அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 13

ஆசிரம விளையாட்டு மைதானத்தில் மல்யுத்தம் பயின்றபொழுது ஒருவர் அடுத்தவரை பயங்கரமாகத் தாக்கியதால் அவர் விழுந்து கழுத்தெலும்பு முறிந்துவிட்டது. டாக்டர் அருகிலேயே இருந்ததால் உடன்வந்து முறிந்த எலும்பைச் சரிசெய்ய முயன்றார், முடியவில்லை. அத்துடன் இது போன்ற எலும்பு முறிவை நான் கண்டதில்லை. சென்னைக்கு specialist இடம் அழைத்துப் போ என்றார். இந்த எலும்பு முறிவைச் சரிசெய்யும் திறமையுள்ள டாக்டர் சென்னையில் இல்லை. போரில் சிக்கலான முறிவுகளைச் சிகிச்சை செய்த ஒருவர் இருப்பதை அறிந்து அவரிடம் சென்றார்கள்.

கழுத்துக்குக் கீழே உணர்ச்சியில்லை. 1 மாதம் காலம் traction கட்டிய கட்டுக்குள் அடிபட்டவரை வைத்தனர். சிறுநீர் கழிக்கவும் அவரால் முடியாது. ஒவ்வொரு முறையும் டாக்டர் உதவி தேவை. அந்த டாக்டரும் “இதுபோன்ற complex fracture முறிவை நான் பார்த்ததில்லை” என்றார். குணமானால், நெடுநாளில் குணமாகும் என்பதே அவருடைய அபிப்பிராயம். ஆனால் அடிபட்டவர் வெகு விரைவில் குணமாகிக் கொண்டு வந்தார். டாக்டருக்கு எதுவும் புரியவில்லை. “இதெல்லாம் நான் அறியேன் என்றார். ஏதோ சக்தி வேலை செய்கிறது. நான் அறிந்த மருத்துவத்தில் இவை இல்லை” என்றார்.

1 மாதத்தில் அவரைப் புதுவைக்கு அழைத்து வந்தனர். வயது 20உம் ஆகவில்லை. கழுத்தில் மாவுக்கட்டு. உடலில் உணர்வில்லை. 6 மாதத்தில் உட்கார முயலலாம் என்றனர் டாக்டர்கள்.

பாண்டிச்சேரி வந்ததிலிருந்து அன்னையைப் பார்க்க வேண்டும் எனப் பையன் சொல்லிக் கொண்டேயிருந்தான். அன்னை வந்தார். அடிபட்டவன் பூரித்து போனான். அன்னை புறப்பட்டபொழுது மீண்டும் எப்பொழுது வருவீர்கள் எனக் கேட்டான். உடல் முன்னேற்றமிருந்தால் வருவேன் என்றார் அன்னை.

அன்னை வருவது உடல் குணமாவதைவிட முக்கியமாகிவிட்டது. அன்னை வர வேண்டுமெனப் பையன் உட்கார முயன்றான். 6 மாதமாகும் என்று டாக்டர் சொல்லியபின் பகீரதப்பிரயத்தனம் செய்த பையனுக்கு அன்னை கங்கையாக அருளைப் பொழிந்தார். சில நாட்களில் பையனால் கொஞ்ச நேரம் உட்கார முடிந்தது.’ அன்னை தாம் சொன்னபடி வந்தார். உன்னால் சாப்பிட முடியும்பொழுது வருகிறேன் என்றார்.

உடல் உணர்வில்லை. விரல்கள் கூடவில்லை. எதையும் பிடிக்க முடியாது. இந்த நிலையில் பையன் முயன்றான். உடலால் முயன்றதை விட மனதாலும், மனத்தின் உறுதியாலும், ஆன்ம விழிப்பாலும் முயன்றான். அம்முயற்சி தெய்வீகமானது. அது அருளை அஸ்திவாரத்திலிருந்து எழுப்புவது. ஒரு நிமிஷம் விடாமல் முயன்றவன், முயற்சியின் திருவுருவமானான். ஒரு ஸ்பூன் சாப்பிட முடிந்தது. அன்னை வந்தார். நீ நடக்கும்பொழுது மீண்டும் வருகிறேன் என்றார்.

