இராணுவம் தரும் பாதுகாப்பு, பணம் :
நாம் பொதுவாக இராணுவத்தைக் காண்பதில்லை. அது எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது. ஆனால் ராணுவம் நாட்டைப் பாதுகாக்கிறது எனத் தெரியும். உள்நாட்டில் இராணுவத்தின் வேலையைச் செய்ய போலீஸ் இருக்கிறது. அதன் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் ரிஸர்வ் போலீஸ் உண்டு. மேலும் ஸ்பெஷல் போலீஸ் உண்டு. நாம் காண்பது போலீஸ். அதற்கு ஆதரவாக ரிஸர்வ், ஸ்பெஷல் போலீஸ்களும், Home guards, N.C.C., territorial Army எனவும் அமைப்புகளுண்டு.
- கண்ணுக்குத் தெரியும் போலீஸ் கொஞ்சம்.
- கண்ணுக்குத் தெரியாத போலீஸ் ஏராளம்.
இவற்றைக் கடந்த நிலையுண்டு. மக்கள் தாங்களே கட்டுப்பட்டு வாழும் மனநிலை. ரோட்டில் போகும் வயதான பெரியவரை, குழந்தையை, பெண்ணை இம்சை செய்ய ஒருவன் முனைந்தால் அங்கு போலீஸ் வந்து பெரியவருக்கு உதவி செய்யுமுன் அங்குள்ள அனைவரும் அந்த ரௌடியை விரட்டுகின்றனர். மக்கள் மனத்திலுள்ள பாதுகாப்பு, நியாய உணர்ச்சி போலீஸ், இராணுவம் போன்றன, பாதுகாப்பு என்ற கருத்தை நினைத்தால் போலீஸ் பாதுகாப்புத் தருகிறது. சமூகத்திலுள்ள பாதுகாப்பு அமைப்பு, உணர்ச்சி ஏராளம், infinite எனலாம்.
பணம் என்பது ரூபாய், கரன்ஸி நோட்டு. சர்க்கார் அச்சிட்டு கஜானா மூலம், பாங்க் மூலம் வழங்குவது பணம். இது போலீஸ் போன்றது. இதைக் கடந்த நிலையில் மார்க்கெட்டில் புழங்கும் பணம் ஏராளம். பவுனாக, வெள்ளியாக உள்ள பணம் $200 பில்லியன் என கணக்கிட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு உதவி ஓராண்டில் பெறுவது $4 பில்லியன் என்றால் பவுனில் எவ்வளவு மறைந்திருக்கிறது எனத் தெரியும். அது $200 பில்லியன் அன்று அதைப்போல் 10 மடங்கு என்று ஒரு கணக்கு. பவுனைத் தாண்டி வீடு, கட்டடம், நிலம் என சொத்துண்டு. சொத்துகளெல்லாம் பணமல்லவா? நாம் காணும் கரன்ஸியை மட்டும் பயன்படுத்துகிறோம். அதைக் கடந்த பணம் எல்லாம் இன்று நேரடியாக நமக்கு உதவுவதில்லை. இவற்றைச் சமூகம் பயன்படுத்த ஆரம்பித்தால், அல்லது ஒருவர் பயன்படுத்த முயன்றால், எவ்வளவு உபரி பணம் எழும் என நினைத்துப் பார்க்க முடியுமா? இத்துடன் பணம் முடிகிறது. நாம் தவணை முறையில் பொருள்கள் வாங்குகிறோம். அப்படியென்றால் என்ன? எதிர்கால வருமானத்தைக் கொண்டு இன்று பொருள்கள் வாங்குகிறோம். அதற்கு முடிவுண்டா? கடந்த 30 ஆண்டிற்கு முன் நம் வருமானம் என்ன? இன்று என்ன? எதிரே வரும் 30 ஆண்டுகட்குப் பின் என்ன வருமானம்? அவை எவ்வளவு பணம்? அவ்வளவு பணத்தைப் பயன்படுத்த முடியுமா? பணம் அபிரிமிதமாக நாட்டிலுள்ளது. நாம் இன்று பயன்படுத்துவது அதில் ஒரு சிறு பங்கு என நாம் அறிய முடியாதா? அதையே
அதிர்ஷ்ட சாகரம் என்றேன்.
நான் சொல்லும் சாகரம் பணத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா அம்சங்களிலும் உண்டு. இப்படி ஓர் அம்சம் சமூகத்திலிருக்கிறது என்பதை அறிவு புரிந்து கொள்வது முதற்படி. அதை எப்படி நம் வாழ்வில் கொண்டு வருவது என்பது அடுத்தது. இரண்டையும் ஒருவர் செய்து முடித்தால் அவருடைய செல்வம் எத்தனைத் தலைமுறைக்கு வரும்? பெறுவது பெரியது. அடுத்த தலைமுறை, வரும் தலைமுறைகளைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? பொதுவான அனுபவம் ஒரு தலைமுறை சம்பாதித்தால் அதே வேகத்தில் அடுத்த தலைமுறை அழிக்கிறது. அதைத் தடுக்க வழியுண்டா?
