Skip to content
- உறுதி (will) அறிவை ஏற்றுக்கொண்டால், அபிப்பிராயம் ஏற்படுகிறது. உணர்வு, மனத்தின் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டால், நோக்கம் (attitude) ஏற்படுகிறது. உடல், நோக்கத்தை ஏற்றுக்கொண்டால் சக்தி (power) பிறக்கின்றது.
ஆன்மாவின் அனுமதியுடன் ஜீவன், உடலின் (power) சக்தியை ஆமோதித்தால், உணர்வின் நோக்கமும், மனத்தின் அபிப்பிராயமும் அதற்குட்படும். அதற்குப் (value) பண்பு எனப் பெயர்.
- வேண்டியவர் மீதுள்ள நல்லெண்ணம், சுயநலமான நல்லெண்ணமாக இருக்க முடியும். அனைவரிடமும் உள்ள நல்லெண்ணமே தன்னலமற்ற நல்லெண்ணம் ஆகும்.
- பிறருக்கு நீ சொல்லும் புத்திமதி உனக்கே பொருந்தும் என்று தெரியாமல் இருப்பது, மனம் தன் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாகும்.
- பணம், சுயநலம், பொய், வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றை விட்டுவிட முயல்பவர்கள் சில சமயங்களில் பிறருக்காக இவற்றை நாடுகிறார்கள். பிறருக்காக என்று நினைத்தாலும், உண்மையில் தம் ஜீவனின் ஆழத்தில் தமக்காகவே இவற்றை நாடுகிறார்கள்.
நாம் (surface mind) விட்டுவிட்ட பண்புகளை நம் ஜீவனின் ஆழ்ந்த பகுதிகள் பிறருக்காக என்று சாக்குச் சொல்லி, பின்பற்ற முயலும்.
- உடலுக்குத் தெளிவேற்பட்டால் எதையும் செய்ய முடியும். உனக்கு எந்த நிலையில் தெளிவிருக்கிறது (மனம், உணர்வு, உடல்) என்று கண்டுகொண்டால், அடுத்த நிலைக்குச் செல்ல முயலலாம்.
- உன்னை ஏமாற்றவே தீய சக்திகள் உலவுகின்றன. எந்த முறையில் அவற்றின் வலையில் நீ விழுவது வழக்கம் என்று நீ கண்டுகொள்.
- பிரகிருதி எனும் இயற்கை இன்று செயல்படுகிறது. அதனால் சிருஷ்டிக்க முடிகிறது. அதற்குரிய சட்டங்களையும் அமைப்பையும் இயற்கை உற்பத்தி செய்கிறது. சைத்திய புருஷன் இன்று மறைந்துள்ளது. வெளியில் வந்து தனக்குரிய அமைப்பையும், சட்டங்களையும் ஏற்படுத்திக்கொண்டால், அதனால் சிருஷ்டிக்க முடியும்.
ஜீவாத்மா இன்றுள்ள நிலையில், அதற்கு மாற்றம் கிடையாது. அதனால் இன்று சிருஷ்டிக்க முடியாது. அதற்குரிய சட்டங்களையும், அமைப்பையும் ஏற்படுத்தி, நம் கரணங்களில் செயல்பட அனுமதித்தால், ஆன்மீகத் திருவுருமாற்றம் ஏற்படும்.
- மனம் செயல்பட விழையும் பொழுது, மன உறுதி (will) உற்பத்தியாகிறது.
- உடல், தான் பெற்ற சொரணை (sensitivity) மூலம் செயல்படுகிறது.
- ஒரு காரியத்தைச் செய்ய மனம் உண்மையாக விழையுமானால், அதற்குரிய ஆன்மீக முயற்சி அதைப் பூர்த்தி செய்யும்.
- குழந்தை தெய்வீகமானது. குழந்தையின் தெய்வீகம் பூர்த்தியாக, நாம் குழந்தையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதன் தெய்வீகத்திற்கு நாம் கட்டுப்பட வேண்டும். மனைவியின் ஆன்மாவிற்குக் கட்டுப்படும் மனிதன், தன் ஆன்மாவை அவள் வாழ்வில் பூர்த்தி செய்து கொள்கிறான்.
- பிரபஞ்சத்தை முழுவதும் உணரத் தேவையான எல்லாச் சூழ்நிலைகளும் மனிதனுக்குண்டு.
- ஆத்ம சமர்ப்பணம் பூர்த்தியாகும் பொழுது, மனிதன் காலத்தைக் கடந்தவனாகிறான். சிருஷ்டி, தன் பூர்வோத்திரத்தை நாடும் மார்க்கம் அது.
