பரமனை நாடும் ஜீவாத்மா – 1

மனிதன் புனர்ஜென்மம் எடுப்பதுண்டு. பிறப்பும், இறப்புமில்லாத ஜீவாத்மாவுக்கும் பகவான் ஸ்ரீஅரவிந்தர் புனர்ஜென்மமளிக்கும் யோகம் பூரணயோகம். பிரபஞ்சம் சிருஷ்டி முழுவதும் தழுவியுள்ளது. உலகம் அதனுள் சிறு பகுதி. பிரபஞ்சம் பிரகிருதி. பிரபஞ்சத்திற்கும் ஆத்மாவுண்டு. அதை Universal soul பிரபஞ்சத்தின் ஆன்மா என்கிறார். அதற்கு முன்னேற்றமும், வளர்ச்சியும் உண்டு. அதற்கடுத்த நிலை பரமாத்மா, பரமன், ஈஸ்வரன், புருஷோத்தமன் என்பது. இந்நிலையை பிரபஞ்சம் நாடுகிறது. பரந்து நிற்கும் பிரகிருதியான பிரபஞ்சம் உயர்ந்துறையும் பரமனை நாட வழியில்லை. பிரகிருதி ஆன்மா மூலமே பரமனை அடையமுடியும். பிரபஞ்சம் பிரபஞ்சத்தின் ஆன்மநிலையை உயர்த்தி பரமனையடையவேண்டும். அதை எட்ட, பிரபஞ்சம் தன்னுள் அடர்ந்து செறிந்த புள்ளிகளை மையங்களாக உருவாக்குகின்றது. அவை ஜீவாத்மாக்கள். ஜீவாத்மா சலனமற்றது, அழிவற்றது, மாற்றமில்லாதது, வளராது. வளராத ஜீவாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மாவாக வளரவேண்டும். இந்த வளர்ச்சிக்கு முதல் நிபந்தனையாக, ஜீவாத்மா தன்னை ஒரு கூட்டுக்குள் அமைத்துக் கொள்கிறது. பட்டுப்பூச்சி தன்னைச் சுற்றி கூடு அமைப்பதைப்போல் வளராத ஜீவாத்மா, வளரும் தன்மை பெற, தன்னை முதலில் ஒரு கூட்டுக்குள் இருத்தி, பிரபஞ்சத்திலிருந்து பிரிகின்றது. கூட்டுக்குள்ளிருக்கும்வரை ஜீவாத்மா தன்னையறியாத, அறிய முடியாத (unconscious) நிலையிலுள்ளது. பிரகிருதி கூட்டுக்குள் செயல்பட்டுத் தன் அனுபவ சாரத்தை ஆன்மாவாகச் (சைத்தியப் புருஷன்) சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டை உடைக்கிறது. தன்னையறியாத சாட்சிப் புருஷன் தன்னையுணர்ந்த சைத்தியப் புருஷனாகும் நிலையில் கூடு உடைந்து ஜீவாத்மா, பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. இதுவே பிரபஞ்சம், பிரபஞ்சத்தின் ஆத்மா ஆகும் பாதை. இது பூரணயோகத்தின் இரண்டாம் படி. புனர் ஜென்மமெடுத்த ஜீவாத்மா பிரபஞ்சம் முழுவதும் பரவி, பிரபஞ்சத்தின் நிலையை – ஆன்மீக நிலையை – உயர்த்துகிறது. மூன்றாம் படியில் பிரபஞ்சத்தின் ஆத்மா தன்னை ஈஸ்வர நிலைக்குயர்த்தி சத்தியஜீவனாகிறது. அகந்தை என்பது ஆன்மாவின் கூடு.

ஜீவாத்மா சைத்தியப்புருஷனாகி, பிரபஞ்சத்துடன் கலந்து பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி, சமர்ப்பணம் பூரணமாகும் கட்டத்தில் ஈஸ்வர நிலையை சத்திய ஜீவனாக எட்டிப் பிடிப்பது, (spiritual evolution) ஆத்மாவின் பரிணாம வளர்ச்சி. அதுவே பூரணயோகம். அழிவற்ற ஆத்மாவை வளரச் செய்யும் யோகம் இது.

