சிறியதும் பெரியதும் – 1

நாமறிந்தது பூவுலகம். அது நல்லதும், கெட்டதும் கலந்தது. மேலுலகம் தெய்வங்கட்கும், தேவர்கட்கும் உரியது. அங்கு நல்லது மட்டும் உண்டு. கெட்டதில்லை. தெய்வம் வாழும் இடம் அது. நமக்கு மனம் உண்டு. அது சிந்திக்கும். வாழ்வுண்டு. சிந்தனை வாழ்வை நிர்ணயிக்கும். சிந்தனை நல்லதாகவுமிருக்கும், கெட்டதாகவுமிருக்கும். பலன் சிந்தனை போலவேயிருக்கும். நாம் என்பது நம் உடல். உடலுக்கு நோயுண்டு. நோய் வாராது எனக் கூற முடியாது. உடல் உள்ளவரை நோயுண்டு.

நல்ல எண்ணமும், கெட்ட எண்ணமும் உள்ள மனம் இருக்கும் வரை, அதனால் நிர்ணயிக்கும் வாழ்வுள்ளவரை, நோய் வாய்ப்படும் உடலுள்ளவரை நாம் வாழும் இவ்வுலகில் நல்லது மட்டும் உண்டு எனக் கூறமுடியாது. நல்லது பெரியது. கெட்டது சிறியது எனத் தத்துவம் கூறுகிறது.

  • சிறியது பெரியதாகும்.
  • சிறியது பெரியதானால், நல்லது மட்டும் நடக்கும்.
  • சிறியது பெரியதானால், பூவுலகம், மேலுலகமாகும்.
  • ஸ்ரீ அரவிந்தம் உலகில் சிறியதைப் பெரியதாக்கும் இலட்சியமுடையது.

எது பெரியது? எது சிறியது?

சிருஷ்டிக்கு முன்னால் சிறியதில்லை, பெரியதுமில்லை, சிறியதும் பெரியதும் சிருஷ்டிக்குரியவை. பிரம்மம் ஆதி. ஆதிக்கு உருவமில்லை, சக்தியுமில்லை. பிரம்மம் சக்தியாயிற்று. சக்தி உருவம் பெற்றது. உருவம் சிறியது, பெரியது எனத் தோன்றுகிறது. நாம் கடவுள் என்பதைத் தத்துவம் பிரம்மம் எனக் கூறுகிறது. பிரம்மம் தானே சிருஷ்டியாயிற்று. சிருஷ்டியில் மேல் உலகம், பூலோகம் என்ற பிரிவுகளுண்டு. சிருஷ்டிக்கு 8 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் சக்தியுண்டு. உருவம் உண்டு. ஜட உலகில் சக்தி செயல்படுகிறது. உருவங்கள் ஏற்படுகின்றன. நீர்வீழ்ச்சியில் சக்தியைக் காண்கிறோம். புயல் அதிக சக்தியை உற்பத்தி செய்கிறது. பதினாயிரம் பேர் சுரங்கம் தோண்டுகிறார்கள். பிரம்மாண்டமான சக்தி வெளிப்படுகிறது. சக்தியின் பயனாக நாம் காணும் உருவங்கள் ஆயிரம். மலைக்கு உருவமுண்டு. வீடு நாம் கட்டிய உருவம். மனிதனுக்கும் உருவமுண்டு. உருவமில்லாதவை குறைவு. சிருஷ்டி மனத்திலும் உண்டு. மனத்திற்குரிய சக்தி எண்ணம். எண்ணத்திற்குரிய உருவம் சொல். தீ சிறிய சொல். கலியுகம் நீண்ட சொல். சிருஷ்டி உருவம் என்ற நிலையை அடைந்த பிறகு சிறியது, பெரியது என்ற வேறுபாடு எழுகிறது.