“என்னை உன் உடமையாக்கிக் கொள்“.
- அறிவு – திறன் – சித்தி
அறிவுடையவரிடம் அறிவுக்கு மரியாதையுண்டு. குதர்க்கமானவர்கள் தவறான வாதங்களை சமயோசிதமாகவும், சாதுர்யமாகவும் பயன்படுத்தி அறிவைத் திகைக்க வைப்பார்கள்.
Power திறன் ஓரளவுக்கு குதர்க்கவாதியைச் சமாளிக்கும். சமாளிக்க முடியாத பொழுது குதர்க்கத்தை விருப்பத்திற்கு மாறாக ஏற்றுக் கொள்கிறது.
சித்தி பெற்றவர், குதர்க்கவாதி மாறுவதற்குரிய சக்தியை அவனுக்கு அளித்து, அவனை மாற்றிவிடுகிறார்.
- அறிவால் ஒரு காரியம் பூர்த்தியாகிறது. ஒரு காரியம் செய்வதால் அறிவு ஏற்படுகிறது. அறிவும், செயலும் மனம் நிறையும் உணர்வை எழுப்ப முடியும். அறிவாளி, உணர்ச்சிவசப்பட்டவன், திறமைசாலிகள் என்பவர்கள் இந்நிலைகளை விளக்குபவர்கள். உன் நிலை எது என்று கண்டு கொண்டால், அடுத்த கட்டத்திற்குப் போக என்ன வேண்டும் என்று புரியும்.
- நமக்கு எதைச் செய்ய முனைப்பிருக்கிறதோ, அது தேவையில்லாத சின்ன விஷயம். நம்மையறியாமல், நம்மை மீறிய நிலையில், எதைச் செய்வதற்கு உள்ளிருந்து உந்துதல் இருக்கிறதோ, அது பெரிய தெய்வ காரியம்.
- அளவுகடந்த ஆசையாலோ, பதட்டத்தாலோ ஆட்கொள்ளப்பட்டபோது, அதைச் சமர்ப்பணம் செய்ய முனைவது நல்லது. சமர்ப்பணம், நிலையை நிதானமாக்கும். அந்தப் பதட்டத்தையே சமர்ப்பணம் செய்தால், அதைவிடப் பெரிய நல்லதில்லை.
- மேலெழுந்தவாரியான மனம், உணர்வு, உடல் முழுமையானவையல்ல; அவை நேராகவுமிருக்காது. அவை ஆழ்ந்த நிலையில் செயல்பட்டாலும், ஆன்மாவை வெளிப்படுத்த முயன்றாலும், அவை முழுமையுடனும், நேராகவும் செயல்படும்.
- தாம் எழுதியவற்றைப் பிரெஞ்சு மொழியில் பயின்றால்தான் முழுப்பலன் உண்டு என்கிறார் அன்னை.
- நெடுநாள் நீடித்த காரியம் முடியும் பொழுது, நாம் ஒரு விஷயத்தை அறிகிறோம். அது உணர்வைப் பற்றியதாகவோ, நோக்கத்தைப் பற்றியதாகவோ இருக்கும்.
- நம்முடைய எல்லா நோக்கங்களையும் மாற்றும் அளவுக்கு நாம் அவற்றைப் புரிந்துகொண்டால், அது ஆயுள் முழுவதற்கும் ஏற்படும் தெளிவாகும்.
- அருள் நம்மை நோக்கி வந்தால், கேள்வி எழுப்பக்கூடாது.உன் தலைவனிடமிருந்தும் அது வரலாம்; உனக்குப் பிடிக்காத உருவத்திலும் அது வரக்கூடும்.
- அன்னையின் இலட்சியங்களைப் பூர்த்தி செய்யக்கூடிய ஸ்தாபனங்களும், தனி நபர்களும் இன்று உலகில் உண்டு. அவர்களுடைய நோக்கமும், நம்பிக்கையும், பொதுவாக அர்த்தமற்றதாக இருக்கும்.
- முக்கியமான விஷயத்தை மட்டும் கருதினால், சிறியது – பெரியது என்பது இல்லை. ஒரு H.P மோட்டாருக்கும், 100 H.P மோட்டாருக்கும் தத்துவம் ஒன்றே. எல்லா அணுக்களுக்கும் அமைப்பு ஒன்றே. முக்கியமில்லாத அம்சங்களிலும், வெளித்தோற்றத்திற்குச் சிறியது, பெரியது என்பதுண்டு.
