பிரம்மம், புருஷா, ஈஸ்வரா
மாயா, பிரகிருதி, சக்தி
ஒரு முதலாளி கம்பனியை ஆரம்பித்தால் மானேஜர் ஒருவரை நியமிக்கிறார். தொழிலாளிகள் வேலையைச் செய்கிறார்கள். மகாத்மா காந்தி சுதந்திரத்தைப் பெற ஓர் இயக்கம் ஆரம்பித்த பொழுது காங்கிரஸ் என்ற கட்சிக்கு ஒரு தலைவரிருந்தார். தொண்டர்கள் வேலையைச் செய்தனர். குடும்பத்தலைவர் எண்ணத்தைத் தலைவி நிறைவேற்றுகிறார். பிள்ளைகள் மேலும் பூர்த்தி செய்கின்றனர் என்பவை வழக்கு. எடிசன் 1100 புதுப் பொருள்களை – பல்ப் போன்றவற்றைக் – கண்டுபிடித்து கம்பனி ஆரம்பித்துத் தானே மானேஜராகவும் இன்ஜீனீயராகவும் தொழிலாளியாகவும் வேலை செய்து அவற்றைப் பதிவு செய்து (patented) இன்று உலகப் பிரசித்தி பெற்றதாக General Electric என்ற கம்பனியை நிறுவினார்.
– மனிதன் சிந்திப்பான்.
சிந்தனை சிருஷ்டியுடையது.
சிந்திக்கும் மனிதனை, பிரம்மம் எனவும் சிந்தனையால்
சிருஷ்டிக்கும் திறனை, மாயை எனவும் கூறினர்.
– மனிதன் செயலாற்ற சாட்சியாய் நிற்பான்.
செயலை நிறைவேற்றுவான்.
செயலாற்றும் மௌனமான நிலையைப் புருஷனெனவும் அத்திறனை பிரகிருதி எனவும் கூறினர்.
– மனிதனால் சிந்தித்து சிருஷ்டி செய்து, மௌனமாக அத்திறனால் செயலை முடிக்கவும் முடியும். இருநிலைகளையும் ஏற்ற அவனை ஈஸ்வரன் எனவும் அவனது திறனை சக்தி எனவும் கூறினர். சிந்தனையால் சிருஷ்டி செய்வது முதல் நிலை.
மௌனமாயிருந்து செயலை முடிப்பது இரண்டாம் நிலை.
சிந்தனையால் சிருஷ்டி செய்து தீவிரமாகச் செயலை முடிப்பது. முதல் இருநிலைகளும் சேர்ந்த மூன்றாம் நிலை.
இம்மூன்று நிலைகளும் ஒருவருக்கே உரியது.
பிரித்துப் பார்க்கும் மனம் மூன்றையும் வெவ்வேறு நிலைகளாகக் கருதி இல்லாத சிக்கலை எழுப்பி முடிச்சு அவிழவில்லை எனத் திகைக்கிறது.
முதலாளி – பிரம்மம்
மேனேஜர் – புருஷன்
தொழிலாளி – ஈஸ்வரன்
என்று நாம் கொண்டால் முதலாளி ( conceptively creates) சிந்தனையால் கம்பனியை சிருஷ்டிக்கிறார். மேனேஜர் (dynamically executes) தீவிரமாகச் செயல்பட்டு முதலாளியின் சிந்தனையை நிறைவேற்றுகிறார். தொழிலாளி (conceptively creates and dynamically executes ) முதலாளி சிந்தனையால் சிருஷ்டித்ததையும், மானேஜர் செயலால் பூர்த்தி செய்வதையும் சேர்த்துச் செய்கிறான். எடிசன் முதலாளியாகவும், மானேஜராகவும், தொழிலாளியாகவுமிருந்தான். எனவே இந்த மூன்றும் இறைவனின் மூன்று அம்சங்கள், மூன்று வேறு நபர்களில்லை என்பது ஓரளவு விளக்கும் உதாரணம். மாயை என்பது பிரம்மத்தின் சக்தி, பிரகிருதி புருஷனின் சக்தி, சக்தி ஈஸ்வரனின் சக்தி. ஆகையால் பிரம்மம், புருஷன், ஈஸ்வரன்,மாயா, பிரகிருதி, சக்தி எனக் கூறும் ஆறும் இறைவனின் 6 திருமுகங்கள், ஆறு அம்சங்கள்.
