ஆப்பரேஷன்
நாம் அன்னையின் ஓர் அம்சத்தை அறிவோம். ஸ்தூல உலகிலும், சூட்சும உலகிலும், காரண லோகத்திலும் அன்னை மனம், உணர்வு, உடல், ஆன்மா ஆகிய எல்லா நிலைகளிலும் நேரத்திற்கேற்றவாறு செயல்படுகிறார். நாம் பொதுவாக அன்னையைத் தெய்வமாக மட்டும் காண்கிறோம், அதுவும் பிரார்த்தனையைப் பூர்த்திசெய்யும் தெய்வமாகக் காண்கிறோம்.
- கம்பளியின் குரல் கேட்டு நிற்கும்பொழுது அவர் சூட்சும கரணங்கள் செயல்படுகின்றன.
- விநாயகர் அன்னை முன் வரும்பொழுது அன்னை தெய்வலோகத்தில் (overmind) இருக்கிறார்.
- கருநாகம் அன்னையை நாடிவரும்பொழுது, விஷஜந்துவின் வித்தான சத்தியம் அன்னையை அறிந்து வணங்க வருகிறது. அந்நேரம் அன்னை லோகமாதா.
- முருகன், அம்மன், சிவன் ஆகியவரை வழிபடுபவர் பிரார்த்திக்கும்பொழுது அவர்கள் நம்பிக்கையான உணர்வு மண்டலத்திலிருந்து (vital world) அருள் புரிகிறார்.
- பால்கனியில் நின்று தரிசனம் தரும்பொழுது ஸ்ரீ அரவிந்தரின் சக்தியாக இருக்கிறார்.
- அன்னையை அறியாதவர் அபயக்குரலுக்கு பதில் கூறும்பொழுது Supramental force சத்தியஜீவியமாக இருக்கிறார்.
இத்தனையும் எப்பொழுதும் சேர்ந்ததே அன்னை என நாம் அறிவது அன்னை ஞானமாகும்.
குளோரபாரம் கொடுத்து ஆப்பரேஷன் செய்யும் நாளில் டான்சில் ஆப்பரேஷனுக்கு முன் 3 இன்ஜெக்ஷன் போட்டார்கள். இன்ஜெக்ஷன் வலி அதிகம். பையன் மயக்கமடைந்துவிட்டான். மயக்கம் போட்டபின் ஆப்பரேஷன் செய்யமுடியாது.
மயக்கத்தின்போது அன்னை தம் இருகைகளாலும் அவன் தலையைப் பிடித்துக்கொண்டிருந்ததை அவன் “கண்டான்”. அவன் தலை அன்னை மடியிலிருந்தது.
டாக்டர்கள் அவன் மயக்கமாக இருக்கிறான் என்றபொழுது அவன் அன்னையைக் காணும் அளவுக்கு உள்ளே விழிப்புடனிருக்கிறான்! மயக்கம் தெளிந்து ஆப்பரேஷன் நடந்தது.
வீட்டிற்கு எடுத்துப் போனபின், படுக்க வைத்தார்கள். அன்னை தம் மடியிலிருந்து அவனை விடுவித்ததைக் “கண்டான்”. அதன்பிறகு அன்னை மறைந்தார்.
நாம் அழைத்து அன்னை வருவது நம் நம்பிக்கையால் நடப்பது. நாம் அழைக்காமல் அன்னை வருவது அருள். அருளின் செயல் 100%, நம்பிக்கை 99% பலிக்கும். நம்மை அறியாமல் அன்னை மற்றவர்கள் மூலமாகச் செயல்படுவது அருட்சூழலின் செயலாகும்.
பால்கனி தரிசனம்
ரிஷிகள் மனிதனை ஜீவாத்மா என்றனர். எனவே தவம் செய்து ஜீவாத்மாவை வாழ்விலும், பிறவியிலுமிருந்து பிரித்து பரமாத்மாவிடம் சேர்த்து முக்தி பெற்றனர். ஸ்ரீ அரவிந்தம் ஜீவாத்மாவே பரமாத்மா என்று கூறி, சரணாகதியால் ஜீவாத்மா பூவுலகிலேயே பரமாத்மாவாகி, இறைவனின் திருவுள்ளம் பூர்த்தி பெற முயல்கிறது.
