பரமனை நாடும் ஜீவாத்மா – 2

எதுவுமே முடியாது, எவராலும் முடியும் என்று நினைக்க முடியாது, எக்காலத்திலும் இயலாது என்பது ஆன்மவிடுதலையை நாடியவன் நிலை. மனம் தெளிவின்றிச் செயல்பட்ட காலம். பிராணன் என்றுமே பிடாரி. இருளை உற்பத்தி செய்வதே உடல் எனும்படி காயத்தின் அமைப்பு. ஆன்மாவைக் கண்டவரில்லை. அப்படியொன்று இருப்பதாக அறிந்தவரில்லை. இவற்றையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்றிருப்பதாகக் கொண்டு அதைத் தேடும் நேரம். ஆனால் அதை இவற்றின் மூலமே அடையமுடியும் என்பது நிலை. ஜீவனுள்ளே போட்டி, எதிர்ப்பு, கடும் போர். மனம் பிராணனை எதிர்க்கிறது. பிராணன் மனத்திற்குப் பரம எதிரி. உடலருகே போனால் சேற்றில் அமிழ்ந்தவனைக் காப்பாற்றப் போனவன் தன்னையும் இழந்ததைப்போல் நம்மை இழக்கலாம் என்ற நிலை. நாம் போவது மனிதனைக் காப்பாற்ற அன்று. சேற்றைக் காப்பாற்ற. சேற்றைச் சந்தனமாக மாற்ற நாம் முனைகிறோம். அதனருகே சென்றவர்கள் அழிந்து மறைவதால் எவரும் அங்கு வருவதில்லை. ஹடயோகி அதனையும் வென்று, அதனுள் உள்ள அன்னமயப்புருஷனைக் கண்டான். எந்த ரிஷியும் மனித சுபாவத்தை வெல்ல முயலவில்லை. பரமஹம்சர் நாம் இறைவனை அறிய முயல்வதை, “உப்பாலான பொம்மை கடலாழத்தை காலால் கணிக்க முயன்றதுபோன்றது” என்கிறார்.

மனிதன் வீரன். எந்த எதிர்ப்பைக் கண்டும் அவன் சளைத்தது இல்லை. அவன் இறைவனை நாடி எப்படியும் சாதிக்க வேண்டும் என்றபொழுது, எதிர்ப்பு ஏராளமாக இருக்கும். ஒரு கரணத்தைப் பற்றுக்கோடாக்கி, தன் இலட்சியத்தைச் சாதித்தான். சிறையில் உள்ளவனுக்குத் தப்பிக்க வேண்டும். எந்தக் கதவு வழியே தப்பிக்கலாம் என்பது அவன் பிரச்சினையன்று. தப்பித்தால் பெருவெளி. எந்தக் கதவும் உதவும். கிடைத்த கதவே இனிக்கும் விடுதலை தரும். சிறைப்பட்டவன் சிறைக் கைதிகளைத் திருத்தி மனிதனாக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை. அது தோன்றுவதும் இல்லை. பூரண யோகம் சிறையையே உலகமாக அறிந்து, சிறப்புக்குரிய இடம் சிறையெனக் கணித்து, தப்பித்துப் போக விழையாமல், கைதிகளை திருவுருமாற்றி, சிறப்பான இடமாக மாற்ற முனைகிறது.

ஞானிகளும், பக்தர்களும், கர்மவீரர்களும், ஹடயோகிகளும், விடுதலையை நாடினர். விடுதலையின் வாயில் ஜீவாத்மா எனவும் கண்டனர். அதன் இலக்கு பரமாத்மா என்றும் புரிந்தது. எந்தப் புருஷனும் – அன்னமயப்புருஷன், பிராணமயப்புருஷன், மனோமயப்புருஷன், சைத்தியப்புருஷன் – வாயிலைத் திறப்பான் என அறிந்தனர். அறிவு ஞானமாயிற்று. உலகத்தை மறந்து உள்ளொளியில் கலந்து, உள்ளம் கனிந்து பக்குவமடையும்வரை நிஷ்டையிலாரம்பித்து, சமாதியை நாடினர். நாடியவர், நாடியதை அடைந்தனர். பூரணயோகச் சாதகனுக்குப் பூரணம் தேவைப்படுவதால், அவனுக்கு இது எதுவும் பயன்படாது.