பெருமுயற்சியால் ஓரிரு அடி எடுத்து வைத்தான். அன்னை வந்தார். இனி நான் வரமாட்டேன் என்றார். நீ என்னை வந்து பார் என்றார். எப்படி முடியும் என்று அன்னையை ஆச்சரியமாகக் கேட்டான். உன்னால் நடக்க முடியும், என்னை டென்னீஸ் மைதானத்தில் வந்து பார் என்றார்.

புதுவை வந்த ஒரு மாதத்தில் பையன் ஓடினான். டென்னீஸ் விளையாடும்பொழுது அன்னை அவனை அருகில் பயிற்சி பெறவும், ஓடவும் சொன்னார்.

உடலால் செய்யும் முயற்சிக்குப் பலன் அதிகம். உணர்வால் முயல்வது கடினம். அதிகப் பலனுண்டு. மனம் முயல்வது என்பது வைராக்கியம், உறுதி. அன்னையின் அருளை அதிகமாகப் பெறுபவை அவை. ஆன்மாவின் முயற்சி என்பது பொறுமை, நிதானம். அதுவே மனிதன் அறிந்த நிலைகளில் முடிவானது. அன்னை இங்கிருந்து ஆரம்பிக்கின்றார்.

ஆன்மாவின் பொறுமையுடன் மனம் உறுதி பூண்டது அடுத்த கட்டம். ஆன்மாவின் பொறுமையுடன், மன உறுதியால் உணர்வைச் செயல்படுத்துவது அடுத்தது. பொறுமை, நிதானம், மன உறுதி, உணர்வின் முயற்சியோடு உடல் செயல்படுவது கடைசி நிலை. இவ்வாலிபனுக்கு நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எல்லாவித மனித ஒத்தாசையும், டாக்டர் உதவியும் அருளால் கிடைத்தன. அன்னையின் அருள் பூரணமாகச் செயல்பட்டது. அவனுடைய உறுதி, முயற்சி, அருளைக் கடைசிக் கட்டத்தில் செயல்படச் செய்தது. அன்னை சொல் பலிக்கும். நம்பிக்கை தவறாது. அருள் அழைக்காமல் செயல்படும் என்பதற்கெல்லாம் இந்நிகழ்ச்சி உதாரணம்.

மேடம் அலெக்ஸாண்டர்

இவர் அன்னையின் நண்பர். இந்தியாவில் அக்கறை கொண்டவர். Occult forces சூட்சுமச் சக்திகளின் செயல்களை அறிபவர். அவர் அலமாரியில் பொருள்கள் திடீரென்று மறைவதும், சில நாள் கழித்து மீண்டும் வருவதுமுண்டு. அன்னை புதுவை வந்து பிரான்ஸ் திரும்பிய பின் இவரிடம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிச் சொல்யிருக்கிறார். இந்திய வைஸ்ராயைப் பார்த்து புதுவை வர ஏற்பாடுகள் செய்து புதுவையில் ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்தார். அப்படியிருந்தும் சென்னை போலீஸ் அவரை விட்டு வைக்கவில்லை. புதுவையில் என்ன செய்தீர்கள் என்று அவரைச் சென்னையில் கண்டு போலீஸ் அதிகாரிகள் கேட்டனர்.

பகவானைக் கண்டு பேசியவர் அவருடைய அறிவின் ஆழத்தைக் கண்டு வியந்தார். அதைவிட ஸ்ரீ அரவிந்தருக்கு உடன் உள்ளவர் மீதுள்ள கட்டுப்பாடு அவரால் நம்பமுடியவில்லை. தத்துவம் பேசியபின் ஸ்ரீ அரவிந்தரிடம் “என் சொந்த விஷயம் பேசவேண்டும்” என நினைத்தார். ஆனால் அதை வெளியிடுமுன் ஸ்ரீ அரவிந்தர் ஆணையிட்டதுபோல் அங்கிருந்த 4 சாதகர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வெளியேறினர். அம்மையாருக்கு அது ஆச்சரியம்.

