அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 17

மேல்நாட்டார் இவ்வுலகங்களை நம்புவதில்லை. நம் நாட்டிலும் படித்தவர்கள் இவற்றைக் கருதுவதில்லை. அறியாமையை 7 நிலைகளாக ஸ்ரீ அரவிந்தர் பிரித்து அதில் நம் நிலையை psychological Ignorance உணர்ச்சியின் அறியாமை என்கிறார். நம்முள்ளும், சூழ்ந்தும் உள்ள ஆவி உலகம், தெய்வலோகம், தேவதை உலகங்களை அறியமுடியாதது இவ்வறியாமையாகும். மாதச் சம்பளம் பெற்றவர் 2 ஆண்டுகளில் 8 லட்சம் சம்பாதித்தார். இவர் சூழலில் லக்ஷ்மி இருக்கிறது. இவருடன் தொடர்புள்ளவர்கட்கு அதன் கடாட்சம் உள்ளது என்பது சூட்சுமமானவர்க்கே தெரியும்.

விளையாட்டு மைதானத்தில் அன்னை தியானம் நடத்தினார். மேகம் இருண்டு வந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. தியானம் முடிந்தவுடன், மழை கொட்டியது. ஒரு சாதகரின் தியானத்தில் திடீரென பிரகாசம் தோன்றியது. அங்கு ஒரு தெய்வம் போன்ற உருவம் கதாயுதத்துடன் வந்தது. தியானம் முடியும்வரை இருந்து பின் போய்விட்டது.

அச்சாதகர் தியானம் முடிந்தவுடன் அன்னையிடம் தாம் கண்டதைக் கூறி விளக்கம் கேட்டார். அன்னை, “அத்தெய்வம் இந்திரன், மழைக்குரிய தெய்வம்” என்றார்.

தியானத்தின்போது மழை வரக்கூடாது எனப் பலரும் பிரார்த்தனை செய்ததால் இந்திரன் வந்து தியானம் முடியும்வரை மழையை நிறுத்தி அன்னைக்குச் சேவை செய்கிறான்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் அன்பர்கள் வாழ்வில் அடிக்கடி நடக்கின்றது. சூட்சுமப்பார்வை உள்ளவர்கள் மட்டும் அதைக் காண்கிறார்கள். வெளியில் சொல்ல பலர் கூச்சப்பட்டுக்கொண்டு சொல்வதில்லை. சிலர் எழுதுகிறார்கள், மற்றவர்களிடம் கூறுகிறார்கள்.

தேள் கொடுக்கு

பணத்தையோ, பொருள்களையோ பத்திரமாக வைக்கத் தெரியாதவர்கட்கு அவை தொலையும், கிடைக்காது. அவர்கட்கு கவனம் வரும்வரை பொருள்கள் தொலைந்தபடியிருக்கும். தொலைவது நிற்காது. இவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது, செய்தால் பலிக்காது.

நாமறிய முடியாத இடங்களில் உள்ள ஆபத்தை தாமே வலியவந்து விலக்கும் அன்னை, பொறுப்பற்றவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை விலக்க முன்வருவதில்லை.

கைச்செலவுக்கு 1500 ரூபாய் பணம் பெற்ற பையன் மேஜைமீது அதை வைத்துவிட்டு மறந்துபோய் மாலையில் வந்து பணம் அங்கேயே இருப்பதைக் காண்கிறான். அவன் தவற்றை உணர்வதில்லை. அடுத்தமுறை அதேபோல் பணத்தை வாங்கி, பனியனுள் வைத்துக்கொண்டு போகிறான். பாதிப்பணம் நழுவி விழுவதைக் காணமுடிவதில்லை. இவை பொறுப்பற்ற குணம், திறமையில்லாத பழக்கம், அலட்சியம்.

இவன் பர்ஸில் 1200 ரூபாயும், வாட்சும் எங்கேயோ வைத்துவிட்டு எப்படிப் போயிற்று என்று புலம்புகிறான். “பொறுப்பற்ற உனக்குப் புலம்பும் உரிமையில்லை” என உடனுள்ள நண்பர்கள் கூறுகிறார்கள். வீடு பெருக்கும் பையன்தான் திருடியதாக நினைக்கிறான். அதைக் கேட்டவர், “உனக்குத் திறமையில்லை, பொறுப்பில்லை, அதனால் எவர்மீதும் குறை கூற உரிமையில்லை” என்று கூறியது அவன் எரிச்சலைக் கிளப்பியது.