தானும் தன் கரணங்களும் தாங்க முடியாத சுமை என்றறிந்த யோகி, பிரபஞ்சம் தன்னுள் இருப்பதைக் கண்டு, பிரபஞ்சத்தை உள்ளும், புறமும் வெல்ல நினைப்பது, வானத்தைக் கையால் எட்டிப் பிடிக்க முயல்வது போன்றது. பூமியைத் தூக்க முயன்றதாகக் கேள்விப்பட்டோம். அதையே இலக்காகக் கொள்வது பூரணயோகம். தன்னையறியும் மனிதனில்லை என்ற உலகில் தன்னை வெல்லும் முயற்சி எல்லைக்கு அப்பாற்பட்டது. தன்னுள் உள்ள பிரபஞ்சத்தை வெல்ல நினைவு எழுவதில்லை. அதைப் புறத்திலும் வென்று, அகத்தோடு இணைத்து, பூரணம் பெறும் இலட்சியத்தை இதுவரை நினைத்தவர் ஒருவரே; அவரே ஆதியான இறைவன். இறைவனின் திருவுள்ளத்தைத் தித்திக்கப் பூர்த்தி செய்து பூர்த்தி செய்யும் கருவியானதால் திளைப்பது சாதகன் மேற்கொண்ட பாதை.

உலகம் பெரியது. உலகத்தை வெல்ல முயன்றவரில்லை. நினைத்தவர் உண்டா எனத் தெரியவில்லை. பிரபஞ்சத்தை இறைவனுக்காக வெல்லும் முயற்சியை இலட்சியமாக நினைக்க மனிதனால் முடியாது. அந்நினைவு இறைவனுக்கே எழும். இறைவனும் மனிதனானால், மனிதச் சட்டத்திற்கு உட்பட்டே சாதிக்க வேண்டும். ஆனால், மனிதனான இறைவனுக்கு, இறைவனால் எளிதில் முடியும் காரியம் எளிதில் முடியாது. மனிதத் திறமையால் இறைவன் நினைவைப் பூர்த்திச் செய்ய மனிதன் இறைவனாக வேண்டும்.

மௌனத்தை நாடும் தபஸ்வியை சிந்தனை சிதறடிக்கிறது. தவத்தால் நிஷ்டையை நாடினால் உணர்ச்சி கிளர்ச்சியாகும். பக்தனுக்குப் பாசம் தடையாக எழும். ஆசை அனைவருக்கும் உண்டு. மந்தமான உடலை எவராலும் சமாளிக்கமுடிவதில்லை. அவற்றையும் இந்திய ரிஷிகள் சமாளித்துள்ளார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்குப் பரிசோதனைச் சாலைகளை ஏற்படுத்தினர். ரிஷிகள் உடலையே ஆராய்ச்சி நிலையமாக்கினார்கள். உயிரையே சோதனைக்குள்ளாக்கினர். உடலைத் தூய்மைப்படுத்த பிராணாயாமத்தைக் கண்டு பிடித்தனர். தியானம் மனத்தைச் சுத்தப்படுத்துவது. இவற்றுள் ஒன்றை மேற்கொள்ளத் தேவைப்படும் திறன் அளவிறந்தது என்பதால், அதைச் சாதிக்கவே அவர்கள் முனைந்தார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொன்றில் வெற்றி பெற்றனர். ஞானி, பக்தன், ஹடயோகி ஆகியவர்கள் யோகச் சாதனையில் வெற்றி பெற்று வீரர்கள் ஆனார்கள்.

