அடுத்த கட்டம் – 1

  • “நான் அன்னையை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஏராளமான நல்லவை நடக்கின்றன”.
  • “என் வாழ்வை அன்னை மாற்றியமைத்ததற்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை”.
  • “அன்னை என் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்துகிறார்”.
  • “அன்னை என்றால் நிதர்சனமான தெய்வம்”.
  • “அம்மா எதையும் க்ஷணத்தில் முடிக்கின்றார்”.
  • “நினைத்தாலே உடல் கூசுகிறது”.
  • “இனி அன்னையில்லாமல் நானில்லை”.
  • “இன்று நானும் ஒரு மனிதனாக உலவுகிறேன் என்றால், அது அன்னையால்தான்”.
  • “எதுவும் முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது”.
  • “மனதிற்குப் புதிய தெம்பும், சந்தோஷமும் வந்துவிட்டன”. 

உண்மையான பக்தி, பக்தியுள்ள நம்பிக்கை நிறைந்தவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டு பெற்ற அனுபவத்தை மேலே குறிப்பிட்டேன். “இதற்கு மேல் என்ன வேண்டும்? இது போதாதா?” என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள். விமரிசனத்திற்கு அன்னை பற்றிய புத்தகம் போயிற்று. ஆசிரியர், புத்தகத்தை விமரிசனத்திற்காகப் படித்தவர் பக்தராகிவிட்டார். ஆனால் அவரே அன்னையை நினைப்பது இல்லை. என் பிரச்சினைகள் உள்ள இடங்களில் அன்னை எனக்கு முன் சென்று, அவற்றைத் தீர்த்துவைத்து, “நானிருக்கிறேன்” என்று ஒவ்வொரு முறையும் எனக்குத் தம்மை நினைவுபடுத்துகிறார்கள். எந்தப் பிரச்சினையானாலும் இந்தப் புத்தகத்தைப் பிரித்தால், உடனே பதில் கிடைக்கிறது. “அன்னை என்னுடனேயே எப்பொழுதும் இருக்கின்றார்” என்றார் புத்தகத்தை விமரிசனத்திற்காகப் படித்த ஆசிரியர்.

“இதுவே போதும்” என்பவர்களுக்கு இது போதும். இதற்கு அடுத்த கட்டம் உண்டு. அங்குப் போக வேண்டும் என்பது அவசியம் இல்லை. போக வேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்குச் சொல்லக் கூடியது உண்டு. அவை மூன்று: 

  1. அன்னைக்குரிய சட்டங்களில் குறைந்தபட்சம் சில சட்டங்களையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  2. வாழ்க்கை என்பதென்ன? அதன் அடிப்படை நியதிகள் எவை? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
  3. பழைய வாழ்வின் அடிப்படைகளை விட்டுவிட முன்வர வேண்டும். 

அன்னையின் வாழ்வுக்கு அஸ்திவாரமானது சத்தியம். நம் வாழ்வுக்குரியது தோற்றம். தோற்றத்தைப் புறக்கணித்து, அதனுள் உள்ள ஜீவனைப் பாராட்டும் வகையில் நாம் நம் மன நிலையையும், செயலையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விவரிப்பது முதற் பகுதி. உண்மையில் அன்னையை ஏற்றுக்கொள்வது என்றால், உண்மையை வாழ்வில் ஏற்றுக்கொள்வதாகும். வாழ்வில் பொய்யின் வடிவங்களைப் புறக்கணித்து, மெய்யின் வடிவங்களை நெஞ்சில் நிறுத்தும் 27 உண்மைகளை இப்பகுதியில் எழுதியிருக்கின்றேன். பெரும்பாலானவற்றிற்கு விளக்கமும் அளித்திருக்கின்றேன்.

இரண்டாம் பகுதி அன்னையைப் பற்றியதன்று, வாழ்வைப் பற்றியது. வாழ்வை ஏற்றுக்கொள்ளும் யோகம் என்பதால் வாழ்வின் அஸ்திவாரங்களை அறிவது வாழ்வை அறிய உதவும். மனிதன் வாழ்வைப் பற்றி பல விஷயங்களை அறிவான். பலவற்றை அவன் தெரிந்துகொள்ள முயன்றதில்லை. சில குழப்பமானவையாகவும், பல தலைகீழாகவும் தென்படும். இன்றுவரை வாழ்வு, மனிதனை ஆண்டு வருகிறது. அதன் முன் அவன் துரும்பு. அவனால் வாழ்வை மீறிப் போக முடியாது. அந்தச் சட்டங்களை நான் சுமார் 100 வரை எழுதி இருக்கின்றேன். இவையெல்லாம் வாழ்வின் சட்டங்கள் என்றும், அவற்றை மனிதன் மீற முடியாதென்றும் அறிவதுடன், அடுத்த கட்டத்திற்கு வந்த பக்தரை அந்தச் சட்டங்கள் ஆள முடியாதென்றும் தெரிய வேண்டும். இந்த 100 சட்டங்களையும் மீறிச் செயல்பட அடுத்த கட்டத்திற்கு வந்த பக்தரால் முடியும்.

