காவிய இதழ்கள் – சாவித்திரி – 2

சாவித்திரியின் அனுபவம் பூரண யோக சித்தி என்பதால் சக்தி, மேலிருந்து கீழ்நோக்கி வருகிறது. சொர்க்கத்தை நம்முள்ளே அமைத்தோம். உடலை ஆனந்தமயமாக்கினோம். வேறென்ன வேண்டும். மேலும் வேண்டுமா? என கவி அந்நிலையை வர்ணிக்கிறார்.

உயர்ந்த தெய்வம் உறையும் இடம் ஒன்று ஏற்பட்டது. ஒருவர் சிறப்பு உலகை உய்விக்கும். வானத்தை எட்டிப் பிடித்துவிட்டோம்,

காலத்தின் அடிமை கடவுளுக்கு இடம் அளித்து விட்டான்,

என்ற கருத்துப்பட பகவான் இந்த வெற்றியை விளக்கியுள்ளார். சாவித்திரியினுள் திருவுருமாற்றம் தொடங்குகிறது. உலகை உய்விக்கும் கருவியாக அவள் உருவாகிவிட்டாள். சிருஷ்டி இதைக் கண்டு கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறது. சாவித்திரியின் அன்றாடச் செயல்களில் தெய்வீகப் பொலிவு மிளிருகின்றது. சத்தியவான் மீதுள்ள மனைவியின் அன்பு, தெய்வச் சாயல் பெறுகிறது. எனினும் இதுவே முடிவன்று.

இத்தனையும் நடந்தபின் ஒரு நாள் ஒரு பயங்கரக் குரல் எழுந்து நானே மிருத்யு, நானே காளி, நானே மாயை, என் மூச்சுப்பட்டால் மனிதன் கருகிவிடுவான் என்று எக்காளமிட்டது.

வேறொரு குரலும் எழுந்து ஒலித்தது. மனித ஜீவன் பரம்பொருளினின்று விலகியுள்ளவரை மரணத்திலிருந்து தப்ப முடியாது. தான் எனும் அகந்தையை அழித்து பரம்பொருளுடன் ஐக்கியமானால் மரணம் அழியும், மேலும் தொடராது என்று அக்குரல் உபதேசிக்கின்றது. சாவித்திரி அதை ஏற்றுக்கொள்கிறாள். தன்னுள் உள்ள அனைத்தும் தன்னைவிட்டுப் போகின்றன. விடுதலை நாடி வருகிறது. உருவமும் தன்னைவிட்டகல்கிறது. நிர்வாண அனுபவம் என்றழைக்கப்படும் இந்த யோக சித்தி சாவித்திரிக்குக் கிட்டியது.

விதிக்கப்பட்ட வேளை நெருங்குகிறது. பழைய பயம் இல்லை. ஆழ்ந்த நிலையில் மனம் அமைதியாக இருக்கின்றது. பெண்மை நிறைந்த மனைவி, சக்தியாக மாறி ஆன்மீகப் பொக்கிஷமாக விட்டாள். பெரிய யோக சித்தி எனினும் இது சூன்ய நிலையேயாகும். அதனால் இதுவே முடிவான நிலையில்லை. ஒரு நாள் இது மாறி பரம்பொருளின் பூரணம் சாவித்திரியை ஆட்கொள்கிறது.

P.3 The darkness failed and slipped like a falling cloak from a reclining body of a God. இருள் தோல்வியுற்றது, தெய்வத்தின் உடலிலிருந்து நழுவிவிழும் ஆடைபோல் இருளின் திரை உலகினின்று விலகுகிறது

வேதத்தில் உஷைக் காலம் என்பதை இப்பகுதி விவரிக்கிறது. இறைவன் இருளாக மாறியபின் இருளால் புதைந்துள்ள ஒளி வெளிவர முயல்வதையும், அம்முயற்சியின் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகவே இறைவன் சிருஷ்டித்தான் என்பது ஸ்ரீஅரவிந்தரின் லீலை என்ற தத்துவம்.