பூரணயோகத்திற்கு இந்த மலை போன்ற சாதனையும் பயன்படாது. அவர்கள் அனைவரும் ஒரு கரணத்தால் செயல்படுகிறார்கள். பூரணயோகிக்கு அனைத்துக் கரணங்களும் தேவை. ஒரே சமயத்திலும் தேவை. நம்பிக்கையால் செயல்படுபவன் பக்தன். ஞானத்தால் செயல்படுபவன் ஞானி. ஞானம் நம்பிக்கைக்கு எதிரி. சிந்தனையற்ற நம்பிக்கை எழும் ஞானம் பூரணத்தைத் தேடத் தேவைப்படும். வலிமை வீரனுக்குரியது. வீரம் எதிரியை நிர்மூலமாக்கும். அன்பு எதிரிக்கும் அன்பு செலுத்தும். உலகுக்கு அன்பை அளித்த அவதாரம் இயேசு பெருமான். எதிரிகள் அவரை சிலுவையில் அறைந்தனர். எதிரியின் எதிர்ப்பை முறியடித்து வெல்லும் இதமான அன்பு எழ வீரமும், அன்பும் கலந்து ஆன்மாவின் ஆழத்திலிருந்து ஜீவனெங்கும் எழவேண்டும். அவதாரப் புருஷர்களால் அன்று முடியாததைச் சாமானியச் சாதகன் இன்று மேற்கொள்ள வேண்டும் என்பது பூரணத்தை நாடுபவனுக்குத் தேவை. அதற்குரிய முறை இன்றுவரை உலகம் மேற்கொள்ளாதது. கரணங்கள் சேர வேண்டும் என நினைத்தால் உள்ளே யுகப் புரட்சி எழும். ஞானயோகம், ராஜயோகம் தேடிய இலட்சியங்களைக் கடந்து முடிவான இலட்சியத்தை முழுமையாக அடைய பூரணயோகிக்குத் தேவையான தியானம் வேறு.

ஒரே கரணத்தை நாடாமல் எல்லாக் கரணங்களும் அடங்கிய ஜீவனை மையமாகக் கொண்ட தியானம் இத்திறனை அவனுக்கு அளிக்கும். ஊழிக்கூத்தான உள்ளுணர்வின் களேபரத்தை அடக்கி அமைதியின் அன்புருவாக்க வேண்டும். உடலின் கரிய இருளை சத்தியத்தின் ஜீவனுள்ள ஜோதியாக்க வேண்டும். கரணங்களைத் திருவுருமாற்றிச் சேர்க்கவேண்டும். அவற்றின் பூரணம் முழுமை பெறுதல் அவசியம். ஓரிழையோ, ஒரு மணியோ தவறக்கூடாது. குறையின் சாயல் எழக்கூடாது. பரந்த முழுமையான தியானநிலை கடினமானது. கடினமே கடைசி இலட்சியம்.

தியானமே யோகங்களுக்கு அடிப்படை. ஜீவனுடைய முழுமையும் தன்னைச் சமர்ப்பணம் செய்யும் யோகம் பூரணயோகம். எனவே ஜீவனுக்குரிய ஜீவியம் தியானத்தின் பங்கை இங்கு நிறைவேற்ற வேண்டும். பிரம்மம் என்பது சர்வத்தையும் தன்னுள் அடக்கியது. சர்வமும் அடங்கிய பின் பிறிதொன்றில்லை. புறம் என ஒன்று இல்லாதது பிரம்மம். சாதகனின் ஜீவியம் பிரம்மத்தை நாடி அதனுடன் இணைய ஜீவியம் விழித்து, ஜீவனுக்குப் பரந்து மலரும் பூரண விழிப்பை நல்கவேண்டும். பரந்து மலர்வது பூரணம் பெறும் நிலையில், ஜீவனில் புதைந்துள்ள பிரம்மம் விழித்தெழும். அகத்தின் பிரம்மம், புறத்தில் பிரம்மத்தைத் தழுவும் நிலையே சமர்ப்பணத்திற்கு உரியது. தியானத்தில் மனத்தின் ஒரு பகுதியான எண்ணம் ஞானத்தை நாடுவது தியானம். மனம் உள்பட எல்லாக் கரணங்களும் சேர்ந்த ஜீவனின் விழிப்பே நாம் நாடுவது. விழிப்பின் திறன் சாதனையின் பலனை நிர்ணயிக்கும்.

