ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிக்கும் உற்சாகத்தில், அதை லட்சியமாய் நடத்த வேண்டுமென்ற ஆர்வத்தில், தலைவருக்குச் சிறப்பான இடமளிக்க விரும்பி, அது போன்ற ஸ்தாபனங்களில் இல்லாத ஒன்றைத் தலைவருக்குக் கொடுக்க விரும்பி, எல்லாவித உரிமைகளையும் அவருக்கே அளித்து, சட்டதிட்டங்களை இயற்றினார்கள். அதற்கமைந்த தலைவர் சாதாரண மனிதனுக்கு உள்ள நல்ல குணங்கள்கூட இல்லாதவர். ஸ்தாபனம் பெரும்புகழ் பெற்றது. எந்தப் பிரச்சினையும் இல்லை. பெருஞ்சொத்து ஏற்பட்டது. தலைவருக்கே உண்டான குதர்க்கபுத்தி செயல்பட ஆரம்பித்தது. ஸ்தாபனத்தை உடைத்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அனைவரும் ஸ்தாபனத்தின் மீது உயிரையே வைத்திருந்தனர். தலைவருடைய போக்கு விபரீதமாக இருந்தது. அனைவரும் அவரிடம் சென்று, “நாங்களெல்லாம் விலகிக் கொள்கிறோம். மற்றவர்களை நீங்களே நியமித்து, ஸ்தாபனத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்” என்றார்கள். தலைவர் மறுத்தார். “ஸ்தாபனத்தைக் கலைத்து வேடிக்கைப் பார்க்கப்போகிறேன். எனக்கு அந்த அதிகாரம் உண்டு. என்ன செய்ய முடியும்?” என்று சில்லறை மனிதனாகப் பேசினார். மற்ற அங்கத்தினர்கள் ஸ்தாபனத்தைக் கட்டி வளர்த்தவர்கள். சர்வபரித்தியாகம் செய்தவர்கள். தங்கள் முழுச் சொத்தையும், உழைப்பையும் கொடுத்தவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளத் தயார். ஸ்தாபனம் உடைவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வக்கீலைக் கலந்தார்கள். “உங்கள் ஸ்தாபனம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது. இதுபோன்ற அதிகாரத்தை எந்த ஸ்தாபனமும் தலைவருக்குக் கொடுத்ததில்லை. நீங்களே அப்படிச் செய்தபின் சட்டம் எப்படி உதவும்” என்றார். அனைவரும் வீடு திரும்பினர். மனம் உடைந்தனர். முக்கிய ஊழியர் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. “நான் முழுமனதுடன் செய்தேன். நல்லெண்ணத்துடன் இந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்தேன். அந்த நல்லெண்ணத்திற்கு அடையாளமாகவே முழு அதிகாரத்தையும் தலைவருக்குக் கொடுத்தேன். அதனால் தவறு வாராது. என் எண்ணம் சட்டத்தைவிட
உயர்ந்தது. சட்டம் உதவாவிட்டால் வேறு வழியிருக்கும்” என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, மறுபடியும் வக்கீலைப் பார்த்து, “தலைவர் அவர் போக்கில் சென்றால், சட்டப்படி மற்றவர்களுடைய பங்கை நிறைவேற்ற நாங்கள் தயார்” என்று கூற வக்கீலைப் பார்த்தார். விவாதத்தைக் கூட இருந்து கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு வக்கீல், “தலைவருக்கு ஏகபோக அதிகாரத்தை நீங்கள் தானே கொடுத்தீர்கள். கமிட்டி முழுவதும் இங்கே இருக்கிறீர்களே, கொடுத்த அதிகாரத்தை வாபஸ் செய்ய உரிமை, கமிட்டிக்கு உண்டு” என்று விளக்கினார். ஊழியர்களுக்குச் சட்டம் கைகொடுத்தது. தலைவர் தாமே விலகிப் போய்விட்டார்.
நம் மனத்தில் கோணலில்லாவிட்டால் மற்றெந்தக் குறையையும் விலக்க ஒரு மார்க்கம் கண்டுபிடிக்கலாம்; விலக்கலாம். அதன் வழியே சிக்கல் அவிழும். நம் மனத்தில் கோணல் இருந்தால், அதை நாமே விலக்கிக்கொள்ள வேண்டும். மற்றவர்களால் விலக்க முடியாதது அது. கோணல் இல்லையென்றால், குறையை நிவர்த்தித்து, பின்னர் செய்யும் பிரார்த்தனை முழுவதும் பலிக்கும். பிரச்சினை தீர்வதற்கு ன் கவலை நீங்கி, மனம் நிம்மதியடையும். அந்த நிம்மதியே பிரச்சினையைத் தீர்க்கவும் உதவும்.
