மனித வாழ்விலுள்ள ஒரே இன்பம் இல்லறத்தினுள் உள்ள நெருக்கமான உறவு என்று அன்னை கூறியுள்ளார். ஒருவர் மனதால் அடுத்தவரை முழுவதும் ஏற்றுக்கொண்டவர் எனில் அவர்கள் சந்திப்பில் தம் வயமிழந்து ஒருவரோ, இருவரோ தூக்கத்தில் ஆழ்வது அதன் புனிதத்திற்கு அடையாளம் என்பது அன்னை கூறியது. இறைவனை நிஷ்டையில் ஆன்மாவால் ஏற்பவர் பெறுவது சமாதி நிலை. மனதால் தாம்பத்யம் இனிய உணர்வால் கனிவது நம்மைத் தேடி வரும் தூக்கம். நட்புக்கும் இவ்வுயர்வுண்டு என்றாலும் இன வேறுபாடில்லாத இடத்தில் இயற்கை பூர்த்திபெறுவது உணர்வோடு நின்று விடும். ஆண் பெண் உறவே, இருவர் உறவைப் பூர்த்தி செய்யக் கூடியது.
ஓருயிரும், ஈருடலும் என்பது வழக்கு. ஆன்மீகத்தில் உடலின் சூட்சுமம் உயர்ந்த நிலையை அடைந்தால் ஈருயிரும், ஓருடலும் என்று இரு உடல்கள் சூட்சுமமாகச் சேரும் என்கிறார் பகவான். அந்நிலையும், இருவர் சேர்வதைப் பூரணப்படுத்தாது, உடல்கள் சேர்ந்தே பூரணம் பெறமுடியும்.
திருமணமும், புத்திர சந்தானமும் முதல் நிலை ஐக்கியம். அது விலங்குக்கும் உண்டு. அறிவு ஒன்று தவிர மனிதவாழ்வு விலங்கின் வாழ்விலிருந்து வேறுபட்டதில்லை என்கிறார் பகவான். இரண்டாம் நிலை ஐக்கியம். ஆசையால் உயிர் மற்றவர் உயிருடன் சேர்வதாகும். அதையே ஓருயிர் என்கிறோம். திருமண வாழ்வில் மனம் மனத்தோடு ஒன்ற வாய்ப்பில்லை. திருமண வாழ்வு அன்றாடத் தேவைகட்கும், சமூக நியதிகட்கும் உட்பட்டது. அறிவுடை எண்ணங்கள் கணவன், மனைவிக்கு இருக்கலாம். ஆனால் அவை திருமண வாழ்வினுள் வருவதில்லை. அடுத்த நிலை ஆன்மா. ஆன்மா தன் யாத்திரையைத் தனித்தே செய்ய வேண்டுமென்பதால், அங்கு இரு ஆன்மாக்கள் சேருவதோ, திருமண வாழ்வோ எழா. அதற்கடுத்தது சத்திய ஜீவியம். அந்நிலையில் ஓர் ஆன்மா, மற்ற எல்லா ஆன்மாக்களுடனும் இணைந்திருப்பதால், அடுத்த ஓர் ஆன்மாவுடன் மட்டும் கலந்த நிலையில்லை.