- உலகமும், பூமியும் நிரந்தர இன்பத்தில் திளைக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் தவமிருந்தவர் முகம், சோகத்தால் நிறைந்தது.
- உலகத்தில் துன்பம் இல்லை என்ற கருத்தை மனம் நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளுதல் நன்று. அது மனத்திற்கு ஆன்மீகத்தை அளித்துப் பேரின்பத்தை நிலைநாட்டும்.
- கல்வி, மனிதனுடைய பழக்கத்தையும், நடத்தையையும் மாற்றும். அனுபவம், சுபாவத்தை மாற்றப் பெரிதும் உதவும்.
- தனக்குரியதெல்லாம் தன் அகந்தையின் உரிமையாகக் கருதுகிறான் மனிதன். அகந்தை இழந்தபின் அவனையும், அவன் உடமைகளையும் இறைவன் ஆட்கொள்வான்.
மனம் விழையும் சரணாகதியை, ஜீவன் ஏற்றுக்கொள்ளும் தருணம், ஆன்மா மலரும் அற்புத நேரமாகும்.
- அவ்வற்புதத் தருணத்தை ஜீவனின் அந்தரங்கம் விழித்து ஏற்றுக் கொள்ளும். புலன்களின் ஸ்பர்ஸத்தை விடத் தெளிவான விளக்கம் அது.
- உண்மையின் அடிப்படையில் எதிர்பார்ப்பது நம்பிக்கை. ஆசையின் அடிப்படையில் எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை. (உ.ம்.) புத்திசாலி மாணவனுக்கு 23% மார்க் வந்தால், அதை மீண்டும் சோதனை செய்ய விண்ணப்பித்தால், மார்க் 83% என்று வருகிறது. மக்கு அதேச் சோதனையை செய்தால் 23% ஊர்ஜிதமாகும்.
- ஓர் இரகஸ்யம் தெரிந்தால் அந்த விஷயத்தை ஜெயிக்கலாம். உலகத்தின் இரகஸ்யம் தெரிந்தால் உலகை வெல்லலாம். மனித உடல் சத்தியஜீவன் ஆகும் இரகஸ்யத்தை அன்னை தேடினார். உணர்வுக்குரிய இரகஸ்யம் உண்டா? அறிவுக்குரிய இரகஸ்யம் உண்டா? செல்வத்திற்குரிய இரகஸ்யம் எது? முன்னேற்றம், கல்வி, நாகரீகம், ஆகியவற்றிற்கு இரகஸ்யம் உண்டா?
- தாம் பெற்ற கிருஸ்த்துவப் பயிற்சியை மனதிலிருந்து அழிக்க ஸ்ரீ அரவிந்தர் சிந்தனை மணிகளை (aphorism) எழுதினார் என்று அன்னை கூறுகிறார்.
- சிந்திக்க முடியாதவன், தான் அறிந்துள்ள விவரத்தைப் புறக்கணித்துவிட்டு, முறையான சிந்தனையை மேற்கொள்வது ஒரு புரட்சி. அது, பண்டிதர், சிந்தனையாளராக மாறுவதை ஒத்தது. அனுபவம் இல்லாத பொதுமக்கள் பெற்ற அதிகமான விவரங்களை (expert) வல்லுநருடைய அறிவுடன் ஒப்பிடுவது போன்றது அது. (கோர்ட் விஷயத்தில் நமக்குள்ள அனுபவத்திற்கும், வக்கீல் குமாஸ்தாவுக்கும் உள்ள ஒற்றுமை அது. கிராமத்து இளைஞன் கிராமத்துச் சூட்சுமத்தை எளிதில் அறிவது போல் நகரத்து மாணவனுக்குப் புரியாது).
- படிப்பறிவில்லாதவன் உதாரணத்தின் மூலம் எளிதில் புரிந்துகொள்வான்.
ஒரு விளக்கம் அல்லது முறை (an explanation or a method) அறிவு உள்ளவனுக்குப் புரிய வைக்கும்.
இனிமையான பழக்கம், உணர்ச்சிபூர்வமானவனுக்கு விளக்கும்.
ஆசையுள்ளவனுக்கு ஆர்வம் தெளிவுறுத்தும்.
திறமை அல்லது திறன் அல்லது நிறைவு உடலுக்குப் புரிய வைக்கும்.
மௌனத்தால் தபஸ்வி எளிதில் ஏற்றுக்கொள்வார்.
