சிறியதும் பெரியதும் – 2

பிரதமர்போல் நடக்கும் M.L.A. , பிரம்மாவின் முறையை அன்றாடம் கடைப்பிடிப்பவர். அவருக்கு சொர்க்கத்தின் பலன், சொந்த ஊரில் கிடைக்கும். அது வெறும் அதிர்ஷ்டமாக இருக்காது. அன்னை அதிர்ஷ்டமாக இருக்கும்.

சிறிய செயலில் சிறியது மறைந்துள்ளது. பெரியது (infinite) தன்னை சிறியதாக்கியுள்ளது. சிறியதனுள் மறைந்துள்ள பெரியது வெளிவருவது ஸ்ரீ அரவிந்தம், அதிர்ஷ்டம், இம்முறை அதைச் சாதிக்கும். பிரம்மம் எனில் அனந்தம். அந்தமில்லாதது அனந்தம். வாழ்வில் எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு எழ வழியில்லை என்ற நிலை அது. சைக்கிளுக்கு காற்றடிப்பது, வெளியில் உள்ள காற்றை டயரில் செலுத்துவதாகும். என்றும், எங்கும், இந்தக் காற்றுக்குத் தட்டுப்பாடு வாராது. காற்றுக்குத் தட்டுப்பாடு வாராததுபோல் உணவு, உடை, ஆரோக்கியம், பணம், சந்தோஷம், அறிவுக்குத் தட்டுப்பாடு எழாத நிலை பிரம்மா செய்ததைச் செய்யும் மனித நிலை. கெட்டதற்ற நல்லது, இருளற்ற ஒளி, தவறற்ற சரியானதுபோல், அந்தமற்ற அனந்தம் பிரம்மாவுக்குரிய அனந்தம்.

வக்கீல், கட்சிக்காரன் கேஸைத் தன் பாஷையில் பேசுகிறார். ஜெயிக்கிறார்; தோற்கிறார். வக்கீல், கட்சிக்காரன் மனநிலையை அறிந்து, அவன்போல் ஜெயிக்க துடித்து, அவனுடைய கண்ணோட்டத்தில் சட்டத்தைப் புரிந்து கொண்டால் அந்த வக்கீலுக்குத் தோல்வியில்லை.

பிரம்மம் உலகை சிருஷ்டித்தது. உலகம் தன்னையறிவது சந்தோஷம். பிரம்மா சிருஷ்டியில் தன்னை அறிவது ஆனந்தம்.

  • வக்கீல் கேஸை, சட்டப்படி நடத்துவது வழக்கம், அதற்கு வெற்றி அல்லது தோல்வியுண்டு.
  • வக்கீல் கட்சிக்காரனைச் சட்டப்படி அறிவது, பிரம்மா சிருஷ்டியை அறிவதாகும்.

உலகம் என்பது இருண்டது. கர்மத்தாலும், காலத்தாலும் கட்டுண்டது. மரணம் அதன் பிறப்பு உரிமை என்பதை ஸ்ரீ அரவிந்தம் மாற்றி,

  • உலகம் என்பது இருள் மட்டுமன்று, ஒளியாலான இருளால் செய்யப்பட்டது.
  • மறைந்துள்ள இருள் வெளிப்பட மனிதன் தன்னைத் தெய்வமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • மாறிய மனிதன் செயல் பிரம்மா செயல்படுவது போன்றதாகும்.
  • பிரம்மா செய்ததைச் செய்யும் மனிதன் பூலோகத்தைச் சுவர்க்கமாக்குவான்.
  • மூச்சடைப்பு வந்தால் காற்றில்லை எனத் தோன்றும். III – 116
  • மனித வாழ்வில் ஆயிரம் புதுமைகளை சமூகம் தன்னிலிருந்து சிருஷ்டிக்கிறது. III – 120

நம் நுரையீரல் குறையுடையதானால், மூச்சடைப்பு வருகிறது. சுவாசிக்க காற்றில்லை என நினைக்கும் அளவுக்கு மனம் பேதலிக்கிறது. ஆத்மாவுக்கு பிரம்மம் முடிவானதைப்போல் மனிதனுக்குச் சமூகம் முடிவானது. சமூகம் மனிதனுக்கு பிரம்மம். அதன் சிருஷ்டித் திறனுக்கு அளவில்லை என்பதை நவீனச் சௌகரியங்களை அனுபவிக்கும் மனிதன் அறிவான்.