ஜீவாத்மா உலகில் உடலை ஏற்றுக் கொண்டு, மனத்தாலும் பிராணனாலும் ஜீவனாயிற்று. ஜீவாத்மா, பரமாத்மாவை நாடுவது மோட்சப் பாதை. ஜீவன், பரமாத்மாவை நாட சக்திக்கு சரண் அடைந்து, பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி, ஈஸ்வர நிலையை எட்டும் வழியில் சத்தியஜீவனாவது பூரணயோகம். மோட்சம் பிறவிச் சுழலிலிருந்து ஜீவாத்மாவை விடுதலைச் செய்கிறது. இதையடைய ஜீவாத்மா தான் ஏற்றுக் கொண்ட உடலையும், மனத்தையும் விட்டகன்று, விடுதலையை நாடுகிறது. இதுவே ஜீவாத்மாவின் சுயநலமான செயலின் கடைசிக் கட்டம் என்கிறார் பகவான். தன் பகுதிகளை – உடல், மனம் – மறந்து தனக்கு விடுதலை தேடும் சுயநலம் மோட்சப்பாதை. ஜீவாத்மா, ஜீவனின் எல்லாப் பகுதிகளையும் அரவணைத்தால் விழிப்புறுகிறது. விழிப்புறும் பொழுது சைத்தியப்புருஷனாகிறது.

மனத்தால் வாழும் உடல் ஆன்மாவால் வாழும் ஜீவனாகும் யோகம் இது. இறைவனையடைய ஆர்வம், அக்னியாகி மனித ஜீவனைத் தகிக்கச் செய்தாலன்றி எந்த யோகத்தையும் மேற்கொள்ள முடியாது. அதற்கும் அவன் அழைப்பு தேவை. தானே சிறந்து பூரிக்கும் ஆன்மா புறத்தீண்டுதலால் விழிப்புறாது. புற உணர்ச்சிக்கே காத்திருந்து செயல்பட்ட சுபாவம், பரம்பொருளும் அதுபோல் வரவேண்டும் என்று காத்திருக்கும். கண்மூடி கூட்டுக்குள்ளிருந்தாலும் நேரம் வரும்வரை காத்திருக்கும் சுபாவம் உண்டு. வீறு கொண்டெழுந்தாலும், அங்குலம் அங்குலமாக முன்னேறினாலும், நட்பால் நடத்தப்பட்டாலும், தத்துவத்தால் தன்னை இழந்தாலும், காதில் விழுந்த குரலே அசரீரியாகி ஆன்மபலன் அளித்தாலும் ஜீவன் சுபாவத்தின் சுவட்டையே பின்பற்றும். சுபாவமும், சூழ்நிலையும் அழைப்பின் அமைப்பை நிர்ணயிக்கும்.

ஜீவாத்மா தன்னையுணர்ந்து, தன் நிலையான தன்மையை மாற்றி, சுயநலமாக மோட்சத்தை நாடாமல், அகந்தையிலிருந்து விடுபட்டு, செயல்களைச் சாட்சியாகப் பின்னின்று கவனிக்காமல், செயல்களின் போக்கை நிர்ணயிக்க முயன்று, பரமாத்மாவின் எதிரே வந்து, தனக்குரிய செயல்களை அவனுக்கு அர்ப்பணித்து, தன்னை நேருக்கு நேர் முழுமையாகச் சமர்ப்பணம் செய்வதை பகவான் சரணாகதி என்கிறார். பரமன் இதை ஏற்கிறான். மற்ற நிலைச் சரணாகதிகள் அவனுக்கு ஏற்புடையனவல்ல. சரணாகதியும், அதற்குரிய சமர்ப்பணமும் ஆன்மாவுக்குரியவை. மனம் இங்குச் செய்யக்கூடியது இல்லை. தடையாக இல்லாமலிருப்பதே அதன் பங்கு. முழுத் திறனையும், முடிவையும் சமர்ப்பணத்திற்குச் சாதகமாக்குவதே அதன் பங்கு. ஆன்மா மனத்தைக் கடந்தது. அதன் செயலும் மனத்தைத் தாண்டியதேயாகும். இதயம் சமர்ப்பணத்தை ஏற்று, முழு மூச்சுடன் செயல்பட்டால் அதன் வேகம் ஜீவனைத் தாண்டிவிடும். தாண்டியநிலையில் சமர்ப்பணம் பலிக்கும். புத்திக்குப் புலப்படுவதற்கு வேகமில்லை. சக்தியில்லை. ஜீவனின் சக்தி முழுவதும் மனத்திலில்லை, இதயத்திலிருக்கிறது. இதயவாயில் திறந்து, சமர்ப்பணத்தை ஜீவன் முழுவதும் ஏற்பதுவே சரணாகதியைப் பூர்த்தி செய்யும்.