திருஷ்டி, ரிஷிக்கு ஞானத்தைத் தரும்.
யோகி பார்த்தவுடன் புரிந்துகொள்வார்.
ரூபத்தை அறிவது தெய்வம்.
தன்னையே பிரம்மமாகவும், உலகைத் “தான்” ஆகவும், மற்றவரை உலகமாகவும் அறிவது சத்தியஜீவியம்.
- உயர்ந்த நிலையிலுள்ள நியாயம் தாழ்ந்த நிலையிலுள்ள நமக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. தாழ்ந்த குணங்களைப் பாராட்டுபவனுக்கு அதிக அநியாயமாகத் தெரியும். தெய்வ நியாயம், மனிதன் விலங்குகட்கு இழைக்கும் தீங்கு போல் தோன்றும். தாழ்ந்தவனுடைய நியாயம், உயர்ந்தவனுக்கு அநியாயமாகத் தோன்றும்.
- பழைய நண்பர்களிடையே இன்று நாம் தேடும் மரியாதை, பழைய எதிரிகளைப் பழிவாங்கும் மனப்பான்மை ஆகியவை உணர்ச்சிக்குரிய மட்டமான முறைகள். அவை நம் மனத்தின் பலஹீனத்தைக் குறிக்கும்.
- புதிய ஆன்மீக அனுபவங்கள் நம்மை நாடி வரும் பொழுது நம் உணர்வின் பலஹீனங்கள் தவறாது தலைதூக்கும்; தன் போக்கை வலியுறுத்தும். அதனால் அனுபவங்கள் அகலும். குறை, குறையாகவே இருக்கும்.
- கடந்ததைக் கடந்தால், எதிர்காலம் எதிர்கொள்ளும்.
- மனத்தின் முன்னேற்றம், உணர்வின் தெளிவைப் பொருத்தது.
- ஆசையால் இன்று நாம் செய்வதை, ஆசையில்லாமல் செய்ய முன்வருவதே திருவுருமாற்றம். தாழ்ந்த குணங்களால் உந்தப்பட்டுச் செயல்படும் மனிதன், உயர்ந்த நோக்கத்தால் அதே காரியத்தைச் செய்ய முன்வருவது திருவுருமாற்றமாகும்.
- மனித நோக்கத்தை தெய்வ இலட்சியமாக மாற்றுவதே திருவுருமாற்றம்.
- ஒருவர் பாராட்டும் பண்புகளை, அவர் உறவில் நாமும் பாராட்டினால் நல்லுறவு நீடிக்கும். எந்த அம்சங்களால் ஒருவர் வாழ்வில் வெற்றி பெற்றாரோ, அதை அவரைவிட அதிகமாக நாம் பெற்றிருந்தாலும் அவருடன் நல்லுறவு நீடிக்கும்.
- எந்தப் பிரச்சினை தீரவில்லையோ அவ்விஷயத்தில் நமக்கு அன்னை மீது நம்பிக்கையில்லை எனப் பொருள்.
- நமக்குள்ள சந்தர்ப்பத்தில் அன்னை சட்டப்படி எந்தப் பெரிய திட்டம் பூர்த்தியாகவில்லையோ, அவ்விஷயத்தில் நம் முயற்சி, ஆர்வம், தெளிவு பூர்த்தி பெறவில்லை எனப் பொருள்.
- செயலுக்கான ஆர்வம் அடங்கியபின் மனம் அறிவை நாடும். செயலுக்கான ஆர்வம் எந்தச் சிறிய அளவிலிருந்தாலும் அது மறையும் வரை, அறிவுக்கான ஆர்வம் எழுவதில்லை.
- உயர்ந்த அறிவையும், சிறந்த ஞானத்தையும் தேடும் வரை, பெரிய ஆன்மீக அனுபவங்கள் ஒதுங்கி நிற்கும். அவை அழிந்தபின்தான் அனுபவங்கள் கிடைக்கும்.
- எதிரெதிரானவை (ஒளி–இருள், உயர்வு–தாழ்வு) வாழ்க்கைக்கு ஆழ்ந்த உற்சாகத்தைக் கொடுக்கும். வெறுப்பவன் வெறுப்பின் எல்லை வரை செல்வான். வாழ்வின் தாழ்ந்த ருசியைக் கடந்தவனே இம்முரண்பாட்டைக் கடந்தவனாவான்.
- புரிய வேண்டும் என்பது அறிவின் ஆர்வம். உடமையாக்கிக்கொள்ள வேண்டும் என்பது உயிரின் ஆர்வம். இடைவிடாது திரும்பத் திரும்ப ஒன்றையே செய்வது உடலின் ஆர்வமான பழக்கம்.
