப்பதுண்டு. அன்னை அவர்களை ஒன்றும் செய்யாதே என்பார். அவர்கள் எல்லா இடங்களுக்கும் போய் இஷ்டப்படி நடப்பார்கள். அதுபோன்று ஒருவருக்கு ஒரு சாதகியின் மீது குறி. நிலையழிந்த பெண், இந்த சாதகியைக் கண்டால் திட்டுவதும், காரித்துப்புவதும், கல்லால் அடிப்பதும் பயங்கரமானபொழுது சாதகி அன்னையிடம் முறையிட்டார். “என் பெயரைச் சொல் என்றார்” அன்னை. அடுத்தமுறை தாக்குதலுக்குள்ளானபோது, அவதிப்பட்டு மீண்டும் அன்னையிடம் முறையிட்டார். என் பெயரைச் சொன்னாயா? என்றார். முடியவில்லை எனப் பதில் வந்தது. வாயால் M-O-T-H-E-R என்று முனைந்து சொல் என்றார் அன்னை.
அடுத்த தாக்குதல் போது, தாக்குதல்தான் நினைவு வருகிறது. பயம் எழுகிறது. அன்னை பெயரைச் சொல்ல முடியவில்லை. முனைந்து வெற்றி பெற்றார். தம்மை நோக்கி வந்தவர், தம்மிடம் வாராமல் மாறிப் போவது சாதகிக்கு வியப்பான அனுபவம்.
அதன்பிறகு சாதகியை நோக்கி அவர் வருவதேயில்லை. அன்னையின் நாமம் சக்தி வாய்ந்தது. அதை உச்சரிக்கவும் மனோ சக்தி தேவை.
நாம் அன்னைக்குரியவர்
தற்கொலை செய்துகொள்ள ஒருவருக்கு உரிமையில்லை! அது உன் உயிரானாலும், அந்த உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை உனக்கில்லை எனச் சட்டம் கூறுகிறது.
ஒரு பக்தருக்குச் செல்வம் பெருகியது. தான தர்மங்கள் செய்தார். அவை ஏராளமாக வளர்ந்தன. அவர் தர்மம் செய்வதை ஒருவர் அன்னையிடம் புகழ்ந்து பேசினார். அதெல்லாம் என் பணம். எப்படி கொடுக்கலாம்? என்று அன்னை கேட்டார். நாம் எதையும் நம் பொருள் என்கிறோம். நம்மிடம் உள்ளவை எல்லாம் அன்னையின் பொருள்கள். உரிமையுடையவர் அன்னையே என நமக்குத் தோன்றுவதே இல்லை.
ஆன்மாவால் அன்னைக்கேயுரியவரானபின் தம் மனைவி மக்களை, உத்தியோகத்தை, சொத்துகளை அன்னைக்கே உரியவை எனக் கருதாத பக்தர் மனைவி மரணத்தின் வாயிலுக்கு வந்தார், பிரார்த்தனையால் பிழைத்தார். மகன் தொலைந்து போனான், பிரார்த்தனையால் கிடைத்தான். வேலை போயிற்று, பிரார்த்தனையால் வந்தது. சொத்துகள் போயின, பிரார்த்தனையால் கிடைத்தன. இவற்றை 10, 20 வருஷம் அனுபவித்தபின் அவர் உயிர் போயிற்று. பிரார்த்தனை காப்பாற்றியது. அத்தனை வருஷம் கழித்து “என் மனைவி, மக்கள், சொத்து, வேலை ஆகியவற்றை அன்னை எடுத்துக் கொண்டு மீண்டும் தம்முடையதாக எனக்குத் திருப்பிக் கொடுத்தார்” என்றார்.
ஆசிரமத்தில் ஒருவர் தம் குழந்தைகளை கம்பால் அடித்ததை அன்னையிடம் கூறியபொழுது, அன்னை அவரை அழைத்து, குழந்தைகளை அடிக்கக் கூடாது. அவை உன் குழந்தைகளில்லை. என் குழந்தைகள். பொறுப்பாகக் கவனிக்க உன்னிடம் கொடுத்திருக்கிறேன் என்றார்.
ஆசிரமத்துக் குழந்தைகள் நாங்கள் அன்னையின் குழந்தைகள் எனச் சந்தோஷமாகச் சொல்வதைக் காணலாம். அன்னை ஜடமான பொருள்களைக் கவனமாகப் பார்க்கச் சொல்கிறார். சொந்தக் குழந்தைகளை அன்பாக நம்மால் வளர்க்க முடிவதில்லை.
அன்னை போற்றும் முயற்சி
நாம் நோய் வந்துவிட்டது என்கிறோம். அன்னை, “நோயை நாம் அனுமதித்துவிட்டோம்” என்கிறார். வயால் அழுபவன் கோழை. வலியைப் பொறுத்துக் கொள்பவன் மனிதன். சாவைக் கண்டு பயப்படுதல், வலிபொறுக்காமல் அழுவது, போன்றவற்றை அன்னை என்றுமே ஆதரித்ததில்லை. கஷ்டம் வந்த காலத்தில் வீரமாகப் போராடுவதை அன்னை போற்றிப் புகழ்வதுடன், அருளை அபரிமிதமாகப் பொழிவார். பென்சிலின் ஷாக் வந்து இதயம் நின்ற பிறகு நான் சாகமாட்டேன் என மரணத்தோடு போராடியவரின் கதையை அன்னை புகழ்ந்ததுடன் அவரைப் பிழைக்கச் செய்தது Supremental power சத்தியஜீவியசக்தி என்றார். இதுபோன்று ஒரு சக்தியுண்டு, அன்னை என்றொருவர் உலகில் வாழ்கிறார் என்று அறியாமல் வீரமாகப் போராடும் மனப்பாங்கு உள்ளவருக்கும் அருள் செய்வது அன்னை சக்தி.