இவர் இமயமலைச் சாரலில் ஓர் ஆசிரமம் போன்ற நிறுவனம் ஏற்படுத்தினார். முதலில் அந்த ஊருக்குப் போனதும், காட்டினுள் சென்று தியானம் செய்ய விருப்பப்பட்டார். புலி உள்ள இடம் அது என்றார்கள். அவர் காதில் விழவில்லை. காட்டுக்குப் போனார். தியானம் செய்தார். கண் திறந்தபொழுது புலி வருவதைக் கண்டார். ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கண்ணை மூடினார். வெகுநேரம் கழித்துத் திறந்தபொழுது அங்குப் புலியில்லை.

1965இல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஆசிரமத்திற்குச் சிரமம் வந்தபொழுது மேடம் அன்னைக்குக் கடிதம் எழுதி நிலைமை எப்படியிருக்கிறது என்று விசாரித்தார்.

அன்னையின் நண்பர்கள் அவரை ஓவியராகவே அறிவார்கள். ஜப்பானில் அன்னைக்கு வேண்டியவர்கள் பலரிருந்தனர். அவர்களுடன் தாகூர் அங்கு வந்திருந்தபொழுது போட்டோ எடுத்துக் கொண்டார்.

அதன் பிரதியை ஒருவர் அன்னைக்குக் கொண்டுவந்த பொழுது 50 ஆண்டுக்குப் பின்னால், என்னிடம் அது உள்ளது என போட்டோவைத் தேடிக் காண்பித்தார்.

வக்கிரபுத்தி

கல்யாணத்திற்கு முதல்நாள் இந்தக் கல்யாணம் நின்றுவிட்டால் தேவலை என்று கூறும் பெண்ணையோ, பிள்ளையோ பற்றி நாம் என்ன சொல்வது? வக்கிரபுத்தி என்றுதான் கூறவேண்டும். நல்ல சொல்லை ஆயிரம் முறை சொன்னாலும் பலிப்பதில்லை. கெட்ட சொல்லை ஒரு தரம் சொன்னாலும் பலிக்கும். “தினமும் மனைவியுடன் சண்டை போட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்றவர் இரு ஆண்டுக்குப் பின் மணந்து, தம் சொற்கள் பலித்ததைக் கண்டார். ஒருவருக்குச் சூன்யம் வைத்துவிட்டார்கள். அவருக்கு மாடியிலிருந்து குதிக்கத் தோன்றியது, எலக்ட்ரிக் பிளக்கில் கை வைக்கத் தோன்றும், சூன்யம் இல்லாதபொழுது அதுபோல் தோன்றும் மனிதருண்டு.

ஆப்பரேஷன் செய்துகொள்ள ஆசைப்படுவார் என்று நம்பமுடியவில்லை. பலருக்கு இந்த ஆசையுண்டாம். அதுபோல் ஒரு சிறுபெண்ணுக்கு நீண்டநாளாக ஆசை. ஒரு சமயம் அடிபட்டு எலும்பு முறிந்தது. ஆசை பூர்த்தியாகப் போகிறது என்று குழந்தைக்குச் சந்தோஷம்.

அன்னையை உத்தரவு கேட்டார். அன்னை சம்மதம் தெரிவித்ததுடன் தினமும் ஒரு ரோஜா கொடுத்தனுப்பினார். வாழ்க்கை மனித அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் விதம் வேறு. அன்னை மனிதர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது வேறு. பரீட்சைக்கு படிக்கவில்லை என்பவருக்குப் படுக்கையாகும் வியாதி வந்து பரீட்சைக்குப் போக முடிவதில்லை என்றால் அவர் விருப்பத்தை வாழ்க்கை இவ்விதமாகப் பூர்த்தி செய்தது என்கிறோம். குழந்தை என்றாலே பிடிக்காதவருக்குக் குழந்தை பிறக்காமல் போவதுண்டு. பிறந்தால் அது குழந்தை செய்த பாவம்.

வருஷக்கணக்காக எந்த வேலையும் செய்யாதவர், 10 வருஷ சுகத்திற்குப்பின் என்னால் ஆளில்லாமல் முடியாது. எனக்கு வேலை செய்ய ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டார். நான்கு ஆண்டுகட்குப் பின் அன்னை அவர் கோரிக்கையை நிறைவேற்றினார். வேறிடம் போன பின் வாரம் ஒரு நாள் பாத்திரம் தேய்க்க வேண்டும், ஒரு நாள் சமையல் செய்யவேண்டும் என்ற நிபந்தனையுள்ள ஸ்தாபனம் அது. அவர் கேட்டதை அன்னை இதுபோல் பூர்த்திசெய்தார்.