- இறைவன் ஒருவனே.
- அவன் அம்சங்கள் ஆறு.
பரமாத்மாவும், ஜீவாத்மாவும்
நமது ஆன்மீக மரபு பரமாத்மா அழிவற்றது, ஜீவாத்மா பரமாத்மாவில் அழிவது எனக் கூறுகிறது. ஜீவாத்மாவுக்கு நம் மரபு அமரத்வம் தரவில்லை. ஸ்ரீ அரவிந்தர் பரமாத்மா பிரபச ஆத்மாவாகி, ஜீவாத்மா ஆயிற்று. ஜீவாத்மாவினுள் பிரபச ஆத்மாவும், பரமாத்மாவும் புதைந்துள்ளனர் என்கிறார். பிரதமர், MPஆக ஆரம்பித்து பார்லிமெண்ட்டில் மெஜாரிட்டி கட்சித் தலைவராகி பிரதமரானார். அதனால் MPயினுள் கட்சித் தலைவரும், பிரதமரும் புதைந்துள்ளனர் எனலாம்.
Divine and Undivine இறைவனும் அசுரனும்
நமது உடலில் வாய் உணவை உட்கொள்கிறது. வயிறும், குடலும் அதை ஜீரணம் செய்கின்றன. ஜீரணமாகாதவை வெளியேறுகின்றன. மூச்சு உள்ளே சென்று ஆக்ஸிஜனால் இரத்தத்தைச் சுத்தம் செய்து, அசுத்தமான காற்றை வெளியேற்றுகிறது. வியர்வை விசர்ஜனம். வாய் நாம், பெருங்குடல் நாமல்ல என்றோ உள்ளே போகும் காற்று நாம், வெளியே வரும் காற்று நாமல்ல என்றோ கூற முடியாது. வாயும், மூக்கும், குடலும் நாமே. குடலில்லாமல் உயிர் வாழ முடியாது. வேண்டியது, வேண்டாதது என உலகை இரண்டாகப் பிரித்தால்,
- வேண்டாதது என்பது தற்சமயம் வேண்டாதது, எப்பொழுதுமே வேண்டாததில்லை.
- எதுவுமே ஒரு சமயம் நமக்கு வேண்டியிருக்கும். அது பர்சனாலிட்டியின் அளவைப் பொருத்தது.
- அனுபவம் அதிகமாக அதிகமாக ஊரில் எவரும் ஒரு சமயம் நமக்கு இன்றியமையாதவராய் விடுவார் எனப் புரியும்.
- பல்வேறு வகையான சொத்து, பதவி, அதிகாரம் அதிக நாள் அனுபவித்தவருக்கு இரண்டு விஷயம் புரியும்.
– எவரும் எந்த நேரமும் அவசியமாய் விடுவர். – எவரும் எந்த நேரமும், நேரம் அவர்க்கு சாதகமாகி விட்டால், நம்மை முழுவதும் அழிக்க முடியும்.
- circumconscient, சூழலின் ஜீவியமறிந்தவர் நம்முள்ளே உள்ள எதுவும் வெளியிலுள்ள எதையும் கவர்ந்து ஆபத்து விளைவிக்கலாம்என அறிவர். அவர்கள் எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார். எவரையும் எதிர்க்க மாட்டார்.
- அடுத்த கட்டத்தில் ஆன்மீக விவேகமுள்ளவர் எவரும், சூழலின் ஜீவியம், கரணங்களின் ஜீவியம் (intraconscient) ஆகிய இடங்களில் உள்ள எதுவும் நமக்கு திருவுருமாற உதவும்என அறிவர்.
- அதனால் உலகில், பிரபஞ்சத்தில் நமக்கு இன்றியமையாதது என ஒன்றில்லை என்பது ஆன்மீக ஞானம்.