விற்க நினைத்ததைப்போல் 3 மடங்கு விலைக்கு பேரம் படிந்து, அக்ரிமெண்ட் பாதி எழுதியபின், தடை வந்தது. வந்த நல்ல விலை போய்விட்டது என்று கவலையடைந்தவர், “வந்தது போகாது. அதுவும் தரிசனம் மூலமாக வந்தது போகாது. முயன்றால் மீண்டும் கிடைக்கும். சமாதி தரிசனம் செய்தாலும் போதும்” என்ற எண்ணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஏற்றுக்கொண்டவுடன் தீராத கவலை மனதை விட்டு விலகியது; நம்பிக்கை ஒளி புறப்பட்டது. 4 மணி நேரத்தில் போனது திரும்பி வந்துவிட்டது. ஓர் உயர்ந்த கருத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததால் கவலையழிந்து, நம்பிக்கை ஏற்பட வழி ஏற்பட்டது. உயர்ந்த கருத்துக்கு அந்தத் திறனுண்டு.
டிபார்ட்மெண்டில் இரண்டு சான்ஸ் கொடுத்தும் அக்கௌண்ட் டெஸ்டில் தவறி, மேலும் இரு சான்ஸ் ஸ்பெஷலாக வாங்கி, அதிலும் பெயிலாகி, டிபார்ட்மெண்டிற்குத் தேவையான டெக்னிகல் பரீட்சையை இரு முறை எழுத, அதிலும் பெயிலானவர்க்கு, புதிய உத்தியோத்தில் சேர்வதற்குமுன் பழைய உத்தியோகத்தில் அதிக சம்பள உயர்வைச் சர்க்கார் ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற நிலையில், இதே கருத்தை ஏற்றால் பலனுண்டு என்று சொல்லியபொழுது, அவர் மிகவும் தயங்கினார். “வந்தது போகாது. அதுவும், ஸ்ரீ அரவிந்தர் அறையைத் தரிசனம் செய்தபின் வந்தது போகாது” என்ற கருத்தை அவர் ஏற்றுக்கொண்டால், 4 முறை பெயிலான அக்கௌண்ட் டெஸ்டை அடுத்தாற்போல் ஒரே முறையில் பாஸ் செய்ய வேண்டும். அடுத்த டெக்னிகல் டெஸ்டையும் ஒரே முறையில் பாஸ் செய்ய வேண்டும். அவராலும் அந்த உயர்ந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இரண்டு பரீட்சைகளையும் பாஸ் பண்ண முடிந்தது. உயர்ந்த கருத்தை மனம் ஏற்றுக்கொண்டால் கவலை கரையும்; நிம்மதி ஏற்படும்; பிரச்சினை தீரும்.
நல்ல சம்பளத்தையும், உத்தியோகத்தையும் விட்டுவிட்டுத் தொழில் (industry) ஆரம்பிக்க முயன்று, 6 வருஷ காலமாக உழன்றவர், கதிகலங்கிய நிலையில், இனி உருப்பட வழியேயில்லை என்ற நிலையில், “நீ உன் காணிக்கையை இந்தக் கஷ்டக் காலத்திலும் தொடர்ந்து தருகிறாய்; குறைக்காமல் செலுத்துகிறாய். எது கை விட்டாலும் காணிக்கை தன் கடமையைப் பூர்த்தி செய்யும், கவலையை விடு” என்ற கருத்தை ஊன்றிக் கேட்ட அவரால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அன்னையை நினைத்துச் சிரிக்கவும் முடிந்தது. 7 நாளில் 3 புதிய வாய்ப்புகள் உற்பத்தியாகி கைகொடுத்தன. கவலை போய், நிம்மதி வந்தது. அவரும் பெரிய தொழிலதிபராகிவிட்டார்.
