கணவன் மனைவி – 3

  • நம் அனுபவம் பிறரை நம்பமுடியாது. கேலியாக, குத்தலாகப் பேசுவார்கள். நம் விஷயம் தெரிந்தால் கெடுத்துவிடுவார்கள். வெட்கமில்லாமல் சின்னத்தனமாக நடப்பார்கள். இங்கிருந்து கனடா போன பெண், இங்கு மனிதர்கள் நன்றாக இருக்கிறார்கள். பிரியமாகப் பேசுகிறார்கள். உதவி செய்ய முன் வருகிறார்கள். நம்மூர் போலச் சொற்களே காதில் விழுவதில்லை என்றாள். அவர்கள் behaviour பழக்கம் உயர்ந்ததாக இருக்கிறது. அந்த உயர்ந்த பழக்கம் அருளைப் பெற்றுத் தரும். அதுவும் உணர்ந்த மனநிலையானால், அருள் நிலையாகச் செயல்படும்.

திருமணம் வெற்றிபெற அதுபோன்ற பழக்கம், அதற்குரிய மனநிலை வேண்டும்.

  • முதல்நிலை குடும்பம் – சமூகம் ஏற்கும் முறையான குடும்பம். அடுத்தநிலை குடும்பம் – மனமுவந்த நல்லவர் உள்ள குடும்பம். முடிவானது உயர்ந்த குடும்பம் – உயர்ந்த மனம் அன்னையை ஏற்றுச் செயல்படுதல்.
  • தம் சிறிய சௌகரியத்திற்காக மகனின் வாழ்வையே மாற்றும் பெற்றோர், முதல் மருமகள் எதிர்பாராத நல்ல பெண்ணாகி விட்டதால், அடுத்த மருமகள் வந்தால் முதல் மருமகள் மாறிவிடுவாள், குடும்ப சௌகரியம் பாதிக்கப்படும் என்பதால் அடுத்த பிள்ளைக்குத் திருமணமே வேண்டாம் எனத் தாயார் முடிவு செய்தாள்.
  • நெருக்கம் ஐக்கியமாக வேண்டி நினைத்தால், அதற்குத் திருமணம் பெரிய கருவி. இதே வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தி, ஐக்கியத்திற்குப் பதிலாக அதே தீவிரத்துடன் சண்டையிடுகிறார்கள்.
  • Except in the pages of fiction there is no ideal marriage என ஓர் இந்திய மேதை எழுதினார். ஆதர்ச தம்பதிகள் கற்பனை உலகில் நிஜமானவர் என்பது நடைமுறை.
  • எதிர்த்து மட்டும் பேசும் அழகான பெண், திருமணமானபின் எதிர்த்துப் பேசுவதில்லை என முடிவு செய்தாள். அவளை அறிந்த வயதான பெண்மணியான பேராசிரியர், “You do not know how much your husband adores and idolises you” என்றார். உள்ளத்தால் உயர்த்தி உன் உருவத்தை உன் கணவர் வழிபடுவது உனக்குத் தெரியுமா என்றார். அவர் உருக்கம், வழிபாடு எல்லாம் அவள் மூடிய வாய்க்குரியது. வாயைத் திறந்தால் கூசாமல் சன்னியாசம் கொள்ளலாம்.
  • மனம் அடுத்தவரை ரசித்தால் ‘திருமணம்‘ செத்துப்போகும்.
  • மனிதன் பணிவான், அல்லது அதிகாரம் செய்வான், அடுத்தவரைச் சமமாக நடத்தமுடியாது. அதற்கு மனக்கட்டுப்பாடு தேவை. அடுத்தவர் குறை காணாத பெருந்தன்மை வேண்டும். மனிதத்தன்மை வேண்டும். அது அரிது.
  • அதிகாரம் செய்யாவிட்டால் மணவாழ்வு ஜீவனற்றுப்போகும். பெண் ஆணை நாடுவதே அதற்காகத்தான். அதிகாரம், அதிக காரமாகிவிட்டாலும் ஜீவனிருக்காது. அன்பால் பணிவதும், அதிக உரிமையை எடுத்துக்கொள்வதும் மணவாழ்வுக்கு உயிரளிக்கும்.
  • அறிவுள்ள பழக்கம் பெரும்பாலும் பிணக்கைத் தீர்க்கும். அடுத்தாற்போல் அனுபவம் உதவும். இலக்கிய அறிவு தம்பதிகளைப் பக்குவப்படுத்தும். இவற்றைக் கடந்த நிலையில் அன்னை எப்பொழுதும் உள்ளார்.
  • திருமணம் என்று முடிந்தால் அவள் எதிர்காலம் முழுவதையும் நிர்ணயிப்பது ஒரு மனிதன் என்பதால், அங்கு அளவுகடந்த அதிகாரம் சேரும். அதை நன்முறையில் மட்டும் பயன்படுத்த மனிதனால் முடியாது.