Child is the father of Man என்பது ஆங்கிலச் செய்யுளின் ஒரு வரி. தாயார் குழந்தை கற்பதைப் பொன்போலப் போற்றுகிறார். தகப்பனார் குழந்தையின் மழலையை ரசிக்கிறார். குழந்தை பேசுவது அனைத்தும் நாம் குழந்தைக்குக் கற்றுக் கொடுத்ததாகும்.

  • குழந்தை என்பது நம்முடைய சிறு உருவம்.
  • நாமறிந்த அனைத்தையும் குழந்தைக்குக் கற்பிக்க முயல்கிறோம். ஓரளவு குழந்தை கற்றாலும் நாம் சந்தோஷப்படுகிறோம், பெருமிதப்படுகிறோம்.
  • குழந்தையின் கல்வி முடியும் நிலையில் நம்மை விட அதிகமாகக் குழந்தை அறிகிறது.
  • நம்முடைய அறிவைக் குழந்தையினுள் ஒளித்து வைத்துள்ளோம். அது வெளிப்படுவதைக் காணும் ஆனந்தம் பேரின்பம்.
  • அதைப்போல் இறைவன் தன்னை நம்முள் ஒத்துவைத்து, அதைக் கட்டாயமாக வெப்படுத்தும் திறனை இழந்து

தானே மனிதனினின்று தெய்வம் வெளிப்படுவதை (பரிணாமம்) கண்டு ஆனந்தப்படுகிறான்.

  • மனிதன் தன் குழந்தையிடம் பெறும் இன்பத்தை இறைவன் மனிதனிடம் காண்கிறான்.
  • “சாவித்திரி” காவியம் அந்த உஷைக்(விடியல்) காலத்தில் ஆரம்பிக்கிறது.
  • இருள் திரை விலகுவதுபோல் விலகும் நிகழ்ச்சியை மேற் சொன்ன வரிகள் குறிக்கின்றன.

இந்தப் பக்கத்தில் இறைவனின் ஸ்பரிசம் எதையும் சாதிக்கும், மறைபொருளின் பொலிவின் பெருமை, வழி தவறிய அற்புதம் இடமின்றி தவிப்பது, காலத்தின் நெஞ்சில் கனியும் நினைவு போன்ற கருத்துகள் உள்ளன. மகாபாரதச் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவானை மீட்டாள். ஸ்ரீஅரவிந்தரின் சாவித்திரி எமனை இருளிருந்து ஒளியாக மாற்றி, உலகில் மரணத்தை அழித்தாள். சாவித்திரியின் எந்தப் பகுதியும் இந்த மையக் கருத்துடன் தொடர்புள்ளது. சாவித்திரி எந்த ஆன்மீக முயற்சியை – தவம் – எமனிடம் மேற்கொண்டாளோ, அதே போன்ற முயற்சியை மனிதன் வாழ்வில் மேற்கொண்டால், எமனை, சாவித்திரி ஒளிமயமாக்கியது போல் அன்பன் வாழ்வை அதிர்ஷ்டமயமாக்க முடியும்.

இறைவனின் ஸ்பரிசம் எதையும் சாதிக்கும்.

என்ற வரி இக்கருத்தைக் கூறுகிறது. இறைவனின் ஸ்பரிசத்தைப் பெறுவதெப்படி? மனிதன் அடுத்த மனிதனில் இறைவனைக் காண்பது இறை தரிசனத்தைவிடப் பெரியது. மனித உறவில் நாம் அடுத்தவரை – இறைவனை – இதமாகவும், இனிமையாகவும் தீண்டினால் இறைவனுடைய ஸ்பரிசத்தை நம் இதயம் பெறும்.

நல்லெண்ணத்தால் மட்டும் நிரம்பிய மனம் இறைவனுக்குரியதாகும்.