கணவனும், மனைவியும் முதல் நிலையோடு வாழ்வை முடிப்பதே உலக வழக்கு என்றாலும், நடைமுறையில் அடுத்த கட்ட ஐக்கியங்கள் – உயிர், மனம், ஆன்மா – காணப்படுவதில்லை என்றாலும், இருக்கக்கூடாது என்ற தடையில்லை. உடலால் கலந்தவர், உணர்வால் (உயிரால்) கலக்க முடியும், கலப்பதுண்டு. மேலும் மனத்தாலும் ஐக்கியமாகலாம். ஆன்மா ஐக்கியமாகத் தடை என எதுவுமில்லை. ஆனால் நடைமுறையில் இல்லை. பூரண யோகச் சட்டப்படி முதல் நிலையிலிருந்து அடுத்த உணர்வு நிலைக்குப் போனபின், உணர்வு உடலைப் பூர்த்தி செய்யும். அது ஏற்பட்டால் முதல் நிலை ஐக்கியம், இரண்டாம் நிலைப் பூரணம் பெறும். கணவன் காலையில்‘ க்ஷவரம் செய்து கொள்ளும்பொழுது சிறு காயம் ஏற்பட்டது. அடுத்த அறையிலுள்ள மனைவிக்கு மனத்தில் அதிர்ச்சி ஏற்பட்டு ஓடி வந்தாள். இது உணர்வின் ஐக்கியம். இது இருக்க முடியும், ஆனால் அரிது. இதுபோன்ற ஐக்கியம் ஆன்மா அளவிலும் இருப்பது (is a theoretical fact) தத்துவரீதியான உண்மை. நடைமுறையில் இருப்பதில்லை. அப்படியிருவர் ஒவ்வொரு நிலையாக உயர்ந்து வந்தால், சமூகம் அவர்களை ஏற்காது. சீக்கிரம் சமூகம் ஏதோ காரணத்திற்காக அவர்களை ஒதுக்கும், அல்லது அழிக்க முயலும். மேதைகளையும், ஞானிகளையும், அவதார புருஷர்களையும் வதைத்த உலகம் உண்மையான தம்பதிகளை விட்டுவைக்குமா? சமூகம் பொய்மையாலானது. நாம் கூறும் உறவு சத்தியத்தாலானது. சத்திய உறவு இவ்வுலகில் எழுவது சிரமம். எழுந்தால் சத்தியமாக உலகம் அதை அழிக்கும்.
இக்கட்டுரைகளில் நாம் முக்கியமாகக் கருதுபவை :
1) ஒற்றுமையற்ற தம்பதிகள் அன்னை மூலம் எப்படி ஒற்றுமையாகலாம்?
2) சுமுகமான தம்பதிகள் வாழ்வில் மனவளத்தை உயர்த்தும் வழியுண்டா?
3) சுமுகத்திற்கும், இதர வாழ்வின் அம்சங்கட்கும், குறிப்பாகச் செல்வத்திற்கும் என்ன தொடர்பு?
4) வாழ்வில் வரும் வசதி தம்பதிகளிடம் பிணக்கையும் ஏற்படுத்துவதுண்டு. அன்னையிடம் வரும் வசதி சுமுகத்தை அதிகப்படுத்த வேண்டுமல்லவா?
5) தாம்பத்ய வாழ்வின் இலட்சியம் என்ன? பக்தருக்கு அதில் மாறுபாடுண்டா?
6) எட்ட முடியாவிட்டாலும், அன்னை கோட்பாட்டின்படி தம்பதிகன் வாழ்வின் உயர்ந்த இலட்சிய சிகரம் எது?
7) தாம்பத்ய வாழ்வு எந்த அளவில் வாழ்வைச் சேர்ந்தது? அதன் தனிச் சிறப்பு எது?
8) நம்மைச் சுற்றியுள்ள தம்பதிகளில் சிலர்.
9) திருமணம் கூடாது என்று கூறும் அன்னையின் அருள் எந்த அளவில் எப்படித் தம்பதிகள் வாழ்வில் செயல்படும்?
10)அன்னையை அடையத் தம்பதிகள் வாழ்வு பயன்படுமா?
மேற்கூறியவற்றிற்குப் பதில் கூறுமுன் பொதுவான பல கருத்துகளை நாம் அறிய வேண்டும். அவையாவன,
- திருமணம் என்பது இறைவனுக்கும், இயற்கைக்கும் தேவையில்லாதது.
- பொதுவாகத் திருமணப் பிரச்சினைகள் வாழ்வுப் பிரச்சினைகளேயாகும்.
- திருமணத்திற்கே உரிய பிரச்சினைகள் உண்டு. அவற்றுள் தலையாயது ஒருவர் அடுத்தவரை அதிகாரம் செய்ய விரும்புவது.
- பணம், ஜாதி, மரியாதை, கொடுக்கல் – வாங்கல், வயது, சொத்து ஆகியவை வாழ்வில் பிரச்சினைக்குரியன. அவை திருமணத்துள் வந்தால் அவை திருமணப் பிரச்சினைகளாகா, வாழ்வுப் பிரச்சினைகளேயாகும்.
- திருமணம் சமூகம் செய்த ஏற்பாடு.
- நாட்டின் நாகரீகம், பண்பு சமூக நியாயத்தை நிர்ணயிக்கும். அவையே திருமணப் பிரச்சினைகளையும் நிர்ணயிக்கும்.