அன்னையை அறிந்தபின் நடக்கும் திருமணங்களில் வழக்கமான பிரச்சினைகள் பெரும்பாலும் இருக்கா. இரு குடும்பமும் பக்தர்களானால் தம்பதிகள் வாழ்வு நம்ப முடியாதபடி அமையும். கணவன் எந்த நாட்டுக்குப் போய் யாரைப் பார்த்தாலும், எந்த வேலையைப்பற்றிப் பேசினாலும் மனைவியைப் பற்றியே பேசுவான். அப்படித் திருமணமான பெண் ஆங்கிலம் கற்றபொழுது எழுதிய 500 வாங்கியங்களில் 100க்கு மேல் மாமாவைப் பற்றியது.

தன்னூரிலும், உறவிலும் உள்ள சுமார் 1000 பேர் தன்னிடம் வந்து அந்தரங்கமாகப் பேசித் தமக்கு conscience keeper என்று பெயரளித்தனர். அதன் விளைவாகத் திருமணமாகாத இவ்விளைஞரிடம் பெற்றோர், இளைஞர், கணவன், மனைவி வந்து தொடர்ந்து பேசினர். இவர் கண்ட பலன் ஒன்றே. அங்குள்ள எந்தப் பெண்ணையும் மணக்க அவர் மனம் சம்மதிக்கவில்லை. திருமணம் வேண்டாம் என முடிவு செய்தார். வயது 32, 33 என்றாயிற்று. அன்னை அன்பர் பழக்கமானார். அன்னையைப்பற்றி பேச வாய்ப்புக் கிடைத்தது. ஏதோ ஓரூரிலிருந்து பெண் வந்தது. இளைஞர் முடிவை மாற்றவில்லை. அபூர்வமான பெண் என்றனர். ஆஸ்பத்திரியில் நர்ஸிங் காலேஜில் ஆசிரியர். அதைக் கருதவும் அவரால் முடியவில்லை. மேலும் வந்த செய்திகளால், போய் விசாரித்தார். இந்தக் காலத்தில் இதுபோன்று ஒரு பெண் பிறப்பதரிது. யாரோ கொடுத்துவைத்தவர் என வாய் தவறாமல் செய்தி கிடைத்தது. அவருக்கு திருமணமாயிற்று. அதே பெண்ணை மணந்தார். திருமணத்திற்கு முன் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டது இன்றுவரை – 30 ஆண்டுகளாக – உண்மை எனக் கண்டார். அது அன்னை சூழல் செய்த அற்புதம்.

வாழ்வில் அன்னை நுழைந்தால் அனைத்தும் மாறும். எந்த நிலைத் திருமணமானாலும், அன்னை வந்தபின் அது ஓரிரு நிலை உயரும். திருமணத்தை உயர்த்த முன்வந்தால், அதற்கேற்ற மனநிலையை ஏற்றால், நிலைமை அற்புதமாக மாறும். எவரும் நம்ப முடியாத மாற்றம் ஏற்படும். ஓரிரு உதாரணங்கள்,

திருமணமான 15 வருஷங்கட்குப்பின் கணவனுக்கு நிரந்தரமான வேலையில்லை; வருமானம் ஏதும் சரியாக இல்லை; பிள்ளைகள் இனி மேற்படிப்பு, கல்யாணம் செய்ய வேண்டிய நேரம்; மனைவிக்குப் பீதி எழுந்தது. வீடு ரகளையாயிற்று. வீட்டிலிருக்கக் கணவனால் முடியவில்லை. மண்ணெண்ணை, தற்கொலை, போன்றவையே பேச்சு. தற்செயலாய்க் கணவன் ஆசிரமம் வந்தார். மனம் அமைதியடைந்தது. மனைவியும் வரவேண்டும் என்ற ஆசை. கூப்பிடப் பயம். கூப்பிட்டார். மனைவிக்கு எரிச்சல், மறுத்தார். ஒரு சமயம் மனைவியும் வந்தார். இந்தச் சாமி மூலமாகவாவது வழி பிறக்காதா என்று தோன்றியது. கணவனுக்கு வேலை கிடைத்தது. ஆர்ப்பாட்டங்கள் மறைந்து அமைதி வந்தது. நிரந்தர வழியை மனைவி நாடினார். கணவன் கொண்டு வரவேண்டியவற்றை, அன்னையைக் கேள் என்ற உபதேசம், ஆச்சரியமாகப் பலித்தது. 4, 5 வருஷங்களில் 800ரூபாய் மாதசம்பளம் 9500ரூபாய் ஆயிற்று.

