- மனிதன் உடலால் பலனுக்காகவும், உணர்வால் திருப்திக்காகவும், மனதால் ஆதாயத்திற்காகவும் சுயநலமாகச் செயல்படுகிறான். மேற்சொன்னபடி மாறினால் ஆன்மாவால் இலட்சியத்திற்காக செயல்படுகின்றான்.
- ஆன்மா செயல்படுவது பற்றற்ற துறவியின் நிலை. நமக்கோ, நம்மவர்க்கோ அப்பக்குவம் வாராது. நாம் அதிகப் பலனுக்காக நாடுவோம். அதிகப் பலனை வழ்வில் நாடினால் ஒனறு பலவாக மேற்சொன்னவாறு பெருகும். அது துறவியின் துறவறத்தைவிடச் சிரமம். இல்லத்திற்குத் துறவறத்தின் தூய்மையை அளிக்கும் முறை அது. செயல்படுவதற்குப் பதிலாக ஆன்மாவால் வாழ்விலுள்ள ஆன்மாவால் (Physic being) செயல்பட வேண்டும். அதாவது சமர்ப்பணத்தால் காரியத்தை செய்ய வேண்டும். அன்னையை மட்டும் நினைத்து செய்யும் காரியம் சமர்ப்பணமான காரியம்.
- இச்சமர்ப்பணம் எளிதன்று. ஆரம்பிப்பதே கஷ்டம். ஆரம்பித்தால் நீடிப்பது கஷ்டம்.
- அதனால் கொஞ்சநாள் மனதுடன் கலந்து ஆலோசித்து இருதரத்தையும் கருதி முடிவாகச் சமர்ப்பணம் வேண்டும் என்று முடிவு செய்தால், பிறகு அது நீடிக்கும். பழைய முறைகளை விட்டு புதியனவற்றை மேற்கொள்ள முடிவு செய்தால் சமர்ப்பணத்தை ஏற்க முடியும். சில உதாரணங்கள்,
| பழைய மனநிலை | புதிய மனநிலை |
| எப்படியாவது நாம் ஜெயிக்க வேண்டும் | முறையாக மட்டும் ஜெயிக்க வேண்டும் |
| நாம் மாட்டிக்கொள்ளக் கூடாது | எவருக்கும் தொந்தரவு வரக்கூடாது |
| பொறுப்பைத் தட்டிக் கழிக்க வேண்டும். | பொறுப்பை ஏற்க வேண்டும் |
| அவசரம். | நிதானம் |
| சுயநலம். | அர்ப்பணம் |
| உடனே பலன் வேண்டும். | நீண்ட நாள் பலனிருக்க வேண்டும் |
| எந்தப் பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். | பொய் என்று மனதில் வரக்கூடாது |
| பணம் பாதாளம்வரை பாயும் | இவையெல்லாம் பணத்தால் முடியாது. அன்னையால் தான் முடியும். |
| எவ்வளவு இலாபம் வரும் என முதலிலேயே மனம் கணக்குப் போடும் | கணக்குப் போடத் தோன்றவில்லை |
| இரகஸ்யம் முக்கியம் | யாருக்கும் தெரியலாம். அவையெல்லாம் நம்மைப் பாதிக்காது. |
| மனிதனைவிட காரியம் முக்கியம் | காரியத்தைவிட மனிதன் முக்கியம் |
| ஒன்றை சரியாகச் செய்தால் அடுத்தது ஒத்து வரவில்லை. தர்மசங்கடம் | ஒன்று மாறியவுடன் அனைத்தும் மாறிவிட்டன. சங்கடம் என்று எதுவும் இல்லை |
| நம்மை எல்லோரும் உயர்வாக நினைக்க வேண்டும் | நாம் செய்வது அன்னைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் |
மேற்கூறியவற்றைக் கவனமாகப் படித்தவர்கள் பொதுவாகச் சொல்வது, இவையெல்லாம் நமக்கில்லை. நாம் சாதாரண மனிதர்கள். அவர்கள் கூறுவது உண்மை. ஆனால் அதை நாம் ஏற்க முடியாது. மாற்றாக நாம் கூறுவதைப் புதிய மனப்பான்மையுடன் கூர்ந்து கேட்டால் கீழ்க்கண்டவை தெரியும்.