இதை மனிதனுக்குச் சாதித்து தர அவதாரமெடுத்தவர் அன்னை. அன்னையை அறிவது பாக்கியம். ஏற்பது அதிர்ஷ்டம். அன்னைக்கேயுரியவராவது யோகசித்தி. பொதுவாக அறிவதற்கும் ஏற்பதற்கும் இடையே பல ஆண்டுகளிருப்பதுண்டு. ஏற்பதைக் கடப்பது அரிது.
1936இல் ஸ்ரீ அரவிந்தர் வரலாற்றைப் படித்தவர், அந்நூலிலுள்ள ஸ்ரீ அரவிந்தர் படத்தால் காந்தம்போல் கவரப்பட்டு தாம் ஆசிரமம் வரவிரும்புவதாக ஒரு கார்டு எழுதினார், பதிலில்லை.
அன்னையும் சமாதியானபின் அவர் முதன்முதலாக ஆசிரமம் வந்தார். 40 வருஷத்திற்குமுன் விழித்த ஆத்மா தம் விழிப்பின் பலனை ஒரு மாதம் புதுவையிலிருந்து அனுபவித்தார். அவர் ஆத்மா நிறைவுற்றது. ஊர் திரும்பினார்.
- வந்தவர் சமாதிக்குப் போனவுடன் 3 மணி நேரமாகியும் தியானம் கலையவில்லை எனக் கண்டார்.
- புதுவையும், ஆசிரமமும், புண்ணிய பூமி, புனித ஸ்தலம் என்பதை அவர் நாடி நரம்புகள் சொல்லாலும், சுவையாலும், ஸ்பர்சத்தாலும் உணர்த்தின.
- பால்கனியில் அன்னை தரிசனம் தந்ததாகக் கேள்விப்பட்டார். புதுவை வீதிகளில் அவர் நடமாடும்பொழுது தெருக்களில் அன்னை “பால்கனி தரிசனம்” தருவதைக் “கண்டார்”.
- எல்லா இடங்களிலும் அவர் கண்டது அன்னை தரிசனமே.
- புதுவையிலிருந்த 1 மாதமும் சமாதியில் பல மணி நேரம் தியானத்திலாழ்ந்து தன்னை மறந்து, ஆத்மாவை நிரப்பினார்.
- ஊர் திரும்பியபின் இதுவரை சென்ற மற்ற தலங்களையும், ஆசிரமங்களையும் மறந்துவிட்டார்.
- டெல்லி ஆசிரமத்தில் தினமும் பல மணி செலவிட்டார்.
- இன்று தம்மூரில் உள்ள ஆசிரமச் சென்டரில் தங்கியுள்ளார்.
1936இல் வரலாறும், திருவுருவப்படமும் தீட்சை அளித்தன. இரண்டாம் முறை சமாதி தரிசனம் தீட்சைக்குச் சித்தியளித்தது. அடிக்கடி அவர் சமாதிக்கு வருவது அவர் “யோகத்”தின் சிறப்பான தருணங்களாகும்.
மகிழம்பூ
அன்னைக்கு மலர் எடுத்து வந்த குழந்தைகள் அன்னை வர நேரமாகும் என்பதால், மலர்களை வைத்துவிட்டுப் போய்விட்டனர். மறுநாள் அக்குழந்தைகளை அன்னை கண்டபொழுது ரிஷிகளும், தெய்வங்களும் எனக்காக காத்திருக்கும்பொழுது, உங்களுக்கு அவசரமா எனக் கேட்டார்.
மகிழம்பூவிற்கு அன்னை பொறுமை எனப் பெயரிட்டுள்ளார். இம்மலர்களை அன்னை கையால் பெறுவது அம்மலரின் சக்தியை அதிகரிக்கும். 1958க்கு முன் அன்னை டென்னீஸ் மைதானம், சாதகர்கள் வீடுகள், தியான மண்டபம், ஆசிரமத் தொழிற்கூடங்களுக்கு வருவதுண்டு. அது சமயம் நேரம் அறிந்து சாதகர்கள் தரிசனம் பெறுவதுண்டு. அந்நேரம் சாதகர்கட்கு வேலை நேரமானால், வேலை தரிசனத்தைவிட முக்கியம் என்பது அன்னை சட்டம்.
தினமும் காலை 9½ மணிக்கு அன்னை மாடியிலிருந்து கீழே வரும்பொழுது சாதகர்களில் சிலர் தியான மண்டபத்திலிருந்து தரிசனம் பெறுவர். அதற்கு யாரெல்லாம் வரலாம் என அன்னை முன்கூட்டி அனுமதி வழங்கியுள்ளார்.