அடிப்படைப் பொறுப்பில்லாத மனிதன். தேவைகட்கே வழியில்லாத குடும்பம். முதல் நிலைப் பிரச்சினை, எளியது. சீக்கிரம் தீர்ந்தது. எனவே எல்லாம் நல்லபடியாக மாறியது.1000 ரூபாய் சம்பாதிக்கும் பக்தனுக்குத் திருமணமாயிற்று. மனைவி நினைத்ததுபோல் வாழ்க்கையில்லை. படிக்காத வசதியில்லாத பெண் கடையில் வேலை செய்பவனைக் கட்டிக்கொண்டு பெரிய மனக்கோட்டைகளை எப்படிப் பூர்த்தி செய்வது? அவள் முதலில் செய்த காரியம் மாமியாரை வெளியே அனுப்பினார். அதனால் அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை. தாய் வீட்டுக்குப்போய் வரமாட்டேன் என்றார். அதுவும் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. அவள் மனம் வசதியான வாழ்வை நாடுகிறது. அவளுக்கு வசதியான வாழ்வு அமைய வழியில்லை. தனக்கு அடங்கிய கணவன். அறியாமையின் வேகத்தை அவன் மீது காட்டினாள். எண்ணெயைப் புடவையில் ஊற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தாள். அன்னையை அலறி அழைத்தான். அன்றைய பிரச்சினை தீர்ந்தது. வருமானம் 3000ரூபாய் ஆயிற்று. அவள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. முடிவாகக் கணவன் மனம் மாற முடிவு செய்தான். மனைவி அன்னை பக்தையானாள். வருமானம் ரூ.10,000/= ஆயிற்று, மனைவி மாறிய பின் வருமானம் உயர்ந்தது. தொடர்ந்தும் பல மடங்கு உயர்ந்தது. அவளிடம் ஏற்பட்ட மாற்றம் ஆச்சரியமானது. அடிப்படையில் கணவன் மனம்மாறி அன்னையை ஏற்றுக்கொண்டதாலேயே நிலைமை மாறியது. அவனை அறிந்தவரெல்லாம் அவன் வீட்டு மாறுதலை நம்ப முடியாமல் காண்கிறார்கள்.

திருமணப் பிரச்சினை என்பது வாழ்வுக்குரிய பிரச்சினைகள் திருமண வாழ்வில் எழுவதாகும். அதன் திருமண அம்சம் மட்டும் நம் கருத்துக்குரியது. இதர அம்சங்களை விலக்கி, திருமணம், என்ற அளவில் உற்பத்தியாகும் சிக்கல்களை மட்டும் கருதினால் அது,

Taking undue advantage of another

ஆதரவற்றவரை அநியாயமாக நடத்துவது என்ற மனப்பான்மையால் எழுவது. இந்த மனப்பான்மை மனிதனின் சிறிய மனப்பான்மை. கடந்தகாலத்தில் இதற்குப் பலியானவர்கள் மனைவி, மனைவி வீட்டார். இந்த நாளில் நிலைமை மாறுவதால் கொடுமை இடம் மாறுகிறது. கணவனும், மாமியாரும் பலியிடும் வரிசைக்கு வருகின்றனர். நாடு முன்னேறுவதால் பெண் விடுதலை பெறுகிறாள். அது தலைகீழே மாறி ஆண் அடிமையாகிறான். அன்னையின் கொள்கை,

அடிமைத்தனம் அழிய வேண்டும் என்பதாகும்.

அன்னையை ஏற்க மனம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். பிறரை அடிமைப்படுத்த நினைக்கும்வரை நமக்கு அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலையில்லை. இது திருமணத்திற்கு மட்டும் உரியதல்ல. பிள்ளை வளர்ப்பு, கூட்டாளி, நட்பு, ஆபீஸ் வாழ்க்கை ஆகிய அனைத்து இடங்கட்கும் உரியது. இங்கும் வாழ்வுக்கும், அன்னைக்கும் வித்தியாசமுண்டு. ஒருவர் பரந்த மனப்பான்மையால் அடிமைத்தனத்திலிருந்து தன்னை மீட்டு, எவரையும் அடிமைப்படுத்துவதில்லை என முடிவு செய்தால் வாழ்வு அதன் சட்டப்படி

அவரைப் பிறருக்கு அடிமையாக்கும்.