எது புரிகிறது என்பது பேச்சில்லை.
எதைச் செய்கிறோம் என்பதே முக்கியம்.
ஆன்மாவின் உயர்வை ஏற்க ஜீவனின் பூரணத்தால் தான் முடியும்.
புத்தியின் தெளிவுக்கு இப்பூரணமில்லை.

ஆன்மாவை அறிவது ஞானம். ஞானம் தெளிந்தால் ஞான யோகம் பலிக்கும். மோட்சம் கிடைக்கும். ஆன்மா விடுதலையுறும். நாம் கொண்ட கொள்கை ஆன்மீக உயர்வு, ஏற்றம். யுகாந்திரக் காலமாக ஆன்மா அசைவற்றது என்ற நிலையை மாற்ற வேண்டும். அதை வளரச் செய்தல் அவசியம். வளர்ந்து, உயர்ந்து, பிரபஞ்சம் முழுவதும் ஆன்மாவாக வியாபித்து, பிரபஞ்சத்தின் குறிக்கோளைப் பூர்த்தி செய்யவேண்டும். அதன்பின் ஈஸ்வர நிலையை சத்தியஜீவனாகப் பெற வேண்டும். இதுவரை யோகத்தில் இல்லாத குறிக்கோள் இது. சிருஷ்டியிலும் இல்லாத ஒன்று. இறைவன் சிருஷ்டிக்காத ஒன்றை மனிதன் இறைவனாகி இனி சிருஷ்டிக்க வேண்டும்.

இதை ஜீவனால்தான் செய்ய முடியும். புத்தி விளக்கம் பெறும். ஜீவன் வாழ்ந்து வளர்வது. ஜீவன் இன்று பிரிந்து நிற்கும் பகுதிகளாக இருக்கின்றது. அதன் எல்லாப் பகுதிகளிலுமுள்ள ஆன்மா வெளிப்பட்டால், ஜீவன் ஒருமையுறும். ஆன்மீக வெளிப்பாட்டால் ஒருமையற்ற ஜீவன், ஜீவாத்மாவைச் சமர்ப்பணம் செய்து, சத்தியஜீவனாகும். பகுதிகளால் செயல்படும் ஜீவன் ஒரு பகுதி செயல்படும்பொழுது, அடுத்தது கலந்து கொள்ளாமலிருக்க முடியும். முழுமையாகச் செயல்படும் ஜீவன், முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.

சரணாகதி ஜீவாத்மாவுக்குரியது.
சமர்ப்பணம் முழுமையான முயற்சிக்குரியது.
இதுவரை யோகங்கள் மேற்கொள்ளாத முழுமை இது.

அவன் அருளாலே அவனை நாடுகிறோம். வெளிப்படையாகச் செயல்படுவது அவன் வழக்கமன்று. திரைமறைவில், ஆழ்ந்த மனத்தில் அவன் செயல் அருளாக நம்மை அறியாமல் உருப்பெற்றபடியிருக்கின்றது. இது நிறைவு பெற்ற நேரம் வெளிப்பட்டால், நம்மை மீறி அருள் நம்மை அவனிடம் அழைத்துச் செல்லும். ஜீவனில் பூரணன் பெற்ற பூரணம், மனதில் மாற்றமாக எழுந்தால், அது நிலையானது. நம்மையறியாமல் எண்ணம் அவனை நாடி, எண்ணமே ஆர்வமாகி, சமர்ப்பணமானால், அது அருளின் அரவணைப்பாகும். ஜீவனில் சூரியன் உதித்தது போலாகும். அதற்கு மாற்றமில்லை. ஏற்றத்தாழ்வில்லை. குறையும், தடையும், காலைக் கதிரவனை மறைக்கலாம், அழிக்க முடியாது. இருளால் சூழப்பட்ட இரவு நீங்கி, ஒளியால் நிறையும் பகல் உதயமானது போல், மனித வாழ்வின் போக்கு மாறுகிறது. இறைவனை நோக்கிச் செல்கிறது. இறைவனின் அழைப்பைக் கேட்ட இதயம் இனி அதை மறக்காது. எந்தத் தடையும் சொந்த முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பதில்லை. உயிரும், உடலும், உணர்வால் ஆட்கொள்ளப்படுகின்றன. நெஞ்சத்தின் உறுதி நெகிழ்ந்த வலிமையாகி, குறுக்கே வரும் குறைபாடுகளை விலக்கித் தன்னை இறைவனில் இறுதியாக இருத்திக் கொள்ளும்.