ஒரு நாள் காலையில் அன்னை 9½க்கு வரத் தாமதமாயிற்று. அனுமதிபெற்ற சாதகர் தம் வேலைக்குப் போகும் நேரமாய்விட்டது. தரிசனத்தைவிட முடியவில்லை. வேலைக்குத் தாமதமாக்க முடியாது. சாதகி தவித்தார். “ஏன் தாமதம் செய்கிறீர்கள் அன்னையே, உடனே வாருங்கள்” என மனத்தால் அழைக்க ஆரம்பித்தார்.
அடுத்த நிமிஷம் அன்னை இறங்கி வந்தார். நேரே இந்த சாதகியிடம் சென்றார். “உனக்குப் பொறுமை வேண்டும். நான் தர விரும்புகிறேன்” என்று கூறி கை நிறைய மகிழம்பூவை அப்பெண்ணுக்கு அளித்தார்.
இதுபோன்ற இக்கட்டான நிலையே அன்னையிடம் நம் முடிவை விடுவதற்கு சரியான நேரம். மனம் ஒருபுறமாக முடிவெடுக்க வல்லது. இருந்து அன்னையைத் தரிசிக்கலாம். அல்லது வேலைக்குப் போகலாம். இரண்டுக்கும் பொதுவான முடிவை மனம் அறியவல்லதன்று. மனம் தன் முடிவை விட்டுக்கொடுத்தால், அன்னை தம் முடிவை செயல்படுத்துவார். இக்கட்டான நிலையில்,
தவிப்பதற்குப் பதிலாக, மனத்தை விலக்கி முடிவை அன்னையிடம் விடுவதை அன்னை sincereity உண்மை எனக் கூறுகிறார்.
கனவில் கண்ட புடவை
கனவுகள் பல வகையின
- பகலில் நடந்தவை கனவாக இரவில் வருவது.
- மனத்தின் ஆழத்தில் பதிந்தவை வேறு ரூபமாகக் கனவாக எழுவது.
- நம் சொந்த எண்ணங்கள் தலைகீழாக மாறி கனவாவது.
- கற்பனைக் கோட்டை கனவில் உருவாவது. இந்தக் கனவுகட்கு அர்த்தமில்லை. இப்படிப்பட்டவர்களை நாம் கனவுலக சஞ்சாரிகள் என்கிறோம்.
அடுத்த வகை கனவுகள்
- எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் கனவுகள். சில சமயங்களில் இவை பலிக்கும்.
- ஆழ்ந்த அபிலாஷைகள் பூர்த்தியாகுமுன், கனவாக வரும். இவை பெரும்பாலும் பலிக்கும்.
- தெய்வ அனுக்கிரஹம், குருவின் ஆசி கனவில் தோன்றுவது. இவை ஒன்றிரண்டு தவிர மற்றவை அனைத்தும் பலிக்கும்.
- பக்திமான்கட்கும், மகான்கட்கும் எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள். இவை தவறாது பலிக்கும். நாம் விலகிப் போனாலும் நம்மை விடாது.
அடுத்த மாநிலத்தில் வசித்த பக்தை ஒருவர் கனவில் தாம் அன்னையைத் தரிசிப்பதைக் கண்டார். தம் குடும்பத்துடன் அன்னையைத் தரிசிப்பதாகவும், அன்னை அழகான சில்க் புடவை அணிந்திருப்பதாகவும் கண்டார். கனவில் கண்ட அதே புடவையை வாங்கி அன்னைக்குக் காணிக்கையாக்க முடிவு செய்தார்.
கடைக்குப் போய் அதே புடவையைத் தேடினார். கிடைக்கவில்லை. வேறு கடையில் அதே டிஸைன் உள்ள புடவை கிடைத்தது. வாங்கிக்கொண்டார். தரிசனத்திற்கு அனுமதி வேண்டி எழுதிப் பெற்றார். தரிசனம் தம் குடும்பத்துடன் பெறப்போகும்பொழுது, தாம் கனவில் கண்ட இதர உறவினர்களும் தற்செயலாய் ஆசிரமம் வந்துள்ளதைக் கண்டார். அவர்களும் தரிசன அனுமதி பெற்று, இக்குடும்பத்துடன் அன்னையிடம் வந்தது, இவருக்குக் கனவின் உண்மை புரிந்தது.