மூன்றாம் பகுதி, மனிதனுடைய இன்றைய பொதுவான மனநிலை. அடுத்த கட்டத்திற்கு வர முயலும் பக்தர் முதற்காரியமாக இந்தப் பொதுவான மனநிலையினின்று அகன்று அன்னையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் சுமார் 100 நியதிகளையும் எழுதியிருக்கிறேன். இவற்றை விடுவது அவசியம்.

முதற்பகுதியை ஏற்பதும், மூன்றாம் பகுதியை விட்டுவிடுவதும், இரண்டாம் பகுதியைத் தெளிவுற அறிவதும் அவசியம்.

அடுத்த கட்டம் என்றால் என்ன?

அரசியல் சுதந்திரம் வந்தது நாட்டிற்கு முதற்கட்டம். பொருளாதாரச் சுதந்திரம் இரண்டாம் நிலை. கல்வி பெருகி, சொந்த டெக்னாலஜி உற்பத்தியாகி, தொழிலின் டெக்னாலஜி அஸ்திவாரம் ஏற்படுவது மூன்றாம் நிலை. நாட்டில் அரசியல் வலுவான அஸ்திவாரத்தில் அமைவது 4ஆம் நிலை. ஊழலற்ற நிர்வாகம் ஐந்தாம் கட்டம். உயர்வு பெற்ற நீதிமன்றம் ஆறாம் நிலை. நாட்டின் கல்வி நிலை உயர்ந்து, உலக இலக்கியத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் சேவை செய்வது அடுத்த நிலை. நாட்டின் ஆன்மீகப் பொக்கிஷத்தை அனைவரும் போற்றி, நம் பண்பை முதன்மையாக்குவது அடுத்தது. உலகம் இந்தியப் பண்பையும், ஆன்மீகத்தையும் இலட்சியமாக்கி, இந்தியாவை ஜகத்குருவாக ஏற்றுக்கொள்வது ஒன்பதாம் கட்டம். அவை உயர்ந்து சிறப்படைவது பத்தாவது கட்டம்.

நாட்டிற்குப் பத்துக் கட்டங்களில் உயர்வுள்ளதைப் போல் பக்தனுக்கும் பத்துக் கட்டங்கள் உண்டு. பத்தாவது கட்டம் வாழ்க்கையின் அடிப்படை யோகமாக மாறி, யோக வாழ்வு மலர்வது ஆகும். பக்தனுள்ள நிலை முதல் நிலையானால், பழைய மனப்பான்மையை விட்டு, அன்னை சட்டங்களை ஏற்றுக்கொண்டு, வாழ்வை ஆழ்ந்து புரிந்துகொள்ள முயல்வது இரண்டாம் கட்டம். அதை விவரிப்பதே இப்புத்தகத்தின் மூன்று பகுதிகள்.

இந்த மூன்று பகுதிகளின் சாரத்தை சுருக்கமாக 5 அம்சங்களாகக் கடைசியில் எழுதியிருக்கின்றேன்.

முதற்பகுதி: 

  1. அன்னையை நாம் ஏற்றுக்கொண்டபின் எந்த அளவு நாம் மாறியிருக்கின்றோம் என்று கணிக்க வேண்டும்.

    அன்னையைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு, “நாம் செய்யும் பிரார்த்தனை பலித்தால் போதும்” என்பவர்கள் மாற வேண்டிய அவசியமில்லை. ஒரு காரியம் கூடிவர வேண்டும் என்றபொழுது நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால், தவறாது அது பலிக்கும்.

    அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்து, அன்னையை மேலும் நெருங்கி வர வேண்டும். நாம் வாழ்வின் அடிப்படைகளை அன்னைக்கு உகந்தது போல் அமைக்க வேண்டும் என்பவர்களே மாற வேண்டியது அவசியம்.

    வாழ்க்கை நிலையுயர வேண்டுமானால், மனிதன் தன் அடிப்படைப் பழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். கிராமத்திலிருந்த மிராசுதார் நகரத்தில் வந்து தொழில் அதிபரானாலும், சிற்றூரிலிருந்த அதிகாரி மாநிலத் தலைமைச் செயலகத்திற்குப் பதவி உயர்வால் மாற்றப்பட்டாலும், நம்மூர் கல்லூரியில் பயின்றவன் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயில ஆரம்பித்தாலும், செல்வம் உயர்ந்த காலத்தும், செல்வாக்கு உயர்ந்த காலத்தும், மனிதன் தன் அடிப்படைகளை மாற்றிக்கொள்ளும் அளவுக்கே புதிய நிலையின் பயனை அடைகிறான்.