  • சமூகம் மனித வாழ்வில் ஏற்படுத்திய அற்புதங்களை நாமறிவோம். பிரம்மம் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அற்புதங்களை நாம் சிருஷ்டிக்க முடியும்.

மனித வாழ்வில் பிரம்மம் செயல்பட்டு அற்புதங்கள் நடக்கும் என ஸ்ரீ அரவிந்தம் கூறுவதை கண்டம், அகண்டம்; சிறியது, பெரியது; பிரம்மம், மனிதன் என்ற இரட்டை தத்துவங்கள் மூலம் விளக்குவதே நோக்கம். மேற்சொன்ன அற்புதங்கள் எப்படியிருக்கும் என்று கூற முடியாது, ஏனெனில் இன்று அதற்கு உதாரணங்களில்லை. அளவை சில உதாரணங்கள் மூலம் கூறலாம். இன்று அமெரிக்கப் பெருநகரங்கள் வாழ்வைப் பலரும் அறிவர். அவர்கள் பெற்ற வசதி, சௌகரியம், பாதுகாப்பு நாம் பெற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

  • அவை சமூகம் மனித வாழ்வில் ஏற்படுத்திய அற்புதங்கள்.
  • நாம் மேல்நாட்டார் ஏற்கனவே பெற்றதை உழைப்பால் பெற முடியும். ஆனால் இன்றும் பெறவில்லை.
  • பிரம்மம் செயல்பட்டு ஏற்படும் அற்புதங்கள், இன்றைய கிராம வாழ்வுக்கும் அமெரிக்கப் பெருநகர வாழ்வுக்கும் உள்ள வித்தியாசத்தை, அமெரிக்க வாழ்வுக்கும் அதற்கும் இடையே ஏற்படுத்தும்.
  • நாம் ஆன்மாவைப் பயன்படுத்த முடியும். அமெரிக்கர் மனத்தைப் பயன்படுத்துகிறார்.
  • நம்மால் ஆன்மாவைப் பயன்படுத்த முடியும் என்பதால் அமெரிக்கர்களைவிட, சீக்கிரம் அவ்வுயர்ந்த நிலையை அடைய முடியும்.
  • நாம் செய்ய வேண்டியது என்ன? பொய் சொல்வதை விட்டு மெய்யை மட்டும் சொல்ல வேண்டும்.
  • பிரம்மம் பொய் மூலம் வெளிப்படாது. மெய் மூலம் மட்டும் வெளிப்படும்.
  • மெய் சொல்வதைப் பூரணமாக ஒருவர் ஏற்றால் அவர் வாழ்வில் பிரம்மம் சத்திய ஜீவியம் மூலம் செயல்படும். அவ்வற்புதங்கள் நிகழும்.

யோக வாழ்க்கை என்ற நூல் உள்ள கண்டம், அகண்டம் என்ற கருத்துக்கள் மூலம் மேலும் பல கோணங்களில் இக்கருத்தை ஆராய்வோம்.

  • சிருஷ்டிக்கு ஜீவனுள்ள மையம் வாழ்வு. II – 178.
  • ஆணை நாடும் பெண் விரும்பிய பின் காத்திருப்பாள் II – 244.
  • சக்தியும் இவ்விஷயத்தில் பெண்ணேயாகும். II – 245.

பரமாத்மா, ஜீவாத்மா, பிரபஞ்சம் மூன்றும் ஜீவனோடு சந்திக்குமிடம் வாழ்வு. நமது அரங்கம் வாழ்வு, அதாவது மனித வாழ்வு. மனித வாழ்வு என்பது உணர்வால் மட்டும் வாழ்வதாகும். தெய்வீக வாழ்வு, யோக வாழ்வு என்பவை ஆன்மாவால் வாழ்வதாகும். அதன் பலனையடைய நாம் மேற்சொன்ன மூன்றும் சந்திக்குமிடமாக வாழ்வை மாற்ற வேண்டும். வாழ்வில் பரமாத்மாவையும், பிரபஞ்சத்தையும், ஜீவாத்மாவையும் காண வேண்டும். அதைக் காணும் மார்க்கங்கள் நாம் நெடுநாளாக அறிந்தவை.

