அன்னையின் ஆன்மீக வாழ்வில் – 19

பிரச்சினை எழுந்தபொழுது ஆழ்ந்து அன்னையை அழைப்பவன் பக்தன். பிரச்சினையே இல்லாதபொழுது அன்னையை ஆழ்ந்து அழைப்பதில் இன்பம் காண்பவன் பூரண யோகி. மனம் இக்கட்டங்களைத் தாண்டினால் நமக்கு Life Divine புரியும். உலகில் புரியாத விஷயமிருக்காது. உணர்ச்சி இக்கட்டங்களைத் தாண்டினால் நம் காரியங்கள் எதுவும் நமக்குக் கட்டுப்படும். நம்மால் முடியாதது என்று நம் வாழ்வில் எதுவுமிருக்காது. உடல் இக்கட்டங்களுக்கு வாராது. ஸ்ரீ அரவிந்தர் உடல் இக்கட்டத்திற்கு வந்தபொழுது அக்னி உள்ளிருந்து எழுந்து அவர் உடலை இடையறாது எரித்தது. ஆனந்தசொரூபனாக அதையும் தாண்டவேண்டும். அன்னை அதையும் தாண்டி வந்து நரக வேதனையை அனுபவித்தார். பூரண யோகம் பூர்த்தியாக அக்கட்டத்தையும் தாண்டவேண்டும்.

இடைவிடாது அன்னையை அழைக்க மனம் விழையும் நிலை வாழ்வில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பதுடன் நான் நிறுத்திக்கொள்வது வழக்கம்.

அதற்கு முந்தைய கட்டத்திற்குரிய நிகழ்ச்சி ஒன்று

விளையாட்டு மைதானத்தில் அன்னைக்கு பாத்ரூம் கட்ட அஸ்திவாரம் போடுகிறார்கள். கட்டட வேலைப் பகுதித் தலைவர் அன்னையைச் சந்தித்து உத்தரவு பெறுவது வழக்கம். வேலையைப் பார்வையிடுவது ஒரு சாதகர் பொறுப்பு. அஸ்திவாரம் முடிந்த இரவு வானம் இருண்டு பெருமழை வருகிறது. சாதகருக்குப் பயமும் குழப்பமும் வந்து, தாம் செய்த வேலையில் குறை வந்தால் அது தம் குறையாகுமே எனப் படுக்கையில் இருந்து ஆழ்ந்து அன்னையை அழைத்து, அஸ்திவாரத்தைக் காப்பாற்றும்படிப் பிரார்த்திக்கின்றார். அன்னை தத்ரூபமாகக் காட்சியளிக்கிறார். கதவைத் திறந்து வெளியில் வந்து பார்த்தால் திரண்ட மேகக்கூட்டம் கலைந்து வானம் நிர்மலமாக இருக்கிறது.

மறுநாள் காலையில் அன்னை தலைவரிடம் அஸ்திவாரத்தைப் பற்றிக் கேட்டார். தலைவர் சாதகரை விசாரித்தபொழுது சாதகர் தம் பிரார்த்தனையையும், காட்சியையும் பற்றிச் சொன்னார். தலைவர் மீண்டும் அன்னையை சந்தித்து, சாதகர் சொல்லியதை விவரித்து இது உண்மையா எனக் கேட்டதற்கு அன்னை “ஆமாம்” என்று பதிலுரைத்தார்!

இரவல் நகை

கண் எதிரில் உள்ளது ஒளியால் மறைவதும், உள்ளது தெரியாததும் அன்னையின் அற்புதங்கள். ஸ்ரீ அரவிந்தர் படமும், நேரில் ஸ்ரீ அரவிந்த தரிசனமும், அவர்கள் ஜோதியில் மறைந்ததையும் ஏற்கனவே கண்டோம். பயங்கர விபத்தில் அன்பர்கள் மட்டும் காயம்கூடப்படாமல் தப்பித்ததையும் கண்டோம்.

அற்புதங்களின் வகைகள் அன்னையிடம் பல.

  • அக்னி நட்சத்திரத்தில் அன்பருக்காகப் பெருமழை பெய்தது.
  • படுக்கையில் அன்னையிடம் முறையிட்டது, அன்னைக்கு அவர் அறையில் கேட்டது.
  • நாம் மனதில் நினைத்து வாயால் கேட்காத கேள்விக்கு அன்னை பதில் கூறுவது.
  • நம்பிக்கையேயில்லாதவர் வாழ்வில் அவர் அவநம்பிக்கையை மீறி அடுத்தவர் பிரார்த்தனை அற்புதமாகப் பலிப்பது.
  • எதையும் பலமுறை செய்யவேண்டிய இராசியுடையவர், அனைவரும் பலமுறை முயல்வதை முதன் முயற்சியிலேயே பெரும்பலன் பெறுவது.
  • எதிரி மனம் மாறி நமக்குச் சாதகமாக செயல்படுவது.
  • சுமார் 2000 பிரசாதங்கள் பலன் தராதபொழுது அன்னைக்கு அனுப்பிய காணிக்கை பலிப்பது.

பெரிய இடத்துத் திருமணத்திற்கு விலையுயர்ந்த நகையை இரவல் வாங்கி அணிந்துகொண்டு போன அன்பர் பயங்கரத்தைக் கண்டார். பயங்கரவாதிகள் வீட்டில் நுழைந்து மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு torch lightகளுடன், துப்பாக்கியுடன் நகையைக் கேட்டு மிரட்டினர்.

பெண்களைச் சுவரோரம் வரிசையாக நிற்கவைத்து டார்ச் வெளிச்சத்தில் நகைகளைத் தரும்படி உத்தரவிட்டனர். அனைவரும் உயிருக்குப் பயந்து கொடுத்தனர். அன்பர் கழுத்தில் விலையுயர்ந்த இரவல் நகை. எட்டு வயதுக் குழந்தை நடுங்குகிறது. “அன்னையைக் கூப்பிடு, பயப்படாதே, ஒன்றும் நடக்காது” என மகளுக்கு கூறிவிட்டு அன்னையைத் தீவிரமாக அழைத்தவண்ணம் நிற்கும்பொழுது டார்ச் இவர்மீது பட்டது. பயங்கரவாதிகள் அன்பரிடம் சோதனை செய்தனர். “இங்கு ஒன்றுமில்லையே” என்று கூறி நகர்ந்தனர்.

திருமணத்தில் அனைவரும் நகைகளைப் பறிகொடுத்தபொழுது நீங்கள் மட்டும் எப்படித் தப்பினீர்கள் என அனைவரும் கேட்டபொழுது,

“ஸ்ரீ அன்னையை அழைத்தேன், காப்பாற்றினார்” என்று பதில் கூறினார்.