- கல்வி
- Character நல்ல குணம்
- இலட்சியம்
ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியுமானால், தவறு நடக்காது. கல்வி என்பது பள்ளிப் படிப்பில்லை. பொதுவாகப் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் படிக்க மாட்டார்கள். படிப்பு உள்ள அளவுக்கு அழிவு குறையும். பிள்ளைகள் கருத்தாக இருக்கும் கல்வியே கல்வி. அதையே கல்வி எனக் குறிப்பிட்டேன். அதைக் கொடுக்க முடியுமா? பரம்பரை பரம்பரையாக அழியாத சொத்துள்ள இடத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், நமக்கும் அவர்கட்கும் உள்ள வித்தியாசம் புரியும். அனைவரும் பின்பற்றும் நல்ல முறைகளை நாம் புறக்கணிக்க முடியாது. கூடாது. அன்னை பக்தர் என்ற அளவில் நமக்கு என்ன உண்டு? உலகில் இதுவரை எவரும் கண்டிராத பாதுகாப்பு நமக்குண்டு. அதைப் பின்பற்ற முடியுமா? முடியும் என்றால் என்ன நிபந்தனைகள்?
- அனைவரும் பின்பற்றும் நல்ல முறைகளை ஏற்க வேண்டும்.
- நம்மால் முடிந்தவரை நல்ல குணம், இலட்சியத்தைப் பிள்ளைகட்குத் தரவேண்டும்.
- நம்மிடம் மறைந்துள்ள கெட்ட குணங்கள் பிள்ளைகளில் தலை எடுக்கும்.
- நம்மிடம் உள்ள உயர்ந்த குணங்கட்கு எதிரானவை பிள்ளைகளில் உற்பத்தியாகும்.
- செல்வம் சம்பாதிக்கும் திறமை வேறு, காப்பாற்றுவது வேறு.
- அது காப்பாற்றப்படுவது எந்த வகையில் அது ஈட்டப்பட்டது என்பதைப் பொருத்தது.
- பிள்ளைகட்குச் சொந்தமாக அன்னை மீது நம்பிக்கை வேண்டும்.
- அன்னை பக்தியுடன் அடுத்த சாமிகளைச் சேர்ப்பது காரில் மகாத்மா காந்தி மாட்டைக் கட்டி ஓட்டியது போலாகும். அவை அறவே நீக்கப்பட வேண்டும்.
- வளரும் செல்வத்தைக் காப்பாற்ற வளரும் character சுபாவத்தைப் பெற வேண்டும்.
- கெட்டது கலப்பற்ற நல்லதே நம் வாழ்வு, பிள்ளைகள் வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமைய வேண்டும்.
மேற்சொன்னவற்றை ஏற்பவருக்கு ஆடம்பரம் விலக்கு. கணவன் விலக்கிய ஆடம்பரத்தை மனைவி சேர்த்து அனுபவிப்பாள். ஆடம்பரம் என்ற மனப்பான்மை நம் வாழ்விலிருந்து காத தூரம் விலக வேண்டும்.
- முழுமையான அன்னை பக்தி இத்தனையையும் அடக்கம் மூலம் சாதிக்கும்.
- அடக்கம் ஸ்ரீ அரவிந்த சின்னம்.
- அடக்கத்திற்கு நிகரானது Self-giving அர்ப்பணம்.
மனம் தானே அடங்கி, அர்ப்பணத்தை மேற்கொண்ட பக்தர் குடும்பத்திற்கு என்றும் அழிவில்லை.
- சம்பாதிப்பதும், சாதிப்பதும் அரிது.
- சாதித்ததைக் காப்பாற்றுவது அதனினும் அரிது.
- காப்பாற்ற குடும்பம் முழுவதும் மனதால் விழைவது பூலோக அதிசயம்.
எந்த ஒரு பக்தர் நல்லெண்ணத்தால் நிரம்பிப் பெருஞ்செல்வம் பெற முனைகிறாரோ அவருக்கு வெற்றி நிச்சயம். பெற்ற செல்வத்தை அடக்கமாக மூடநம்பிக்கைகளை விலக்கி, இதர தெய்வ வழிபாடுகளை காப்பாற்ற முன்வரும் பக்தர் குடும்பம் நாட்டில் எதிர்காலத்தில் முதன்மையாகும். ஆடம்பரம் விலக்கு. அந்த எண்ணம் அறவே விலக்கு. ஆடம்பரம் அனைத்தையும் அழிக்கும். மனத்தைச் சோதனை செய்தால் நூறு வழிகளில் மனம் ஆடம்பரத்தை மட்டுமே விரும்புவது தெரியும். அதை அனுபவிக்க நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானம் ‘மனிதன்‘ யார் என விளக்கும்.