இது தவிர்க்க முடியாதது. அன்னையை ஏற்றுக் கொண்டவர்க்கு இவ்வுயர்ந்த நோக்கமிருந்தால், எவரும் அவரை அடிமைப்படுத்த முடியாது. பக்தர் ஒருவருக்கு வாழ்விலுள்ள எந்தத் திருமணப் பிரச்சினை எழுந்தாலும் – அவற்றை நூறு விதமாக நாம் காண்கிறோம் – அவர் அன்னையை மேலும் ஏற்றுக்கொள்ள முன்வந்து, அதைச் சாதிக்கத் தாம் எவருக்கும் அடிமையாவதில்லை, எவரையும் அடிமையாக நடத்துவதில்லை என முடிவு செய்தால், அன்றே அவர் திருமணம் பிரச்சினைகளிலிருந்து விடுபடும்.

எந்த வகையானத் திருமணப் பிரச்சினையானாலும் அவர்

  • அன்னையை ஏற்க முன்வந்தால்,
  • அதற்காக அநியாயத்தைக் கைவிட முயன்றால்,
  • அநியாயம் போகப் பொய், சின்ன புத்தியைக் கைவிட்டால்,
  • அவர் மனம் தூய்மை அடைந்து,
  • நேர்மை, சத்தியம், நாணயம், புனிதன் என்ற பெயர் ஏற்பட்டு,
  • திருமணச் சூழல் அன்னை சூழலாகி,
  • பிரச்சினை தீர்ந்து, திருமண வாழ்வு நிலை ஒரு படி உயரும்.

கற்பனை உலகிற்கே உரியது அன்பான திருமண வாழ்வு என்ற கூற்றை மனித வாழ்வில் அவர் திருமணம் உண்மையாக மாற்றும். இருவரும் அதை நாடினால் எளிதில் நடக்கும்.

– அன்னை உலகில்லாதவற்றைச் சாதிப்பார்.
–
உலகில்லாத மனப்பான்மையுடையவர் அச்சாதனையை நடத்துவார்.

திருமண வாழ்வில் திருப்தி

வாழ்வைப் பூர்த்தி செய்ய நாடுவது திருமணம். இதுவரை இல்லாத திருப்தியை நாடி செய்வது திருமணம். இதுவரை இருந்த திருப்தியையும் அழிப்பது அதன் நடைமுறை. இலட்சிய தம்பதிகள் என சொல்லிக் கொள்ள அனைவரும் ஆர்வம் கொள்கிறார்கள். இலக்கியத்தின் இலட்சணம் திருமணம், அது வாழ்வில்லை என்பது அனுபவம். ‘கணவன் மனைவி‘ என்ற கட்டுரையில் திருமணத்தின் அடிப்படைகள் எழுதப்பட்டுள்ளன. காதல், அழியாக் காதல், இலட்சியத் திருமணம், ஆதர்ச தம்பதிகள் என்ற கருத்துக்களைக் கருதாது, திருமண வாழ்வு திருப்தி தராது என்ற உலகம் கண்ட முடிவுக்கு நடைமுறையில் பயன் தரும் கருத்துக்களைக் கருதுவது இக்கட்டுரை. இதன் முடிவு,

முழு முயற்சிக்கு முழு திருப்தியுண்டு.

இக்கட்டுரைக்கு முக்கியமான கருத்துகள் :

1. முயற்சியின்றி பலனில்லை.
2.
உறவு என்பது பிரியம், அதிகாரமில்லை.
3.
அதிகாரம் செய்யக் கூடாது என்றால் அங்கு அன்பு சுரக்க வழியுண்டு.
4.
முடிந்தால் எதையும் செய்வேன் என்பவன் மனிதனில்லை, அவன் கணவனாக முடியாது.
5.
நடக்கும் என்றால் நடத்திக் கொள்வேன் என்பது நல்லதல்ல, அவள் மனைவியாக முடியாது.
6.
என்னால் சண்டை போட முடியாது என்பவரால் சுமுகம் எழும்.
7.
பிறர் குறை பிணக்கு.
8.
மனம் மாற்றாரை நாடினால் மணம் இல்லை.
9.
சுத்தம் என்பது கை சுத்தம், வாய் சுத்தம், மனம் சுத்தமாகும்.
10.
சுத்தமில்லாதவர்க்கு சுத்தமாக எதுவும் கிடைக்காது.
11.
உழைப்பில்லை எனில் வருமானமில்லை.
12.
பொறுப்பில்லை எனில் வசதியில்லை.
13.
பொறுமையில்லை எனில் எதுவுமில்லை.
14.
முயற்சி, பிரியம், பண்பு, சுமுகம், சுத்தம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை எந்த ஸ்தாபனத்திற்கும் அடிப்படை. ஸ்தாபனங்களில் சிறந்த குடும்பம் அவையில்லாமல் உருவாகாது.