யோகத்தை ஆரம்பிக்கும் வழி இது ஒன்றுதான் என்பதில்லை. பல பிறவிகளில் ஆன்மா தன்னைத் தயார் செய்து கொள்கிறது.நாம் வாழும் அன்றாட வாழ்வை விட நம் சுபாவம் பெரியது. அது ஜீவனின் பகுதி, பெரும் பகுதியாகும். சந்தர்ப்பத்தால் எழும் இலட்சியங்கள் பல. அருகிலுள்ளவர், அன்புக்குரியவர், ஆன்மீகத்தை விழைபவராக இருக்கலாம். அவருடைய சமர்ப்பணம் பூரணமானது என்பதாலும், அவர் இலட்சியம் உயர்ந்தது என்பதாலும், அவரன்புக்கே வாழ மனம் இன்று விழைவதாலும், மனம் அவரையும், அவர் இலட்சியமான இறைவனையும் நாடுவதுண்டு.

மனம் சுபாவத்தின் பகுதி என்பதால், சுபாவம் மனத்தை விடப் பெரியது என்பதால், மனம் நாடியதை சுபாவம் ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தமில்லை. சுபாவம் அதை ஏற்க மறுத்தால், மனத்தின் ஆர்வம் வெம்பி உதிரும் பிஞ்சு போலாகும். இதுவே நிலைமை எனில் யோகம் பலிக்கவில்லை என்பர். ஜீவனின் ஆழ்ந்த மையம் குறையுடையது எனில் சுபாவம் வழுவும். சுபாவத்தில் சுருதி கூட்டும் இராகம் எழவில்லை எனில், இறைவன் நம்மை ஆட்கொள்ளவில்லை என்று பொருள். யோகப்பாதையில் எந்த முயற்சியும் வீண் போவதில்லை. படித்த புத்தகம் பரீட்சைக்கு உதவவில்லை என்றாலும், படித்தது வீண் போவதில்லை. வருங்கால ஆன்மீகக் குறிக்கோளை இன்று நிர்ணயிக்கும் சிறு முயற்சியாவதுடன் அது நின்றுவிடும்.

மனத்தாலோ, உணர்வால் விழைவதாலோ, உடலால் உழைப்பை நல்க முன் வருவதாலோ, நல்லது செய்ய முடியும். முடிவான பலன் பெறுதல் இயலாது. தூரத்து நட்சத்திரம் ஆன்மாவைத் தூக்கத்திலிருந்து எழுப்பும். வேணுகானம் உணர்வைப் பயித்தியமாக்கும். அவை முன்னேற்றப் பாதையில் முதல் அடிகளாக அமையும். முடிவை எட்ட முழு ஜீவன் தன்னை உவந்து அர்ப்பணித்து மகிழ வேண்டும். யோகத்தை மேற்கொள்பவன் முழுமையுற்ற மனிதன். யோகமே வாழ்வாக அமைந்தவன் பூரணயோகச் சாதகன். முழுமையான அர்ப்பணம் தன்மையான இலட்சியமானால் முடிவான பலனை நாடும் பாதையில் நாம் நடக்க முடியும்.