அவனே யோசனை செய்து பார்த்தபொழுது இதுவரை பலமுறை பல பொருள்கள் தொலைந்துள்ளன. சிலவற்றை வேலைக்காரர்கள் பார்த்து எடுத்துவந்து கொடுத்தனர். மற்றவை தொலைந்தபொழுது வேலைக்காரனிடம் சண்டை போட்டதுதான் மிச்சம். இதுவரை அதுபோல் தொலைந்தவை கிடைத்ததில்லையே என நினைக்கிறான்.

மனத்துடன் பெரும் போராட்டம் நடத்தி சிறு வெற்றிகண்டு இனி பொறுப்பாக இருக்க நினைக்கிறான். அத்துடன் அது தம்மால் முடியாதது எனவும் தெரிகிறது. அன்று மாலை வாட்ச் ஏற்கனவே பலமுறை தேடிப் பார்த்த இடத்தில் இருந்து கிடைத்தது. இந்த அரைகுறை தீர்மானத்திற்கே இப்பலன் என்றால் முழுத் தீர்மானம் தேவை என நினைக்கிறான். வேலைக்காரனை அழைத்து “பர்ஸ் உன்னிடமிருக்கிறது, பேசாமல் கொண்டு வா” என்றான். அன்று மாலை வேலைக்காரனின் தாயார் பர்ஸையும், பணத்தையும் கொண்டுவந்து கொடுத்து மன்னிப்புக் கேட்டாள்.

நம் மனம் மாறாதவரை அன்னைக்கு நம் குரல் எட்டாது.

அவசரமாகச் செருப்புப் போடப்போனபொழுது செருப்பில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு, வேலைக்காரனை அழைத்து செருப்பைத் துடைக்கச் சொன்னான். ஒட்டிக்கொண்டிருந்தது உயிருள்ள தேள்கொடுக்கு.

நாமறிய முடியாத ஆபத்தையும் அருள் வலிய வந்து விலக்கும். நாமே விலக்கக்கூடிய தவற்றை விலக்காதவரை அருள் சிலையாக இருந்து பதில் சொல்ல மறுக்கும்.

புதிய தலைமுறை

மேல் உலகில் ஒளிமயமான தேவதைகள் உலகில் வந்து பிறக்கத் தயாராக இருக்கின்றன. தடைகளைத் தகர்த்து, விதியை வென்று, சொல்லுக்கப்பாற்பட்ட சொல்லைத் தாங்கி, மரணமான வாழ்வுக்கு நித்தியம் அளிக்க, காயத்தைக் கடந்த தெய்வப்பிறவிகள் காலத்தின் விதிவழியே இறங்கிவந்து, ஆன்மாவின் அற்புதத்தைத் தாயின் கருவில் சேர்க்க, தயாராக இருக்கின்றனர் என்ற பொருள்படும் சாவித்திரியின் வரிகள் உள்ளன.

தாய்மை என்பது மகளிருக்குச் சிறப்பான நேரம். பிரசவ வேதனை என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் ஒரு மருத்துவ ஆராய்ச்சியின்படி பிரசவத்தில் வலியில்லை, மனம் பயந்து வலியை உற்பத்தி செய்கிறது எனக்கூறி அதன்படி கர்ப்பவதிகட்கு முதலிலிருந்து தகுந்த பழக்கங்களையும், பயிற்சிகளையும் அளித்து பிரசவம் வலியில்லாத சுகப்பிரசவமாகும் என நிரூபித்தது.

பெண் கருவுரும் நேரம் பெண்மை நிறையும் தருணம். அவள் மனம் உடலுணர்வால் நிறைந்து வழிந்தால் நிச்சயம் அதே நேரம் கருவுருவாள் என்பது தத்துவம். அது உடல் பெறும் பூரணம். குழந்தை வயிற்றில் 3 மாதமானபின் ஆத்மா அங்கு வந்து தங்குகிறது. கரு முதலில் உடலாகவும், பிறகு உயிராகவும், 3ஆம் மாதம் ஆன்மாவாகவும் மாறி குழந்தையாகிறது.