*****

P. 4 Obeyed the unforeseeing instant’s urge, எதிர்பாராத உந்தலை ஏற்கும் மனிதன்,

மனிதன் தன்னை அறியாதவன், தன் வாழ்வு ஆழத்திற்குரியது எனத் தெரியாதவன். தன்னையேயறியாதவன், தன் ஆழத்தை அறிய முடியாது. அவன் உந்தல்கள் அனைத்தும் உற்பத்தியாவது அவ்வாழ் மனதில், அவற்றை அவனால் மீறமுடியாது.

ஒரு திசையில் செல்லும் மனிதனை ஆழத்து உந்தல்

அடுத்த திசைக்கு இழுக்கும்பொழுது தன்னை மீறி

அதை மனிதன் ஏற்பது அவன் அன்றாட வாழ்வு நிலை.

மனிதன் மனத்திற்குரியவன். மனம் இரு பகுதிகளாலானது. நாமறிவது மேல் மனம், நம் எண்ணங்களும், ஆர்வங்களும் அங்குள்ளன. அவற்றையே முடிவாக நாம் ஏற்கிறோம். கல்லூரி மாணவன் வாழ்க்கை அவன் வீட்டிற்குரியது. ஹாஸ்டலுக்குரியதன்று. ஹாஸ்டல் வாழ்வே முடிவானது என நினைக்கும் மாணவனைப் போன்றது மனித வாழ்வு. ஹாஸ்டலில் கட்டும் கோட்டைகளை வீட்டிலிருந்து வரும் ஒரு கடிதம் தகர்க்கும். வீடு நிலையானது, ஹாஸ்டல் தற்காலிகமானது. வீட்டிலிருந்து எழும் உத்தரவுகளை மாணவன் எதிர்பார்ப்பதில்லை, வந்தால் மறுக்கமுடியாதபடி ஏற்றுக்கொள்கிறான். மேல் மனத்தில் வாழும் மனிதன் ஆழ்மன உந்தல் எழுவதை எதிர்பார்ப்பதில்லை. வந்தால் தவிர்க்க முடியாதவை என ஏற்று அதன்படிச் செயல்படுகிறான். இது சம்பந்தமான கருத்துகளை, சாவித்திரி விவரிக்கிறது.

  • கண் மூடித்தனமான வாழ்வின் சுழல்கள்.
  • விதியின் கதியைத் தாங்கும் மனிதன்.
  • தெரியும் வழிகளின் தெளிந்த அழகு.
  • நீர்க் குமிழின் நித்தியானந்தம்.
  • மனித வாழ்வுக்குப் புறம்பான புனிதம்.
  • ஆழ்ந்துறையும் ஆன்மாவின் அமைதி.
  • மனத்தைத் தட்டி எழுப்பும் அறை கூவல்.
  • ஆசையின் மாயை அறிவிக்கும் வண்ணங்கள்.
  • இதயத்தின் இனிமை உணர்வுக்குப் புறம்பு.
  • தெய்வத்தின் வருத்தம் தேங்கிய இதயம்.
  • நித்தியத்தை வெல்லும் அநித்தியம்.
  • காலமென்னும் படுகுழியில் சிறு அசைவு.

P. 4 And buried its seed of grandeur in its hours அற்புதங்களின் வித்தை தாங்கிவரும் காலத்தின் பகுதிகள்.

தனித்திருந்து மனிதன் சிந்திக்கும்பொழுது எழுவது கற்பனை. இறைவனின் கற்பனை இயற்கையாக மாறியதைத் தத்துவம் காலம் என்கிறது. நான்கு அங்குல டிஸ்க்கில் 30,000 பக்க கலைக் களஞ்சியம் கம்ப்யூட்டரால் அச்சிடப்பட்டுள்ளது இன்றைய விஞ்ஞான சாதனை.