மேல்நாடுகள்போல் நாம் செல்வம் பெற முடியுமா? அவர்கள் 300 ஆண்டுகளில் சாதித்ததை சாதிக்க நமக்கு 100 ஆண்டாவது ஆகாதா? சுதந்திரம் வந்து 50 ஆண்டாகிறது. என்ன முடிந்திருக்கிறது என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அமெரிக்காவில் 36,000 மைலுக்கு ரயில்வே போட்டார்கள். பகீரதப் பிரயத்தனம். 1 நாளில் 1 மைல் தண்டவாளம் போடப்பட்டது. அப்படியானால் எத்தனை வருஷமாயிற்று? 200 வருஷங்கட்கு முன் ஐரோப்பிய நாடுகளில் செல்வர் வீடுகள் எப்படியிருந்தன? இன்று நம் நாட்டில் பெரும்பணக்காரர்கள் வீடுகள் எப்படியிருக்கின்றன? ஒப்பிட முடியுமா? மேல்நாடுகளில் சராசரிக்கு மேற்பட்டவர்களில் பொய் சொல்வது என்பதில்லை. நம் நாட்டில் சிகரத்தில் எத்தனை பேர் தேறுவார்கள்? மேல்நாடுகளை நாம் எட்ட முடியும். நமக்குரிய பெரிய அம்சத்தை நாம் பாராட்டினால், கடந்தகாலப் பெருமைகளை, நிகழ்காலப் பொக்கிஷங்களாக மாற்ற நாடு முன்வந்தால், அது முடியும் என்பதைக் கீழ்க்கண்ட கருத்துகள் மூலம் நான் கூறுகிறேன்.
- மேல்நாட்டு வாழ்வுத் தரத்தை நாம் எட்டுவது 300 ஆண்டிலும் முடியாதது என்பது உண்மை.
- அதற்குச் சட்டம் போட்டுச் சாதிக்க முடியாது. அடிமட்டத்தில் மனிதன் மனதால் மாறவேண்டும்.
- சுதந்திரம் வந்தபின் நாடு முக்கியமான விஷயங்களில் பின்நோக்கிப் போகிறது.
- மனித வாழ்வின் முழுமைக்கு வளமும், ஆன்மீகமும் வேண்டும். இரண்டும் முக்கியம்.
- நாடு வளம் பெறாமல், இந்தியா முன்னேற முடியாது.
- மேல்நாடுகள் ஆன்மீகம் பெறாமல் முழுமை பெற முடியாது.
- மேல்நாடுகள் நாம் பெற்ற ஆன்மீகத்தைப் பெறுவதை விட, நமக்கு அவர்களுடைய சுபிட்சத்தைப் பெறுவது எளிது.
- எந்த நாடு முன்னேற வேண்டுமானாலும், அதன் சொந்த வலிமையை வளர்க்க வேண்டும்.
- மேல்நாடுகள் அவர்கள் செழிப்பின் ஆன்மீக அஸ்திவாரத்தை அறிய வேண்டும்.
- நாம் நம் ஆன்மீகத்தின் செழிப்பு அம்சத்தை அறிய வேண்டும்.
- நம் நாட்டுயர்வை நாமறிய இன்று அதை அமெரிக்கா ஏற்றால்தான் நாம் ஏற்போம்.
- நாம் ஏற்ற பிறகே தம் டெக்னாலஜியை தாம் ஏற்போம் என அமெரிக்கர் கூறுவதில்லை.
- ஒரு வகையில் ஆன்மீகம், டெக்னாலஜியை விட உயர்ந்தது.
- ஆன்மீகம் டெக்னாலஜியை ஏற்க முடிவு செய்தால், டெக்னாலஜி ஆன்மீகத்தை ஏற்பதைவிட அது எளிது.
- இரண்டும் தேவை.
- ஒன்றை மற்றதுடன் இணைப்பது இயலாத காரியம். இதுவரையில் உலகில் நடவாதது.
- மேல்நாட்டு வழிபாடும், டெக்னாலஜியும் இன்று பிரிந்துள்ளன.
- நம் நாட்டு ஆன்மீகம் டெக்னாலஜிக்கு எதிரானது.
- இரண்டையும் சேர்க்க முடியும் என்று பேசியவர் குறைவு.
- இரண்டையும் இணைக்கும் தத்துவம் இன்றுவரை உலகில் ஏற்படவில்லை.
- கத்தோலிக்க மதமும், கம்யூனிசமும் உலகை ஆள்கின்றன என்றார் அன்னை.
