வாழ்வு என்பது உலகளவானது. மனிதனுக்குத் தாயாகச் செயல்படும் தன்மை உடையது. மனிதன் எடுக்கும் சிறு முயற்சிக்குப் பெரும்பலனை வாழ்நாள் முழுவதும் தரவல்லது, தரப்பிரியப்படுகிறது. இந்த உண்மையை மனிதன் அறியவில்லை. அவன் தன்னை நம்புகிறான். தன்னை மட்டுமே நம்புகிறான். தன்னைத் தவிர வேறெதையும் அறியான். தானே முயன்று பெறுவதைத் தவிர வேறெதுவும் கிடைக்காது என உறுதியாக நம்புகிறான். இது அவனுடைய அன்றாட வாழ்விலும் உண்மையில்லை என்றாலும் அவன் மனம் அவன் அறிந்ததை மட்டுமே நம்புவதால் அவன் வாழ்வு சுருங்கி, சிறியதாகிவிட்டது. மனிதன் சிறியவன். சமூகம் பெரியது. தான் யார் என உணர்ந்த மனிதன் சமூகத்தைவிடப் பெரியவன் என்று உலகம் அறியாது. சிறியவனான சின்ன மனிதன் செய்யும் சிறு காரியங்களால் சமூகம் முழுவதற்கும் பலன் ஏற்படுகிறது. ஏற்பட்டு சமுத்திரமாகச் சேர்ந்துள்ளது என்பது உலக அனுபவம். ஆனாலும், அது மனிதன் கண்ணில் படுவதில்லை. மனத்தைத் தொட்டதேயில்லை. நடைமுறையில் அப்பலனை அனுபவிப்பவர்கள் ஆயிரம் பேர் என்றாலும், ஒருவர் தவறாமல், தவறான வழியிலேயே அதைப் பெறுகின்றனர். அது மட்டுமே வழி என உலகம் நம்புகிறது. சமூகம் தொன்றுதொட்டு ஏற்படுத்திய ஸ்தாபனங்கள் பெரியவை. சர்க்கார் இராணுவம், பாங்க், நிர்வாகம், கஜானா, ரயில்வே, பல்கலைக்கழகங்கள் என ஆயிரம் ஸ்தாபனங்களுண்டு. இவற்றின் power சக்தி, திறன் ஏராளம். இது தெரியும். இந்த ஸ்தாபனங்களைச் சுற்றி இதற்குச் சமமான அதே திறன் கண்ணுக்குத் தெரியாமல் சேர்ந்துள்ளதை நாம் அறிவதில்லை.
அவற்றை அறிவதும், அவற்றை எட்டித் தொட்டு அதிர்ஷ்டப்பலனைப் பெறும் வழியும், அவ்வழி நல்லதானால் பலன் அதிகம் என்பதையும் கூறுவதே இக்கட்டுரை.
இச்சக்திகளுடன் தற்செயலாய்த் தொடர்பு ஏற்பட்டதால் பெரும்பலன் பெற்ற நபர்கள் ஏராளம். உலகம் அதை அதிர்ஷ்டம் என அறிகிறது. அது ஒரு முறை. அனைவரும் பெறக்கூடிய முறை. பெற்றால் அதிர்ஷ்டம் அனைவருக்கும் அன்றாட நிகழ்ச்சியாகும். மக்களாட்சி நாட்டுத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வயது வந்த அனைவருக்கும் அளித்தது. அதனுள் பெரிய உண்மை மறைந்துள்ளது. அது அனைவரும் அறிந்த இரகஸ்யம். தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றபொழுதே மனிதன் தானே அத்தலைவனாகும் உரிமையையும் பெற்றான் என்பதே அவ்வுண்மை.
- ஜனநாயகம் தலைவனாகும் உரிமையைத் தந்தது.
- மனிதன் தலைவனாகும் திறமையைப் பெற வேண்டும்.