உலகத்தின் அற்புதங்களை இறைவன் காலத்துள்

வைத்துள்ளான்

என்பது மேற்கூறிய வரியின் கருத்து. ஜோஸ்யரிடம் போனால் நம் பிறந்த நாளைக் கேட்கிறார். நேரத்தைக் கூறுகிறோம். அவர் கட்டம் போட்டு நாள், நட்சத்திரம், லக்னம், ராசி, திசை என ஆயிரம் விவரங்களை எழுதுகிறார். அவர் கணக்கு முடிந்தபின் நாம் கூறிய நாள், மணி இவ்விரண்டிலிருந்து நம்முடன் பிறந்தவர், பெற்றவர்கள், நாம் வாழ்க்கைப்பட்டவர், நமக்குப் பிறந்தவர், செய்த தொழில், இனி செய்யப் போகும் தொழில், இதுவரை வாழ்வில் நடந்தவை, இனி நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறுகிறார். மேலும் அவரால் போன ஜென்மத்தையும், அடுத்த ஜென்மத்தையும் சொல்லமுடியும்.

நாம் கூறிய சிறு விவரங்களினின்று அவர் நம் உலகையே அறிந்து பேசமுடிகிறது என்றால் அந்த நேரம் என்ற ஒரு விஷயத்தில் வாழ்வு என்ற கடல் மறைந்துள்ளது. இந்த நேரம் நாம் பிறந்த நேரம்.

காலத்தின் நாழிகை இறைவன் பிறக்கும் நேரமாகும்.

  ஜோஸ்யர் நம் வாழ்வை அறிவார். ரிஷி நேரத்தில் இறைவன் ஜாதகத்தைக் காண்கிறார். அதுவே மேலே எழுதப்பட்ட காவியத்தின் வரியாகும். இதையொட்டி எழுந்த சித்திரங்களை பகவான் ஸ்ரீ அரவிந்தர் பலவகைகளாக எழுதுகிறார்.

  • வானமெனும் திரையில் வண்ணமெனும் எழுதுகோல் எழுதிய சூத்திரம்.
  • மறை பொருளான இலட்சியத்தின் சிறு குறிப்பான அற்புதம்.
  • அனந்தனின் மையத்தில் தெரியும் ஆனந்தத்தின் வதனம்.
  • தூரத்து இன்பத்தின் தூய உருவம்
  • காலத்தைக் கடந்த உலகிலிருந்து வரும் காலத்தின் தூதன்
  • நட்சத்திரங்களின் நடுநிலை வழுவாத கதி இயற்கையின் காதில் ஒலிக்கும் அவள் அடிச்சுவடுகளின் ஒலி
  • புவியின் மோனம் பூத்தெழுந்த புனிதம்
  • மனத்தின் எண்ணம் தெய்வவரமாகும் யோக சமர்ப்பணம்.

***

P .8. Yet only has outward self suffered and above மேல் மனம் மட்டுமே வாடி வதங்கியது

ஸ்ரீ அரவிந்தர் துன்பத்தைப் புதிய கோணத்தில் விளக்குகிறார். துன்பம் என நாமறிவது இன்பமே. ஆழ்மனம் விரும்பி நாடும் இன்பத்தை மேல் மனம் துன்பம் என்கிறது என்பது பகவான் விளக்கம்.

  • உடலை நோயினின்று குணப்படுத்த நாமே விரும்பி மருந்துண்டாலும் அது கசக்கிறது
  • பல நூறு மைல் கடந்து வந்து மலை ஏறினாலும் கால் அளவுகடந்து வலிக்கிறது.
  • வசதியற்ற பெற்றோர் பெரிய படிப்பில் மக்குப் பையனை விரும்பி, சிரமப்பட்டுச் சேர்த்து விட்டபின் படிக்க அவன் படும்பாடு பெரியது, பணமனுப்ப அவர் படும் பாடு அதனினும் பெரியது.