- இரண்டும் வெற்றி பெறவில்லை.
- ஸ்ரீ அரவிந்தம் இரண்டும் இணையும் தத்துவத்தை உலகுக்குக் கொடுத்துள்ளது.
- இல்லறத்திற்குத் துறவறத்தின் தூய்மையை அளிக்கும் நல்லறம் அது.
- அத்தத்துவப்படி அவை இணைய முடியும்.
- அது நடப்பதானால், அன்பர்கள் வாழ்வில் முதலில் நடக்க வேண்டும்.
- அது நடக்க ஏற்பட்ட ஸ்தாபனங்கள் அன்னைக்கு எதிரிகளாகிவிட்டனர்.
- மனித வாழ்வில் ஆன்மீகமும், சுபிட்சமும் இணைய அன்பர்கள் வாழ்வு முன்னோடியாக அமைய வேண்டும், அமைய முடியும்.
- எந்த அன்பர் நல்ல முறையில் பெருஞ்செல்வம் பெறுகிறாரோ அவர் வழிகாட்டி.
- பெற்றதைக் காப்பாற்றுபவர் பெரிய ஆத்மா.
இக்கருத்துகளுக்குரிய தத்துவங்களும், நடைமுறைகளும், உதாரணங்களும் நமக்குதவும்.
II. மேல்மனம் – அகந்தை – காலம் – சிறியது (Infinite) – பகுத்தறிவு.
மனித வாழ்வு மேல்மனத்தில் அகந்தையை மையமாகக் கொண்டு காலத்தாலும், அதன் கருவியான கர்மத்தாலும் கட்டுப்பட்டுச் சிறியதாகவுள்ளது எனப் பகுத்தறிவு கூறுகிறது.
மேல் மனத்திலிருந்து அகன்று உள்ளே போய் அடிமனத்தில் புதைந்துள்ள ஆன்மாவைக் கண்டு அகந்தைக்குப் பதிலாக ஆன்மாவை மையமாகக் கொண்ட வாழ்வு காலத்தையும், கர்மத்தையும் கடந்த பெரிய (Infinite) வாழ்வாகும் என ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.
நாம் அறிவதை மேல்மனம் எனவும், நம் புலன்கட்கு அப்பாற்பட்டதை உள்மனம் எனவும், கடந்த கால வாழ்வை பொக்கிஷமாகப் பெற்றதை ஆழ்மனம் எனவும், பரமாத்மாவும் ஆழ்மனமும் சந்திப்பதை அடிமனம் எனவும் கூறும் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மா சைத்திய புருஷன் அடிமனத்துள்ளிருப்பதாகக் கூறுகிறார்.*
பரமாத்மா – Superconscient அடிமனம் – Subliminal
அகந்தையும், மேல்மனமும், காலமும், மனமும் சிறியதை உருவாக்குகின்றன.
சைத்தியப் புருஷனும், அடிமனமும், காலத்தைக் கடந்த நிலையும், அடிமனமும் பெரியதை உருவாக்குகின்றன. சிறியது (finite) பெரியதாவதே (infinite) நமது இலட்சியம். நாம் புறக்கணிக்க வேண்டியவை எவை, ஏற்க வேண்டியவை எவை எனத் தெளிவாகத் தெரிகின்றன. எப்படி என்ற கேள்விக்கு மேலும் விளக்கம் தேவைப்படுகின்றது.
- அகந்தை என்பது கர்வம், திமிர், கோபம், சுயநலம் ஆகியவற்றால் ஆனது என்றால் அவற்றை விலக்க வேண்டும் என்பது தெளிவு.
- மனம் சிறியது. அதைக் கடக்க அதன் முக்கியக் கருவியான எண்ணம் அறவேண்டும் என்பது எளிமையாகப் புரியும். செயல்படுத்த நாம் முனிவராக வேண்டும். நடக்கப் போவதில்லை.
- காலத்தை எப்படிக் கடப்பது? சிறியதை எப்படிப் பெரியதாக்குவது, மேல் மனத்திலிருந்து எப்படி உள்ளே போவது?
- கடந்ததையும், எதிர்காலத்தையும் கருதாமல் நிகழ்காலத்தில் மூழ்கிப் பரவசப்பட்டுத் தன்னை மறப்பது காலத்தைக் கடக்கும் உபாயம். இதைப் புரிந்து கொள்வது முடியும். செய்வது சுலபமன்று.
- சிறியதனுள் பெரியதுண்டு. செயலைக் கருதினால் சிறியது, செயலின் கருவான ஆன்மாவைக் கருதினால் பெரியது. செயலைவிட்டகன்று, அதன் ஆன்மாவை மையமாக்கி செயல்படவேண்டும். அப்படிச் செயல்பட்டால் சிறியது பெரியதாகும்.