ஒரு தொழிலதிபருக்கு 3 தொழில்கள். எல்லாத் தொழில்களும் நல்ல முறையில் நடந்துவருகின்றன; ஆர்டருக்குக் குறைவில்லை; பணத் தட்டுப்பாடில்லை; உற்பத்தியில் தடையில்லை. தொழில்
இலாபம் வருவதைப் பார்த்த தொழிலாளர்கள் வேறுவிதமாக நினைத்தார்கள்; நினைவைச் செயல்படுத்தினார்கள்; சிறிய சிக்கல் ஏற்பட்டு, பெரிய சிக்கலாயிற்று; ஒன்று போனால் மற்றொன்று. லேபர் என்றால் அலர்ஜி என்ற நிலைமைக்கு வந்துவிட்டார். தொழிலை மூட மனமில்லை. வேறு வழியில்லாமல் நித்திய அவஸ்தையுடன் நிம்மதி இழந்த நிலையில், அவர் எடுக்காத முடிவைத் தொழிலாளர்கள் எடுத்து, எல்லாத் தொழில்களையும் மூடிவிட்டார்கள். இனி கவலைக்கே இடமில்லை. தொழில் இருந்தால்தானே கவலையை உற்பத்தி செய்யும்! நம் கையில் உள்ள பிடியைப் பெரிய மனது செய்து விட்டுக்கொடுப்பது அன்னை முறைகளில் ஒன்று என்று அறிந்து, அந்தத் தொழில் அதிபர் ஸ்டிரைக் நேரத்தில் வந்த ஒரு சந்தர்ப்பத்தில் தைரியமாக அம்முறையைக் கையாண்டார். ஸ்டிரைக் முடிந்தது. ஒரு மாதம் கழித்து அவர் எழுதினார். “இதுவரை லேபர் என்றால் எனக்குத் தலைவலி; இன்று லேபர் பிரச்சினையில்லை. இனி லேபர் பிரச்சினையாக வழியும் இல்லை. கவலை ஒழிந்து, பூரண நிம்மதி ஏற்பட்டுவிட்டது” என்று அவர் எழுதினார்.
என் தொழில் வருமானம், மழையை பொருத்தது; மழை பெய்தால் உண்டு, பெய்யாவிட்டால் ஒன்றுமில்லை. அதனால் எனக்கு நிம்மதி என்பது எப்பொழுதுமே இருந்ததில்லை என்று ஒருவர் சொன்னால் அது முழு உண்மை. அவர் மழைக்குக் கட்டுப்பட்டவர். மழை அவர் கையில் இல்லை. அதனால் அவருக்கு நிம்மதி ஏற்பட வழியில்லை. இது ஒருவருடைய தொழில் நிலை. இவருக்கு நிம்மதி ஏற்பட முடியுமா? அன்னை நிம்மதி அளிப்பாரா? அப்படிப்பட்ட வழி ஒன்று இருந்தால் தெரிந்துகொள்ள எல்லோரும் விரும்புவார்கள் இல்லையா?
அவர் சொல்வது உண்மை. வாழ்க்கையில் அந்த உண்மை நின்று நிலைபெறுகிறது. அன்னையின் வாழ்வில், அதாவது அன்னை பக்தர்களுக்கு அளிக்கும் வாழ்வு அந்த உண்மைக்குக் கட்டுப்படாது. அன்னை வாழ்வில் நிம்மதி நிலையானது. மழைக்குத் தொழில்
கட்டுப்படலாம். அன்னை வாழ்வு மழையாலோ, மற்றதாலோ நிர்ணயிக்கப்படக்கூடியதில்லை. அன்னை வாழ்வு தன்னையே நிர்ணயித்துக்கொள்ளும் திறனுள்ளது. மழையால் நிர்ணயிக்கப்படக் கூடிய வருமானம், அன்னை வாழ்வில் நம் நம்பிக்கையால் நிர்ணயிக்கப் படும். இந்த உண்மையை அந்த அன்பர் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்ற பல அன்பர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் விளக்கினால், அந்த அன்பர் அதை ஏற்றுக்கொண்டால், அவருக்கு நம்பிக்கை பிறக்கும். 45 வருஷமாக இல்லாத நிம்மதி அந்த நம்பிக்கை மூலம் ஏற்படும். தொழில் மழை என்பது முக்கியம். என்றாலும் மற்ற விஷயங்களாக விலை கிராக்கி, சர்க்கார் மான்யம் போன்ற வேறு பல அம்சங்கள் இருப்பதால், அன்னை ஓர் அம்சம் பொய்த்த காலத்து, மற்றோர் அம்சத்தின் மூலம் அதே வருமானத்தைக் கொடுப்பார். அன்பருக்குத் தேவையானது நம்பிக்கை. மழை மீதுள்ள நம்பிக்கையைத் தடம்புரட்டி அன்னை மீது வைக்க வேண்டும். அன்னை பல வகைகளில் செயல்பட முடியும். பலனை அன்னை நிர்ணயிப்பதால், அன்னை மீது நம்பிக்கையுள்ளவரை பலனுண்டு; நிம்மதிக்குப் பங்கம் வாராது.