    இன்றைய உலக வாழ்வை வெற்றிகரமாக நடத்த முக்கியமான நேரங்களில் தேவையான அளவு பொய்யைக் கடைப்பிடிக்க வேண்டும். மனித வாழ்வை யோக வாழ்வாக மாற்ற, அன்னையின் அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்வது அவசியம். நம் மனித வாழ்வு சூழ்நிலைக்குட்பட்டது. யோக வாழ்வுக்குச் சூழ்நிலை உட்பட்டது. அதாவது அதில் பிரச்சினை இருக்காது. நமக்குத் தேவைப்பட்ட வாய்ப்பை உற்பத்தி செய்து, நாமே அதைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நிலை இன்று உலகில் இல்லை. அது வேண்டுமானால், நாம் அடிப்படைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இதை அறிந்து, இதை நாடுபவர்கள் அன்னையிடம் வந்தபின், தாம் எந்த அளவுக்கு மாறியிருக்கின்றோம் என்று கணிக்க வேண்டும். அது அவசியம்.

    நம்மிடம் இருந்த படபடப்புக் குறைந்துள்ளதா? கோபத்தை அடக்க முயன்றதில் எந்த அளவு பலன் கண்டுள்ளோம்? நம் குறைகளைப் பட்டியலாக எழுதி, சோதனை செய்ததில் எந்த அளவு குறைகளை விலக்கியுள்ளோம்? என்று கணித்தால், நாம் உள்ளத்தில் பெற்றுள்ள முன்னேற்றம் புற வாழ்விலுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

    கொஞ்ச நாளைக்கு ஒரு முறை இதை மீண்டும் மீண்டும் செய்து, என்ன முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று கண்டறிய வேண்டும்.
     
  2. முடிவான இலட்சியம் முக்கியமானாலும், நடைமுறையில் அடுத்த கட்டம் மட்டுமே பலிக்கும்.

    அன்னையை அறிந்தவுடன் யோகம் பயில ஆவல் ஏற்பட்டு, ஆசிரமத்தில் சாதகர்களாகச் சேர விரும்பியவர்களை அன்னை உடனே ஏற்றுக்கொள்வதில்லை. சிறுபான்மையோரையே அன்னை ஒரு மூன்று மாத சோதனைக்குப் பின் சேர்த்துக்கொண்டதுண்டு.

    இன்று அன்னையை அறிந்தவுடன், “தியானத்தை மேற்கொள்ள வேண்டும்; அன்னையின் பெரிய இலட்சியங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்ற அவா தீவிரமாக எழுவதுண்டு. அன்னையின் கோட்பாடுகளில் தலைசிறந்தவற்றைப் பொறுக்கி எடுத்து, அதை உடனே பூர்த்தி செய்ய முயல்பவர் பலர். இது ஆர்வத்திற்கு அறிகுறி; நல்லது. எவரால் அதைச் செய்ய முடியுமோ, அவருக்கு அது சிறப்பு.

    இலட்சியம் என்பது ஒன்று, நடைமுறை என்பது வேறு. பொதுவான நடைமுறை இலட்சியத்திற்கு எதிராக அமையும். தம் நிலையை அறியாமல், யோகத்தைப் புரிந்துகொள்ளாமல், யோகத்தைத் தீவிரமாக ஏற்றுக்கொண்டதாக நினைத்துக்கொண்டு, 30ஆம் வயதில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டவர், 50 வயதில் “தமக்கும் யோகத்திற்கும் சம்பந்தமில்லை; தம்மால் அது சம்பந்தமான சேவையைக்கூட சரிவரச் செய்ய முடியவில்லை” என்று கண்டு கொண்டு, அன்னைக்கு எதிரான கோட்பாடுகளை மேற்கொண்டு, திருமணமும் செய்துகொள்ள விரும்பி, அன்னைக்கும் சாமானியன் வாழ்வுக்கும் பொருந்தாத திருமணத்தைச் செய்துகொண்டு, வெகு சீக்கிரம் அதுவும் தவறு என்று கண்டார். இப்படிப்பட்டவர் நூற்றுக்கணக்கானவர்.

    எனவே எது நடைமுறை, எது இலட்சியமான நடைமுறை என்று காண்பது நல்லது. நாம் கொண்ட நோக்கம் பூர்த்தியாக 20 கட்டங்கள் இருந்தால், நடைமுறையில் அடுத்த கட்டத்தை மட்டுமே நாம் விழைய முடியும் என்பது உண்மை. 20ஆம் கட்டத்தையோ, 19வது கட்டத்தையோ நேரடியாக அடைய முயல்வது இயற்கைக்குப் பொருந்தாது; நடைமுறையில் நடக்காது. 8ஆம் வகுப்பு மாணவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், 9ஆம் வகுப்பை அடைய முயல்வது மட்டுமே நடக்கும். ஒரு கட்டத்தை மட்டுமே ஒரு சமயத்தில் தாண்ட முடியும். திறமை அதிகமாக இருந்தால் சீக்கிரமாகத் தாண்டலாம். ஆனால் எந்தக் கட்டத்தையும் (you cannot skip) விலக்க முடியாது. அதுவே பூரண யோகத்தின் அடிப்படையாகும்.