  • பிரம்மம் சக்தியாகி உருவம் பெறுகிறது.
  • சக்தியை பிரம்மம் சிறிய உருவமாகவோ, பெரிய உருவமாகவோ மாற்றுகிறது.
  • ஒரே சக்தியை பிரம்மம் இரு வேறு உருவங்களாக – சிறியது, பெரியது – மாற்றுவதால், சிறியதிலுள்ள சக்தியும், பெரியதிலுள்ள சக்தியும் சமம்.
  • சக்தி ஒன்றே, உருவம் வேறு.
  • அதனால் சிறியது பெரியதாகலாம். பெரியது சிறியதாகலாம் என்பது தத்துவம்.
  • அதை மாற்றும் திறன் அவ்வுருவத்திற்கில்லை. அவ்வுருவத்தைத்தந்த சக்திக்குண்டு.
  • உருவத்தை மறந்து சக்தியை உணர்ந்தால், சிறியது பெரியதாகலாம்.
  • சக்தியும் மறந்து பிரம்மமானால், ஒன்று மற்றதாக மாறமுடியும்.
  • விதை சிறியது, மரம் பெரியது. காலம் சிறிய விதையைப் பெரிய மரமாக்கும்.
  • மரம் பெரியது, விதை சிறியது. காலம் பெரிய மரத்தை சிறிய விதையாக்கும்.
  • நட்பு நல்லெண்ணம், வெறுப்பு கெட்ட எண்ணம்.
  • நல்லெண்ணம் கெட்ட எண்ணமாகும்; கெட்ட எண்ணம் நல்லெண்ணமாகும்.
  • எண்ணத்தை மாற்றுவது மனம்.
  • மனம் மாற்றத்தை க்ஷணத்தில் செய்யும்.
  • மனத்தை விட ஆன்மாவும், ஆன்மாவைவிட சத்தியஜீவியமும் உயர்ந்தவை.
  • உயர்ந்தவை செயல்பட்டால் பெரிய மாறுதல்கள் ஏற்படும்.
  • உயர்ந்தவையால் பெரிய மாறுதல்களையும் குறுகிய நேரத்தில் செய்ய முடியும்.
  • சத்தியஜீவியத்தைக் கடந்தது சச்சிதானந்தம், பிரம்மம் ஆகியவை.
  • பெரியதும், சிறியதும் ஒன்றே.
  • எந்த உருவத்திலும் அவை ஒன்று மற்றதாக மாற முடியும்.
  • மாற்றும் சக்தியுயர்ந்தால் மாற்றம் சீக்கிரத்தில் நடக்கும்.

நிலைகள் எட்டு ஆகும். நமக்குரியவை முதல் மூன்று நிலைகளே. அவை உடல், உணர்வு, மனமாகும். சத்திய ஜீவியம், ஆனந்தம், சித், சத் ஆகிய நிலைகள் நமக்கு நேரடியாகப் பயன்படா. ஒவ்வொரு நிலையிலும் ஜீவியம் consciousness, ஜடம் substance என இரு பகுதிகள் உள்ளன. ஜீவியத்தில் ஏற்படும் மாறுதல்கள் பூரணமானவை. ஆனால் நிலையானவை அல்ல. ஜடத்தில் ஏற்படும் மாறுதல்கள் பூரணமானவை, நிலையானவை. பெரியப்பா பையனை சுவீகாரம் எடுத்துக் கொள்ள முடிவு செய்வது ஜீவியத்திற்குண்டானது. அது பையனுக்கு எல்லா உரிமைகளையும் வழங்கக் கூடியது. ஆனால் தன் சொத்துக்களை தம்பி மகன் பேரில் எழுதுவது ஜடத்திற்குரிய செயல். முதற் செயல் பூரணமானதானாலும், மாறக் கூடியது. ஜடத்தில் ஏற்படும் மாற்றம் நிலையானது. பூரணத்தைத் தன்னுள் கொண்டது. ஒவ்வொரு நிலையையும், உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும், அதன் உட்பிரிவுக்கும் உரிய சட்டங்கள் ஆங்காங்கே வேறுபடும். மரம் விதையாக நீண்ட காலம் தேவை. கெட்ட எண்ணம் நல்ல எண்ணமாக, காலம் தேவையில்லை. ஞானம் தேவை.

கருவி, காலம், இடம், சக்தி, முறை போன்றவை நடைமுறையில் வேறுபடுவதை விவரமாக அறியமுடியும்.