  • கண்டம், அகண்டமாக வேண்டும்.
  • சிறியது, பெரியதாக மாறும்.
  • சிறியதனுள் உள்ள பெரியது வெளிவர வேண்டும்.
  • பிரம்மத்தின் முறையை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஜீவாத்மாவின் பிரதிநிதியான சைத்தியப் புருஷன் மூலம் வாழ்வை நடத்த வேண்டும்.
  • அகந்தைக்குப் பதிலாக சக்தி வாழ்வில் செயல்பட வேண்டும்.

மனித வாழ்வில் பெண் ஆணை நாடிப் போவதில்லை. மனதால் பெண் ஆரம்பித்தாலும், செயலால் ஆண் வரும்வரை காத்திருப்பாள். ஈஸ்வரசக்திவரை இதுவே சட்டம். இந்தச் சட்டம் பின்பற்றப்பட்டால் நம் வாழ்வில் சிறியது, பெரியதாகும். ஆண் என்பதும், பெண் என்பதும் தத்துவங்கள். தலைவன், தொண்டன் சேர்ந்து செயல்படும்பொழுது தலைவன் ஆண்மைக்கும், தொண்டன் பெண்மைக்கும் உரியவராவார்கள்.

  • தொண்டன் தனக்குரியதை கேட்காமல், தானே வரும்வரை காத்திருப்பது இச்சட்டத்தைப் பின்பற்றுவதாகும்.
  • அனந்தமான மனம் சிந்திக்காமல் புரிந்து கொள்ளும்.
  • எண்ணமும் உணர்வும் அற்ற நேரம் சிறியது பெரியதாகும் III -267
  • மனிதனும், இறைவனைப்போல் முடிவற்றவன். III – 275

மனம் சிந்தனைக்குரியது, சிந்திக்கும்வரை மனிதன் மனத்தின் எல்லைக்குள் செயல்படுவான். மனம் அளவுக்குட்பட்டது, சிறியது, கண்டமானது, பகுதி. பகுதியாக்கும் கருவி. ஆன்மா அளவற்றது, பெரியது, அகண்டம், முழுமை. பகுதியை தன் வெளிப்பாட்டில் முழுமையாக்க வல்லது. மனம் சிந்தனையிலிருந்து விலகினால், மௌனமாகப் புரிந்து கொள்ளும். இது அனந்தமாகும் பாதையில் முதற்படி. எனவே அனந்தமான மனம் எனப்பட்டது. எண்ணமற்ற நேரம் மனத்தின் எல்லையைக் கடப்பதைப் போல், உணர்வற்ற நேரம் பிராணன் எல்லையைக் கடக்கிறோம். சிறியது, பெரியதாக முயலும் முதற் படிகள் அவை. இறைவன் ஆதியும் அந்தமுமில்லாதவன். மனிதன், தன் கரணங்களைக் கடந்தால், அவனுள் உள்ள ஆன்மா வெளிப்படும். மனிதனும் இறைவனாவான். ஒரே ஒரு மாறுபாடு. இறைவன் தன்னுள் ஜோதி, ஆனந்தம் போன்ற ஆன்மீக அம்சங்களைக் கொண்டவன். மனிதன் அவையற்றவன். திருவுருமாறிய மனிதன் இறைவனாவான். அவனுள் மறைந்துள்ள அம்சங்கள் வெளிப்பட்ட நிலையிலுள்ள இறைவனாகும்.

  • மேலுலகிலுள்ள இறைவன் முடியாட்சியில் மன்னன். பூவுலகிலுள்ள இறைவன் மக்களாட்சியில் மன்னனாக உயர்ந்தவன்.
  • மனத்தில் ஆன்மாவாக மலர்ந்த இறைவன் திருவுருமாறிய மனிதன்.
  • சிறியது பயந்து விலகும்பொழுது, பெரியது விரும்பி நாடுகிறது. III – 312
  • மரணத்தை நோக்கிச் செல்வதே, முன்னேற்றத்தைத் தரும் கருவி. III – 313.
  • சிறியது + அருள் = பெரியது. அருள் சிறியதைப் பெரியதாக்கும். III 314.