    அடுத்த கட்டமாக நமக்கு அமைந்தது எது என்று அறியும் முன், நாம் உள்ள நிலை எது என்று அறிய வேண்டும். யோகத்தின் முடிவு சத்தியஜீவனாவது என்றால், அதற்கு முன் உள்ள நிலைகள் இரண்டு. அதற்கு முன்னும் உள்ள நிலைகளை வரிசையாகக் கூறுவது என்றால், மேலிருந்து கீழே சொல்லப்போனால், பிராணமயப் புருஷனைக் காண்பது, ஆசையை அழிப்பது, மனத்தில் மௌனத்தை மேற்கொள்வது, மனத்தின் ஆழத்தை அடைவது, சமர்ப்பணத்தை மேற்கொள்வது, இடையறாத அன்னை தரிசனம் பெறுவது, இடையறாத நினைவு சித்திப்பது ஆகும்.

    இடையறாத நினைவு இரவும், பகலும் பிரியாது, வணங்க தனக்குச் சித்திக்க வேண்டும் என்று நாயனார் பாடினார். அதுவே ஆரம்பமான முதல் நிலை. பக்தன் இன்று எப்படி அதை நாட முடியும்?

    நாம் உள்ள நிலையில் கோபத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், ஆசை அளவுக்கு மீறியிருந்தால், வேண்டாத குணங்களிருந்தால், செயலில் திறமையில்லாவிட்டால், தேவைப்பட்டால் பொய் சொல்வது உண்டு என்றால், இவற்றை விட்டு அகல்வதே நமக்குரிய முதல் நிலை.

    மேற்சொன்னவை எதுவுமே இல்லை. ஆனால் இடையறாத நினைவு தினமும் 1 மணி நேரம்தான் இருக்கிறது என்றால், அந்நினைவை பல மணி நேரமாக மாற்றிவது நமக்குரிய அடுத்த கட்டம்.

    நம் வாழ்வு பிரச்சினைகளால் நிறைந்திருக்கிறது. அவற்றைப் போக்க பல வழிகளையும் மனம் கருதுகிறது என்றால், அவற்றை அன்னை மூலமாக மட்டுமே அகற்ற முயல்வது அடுத்த கட்டமாகும்.

    பிரச்சினைகளில்லை என்றால், வாய்ப்பை உற்பத்தி செய்வது அடுத்த கட்டம்.

    சாதாரண மனிதர்களுக்கு அடுத்த கட்டமாக அடையக்கூடிய சிலவற்றைக் குறிக்கின்றேன்.

    இந்த அடுத்த கட்டம் என்பது கடமைகளைப் பூர்த்தி செய்வனவாகவும், வாழ்வு நிலையை உயர்த்துவனவாகவும் அமையும்.
    1. பரீட்சையில் தவறிய மாணவனுக்குப் பாஸ் செய்வது அடுத்த கட்டம்.
    1. தவறாமல் பாஸ் செய்யும் மாணவன் அதிக மார்க் வாங்க முயல வேண்டும்.
    1. சச்சரவுள்ள குடும்பம் சுமுகத்தை நாட வேண்டும்.
    1. சுமுகமான குடும்பம் ஒற்றுமையைத் தேட வேண்டும்.
    1. ஒற்றுமையான குடும்பம் உயர்வை விரும்ப வேண்டும்.
    1. பல வழிகளிலும் உயர்வடையும் குடும்பம், நல்ல முறையில் மட்டும் உயரப் பாடுபட வேண்டும்.
    1. சிறு தொழில் உடையவர், தொழிலை விருத்தி செய்தல் நல்லது.
    1. உத்தியோகம் செய்பவர், அங்கு முன்னேறத் தகுதியைப் பெற வேண்டும்.
    1. உயர்ந்த உத்தியோகஸ்தர் குடும்பத்தைக் கவனிக்காதவராக இருந்தால், குடும்பத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
    1. நான்கு பிள்ளைகள் உள்ள வீட்டில் அனைவருக்கும் தடையின்றி உத்தியோகம் கிடைக்கும் நிலையிருந்தால், ஒருவருக்காவது உயர்ந்த உத்தியோகத்தைப் பெற முயல வேண்டும்.
    1. வீட்டில் ஒருவர் மட்டும் அன்னை அன்பரானால், அனைவரும் அன்பராவது அடுத்த நிலை.
    1. கஷ்டம் வந்தபொழுது அன்னையை நினைக்கும் பழக்கம் இருந்தால், நல்லது வரும்பொழுதும் அன்னையை நினைக்கப் பழக வேண்டும்.

தன்னிலை என்பது வாழ்வு நிலை, மனநிலை, இலட்சியக் கொள்கை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. இதிலிருந்து அடுத்த நிலை என்பது சுலபமாகத் தெரியும். அதை நாடுதல் நடைமுறைக்குப் பொருந்தும். அதை அன்னை வழியில் மட்டும் பெற முனைவது இலட்சிய நடைமுறையாகும். இலட்சிய நடைமுறையை ஏற்றுப் பூர்த்தி செய்வது, வாழ்வை யோகமாக மாற்றுவதாகும். இதற்கு மேல் முனைந்தாலும் செய்ய முடியாது. எவ்வளவு உயரத்தில் ஆரம்பித்தாலும் சில ஆண்டுகட்குப் பின் பூர்த்தியாவதைப் பார்த்தால், இந்த அளவிலேயேதான் பூர்த்தியாகும். எனவே அதையே முன்கூட்டி அறிந்து செய்வது பொருத்தம்.