- வயது குறைவானால் பணிவு அதிகமாக இருக்கும். வயது அதிகமானால் பணிவு குறையும்.
- பிறர் நம் இஷ்டப்படி இருக்க வேண்டும் என்ற நோக்கமே பிரச்சினைக்கு அடிப்படை.
- நாம் பிறரை அனுசரித்துப் போவது நாகரீகம். அந்த நோக்கம் பிரச்சினையை விலக்கும்.
- வாழத் தகுதியற்றவர், திருமணத்திற்கும் தகுதியற்றவர். தகுதியற்றவர், திருமணம் செய்து கொண்டு பிரச்சினை வந்தது எனில் அது திருமணப் பிரச்சினையல்ல. வாழத் தகுதியற்றவனின் வாழ்வுப் பிரச்சினை.
- உயர்ந்த பண்புள்ளவரும், தாழ்ந்த பழக்கங்களுள்ளவரும் சம்பந்தம் செய்தால் எழும் பிரச்சினை, problem of lack of culture not a marriage problem, திருமணப் பிரச்சினையில்லை, பண்பில்லாத குறை.
- திருமணத்திற்கு அடிப்படை, வாழ்வுக்குரிய அடிப்படையான ஆரோக்கியம், வருமானம், நல்ல பழக்கம். அவை குறைவதால் எழும் பிரச்சினை திருமணப் பிரச்சினையாகாது.
- மற்ற உறவு, நட்புபோல் தாம்பத்ய உறவை முறித்துக் கொள்ள முடியாது என்பதால் திருமணத்தில் எழுபவை திருமணப் பிரச்சினைகளாகும்.
- விடமுடியாத உறவு என்பதால், கிராக்கி செய்ய அதிக இடம் உண்டு. அதை அளவு கடந்து வலியுறுத்துவதால் தீர்க்க முடியாத பிரச்சினையாகிறது.
- வாழ்வுப் பிரச்சினைகள், குணப்பிரச்சினைகள், பண்பற்ற செயலால் ஏற்படுபவை ஆகியவற்றை நீக்கினால் திருமணப் பிரச்சினைகள் சொற்பம். அவற்றைத் தீர்ப்பது எது.
- திருமணச் சிக்கல் என்பதில் பெரும்பாலானவை வேண்டுமென்றே சிக்கலை ஏற்படுத்தி அதனால் ஆதாயம் பெற முயல்வதால் ஏற்படும்”சிக்கல்‘களேயாகும்.
- புதிய சம்பந்தம், கலப்புத் திருமணம், ஆகியவற்றில் பிரச்சினைகள் சற்று அதிகமாக இருப்பதற்குக் காரணம் திருமணமல்ல, இதர காரணங்களேயாகும்.
- கணவன் மனைவி பிரச்சினைகள் 10 இருந்தால், இதில் 7,8 இதர குடும்பத்தினர் ஏற்படுத்துவதாகும்.
- பெண்ணானாலும், பிள்ளையானாலும், திருமணமானவுடன் புதிய பழக்கங்கள் தவறாது வெளிப்படும். அதை முன்கூட்டி அறிய முடியாது.
- தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் எழுந்தால், அவற்றை ஏற்கும் மனப்பான்மையில்லாமல், தவிர்க்க முயன்றால் திருமணம் முறியும்.
- பெற்றோர் முயன்று பிரச்சினை ஏற்படுத்தித் தம்பதிகள் வாழ்வைச் சீரழிப்பது ஓரளவுண்டு.
- திருமணமான பெண்ணை வீட்டில் தாயார் வைத்திருக்கக்கூடாது என்பது போன்ற நீண்ட நாளைய அனுபவத்தை மீறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் சிக்கலாகும்.
- ஆண்பிள்ளை சம்பாதிக்க வேண்டும், பெண் சமைக்க வேண்டும் என்ற அடிப்படைச் சட்டத்தை புறக்கணிப்பதால் எழும் பிரச்சினைகள் திருமணப் பிரச்சினைகளாகா.
- தம் வருமானத்தைவிட உயர்ந்த நிலையை எட்டத் திருமணத்தைப் பயன்படுத்திப் பிரச்சினை உற்பத்தி செய்பவர் உண்டு.