வாழ்வில் இருளும் ஒளியும் எதிரெதிராக அணிவகுத்து நிற்கின்றன. இருளின் வலிமை இன்று மிகுதியாக நிற்கிறது. அதனால் வாழ்வு மையம் இருளில் அமைந்துள்ளது. ஒளியும், அதன் மையமும் இனி எய்த வேண்டிய இலட்சிய இலக்காக உள்ளன. வாழ்வின் செயல்கள் இருளை உறுதிப்படுத்துகின்றன. இருளை நோக்கிச் செல்லும் நம் சக்திகளை திசை மாற்றி ஒளியை நோக்கி அனுப்புவது யோகம். மனித வாழ்வு பெரும்பாலும் விலங்கின் வாழ்வு. தேவையால் வாழ்வு நிரம்பிய நிலையில் தேவையே இலட்சியமாகிறது. இலட்சியத்தை நோக்கி நம் சக்திகள் குவிகின்றன. இறைவனை நாடும் சக்திகள் அர்ப்பணம் செய்த மனிதனுடையவை. பிழைத்தால் போதும் என்ற வாழ்வின் தேவைகள் அர்ப்பணம் செய்த வாழ்வுக்கு இன்றும் என்றும் எதிரியாய்த் தோன்றுகிறது. திசை மாறி அருளை நாடுவதே யோகம். அப்பாதை கரடுமுரடானது, பள்ளம், படுகுழியால் நிறைந்தது. நாமும், நம் சுபாவமும், சூழ்நிலையும், பழக்கமும், பண்பும், பிரபஞ்ச வாழ்வின் அமைப்பும், முழு மூச்சுடன் நாம் அருளை நாடுவதைத் தடுக்கின்றன. ஆன்மீகப் புனர்ஜென்மம் அவற்றிற்கு விருப்பமானதன்று. எண்ண அலைகளும், பாசவலைகளும் பின்னிக் கொண்டுள்ள வாழ்வின் மையம் இருளின் மையமாகும். வலையை அறுத்து, அலையை நிறுத்தி, மையத்தை மாற்றி, இருளைப் போக்குவதே யோக இலட்சியம். அகலும் இருள் புது மையத்தை ஒளியால் ஏற்படுத்தி நிலை பெறச் செய்யும். புது உலகம் சமைப்பேன் என்றான் அமரகவி. பிரபஞ்சம் ஒளியில் புதுப் பிறவி எடுக்க வேண்டும் என்பது பூரணயோகம்.

மேல் மனம் புறநிகழ்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது. நம்பிக்கை, புற நிகழ்ச்சியின் அமைப்பை நாடுகிறது. இறைவனையே நாடும் உணர்வு இதயத்தின் எழுச்சியாகும். புறத்தை நாடும் மனம் மாறி இறைவனை நாடும் இதயத்தைப் புது வாழ்வு மையமாகக் கொள்ளுதல் அவசியம். தாழ்ந்த உணர்வுகள் புது மையத்தை ஏற்று உயர்ந்த ஞானத்தால் ஒளிவிடச் சம்மதிப்பதும் அவசியம். சுபாவம் மையத்தை சூழ்ந்து வளருதலும் அத்தியாவசியம்.

கரணங்கள் கனிந்து – ஆன்மா, மனம், உடல், உணர்வு – சமர்ப்பணத்தை பூர்த்திச் செய்தால், இறைவன் பூவுலகிற்கு இறங்கி வந்து ஏற்கும் பாத்திரமாக வாழ்வு மாறும். விதியே கதியென சுழலும் உலகில், இது சாத்தியமானதன்று. புது ஒளி எழுந்து, விதியின் கதியே செல்லும் எண்ணத்தை சுண்டி இழுத்து அதுவன்று உன் பாதை, இனிப் புத்தொளி நோக்கிப் போய் புனர்ஜென்மம் எடுப்பதே உன் இலட்சியம் என்பது சிரமம். எண்ணம் ஏற்பது கடினம். ஏற்று வழிவிட்டால் உணர்வை அழைத்தால், அது கோபாவேசத்தோடு பொங்கி எழும். உடல் உன் குரலைக் காதில் வாங்காது. எனினும், எண்ணத்தின் பிரகாசத்தை இழந்து மனம் ஜோதியின் பிழம்பாவது அவசியம். ஆவேசமாக அலையும் உணர்வு பரந்து விசாலமான நித்திய நிலைக்கு மாறுவது அத்தியாவசியம். கூக்குரலிடும் விலங்கெனும் உடல், உள்ளொளிப் பெருக்கால் ஜொலிக்கும் கருவியாய், சுடர்விடும் ஒளிவிளக்காய் இறைவனுக்கு ஊழியம் செய்ய முன் வருதல் தவிர்க்க முடியாத முன் நிபந்தனை.