சாவித்திரியில் கூறிய தெய்வங்கள், தேவதைகள், மகளிர் வயிற்றில் உதிக்க விரும்புகின்றன. தங்கள் தெய்வத்தன்மைக்கேற்ப அதைப் போற்றும் கருவை அவை தேடுகின்றன. “என் பக்தர்கள் அதுபோன்ற தெய்வக் கருவைப்பெற விரும்பினால், அதற்குரிய பக்தியும் பவித்திரமும், ஆர்வமும் கொண்டால், அவர்கள் வயிற்றில் அத்தேவதை கருவுறும்” என அன்னை கூறுகிறார்.

  • தாய்மை அடைந்த நேரம் பெண் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பது அவசியம்.
  • அவள் மனம் தூய்மையால் நிரம்பினால் தூய்மையான தெய்வம் கருவை வந்தடையும்.
  • வலிமையால் வழிந்தோடினால் வலிமையான தெய்வம் பிறக்கும்.

அன்னை அவதரித்தபின், அவரை வழிபடுவோர்க்கு அன்னை அளித்த வரங்கள் அனந்தம்; அவற்றுள் தெய்வப்பிறவிக்குரிய உரிமை, வாய்ப்பு உயர்ந்தது.

மனம் உயர்ந்தால் தெய்வ நிலையை அடையும்.

கண்ணைப் பொத்தி விளையாடுவது

அன்னை அவதாரமாக நம்மிடையே வாழ்ந்தவர். என்றாலும் தாயாகவும், தயாபரியாகவும், நம்மைப்போன்று நம்முடன் கலந்தும், சிறு குழந்தைகளைப் போலவும் அவர் நடந்துகொண்ட சம்பவங்கள் ஏராளம். ஏற்கனவே எழுதிய நிகழ்ச்சிகளில் அவை வெளிப்படுவதை நினைவுபடுத்த கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறேன்.

Pant போட்டு வரும் கிருஸ்த்துவ அன்பர் ஒருவர் தினமும் அன்னையைப் பலமுறை சந்திப்பவர். ஒரு நாள் அவர் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வந்தார். நிமிர்ந்து பார்ப்பதற்குமுன் அது புடவை போலிருக்கும். அவர் உள்ளே நுழைந்தவுடன் அன்னை,

“யார் இந்த பெண்மணி புடவை கட்டிக்கொண்டு வருகிறார் எனப் பார்த்தேன். இது நீங்களா, எனக்குத் தெரியவில்லையே” என்று கேலியாகக் கேட்டார்.

ஒரு கேள்வியைக் கேட்ட சாதகர் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று அன்னையிடம் கேட்டார். அன்னைக்கு பகவான் ஸ்ரீ அரவிந்தர் மௌனம் அளித்தபின் அன்னை சிந்தனை செய்வதில்லை. சிந்திக்கும் திறனையே மௌனம் அழித்துவிட்டது. கேள்வி கேட்டால், அன்னை மனதில் பதில் சிந்திக்காமல் உதிக்கும். இது அன்னையை அறியாதவர்க்குத் தெரியாது. சாதகர்கட்குத் தெரியாமலிருக்கும் என்பதை நம்பமுடியாது. கேள்வி கேட்டவரை அன்னை தலையைக் குனியும்படிச் சொன்னார். குனிந்தவுடன் தலையில் ஒரு குட்டு வைத்தார்.

“நான் சிந்திப்பதை இழந்துவிட்டேன் என உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்.

சமாதிக்கு மேல்புறம் வடக்குப் பக்கமாக அன்னை கார் நிற்கும். காருக்கும் சமாதிக்கும் இடையில் ஒரு பெஞ்ச் இருப்பது வழக்கம். அன்பர்கள் அதைக் கண்டிருப்பார்கள். அங்குள்ள அறை ஆசிரமப்பள்ளியின் ரிஜிஸ்டார் அறை. பவித்திரா டைரக்டராக இருந்தபொழுது அது அவர் ஆபீசாக இருந்தது. பவித்திராவின் எதிரில் ஒரு சாதகி உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தார். திடீரென பவித்திராவின் முகக்குறி மாறியதை பெண் கண்ணுற்றாள். தம் தலையை இரு கைகளாலும் ஒருவர் பற்றுவதைக் கண்டார். ஆபீசினுள் அதுபோல் தம்மோடு யார் கண்ணைப் பொத்தி விளையாடுவார் என நினைக்குமுன் அது அன்னை என்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டார். அவர் உட்கார்ந்திருந்தவகையில் எழுந்திக்க முடியவில்லை. உடல் மேஜையின் அடியில் இருந்தது. பல நிமிஷம் அன்னை கையை எடுக்கவில்லை!