தன்னையறிந்தின்பமுறுதலும், தன்னைத் தாண்டி இறைவனை நாடுதலும் இலட்சியங்களாக எழுந்த காலத்து, மனிதன் இயற்கையை வெல்ல முயன்று, ஆசையை அடக்க முன் வந்தான். மனம், உணர்வை விட உயர்ந்தது என்பதால், ஆசையெனும் உணர்வு மனத்திற்குக் கட்டுப்படும். ஆசை இயற்கையின் அடித்தளத்திலுள்ளது. பூரணயோகமும் இயற்கையை வெல்ல முனைகிறது எனினும், இயற்கையின் உச்சநிலையில் அதை வென்று திருவுருமாற்ற முயல்கிறது. வானை எட்டிப் பிடிப்பது, பூமியைக் கைகளால் தூக்க முயல்வது போன்றது இம்முயற்சி. ஆசையை அடக்குவது மனம். அதையும் தாண்டிய நிலையிலும் மனம் உண்டு. ஆழ்ந்து அவனுள் உறையும் ஆன்மாவான சைத்தியப்புருஷனும் இந்த யோகத்தின் கருவிகளாதலால், இறைவன் உயர்ந்த மனத்தாலும், உள்ளுறை ஆன்மாவாலும் மனிதனை எட்டித் தொடுகிறான், தொட்டிழுக்கின்றான். அவனது தீண்டுதல் வேணுகானம்; அவன் அழைப்பே நம்முள் எழும் அழைப்பாகும்.

ஜீவனுள்ள சமர்ப்பணம் ஜீவாத்மாவுக்கு விடுதலையளிக்கும். நான் இறைவனைக் கண்டதில்லையே? எப்படி அவரை நினைப்பது? நினைவுக்கெட்டாத ஒன்றை நினைப்பதெப்படி என்ற எண்ணம், நமக்கு அவன் அழைப்பில்லை எனப் பொருள். அழைப்பிருந்தால் அறிவு தேவையில்லை. நம்பிக்கையால் செயல்பட முடியாதவனுக்கு யோகமில்லை. சமர்ப்பணமில்லை, சரணாகதி கிடையாது. ஜடமான காயத்தை ஜீவனுள்ள மலராகச் சமர்ப்பணம் செய்யவில்லை எனில் அதை இறைவன் ஏற்கப் போவதில்லை, அது இருந்தால், அவன் இறைவனுக்கு விலக்கில்லை. மார்க்கமோ, மதமோ, முறையோ, கரணமோ, கர்மமோ, இடையில் நிற்காது. அவற்றை ஒதுக்கி இறைவன், சமர்ப்பணத்தை ஏற்றுச் சாதகனை மகிழ்விக்கிறான்.

மனமே கரணங்களின் தலைவன். மனத்தின் எண்ணம் பெரிதானால், சாதனை பெரிதாகும். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதையும் மாற்றி அணுவும் அவனே, அசைவும் அவனே எனக் கொள்வது சாலச் சிறந்தது. உயர்ந்த எண்ணத்திற்கு உணர்வுண்டு. உணரும் எண்ணத்திற்கு ஜீவனுண்டு. அதற்குத் திருஷ்டியும் எழும். அத்திருஷ்டியில் இறைவன் காட்சியளிப்பான். ஜீவனுள்ள உணர்ச்சிமயமான எண்ணம் திருஷ்டி பெற்றால் அது அக்னியாக எழுந்து அன்பாக மாறும்.

மனிதன் உயர்ந்தவனில்லை. மனம் தாழ்ந்தது. செயல் அனைத்திலும் தாழ்ந்த எண்ணம் செறிந்து நிற்கும். எதைக் கண்டு கடந்த கால ஞானிகள் அஞ்சினார்களோ அவை நம்மைச் சூழ்ந்து கொள்ளும். அவர் அஞ்சி விலகியதை, விரும்பி ஏற்று திருவுருமாற்றம் செய்வதே சாதனை. ஆசையை ஏற்போம், அது ஆசைப்படுவதை மாற்றுவோம். ஆசையை அழிக்காமல், இறைவனை நாட, ஆசையைக் கருவியாக்குவோம். இறைவனை நாடும் ஆசையும் அதன் தாழ்ந்த தன்மையை இழந்து, தூய்மைப்பட்டு, திருவுருமாறி, அன்பாகும்.