- கனவுக்கு உண்மையில்லை. அதை நம்புவது அறிவீனம்.
- கனவுக்கு உண்மையுண்டு. அதை நம்பிச் செயல்பட்டால் கனவில் கண்டது அத்தனையும் பலிக்கும்.
- முதலில் கூறியது வாழ்வுக்குரிய கனவுகள். இரண்டாவது உண்மையுள்ள கனவுகள்.
- கனவு உள்பட அனைத்தும் அன்னை விஷயத்தில் முழு உண்மை.
பிழை
தெய்வம் தன் கையால் பிழை செய்து அறியாதோ? என நாம் நினைப்பதுண்டு. அப்படி நிகழும் பிழையில் எதிர்காலத்திற்குரிய செய்தி ஒன்றிருக்கும் என்பது ஆன்மீக உண்மை.
Gary என்பவர் பிறந்தநாள் கார்டு பெறும்பொழுது அன்னை அங்கு Garry என எழுதியிருப்பதைக் கண்டு, அதுமுதல் தன் பெயரை மாற்றி Garry என அமைத்துக்கொண்டார்.
September 10 பிறந்தநாள் உள்ளவர்க்கு அன்னை அனுப்பிய கார்டில் November 10 என எழுதியிருந்தது. கை தவறி எழுதினீர்களோ என அவர் அன்னைக்கு எழுதிக் கேட்க விழைந்தார். ஆனால் கார்டு பெற்ற நாள் முதல் உள்ளே பல புதியவை நிகழ்வதைக் கண்டார். அவற்றுள் முதன்மையானது சந்தோஷம் துளிர்விட்டதாகும்.
உடல் சூட்சுமமாக உள்ளவர்க்கு அன்னையின் ஆசி, அனுக்கிரஹம் உடலையே எட்டி அணுவில் வெளிப்படும். அன்னையின் தரிசனம் அதுபோன்றவர் உடலை முழுவதும் கரைத்ததுண்டு.
September 10 முதல் November 10வரை உள்ளே ஆன்மீக எழுச்சி ஏற்படுவதை பக்தரால் உணரமுடிந்தது. அது மென்மையாக இருந்தது. நாளுக்கு நாள் வளர்ந்தது.
இதற்கிடையில் ஐயத்தை அன்னையிடமே எழுதிக் கேட்டார். அன்னை நவம்பர் 10 என்பதை கோடிட்டு வலியுறுத்தி, மார்ஜினில் X குறியிட்டு நவம்பர் 10இன் சிறப்பை எழுத்தால் விளக்காமல், செயலால் சுட்டிக்காட்டியிருந்தார்.
இக்கடிதம் அவரை மேலும் உடலில் விழிப்படையச் செய்தது. தன் அறைக்குப் போய் அமைதியாக உட்கார்ந்தபொழுது அன்னையின் அமைதி உடலெல்லாம் பரவி அணுக்களை அடைந்து, அவற்றை விழிக்கச் செய்து, ஸ்தூல உடல் கரைவதைக் கண்டார். ஸ்தூல உடல் இவ்வனுபவத்தால் ஒளி பெற்றது.
“எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. நடப்பவற்றிற்கெல்லாம் காரணம் உண்டு. பெற்ற ஆன்மீக அனுபவத்தை உடலில் இருத்தி புது வாழ்வு பெறுதல் சரி” என்று அன்னை தம் பதிலைக் கூறியிருந்தார்.
- நம் பிரார்த்தனை பலித்தால் அது அருள் என்கிறோம்.
- பிரார்த்தனை தவறினால் அதுவும் அருளல்லவா?
- அம்மனநிலை அன்னைக்குரிய மனநிலை.
- தெய்வம் தவறு செய்யுமா எனக் கேட்பதைவிட, தெய்வம் செய்த தவற்றில் உள்ள சத்தியம் எது, அதன்மூலம் என் ஆன்மாவுக்குரிய செய்தி என அறிவது
ஆன்மீக விழிப்புணர்வாகும்
கடிதம், தந்தி, விலாசம்
அன்னைக்கு கடிதம் எழுதினேன், போய்ச் சேரவில்லை, பதில் வரவில்லை என்பது அரிபொருளான குறை. மனம் அன்னையிடம் லயித்திருந்தால், கடிதம் தானே போய்ச் சேரும். அதில் ஐயமேயில்லை. ஆனால் கடிதத்தில் விலாசத்தை விவரமாக எழுதவேண்டும். அத்துடன் அதை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பவேண்டும் என்ற விதிமுறைகளை அன்னை கடைப்பிடித்திருக்கிறார், சாதகர்கட்கு வலியுறுத்தியுள்ளார். அன்னை சட்டம் செயல்படும் இடங்களில் முரணான இரு விஷயங்களிருக்கும்.