முடியாத சிரமத்தை மனம் வேண்டாத விரதமென விவரித்து, ஒதுக்கியது. இறைவனை எதிர்க்கும் அசுரனை மனம் கற்பனை செய்தது. அசுரனை விட்டகல வேண்டும் என தனக்குத் தானே கூறியது. கூறியது நம்புதலுக்குரியது. மனம் அதை நம்பவும் செய்தது. அசுரனை ஒதுக்கி, அவன் செயல்களை நசுக்கி, இறைவனை நாடும் தவத்தைத் தவசிகள் மேற்கொண்டது ஆச்சரியமில்லை.

எதிரியோ, எதிரான சந்தர்ப்பங்களோ வாழ்க்கையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், அதிலிருந்து மீறுவது சிரமம். கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயன்றால், முயற்சி ஒரு புறம் வெற்றி பெறும்பொழுது அடுத்த பக்கம் தளர்ச்சி ஏற்பட்டு, தோல்வி ஏற்படும். திடீரென விடுபட முயன்றால் வெற்றி கிடைக்கும். வாழ்வை விலக்கி, வெற்றி பெற்ற தவசிகள் அநேகர். எந்த வாழ்வு எதிரியின் ஆக்ரமிப்புக்குள்ளிருக்கிறதோ அதை ஏற்பது பூரணயோகம். எதிரியையும், எதிர்ப்பையும் ஏற்று அதை மாற்ற முயல்வதே இவ்யோகப்பாதை. சிக்கலைக் கண்டு விலக அனுமதியில்லை. வாழ்வை ஏற்றால் சிக்கல் அவிழாது; மேலும் சிக்கலாகும். தூர இருந்து மிரட்டிய வாழ்வு நாம் அதை ஏற்றவுடன் ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கும். இருப்பினும் யோகம் பலிக்கும். ஒரு கட்டத்திற்குப் பின், சிரமம் உதவியாகும். எதிரியான வாழ்வு துணைவனாகும். தீவிரமாக, விழிப்போடு முழுமையை நாடும் சாதனையேற்ற வாழ்வு எதிர்ப்பை விட்டுத் தம் சாதனையைச் சாதிக்க ஆரம்பிக்கும். அசுரனின் பிடியிலிருந்து பிடுங்கிய ஆயுதம் உலகையும், பூமாதேவியையும் உயிர்ப்பிக்கும் மார்க்கமாகும். முழுமையை நாடுபவன் குறுக்கு வழியில் போக முடியாது. நம்மையும், வாழ்வையும் அசுரனிடமிருந்து ஆண்டவனுக்காக வெல்லும் பாதை இது. நம் ஜீவனையும், ஜீவியத்தையும் அவனிடம் ஒப்படைக்கும் உயரிய யோகம் பூரணயோகம். வாழ்வை அழித்து, ஆன்ம விடுதலைபெறும் நோக்கம் நமக்குரியதன்று. பரப்பிரம்மத்தையே அடையலாம் எனினும், அது பாமரனுக்கும் எட்டும் வகையில் இருந்தாலன்றி நாம் அதை ஏற்கப் போவதில்லை. சொர்க்கவாழ்வு முழுச் சிறப்புடையதன்று. சொர்க்கத்திற்கே அது சிறப்பு. பூலோகச் சொர்க்கம் பூமா தேவியின் பூரணம். பரமபதம் பாமர வாழ்வில் பரிசாகக் கிடைக்கப் பாடுபடுவது நம் இலட்சியம்.