எண்ணம் நாடுவதை, உணர்வும் நாட வேண்டும். அதைச் செயலாக்க முனைய வேண்டும். முனைப்பே முழுமையாக வேண்டும். செயல், இறைவன் செயலானால், ஆசை அழிந்து, அகந்தை கரையும். அகந்தையைக் கரைத்து, ஆசையை அழித்து, செயலை இறைவன் ஏற்கும் செயலாக்குவது இப்பாதைக்குரிய பாணி.

பூரணச் சரணாகதியை நாடுபவர் பூரணச் சமர்ப்பணத்தை ஏற்க வேண்டும். அவனுடைய ஸ்பர்சம் ஜீவனை அசைத்தால், அது மட்டுமே அசைவுக்கு அஸ்திவாரமானால், சமர்ப்பணம் பூரணம் பெறுகிறது. வாழ்வு வளர்ந்து வளர்ச்சியால் மலர்ந்து சமர்ப்பணம் சரணாகதியானால் இது நடைபெறும்.

கண் பார்ப்பது காட்சி. செவி கேட்பது ஒலி. அறிவுக்குப் புலப்படுவது ஞானம். சமர்ப்பணம் தேடுவது இறைவனுடைய காட்சி, கேட்க விழைவது அவன் குரல், அறிய முனைவது ஆன்மீக ஞானம். சமர்ப்பணம் பலிக்கும் நேரம் செயல் முதிர்ந்து, வாழ்வு கனிந்து, ஞானம் ஒளிவீசும் நேரம். முதிர்ந்த செயலாலும், கனிந்த வாழ்வாலும், ஜோதிமயமான ஞானத்தாலும் ஜீவன் ஜீவியமாகி இறைவனைத் தன்னுள்ளே காண்கிறான். அகவுணர்வு புறநிகழ்ச்சியாக இறைவன் அனைவரிலும் காட்சியளிக்கிறான். ஜீவாத்மாவையும், பிரபஞ்சத்தின் ஆத்மாவையும் கண்டவனுக்கு பரமாத்மாவின் தரிசனமும் எட்டுகிறது. கீதை விளக்கிய மூன்று புருஷர்களையும் சமர்ப்பணத்தால் காண்பது சித்தி. பூரண யோகத்திற்குரிய சித்தியாகும் இது. இதுவே முதற்சித்தியாகும்.

இதையடையும் கட்டம் இரண்டாகும்.

1. தாழ்ந்த மனித குணங்களை உயர்ந்த இறைச்சக்தியால் யோகத்திற்குரிய கருவியாக்குதல்.

2. சரணாகதி பூரணமானால், சக்தி பிரவாகமாகப் பாய்ந்து தாழ்ந்ததைத் திருவுருமாற்றும்.

சாதகன் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி மூன்று நிலைகளில் முடிவான பலனைப் பெறுகிறான்.

ஆரம்பநிலையில் தியானம் ஜீவனின் எல்லாக் கரணங்களையும் தன்னுட் கொள்ளும்படி முயன்று வெற்றி பெற்றால், பொய்ம்மையை அழித்து முதற்கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்டுகிறான். கரணங்கள் அனைத்தும் தியானத்தால் சூழப்பட்டால், ஜீவன் தன் அலைச்சலை இழந்து, அமைதியுற்று, சலனத்தை இழந்து நிற்கும். அமைதியுற்ற ஜீவன் அவனுக்குரிய பாண்டம். அமைதி ஆண்டவனை அழைக்கும். ஆண்டவனின் சக்தி அபரிமிதமாக அவனுள் பாய்ந்து விளக்கமாக அருள் செயல்படும் நிலையை நிரந்தரமாக்குகிறது. இதயத்துள் வாழும் இறைவன் மொட்டு மலர்வதைப் போல் மலரும்படி மனிதவாழ்வு பொய்ம்மையாலும், ஓய்வற்ற சலனத்தாலும் அலையாக எழுந்தபடி இருப்பதால் மொட்டு மலர்வது இல்லை. சலனம் அழிந்து, பொய்ம்மை கரைந்த நிலை இறைவனுக்கு உகந்த நிலையாதலால், இதயத்தின் மொட்டு இறைவன் எனும் மலராக மணம் வீசி மகிழ்கிறது.