  • பொய்யின் வித்தான சத்தியத்தை அறிய வேண்டும். நம் வாழ்வின் வழிகள் பொய் நிறைந்தவை என்று கண்டு, அவற்றுள் நிறைந்துள்ள பொய்ம்மையைக் காண வேண்டும்.

    B.A.
    படித்தவன் தன் படிப்பை M.A. என்று சொன்னால், அது இல்லாதது, பொய்யாகும். இருப்பது மெய்; இல்லாதது பொய்.

    இது நேரடியான பொய்யானால், வேறு பல வகைகளான பொய்களும் உண்டு. உயர்ந்த உடையும், தாழ்ந்த பழக்கமும் உண்டானவனுக்கு நாம் உடைக்குத் தகுந்த மரியாதை கொடுப்பது தோற்றத்தை ஏற்றுக்கொள்வதாகும். தோற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், உடையை நம்பி அவனிடம் பழகினால், மோசம் போகிறோம். தோற்றத்தை நம்புவது பொய்யாகிறது. வருமானம் இல்லாத வீட்டில், மாமனார் உதவி சௌகரியமாக இருக்கிறது. இது தற்காலிகமான சௌகரியம்; இந்த நேரம் சௌகரியமானது; நீண்ட நாளில் பொய்த்துவிடும். சொந்த உழைப்பு மெய்; மாமனார் உதவி பொய் எனப் பிற்காலத்தில் விளங்கும். எனவே நெடுநாள் நீடிப்பது மெய் என்றும், கைக்கு மெய்யாயிருப்பது மெய்யன்று என்றும் ஆகிறது.

    பயங்கரவாதிகள் வன்முறையால் தங்கள் காரியத்தைச் சாதிக்கின்றார்கள். நாட்டிற்குப் பிற்காலத்தில் இது நல்லதன்று. எனவே பயங்கரவாதம் பொய்.

    நம் வாழ்விலுள்ள பழக்கங்களை எடுத்துச் சோதனை செய்தால் நாம் எந்த அளவு பொய்யை வாழ்வில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் எனத் தெரியும். நூறில் பத்து பாகமும் மெய் தேறுவது அரிது. அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள முற்படுபவர்கள் தங்களிடம் உள்ள பொய் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்வது அவசியம்.
     
  • இன்றைய வாழ்வில் நம் அளவில் சர்வ ஆரம்பப் பரித்தியாகியாக வேண்டும்.

    நம் பொருளை மற்றொருவருக்குக் கொடுப்பது தியாகம். நம் உரிமையை விட்டுக் கொடுப்பது தியாகம். தங்கள் தொழிலை விட்டுவிட்டு மகாத்மா காந்தியின் பேச்சை ஏற்று நாட்டுக்குச் சேவை செய்ய முன்வந்த தியாகிகளை நாம் அறிவோம்.

    யோகம் செய்பவர்கள் உடமையையும், உரிமையையும் தியாகம் செய்வதுடன், தங்கள் உயிரையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள். ஆவியும், உடமையும் உன்னுடையதே என்பதை உடல், பொருள், ஆவி என்ற சொல்லால் குறிக்கின்றார்கள். உயிரை இறைவனுக்குத் தியாகம் செய்வதென்றால் இறந்துவிடுவது என்று பொருளன்று. மனித வாழ்வும், இறைவன் திருவுள்ளமும் எதிரெதிராகச் செயல்படுகின்றன. நம் உயிர் இறைவனுக்குப் பொருந்தாததை விரும்புகிறது. நமக்குப் பிரியமானதை விடுத்து, இறைவனுக்குப் பிரியமானதை ஏற்றுக்கொண்டால், உயிர் இறைவனுக்கு உரியதாகிறது. ஒரு மணி நேரத்தில் நூறு முறை செயல்படுகிறோம். ஓர் எண்ணம் தோன்றுகிறது. ஓர் உணர்வு உந்துகிறது. பல காரியங்களைச் செய்கிறோம். இவை எல்லாம் இறைவன் செயல்கள் அல்ல. நம்முள் இருந்து நம் அபிலாஷைகள் உந்துவதால் ஏற்படுபவையாகும். எண்ணம் தோன்றினால் அதைச் செயல்படுத்துகிறோம். உணர்ச்சி ஏற்பட்டால் அதை வெளிப்படுத்துகிறோம். அவற்றின் அடிப்படையில் செயல்களை ஆரம்பிக்கின்றோம். ஆரம்பம் தொடர்கிறது. உயிருடைய உந்துதல், அபிலாஷைகளின் வெளிப்பாடு, அவற்றின் அடிப்படையில் நாம் ஆரம்பிக்கும் செயல்களே நம் வாழ்வெனப்படும். நம் வாழ்வு நாம் ஆரம்பித்த செயல்களால் உருவானது. இந்த ஆரம்பத்தைத் தியாகம் செய்ய முன்வந்து சர்வ ஆரம்பத்தையும் தியாகம் செய்தவன் சர்வ ஆரம்பப் பரித்தியாகியாகும்.