பாரதி திருவனந்தபுரம் மிருகக்காட்சிசாலைக்குப் போயிருந்தார். சிங்கம் அங்குக் கூண்டிலிருந்தது. கூட்டம் தூர இருந்து பார்த்தது. கூண்டைத் திறந்து உள்ளே போக விரும்பினார் பாரதி. “எது வேண்டுமானாலும் செய்யுங்கள், வாயினுள் கை வைக்காதீர்கள்” என்றான் கூட்டைத் திறந்தவன். உள்ளே போய் சிங்கத்தைத் தடவிக் கொடுத்தார். ‘மிருகராஜாவே, கவிராஜனுக்கு ஓர் கர்ஜனை கொடு‘ என்று பாரதி சிங்கத்தைக் கேட்டார். சிங்கம் கர்ஜித்தது. பாரதி உயர்ந்த புருஷன், தைர்யசாலி. அனைவரும் பயந்து ஒதுங்கும் சிங்கத்தை விரும்பி நாடினார்.

பணம் பல குடும்பங்கள் அழியக் காரணம். பணமே பல குடும்பங்களை உயர்த்தியது. பணம் கருவி, பயன் நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்தது.

  • பார்வையைப் பொருத்தது பலன். III – 345
  • மாற்றம் தோற்றத்திற்குரியது. III – 347

கதையில் போலீஸ்காரன் ஒரு அடிதடி கூட்டத்தைக் கலைக்கிறான். ரௌடிகள் ஓடிவிட்டனர். அவர்களிடையே அகப்பட்ட ஒருவர் கையிலிருந்த வாத்தைக் கீழே போட்டார். தலையிலிருந்த தொப்பி விழுந்துவிட்டது. போலீஸ்காரர் அவருக்கு உதவ ஓடினார். அவரும் ஓடி எடுத்தார். வாத்தையும், தொப்பியையும் அவர் எடுத்து வந்தார். அதைப் பெற்றவர் இருவர்.

முதல்வர் தொப்பியை பல கோணங்களிலும் சோதனை செய்தார். ஒரு பழைய தொப்பி, இதிலிருந்து என்ன புரியும்? என்று கூறி தொப்பியை வைத்துவிட்டார்.

அடுத்தவர் தொப்பியை எடுத்து 15 நிமிஷம் சோதனை செய்தார். லென்ஸ் மூலம் பார்த்தார். பிறகு அவர் சொன்னது,

  1. தொப்பிக்குடையவர் பெரிய அறிவாளி.
  2. இவர் வசதியாக இருந்தவர்.
  3. இப்பொழுது ஏழ்மையிலிருக்கிறார்.
  4. ஒரு வாரம் முன் முடி வெட்டிக் கொண்டார்.
  5. முன்யோசனையுள்ளவர்.
  6. இவர் மீது மனைவிக்குப் பிரியமில்லை.
  7. இவர் வீட்டில் gas இல்லை.

முதல்வர் அடுத்தவரைக் கேலி செய்தார். எப்படி இவற்றையெல்லாம் சொல்ல முடியும் எனக் கேட்டார்.

  1. தொப்பி பெரியது. அதனால் தலை பெரியது. எனவே புத்திசாலி.
  2. விலையுர்ந்த தொப்பி, பழையது, அதை வாங்கும்பொழுது வசதியாக இருந்திருக்க வேண்டும்.
  3. 3 வருஷமாக ஒரே தொப்பியைப் போட்டிருப்பதால், புது தொப்பி வாங்க வசதியில்லை. எனவே ஏழ்மையிலிருக்கிறார்.
  4. லென்ஸ் சிறு முடி தொப்பியுள் ஒட்டிக் கொண்டுள்ளதைக் காண்பிக்கிறது.
  5. காற்றில் பறக்காமலிருக்க ஒரு நூல் கட்டியுள்ளது முன்யோசனையைக் காட்டுகிறது.
  6. தொப்பியை பிரஷ்ஷால் துடைப்பது மனைவி வேலை. இது துடைக்கப்படவில்லை. மனைவிக்குப் பிரியமில்லை.
  7. தொப்பியில் மெழுகுவர்த்தி துளிகள் பல உள்ளன. கேஸ் இருந்தால் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தமாட்டார்.