- இன்று நாம் அனுபவிக்கும் அந்தஸ்து, பணம், பதவி, செல்வாக்கு எல்லாம் எப்படி வந்தன என நினைத்துப் பார்த்தால் இவைகளை நாம் ஏற்குமுன், நாம் சாதாரண மனிதர்கள். இவையெல்லாம் நமக்கில்லை என்று கூறியிருந்தால், இன்று நாம் அனுபவிப்பவை நமக்கில்லை, இருந்திருக்காது (இன்று நாம் சென்னையில் வக்கீலாக இருக்கலாம், விழுப்புரத்தில் தொழிலதிபராக இருக்கலாம். எதுவானாலும் நம் முந்தைய கிராமீய மனப்பான்மை, சந்தர்ப்பத்தை உதறித் தள்ளியதால் மட்டும் வந்த புதிய நிலை இது என்பதில் சந்தேகமில்லை).
- இன்று இம்மாறுதல்களை நாம் ஏற்காவிட்டால், உலகம் ஏற்கும். பிறகு நாம் இதில்லாமல் முடியாது என ஏற்போம். நாளைக்குக் கட்டாயமாக ஏற்பதற்குப் பதிலாக இன்றே முன்னோடியாக ஏற்பது மேல்.
- இதுவரை நாம் பெற்ற வாழ்க்கை வசதிகளை மேற்சொன்னவாறே காப்பாற்றுகிறோம். இருப்பதைக் காப்பாற்றப் பயன்படும் முறையை ஏன் புதியதைப் பெறப் பயன்படுத்தக் கூடாது?
- மேற்கூறிய பட்டியலில் எந்த விஷயங்கள் முடியாது என்று கூறி திட்டவட்டமாக நாம் புதியதை மறுக்கிறோமோ, அவற்றைத் தவறாது இன்று உள்ளதைக் காப்பாற்றப் பயன்படுத்துகிறோம் எனத் தெரியும்.
ஆராய்ச்சியைத் தொடரலாம். தொடராமலிருக்கலாம். முடிவாக நம் அன்பர்கள் அறிவது ஒன்றுண்டு. அது.
நமக்கு முன்னேற்றம் வேண்டுமா? வேண்டாமா?
வேண்டும் எனில் முயற்சி செய்ய நாம் தயாரா?
முயற்சி உலக வழக்கில் பலிக்கலாம், பலிக்காமருக்கலாம்.
அன்னை முறைப்படி அது பலிக்கும், தவறாது.
அதற்குரிய நல்லெண்ணம் நமக்கிருக்கிறதா?
இருந்தால் உண்டு, இல்லையென்றால் இல்லை.
மனிதன் முன்னேறப் பிரியப்படவில்லை. ஊர் முன்னேறிய பின்தங்கப் பிரியப்படாமல் முன்னேற்றத்தை நாடுவதே வழக்கம். தன் மனநிலைக்கேற்ப பேச்சை, தானே மனிதன் மாற்றிக் கொள்கிறான். ஊரும், உலகமும் முன்னேறியபின் அவர்கள் பின் ஓடுபவர்கள் 1980திலும் 1990ளிலும் முதல் தலைமுறை படிப்பை நாடியவர்கள் போலாவார்கள். நாம் கருதுவது அன்பர்கள், புதிய வாய்ப்பைப் புரிந்து கொண்டவர்கள். மேலும் வாய்ப்பை விரும்புகிறவர்கள். அதற்கான முழு முயற்சி செய்ய முன்வருபவர்கள். அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பாதவர்கள். அன்னையை பக்தியுடன் மனதால் ஏற்பவர்கள், அவர்களுக்கு இப்புதிய வாய்ப்பைப் பெறும் ஞானத்தைத் தருவது, ஞானத்தை சக்தியாக மாற்றும் முறையைக் கூறவும், அது சித்திக்கும்வரை அவர்களுக்கு ஆதரவு தர முயல்வதும் இக்கட்டுரையின் பங்கு. இந்த மாற்றம் செயலால் ஏற்படுவதில்லை. உண்மையில் இது மன மாற்றம். மனம் மாறிய பின் செயல் புனிதச் செயலாகும். எளிய செயல்கள் எண்ணற்ற பலன் தரும். ரயில்வே போர்ட்டர் ரயில்வே மந்திரியானது போலிருக்கும். ஓட்டல் சந்தித்த நண்பர் முதல் மந்திரியின் மகனாக இருப்பார். தற்செயலாக சொன்ன சொல் அவரை ஆயுளுக்கும் பார்ட்னராக்கும். ஒரு செயல் அதுபோல் மாறினால் நாள் முழுவதும் அனைத்துச் செயல்களையும் அதுபோல் மாற்ற முடியும். முடிந்தால் நம் பங்கின் பிரதான கட்டம் முடிந்துவிட்டது. நம் நிலையில் சிறியது பெரியதாகிவிட்டது. (Finite changes into infinite).