அத்திறமையைத் தரும் ஞானம் ஒன்றுண்டு. அதன் முக்கிய பகுதி சமூகம் அதிர்ஷ்ட சாகரம் என்பதாகும். இதுவரை அப்படி அதிர்ஷ்டம் பெற்றவர் வாழ்வையும், இன்று அதுபோல் ஏராளமாகச் சேர்ந்துள்ள சக்தியையும் அதிர்ஷ்ட சாகரம் அறிந்தால், தானுள்ள நிலையிலிருந்து அங்கு உயரும் உபாயத்தை அறிந்தால் தானும் அதை ஏராளமாகப் பெறலாம் என்ற ஞானம், திறமையாகிறது. திறமை செயல்பட்டு பலன் பெறுவது எப்படி? இதுவரை அதன் சாயலை உலகம் அறிந்த இடங்கள் எவை என்பவை நம் கவனத்திற்குரிய கருத்துகள்.
- உலகம் இதை அறிந்து பயன் பெறுமானால், 500 ஆண்டுகளில் பெறும் பலனை இன்று பெறலாம்.
ஒருவர் இதை அறிந்து செயல்பட்டால் 100 தலைமுறைகளில் சம்பாதிப்பதை, சாதிப்பதைப் பெறலாம்.
தலைநகரில், அரண்மனையில், அரசபீடத்தில் அதிகாரம் உள்ளதை அறிவோம். அதை உலகம் நாடுகிறது. ஈயாக மொய்க்கிறது. அங்கு அதிகாரம் உள்ளதால் அங்குள்ள சிப்பந்திகட்கு முக்கியத்துவம் வருகிறது. ராஜபதவி, பணம் பெறும் வழி, சலுகை, சன்மானம், விருது ஆகியவை உலகுக்குப் புதியதல்ல. கலை, இராணுவம், கல்வி, வியாபாரம், போக்குவரத்து என ஆயிரம் துறைகளில் இது போன்று ஏராளமான unofficial power அதிகாரம் தலைமை நிர்வாகத்தைச் சுற்றியுள்ளது உண்மையானாலும், பாங்க், பணம், சமூகத்தலைமை, டெக்னாலஜி என்ற துறைகளில் பணச்சக்தி money power எப்படிக் குவிந்துள்ளது, அது நமக்கு எப்படிப் பயன்படும் என்பதை மட்டும் இங்கு விளக்குகிறேன்.
உலகமகாயுத்தம் முடிந்தவுடன் பிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முழுச் சேதத்தை அனுபவித்தன. அவை மீண்டும் தலை எடுப்பது என்பது மாளாத காரியம். உலக வங்கி, Marshall plan ஆகியவை முன் வந்து $ 17 பில்லியன் தந்து மீண்டும் சேதமடைந்த நாடுகளை உயிர்ப்பிக்க உதவின. இந்நூற்றாண்டு வாழ்வில் அது ஒரு பெரிய சாதனை என்பதை வரலாறும், பொருளாதாரமும் அறியும். $17பில்லியன் இன்றைய கணக்குப்படி $100 பில்லியன். ரூபாயில் சொன்னால் $1 பில்லியன் 4 ஆயிரம் கோடி ரூபாய். இத்தொகை இன்றைய ரூபாய் கணக்குப்படி 4000*100 = 4 லட்சம் கோடி ரூபாய்க்கு சமம். இந்திய பட்ஜெட்போல் 3 மடங்கு. அமெரிக்கா இத்தொகையை இத்திட்டத்தின் மூலம் கொடுக்க உலக பாங்க்கை நிறுவியது. சேதமடைந்த நாடுகள் சீக்கிரம் உயிர் பெற்றெழுந்தன. 9 நாடுகள் இப்பயனை அடைந்தன. இத்தொகையைக் கொடுத்து உதவியது அமெரிக்கா. இதுவரை உலகம் அறியும்.
இதுபோன்ற 3 மடங்கு தொகை மேலும் இந்நாட்டுக்குத் தர உதவிய அமைப்பு அதிர்ஷ்ட சாகரம் என்பது. இதை உலகமோ, பத்திரிகை உலகமோ அன்று அறியாது.
ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்பவர்கட்கு, அக்கம்பெனி ஊழியர்கள் என்பதால், மார்க்கெட்டில் கடன் பெறும் வசதிகள் ஏராளம். அவ்வசதிகளை முறையாகப் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களை விட இருமடங்கு, மும்மடங்கு வசதியாக வாழ முடிகிறது என நாம் காண்கிறோம். ஒரு கம்பெனி வேலை மார்க்கெட்டில் இந்த அந்தஸ்தைத் தருகிறது என்றால், சமூகத்தின் இந்த அம்சத்தைப் புரிந்து கொண்டு, நல்ல முறையில் மட்டும், அதை முழுவதுமாகப் பயன்படுத்த முன் வருபவர்கள் தங்கள் வருமானத்தை 10 மடங்கல்ல, 100 மடங்கு உயர்த்த முடியும் என்பதே எனது கொள்கை. உதாரணங்கள் எல்லாத் துறைகளிலிருந்து எடுத்தாலும், விளக்கத்தைப் பணம் என்ற துறையோடு நிறுத்திக் கொள்கிறேன். இவ்வகையில் அளவு கடந்து முன்னேறியவர்கள்,
- V.P. மேனன்
- V.K. கிருஷ்ண மேனன்
- காமராஜ்
- இந்திரா காந்தி
- சிம்ஸன் அனந்த நாராயணன்
- ஒரு வைஸ் சான்ஸ்லர்
- M.S. சுப்புலட்சுமி
- தமிழக முதன் மந்திரி
- ஆந்திர முதன் மந்திரி
- பாங்க் சேர்மன்
- மத்திய அமைச்சர்
- ரயில்வே மந்திரி
- சென்னை தொழிலதிபர்
- U.S.A. Vice President Ford
- டாட்டாவின் 2% பங்குகள்
- லால் பகதூர் சாஸ்திரி
- ரஷ்ய ராணி கேதரீன்
- பிரெஞ்சு அரசனால் ஆதரிக்கப்பட்ட லூயீ
- டுமாஸ் கதையில் வரும் கொள்ளைக் கூட்டத் தலைவன் வாம்பா
- கவி காளிதாஸன்
- Pride and Prejudice கதாநாயகி எலிசபெத்
மேற்சொன்ன உதாரணங்கள் பலதரத்தவை. தனிமனிதன் அதிகாரப் பீடத்துடன் தொடர்பு கொண்டதால் பயன் பெற்றவர் என்ற தலைப்பில் அனைத்தும் வரும். அவர்களை எட்டு வகையினராகப் பிரிக்கலாம்.
- தொடர்ந்த சிறந்த ஊழியம் சேவையாக, அதிகாரமாக மாறுவது.
- அதிகாரப் பீடத்திற்குத் தேவையான அம்சம் உடையவர் கீழ்மட்டத்திலிருப்பது.
- உடன் உறைவதால் வரும் சந்தர்ப்பம்.
- ஸ்தாபன அதிகாரம் நல்லெண்ணமாகவோ, புகழாகவோ மாறுவது.
- நாட்டில் வாழ்க்கை மாறும் காலத்தில் தனிமனிதனுக்கு ஏற்பட்ட வாய்ப்பு.
- தண்டனை பரிசாக மாறுவது.
- நம் துறைக்கும், உயர்மட்ட அதிகாரத்திற்கும் கண்ணுக்குத் தெரியாத தொடர்பு.
- அதிகாரப் பீடத்துடன் முனைந்து, விரும்பி, தொடர்ந்து, தொடர்பு கொள்ளுதல்.
21 மந்திரிகளை, பதவிப் பிரமாணம் எடுக்க அழைத்தபொழுது ஒருவரால் வரமுடியவில்லை. அவருக்குப் பதிலாக ஒருவரைப் போட இந்திரா காந்தி நினைத்தபொழுது அவரருகில் நின்ற முகர்ஜீயைப் போட்டார். உடனிருந்ததால் ஏற்பட்ட நிகழ்ச்சி இது.