  • அந்த விவரமான ஞானத்திற்கு உலகை ஆளும் திறனுண்டு.
  • அத்திறன் ஆன்மிக சக்தி.
  • முடிவான நிலையில் ஜடத்தை ஆன்மா ஆள்வது, ஜடம் ஆன்மாவாக மாறுவது நடைபெறும்பொழுது மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக மாறும். அதுவே ஸ்ரீ அரவிந்தம்.

அக்ஷயப் பாத்திரம்

அக்ஷயப்பாத்திரத்தில் அனந்தன் ஜடமாக வெளிப்படுகிறான்.

  • எல்லையற்ற பலம். I.765 (யோக வாழ்க்கை)

எதிரி யாராக இருந்தாலும், அவனுடைய பலத்தில் தனக்குப் பாதி வேண்டும் என்று வரம் கேட்டவன் பெற்றது எல்லையற்ற பலம். இது சக்தியில் எல்லையற்றது. சிறிய மனிதன் முடிவற்ற பலத்தைத் தவம் மூலம் பெறுகிறான். இங்கு,

நிலை – உணர்வு(சக்தி, பிராணன், Vital)
கருவி – தவம்
சக்தி – காலத்தைக் கடந்த ஆத்மா.

மனித நிலைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியிது. ஸ்ரீ அரவிந்தம் தவத்திற்குப் பதிலாக சரணாகதியைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் சக்தி காலத்தினுள் செயல்படும் காலத்தைக் கடந்த ஆத்மா. ஸ்ரீ அரவிந்தம் சிறிய மனித வாழ்வைப் பெரிய தெய்வீக வாழ்வாக மாற்றும் வகையிது. அன்னை பக்தன் தவமிருந்து வரம் பெறுவதற்குப் பதிலாக, சரணடைந்து சுற்றுப்புற வாழ்வுடன் தொடர்பு கொள்கிறான். தபஸ்வி தவத்தால் காலத்தைக் கடப்பதுபோல் அவன் காலத்தைக் கடந்து செல்வதில்லை. அவன் காலத்திலேயே செயல்படுகிறான். ஆனால் காலத்தினுள் உள்ள காலத்தைக் கடந்த நிலையை, சரணாகதி அவனுக்களிக்கிறது. அவன் தொடர்பு கொள்ளும் பொருள்கள் தங்கள் முழுப் பலத்தை அவனுக்குக் கொடுக்கின்றன. ஒரு பழம் வாங்க முயன்றால் கூடையாகப் பழம் அவனை நாடி வருகிறது.

  • பழம் வேண்டும் என்ற சிறிய எண்ணம், பழங்கள் ஏராளமாக நாடி வரும் பெரிய செயலாக மாறுகின்றது.

எதைச் செய்ய வேண்டுமானாலும் பக்தன் செய்ய வேண்டியது ஒன்று தான். அது அன்னையை அழைப்பது. காலத்தைக் கடக்க பக்தன் அன்னையைக் காலத்திலிருந்து அழைப்பதற்குப் பதிலாக, கடந்த நிலையிலிருந்து அழைக்க வேண்டும். மனம் எண்ண ஓட்டத்திலிருந்தால் அழைப்பு காலத்திலிருந்து எழும். எண்ணமற்று நிதானமாக இருந்து மனம் அன்னையை அழைப்பது, காலத்தைக் கடந்த தவநிலையிலிருந்து அழைப்பதாகும், இரண்டையும் கடந்த நிலை பக்தனுக்குரிய நிலை. எளிய பக்தனால் தவநிலை, எண்ணமற்ற மோன நிலை, அவற்றைக் கடந்த அற்புத நிலையெல்லாம் எட்ட முடியுமா? இவையெல்லாம் கறிக்குதவாத ஏட்டுச் சுரைக்காய் என மனம் கூறும்.

  • பறக்க முடியாத மனிதனை விமானம் பறக்க வைக்கிறது.
  • எதையும் செய்ய முடியாத மனிதனை எதையும் செய்யமுடியும் என்று டெக்னாலஜி மாற்றுகிறது.
  • டெக்னாலஜியை ஏற்றுக் கொண்ட மனிதன் குரல் அமெரிக்காவரை கேட்கும்.
  • அன்னையை ஏற்றுக்கொண்ட பக்தனை அவனால் முடியாததை முடியுமாறு செய்வது அன்னை.
  • எந்த நிலையில் டெக்னாலஜியை ஏற்றாலும் அந்த நிலையில் அது பயன் தருவதுபோல், அன்னையிடமிருந்து பெற அந்நிலையில் அவரை ஏற்க வேண்டும்.