ஆப்பரேஷன் செய்துகொள்ள இக்குழந்தைக்கு அன்னை அனுமதியளித்தார். சிறு குழந்தை என்பதால் பெற்றோர் ஆப்பரேஷனுக்குச் சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போடவேண்டும். பெற்றோர் நேரத்தில் வாராததால், ஆப்பரேஷன் தள்ளிப்போயிற்று. முறிந்த எலும்பை சோதனை செய்ததில், அது கூடிவர ஆரம்பித்திருந்ததால் டாக்டர்கள் ஆப்பரேஷன் கூடாது என முடிவு செய்தனர்.

அன்னை அனுதினமும் அனுப்பிய ரோஜா, எலும்பு முறிவை குணப்படுத்தியது. குழந்தையின் ஆப்பரேஷன் ஆசை தியேட்டருக்குப் போகும் அளவு பலித்தது! அன்னைக்கு விருப்பமில்லாததால், ஆப்பரேஷன் நடைபெறவில்லை. அன்னை கூடாது என்றதை செய்பவர்கள் பலர். அன்னை கூறிய எல்லையைக் கடந்தவுடன், பணம் வாராது, ஆள் கிடைக்காது, எதுவும் கூடி வாராது, மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதைப்போல் முயல வேண்டியிருக்கும்.

கொள்ளிவாய்ப் பிசாசு

கொல்லையில் வேலை செய்பவர்கள் மாலை வேளைகளில் கொள்ளிவாய்ப் பிசாசைக் கண்டேன் என அலறிப்புடைத்துக் கொண்டு வந்து, அதன் பிறகு அங்கு வேலை செய்ய வருவதில்லை.

கல்லூரி மாணவர் இரவில் எழுந்து உட்கார்ந்து நாய்போல், நரி போல் ஊளையிடுகிறார்.

எங்கள் சொந்த வீட்டில் குடியிருக்க முடியவில்லை. இரண்டு நாளாகக் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறது என்பதால் வீட்டை விட்டு வெளியேறினோம். பல வருஷமாக நாங்கள் திரும்பிப் போக முடியவில்லை என்பது புகார்.

எந்த டாக்டருக்கும் பிடிபடாத வயிற்றுவலி 8 வருஷமாக இருக்கிறது. வீட்டில் தகடு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

எந்த நல்ல செய்தி வந்தாலும் உள்ளேயிருந்து ஏதோ ஒன்று சிரிக்கிறது. அத்துடன் விஷயம் கெட்டுப் போகிறது.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் தூங்க முடிவதில்லை. கெட்ட சொப்பனம் வருகிறது. அதன்பின் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.

கணவன் இறந்தார் என்பதைச் சொல்லும்பொழுதும் உள்ளிருந்து சிரிப்பு வாய்வரைவந்து சிரித்தே விடுகிறது.

என்னைக் கூட்டிலிருந்து விலக்கிவிடுங்கள். நானிருக்கும்வரை கம்பனி உருப்படாது. எந்த நல்லது வந்தாலும் அதற்காக நாம் மெனக்கெட்டு, செலவு செய்யும்வரை நான் பார்த்துக் கொண்டிருப்பேன். இனி வரவு வேண்டும் என்ற சமயம் அதைத் தடுக்கவேண்டும் என்று உள்ளிருந்து குரல் எழும். அது தடைப்பட்டுவிடும். நான் இனி இங்கு இருக்கக்கூடாது.