இவற்றை பகவான் எடுத்துரைக்கக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
– வேண்டாததை அனுபவிக்காதவனுக்கு வேண்டியதின் ஆழ்ந்த ருசியான அனுபவமில்லை. வறுமையை அனுபவித்தால் வசதியின் அருமை தெரியும்.
– இறைவன் நாடும் ஒருமையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? வேண்டாதது இறைவனுக்கு வேண்டியது என்பதால் நமக்கும் வேண்டியதே.
– வலியை அனுபவிக்காதவன் ஆனந்தத்தின் முழுமையை அறிய முடியாது.
– உலகம் இறைவனின் ஆனந்தலீலை என்று அறிய வேண்டாதது இருக்கக் கூடாது.
– தீமையை விலக்குபவன் நன்மையையும் விலக்குவான்.
– பேர்ஆனந்தம் பெற வேண்டி பெரிய இருளை இறைவன் ஏற்படுத்தினான்.
– வேண்டாததுஎன நாம் அறிவது நம் அறியாமை அறிவது.
– குறுகிய அளவு ஜீவனிலில்லை, அகந்தையில் உள்ளது.
– எதிரானதை அனுபவிக்காமல் முழு ஞானத்தை அறிய முடியாது.
– அறியாமை அறிவைவிடப் பெரியது.
இறைவனே உலகமானான் என்பது கொள்கையானால், வேண்டாதது வர முடியாது.
புத்தர், சங்கரர், பகவான் ஸ்ரீ அரவிந்தர்
இதுவரை உலகில் புத்தரைப் போன்ற அறிஞர் (thinker) பிறக்கவில்லை என்று உலகம் கூறுகிறது. அதையே பகவானும் கூறுகிறார். புத்தரையும் சங்கரரையும் பற்றிப் பேசும் பொழுது ஸ்ரீ அரவிந்தர்,
- சங்கரர் புத்தரை விடப் பெரிய அறிஞர் ஆனால்
- புத்தர் அவரை விடப் பெரிய ஆத்மா,
என்று கூறுகிறார். உபநிஷதம் கூறுவது புத்தருக்கு ஒத்துவரவில்லை. அதனால் அவர் செய்த தவம் அவரை நிர்வாணம் எய்த உதவியது. எட்டுப் பாதைகளை அவர் உலகுக்கு அளித்தார். தீமையைக் கடக்க, அதிலிருந்து தப்பிக்க பௌத்தம் அகந்தையிலிருந்து விலகும் பாதையைக் காட்டுகிறது. மனம் அகந்தையிலிருந்து விலகினால் அகந்தை கரைகிறது என்று கண்டார். அதே போல் மனம் சத் புருஷனிலிருந்து (Self) விலகினால் சத் புருஷனும் கரையும் என்றார். அகந்தையை மனம் உற்பத்தி செய்ததால், மனத்தால் அகந்தையைக் கரைக்க முடியும். சத் புருஷனை அகந்தை உற்பத்தி செய்யவில்லை. அகந்தை உற்பத்தியாவதன் முன் சத்புருஷன் உற்பத்தியானதால் அதை
மனத்தால், மனத்தின் விசாரத்தால் கரைக்க முடியாதுஎன பகவான் கூறுகிறார். அகந்தையையும், தீமையையும் வென்ற பௌத்தம் கடவுளில்லை என்றது. புத்தர் பிரபஞ்ச வாழ்வு (existence) என்ன என்பதை ஆராய மறுத்ததால் அவர் கூறுவதை நாம் ஏற்க முடியாதுஎனக் கூறுகிறார். புத்தரை சங்கரர் கடந்து சென்றார். அவரை வென்றார். உலகம் மாயை என்றார். உலகம் புத்தரைக் கைவிட்டு சங்கரரை ஏற்றது.
- சங்கரர் மாயைஎனக் கூறுவது சரியில்லை.
- அஞ்ஞானத்தை சங்கரர் மாயை எனக் கூறுகிறார்என பகவான் கூறுகிறார்.
சங்கரர் புத்தரைக் கடந்து வந்ததைப் போல ஸ்ரீ அரவிந்தர் சங்கரரைக் கடந்த வகையை இரண்டாம் புத்தகம் 5, 6 அத்தியாயங்கள் கூறுகின்றன.