    நாம் ஆரம்பிப்பதை நிறுத்திய அடுத்த நிமிஷம் இறைவனின் எண்ணம் நம் மனதில் தோன்றிச் செயலாக மாறுகிறது. வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களை “எப்படி ஆரம்பித்தீர்கள்?”எனக் கேட்டால், பலர் “ஏதோ தோன்றியது, ஆரம்பித்தேன்; பலித்தது”என்பார்கள். தானே நம்மை நாடி வந்த செயல்கள், தற்செயலாகத் தோன்றிய எண்ணங்கள் பெரிய சாதனையை முடிப்பதைக் காணலாம். அவை இறைவனால் ஆரம்பிக்கப்பட்டவை. நாம் செயலற்று இருக்கும் பொழுது இறைவன் செயல்படுவதால், நடப்பவை அவை. நம்மால் செயல்பட முடியும்பொழுது நம் செயலைத் தியாகம் செய்து, இறைவன் செயலுக்காகக் காத்திருந்தால் நாம் அருளைப் பெறுகிறோம்.

    முக்கியமான காரியங்களில் இதைச் சோதனை செய்ய மனம் வாராது; தைரியமிருக்காது. இக்காரியங்களில், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமிடங்களில் இவற்றைப் பயின்றால், அவை அபரிமிதமாகப் பூர்த்தியாவதைக் காணலாம்.

    பிறகு முக்கியமான விஷயங்களில் பயில முயலலாம். பேப்பர் படிப்பது, ஆபீஸுக்குப் போவது, T.V. பார்ப்பது போன்ற இவ்விஷயங்களில் உரிமையைத் தியாகம் செய்ய முன்வந்து அது பலித்தால், அங்கு அன்னையைக் காணலாம். அதே போன்ற காரியங்கள் அனைத்திலும் நம் உரிமையைப் பூரணமாக விட்டுக் கொடுக்க நாம் எடுக்கும் முயற்சி, சர்வ ஆரம்பப் பரித்தியாகியின் பக்குவத்தை நம் அளவில் நமக்கு அளிக்கும். இது யோகத்திற்குரிய பக்குவம். இது இருந்தால் அங்கு அன்னை நிரந்தரமாக இருப்பார்கள்.
     
  • மனிதன் குடும்பத்துடன் இணைந்து பண்பு பெறுகிறான். அன்னையை நெருங்க வேண்டுமானால், குடும்பப் பற்று, பாசம், உறவு, உணர்வு விலக வேண்டும்.
    திருமணமாகாமல், குடும்பம் இல்லாமல் தனியாகச் சிலர் வாழ்வதுண்டு. சுமார் 40 அல்லது 50 வயதில் அவர்களைப் பார்ப்பவர்கள், “பிரம்மச்சாரி, அப்படித்தான் இருப்பார்” என்று சொல்லும் அளவுக்கு அவர் பழக்கங்களிருக்கும். பெண்மணியானாலும், அவளுக்குத் திருமணமாகவில்லை, குடும்பமில்லை, குழந்தைகளில்லை, அதனால் மனதில் ஒட்டுறவு இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை சுவையற்றதாகவும், பண்பற்றதாகவும் இருக்கும். அதுவே ஓர் இலட்சியத்திற்காக குடும்பமில்லாமலிருந்தால், குடும்பம் இல்லாத குறையை இலட்சியம் பூர்த்தி செய்வதாக அவர்கள் பழக்கம் இருக்கும். மேலும், அவர்களுக்குத் தாராள மனப்பான்மை, விட்டுக் கொடுக்கும் பழக்கம், பிரியமாகப் பழகுவது போன்ற நல்ல குணங்கள் அதிகமாக இருப்பதுண்டு. அதைப் பார்ப்பவர்கள், “குடும்பத்தில் செலுத்த வேண்டிய பாசத்தை நம் மீது செலுத்துகிறார்” என்பார்கள்.

    குடும்பம் மனிதனைப் பண்புள்ளவனாகச் செய்கிறது. அதனால் குடும்பப் பாரத்தை ஏற்பவனை உலகம் பொதுவாக சிறப்பான மனிதனாகக் கருதுகிறது. அன்னையின் யோகம் வாழ்வை ஏற்றுக் கொள்ளும் யோகம். அன்னையை ஏற்றுக்கொண்ட பின் வாழ்வைப் புறக்கணிப்பது என்பது கிடையாது. அன்னை பக்தர்கள், அன்னையை மேலும் நெருங்கி வர வேண்டுமானால், குடும்பத்தில் அவர்களுக்கு உரிய பங்கை நிறைவேற்றுவது எப்படி?