முதல்வரும் பிரதமரும் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கார் டிரைவர் முதல்வர் தெரிவிக்கத் தயங்கிய செய்தியைப் பிரதமரிடம் கொடுத்தார். அதனால் ரயில்வே மந்திரியானார். ஆடு மேய்த்த காளிதாசனின் அழகு முகம் அவனை ராஜ குமாரிக்குக் கணவனாக்கியது. டைப்பிஸ்டாக வேலை செய்தவர் முதலாளியின் மனைவியாகி, பட்டம் பெற்று, வைஸ் சான்ஸ்லரானார். நேருவுடன் நெருங்கியிருந்ததால் மந்திரி சபையில் 4ஆம் நிலையிலிருந்தும் சாஸ்திரி பிரதமரானார். டாட்டா கம்பெனியின் பிரபலம் அதிகமானதால் 2% ஷேருடன் அடுத்த கம்பெனியின் இலாபத்தில் அவர்களால் பங்கு கொள்ள முடிகிறது. நிக்ஸன் பதவியை இழந்தபொழுது Vice President, President ஆனார். ஆனால் அவர் Vice President ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை. நியமிக்கப்பட்டவர். சிம்ஸன் கம்பெனியின் அடிமட்டத்தில் வாழ்வை ஆரம்பித்த அனந்த ராமகிருஷ்ணன் திறமையால் கம்பெனி முதலாளியானார். பொறாமையால் கிளம்பிய பெரும் புகார் ஜுனியர் ஆபீசருக்கு நேர்மையால் சேர்மன் பதவியைப் பெற்றுத் தந்தது. அரசியல் தொண்டர், கட்சிக்குச் செய்த சேவை பிரபலம் பெற்றுத் தந்து மனைவிக்கு உலகப் புகழும், பாரத இரத்தினமும் பெற்றுத் தந்தது.
ஜனநாயக நாட்டில் எவ்வகையில் பிரபலமானாலும் அது அரசியல் செல்வாக்கைப் பெற்றுத் தரும் என்பதை இரு மாநிலங்களில் கண்டோம். நேருவின் நண்பன் என்பதால் மேனன் மந்திரி சபையில் சேர்ந்தார். பள்ளியை முடிக்காத V.P. மேனன் திறமையால் Lord Mountbattenக்கு அந்தரங்க நண்பராகிக் கவர்னராக ஓய்வு பெற்றார்.
தவறான முறையில் பெரிய இடத்துடன் தொடர்பு கொள்ளுதல் எளிது. நல்ல முறையில் ஏற்படும் தொடர்பை மட்டுமே நாம் கருதுவோம். முறை தவறானதோ, சரியானதோ, பலன் கிடைக்க வேண்டுமானால்,
காரியம் பூர்த்தியாக வேண்டிய சட்டங்கள், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் நாம் பெறும் பலன், நாம் கையாளும் முறையைப் பொருத்தது. நல்ல முறைகட்கு நல்ல பலனும், தவறானவற்றிற்கு தவறான பலனும் நிச்சயம் உண்டு. முக்கிய கருத்துகள்,
- சிறிய மனிதன் பெரிய அரங்கில் செயல்படுவதால் எந்த நேரமும் பெரிய மனிதனாகும் வாய்ப்பு அவனுக்குண்டு.
- தொடர்பு ஏற்பட நிகழ்ச்சிகளின் தீவிரம் சமமாக இருக்க வேண்டும். சமூக உச்சியிலுள்ளவை தீவிரமானவை. மட்டத்திலுள்ள எந்நேரமும் நிகழ்ச்சிகள் தீவிரத்தால் உயர்ந்தால் தொடர்பு ஏற்படும்.
- இத்தொடர்பை சேவை, நாணயம், சமயோசிதம்,சாதுர்யம் ஏற்படுத்தும்.
- மயிரிழை தவறு ஏற்பட்டால் காரியம் முழுவதும் ரத்தாகிவிடும்.
- பெரும்பாலும் இதுபோன்ற தொடர்பால் ஏற்படும் பெரும்பலன் குறுகிய காலத்திற்கே நிலைக்கும் என்பது உண்மை. நல்லெண்ணம் குறுகிய காலத்திற்கே இருப்பதால் பலனும் கொஞ்ச நாளைக்கே ஏற்படுகிறது.