ஞானம், அஞ்ஞானம்
மனிதன் உலகை அறிய முயல்கிறான். அவனுக்குள்ள பெரிய கருவி மனம். மனம் பிரிக்கும் கருவி. இதனால் முழுமையைக் காண முடியாது. பகுதியைத்தான் காண முடியும். மனம் ஒரு பகுதியைக் கண்டால், காணாத பகுதியிருக்கும். அது எஞ்சியிருக்கும். இதை duality, இரட்டை என்கிறோம். ஒளி, இருள்; மெய், பொய்; பிரம்மம், சிருஷ்டி; வலி, ஆனந்தம்; மௌனம், சப்தம் என்பவை அது போன்ற இரட்டைகள். அதனால் சிருஷ்டியில் மனம் எதைக் கண்டாலும், அதற்கு எதிரான இரட்டை உடனே எழும். சத் என்பதை நாமறிந்த மாத்திரம் அசத் எழுகிறது. அப்படி எழுந்த இரட்டைகள் ஏராளம். தாழ்ந்தது, உயர்ந்தது; நல்லது, கெட்டது; ஆண், பெண்; என்பன போன்றவை அவை.
- மனம் பகுதியை அறியும் கருவி என்பதால் இறைவனையும் பிரம்மத்தையும் – மனம் பகுதியாகவே அறிந்தது. வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை அப்படி அதிகபட்சம் இறைவனைக் கண்டு கொண்டதை அவர்கள் அக்ஷரப் பிரம்மம் என்றனர். அதுவே முடிவு என்றும் கூறினர்.
காமிரா படம் எடுத்தால், நாம் காணும் உலகில் ஒரு பகுதியைத்தான் படமாக எடுக்க முடியும். நாம் காண்பதே முழு உலகமில்லை, ஒரு பகுதிதான் என்பதால் காமிராவால் முழு உலகை அறிய முடியாது. அது கருவியின் குறை. வீடியோ காமிராவை விட அதிகமாக அறியும், அசைவைப் படம் பிடிக்கும் என்பது உண்மையானாலும், வீடியோவாலும் முழு உலகையறிய முடியாது. ராக்கட்டில் satellite மூலம் பூமியை முழுவதும் பார்க்க முடியும். மனம் காண முடியாத முழுமையை சத்தியஜீவியம் காண முடியும். சத்திய ஜீவியத்திற்கு இரட்டையில்லை, முழுமையுண்டு. அப்படி மனம் ஏற்படுத்திய அடிப்படையான இரட்டைகளில் சச்சிதானந்தத்தின் எட்டு அம்சங்கள் முக்கியமானவை.
சத் சித் ஆனந்தம்
ஐக்கியம், சத்தியம், ஞானம், சக்தி அழகு, சந்தோஷம், அன்பு
நன்மை (goodness)
இவ்விரட்டைகள்
ஐக்கியம் * பிரிவினை (பகுதி)
சத்தியம் * பொய்
நன்மை * தீமை
ஞானம் * அஞ்ஞானம்
சக்தி * இயலாமை
அழகு * விகாரம்
சந்தோஷம் * கவலை
அன்பு * வெறுப்பு
சச்சிதானந்தம் என்பது இறைவன். இறைவனை இந்த எட்டு இரட்டைகளில் ஒன்றின் மூலம் விளக்கிக் கூறலாம். ஆனால் வேதம், உபநிஷதம், ஸ்ரீ அரவிந்தம் இறைவனை ஞானம் * அஞ்ஞானம் என்பதன் மூலமே கூறுகின்றன. மனிதன்
மனமுடையவன். மனமே அவன் உயர்ந்த கருவி என்பதால் மனம் பெறுவது ஞானம் என்பதால் ஞானம் * அஞ்ஞானம் என்ற இரட்டை பொருத்தமாக அமைகிறது. அடுத்த அத்தியாயம் ஞானமும் அஞ்ஞானமும். அதை எடுக்கும் முன் சங்கரர் மாயை என்று கூறுவது உண்மையில் அஞ்ஞானம்என இரு அத்தியாயங்களில் கூறுகிறார். கனவு பொய்யன்று என்பதால் அந்த உதாரணம் பொருத்தமாகாது. பாம்பு, பழுது என்பவை இல்லாதவையல்ல என்பதால் அவை மாயையாகாது, அறியாமையாகும் என்பது பகவான் கூறும் விளக்கம்.