- இயல்பாகப் பிரியம் என்பதே இல்லாத கணவன், பாசமில்லாத தாயார் ஏற்படுத்தும் சிரமங்கள் திருமணத்திற் குரியவையல்ல, அவர்கள் சுபாவத்திற்குரியது. திருமணமே ஆகாவிட்டாலும் அப்பிரச்சினைகள் எழும்.
- வசதியான வீட்டுப் பெண் வசதியில்லாத வீட்டில் வந்து படும் சிரமம் அந்தஸ்திற்குரியது, திருமணத்திற்கில்லை.
- வறுமையில் வளர்ந்த பையன் வசதி வந்தபின் மனைவியைச் சாப்பிட அனுமதிக்காதது வறுமைக்குரிய பிரச்சினை.
- மனம் அடுத்தவரை நாடும் நேரம் திருமணம் கரைந்துவிடும்.
- இடையிலுள்ள தோற்றம் வெறிச்சென்றிருக்கும்.
- பாதிக்கு மேற்பட்ட திருமணங்களில் பிரச்சினை கிடையாது. வேண்டுமென்று பிரச்சினையை உருவாக்குவது மன்னிக்க முடியாத குற்றம்.
- Power Corrupts, absolute power corrupts absolutely. அதிகாரம் கண்ணை மறைக்கும். பூரண அதிகாரம் குருடனாக்கும் என்பது ஆங்கில வாக்கு. திருமணத்தில் அன்பு செலுத்தினால் அடுத்தவர் அதிகாரம் செய்ய ஆரம்பிப்பார். அது தவிர்க்க முடியாதது.
- பெண்மை சுதந்திரம் பெற்ற பின்னும் ஆணின் அதிகாரத்தை விழையும்.
- பெண்மையின் ஆட்சியை மனதால் போற்றுவது ஆண் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னும் அறிந்த உணர்வாகும். (பீர்பால் கதை)
- ஆணும், பெண்ணும் மனத்தால் லட்சம் பேரை விழைவதை மகாத்மா காந்தி கூறியுள்ளார்.
- உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும்பொழுது உருவம், வயது தடையில்லை என்பது புராணங்கள் கூறுவது.
- மனத்தால் விஸ்வாசமாக இருக்க முடியாது. அது ஆன்மாவுக்கேயுரியது.
- காதல் உணர்வு வேகமுடையது. வேகமுடையது என்பதால் நீடிக்காது.
- உலகப் பெரு இலக்கியங்களில் காதல் வேகம் மரணத்தில் முடிந்தது உண்டு.
- வேகம் இளமைக்குரியது. இளமை குறுகிய காலமுள்ளது என்பதால் நிலையானதல்ல.
- பெண்மை இனிப்பதைப்போல் ஆணறிந்த உணர்வு வேறில்லை.
- தன்வயமிழந்த அன்பு தணியாத நேரம் உண்டு. அது தன்னையறியாதது.
- பிரியம் என்பதும், நியாயம் என்பதும் முரணான உணர்வுகள். பிரியத்திற்கு நியாயமில்லை. நியாயத்திற்குப் பிரியமில்லை.
- மனம் கவர்ச்சியை நாடும். அதன் ஆயிரம் ஆபாசங்களை மீறியும் நாடும். மனம் பண்பை நாடக் கூடியதில்லை. ஆன்மாவே பண்பை நாடும்.
- செயலைத் தூய்மைப்படுத்தலாம். உள்ளுணர்வுக்கு அத்தூய்மையில்லை.
- உள்ளத்தையும், அதன் ஆழத்தையும் அறியாதவரை உள்ளம் தூய்மையை நாடும்.
- ஆழ்ந்த உள்ளம் அனைத்தையும் விரும்புவது. அது தூய்மையை நாடுவதில்லை.
- சமூகம் ஏற்கும் உயர்வு தோற்றப் பொலிவு.
- ஜாதியைப் போற்றிய காலம் உண்டு, பணத்தைப் போற்றிய நேரமுண்டு, அதிகாரத்தை அளவுகடந்து நாடியதுண்டு. அதுபோல் உலகம் உள்ளத் தூய்மையை நாடியதில்லை.
- நிலையான பொய்யே உலகத்தின் சத்தியம்.
- காலத்தையும் கட்டுப்படுத்தவல்லது கற்பனைத் திறன்.