இது போன்ற நிகழ்ச்சிகளை நாமறிவோம். இவை நம் அனுபவத்திற்குட்பட்டவை. போன ஜென்மத்தில் அரசனாய் பிறந்தவன், அடுத்த ஜென்மத்தில் ஆண்டியாகப் பிறக்க ஆசைப்பட்டு பிறந்திருக்கிறான் எனில் அது ஆண்டிக்கும் புரிவதில்லை, அவனைக் காணும் நமக்கும் புரிவதில்லை. 3 வருஷமாகத் தோற்பதே வழக்கம், தோற்று இழந்த செல்வம் அதிகம் என்பவர் மீண்டும் சீட்டாட ஆசையாக வருகிறார் என்பதை நாம் கண்ணால் பார்க்கிறோம், நம்பமுடியவில்லை. அவர் தோற்க ஆசைப்படுகிறார், தோற்பதில் இன்பம் காண்கிறார் என்ற ஆன்மீக விளக்கம் அறிவுக்குப் புலப்படுவதில்லை.

ஸ்ரீ அரவிந்தம் என நாமறியும் தத்துவத்தின் முக்கிய அடிப்படைகளில் இது ஒன்று. இக்கருத்தை “சாவித்ரி” வாயிலாக நாம் இங்குப் பல கோணங்களிலும் காண்கிறோம். சத்தியவானைப்பற்றிய உண்மையை சாவித்திரி அறிவாள். அறிந்தும் அவள் நிலை குலையவில்லை. அவள் மனநிலையை விளக்கும் பகுதிகள் இவை.

  • ஜீவனின் துள்ளலிலிருந்து ஒதுங்கிய சாவித்திரி
  • அன்பிற்குரியவரிடமிருந்தே மறைந்து நிற்கும் மாது
  • தெய்வத்தை உயர்த்தும் மனித கர்மம்
  • அனைவருக்கும் மகுடம் அவளே
  • தம் விதியையும் அறியாதவரின் பாரத்தை சுமப்பவள்
  • எதிரியின் வலிமைக்கு தம் இதயத்தால் ஜீவனப்பவள்
  • உதவியை நாடி அவளுள்ளிருந்து அழைப்பு எழவில்லை
  • வாய் திறக்கவில்லை, அழுகை வரவில்லை
  • எவருமறியாதது அவள் இரகஸ்யம்
  • தைரியமளித்த அமைதி பொலியும் முகம்
  • தனித்து நின்று உலகை உட்கொண்டவள்

****

பஸ்மாசூரன்

Page 7 இல் உள்ள சில கருத்துகள் :

1. கண்ணீர் கலந்த வாழ்வே பூமிக்குரியது 2. ஜோதியை மனிதன் வெறுப்புடன் நோக்குகிறான். 3. அருளை வழங்கும் அரவணைப்பை மறுப்பது மனிதன் 4. அவதாரப் புருஷனுக்குச் சிரச்சேதமளிக்கும் உலகம் 5. கிரீடத்தை அளித்தவனுக்குச் சிலுவையைப் பரிசளிக்கும் உலகம்.

ஸ்ரீ அரவிந்தர் அடிப்படையாகக் கருதும் தத்துவங்கள் இவை. உலகம் மட்டமான வாழ்வை ரசித்துச் சுவைக்கின்றது. ஜோதி மனிதனுக்கு நன்றியை எழுப்பவில்லை, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அருளை நாம் பிறருக்கு அளித்தால் ஆர்வமாகப் பெறுவார் என நினைக்கிறோம். க்ஷணம் தாமதமின்றி உதறித் தள்ளுவது உலகம். அவதாரம் மனிதனை நாடி வந்தால் அவனைச் சிரச்சேதம் செய்ய முனைகிறது. கிரீடம் கொண்டு வந்தால் அவனைச் சிலுவையிலறைகிறது என்று சாவித்திரியில் 7ஆம் பக்கம் கூறுகிறது.

நாம் பிறருக்கு உதவி செய்தால் பெறுபவர் நன்றியுடனிருப்பார். மீண்டும் நமக்கு உதவி செய்வார். நமக்கு நல்ல பெயர் வரும் என அனைவரும் நினைக்கிறோம். உண்மை வேறு.