“எனக்கும் வயதாகிறது. என்னைப் பார்த்தபின் எந்த வரனும் திருமணத்திற்குச் சம்மதித்ததில்லை” என்று நம்பிக்கையை இழந்தவருக்கு நம்பிக்கையை இடம் மாற்றி வைத்தால் நல்லது என்ற எண்ணம் இதமாகப்பட்டது. தன் அழகை நம்புவதைவிட, அன்னையை நம்புதல் நல்லது என்ற எண்ணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். நம்பிக்கையும், நிம்மதியும் பிறந்தன; கவலை அழிந்தது. அடுத்த வரன் சம்மதித்தார். அவர் மிராசுதாரர். திருமணம் நடந்தேறியது.
“என் வேலை நிலையில்லை. ஏனெனில் என்னுடைய டிபார்ட்– மெண்டே தற்காலிகமானது. நான் எப்படி நிம்மதியுடனிருக்க முடியும்?” என்றவர் டிபார்ட்மெண்ட், சட்டம், இவற்றிலிருந்து நம்பிக்கையை அன்னையிடம் மாற்றியவுடன், டிபார்ட்மெண்டைக் கலைத்து விட்டார்கள். அவருடைய ஆரம்ப பயம் பலித்துவிட்டது. செய்வது
அறியாது திகைத்திருந்த நேரத்தில், நம்பிக்கையை இழக்காத காரணத்தால், டிபார்ட்மெண்டிலிருந்து எதிர்பாராதவிதமாகக் கடிதம் வந்தது. மாநில சர்க்கார் இந்த மத்திய சர்க்கார் டிபார்ட்மெண்ட் கலைக்கப்படுவதால், இதிலுள்ள எல்லா ஆபீசர்களையும் அதே சம்பளத்தில் தன் இலாக்கா ஒன்றில் எடுத்துக்கொள்ள சம்மதித்து இருப்பதாகவும், அதனால் புது போஸ்டிங் வரும் என்று கடிதம் கூறியது. அன்னையை முழுதும் நம்பிய அன்பருக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கும் நேரத்தில், அவரை கெஜட் பதவிக்கு தேர்ந்தெடுத்து விட்டதாக மற்றொரு தகவல் கிடைத்து, நிலைமை மாறி உயர்ந்தது.
கணவனை நம்ப முடியாவிட்டால், பிள்ளைகளுக்குச் சொந்தமாக ஒரு கட்டுப்பாடில்லாவிட்டால், முதலாளிக்கு தமக்கென அபிப்பிராயம் இல்லாமல் மற்றவர்கள் பேச்சைக் கேட்பவரானால், ஊன்றுகோலாகப் பற்றக்கூடிய மனிதரோ, சந்தர்ப்பமோ நம் வாழ்க்கையில் இல்லாமற் போனால், தொடர்ந்து கணவனை வெளியூருக்கு அனுப்ப வேண்டிய உத்தியோகமானால், செய்யும் உத்தியோகம் நிலையற்றதானால், நம் வாழ்வு பிறர் கையிலோ, மற்ற விஷயங்களால் நிர்ணயிக்கப்படு– மானால், நமக்கே (depression) சோகம் உடன்பிறந்ததானால், நம்மைச் சுற்றியுள்ளவர் அனைவரும் செய்யக்கூடிய காரியத்தை நம்மால் செய்ய முடியவில்லை என்றால், மார்க்கட் நிலவரம் விரைவாக மாறும் தொழிலிருந்தால், புதிய பொருள் எந்த நிமிஷமும் வந்து நம் தொழிலை மூடிவிடக்கூடுமானால், திருமணச் செலவைத் திரட்ட முடியாது என்று தெளிவாகப் புரியுமானால், சம்பளத்தில் நடத்த டியாத குடும்பத்தை அடுத்த மாதத்திலிருந்து பென்ஷனில் நடத்த வேண்டுமானால், ஒவ்வொரு வருஷமும் அதிர்ஷ்டத்தை நம்பியே பாஸ் பண்ணி வந்தால், பார்ட்னர் மிகவும் இரகஸ்யமானவரானால், வீடு சச்சரவு நிரம்பியதானால், குடும்பத்தில் ஒருவருக்கும் பாசம் என்றில்லை என்றால், நம்முடைய மனநிம்மதி கொடுமைக்கார மாமியார் ஆதிக்கத்திலுள்ள பெண்ணின் சந்தோஷத்தைப் பொருத்ததானால், புரளியும் வதந்தியும் நம் முக்கிய வேலைகளுக்கு
ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்றால், இரவு முழுவதும் வரும் கெட்ட சொப்பனம் பகல் முழுவதையும் பாழ்படுத்துமேயானால், எவரை நம்பியிருக்கிறோமோ அவருக்கு விஸ்வாசமில்லை என்றால், கணவனுக்குக் குடிப் பழக்கமிருந்தால், எந்த நிமிஷம் பையனுக்கு எந்தக் கெட்டப் பழக்கம் ஏற்பட்டது என்று செய்தி வருமோ என்ற நிலையிருந்தால், நம் அந்தரங்கங்களை நம்பிக்கையோடு பெற்றவர் எந்த நிமிஷமும் நம்பிக்கைத் துரோகத்திற்குத் தயாரானால், யார் வேண்டுமானாலும் என் மீது செய்வினை செய்ய முடியுமென்றால், நண்பன் எதிரியாகத் தயங்காதவனானால், நமக்குக் கீழ் வேலை செய்பவன் நம்மை எதிர்க்கக்கூடிய நிலையிருந்தால், பண்பற்ற மக்களிடையே இருப்பதால் யார் எந்த நேரம் எதைக் கிளப்புவார்கள் என்று சொல்ல முடியாது என்ற நிலைமையிருந்தால், ஏதாவது தீராத வியாதி வந்துவிடலாம் என்ற பயம் அஸ்தியிலிருந்தால், எதை நம்புவது என்றுத் தெரியாத நிலையென்றால், என் கிராமியப் பாணி போகும் இடமெல்லாம் வாய்ப்பை அழிக்கக்கூடியதென்றால், நான் பிறந்த ஜாதியே எனக்கு எதிரியாகிவிட்டது என்றால், என் வறுமை தீராததானால், சட்டம் சாதகமாக இருந்த நிலையில் ஆபீஸ் பழக்கம் எதிராக இருந்தால், பெற்றோர்களே பணத்தை மட்டும் கருதும் மனப்பான்மையுடையவரானால், நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளானால், இன்று வாங்கிய பெரிய கடன் எதிர்காலத்தில் பெரிய குழியைப் பறித்துவிட்டது என்றால், ஜாதகம் எச்சரிக்கிறது என்றால், எதிர்காலத்தில் எதிர்பார்க்க ஒன்றில்லை என்றால், முதலாளி துரோக மனப்பான்மையுடையவரானால், நாட்டின் நிலை மாறும் வகையும் வேகமும் நம்மை பூரணமாகப் பாதிக்கக்கூடியதானால், இன்று வாடிக்கையாளர்களை மோசம் செய்யும் பார்ட்னர் என்றைக்கும் என்னை மோசடி செய்வார் என்றால், நிம்மதி நிலையாக நம்மை விட்டுப் போய்விடும். அவர்களுக்கும் நிம்மதிக்கும் காத தூரம்; கூப்பிட்டால் விலகிப்போகும் என்பது உண்மை.
இவர்கள் அனைவரும் நிம்மதியைப் பெற முடியும். அதற்கான
வழியுண்டு. அவர்கள் செய்ய வேண்டியதை சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன். நாம் செய்த தவறு, நம்மிடம் உள்ள குறை, என்பவற்றை நிலைமையில் கண்டு ஆராய்ந்து, எவற்றை விலக்க முடியுமோ அவற்றைப் பூரணமாக விலக்க வேண்டும். இனி நான் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை என்று நாம் சொன்னால், நம்மையறிந்த மற்றவர்களும் அதை ஆமோதிக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டும். அதன்பின் அனுபவசாலிகளால் கிடைக்கக்கூடிய அறிவுரை என்று ஒன்று இருந்தால், அதையும் பூர்த்தி செய்துவிட வேண்டும். அறிவின் சிறப்பால் ஒரு புதிய விஷயத்தை அறிந்தால், அது முடியுமானால், அதையும் செயல்படுத்திவிட வேண்டும். அதாவது நம்மால் முடிந்ததை எல்லாம் முழுவதுமாகப் பூர்த்தி செய்துவிட வேண்டும்.