இந்த வெற்றி ஆரம்பித்தது முதல் செயலுக்குரிய சட்டங்களில் மயிரிழை தவறாமல் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை எனக் கூறத் தேவையில்லை. சிருஷ்டியிலுள்ள எல்லா நிலைகளிமுருந்தும் ஓர் உதாரணம் கூறுவோம்.
| Physical | ஜடம் | பொருள்கள் கலையாமல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவேண்டும். |
| Vital | பிராணன் | ஒருவர் பேசும்பொழுது குறுக்கே பேசத் துடிப்பதை கட்டுப்படுத்தவேண்டும். |
| Mind | அறிவு | நம் எண்ணம் ஆதாயத்தை நாடுவதைத் தடுக்கவேண்டும் |
| Higher Mind | ஆன்மா | நிதானம் தவற முனையும் நேரம் கட்டுப்பாடு தேவை |
| Illumination | திருஷ்டி | மனக்கண்ணில் எழுந்த காட்சிகளை நாம் எப்படிப்புரிந்து கொண்டோம் என்று நிர்ணயிக்க வேண்டும் |
| Intuition | யோகம் | உள்ளே எழும் உந்தல்களின் அளவு எவ்வளவு |
| Over mind | தெய்வம் | அடுத்தவர் தொந்தரவை மீறி வெற்றிகரமாகச் செயல்படும்திறன் |
| Super mind | சத்தியஜீவியம் | எதிரியின் கண்ணோட்டத்தில் பிரச்சினையைப் புரிந்துகொள்வது |
| Consciousness | ஜீவியம் | எந்த அளவுக்கு எண்ணம் பலிக்கிறது |
| Being | சத் | நம் நிலையைவிட எவ்வளவு நம் மனம் உயர்ந்து உள்ளது |
மனிதனைத் தெய்வமென நாம் அறிவோம். அவன் விலங்கு எனவும் நாம் அறிவோம். மனிதனுக்கு இந்த இரண்டு மட்டுமல்ல மேற்சொன்ன 10 நிலைகளும் அவனுள் உள்ளன. எதை அவன் முக்கியமாகக் கருதுகிறானோ அதுவே பலன் தரும். ஆசை எழுந்தால் அடக்கிக் கொள்கிறோம். நல்ல பலன் வருகிறது. ஆசையை வெளிப்படுத்துகிறோம். அடுத்தவர் குறைவாக நினைக்கிறார். அடக்கினால் உயர்கிறோம், வெளிப்படுத்தினால் தாழ்கிறோம். ஜடத்திலிருந்து பிரம்மம்வரை நம்முள் அனைத்தும் உண்டு. ஒவ்வொரு செயலும் நின்று, நிதானித்து, பொறுமையாக நம்மால் அதிகபட்சம் எப்படி நடக்க முடியுமோ அதுபோல் நடப்பது மனிதன் அளவுகடந்த அதிர்ஷ்டத்தைப் பெறத் தகுதியை அளிக்கும்.