- விலாசம் விவரமாகத் தெளிவாக எழுதப்பட்டு, தபால் ரிஜிஸ்டர் செய்யப்படவேண்டும்.
- விலாசம் முழுமையாக இல்லாவிட்டாலும் மனம் நிறைவாக இருந்தால் கடிதம் போய்ச் சேரும்.
இரண்டாம் நிபந்தனையை முழுமையாக மனதால் ஏற்று, செயலில் முதல் நிபந்தனையைப் பூர்த்திசெய்தல் பக்தனுக்குரிய பாங்கு. சில அனுபவங்கள்,
- என் விலாசத்தை விவரமாக எழுதி, முடிவாகப் பாண்டிச்சேரி என்பதற்குப் பதிலாகச் சென்னை என எழுதப்பட்ட கடிதம், மறுநாளே சென்னையிலிருந்து வந்தது.
- அன்பருக்கு centre விலாசத்திற்கு எழுதிய கடிதம் கிடைக்கவில்லை. போஸ்ட்டாபீஸிலும் போய்த் தேடிக் கிடைக்கவில்லை.
- முக்கியமான கடிதத்தை அன்பர் கொடுத்த விலாசத்திற்கு அனுப்பியது கிடைக்கவில்லை. அன்பர் “என் விலாசத்தின் பகுதியை மட்டும் எழுதினேன்” என்றார்.
- பெயரும், பாண்டிச்சேரி எனவும் எழுதப்பட்ட கடிதங்கள் சில அன்பர்கட்குத் தாமதமாகக் கிடைத்துள்ளன.
ஒரிசாவிலிருந்து அன்னை தரிசனம் வேண்டி கடிதம் எழுதியவருக்கு அன்னை அனுமதி அளித்தார். அதைத் தந்திமூலம் அனுப்பியவர், அன்பர் பெயரையும், அவர் கிராமத்துப் பெயரையும் எழுதி அனுப்பினார். அதே பெயருள்ள கிராமம் ஒரிசாவில் மூன்றுள்ளன. ஆனால் தந்தி எப்படியோ அன்பரை அடைந்துவிட்டது. தரிசனம் பெற உதவியது.
அன்னையுள்ள இடத்தில் மனம் நிறையும்.
மனம் நிறைவான இடத்தில் அன்னை இருப்பார்.
மனம் நிறைந்து அன்னையை அழைத்து செயலைப் பூரணமாகச் செய்தால் தோல்விக்கு வழியுண்டா? அவ்வாழ்வுக்கு அதிர்ஷ்டம் எனப் பெயர்.
சூட்சுமச் சூழல்
நாம் பிரார்த்தனை செய்யும்பொழுது பலன் தெரிகிறது. அத்துடன் சூழல் பிரகாசமாவதையும் காணலாம். இச்சூழலில் அதற்குரிய தெய்வங்கள் பல சமயங்களில் வரும். சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு அத்தெய்வங்களோ, தேவதைகளோ தெரியும்.
பல வருஷம் கருத்தரிக்காதவர் கனவில் வெண்மையான தெய்வம் தோன்றியது. அவர் கருத்தரித்தார். சில ஆண்டுகட்குப்பின் இவர் ஸ்ரீ அரவிந்தர் படத்தைக் கண்டபொழுது கனவில் கண்ட தெய்வம் அதுவே என உணர்ந்தார். நல்ல தேவதைகள் சூழலில் உள்ளன. அன்னை ஒருவருக்கு அனுக்கிரஹம் செய்யும்பொழுது இவர் மூலமாகச் செய்வதுண்டு, நேரடியாகவும் செய்வதுண்டு. ஆபத்து, கஷ்டம் வரும்பொழுது சூழல் கறுத்துப்போகும். அதுசமயம் கறுப்பான சூழலுக்குரிய தேவதைகள் வந்து செயல்படும். அன்னையின் அருள் நம்மை நாடி வரும்பொழுது நல்ல தேவதைகள் முன்வந்து அவ்வருளைத் தங்கள் மூலம் கொடுக்கும்படியும் அன்னையைக் கேட்பதுண்டு.