- மேல்மனத்திலிருந்து உள்மனம் அடிமனம் போக நிஷ்டை, விசாரம், சமர்ப்பணம் ஆகியவை கருவிகள்.
இந்த நீண்ட விளக்கத்தைச் சுருக்கி சமர்ப்பணம் இத்தனையையும் செய்யும் எனலாம்.
எந்த ஒரு காரியத்தையும் அன்னையை நினைத்துச் செய்வது சமர்ப்பணம். அதனுள் மேற்கூறிய அனைத்தும் அடக்கம் என்பது அன்னைக்குரிய அருள் விளக்கமாகும்.
III. மனித முயற்சியும், தெய்வ அருளும்.
தேவையால் முயலும் மனிதன் பிறகு ஆர்வத்தால் அதிக முயற்சியை எடுக்கிறான். அறிவு வளர்ந்த நிலையில் தேவை வளர்கிறது. ஆர்வம் பெருகுகிறது. முயற்சி அதிகபட்சமாகிறது. நேற்று luxury ஆடம்பரம் என்று கருதியது, இன்று அவசியமாகிறது. வாழ்வின் வளம் பெருகிக் கொண்டே போகிறது. மனித முயற்சியின் இரு உருவங்கள் நாமறிந்தவை. ஒன்று தெரிந்ததை அதே அளவில் விரிவுபடுத்துவதாகும். மிராசுதார் வருஷாவருஷம் அதிக நிலம் வாங்குகிறார். அடுத்தது உயரும் வழி. அடுத்த, அடுத்த கட்டங்களுக்குத் தொடர்ந்து உயருவது. நில வருமானத்தைக் கொண்டு டவுனில் வியாபாரம் ஆரம்பிப்பதும், அவ்வருமானத்தில் படிப்புக்குச் செலவு செய்து தொடர்ந்து படிப்பை வெளிநாட்டுக்கும் கொண்டு போனால் உள்ளூரில் மேலும் நிலம் வாங்க முடியாது. ஒன்று horizontal growth, உள்ளதை அதே நிலையில் கடைசிவரை வளர்ப்பது. அடுத்தது vertical growth அடிப்படையை மாற்றாமல் அடுத்த அடுத்த உயரத்திற்குப் போவது. இரண்டையும் நாம் வாழ்வில் காண்கிறோம் என்றாலும், பரவலான அனுபவம் இரண்டுமல்ல. i) அடிப்படை அகன்றும், ii) உச்சி உயர்ந்தும் iii) ஒரு குன்றுபோல் முடிவு எழுவதே அன்றாட அனுபவம். நாம் கூறிய நிலைகள் மூன்றும் மனித முயற்சிகள். மனிதன் தானே முயன்று, தன் திறமையால், தன் கையை ஊன்றித் தானே உதவியின்றி எழும் முயற்சி போன்றது. பள்ளிக்கூடம், ரயில்வே, பஸ், தபாலாபீஸ், போலீஸ், தீயணைப்புப்படை, பாங்க் எல்லாம் வருமுன் பிள்ளைகள் படித்தார்கள். காசிவரை யாத்திரை போனார்கள். திருடனைப் பிடித்தார்கள், எரியும் வீட்டை அணைத்தார்கள், கடன் பெற்றார்கள். இன்று சமூகம் எல்லாப் பொறுப்பையும் ஏற்கிறது. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகிறோம், பிரயாணத்தைப் பஸ்ஸில் ஏற்கிறோம், தபாலை எழுதிப் பெட்டியில் போடுகிறோம், அடிதடி நடந்தால் போலீஸ் தானே வருகிறது, வைக்கோல் போர் எரிந்தால் தீயணைப்புப்படை வருகிறது. மனித முயற்சியைச் சமூகம் மேற்கொண்டால் வாழ்க்கை ஆயிரம், பதினாயிரம் மடங்கு எளிதாகிறது.
மனித முயற்சிக்கு 3 வடிவங்கள் கொடுத்தாற்போல் அன்னை அருளுக்கு மூன்று வடிவங்கள் தரலாம். அன்னையை உலகம் அறியாத நிலையிலும் i) போல் அருள் லேசாக மனிதனுக்குக் கிடைக்கிறது. அன்பனாகி, தீவிர பிரார்த்தனையை மேற்கொள்பவனுக்கு ii) போல் அருள் அளவு கடந்து சிறு அளவில் உயரத்தில் அளவு கடந்தும், அகலத்தில் சிறியதாகவும் கிடைக்கிறது. iii) ஆம் நிலை மனிதன் அன்னையைக் குடும்பத்துடன் ஏற்று, அவர் கொள்கைகளையும் ஏற்று முழு முயற்சி செய்யும்பொழுது ஏராளமாக அருள் பொழிகிறது. இம்மூன்று நிலைகளையும் மேலேயிருந்து செயல்படுவதாகக் கொண்டால் கீழிருந்து மனித முயற்சியும், மேலிருந்து அருளும் எதிரெதிரான உருவங்களாகத் தெரியும். அவையிரண்டும் முழுமை பெறுவதே ஸ்ரீ அரவிந்தம்.