நாம் T.V. யால் பயன்பெற T.V. உலகுக்கு வந்தால் போதாது. வீட்டில் இருக்க வேண்டும். அது நம் பங்கு. அன்னை மனதிலிருக்க வேண்டும். எந்த நிலையில், எந்த ஆழத்தில் அன்னையை மனம் ஏற்கிறதோ, அந்த நிலையில் நம்மால் முடியாதது முடியும். எல்லா நிலைகளும் அன்னையுள் உண்டு. நடப்பதற்குரிய நிலையை நாம் நினைக்க வேண்டும்.

பிரயாணம் செய்கிறோம். அன்னையிடம் பாதுகாப்பு கேட்டு பிரார்த்தனை செய்கிறோம். அப்பிரயாணத்தை மேற்கொண்ட பக்தர்கள் 10 பேரானால், எல்லோருக்கும் அப்பாதுகாப்புக் கிடைத்துவிடும். கிடைக்கும் வகை நாம் அன்னையை மனதால் ஏற்றுக் கொண்ட ஆழத்தைப் பொருத்தது. சிலருக்கு மதர் என்ற சொல்லுக்கு மேல் அன்னை உருவம் மனதில் எழாது. அவருக்கும் பாதுகாப்பு உண்டு. அடுத்தவருக்கு அன்னை நினைவு தானே எழும். மற்றொருவருக்கு அன்னை உருவம் நெற்றியில் தெரியும், மனத்திலும் தெரியும், உருவம் ஒளிமயமாக இருக்கும். வெண்மையாக இருக்கும். பொன்னிறமாக இருக்கும். நினைத்தவுடன் அன்னையும், பகவானும் இருபுறமும் தெரியும், நெஞ்சு நிறையும். நினைவும் உணர்வும் பலவகைப்பட்டன.

பிரயாணத்தில் தேவைப்பட்ட செய்தியைக் கேட்குமுன் காதில் விழும். இது அறிவு மூலம் அன்னை செயல்படுவது. ரயில் ஏறி உட்கார்ந்தவுடன் மனம் பூரிக்கும். இது நெஞ்சு நிறைந்தவர் பெறுவது. புறப்பட ½ மணி முன் நாம் போகுமிடத்திற்குப் போகும் தனவந்தர் தம்முடன் அழைத்துப் போக முன் வருவது, ஒளிமயமான உருவம் தரும் பலனது. அதுபோல் போகும்பொழுது எழுந்த தற்செயலான சொல்வழி பெரிய சம்மந்தம் வரும். ஒளியின் தரத்தைப் பொருத்த பலன் அது.

நிலைகள் பல, பலன்களும் பல.

ஏற்கனவே நாம் அன்னையோடு கொண்டிருந்த தொடர்பு, அன்பர்களுடன் கொண்ட தொடர்பு இப்பிரயாணத்தில் பளிச்சிடும். இருபுறமும் இரு அன்பர்கள் வந்து உட்கார்ந்து அன்னையைப் பற்றிப் பேச ஆரம்பித்து சூழல் அற்புதமான கனம் பெறுவதும் உண்டு. எல்லா நிலைகளிலும் அன்னையை எல்லா நேரங்களிலும் ஏற்பது என்பது அனுபவத்தால் மனம் அறிய வேண்டியதாகும்.