- நம் நிலைக்கும், சமூக உச்சியான அதிர்ஷ்ட சாகரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்திவிட்டால் அவை தொடர்ந்து வளரும் வழி செய்தால், பலன் நிரந்தரமாக இருக்கும். தொடர்ந்து வளரச் செய்வது தூய்மையான நல்லெண்ணம்.
மனிதன் தங்கம், வைரம், பெட்ரோல் ஆகியவற்றைக் கண்டு பயன்படுகிறான். அவன் அவற்றின் பலனைக் கண்டு கொள்ளும் முன் அவை தரையில் கேட்பாரற்று ஆயிரமாயிரமாண்டிருந்தன. இன்று அதிர்ஷ்ட சாகரம் என நான் கூறுவது அதுபோல் எவருமறியாமல் ஏராளமாக உள்ளது. 6 வகைகளில் இத்தொடர்பை தத்துவமாகவும், யோகமாகவும், நடைமுறையிலும் விளக்கலாம். அவை,
- Human Choice மனத்தின் போக்கு அல்லது செயல்படும் மனப்பான்மை.
- மேல்மனம், காலத்தாலும், அகந்தையாலும் பெரிய ஆத்மாவைச் சிறிய மனிதன் ஆக்கும் வகை.
- அன்னை ஜீவியம் நம்முள் எளிமையாக ஆரம்பித்தாலும் உலகத்தைத் தழுவும் முழுமையையும், தீவிரத்தையும் உயர்வாலும், வீச்சாலும் அடைகிறது.
- மனித முயற்சியும், தெய்வ அருளும் சேர்ந்த பூரண யோகப் பூரணம்.
- பிரபஞ்சத்தைக் கடந்த இறைவனின் சிருஷ்டி, உலகை பூலோகச் சுவர்க்கமாக்குவது.
- அதிகாரி, அரசியல்வாதி, குரு, அவதாரம் ஆகியவர்களுடைய உதாரணம்.
I. Human Choice – காரியம் செய்யும் மனநிலை. அன்றாடம் செய்யும் காரியங்கட்குப் பின்னால் ஒரு நினைவு, மனப்பான்மை, நோக்கம், கொள்கை இருப்பதுண்டு. அது பலனை நிர்ணயிக்கும். அவற்றுள் சில,
- எதைச் செய்தாலும் தெளிவாகச் செய்ய வேண்டும்.
- நாம் செய்யும் காரியம் நமக்கு நல்லதைச் செய்ய வேண்டும் அல்லது கம்பெனிக்கு நல்லது வரவேண்டும் அல்லது உலகத்திற்கு நல்லது அதனால் விளைய வேண்டும். பொதுவாக அது நல்ல காரியமாக இருக்க வேண்டும்.
- வரும் பலன் நெடுநாள் நீடிக்க வேண்டும்.
- இந்தக் காரியத்தால் எனக்கு எவ்வளவு பணம் இலாபம்?
- இதன் மூலம் நான் அதிகமாக அன்னையை அறிய வேண்டும்.
- இதனால் எவருக்கும் தொந்தரவு வரக் கூடாது.
- இது எனக்குப் பிரபலம், பெருமை, புகழ் தரும்.
இதனால் எதிரிக்கு தலையில் அடிவிழும், கூட்டாளிக்கு எரிச்சல் வரவேண்டும். மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும். என் மனைவி என்னைப் பாராட்டுவாள். இவற்றிற்கு எதிரான நோக்கங்களிருப்பதுண்டு. எதுவுமே இல்லாமல் இருப்பதுண்டு. (It is unconscious). எந்தப் பெரிய காரியமும் சிறியதாக ஆரம்பிக்கின்றது. சிறியதானாலும் தெளிவான நல்ல செயலாக, கெட்டதைத் தவிர்த்த செயலாக ஆரம்பித்தால், அது பெரியதாக முடியும். அதுவே ஆரம்பம். நாம் தினமும் நம் காரியங்களைச் செய்யும்பொழுது கடனே எனவும், எரிச்சலுடனும், விரக்தியாக, பழக்கத்தால் நடக்கிறோம். பல கூடி வருகின்றன. பல கூடி வருவது இல்லை. இதை human choice மனநிலையின் கண்ணோட்டத்தில் மனச்சாட்சிப்படி எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தினால், அவை மாறும்.