கட்டுப்பாடில்லாத மனிதன் முதற்படம் போல எழ முயல்கிறான். கட்டுப்பாடுள்ளவர்கள் இரண்டாம் படம் போல உயருகிறான். அன்னை அன்பர் மூன்றாம் படம் போல் உயருகிறார்.
IV. Skill-energy-knowledge-silence-intuition-jnana=GOODNESS திறமை–சக்தி–அறிவு–மௌனம்–நேரடி–ஞானம்=நல்லது.
நம் நிலை உயரும்பொழுது நம் சாதனை உயருகிறது. திறமையால் வேலை செய்வது, சக்தியால் வேலை செய்வது, அறிவால் நடப்பது, ஆன்மாவில் மௌனத்தால் காரியங்களைப் பூர்த்தி செய்வது, யோகிபோல் வாழ்வில் சாதிப்பது, தெய்வத்தின் ஞானத்தைச் செயலில் காண்பது என்பவை மனித முயற்சியின் பல நிலைகள் எனக் கண்டோம்.
- நிலை உயரும்பொழுது பயன்படும் கருவியும் உயருகிறது. உயர்ந்த கருவிக்கு, உயர்ந்த நிலையில், உயர்ந்த பலன் வருகிறது.
- நிலை எவ்வளவு உயர்ந்தாலும், கருவியின் சிறப்பு எவ்வளவு உயர்ந்தாலும், பலன் கருவியைப் பயன்படுத்தும் மனிதனைப் பொருத்ததேயாகும்.
- நிலையும், உயரும் கருவியும் உயர்ந்த பலனை, அல்லது அணுகுண்டை உற்பத்தி செய்யும்.
- நிலை உயருவதால் மட்டும் அல்லது கருவியின் சிறப்பால் மட்டும் மனித முயற்சிக்கு நல்ல பலன் மட்டும் வரும் என அறுதியிட்டுக் கூற முடியாது.
- நிலையும், கருவியும், பலனின் தரத்தை உயர்த்தும்.
- பலனின் தன்மை மனிதன் நல்லவனா, கெட்டவனா என்பதைப் பொருத்தது.
- இன்றுவரை உலகம் கண்டு கொண்டுள்ள உண்மையிது.
- மனித மனத்திற்கு இதற்கு மேற்பட்ட நிலைக்குத் தகுதியில்லை.
ஸ்ரீ அரவிந்தம் அடுத்த கட்டத்தை நாடுகிறது. அங்கு தீய பலன் எழ வழியில்லை. அதைச் சாதிப்பது நல்லெண்ணம்.
நல்லெண்ணம் என்று இங்கு குறிப்பிடுவது தீயதிற்கு எதிரான நல்ல எண்ணமன்று. சுயமாக நல்லதாக மட்டும் இருக்கக்கூடிய நல்லெண்ணம். மனிதன் அதுபோன்ற நல்லெண்ணத்தால் மட்டும் செயல்பட முடியுமானால் சிறிய மனிதன் பெரிய வாழ்வை வாழ முடியும். பெரிய வாழ்வு அதிர்ஷ்ட சாகரத்தை எட்டி அதன் பலனை அவன் வாழ்விலும், அனைவர் வாழ்விலும் கொண்டு வரும். இதை இரு வழிகளில் சாதிக்கலாம்.
1. நாம் அதிர்ஷ்டம் பெறுமுன் அடுத்தவர் அதிர்ஷ்டம் பெற மனம் விழைவது. 2. அன்னையை நல்லெண்ணத்தின் ஊற்றாக அறிந்து ஏற்பது. இதைச் செய்பவர் வாழ்விடம் எந்தப் பரிசை நாடினாலும், அபரிமிதமாகத் தரும். அவரே யோக வாழ்வை விட்டகன்று யோகத்தை மேற்கொண்டால் அவருக்கு வாழ்வையோ, இறைவனையோ, எதையும் கேட்கும் உரிமை இல்லை.
V. எது சரி?
- எதையும் கேள்வி எழுப்பாமல் கைகட்டி, வாய்பொத்தி மேலுள்ளவர் உத்தரவை ஏற்பவன் முன்னேறுவான். அது முதல் நிலை முன்னேற்றம். நல்லது.