அன்னை படத்தைக் கொல்லையைச் சுற்றி எடுத்துப் போன பின் கொள்ளிவாய்ப்பிசாசு போய்விட்டது. Blessing packet ஊளையைத் தடுத்து நிறுத்தியது. வீட்டில் உள்ள தகடு பிரார்த்தனையால் அகன்றது. டாக்டருக்குப் பிடிபடாத வியாதியைக் கொடுத்த நல்லவர் மனம் மாறியபின் வயிற்றுவலி போய்விட்டது. உள்ளே சிரிப்பதை அகற்ற வேண்டும் என்ற பிரார்த்தனை ஒருவருக்கு 2 வருஷத்திலும், அடுத்தவருக்கு உடனேயும் பலித்தது. சாமந்திப் பூ கெட்ட சொப்பனம் போகும் அளவுக்குத் தெம்பு கொடுத்தது. உள்ளதைப் பேசியவரை விட்டு தீய சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அகன்றது.

இப்படிப்பட்டவர்கள் திருவுருமாற்றம் அடைய என்னிடம் வருகிறார்கள் என்று அன்னை கூறுகிறார்.

அன்னை பேரால் சொல்கிறேன் வெளியே போ என இந்தச் சக்திகளிடம் கூறினால் அவை எழுந்து வெளியே போவது தெரியும். தெரியாவிட்டால், போய்விட்ட பிறகு தெரியும்.

புகைப் பிடித்தல்

யோகத்தை ஏற்க அன்னை நாம் விலக்க வேண்டும் என்று கூறுபவை 4.

1. அரசியல் 2. தாம்பத்ய உறவு 3. புகைப்பிடிப்பது 4. மது.

பொதுவாக அன்னையை நாடி வருபவர்களில் 90% மேல் புகைப் பிடிப்பதில்லை. அதனால் அவர்கட்குச் சிரமம் இருப்பதில்லை.

முதல் முறை ஆசிரமம் வந்து போனவுடன் நம்மையறியாமல் பல மாறுதல்கள் ஏற்படும். பேச்சு அளவு கடந்து குறையும். கோபம் மறையும் அல்லது அதிகமாகும். புகைப் பழக்கமிருந்தால் மறைந்து போகும்.

தினமும் போடும் சண்டை நம் வீட்டை விட்டே போய்விடும். நம்மையறியாமல் சுத்தம் அதிகரிக்கும். இருவர் என்னிடம் வந்து இன்று எனக்கு 30 வயது பூர்த்தியாகிறது. பொய் சொல்வதை நிறுத்த விரும்புகிறேன் என்றனர்.

ஸ்ரீ அரவிந்தர் சுருட்டு புகைப்பார். அன்னை ஒரு முறை புகை முகத்தில் பட்டவுடன் முகத்தைச் சுளித்தார். ஓகோ, இப்புகை பிடிக்கவில்லையா? என்றவர் அதன்பின் சுருட்டை விட்டுவிட்டார்.

சாக்கலேட், ஐஸ்கிரீம், சூயிங்கம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுபவர் விட முடிவதில்லை. அவர்கள் விதம், பாணி பல.

1925இல் சிகரெட் பழகியவருக்கு அன்னையைப் பார்க்க விருப்பம் ஏற்பட்ட பின் சிகரட் தடை என அறிந்தார். அவர் ஊருக்கு வந்த ஆசிரமவாசி புகைபிடிப்பவர்கள் ஆசிரமத்தினுள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

பத்து வருஷப் பழக்கத்தை விட முடியாமல் திணறியவர் ஒருநாள் அதிகமாகச் சிகரட் புகைத்துவிட்டு அன்னை படத்திற்கு வணங்கி, இப்பழக்கம் அடியோடு போக அனுக்கிரஹம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

மறுநாளிலிருந்து அவருக்கு சிகரட் நினைவே வரவில்லை. பிறகு ஆசிரமம் வந்தபொழுது அன்னை சட்டத்தைக் கேள்விப்பட்டார். ஆசிரமவாசிகள் சிகரட் பிடிக்கக் கூடாது என்பதை அந்த சாதகர் சிகரட் பிடிப்பவர்கள் ஆசிரமத்திற்குப் போகக்கூடாது என்று தவறுதலாகச் சொல்லியதில் தாம் பெரிய முயற்சி செய்து அதிலிருந்து விடுதலை பெற்றேன் என்றார்.

ஈஸனோபீலியா

நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி. ஆஸ்த்மா, T.B. போல் தொந்தரவு செய்யாது. ஆனால் எளிதில் குணமாகாது. 2½% தான் அதற்கு லிமிட். அதற்கு மேல் போனால் மூச்சடைக்கும். தூங்க முடியாது. சிரமமம் கொடுக்கும்.