  • கண்டம் நமக்கு அகண்டமாகத் தெரிந்தால்தான் Life Divine விளங்கும். II – 89
  • அகண்டம் தானே விரும்பி கண்டமாகக் காட்சியளிக்கிறது. II – 90
  • கண்டத்தை, அகண்டத்தின் வெளிப்பாடாகக் காணலாம். II – 91
  • கண்டத்தை முடிவானதாகவும், மாற்றமில்லாததாகவும் கருதலாம்.
  • பிரம்ம ஞானத்திற்குச் சோகம் ஆனந்தமாகத் தெரியும். II – 92
  • எதிராக உள்ள நிலைகளை ஏற்கும் திறன் யோகத்திற்கு உண்டு.
  • அகண்டமாகவும், கண்டமாகவுமானவன் அவன் என ஏற்க முடிவதில்லை. II – 94

Life Divine என்ற நூல் பிரம்மம் உலகமானதையும், உலகம் பிரம்மத்திற்கு அது தேடும் பேரின்பத்தைக் கொடுத்த பின் மீண்டும் பிரம்மமாவதையும் பகவான் எழுதுவதை, அகண்டமான பிரம்மம், கண்டமான உலகமாவதைக் குறிக்கும் எனலாம். தெய்வம் குழந்தையுள் விழிப்பாயுள்ளதைக் காண்பவரால் குழந்தையிடம் பிரியம் செலுத்த முடியும் என்பதைப்போல் Life Divine புரிய இந்த அம்சம் சிறியது பெரியதாவது; அகண்டம் கண்டமாவது புரியவேண்டும்.

கண்டம் என்பது துண்டு, சிறியது. அகண்டம் துண்டாக்கப்படாத பிரம்மம். பிரம்மம் உலகமாக விரும்பி, சிறிய கண்டமான உலகமாயிற்று. பிரம்மத்தை வற்புறுத்த முடியாது. தானே விரும்பிச் செயல்பட வேண்டும். இது பெரிய தத்துவம், முடிவான தத்துவம்.

அழகான பெண்ணை அவள் குறைகளையெல்லாம் புறக்கணித்து அழகுக்காக ஆண் விரும்புவதும், தறுதலையான ஆண்மகனை அழகுக்காகப் பெண் அடிமையாக நேசிப்பதும் இதே தத்துவம். பிரம்மத்தின் முதல் சிருஷ்டி நிலை சத், அடுத்தது சித், மூன்றாம் நிலை ஆனந்தம். ஆனந்தம் பிரம்மம் எனப்படும். உலகம் ஆனந்தத்திலெழுந்தது, ஆனந்தத்தால் வாழ்வது, ஆனந்தத்தில் முடிவது. ஆனந்தம் மனிதனுடைய ஆன்மாவுக்கு அன்பாகவும், உணர்ச்சிக்கு சந்தோஷமாகவும்,

  • மனத்தின் பார்வைக்கு அழகாகவும் தோன்றுகிறது.

மனிதன் தெய்வம். அவன் பரமனையடைய பதைபதைக்கிறான். அவனது உயர்ந்த கருவி மனம். மனம் பரமனை அனுதினமும் விழைகிறது. பரமன் என்பது சச்சிதானந்தம். அது சத்தியம், ஞானம், அனந்தம் எனப்படுவது. சத்தியம் ஆத்மா அறியக் கூடியது. ஞானம், வாழ்வு உணரக் கூடியது. ஆனந்தம் மனத்திற்குத் தெளிவுபடும். தெளிவுபடும் நேரம் அது அழகாகத் தென்படும்.

  • அழகைக் காணும் மனம், ஆண்டவனைப் பெண்ணில் காண்கிறது.

கண்டது கவரப்படுகிறது. கவர்ச்சி தாழ்ந்தது. கிளர்ச்சி அதற்குரியது. கவர்ச்சியானாலும், கிளர்ச்சியானாலும் அது பரமனை நோக்கி இதயம் எழும் எழுச்சியாகும். எனவே புனிதமானது. புனிதம் புத்துணர்ச்சியானால், பூலோகம் சுவர்க்கமாகும். அது உயர்ந்த முறை. முறை உயர்ந்ததானாலும், தாழ்ந்த கிளர்ச்சியானாலும் முடிவு ஆண்டவன். முடிவை எட்டும் ஞானம் பிரம்ம ஞானம். பிரம்ம ஞானம் உலகில் வாழ சூழ்நிலை சரியில்லை.

  • சரியில்லாத சூழ்நிலையில் ஞானம் சோகமாகக் காட்சியளிக்கிறது.