மனிதன் பல பகுதிகளாலானவன் என்பது மட்டுமன்று. ஒவ்வொரு பகுதியும், தனித்தியங்கும் தன்மையுடையது. மற்ற பகுதியை நம்பி வாழாதது. மற்றதுடன் ஒத்துவர வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லாதது. எல்லா இலாக்காக்களும் ஒரே சர்க்காரைச் சேர்ந்தவை எனினும், எந்த இலாக்காவும் அடுத்ததுடன் இணைந்து செயல்பட முடியாது. அத்துடன் மனிதன், மனிதனாக மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தின் பகுதியாக இருப்பதால், அவன் எண்ணம் அவனுக்கு வெளியே யார் மனதிலோ உற்பத்தியாவதால், தன்னுடைய விடுதலையை மட்டும் அவன் தனித்துப் பெறும் யோகப்பாதை பூரண யோகத்திற்குப் பயன்படாது. ஆற்றொழுக்காகப் போன தனி மனிதவாழ்வு, யோகத்தை ஆரம்பித்தவுடன் பிரபஞ்சத்தையோ, பிரகிருதியையோ எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குடும்பம் நடத்துபவன் உலகை நினைப்பதில்லை. (Industry) தொழில் நடத்துபவனைச் சட்டம், சரக்கு, மார்க்கெட், பாஷன், அத்தனையும் பாதிக்கும், ஏனெனில் தொழில் உலகில் ஒரு பகுதி. யோகத்தை மேற்கொண்டவுடன் தனி மனிதன் தன்னைப் பிரகிருதியின் பாகமாகக் காண்கிறான். மனத்தில் சிக்கல், மனிதனின் பல்வேறுப்பட்ட திறமைகளின் மோதலால் ஏற்படும் முரண்பாடுகள், ஆர்வமாக இயற்கை எழுப்பும் அளவில்லாத குழப்பம், மனிதன் முன் தீர்வு காண வேண்டி எழுகிறது. எளிய மனிதனின் வாழ்வு மந்தத்தை மகிமையாகக் கருதுவது. ஆன்மாவின் ஆழமோ, திரை மறைவில் விரியும் திசை போன்ற பரப்போ, அவனறிந்த அறிவுக் களஞ்சியத்தை எட்டியது இல்லை. எளிய வாழ்வு அறியாமையின் அற்புதம். சின்னம்சிறு ஆசைகள் பல, தானே எழும் சிற்றறிவு, கலையுணர்வு, அர்த்தமற்ற கருத்தை இலட்சியமாக்கும் மனநிலை, நோய், சலிப்பும், சந்தோஷமும் மாறிவரும் வாழ்வின் அலைகள் ஒழுங்கான குழப்பமாக அவன் வாழ்வை உருவாக்குகின்றன. நாகரீகம் அடைந்த மனிதன் மனத்தளவில் அநாகரீகமாக இருக்கிறான். யோகத்தால், ஜீவனில் ஆழ்ந்தபொழுது நாம் காணும் காட்டுமிராண்டியை வென்று அகற்ற வேண்டும் என அறிய முடிகிறது.

பிறரை நம்பி வாழமாட்டேன். எனக்கு எவரும் தேவையில்லை. நான் சுதந்திரப் பறவை. என்னை எவரும் எதுவும் கேட்கக்கூடாது, நான் வணங்காமுடி மன்னன், என்று நினைப்பவர்களை, பேசுபவர்களை நாம் காண்பதுண்டு. பத்து நாள் படுக்கையாகப் படுத்துவிட்டால், பிறர் உதவியில்லாமல் நாள் போகாது, ஆனால் உயிர் போகும் என்ற அனுபவம் வரும். அதையும் தாண்டி நம் உணவு, உடை, வீடு, பணம், காரியங்கள் பூர்த்தியாக நாம் ஆயிரம் பேரை நம்பியுள்ளோம் எனச் சற்றுச் சிந்தனை செய்தால் தெரியும். நாம் விடும் மூச்சு, நம் உள்ளே செல்லும் மூச்சுக்காற்று பிறருக்குள்ளே சென்று வந்தது, ஆற்றில் நீச்சலடித்தால் ஆயிரம் பேர் குளித்த நீர் அது. நாம் பேசும் பேச்சு அனைவரும் நமக்களித்தது எனவும் தெரியவரும். எண்ணங்கள் நமது என நாம் நினைப்பவை நம்முடையனவல்ல, பிறர் மனதில், உலகில், பிரபஞ்சத்தில் எழுபவை, நம் மனம் வழியாகவும் நுழைந்து செல்கிறது. நாம் என்பது ஒரு தோற்றம், உண்மையன்று. நாம் ஒருவரல்லர். நம்முள் பல (personality) மனிதர்கள் உண்டு. அவர்கள் பல திசைகளில் போக முயல்கிறார்கள். மாட்டுச் சந்தை போன்ற மனத்தில் மறுமலர்ச்சியை எழுப்ப நாம் முயல்கிறோம் என்பதை யோகம் நமக்குணர்த்தும். இவற்றையெல்லாம் தாண்டி இயற்கையின் இரகஸ்யம் எது என நாம் காணவேண்டும். அதிலிருந்து ஒளிமயமான ஒழுங்கை ஏற்படுத்த வேண்டும் என்பதே நம் இலட்சியம்.