அதன் பிறகு நம் உணர்வைச் சோதனை செய்ய வேண்டும். அங்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும். மேற்சொன்னவற்றைச் செய்ததாலேயே உணர்வு ஓரளவு நம்பிக்கை பெறும். அறிவின் துணை கொண்டு, அல்லது அனுபவசாலியின் சொல்லைக்கொண்டு, அல்லது அன்னை மீதுள்ள பக்தியால் அல்லது ஏதாவது ஒரு விஷயத்தால் நம்பிக்கையை உணர்வில் பிரதிஷ்டை செய்துவிட வேண்டும். அப்படிச் செய்த சில உதாரணங்களை மேலே குறிப்பிட்டேன். எந்த வகையாலும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று பெரும்பாலோர் சொல்ல முடியாது. ஒரு சிலர் அப்படிப்பட்ட நிலையிலுமிருந்தால், அவர்கள் அன்னையை முழுவதும் நம்ப முன்வர வேண்டும். எந்த வகையாலோ நம்பிக்கை ஏற்பட்டபின், அன்னைக்கு “நிம்மதி வேண்டும், நிரந்தரமாக வேண்டும், பூரண நிம்மதி வேண்டும்” என்று இடைவிடாமல் 3 நாள் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தால், நிம்மதி பிறக்கும். பிறந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும். நிம்மதியைக் கெடுத்த பிரச்சினை விலகும்.
அப்படி மனதில் ஏற்பட்ட நம்பிக்கையை மேலும் வளர்த்து, உணர்விலும், உயிரின் ஆழத்திலும் நிலைபெறச் செய்தால், வாழ்நாள்
முழுவதும் நிம்மதி நின்று நிலைபெற்று, தன் ஆட்சிக்குள் நம் வாழ்வைக் கொண்டுவரும்.
மனித மனத்தின் ஆழத்தை அறிந்தவர் யார்? யார் மனதில் எந்த எண்ணம் குடிகொண்டுள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்? பைத்தியம் பிடித்து உளறும்பொழுதும், ஜன்னி வந்து பிதற்றும் பொழுதும், மனிதன் நிலைகுலைந்த அந்த நேரத்திலும் வெளியிடாத இரகஸ்யங்கள் உண்டு. அவற்றில் வேதனை தருபவையும் இருப்பது உண்டு. சந்தேகங்களாக ஏற்பட்டவை மனநிம்மதியை உள்ளிருந்து அரிப்பதுண்டு. எந்த (psychiyatrist) உளநூல் மருத்துவரிடமும் வெளியிடாத விஷயங்களில் கோளாறு ஏற்பட்டு, நிரந்தரமாக அது நிம்மதியை அழிப்பதுண்டு. இதுவரை சொல்லியவை எல்லாம் இப்படிப்பட்டவர்க்கு ஓரளவு நிம்மதி கொடுக்குமேயன்றி, பளிச்சென்று பகலவன் உதித்தாற்போல் பாரம் நீங்கி, மனம் நிம்மதியில் திளைக்காது. அவர்களும் ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டால், அதுபோன்ற பெரிய பலனையடையலாம். அவர்கள் செய்யக்கூடிய சிலவற்றைக் கீழே தருகிறேன்.
- 1. முதற்காரியமாக அறிவுக்கும், உணர்வுக்கும், நடைமுறைக்கும் பொருந்தாதவற்றை விட்டொழிக்க முன்வர வேண்டும். இதைச் சரிவரச் செய்தால், ஓரளவு நிம்மதி பிறக்கும்.
- 2. ஒவ்வொருவரும் தமக்கே ஏற்பட்ட முறையில் ஒரு தவறான கருத்தையோ, மனப்பான்மையையோ (attitude) பெற்றிருப்பது வழக்கம். அது போன்று நமக்குள்ள பழக்கம், நம் மனக் குறையை வலியுறுத்துகிறதா என்று சோதனை செய்து, அப்படி இருந்தால் அந்தத் தவறான கருத்தை இந்தக் குறையிலிருந்து பிரிக்க வேண்டும். இதைச் செய்தவுடன் பாதிக்கு மேல் பாரம் இறங்கியது தெரியும்.
- 3. வயதும், அனுபவமும் அதிகமானதால் பல விஷயங்களில் அறிவோடு நடந்துகொண்டாலும், இந்தக் குறையுள்ள
விஷயத்தில் 12 வயதுப் பிள்ளை போலவே நடந்துகொள்வது உண்டு. அப்படியிருந்தால் அதை அறிவால் அகற்ற முடியாது. ஆனால் அது அகற்றப்பட வேண்டியதுதான் என்ற கருத்தை ஆழமாக, அழுத்தமாக மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- 4. அறிவாலும், உணர்வாலும் ஏற்பட்ட இருள் திரைகளை ஓரளவு நீக்கியபின் பிரச்சினையின் மீது அன்னை ஒளி பட வாய்ப்பு உண்டு. அதனால் 3 நாள் இடைவிடாமல் தீவிரமாக, நம் அந்தரங்கக் கவலை கரைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், 4ஆம் நாள் முடிவில் புனர்ஜன்மம் பிறக்கும்.