    அன்னை பக்தர்களுடைய குடும்ப வாழ்வுக்கும் அடிப்படை யோகமே. அன்னையின் யோகத்தை மேற்கொண்ட சாதகர்களின் யோகத்திற்கும் அடிப்படை, வாழ்வே.

    இவை இரண்டும் முரண்பாடாகத் தோன்றும் கருத்துகள். நம் எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் உரியது முதற்பகுதியே. பக்தருடைய குடும்ப வாழ்க்கைக்குரியது யோகம் என்றால், அந்த வாழ்வு எப்படி அமையும்?

    பாசத்தால் செய்வதை அன்பால் செய்தால், கடமையின் தரம் உயர்கிறது. “இவர் என் தாயார்; அவர் மீதுள்ள பாசத்தால் நான் என் கடமைகளை அவருக்கு நிறைவேற்றுகிறேன்” என்பது நல்ல மனிதனுடைய நல்ல குணம். பாசமும், பற்றும் மனித நிலை. அன்பு அவற்றைக் கடந்து நிற்கும் உயர்ந்த தெய்வீக நிலை. மனிதனுக்குப் பாசமுண்டு. அன்பை உள்ளிருந்து எழுப்புவது ஆன்மா. மனத்திற்கும், உடலுக்கும், இதயத்திற்கும் அன்பு செலுத்தும் திறனில்லை என்கிறார் அன்னை. அவற்றால் பற்றோடு செயல்பட முடியும், பாசமாக இருக்க முடியும். ஆன்ம விளக்கம் பெற்றவருடைய அன்பு அவர் பற்றுடனும், பாசத்துடனும் கலந்து வருகிறது. அன்புடைய அனைவரும் அந்த அளவில் ஆன்ம விளக்கம் பெற்றவர்கள். தாய் மீது அன்புள்ளவருக்கு எவர் மீதும் அன்பிருப்பது இயற்கை. தாய் மீதுள்ள பாசம், மற்றவர்கள் மீது பாசமாக வரும். அது ஒரு சிறு வட்டத்திற்குள்ளிருக்கும். அன்பு அந்த எல்லைக்குட்படாது. எனவே பாசத்தையும், பற்றையும் உடைய கிருஹஸ்தன் அன்னை அன்பனாக மாறும்பொழுது தன் கடமைகளை அன்பால் நிறைவேற்ற முயன்றால், தன் கடமைகளை உயர்ந்த அளவில் பூர்த்தி செய்தவனாவான். அத்துடன் பாசத்தின் பிணைப்பு விலங்காக இருப்பதைப் போல், அன்பின் ஆர்வம் விலங்காக இருக்காது.

    பாசம் உள்ளவர்களைப் பிரித்தால் வருத்தம் ஏற்படும். மீண்டும் பார்க்கும் வரை மனம் துடிக்கும். அன்புள்ளவரைப் பிரிந்தால், மனத்தின் தொடர்பு துடிப்பில்லாமல், இனிமையுடன் தொடரும். பிரிவால் வருத்தம் ஏற்படாது. மீண்டும் சேர்வதால் பிரியம் அதிகம் ஆகும்; கடமை குறையாது.

    அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள பாசத்தை அன்பாக மாற்ற வேண்டும். கடமைகளை அதிகமாக, இனிமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பாசத்தால் பிணைக்கப்படுவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். பாசத்தை அன்பாக மாற்றினால் கணவன் உயர்ந்த கணவனாகவும், மனைவி சிறந்த மனைவியாகவும், பெற்றோர் இலட்சியமான பெற்றோராகவும், குழந்தைகள் மேலும் சிறப்புக்குரியவர்களாகவும் ஆவார்கள். மனித நிலையின் விலங்கு உடைந்து, தெய்வ நிலையில் தொடர்பு ஒளிமயமாக ஏற்படும்.
     
  • திறமையால் உனக்குரியது எது, சுபாவத்தால் உன் தகுதி எது, ஆன்மீகத்தால் நீ அடையக்கூடியது என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

    ஒரு காரியம் பூர்த்தியாக, பூர்த்தியான பலனை நாம் முழுவதும் அனுபவிக்க, பலர் ஒத்துழைக்க வேண்டும்; பல சந்தர்ப்பங்கள் கூடிவர வேண்டும் என்பதைப் பெரிய காரியங்களில் மட்டுமின்றி, மிகச் சிறிய காரியங்களிலும் நாம் காணலாம். இது ஒரு பரந்த விஷயம். அவற்றுள் திறமை, சுபாவம், இராசி மூன்றும் இங்கு நம் கவனத்திற்கு உரியது.