பகவான் தத்துவம் முழுமை, முழு முதற் கடவுள் முடிவான சிருஷ்டி என்ற அடிப்படையுடையது. அதனால்,
– பிரம்மம் சிருஷ்டியில் எல்லா நிலையிலும், எல்லா நேரங்களிலும், எல்லா ரூபங்களிலும், பிரம்மமாகவேயிருக்கிறது.
– நாம் பிரம்மம், நம் செயல்கள் பிரம்மம்.
– நல்லது பிரம்மம், கெட்டது பிரம்மம்.
– ஞானம் பிரம்மம், அஞ்ஞானம் பிரம்மம்.
– பிரம்மம் ஆனந்தம் தேடி அஞ்ஞானத்தை சிருஷ்டித்து, அதனுள் மறைந்து, வெளி வருவது பிரம்மானந்தம் என்பதால் சிருஷ்டியில் அஞ்ஞானம் உள்ளது.
– சிருஷ்டிக்கு அஞ்ஞானம் தேவையில்லை; ஆனால் நாமுள்ள இந்த சிருஷ்டிக்கு அஞ்ஞானம் அத்தியாவசியம்.
– சிருஷ்டியின் இரகஸ்யம் புரிய ஞானம், அஞ்ஞானம் ஏற்பட்ட வகை, அவற்றுக்குள்ள தொடர்பு, அஞ்ஞானம் ஞானமாகும் வகை, உபநிஷதம், வேதம் கைக்கொண்டு விளக்கம் கூறிய முறை, பகவான் கூறுவது எப்படி அவற்றிலிருந்து வேறுபடுகிறது என்பவை நாம் அறிய வேண்டியவை.
- முழுமையை முடிவாக அறிய வேண்டும் என்பதால் ஞானம், அஞ்ஞானம் என்ற விளக்கம் அதற்குச் சாதகமாக, பொருத்தமாக இருப்பது அவசியம்.
- ஞானம் தன்னை அளவுக்குட்படுத்துவதால் அஞ்ஞானம் ஏபடுகிறது என்பது பகவான் கூறியது. அளவு அகன்றால் அஞ்ஞானம், ஞானமாகிறது. ஞானம் என்ற முழுமையை நாமடைய முடியும்.
- வேதம், கடவுள், உலகம் என்று பிரித்து கடவுளை அறிவது ஞானமாகவும், கடவுளை அறியாதது அஞ்ஞானமெனவும் கூறுகிறது. வேத விசாரம் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளில் முடிவதால், உலகம் விலக்கப்படுகிறது. அதனால் முழுமைக்கு வழியில்லை.
- உபநிஷதம் கூறுவது வேறு: கடவுளை அறிவது வித்யா, உலகை அறிவது அவித்யா என்று உபநிஷதம் கூறுகிறது. கடவுளும், உலகமும் பிரிக்கப்படுகின்றன. அவை சந்திக்க வழியில்லை. அதனால் முழுமை எழ வழியில்லை.
- வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை மனம் என்ற கருவியைப் பயன்படுத்தின. மனம் பகுக்கும் கருவி. மனத்தால் முழுமையை அடைய முடியாது. அதனால் அவ்விளக்கங்கள் பூரண யோகத்திற்குப் பயன்படா.
- மேலும் சத்தியஜீவியம் ஞானம், மனம் அதை மறக்காதவரை ஞானத்தின் கருவியாகும். அதை மறந்தால் அஞ்ஞானத்தின் கருவியாகிறது. அம் மறதியின் நிலைகள் ஏழு. அவ்வேழுவகை அஞ்ஞானம் நாம் அறிய வேண்டியது. அஞ்ஞானத்தைப் பூரணமாக அறிய நாம் ஞானத்தை, அதன் நான்கு வகைகளை அறிவது அவசியம்.