மாறிய பார்வை ஏராளமான செய்தியை அளிக்கிறது. சிந்தனைக்கு அத்தனை சக்தி. ஒரு பொருளை மனத்தால் கவனித்தால் சிறியது தெரியும். பிரம்மத்தால் கவனித்தால் பெரியது தெரியும். சிறியது பெரியதாவது மாற்றம். பெரியது சிறியதாவதும் மாற்றம். மாற்றம் மேலெழுந்தவாரியானது. ஆழத்தில் மாற்றமில்லை. மேலேயுள்ளது ஜீவியம். ஆழம் ஜடத்திற்குரியது. ஜீவியமும், ஜடமும் சேர்ந்து தோற்றமாகிறது. சிருஷ்டியில் பிரம்மம் சக்தியாகி, சக்தி சிருஷ்டியாகிறது. சக்தி உருவம் பெறுவது சிருஷ்டி. சக்திக்குக் கீழே பிரம்மம் உள்ளது. எல்லா மாற்றங்களும் சக்தியுக்குரியன. பிரம்மம் மாறுவதில்லை.

  • என்றும் பிரம்மம் பெரியது.
  • சக்தி தோற்றம்.
  • சக்தி பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கும்.
  • மாற்றம் பிரம்மத்திற்கில்லை.

புலன்கள் மேல்மனத்திலுள்ளன. புலன்கட்கு தூய்மையில்லை. இறைவனை மட்டும் நம்பியிருப்பது தூய்மை. புலன்களைத் தூய்மைப்படுத்த, புலன்கள் புறநிகழ்ச்சிகளை நம்பாமல் அகவுணர்வுகளை மட்டும் நம்ப வேண்டும். தூய்மையான புலன்கள் நம்மை மேலிருந்து உள்ளே அழைத்துச் செல்லும்.

  • சிறியது பெரியதாவது தூய்மை. III – 538
  • தூய்மையை நாடினால் வலி எழும். III – 539
  • எதிரி நண்பனாவது லீலை. III – 540
  • உள்ளே போவது சமர்ப்பணம். III – 541

பகுதிக்குத் தூய்மையில்லை, பகுதி காலத்திலும், அகந்தையிலும், மேல்மனத்திலும் சிறியதாகவுள்ளது. தூய்மை முழுமை. காலத்தைக் கடந்து, அகந்தை அழிந்த நிலையில், ஆழத்திலுள்ளது தூய்மை. இந்த மாற்றம் வலியை எழுப்பும்.

லீலையின் முக்கிய அம்சம் எதிரானவற்றைச் சேர்த்துச் செயல்படுவது. எதிரி நண்பனாவது அது போன்ற செயல். சமர்ப்பணம் மேல் மனத்திலிருந்து நம்மை ஆழத்திற்கு அழைத்துச் செல்லும்.

  • சிறியதன் பெரியது, பெரியதன் சிறியதாகும் III – 558

மனிதனுக்கு தலைவிதி, கர்மம் உண்டு, அத்துடன் முடிவற்ற சுதந்திரம் உண்டு. மனிதன் அளவு கடந்த சுதந்திரமாகத் தன்னிச்சையாகச் செயல்படுவதை பிரம்மம் முன் கூட்டியே நிர்ணயிக்கிறது. நாளைக் காலை நாம் சாப்பிடக்கூடிய 10 வகைப் பண்டங்களில் ஒன்றை எடுத்துச் சாப்பிட்ட பின், பிரம்மத்தின் குறிப்பேட்டில் அது நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

  • அனுபவம் சிறியது, ஆழ்மனம் பெரியது III – 564

புரியும் திறன், அனுபவம், நிதானம் மனிதனுக்குக் குறைவு, சிறியது. ஞானம், ஆத்மானுபவம், நிச்சலனமான நிலை ஆகியவற்றிற்கு மனித மனத்தின் ஆழத்தில் உள்ள வித்து பெரியது.

  • பகுதி சிறியது, முழுமை பெரியது III – 605

சிருஷ்டி, பரிணாமம் என்று இரு பகுதிகளுண்டு. பிரம்மமேயானாலும் ஒன்றில் மட்டும் காண்பது சிறியது. இரண்டிலும் ஒரே சமயத்தில் காண முடிவது பெரியது. அரசியல் தலைவர்கள் குடும்பத்தைக் கவனிக்க முடியாது. குடும்பத்தைக் கவனிக்கும் தலைவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது. மனித சக்தி அளவுக்குட்பட்டது. ஒரு சமயத்தில் ஒன்றுதான் முடியும். இரண்டையும் ஒரே சமயத்தில் காணும் திறன் மனத்திற்கில்லை. காண முடிந்தால் மனம் சத்திய ஜீவியமாகும். சிறியது, பெரியதாகும்.