என் தகப்பனார் கூலி வேலை செய்தவர். நான் I.A.S. ஆபீஸர் ஆகிவிட்டேன். யாரும் என்னை எதுவும் கேட்கவில்லை என்றாலும், இடைவிடாது மனதை இந்த பாரம் அழுத்துகிறது. அதனால் என் வாழ்க்கையே சோபை இழந்துவிட்டது. செல்வத்தில் பிறந்து, பின்னர் அது அழிந்து, தாயார் வீட்டு வேலை செய்து எங்களைக் காப்பாற்றினார். தாய்மாமன் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் இருந்தார். நானே காலேஜில் காப்பியடித்து, 3 வருஷம் பரீட்சை எழுதக்கூடாது என்று விலக்கியபின், இன்று பெரிய வக்கீலாக இருக்கின்றேன். மனச்சாட்சியை உறுத்தும் நிகழ்ச்சிகளும், மானம் பறிபோகும் செயல்களும் ஒருவருடைய வாழ்வில் அவர் தவறாலோ அல்லது மற்றவர்கள் தவறாலோ இருந்தால், இது போன்ற பாரம் மனத்தை அழுத்துவதுண்டு. பிறப்பு, வளர்ப்பு, வறுமை, சிறுமை, தீராத வியாதி ஆகியவற்றால் மனம் இதுபோல் புழுங்குவதுண்டு. இவற்றுள் ஒன்றை உதாரணமாக எடுத்து, மேற்சொன்ன முறைகளை எப்படிப் பயன் தரும் வகையில் பின்பற்றலாம் என்று முடிந்த அளவுக்கு விளக்குகின்றேன்.
ஒருவர் தற்சமயம் நல்ல நிலைமையிலிருந்தாலும், சிறு வயதில் பெற்றோர்களை இழந்து, தாய்மாமனுடைய வளர்ப்பில், அவருடைய கடுமையும், மாமியின் கொடுமையும், ஊராரின் பரிதாப உணர்ச்சி,
ஏளனமான சொற்களையும் அனுபவித்தவராயிருந்தால், அந்த ஆழ்ந்த உணர்வுகள் தற்பொழுது மனதைத் தினமும் புண்படுத்துவதானால், அவர் இம்முறையைக் கையாண்டு பலன் பெறும் வழியை விளக்குகின்றேன். இவருக்கு எது இல்லையோ அதையே நினைத்து உருகும் ஒரு பழக்கம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். பொதுவாகப் பள்ளியில் ஒரு பாடத்தில் முதல் மார்க்கும், மற்ற எல்லாப் பாடங்களிலும் நல்ல மார்க்கும், ஏதோ ஒரு பாடத்தில் குறைந்த மார்க்கும் வாங்கிய பொழுது, வகுப்பில் இரண்டாம் மாணவனாக கடந்த 5 வருஷ காலத்திலிருந்த 8ஆம் rank 10ஆம் rank விட்டு உயர்ந்த அன்றும், இன்று கிடைத்துள்ள அத்தனை உயர்வுகளையும் கருதாமல், ஒரு பாடத்தில் வாங்கிய குறைந்த மார்க்கையே எண்ணி, மனம் உருகி, உடையும் குணம் உடையவர் இவர். இந்தக் குணத்தை முழுவதும் விட்டுவிட்டு புதிய நல்ல குணத்தை ஏற்றுக்கொள்ளுதல் நலம். அது சிரமம். குறைந்தபட்சமாக இவருக்கு மனத்தை உறுத்தும் குறையைப் பொருத்தாவது, இல்லாததை நினைத்து உருகும் மனப்போக்கை அறவே நீக்க இவர் முன்வர வேண்டும். இது அவசியம். இது எல்லோராலும் முடியும். முயன்று இதைச் சாதிக்க முன்வர வேண்டும். தனக்குள்ள இன்றைய நிலையில் உயர்வை நினைத்துச் சந்தோஷப்படவும், அன்றைய தாழ்வை மனதால் புறக்கணிக்கவும் முடிவு செய்ய, அந்த முடிவைத் தன் மனத்தளவில் குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டும். மேலே சொல்லிய 2ஆம் விஷயத்தை இது பூர்த்தி செய்யும்.