ஒரு பக்தருக்கு 2½% இருக்க வேண்டியது 65% ஆகி, படுத்த படுக்கையாகிவிட்டார். தூங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. மூச்சுவிட முடியவில்லை. வேதனை. படுக்கவும் முடியவில்லை. வைத்தியம் நடக்கிறது. உடல் மெலிந்துவிட்டது. எழுந்து நிற்க முடியவில்லை. நடந்து பாத்ரூம் போவது நினைக்கவும் முடியாத ஒன்று; ஆறு மாதமாவது ஆகும் என்பது டாக்டர்கள் அபிப்பிராயம்.

அறையில் அன்னை படம் மாட்டியிருக்கிறது. அன்னையிடம் வேண்டாத நேரமில்லை. பலன் இல்லை. ஒரு நாள் கண்ணீர்விட்டு உருகி வேதனையுடன், என் விதவைத் தாய்க்கு நான் ஒரே மகன், நான் படும் வேதனை அதிகம்; என் தாயின் துயரம் அதிகம். ஏன் என்னை இப்படியே வைத்திருக்கிறீர்கள்? குணப்படுத்தக்கூடாதா? என்று அன்னையைக் கேட்டார்.

அன்று தூங்கிவிட்டார். கனவில் தான் ஆசிரமத் தியான மண்டபத்திலிருப்பதாகக் கண்டார். அன்னை படிக்கட்டில் இறங்கி வருகிறார். அவரைக் கட்டி அணைத்துக் கொள்கிறார். ஆனந்த பரவசத்தில் தம்மை மறந்தார். அன்னை மறைந்தார். ஏன் என்னைவிட்டுப் போனீர்கள் என அழுதார். கனவு கலைந்தது, எழுந்தார். பாத்ரூம் போக நினைத்தார். மனைவியை எழுப்பலாமா என்ற நினைவு வந்தவுடன், நடந்து பார்ப்போம் என நடந்தார். முகம் அலம்பினார், திரும்பி வந்து படுத்துத் தூங்கிவிட்டார், காலையில் மனைவி எழுப்பினார். நான் பிடித்துக் கொள்கிறேன். நடந்து வாருங்கள் என்றார். தாம் எழுந்து நடந்ததைச் சொல்லவே மனைவியால் நம்ப முடியவில்லை. டாக்டரை அழைத்தார்.

டாக்டரிடமும் அதையே சொன்னார். நடந்தது உண்மையானால் நடங்கள் பார்க்கலாம் என்றார். நடந்தார். இந்த நிலையில் எப்படி நடக்க முடிகிறது என்றார். தாம் கண்ட சொப்பனத்தை டாக்டரிடம் சொன்னார்.

டாக்டர் படத்தை வணங்கினார்.

அது தெய்வசக்தி.

இந்நிலையிலுள்ள ஒருவரை நடக்க வைப்பது தெய்வசக்தியே; என்றார் டாக்டர். மனம் மருந்தையும், டாக்டரையும் நம்பும்வரை பலனில்லை.

அன்னையை மட்டும் நம்பியவுடன் பலன் வந்தது.

மனம் மருந்தைவிட்டு அன்னையை நாடியவுடன், தீராத வியாதி தீர்கிறது.

பிரார்த்தனையும் தியானமும்

அன்னை எழுதியவற்றுள் முக்கிய நூலாகும். தினமும் டைரியில் எழுதியவை இவை. 1912இல் ஆரம்பித்து இடைவெளிவிட்டு எழுதப்பட்டன. பகவானைப் பார்த்த மறுநாள் அன்னை எழுதியது.

“உலகில் அந்தகாரத்தில் ஆயிரம் பேரிருந்தாலும்

கவலையில்லை. நேற்று நான் கண்டவர் இருக்கும்வரை

சத்தியம் ஜெயிக்கும் என்பது உறுதி”.

வேறோர் இடத்தில், மனிதனுக்காக அன்புடன் நான் செய்த சமையலை அவன் மறுத்ததால் இறைவனுக்கு அதை அளித்தேன் என்று எழுதியுள்ளார்.