மனிதன் சந்திரனுக்கும் போகிறான் என்பது திறமை. திறமையால் குடும்பம் உருவாகாது. குடும்பத்தின் கரு பண்பு. பண்பு குடும்பத்தை உற்பத்தி செய்யும். திறமை அதை உயர்த்தும். வாழ்வின் அடிமட்டத்திலுள்ளவர் ஆயிரக்கணக்கில் உயர் மட்டம் போகும்பொழுது திருமண வாழ்வில் திருப்தியடைய முடியுமா என்பது கேள்வியில்லை. முயன்றால் முடியும். அடிமட்டம் இன்று தான் உயர்மட்டமாகவில்லை. எந்த நாளிலும் உயர்ந்தவன் ஒரு நாள் அடியிலிருந்து வந்தவன். உயரே உள்ளது அனைத்தும் கீழேயிருந்ததுதான் என்பது உண்மை. அன்று உயர நாளாயிற்று. இன்று சீக்கிரம் பயனடையலாம், சீக்கிரம் பலன் பெற முயற்சி பெரியதாகவும், சிறந்ததாகவுமிருக்க வேண்டும்.

முயல்வேன் என்பவனுக்கு முடிவில் திருப்தியுண்டு.

பொதுவாக அனுபவமில்லாததால் இளம் வயதினர் திருமணமான 10 நாள், 20 நாளில் விவாகரத்து செய்வது மலிந்துவிட்டபொழுது அமெரிக்க சர்ச்சுகள் திருமணத்திற்கென 15 நாள் பயிற்சியை ஏற்படுத்தினர். இப்பயிற்சி பெற்றவர்கள் அவசரமாக ரத்து செய்வதில்லை. இதைக் கண்டபின் அமெரிக்க சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் இப்பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்று சர்ச் சட்டம் போட்டது.

  • விவரம் தெரியாமல் நடக்கும் குறையை விவரம் தெரிவது தடுக்கும்.
  • அனுபவமில்லாமல் எழும் குறைகளைப் போக்க பயிற்சி அளிக்க முடியும்.

தாலுக்காபீஸில் குமாஸ்தாவாகச் சேரும் பட்டதாரிகளில் சிலர் இன்று சர்வீஸ் முடியும்பொழுது டிப்டி கலெக்டராக வருகிறார்கள். அதே பட்டதாரிக்கு 1½ ஆண்டு பயிற்சி அளித்து, I.A.S.இல் ஆரம்பத்திலேயே டிப்டி கலெக்டராக்குகிறார்கள். ஒரு டிப்டி கலெக்டர் செக்ரட்டரியாகவும், கவர்னராகவும் ஓய்வு பெறுகிறார். அதற்கெல்லாம் அடிப்படை இந்த 1½ ஆண்டு பயிற்சி. டிப்டி கலெக்டர் ஒரு ஜில்லாவில் பாதியை ஆள்கிறார். திருமணம் என்பது குடும்பத்தை ஆள்வது. திருமணத்தில் திருப்தி வர பயிற்சி பெற முடியும், நாமே நமக்குப் பயிற்சியளித்துக் கொள்ள முடியும் என்று நாம் அறிய வேண்டும். அதுபோன்ற பயிற்சிக்கூடங்கள் பரவலாக வந்துவிட்டால் விவாகரத்து 50%லிருந்து 5% ஆகக் குறையும். அது இன்று இல்லாததால், நாமே அப்பயிற்சியைப் பெற முயல வேண்டும்.