மேலேயுள்ள அதிர்ஷ்ட சாகரத்தைக் கீழேயுள்ள மனிதன் எட்டித் தொட அவன் ஒவ்வொரு நிமிஷமும் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மைத்துனன் வந்து தமக்கையை அழைத்துப் போக வேண்டும் என பக்தரைக் கேட்டபொழுது, அனுப்பாதே என உள்ளிருந்து குரல் வந்தது. உள்ளிருந்து வரும் உந்தலுக்கு யோக ஞானம், intuition எனப் பெயர். இது யோகிகட்கு உரியது. நமக்கு உரியதன்று. அன்னை, பக்தனுக்கு, இவ்விஷயத்தில் யோகியின் நிலையை அளித்தார். பக்தர் மனம் குழம்பியது. மைத்துனனுக்கு எப்படி இல்லை எனக் கூறுவது என நினைத்து அனுப்ப சம்மதித்தார். குரல் வலுவாயிற்று. புறக்கணித்தார். மறுநாள் குழந்தைக்கு ஜுரம். மாமனார் வீடு கிராமம். கம்பவுண்டர் பென்சிலீன் போட்டார். அலர்ஜியால் ஷாக் வந்து குழந்தை இறந்தது. பலர் பேசும்பொழுது நம் கருத்தைத் தெரிவிக்க ஆர்வம் எழுகிறது. அனைவரும் நமக்கு அடங்கியவர்கள், சிப்பந்திகள், நாம் குறுக்கே பேசுவதைத் தடுக்கமாட்டார்கள். என்றாலும்
குறுக்கே பேசாமலிருந்தால் நாம் விலங்கு (vital பிராணன்) நிலையிலிருந்து மனித நிலைக்கு உயருகிறோம். நம்மை அடக்க முடியாமற் போனால் விலங்கு நிலைக்கு போகிறோம். மேல்நாட்டு வீடுகள், ஆபீஸ், தெரு ஆகியவை அளவு கடந்த ஒழுங்காக இருப்பதை நாம் பல வழிகளில் அறிகிறோம். ஜடம் physical life. அங்கு மேல்நாட்டார் ஒழுங்கைக் கண்டனர். அவர்கள் வளம் பெற்றதற்கு அது முக்கிய காரணம். நாம் அந்த முதல் நிலையிலும் தேறவில்லை. வீட்டிலிருப்பது ஒரு கார். நாளைக்கு வெளியூர் போவதாகத் திட்டம். தமக்கையை அழைத்துவர கார் போக வேண்டுமெனப் பேசினால், நான் எப்படிப் போவது என்று நினைப்பவன் மனத்தால் செயல்படுபவன். தன் சௌகரியத்தைக் கருதாது, கார் அக்காவை அழைத்து வருவதுதான் சரி என மனம் கூறினால் அவனால் மனத்தைக் கடக்க முடியும். இந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்தவன் நான். வெற்றிகரமாகச் செயல்பட்டு இன்று ரிஜிஸ்டர் செய்யப் போகிறேன். தலைமைப் பதவிக்கு நான் மட்டுமே தகுதியுள்ளவன். நானே அதை முனைந்து எடுத்துக் கொள்ளாவிட்டால், யாராவது அடித்துக் கொண்டு போய் விடுவார்கள். நானே முந்திக் கொண்டு என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டால் யாரும் வாயைத் திறக்கமாட்டார்கள் என்ற மனநிலை நிதானமற்ற மனநிலை. அது சமயம் நிதானமாக பக்தரிருந்தால், அனைவரும் அவரையே தலைவராக நியமித்தால், அது முனிவர் நிலை ஆன்மாவுக்குரிய நிலை. அன்னை அவ்விஷயத்தில் பக்தரை முனிவராக்கியுள்ளார் எனப் பொருள்.