இரண்டையும் ஒரே சமயத்தில் காண்பதெப்படி?

Omnipresent Reality எங்கும் நிறை பரம்பொருள் என்பது Life Divineஇல் 4ம் அத்தியாயம். அங்கு இத்தத்துவத்தை பகவான் விளக்குகிறார். அதை வாழ்வுக்குரிய முறையில் நாம் புரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானி ஜடத்தை ஆராய்ந்து அற்புதங்களை நிகழ்த்தினான். அவன் கண்ணுக்கு ஆன்மா, கடவுள் தெரியவில்லை. எனவே இல்லை என்றான், இருந்தாலும் தனக்கு வேண்டாம் என்றான். சன்னியாசி பிரம்மத்தைக் கண்டபொழுது, உலகம் தூசி என்றான். தனக்கு உலகம் தேவையில்லை என்றான். பூரண யோகி இரண்டையும் ஏற்றுக் கொள்கிறான். யோகி புருஷனை (Being) அடைந்தபொழுது, அதைவிட்டு Non-being அசத்தை நாடுவது வழக்கம். அதற்கு மாறாக புருஷனில் ஊன்றிய காலை எடுக்காமல், அசத்தை நாடினால் யோகியின் நிலையுயர்ந்து, பூரண யோகியாகி, சத்தையும் (புருஷனையும்) அசத்தையும் தன்னுட்கொள்ளும் பிரம்மமாகிறான் எனக் கூறுகிறார் பகவான்.

வாழ்வில் இதை எப்படிச் சாதிப்பது? சிருஷ்டி என்பது வாழ்வு. மேலிருந்து கீழே வருவது. சிருஷ்டியைக் காண்பவன் ஒரு பகுதியைக் காண்கிறான். பரிணாமம் மேலே போவது. இதுவும் பகுதி. சிருஷ்டியையும், பரிணாமத்தையும் ஒரே சமயத்தில் காண்பது முழுமை. குடும்பம் நடத்துபவன் காண்பது குடும்பத்தை மட்டுமாகும். நிஷ்டையிலிருப்பவன் காண்பது தியானமாகும்.

  • தியான நிலையில் குடும்பத்தின் கடமைகளைச் செய்தால், கடமையினுள் கடவுள் தெரிவார். தியானத்துள் கடமைகள் விளங்கும்.

அபிப்பிராயம் என்பதே மனத்தின் சிறந்த கருவி. அபிப்பிராயம் இறைவன் செயலுக்குத் தடை. சரியான அபிப்பிராயம் பகுதி முழுமை ஆவதைத் தடுக்கிறது. தவறான அபிப்பிராயம் பகுதியைத் தவறாக்கும் என்பது ஆன்மிகக் கருத்து. அதைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்.

  • சரியாக இருந்தாலும் அபிப்பிராயம் என்பது தவறு. III – 711.

சிறியனவெல்லாம் பெரியனவே, பெரியனவாக மாறும் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் உரிய நிபந்தனைகள் உண்டு. ஆசை, அனுபவம், சந்தோஷம் என்பவை பொருள்களுடன் பிணைந்துள்ளன. பெண்ணின் மீது ஆசைப்படுகிறோம். பொருளை அனுபவிக்கிறோம். கேலி சந்தோஷப்படுத்துகிறது. இவை அனுபவத்திற்குரிய பொருள்கள். பிரியமுள்ள பெண், நாம் அனுபவிக்க வேண்டும் என விரும்பும் பொருள், நம்மை சந்தோஷப்படுத்த முயலும் ஹாஸ்யம் உண்டு. இவை விருப்பமானவை, விரும்பி நமக்கு ஆனந்தம் தருபவை. அவை தம் திறனை விரிவுபடுத்த முன்வந்தால், அளவில்லாமல் விரியும். சைத்தியப் புருஷன் மேலே வந்தபொழுது அது எளிதாக நிகழும்.