  • திருமணத்தில் எழுபவை எளிய பிரச்சினைகள்.
  • பயிற்சி எல்லா எளிய பிரச்சினைகளையும் முழுவதும் தீர்க்கும்.
  • படிப்பு, பண்பு, நகர வாழ்க்கை, நாகரீகம் உள்ள குடும்பங்களில் குடும்பப் பூசல் குறைவாக இருப்பது, பூசலைத் தவிர்க்க பயிற்சி பெற முடியும் எனக் காட்டுகிறது.
  • படிப்பும், பண்பும், பல தலைமுறைகளில் தரும் பயிற்சியை, ஒரு பயிற்சி சில நாட்களில் தரமுடியும் என்பது எல்லாத் துறைகளிலும் அனுபவம். திருமணம் விலக்கில்லை.

எல்லா பயிற்சியும் எல்லோர்க்கும் தேவையில்லை. எந்தப் பிரச்சினை எழுகிறதோ பயிற்சி அதற்குத்தான் தேவை. திருமணம் என்பது உறவு. நெருக்கமான உறவு. உறவு என்றால் பிரியம். பிரியமாக மட்டுமிருந்தால் பிணக்கு வாராது. பிரியத்தைக் கண்டவுடன் மனித சுபாவம் அதிகாரத்தை நினைக்கும். அதிகாரத்தைக் கருதினால் பிரியம் மறையும், உறவு முறியும். யார் அடுத்தவரை அதிகாரம் செய்வது என்பது திருமணமான முதல் நாள், இரண்டாம் நாள் முடிவாகும். மனிதன் சூட்சுமமானவன். அதிகாரம் செய்ய அணுவளவு இடமிருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டான். ஆயிரமாண்டிற்கு முன் பெண் மண்ணாக இருந்த நாளிலும் எந்த கணவனும் மனைவி பேச்சைக் கேட்பவன் என்று உலகம் அறியும் வகையில் பெண் உள்ளூர ஆட்சி செலுத்தினாள். இன்று இந்தியாவில் பெண்கள் கார் ஓட்டுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் இந்தியப் பெண் கார் ஓட்டிச் சென்றாள். எவரும் கண்டு கொள்ளவில்லை. அமெரிக்காவிலுள்ள இந்திய ஆண்கள் இப்பெண்ணை கோபமாகப் பார்த்து முறைக்கின்றனர். அமெரிக்கா ஆனாலும், காலம் 2001 A.D. ஆனாலும், அதிகாரம் உள்ளவரை ஆண்மகன் அதை செலுத்துவான். இது மனித சுபாவம்.

  • நாடு முன்னேறுகிறது.
  • நாட்டின் முன்னேற்றம் படிப்பிலும், வசதியிலும், நாகரீகத்திலும் தெரிகின்றது.
  • அதே தொழிலாளி, கூலிக்காரன், வேலைக்காரி, இளைஞர்கள், பெண்கள் ஆகியவர்கட்கு சமூகம் தரும் மரியாதை உயர்வதும் நாகரீக சின்னம்.
  • நம்மால் முடிந்தாலும், நியாயமில்லாவிட்டால், நாகரீகம் இல்லாவிட்டால் செய்யக்கூடாது என்பது அதுபோல் நாகரீக சின்னம். அதுபோல் கடந்த 50 ஆண்டுகளாக சமூகம் கைவிட்டன பல. குழந்தைகளை அடிப்பது, நடுத்தெருவில் சண்டை போடுவது, சத்தமாக ஆபீசில் பேசுவது, Qவில் நிற்காமல் கூட்டமாக அடித்து மோதுவது போன்றவை குறைகின்றன. இது நாகரீக சின்னம்.
  • கணவனும், மனைவியும் இந்த சின்னத்தை அதிகமாக நாடினால், பூசல் குறைந்து மறையும், திருப்தி ஏற்படும். முழு திருப்தி ஏற்படும்.

மனைவியிடம் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்வாள் என்பதால் அவளிடம் கோபத்தைக் காட்டுவது, கணவனை ஏமாற்றினால் கோபப்பட மாட்டான் என்பதற்காக ஏமாற்றுவது என்பவை சிறு விஷயங்கள் என்றாலும், அவற்றை விட்டுக் கொடுக்க மனம் வராது.

சிறு விஷயங்களில் உள்ள பெரிய மனப்பான்மை பெரிய விஷயத்தைப் பூர்த்தி செய்யும்.

இதுபோன்ற சிறு விஷயம் பெரிய விஷமாகி 10 நாள் ஆர்ப்பாட்டம், பெண் தாய் வீட்டுக்குப் போனது, அடிதடி சண்டை வரை வந்தது பலர் அனுபவம். விஷயம் சிறியது என்றாலும் விட்டுக் கொடுக்க மனம் வாராது. ஏன் அவர் விட்டுக் கொடுக்கட்டுமே என்று தோன்றும்.