காரியங்கள் சுறுசுறுப்பாக, ஜீவனோடு, பொங்கிவரும் சந்தோஷ ஊற்றாகவும், ஒன்று பலவாகப் பெருகுவதாகவும், தவறாமல் கூடி வருவதாகவும், மாறுவதைக் காணலாம். அப்படி மாறினால் நாம் முதற் கட்டத்தில் வெற்றி பெறுவோம்.
ஒரு பேரம் படிவது, கோர்ட்டில் ஒரு கேஸ் நடத்துவது, வகுப்பில் பாடம் நடத்துவது, அறுவடை செய்வது, புது ஆர்டர் பெறுவது, ஆப்பரேஷன் செய்வது, என்ன வியாதி எனக் காண்பது, சமையல் செய்வது, பரிமாறுவது, T.V. பார்ப்பது, வெளியூர் போவது போன்ற எளிமையான காரியங்கள் இத்தலைப்பில் வரவேண்டும்.
நம் காரியம் தவறாமல் கூடி வருகிறது என்பதை ஆன்மீகப் பாஷையில் சொன்னால் நம் செயல் நாம் விழிப்பாக இருப்பதற்குப் பதிலாக, நம் ஆன்மா விழிப்பாக இருக்கிறது என்கிறோம். மாற்றம் சரியானால், உயர்ந்ததானால் சில அடையாளங்கள் தென்படும்.
- மனம் அளவுகடந்து நிம்மதியாக , சந்தோஷமாக இருக்கும்.
- 2 ½ லட்சத்திற்கு மனை வாங்கப் போனபொழுது விலை 1 லட்சம் எனப் படியும்.
- Product rate 13.75 ரூபாயாக வேண்டும் என்று ஆரம்பித்தபொழுது அது 23.75 ரூபாயாக முடியும். அதிலும் இதர சௌகரியங்கள் எழும். இதர சௌகரியங்களிருந்தால் அன்னையிருப்பதாக அர்த்தம்.
- எதிர்பார்த்த இலாபம் அதிகமானால் அன்னை நம் சுயநலத்தை ஏற்று அதற்கு ஆசி வழங்குகிறார்கள் எனப் பொருள். அதுவே Self-giving ஆக மாறினால் நமக்கு வரும் பெரும் இலாபம் பிறருக்கு வரும் அபரிமிதமான இலாபத்தால் வருவதாக அமையும்.
- நாம் பெறும் பலன் நம்மைப் போன்றவர் அனைவருக்கும் வரும்.
- நம் செயல் உலகமெல்லாம் பெருகும். பொதுவாக அனைவருடைய சந்தோஷமும் பல கட்டம் உயர்ந்து தெரியும்.
- காரணமேயில்லாமல் சந்தோஷம் பொங்கி வரும்.
- நாமே இக்காரியத்தை முதலில் செய்தவராக இருப்போம்.
- வரும் நாளில் இந்தக் காரியம் ஒரு முறையும் தவறாது.
- மனம் இதுபோல் மாறியதிலிருந்து 4 நாளாக ஒரு துரும்பும் தவறவில்லை, தோல்வியைக் காணோம் எனத் தோன்றும். அதுஅதிர்ஷ்டம் நிரந்தரமாக வந்ததாகத் தோன்றும்.
இந்த மாற்றத்தை நாம் சிறியது பெரியதாகிறது என்கிறோம். இம்மாற்றத்திற்குத் தத்துவமான அடிப்படை உண்டு. பலன் வந்தால் போதும் என்றால் தத்துவம் தேவையில்லை. தத்துவம் தெரிந்து தெளிவு ஏற்பட்டால், வந்தது போகாது, தொந்தரவு என வாராது, எதிர்ப்பு எழாது. சம்பாதித்தது இனி எந்தத் தலைமுறையிலும் நம்மை விட்டுப் போகாது. அது போன்ற குணங்கள் வரும் தலைமுறைகளில் எழாது. அத்தத்துவங்கள்,