அன்னை தலையை விடுவித்தவுடன் சாதகி எழுந்து அன்னை காலில் விழுந்து வணங்கினார்.

நினைவும் கருணையும்

அருள் செயல்படுவதற்குப் பல்வேறு அடையாளங்களுண்டு. வழக்கத்திற்கு மாறாக நடக்கும் செயல்கள் அப்படிப்பட்டவை. வழக்கமாக வரும் தபால்காரர் 11.30க்கு நம் வீட்டிற்கு வருவார் எனில் ஒருநாள் 8 மணிக்குத் தபால் வரும். அன்னை செயல்படும்பொழுது அதுபோல் நிகழ்ச்சிகள் மாறும்.

Ordinary telegram வழக்கமாக 5 மணிக்கு மேல் எடுப்பதில்லை. லீவு நாட்களில் express telegram மட்டுமே அனுப்பமுடியும். ஒரு நாள் போஸ்ட்டாபீஸ் லீவு. அதனால் தந்தியை அவசரத்தந்தியாக எழுதி 4.30 மணிக்கு எடுத்துப்போனால், “4 முதல் 5 வரை சாதாரண தந்தியை ஏற்றுக்கொள்வோம்” என நோட்டீஸ் கூறுவது அருள் செயல்படும் நிகழ்ச்சி. அன்று அனுப்பும் தந்திக்கு அற்புதமான பதில் வரும்.

அன்னை ஒரு முடிவுக்கு வரும்பொழுது அன்பர்கள் அவர் முடிவை மாற்றிக்கொள்ளும்படிக் கேட்பதுண்டு. கேட்பவர் பிடிவாதக்காரரானால், அவர் பிடிவாதத்தைத் தாம் ஏற்பதால் அவருடைய சாதனை முன்னேறும் எனில் தம் முடிவை மாற்றிக்கொள்வார். இல்லை எனில் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டார். அதுபோன்று கேட்ட சாதகருக்கு, “நான் ஓர் முடிவுக்கு வருமுன் எல்லாக் கோணங்களிலும் அதைக் கருதியே முடிவு செய்வதால் அது மாற்றக்கூடியதில்லை” என்றார்.

1963இல் ஓர் அன்பர் தம் குடும்பச் சொத்தான 10 லட்சம் பெறும் சொத்தில் தமக்கு வரவேண்டிய பாதியை அன்னைக்குக் காணிக்கையாக்குவதாக எழுதினார். அக்கடிதத்தைப் பார்த்த முக்கியஸ்தர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டு அன்னையிடம் எடுத்துப் போனார்கள். அன்னை “எனக்கு வேண்டியதில்லை” என்றார். ஒவ்வொருவராக அன்பரின் பெருமையை எடுத்துக் கூறினர். ஒவ்வொரு முறையும் வேண்டாம் என அன்னை பலமாகத் தலையாட்டினார். அக்கடிதத்தின்மீது கறுப்பு படிந்திருந்ததாகச் சொன்னார். அந்தச் சொத்து நல்ல முறையில் சம்பாதிக்கப்பட்டதன்று.

பால்கனி தரிசனம் 6.15 முதல் 6.30வரை. காலை 9 மணிக்கு ஒரு நாள் தாயும் மகளும் அத்தெரு வழியாக வந்தனர். அன்னை பால்கனியிலிருப்பதைக் கண்டு நமஸ்காரம் செய்தனர். வெகுதூரத்திலிருந்ததால், தங்கள் நமஸ்காரத்தை அன்னை கண்டுகொண்டாரா எனவும் அறியார்கள். அப்பெண் ஆசிரமப் பள்ளி மாணவி. அடிக்கடி நோய் வருவதால் அன்னை அவளை ஊருக்குப் போகச் சொன்னார். அன்னையின் முடிவை மாற்றவேண்டி தாய் அன்னைக்குச் செய்தி அனுப்பிவிட்டு ஆசிரமம் வந்தபொழுது தரிசனம் கிடைத்தது நல்ல சகுனம் என்று வந்தனர்.

சாதகர் இச்செய்தியை அன்னையிடம் கூறியபொழுது, “ஆம், நான் காலையில் அவர்களைக் கண்டேன். அப்பெண் போகவேண்டும்” என்றார். அவ்வளவு தூரத்தில் தங்களை அன்னை அடையாளம் கண்டுகொண்டது பாக்கியம் என்றறிந்து அன்னை கட்டளையை அருளாக அவர்கள் ஏற்றனர்.