  • உதவி செய்பவர் செல்வாக்குடனிருந்து மேலும் அவரிடம் உதவியை எதிர்பார்த்தால் பெறுபவர் அடக்கமாக இருப்பார். உயர்வாகப் பேசுவார். செய்தவரை நல்ல மனிதர் என்பார்.
  • சொல்லும் பதில் உதவியைப் பொருத்ததன்று, செய்பவரின் பதவி, அதிகாரம், செல்வாக்கைப் பொருத்தது. மனிதன் அதிகாரத்திற்குப் பணிவான், நல்லதிற்குப் பணியமாட்டான்.
  • செய்தவர் பதவியில்லாதவரானால், அவர் ஏன் செய்கிறார், அதன் உள்நோக்கம் என்ன என்று கேட்டான். மனிதனால் அடுத்தவர் நல்லதை ஏற்கமுடியாது. பதவிக்குப் பணிய முடியும்.

அன்பர்கள் அனுபவம்.

  • வருமானத்தை பக்தர் அடுத்தவருக்கு 5 மடங்கு உயர்த்திய பொழுது நாம் அங்கு போனது தவறு என்றனர் பெற்றவர்.
  • எங்களுக்கு உதவி செய்வதால் உங்களுக்கு நல்ல பெயர் என்பதால் செய்கிறீர்கள் என்றனர் சிலர்.
  • உயிரைக் காப்பாற்றியவர் மீது திரும்பி பிழைத்தெழுந்தவன், அவர் உயிரையே எடுக்க முயன்று, அவரைச் சுற்றி 5 பேர் உயிரை எடுத்துவிட்டான்.
  • பொய்க் கேஸ் போட்டு, வாரண்ட் பிறப்பித்தான் 12 மடங்கு இலாபம் பெற்றவன்.
  • உதவி செய்யும் முன்பே உன் சொத்து முழுவதும் எனக்குக் கொடு என்றான் ஒருவன்.
  • 3 நாளில் 2 வேளை சாப்பிட்டவருக்குச் செய்த உதவியால் அவர் உயர்ந்து டாக்ஸியில் பயணம் செய்துவந்தது உதவி செய்தவரைப் பார்த்து வெட்கமின்றி என்னால் தானே நீங்கள் உயர்ந்தீர்கள்? என்று கேட்கும் மனிதப் பிறவி ஒன்று.
  • உதவிபெற்று உயர்ந்து, எதிரியாகி, உயிரை எடுத்து, பரமஎதிரியுடன் சேர்ந்து உன்னை அழிப்பேன் என்று கொக்கரிக்கிறான் அடுத்தவன் ஒருவன்.

நல்லது செய்து நல்ல பெயர் எடுக்கு முனைபவர் திறனற்றவரானால் தரைமட்டமாக்கப்பட்டு தலைமுறையே அழியும் என்பது ஸ்ரீ அரவிந்தம் கூறும் வாழ்வின் உண்மை.

****

P .10 This was the day when Satyavan must die இன்று சத்தியவான் மரணமடைய வேண்டிய தினம்

மேதை என்பதற்குப் பல அடையாளங்களுண்டு. சீனுவாச இராமானுஜம் கணக்கைப் பார்த்ததும் அதைப் போட்டுப் பார்க்காமல் விடையை அறிந்தார். அதுவே அவர் மேதாவிலாசம். பரீட்சை பேப்பரைத் திருத்தியவர் பையன் காப்பி அடித்ததாக நினைத்து பூஜ்யம் மார்க் போட்டார்.

மேதையின் அறிவு சிறப்பாக வெளிவருவதை உலகம் தவறாக அறியும். ஒருவன் சிறப்பை உலகம் தவறு எனக் கண்டால், அவர் மேதை என நாம் அறியலாம். மேற்கண்ட வரியை ஸ்ரீ அரவிந்தர் முழுக் காவியத்திலும் சிறப்பான அடியாகக் கருதினார். அதை ஒரு சாதகர் திருத்தச் சொன்னார்.