- எதையும் சிந்தனை செய்து, கேள்வி எழுப்பப் பயப்படாமல் கேள்வி கேட்டு, கேட்டதைப் புரிந்து செயல்படுபவன் அதிக முன்னேற்றம் அடைவான். அது இரண்டாம் நிலை.
- அந்தஸ்திருந்தும், கேட்காமல் பெரியவர், சமமானவர், கீழுள்ளவர் கூறுவதை ஏற்கும் மனம் மூன்றாம் நிலைக்குரிய முன்னேற்றம் பெறும்.
- காமராஜ் இந்த 3 நிலைகளிலும் இருந்தார். தொண்டராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் முதல்நிலை பழக்கத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார்.
காமராஜை சத்தியமூர்த்தி தலைவராக்கியபின், தாம் செயலாளராக இருந்தார். அடுத்த நிலையில் சென்னை முதல்வர்களாக பிரகாசம், குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ரெட்டியார், ராஜாஜி ஆகியவர்களை நியமிக்கும் நிலைக்கு வந்தார். காமராஜ் மூன்றாம் கட்டம் வந்தபொழுது நாட்டின் இரு பிரதமர்களை நியமித்தார்.
VI. அதிகாரி, அரசியல்வாதி, குரு, ஸ்ரீ அரவிந்த அவதாரம் என்ற உதாரணம்.
அதிகாரி உள்ளூர் குமாஸ்தா முதல் சீப் செக்ரடரிவரை உண்டு. ஆனால் எந்த நிலையிலும் அதிகாரி தம் அதிகாரத்தை அரசியல்வாதியின் விருப்பத்திற்கே உட்படுத்தி செலுத்த வேண்டும். அரசியல்வாதி எவ்வளவு உயர்ந்தவரானபோதிலும் முடிவாக மகாத்மா காந்திஜீயைப் போன்ற குருவுக்கு கட்டுப்பட்டவர். 1910ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் சூட்சும உலகில் இந்தியாவுக்குப் பெற்ற சுதந்திரத்தை அரசியல்வாதியும் குருவும் 1947இல் நடைமுறை உண்மையாக்கினார். இது சமூகத்தில் உள்ள அமைப்பு. அன்னை பக்தர்கட்கு மனம் எந்த நிலையிலும் நிற்கலாம். வியாதி வந்தால் மருந்தை நம்புகிறது, டாக்டரை நம்புகிறது, வேலை வேண்டுமானால் மார்க், பட்டம், சிபாரிசு, பணத்தை நம்புகிறது, அதிகாரிக்கு மேல் அரசியல்வாதியும் அவருக்கு மேல் குருவும், முடிவாக அவதாரம் இருப்பதுபோல் மருந்து, டாக்டர், பணம் என்றோ, மார்க், பட்டம், படிப்பு, சிபாரிசு, பணம் என்றோ நாம் பலவற்றை நம்பினாலும் முடிவானது ஸ்ரீ அரவிந்த அவதாரம் என்பது போல் பக்தருக்கு முடிவானது அன்னை. அன்னைக்கு அனைவரும், அனைத்தும் உட்பட்டவர் என்று தெரியவேண்டும்.
இன்று நாம் ஐஸ்யை வீட்டில் செய்கிறோம். இவ்வசதிகள் வருமுன் ஐஸ் இங்கிலாந்திலிருந்து சென்னைக்குக் கப்பலில் வந்தது. அமெரிக்க ஏரிகளில் உள்ள பாளம் பாளமான ஐஸ் கட்டிகளை ஐரோப்பாவுக்குக் கப்பலில் கொண்டு வந்தனர். இயற்கையில் ஏராளமாக இருக்கும் ஐஸ் அமெரிக்கருக்கும், ஐரோப்பியருக்கும் பயன்பட்டது.
தண்ணீரைச் சூடுபடுத்தினால் 100°C வரை உயரும். அதன்பின் உயராது. அடுப்பிலிருந்து தண்ணீர் பெறும் அத்தனை சூடும் டெம்பரேச்சரை உயர்த்துவது இல்லை. நீரை நீராவியாக மாற்றப் பயன்படுகிறது. எல்லாத் தண்ணீரும் ஆவியாகும்வரை உள்ளே வரும் எல்லாச் சூட்டையும் நீர் பெற்று தன்னுள் அடக்கிக் கொள்ளும். வெகுநேரம் சூடான தண்ணீர்பட்டு ஏற்படும் காயம் ஆழமானதாக இருக்கும். அதற்கு latent heat உள்ளுறை வெப்பம் எனப் பெயர்.
சமூகம், குறிப்பாக அதன் உயர் மட்டங்கள் அதிகாரம், செல்வம், செல்வாக்கு, சக்தி, திறன், கலை, ஞானம் என எல்லா சமூகத் திறன்களுடைய உபரி உற்பத்தியை latent ஆக தன்னுள் கொண்டுள்ளது. அதையே அதிர்ஷ்ட சாகரம் என்று கூறுகிறேன்.