பின்னர் அவர் தம்மையும், தம் வாழ்வையும், மனநிலையையும் கூர்ந்து சோதனை செய்தால், ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்தால், தம் குறையை மீண்டும் மீண்டும் நினைக்கும் பழக்கம் ஒரு பொழுதுபோக்காகவே பல வருஷங்களாக தம் மனதில் இருப்பது தெரியும். வேலை முடிந்து தனித்து உட்கார்ந்தால், உடனே இந்த எண்ணம் உதித்து, அதைப் பலவாறு சிந்திப்பது தெரியும். அது உண்மையானால், அதுபோல் செய்வதாலேயே இந்த எண்ணம்
வளர்ந்திருக்கிறது என்றுத் தெரியும். இனி தனித்திருக்கும் சமயத்தில் இந்தத் தாழ்வு நினைவுகள் வந்தால், அவற்றை அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். மனதைக் குடைந்தெடுக்கும் எண்ணத்திற்குப் பெரும்பாலும் வலிமை குறையும்.
மேலும், தன்னைக் கூர்ந்து பார்க்கும்பொழுது, தாய்மாமனுக்குக் காப்பி என்றால உயிர். அவர் மீதுள்ள வெறுப்பால் 15 ஆண்டுகளாகக் காரணம் புரியாமல் காப்பியை விலக்கியிருப்பது விளங்கும். தாய்மாமன் வீட்டில் உள்ள பெயர் உடையவர் எவரையும், தாம் தம் உத்தியோகத்தில் கடமையை நிறைவேற்ற, புது ஆள் நியமனம் செய்த இந்த 15 ஆண்டுகளாக நியமித்ததில்லை என்பது விளங்கும். அன்றைய வாழ்வின் அம்சங்கள், மனிதர்கள், செயல்கள், எண்ணங்கள், சந்தர்ப்பங்கள், அனைத்தின் மீதும் நம்மை அறியாமல் வெறுப்பு ஏற்பட்டு, இந்த பல ஆண்டுகளாக வீட்டிலும், ஆபீஸிலும், சொந்த வாழ்க்கையிலும் அவற்றையெல்லாம் கூடியவரை விலக்கியது தெரியும். இப்படி விலக்கிய செயலே நம்மை அந்தக் குறையுடன் இறுகப் பிணித்துள்ளது என்பதே உண்மை. இன்று அந்த உண்மையை உணர்ந்து, அவற்றையெல்லாம் மனதிலும் செயலிலும் மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அந்த மாற்றத்தால், மனத்தின் ஆழத்தில் இருந்த பூதம் வலுவிழந்து, உயிரிழந்து, பிணமாகி அங்கேயே கிடக்கிறது என்ற நிலை ஏற்படும்.
தொழிலில் எல்லா மற்ற விஷயங்களிலும் அறிவுடனும், பெருந்தன்மையுடனும் நடந்துகொண்டாலும், பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தும் செயல் ஒன்று ஏற்பட்டால் சிறுபிள்ளைத்தனமாக அதில் நடப்பது விளங்கும். அவற்றை நினைவுபடுத்தி மனத்தை மாற்றிக் கொண்டு, இனி இது போன்ற சிறுபிள்ளைத்தனத்தை விட்டுவிட வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.
இவையெல்லாம் நம் குறையின் வலுவைக் குறைக்கும். இதுவரை நம் அறிவும், உணர்வும், பழக்கமும் குறைக்குத் துணையாக
இருந்தன. அக்குறை மனத்தினுள் வளர உதவின. மேற்கூறிய மாற்றங்கள் அறிவின் உதவியையும், உயர்வின் பக்கபலத்தையும், பழக்கத்தின் திறனையும் ரத்து செய்வதால், குறைக்கு வலு குறைவு. அநேகமாக உயிர் இழந்துவிடும். இதுவரை இருந்த நம் பழக்கங்கள் இந்தக் குறையின் மீது போர்வையாகவும், திரையாகவும் இருந்ததால் நம் அன்னை வழிபாட்டால் உள்ளே வந்த ஒளி அதன் மீது பட முடியவில்லை. திரை விலகிய பின் ஒளி அதன் மீது படும்.
அன்னையின் ஒளி கர்மத்தையே கரைக்கக்கூடியது. இந்தக் குறை இந்தப் பிறவியில் ஏற்பட்டது. நாம் செய்த மாற்றங்களால் அது வலுவிழந்து நிற்கிறது. இந்நிலையில் 3 நாள் இடைவிடாத, தீவிர பிரார்த்தனையை மேற்கொண்டால், தீவிரம் அதிகமாகும்பொழுது ஒளி குறையைத் தீண்டும். தொடர்ந்து குறை மீது ஒளி விழுந்தால் அது கரைய ஆரம்பிக்கும். முழுவதும் இழந்த நேரத்தில் புனர்ஜென்மம் ஏற்பட்டுப் புதிய வேகம் உற்பத்தியாகி, நம்மை ஆட்கொண்டு, ஆட்டி வைத்த பூதத்திலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.