பிரம்ம ஞானம் சோகமாகக் காட்சியளிப்பதை மனம் ஏற்பது யோகம். பிரம்ம ஞானமும், சோகமும் எதிரானவை. எதிரானவற்றை ஏற்க மறுப்பது ‘பகுத்தறிவு‘, ஏற்பது யோகம்.

  • பரமனின் பாங்கு பவித்திரத்தால் பாதுகாக்கப்படுகிறது.
  • அனந்தம் கண்டமாவது சிருஷ்டி. II – 629
  • கண்டம் அனந்தமாவது பரிணாமம்.

பரமன், அனந்தம், அகண்டம் மாறி மனிதன், அந்தம், கண்டமாகிறது, ஒன்று சிருஷ்டி. அடுத்தது பரிணாமம்.

  • பரிணாமம் பிரபஞ்சத்தின் வாழ்வு.

சிருஷ்டியில் பிரம்மம் உலகமாகிறது. பரிணாமத்தால் பிரபஞ்சம் பிரம்மமாகிறது. எனவே பரிணாமம் அதன் வாழ்வு. வாழ்வு என்பது பாதை. ஆதியையும், முடிவையும் இணைப்பது பாதை. பாதை வாழ்வாகிறது. வாழ்வு பாதையாகிறது. பாதை பிரம்மத்தை ஜடத்தில் முடிக்கிறது. மறுபாதை

ஜடத்தை பிரம்மத்தில் முடிக்கிறது. முதற்பாதை சிருஷ்டி. மறுபாதை பரிணாமம்.

  • பிரம்மா செய்ததைச் செய்யும் மனிதன். III – 33
  • பிரம்மம் அனந்தமெனில் பிரம்மாவுக்கேயுரியது அனந்தம். III – 37
  • சிருஷ்டியில் பிரம்மம் தன்னை அறிவதே ஆனந்தம். III- 59

சிறியது மறைவதிலிருந்து வெளிவந்து பெரியதாவதை பிரம்மம் உணர்வதே ஆனந்தம்.

பிரம்மா உலகத்தைச் சிருஷ்டித்தார். கொத்தனார் வீடு கட்ட ஒரு முறையைப் பின்பற்றுவதுபோல், இன்ஜீனியர் மெஷினை செய்ய design ஒரு முறையைப் பின்பற்றுகிறார். அதேபோல் பிரம்மா சிருஷ்டிக்க ஒரு முறையைக் கையாள்கிறார். நாம் வீடு கட்டுகிறோம், படிக்கிறோம், பயிரிடுகிறோம். இவற்றிற்கெல்லாம் முறைகள் உள்ளன.

  • வீடு கட்டுவது, மெஷின் செய்வது, உலகைப் படைப்பது ஆகியவை 3 வேறு தொழில்களானாலும், இம்மூன்றிற்கும் பொதுவான இடம் சாரம் essence. அதை அறிவது பிரம்மாவின் சிருஷ்டித் திறனை அறிவதாகும்.
  • மெஷின் செய்வதை, பயிரிடுவதுபோல் செய்தால் மெஷின் வாராது.
  • பயிரிடவும், மெஷின் செய்யவும் முறை ஒன்றேயானாலும், ஒன்று என்ற essence சாரத்தை மெஷினுக்குரியதுபோல் பயன்படுத்தினால்தான், மெஷின் உருவாகும்.

உள்ளூர் M.L.A. எலக்ஷனில் வீடு வீடாகப் போய் வணக்கம் சொல்லி ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்கிறார். பிரதமர் ஊர் ஊராகப் போய் கொள்கையைக் கூறி பேச்சை முடிக்கிறார். என் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்டதில்லை. இந்திராவும், நேருவும் கேட்டதில்லை. உள்ளூர் M.L.A. வீடுவீடாகப் போய் தம் கொள்கையை விளக்கிக் கூறி ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்‘ என்று கேட்காவிட்டால் ஜெயிக்க முடியாது. பிரதமர்போல் கொள்கையை மட்டும் M.L.A. கூறிவிட்டு ஓட்டுக் கேட்காமலிருக்க மனம் உயர்ந்திருக்க வேண்டும். உயர்ந்த மனமிருந்தால் ஜெயிக்க முடியும். ஏகமனதாகவும் ஜெயிக்க முடியும்.