அன்னையும் வழிபாடும்

சமாதியைச் சுற்றி அடிப்பிரதட்சிணம் செய்பவர்கள், சமாதியை வலம் வருபவர்கள், அங்கு தோப்புக்கரணம் போடுபவர்கள் உண்டு. இது புதியதாக வருபவர்கள் செய்வது. நெடுநாளைய பக்தர்களும் ஓரிருவர் இதைச் செய்ததுண்டு. தொடர்ந்தும் செய்வதுண்டு. நாம் ஸ்ரீ அரவிந்தர் அறையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம்.

ஜீவன் விழித்துச் செய்யும் நமஸ்காரம் நம்முள்ளே சக்தியைச் செலுத்தும்.

அவ்வுணர்வு நமஸ்காரம் செய்யாதபொழுதும், சமாதியில், அன்னை ஸ்ரீ அரவிந்தர் அறையில், தியானத்தின்பொழுது, மனம் அன்னையை நினைத்து நெகிழ்ந்தபொழுது வருவதை நாம் அறிவோம். அவ்வுணர்வோடு செய்யும் நமஸ்காரம் ஜீவனுள்ளது. அது இல்லாத நேரம் செய்வது சடங்கு, சம்பிரதாயம், ஜீவனற்றது. “நமஸ்காரம் செய்யாவிட்டால், ஒன்றுமே இல்லை” என்று நினைக்கிறோம். இது வழிபாடு. இப்படிச் செய்யும் நமஸ்காரங்கள் நம்மை அன்னையை விட்டகலச் செய்யும். எப்படியிருந்தாலும் அனைவரும் உளமார, உண்மையாக நாம் இதை மனதால் நாடுகிறோம்.

அர்த்தமற்றதானாலும், நம் மனம் ஆழ்ந்து விரும்பினால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார். நம் சுயநலமான ஆசைகளை அன்னை தவறாது பூர்த்தி செய்கிறார். அதனால் சுயநலம் நல்லது என்று நினைக்கமுடியுமா? ஓர் அன்பர், “நான் தவறான பிரார்த்தனையைச் செய்தேன். அன்னை அதை எனக்குக் கொடுத்துவிட்டார். ஏன் அன்னை இப்படிச் செய்கிறார் என எனக்குப் புரியவில்லை” என்றார். நாமுள்ள நிலையை அன்னை ஏற்கிறார். நாம் மாறவேண்டும் என விளக்குகிறார். வற்புறுத்துவதில்லை. நாம் எப்படி விரும்புகிறோமோ அதை அன்னை ஏற்கிறார்.

புதுவையில் அன்பர் மாநாடுகள் அடிக்கடி நடப்பது வழக்கம். அங்கு வரும் பிரதிநிதிகளை அன்னையிடம் அனுப்புவார்கள். அவர்கள் வரிசையாக அன்னை முன் வந்து வணங்குவார்கள். தரையில் விழுந்து நமஸ்காரம் செய்ய அனுமதியில்லை. நேரம் இல்லாத காரணத்தால் அதுபோல் நடப்பதுண்டு. அன்னை உடல்நலம் குன்றிய நேரம். வயது 95. அவ்வரிசையில் வந்தவர் ஒருவருக்கு அன்னையை நேரில் தரிசிக்க வேண்டும், நமஸ்கரிக்க வேண்டும் என்ற அவா. முதன்முறையாக ஆசிரமம் வந்துள்ளார். தரிசனம் கிடைத்தது. நமஸ்காரம் செய்யும் விருப்பம் பூர்த்தியாகவில்லை, என்றாலும் அவர் மனம் துடித்தது. ஒவ்வொருவருக்கும் அன்னை blessing packet கொடுத்தார். இந்த பக்தர் வந்தபொழுது அன்னையால் blessing packet கட்டிருந்து ஒரு packetஐ எடுக்கச் சிரமப்பட்டார். அதனால் சற்று தாமதமாயிற்று. அன்னையால் ஒரு பாக்கெட்டை எடுக்க முடியவில்லை.

அவ்விடைவெளியில் அன்பர் தரையில் விழுந்து நமஸ்கரித்தார்.

அன்னை தன் சட்டத்தை மீறி அன்பர் அபிலாஷையைப் பூர்த்தி செய்த நிகழ்ச்சி இது.