முன்னுக்கு வருபவனுக்கு உடனுள்ளவர் தொந்தரவு கொடுப்பது வழக்கம். அதில் அடிபடுவோர் பலர். அடிபட்டு எழுந்து நிற்பவர் பலர். ஒரு பக்தருக்குச் சம்பந்தமில்லாத ஊரும், உலகமும் ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்து அழித்து ஒழிக்க முடிவு செய்து செயல்பட்டனர். அவரது திட்டங்கள் அதனால் பாதிக்கப்படவில்லை. திட்டங்களால் ஏற்பட்டிருக்கக் கூடிய பெரும்பலன் சுருங்கியது.
எதிர்ப்பு ஏற்பட்டு பல ஆண்டு கழிந்து மறைந்தது. இங்கு காப்பாற்றியது எந்த சக்தி? பக்தருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது தெரியாது, மறைந்தது தெரியாது.
முன்னே சொன்ன 10 நிலைகளை (ஜடம் முதல் சத்வரை) பகவான் இரண்டாகப் பிரிக்கிறார். ஜடம், வாழ்வு, அறிவு, முனிவர், ரிஷி, யோகி, தெய்வம்வரை முதல் நிலை. இங்கு அறியாமையும் அறிவும் கலந்துள்ளன. தெய்வலோகத்திற்கும் அறியாமையுண்டு. ஆனால் அங்குள்ள அறிவுக்கு அறியாமையால் பாதிக்கப்படாமல் செயல்படும் திறன் உண்டு. பக்தர் எதிர்ப்பால் பாதிக்கப்படவில்லை. எனவே அவரைக் காப்பாற்றிய சக்தி தெய்வலோகத்திற்குரிய சக்தி.
அன்னையை அறிந்தவர்கட்கு அன்னை, அவர்கள் விரும்பினால், சித்வரை, அதைக் கடந்த பிரம்மம்வரை எந்த நிலை சக்தியையும் அளிக்க முன் வருகிறார்கள். அன்பர்கள் எந்த சக்தியையும் தவறாமல், நிபந்தனையைப் பூர்த்தி செய்து பெறலாம். அடுத்த கட்டம் போனால் அவர்களே அச்சக்திக்கு உறைவிடமாகவும் ஆகலாம். அன்னையை அறியாதவர்கட்கு இது இல்லை.
கோர்ட் ஏற்பட்டபின் சுப்ரீம் கோர்ட்வரை போய் நீதி கேட்கும் உரிமை ஏற்பட்டுள்ளது. கோர்ட் ஏற்படுமுன் இந்த வசதியில்லை. அதுபோல் அன்னை பக்தர்கட்குப் பிரம்மம்வரை உள்ள ஆன்மீக சக்தி தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வாய்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், மேதையாக ஆவதற்கும், அதிர்ஷ்டம் பெறுவதற்கும், இறைவனாக மாறுவதற்கும் கிடைக்கும். இந்த சக்தி மனிதனை சத்திய ஜீவனாக்கும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். நான் அந்த யோக இலட்சியத்தைப் பற்றி இங்கு எழுதவில்லை. அதற்கு 1000 நிலை கீழேயுள்ள அதிர்ஷ்ட சாகரத்தைப் பற்றி எழுதுகிறேன். இந்திரா மகனுக்கு பிரதமராகும் வாய்ப்பு காத்துக் கொண்டிருந்தது. அவர் ஓர் ஆபீசராகலாம் எனக் கூறுவதுபோல் நான் அன்பர்களுக்குச் சொல்கிறேன். நாம் என்ன செய்யவேண்டும் எனக் கூறுமுன் யாருக்கு இது பலிக்கும் என்று கூறுகிறேன்.
- மனம் தூய்மையாக, தன்னலமற்றதாக, தீங்கு நினைக்க முடியாத மனமாக இருந்து கடும் உழைப்பை மேற்கொள்ளும் திறமைசாலிகட்கு இது பலிக்கும்.
இதையே வேறு வகையாகக் கூறினால் நமக்கு அதிர்ஷ்டம் வருமுன் அடுத்தவர்க்கு வரவேண்டும் என்ற பரந்த நல்லெண்ணமுள்ளவர்க்கு உரியது மேற்சொன்னது. பிறருக்கு வரும் அதிர்ஷ்டம் நம் மனதைப் பரவசப்படுத்தி பூரித்தால் நமக்குத் தகுதியுண்டு. அதன் பிறகு செய்ய வேண்டியவை,
- நாளின் எல்லாச் செயல்களையும் பெரிய செயல்களாக மாற்ற வேண்டும்.