    பொதுவாகத் திறமையில்லாமல் ஒரு காரியம் பூர்த்தியாவதில்லை. சில சமயங்களில் திறமையிருந்தும் காரியம் பூர்த்தியாவதில்லை. நமக்குத் திறமை குறைவாயிருந்த காலத்தில், குடும்பத்தின் உதவியால் காரியம் பூர்த்தியாகிறது. நண்பர்களுடைய ஆதரவால் வேறு காரியங்கள் பூர்த்தியாகின்றன. நம் உத்தியோகத்திற்காகச் சில பூர்த்தியடைகின்றன. நம்முடைய திறமையால் மட்டுமே பூர்த்தி ஆனவையும் உண்டு. இவற்றையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. இன்று நம் பழைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளை நினைவு படுத்தினால், எவை, யார் உதவியால், எந்தக் காரணத்தால், எந்தச் சந்தர்ப்பத்தால் பூர்த்தியாயின எனத் தெரியும். பொதுவாக வாழ்வில் படிப்பு, திருமணம், உத்தியோகம், பிரமோஷன், வீடு ஆகியவை முக்கியமென்றாலும், இது தவிர சீக்கிரத்தில் எலக்டிரிக் கனெக்ஷன் தேவை, ஆஸ்பத்திரியில் டாக்டர் கவனம் தேவை, லைப்ரரியில் நமக்கு வேண்டிய புத்தகம் வெளியில் போயிருப்பதை நாம் பெற வேண்டும், முக்கியமான வேலைக்குத் தடையில்லாமல் ரயிலில் பூனாவுக்கு டிக்கட் தேவை என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுண்டு. நம் வாழ்வில் அது போல் கடந்த காலத்தில் 100 நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்வோம். தன்னை அபாரத் திறமைசாலி என்று கருதுபவர் ஒருவர், அது போன்ற 100 நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்தால், சுமார் 25 அல்லது 30 நிகழ்ச்சிகளையே தம் திறமையால் பூர்த்தி செய்ததையும், மற்றவற்றை மற்றவற்றால் சாதித்ததையும் அறிவார்.

    தன் நிலையை அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு. யோகத்தை self awareness தன்னையறிதல், அதாவது ஆன்மா தன்னை அறிதல் என்று சொல்வதுண்டு. ஆன்மா தன்னிலை அறிவதற்கு முன்பு, மனம் தன்னிலையை அறிய வேண்டும். அது முதற்படி. முதற்படி, அடுத்த கட்டத்தை எட்ட உதவும்.

    30
    காரியங்கள் திறமையால் முடிந்தன என்று கண்டபொழுது, அவை முடிவு பெற நம் சுபாவமும், இராசியும் ஒத்துழைத்தன எனப் புரியும். தம்மை அபாரத் திறமைசாலி என நினைப்பவர் 30க்கு மேற்பட்டவற்றைத் தம்மால் சாதிக்க முடியவில்லை என்று காண்பது அவரைப் பொருத்தவரை ஆன்ம விளக்கமாகும். பிறருக்குத் திறமை இல்லை என்று பேசும் குணம் உடையவர் இச்சோதனையில் தாம் 10 காரியங்களுக்கு மேல் முடித்ததில்லை என்பதை அறிவார். தம் திறமைக்கு நிகரில்லை என்று வாய் ஓயாமல் பேசுபவர் இதே ஆராய்ச்சியால் தம் வாழ்நாளில் ஒரே ஒரு காரியத்தைக்கூட தம் திறமையால் பூர்த்தி செய்ததில்லை எனக் காண்பார். தாம் கண்டதை மனம் ஏற்றுக்கொண்டால் வாழ்வில் அபார முன்னேற்றம் ஏற்படும்; முதன்முதலாக ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்யலாம்! அவரைப் பொருத்தவரை அது அபார முன்னேற்றம்.

    30
    காரியங்கள் முடித்தவர் மேலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தால், தம்மால் முடிக்க முடியாத காரியங்களைப் பிறர் உதவியால் முடித்ததைக் காண்பார். அத்துடன் தம்மால் முடிக்க முடியவில்லை என்றவற்றில், தம் சுபாவம் குறிக்கிட்டுக் கெடுத்ததை அறிவார். “திறமைக்குக் குறைவில்லை; அவசரப்பட்டுவிட்டேன்” என்று தெரியும்; “ஆசை வந்து கெடுத்துவிட்டது” என்று விளங்கும். ஆசை, அவசரம், சுயநலம், பிடிவாதம் போன்ற நமக்கே உரிய சுபாவங்கள் வந்து காரியத்தைக் கெடுத்ததை அறிவோம். அப்படிக் கெட்டவை 60 வரை இருக்கும்.

    திறமையுள்ள இடத்தில், “காரியம் கெட்டுப் போகக்கூடாது”என்று முனைந்து சுபாவத்தைக் கட்டிக்காத்தாலும், வேறு காரணங்களால், அதாவது நம் திறமை குறைவற இருந்தும், நம் சுபாவம் குறுக்கிடாமலிருந்தும், காரியம் கெட்டுப் போவதுண்டு. அது போல் மீதி பத்துக் காரியங்கள் கெட்டிருக்கும். அதை இராசி என்கிறோம். ஆன்மீகப் பாஷையில் அதை “ஆன்மாவுக்குச் சம்மதம் இல்லை” என்பார்கள். Spiritual sanction இல்லை என்பார்கள்.