இறுதிச் சடங்குகள்

நம் ஜீவனில் உள்ளது ஆத்மா, உடல் உள்ளது ஆவி. இறுதிச் சடங்குகள் ஆத்மாவின் சாந்திக்காக என்று நாம் நினைக்கிறோம். ஆத்மா எந்த நேரமும் சாந்தமாகவேயுள்ளது. சாந்தம் தவிர வேறெதையும் ஆத்மா அறியாது. ஆவி என்பதை யோக பாஷையில் vital being என்பார்கள். இறந்தவர் கனவில் வருவது, இறந்தவர் வீட்டில் அவருருவம் உலவுவது போன்றவற்றை மேற்கொள்வது ஆவி.

  • நல்லவர், கெட்டவருடைய ஆத்மா நல்லதாகவேயிருக்கும்.
  • நல்லவர், கெட்டவருடைய ஆவி கடுமையாகவே இருக்கும்.

மரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டவன் மரத்தடியில் தூங்குபவர்களை மிரட்டுகிறான் என்பது ஆவி, ஆத்மா இல்லை. ஆத்மா மிரட்டாது, ஆவி மிரட்டாமலிருக்காது.

ஒருவர் இறந்த பிறகு அவர் ஆவி அவர் உறவினரைத் தொந்தரவு செய்யாமலிருப்பதற்காகவே ஈமக்கடன் ஏற்பட்டது. ஒருவன் ஆபீஸ் முடிந்தவுடன் அங்கேயே தூக்குப் போட்டுக்கொண்டான். மறுநாளிலிருந்து அங்கு வேலை செய்பவர்களை அவன் ஆவி மிரட்டிக்கொண்டேயிருந்தது. கம்பனியில் ஒரு மந்திரவாதியை அழைத்து பரிகாரம் செய்யச் சொன்னார்கள். அன்றே அந்த பயம் விலகியது.

யோகத்தை மேற்கொள்பவர்கட்கு ஈமச் சடங்குகளில்லை. அதுவும் அன்னையை ஆழ்ந்து ஏற்பவருக்கு உயிர் பிரிந்த பிறகு அவர் ஆவி பிறருக்குத் தொந்தரவு தாராது. அவர் ஆவி, ஆத்மாவுடன் கலந்துவிடுவதால் ஈமக்கிரியைக்கு இடமில்லை. சாதகர் உயிர் பிரிந்தால், அவருடலுள்ள இடத்தை சுற்றி அளவு கடந்த ஆன்மீக அமைதியைக் காணலாம். அவருக்கு 12ஆம் நாள், 16ஆம் நாள் காரியம் செய்வது சரியில்லை, சாதகர்கள் உடலை எரிக்கக்கூடாது,

புதைக்கவேண்டும் என அன்னை கூறியிருக்கிறார். ஆழ்ந்த பக்தர்கட்கும் அதுவே சட்டம். இவ்விஷயத்தில் எவரும் அன்னை கூறுவதை ஏற்பதில்லை என்பதால், அன்னை தலையிடுவதில்லை. அவரவர் இஷ்டத்திற்கே விட்டுவிடுவார்.

1930ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தரை ஏற்று உயர்ந்த சாதகர் என ஆசிரமத்தாரிடம் பெயர் பெற்றவர் தாமிறந்தபொழுது தம்மைத் தகனம் செய்யும்படியும், அஸ்தியைக் கங்கையில் கரைக்கும்படியும் கூறினார்.

ஆசாரக் குடும்பத்துத் தெலுங்கர் அன்னையிருக்கும்பொழுது காலமானார். அவருடைய சகோதரர் அன்னையிடம் வந்து, “நான் எங்கள் ஆசாரப்படி இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன்” என்றார்.

“அவர் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கரையில்லை. சாதகர் ஆத்மா 1 வாரம் முன்னதாக உடலைவிட்டுப் பிரிந்துவிட்டது. சென்ற ஜன்மத்தில் இவர் யோகியாக இருந்தவர்” என அன்னை கூறினார்.

பொதுவாக ஆத்மா உயிர் பிரியும் முன், சில நாட்களுக்கு முன் உடலைவிட்டுப் பிரியும். ஆத்மா கருத்தரிக்கும்பொழுது கூடவே வருவதில்லை. 3, 4 மாதம் கழித்தும் உடலில் புகுவதுண்டு, 10, 15 வயதிலும் உள்ளே வரும். ஆவி உயிர் பிரிந்தபின் 7 நாட்கள் உடலிலேயே இருக்கும்.