ஞானம் என்றால் இறைவனை உலகமாக அறிவது என்பது விளக்கம்.
1) இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலை ஞானம், உயர்ந்த நிலை ஞானம்.
2) அவனிடமிருந்து அகந்தையால் பிரிந்து நின்று தன்னை வேறாக அறிவது பிரிந்த நிலை ஞானம். இது கடைசி கட்டமான தாழ்ந்த நிலை.
3) இவற்றிடையேயுள்ளவை இரண்டு.
- ஒன்று intution நேரடி ஞானம்.
- Subliminal அடி மனம் பெறும் பிரபஞ்ச ஞானம்.
நாமுள்ள அகந்தை நிலையிலிருந்து அடி மனத்தில் பிரபஞ்ச ஞானம் பெற்று, அங்கிருந்து உயர்ந்து நேரடி ஞானமடைந்து, முடிவாக இரண்டறக் கலந்த ஞானம் பெறுவது யோகம்.
பூரணமான அஞ்ஞானம்
ஞானம் அஞ்ஞானமாக மாறும் நிலைகள் பல. அவற்றை ஏழு நிலைகளாகக் கூறுகிறோம். அஞ்ஞானம் பூரணமானால் சிருஷ்டி முடியும். பரிணாமம் ஆரம்பிக்கும். அது பூரணம்பெற, பரந்த பிரபஞ்சம் குறுகிய மனிதனாக வேண்டும். அடிமனம் மேல் மனமாகிறது. இம்மாற்றம் சிறப்பெய்த மேல்மனம் தலைகீழாக மாற வேண்டும். பரந்த அடிமனம் காலத்தாலும், மனத்தாலும் குறுகி, அகந்தையால் மேலும் சிறுத்து, சிறுமையின் முடிவு (கண்டம், infinitesimal) மேல்மனச் செயலானால் அஞ்ஞானம் பூர்த்தியாகும். சிருஷ்டியின் 8 நிலைகளில் ஒரு நிலையினின்று அடுத்த நிலைக்குவர தலைகீழ் மாற்றமுண்டு. இதை பகவான் reversal of consciousness தலைகீழாக மாறிய ஜீவியம் என்கிறார். இந்த மாற்றம் ஓர் அத்தியாயமாக விளக்கப்படுகிறது.
குறை, தவறு, பொய், தீமை
ERROR, MISTAKE, FALSEHOOD, WRONG, EVIL
இரண்டாம் புத்தகம் முதற்பகுதியின் 14 அத்தியாயம் இத்துடன் முடிகின்றன. மேற்கூறியவை அஞ்ஞானத்தின் இருண்ட பகுதிகள், இருள் திரண்டு கருமை, கடுமையாவது தீமை. எளிமையான மாறுபாடு சிக்கலான குதர்க்கமாவது தீமை என்கிறார் பகவான். Simple contrary becoming complex perversity. இங்கு,
- சிருஷ்டியில் தீமை படைக்கப்படவில்லை.
- அகந்தை பிரபஞ்சத்திலிருந்து பிரிந்து தனித்து வேறுபட்டு உலகை வேறாகக் காண்பதால் நோய், வலி, கவலை, மரணம், தீமை உற்பத்தியாயின என்கிறார்.
- பிரிந்தது கூடினால் தீமை கரையும்,
என்பவை முக்கியக் கருத்துகள். தீமையைப் பற்றி அறிவு ஏற்கும் வகையில் கூறப்பட்ட ஒரே விளக்கம் இதுவே. உலகம் கேட்டறியாத விளக்கமிது. இந்த 14 அத்தியாயங்களில் ஞானம் எப்படி அஞ்ஞானத்தினின்று எழுகிறது, அஞ்ஞானம் எப்படி ஞானமாகிறது என்பது கூறப்படுகிறது. அடுத்து வரும் 14 அத்தியாயங்களில் ஞானம் பரிணாமத்தால் எப்படி ஆன்மாவாகிறது என்பது விளக்கப்படுகின்றது.