- முறை இரண்டாம்பட்சமாகவும் ஜீவன் முக்கியமாகவுமிருக்க வேண்டும்.
- நமக்கேயுள்ள (பொதுவாக ஒரு குறையேயிருக்கும்) குறையை முனைந்து விலக்க வேண்டும்.
- முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது.
உடலால் மட்டும் உழைப்பவன் உழைப்பாளி, கூலிக்காரன். உணர்வால் உழைப்பவன் மேஸ்திரி, நாட்டாமைக்காரன், சூப்பர்வைசர். இவர்களுடைய வருமானம் அதிக வித்தியாசமில்லாவிட்டாலும் சமூக அந்தஸ்து என்ற வகையில் உழைப்பாளிகளை விட நாட்டாமைக்காரன் 10 மடங்கு உயர்ந்த பின் அதேபோல் அறிவோடு வேலை செய்பவன், அறிவால் உழைப்பவன், மனத்தால் செயல்படுபவன் பட்டம் பெற்று அதற்குரிய வேலையையோ, அதே வேலையையோ செய்பவனுக்கு நிலைமை 100 மடங்கு உயருகிறது. வருமானம் என்ற அளவில் அதிகம் தெரியாவிட்டாலும், நாட்டாமைக்காரனுக்கும், வக்கீலுக்குமுள்ள வித்தியாசம் சமூகத்தில் 100 மடங்கு வித்தியாசமானது. அடுத்தவன் ஆன்மாவால் செயல்படுபவன். ஆன்மா என்பதற்கு உயர்ந்தது என்ற கருத்துடன், அனைத்தையும் தன்னுட்கொண்டது என்று பொருள். ஒரு நிர்வாகம் செய்பவன் தொழிலதிபராக இருப்பவன் அனைவரையும், அனைத்தையும் சமாளிக்க வேண்டியவன். அந்தக் கோணத்தில் தொழிலை நிர்வாகம் செய்பவன், பல்கலைக்கழகம் போன்ற ஸ்தாபனத்தை நிறுவி, நிர்வாகம் செய்பவன் சமூகத்தில் ஆன்மாவால் செயல்படுபவனாகக் கருதப்படலாம். வக்கீல், டாக்டர், ஆசிரியர் போன்றவர்களுடன் அவன் நிலையை ஒத்திட்டுப் பார்த்தால் அது 1000 மடங்கு உயர்ந்திருக்கிறது. எந்தத் தொழிலும் உயர்வு, தாழ்வுண்டு. அதனால் ஒத்திட்டுப் பார்ப்பது சரியாகத் தெரியாது. ஒரே சந்தர்ப்பம், ஒரே திறமையுள்ள பல்வேறு மனிதர்களை பல்வேறு நிலையில் எடுத்துப் பார்த்தால், 1, 10, 100, 1000 என்று நிலை உயர்வதைக் காணலாம். அடுத்த கட்டம் அன்னை. அது கணக்கில்லாத உயர்வுடையது. நாம் அதை 10,000 எனக் கூறலாம். இவையெல்லாம் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஏனெனில் எந்தப் பெரிய உயர்வு வந்தாலும், பெரும்பாலும் பெற்றவர் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமும் ஆடி அனைத்தையும் சிதறடித்துவிடுகிறார். எஞ்சி நிற்பதையே நாம் காணுவதால், முழுப் பலனையும் நாம் ஓரு பொழுதும் காண்பதில்லை. ஒரு சிலர் இவற்றைக் கடந்த நிலையில் பலன் பெறுவதை அறிவோம். அவை தற்செயலாய் நடந்தவை. தற்செயலாய் நடப்பவற்றை திட்டமிட்டு நடப்பவையாக மாற்றுவது நம் நோக்கம். (Change the unconscious event into a consciously planned work).