காலம், காலத்தைக் கடந்த நிலை, இரண்டும் சந்திக்குமிடம்
காலம் மனிதனுக்குரியது. அதைக் கடந்த நிலை துறவியினுடையது. ஸ்ரீ அரவிந்தம் இல்லறத்தை ஏற்று அதைத் துறவறத்தின் தூய்மையோடு நடத்த வேண்டும் என்கிறது. காலத்திற்கு உயிர் ஆசை, துறவிக்கு உயிர் போன்றது பற்றற்ற நிலை. இதைப் புருஷன், ஆன்மா என்பதால் குறிப்பிடுகிறோம். காலத்திற்கும் ஆன்மா உண்டன்றோ? அது காலத்தின் ஜீவன். காலம் வாழ்வில் ஆரம்பித்து வாழ்வில் முடிவது. காலத்தைக் கடந்த நிலை வாழ்வை ஒதுக்கிய நிலை. காலத்தின் ஆன்மா காலத்தையும், அதைக் கடந்த நிலையையும் தன்னுட் கொண்டது. அதைக் கடந்த நிலை சிருஷ்டியிலில்லை. காலமும், காலத்தைக் கடந்த நிலையும் சந்திக்கும் இடம் அது. சைத்தியப் புருஷன் அங்குள்ளது. அங்கிருந்து செயல்பட்டால் அது ஸ்ரீ அரவிந்தத்தின் பூரணமாகும். அதிர்ஷ்ட சாகரம் அந்நிலைக்குரியது.
- அதிர்ஷ்ட சாகரத்தைக் கண்டு, அதனுடன் தொடர்பு கொண்டவர்க்கு தினமும் 50,000 ரூபாய் வியாபாரமாகும் கடையை நடத்துபவர் எனில், இத்தொடர்பு அடுத்த நாள் 5 லட்சத்திற்கு விற்கச் சொல்லும். அதை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பது அன்பரின் ஈடுபாட்டைப் பொருத்தது.
கட்டுரையின் சில கருத்துகள்
- அரசியல் அதிகாரம், பெருஞ்செல்வம் போன்ற ஏராளமான சக்திகள் சமூகத்தின் மேல்மட்டத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ஏராளமாகக் குவிந்துள்ளன.
- இன்று உலகம் இப்பொக்கிஷத்தை அறியவில்லை.
- சந்தர்ப்பவசத்தால் இதனருகில் உள்ள ஒரு சிலர் ஏராளமான பலனைக் குறுகிய காலத்தில் பெறுவதுண்டு. பெரும்பாலும் உலகம் அதை அறிவதில்லை. செய்தி வெளியே வந்தால் அதை அதிர்ஷ்டம் என்கிறோம். சிந்தனையாலும், அறிவாலும், ஆன்ம விழிப்பாலும்
- இந்த அதிர்ஷ்ட சாகரத்தை நாம் முழுவதும் அறிய முடியும்.
- நம் அன்றாட வாழ்வைச் சிறியதிலிருந்து பெரியதாக மாற்றினால் நமக்கும் இதற்கும் தொடர்பு ஏற்படும்.
- பக்தர்கட்கு அன்னை அத்தொடர்பை ஏற்படுத்தித் தருகிறார்.
- மனிதனுக்கு அத்தொடர்பு கிடைப்பது நிச்சயம்.
- கிடைத்தால் 100 தலைமுறைகளில் சாதிப்பதை இன்று சாதிக்க முடியும்.
- நாட்டுக்குக் கிடைத்தால் 500 ஆண்டு முன்னேற்றம் சீக்கிரம் வரும்.
- இதைச் சாதிக்க மனிதன் சிறியவனாக இருப்பதை விட்டுப் பெரியவனாக வேண்டும்.
- பெரியவனாக இருப்பதன் அம்சங்கள் அயராத உழைப்பு ,
- அளவு கடந்த தெம்பு, அறிவாலும், ஆன்மாவாலும் செயல்படுவது, பிறர் வாழப் பிரார்த்திப்பது, சமர்ப்பணம்.
- சிறந்த மனிதன் அன்னையைச் சமர்ப்பணத்தால் ஏற்றுக்கொண்டு, அடுத்தவர் பெறும் அதிர்ஷ்டத்தில் பரவசப்பட்டால் அவனுக்குரியது அதிர்ஷ்ட சாகரம்.
- கலை, விளையாட்டு, சங்கீதம், விஞ்ஞானம், செல்வம், டெக்னாலஜி, அரசியல், பதவி, அந்தஸ்து போன்ற எல்லா அதிகாரங்கட்கும் பொருந்தும் சட்டம் இது.