- தவமும், யோகமும் செய்யாமல் பரமாத்மாவை அழைக்கும் திறனுள்ளது பெண்ணின் தூய கற்பு நெறி. காலனும் கற்பின் திண்மைக்குக் கட்டுப்பட்டதுண்டு.
- கற்பின் திண்மை மனத்தின் தூய்மைக்குரியது. சமூகம் ஏற்கும் உண்மை அதுவன்று.
- இயற்கை நியதிகளையொட்டி வளரும் நாகரீகம் தழைக்கும்.
- பெரும்பாலும் நாகரீகம் இயற்கையினின்று மாறுபடும், எதிராகவுமிருக்கும்.
- சில சமயங்களில் நாகரீகம் இயற்கையையொட்டி ஆரம்பித்து, பின் இயற்கையின் போக்குக்கு எதிராகும். எதிரானபின் அது அழியும். திருமணம் அத்தகையது.
- நாடோடி மனிதன் ஊராகி, ஊர், ஜாதி, சமூகமாகி (community), விவசாயத்தை மேற்கொண்டபொழுது சமூகத்தின் அடிக்கல்லாக (unit) குடும்பம் எழுந்தது. குடும்பத்தின் கரு திருமணம்.
- விவசாயம் தொழிலாக (industry) மாறியபின் ஊர், ஜாதி சமூகம், கூட்டுக் குடும்பம் நசித்தது. அத்துடன் திருமணத்தின் கரு அழிந்தது. எதிர்காலத்தில் உலகில் திருமணத்திற்கு உயிரில்லை.
- சுமார் 100 ஆண்டுகளில் private property சொத்து என்பது இருக்காது என்கிறார் அன்னை.
- திருமணத்தின் ஜீவன் கற்பு. கற்பு உலகெங்கும் பெண்ணுக்கு மட்டும் விதிக்கப்பட்டது. கற்பின் ஆரம்பம் சொத்து.
- எவனும் பிறர் பிள்ளைக்குச் சொத்துக் கொடுக்கமாட்டான் என்பதால், பெண் தான் பெற்ற பிள்ளை கணவனுடையது என நிரூபிப்பதே கற்பு.
- உலகில் எந்த மொழியிலும் ஆணுக்குக் கற்பு என்ற கருத்துடைய சொல்லில்லை.
- கற்பின் அடிப்படையான சொத்து அழியுமானால், கற்பும் அழியும். அதனடிப்படையில் எழுந்த திருமணமும் எதிர்காலத்தில் மறையும்.
- இக்கருத்துகள் இன்று சமூகம் ஏற்காதவை என்பதால், இன்றுள்ள நிலையில் திருமணத்தின் கூறுகளும், அங்கு அன்னை செயல்படுவதும் மட்டுமே நமக்கு முக்கியம்.
- அன்னை அனைத்துத் துறைகளிலும் முன்னோடி. முன்னோடியான கருத்தை ஏற்றால் அன்னையை அதிகமாக ஏற்கலாம்.
- மனிதன் சமூகத்தின் அங்கமாக இதுவரை இருந்தான். இந்நூற்றாண்டில் தனிமனிதனானான். From a social being, man has become an individual. எதிர்காலத்தில் அவன் ஓர் ஆன்மாவாக வேண்டும்.
- சமூகத்தையொட்டி வாழ்ந்த மனிதன், தன் சொந்த அறிவும், உணர்வும் வழி நடத்தும் மனிதனாவது, இன்று மனிதன் முன்னோடியாவதாகும்.
- திருமணத்தை இக்கருத்தை மையமாக வைத்துப் பார்த்தால் திருமணம் நறுமணம் வீசும்.
- தன் சொந்தப் பார்வையில் மனிதன் தேற வேண்டுமானால், மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும். குறைந்தபட்சம் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும்.
- தன் கருத்துப்படி ஒருவன் நல்லவனாக இருக்க முயன்றால், அவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ, இருப்பான் எனினும் திருமணத்தை வளப்படுத்த அதுவே தற்சமயம் போதும்.
நல்லெண்ணம் மட்டும் உள்ள நல்ல மனிதனின் திருமண வாழ்வை அன்னை அபரிமிதமான அமுத ஊற்றாக்குவார்.