புரிய வேண்டும் என்ற அவசியமில்லை என்றால் மனத்தின் எல்லையைக் கடக்க முடியும். சொந்தமாக்கிக்கொள்ள முயல்வதைத் தவிர்த்தால், ஆசை அழியும். செய்ததையே திரும்பத் திரும்பச் செய்ய விருப்பமில்லை என்றால் உடலின் பிடியிலிருந்து விடுபடலாம். இவை, பிரகிருதியின் பிடியில் இருந்து மனிதனை விடுவித்து ஆன்மாவை நோக்கிச் செல்ல உதவும்.
- உயர்ந்த பெருந்தன்மையை உண்மையாகப் பெற்றிருந்தால்தான் குறுகிய உள்ளத்தின் தாழ்ந்த செயலையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள முடியும்.
- அனைவரும் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வமுள்ளவனுக்கு முன்னேற்றமுண்டு.
- முன்னேற்றத்தின் தன்மையை அறியாதவன் பிறர் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவான். ஒருவருக்கு முன்னேற்றம் வந்தால், அது அனைவருக்கும் முன்னேற்றம் வருவதன் அறிகுறி. முன்னேற்றத்திற்கே வழியில்லை என்ற நிலையில் ஒருவருக்கும் அது கிடைக்காது.
- தன் நிலை, உயர்ந்த நிலை என்ற மனப்பான்மை முன்னேற்றத்தைத் தடை செய்யும்.
- தன் குறையைக் காண முன்வந்தால் முன்னேற்றத்திற்கு வழியுண்டு. இன்றைய உன் நிலை முழுவதும் சரியானது என்ற மனநிலை இருப்பதை உறுதிப்படுத்தும். இருப்பது போதாது என்றால், அடுத்த நிலைக்குப் போகலாம். உன்னிடமுள்ள எந்த உயர் குணத்திலுள்ள சிறு குறையும் உன்னை உறுத்தினால், அதிகபட்ச முன்னேற்றத்தை அடையலாம்.
குறையற்ற மனநிலையை அடைவதே முன்னேற்றம்.
- உன்னுடைய அதிகபட்சத் திறமையை அறிந்து, அதற்குரிய இலக்கை நிர்ணயித்து, இன்றைய குணநலன்களை அந்தக் கண்ணோட்டத்தில் சோதனை செய்தல் நலம்.
- நமக்கில்லாத உரிமையை உணர்ச்சி கொண்டாடுவது, கோபம் எனப்படுவது. உரிமையற்றவன் ஆக்கிரமிப்பை அழிப்பது ரௌத்திரம்.
- மனிதனுக்குக் கோப்பட உரிமையில்லை. ரௌத்திரத்திற்கு ஆண்டவனின் அனுமதியுண்டு.
- இயற்கையின் வேகம் நம்முள் உந்துதலாக வெளிப்படுகிறது. விஷயங்களைப் புரிந்துகொள்ள மனம் விழைவது அரிது. அதுவே மனத்தின் வேகம்.
- உயர்ந்த உதவியை வலிய அடுத்தவருக்கு அளிக்க முன்வந்தால் பெரும்பாலும் அவர்கள் அதை அலட்சியப்படுத்துவதைப் பார்க்கலாம். இதுவரை என் அனுபவத்தில் அதுபோல் அலட்சியப்படுத்தாதவரைப் பார்த்ததில்லை. ஒரு சிலர் அதற்காக நம்மைக் குறை கூறி அவமானப்படுத்தவும் முயல்வார்கள்.
- சமூக வாழ்வில் ஒருவருடைய அகந்தை, பரோபகாரமாக வெளிப்பட்டால், அது அடுத்தவரின் அகந்தையுடன் மோதி மேற்சொன்ன பலனைக் கொடுக்கும். பரோபகாரத்தின் மூலம் அகந்தை வெளிவந்தால், அகந்தைக்குரிய பலன்தான் கிடைக்குமே தவிர பரோபகாரத்திற்குரிய பலன் கிடைக்காது.
- பிறருக்கு உதவி செய்யும் வேகம் எழுந்தால், அந்த உதவியைச் செய்வதற்குப் பதிலாக, அந்த வேகத்தைச் சமர்ப்பணம் செய்தால், அடுத்தாற்போல் என்ன செய்வது என்பதற்கு சமர்ப்பணம் வழி செய்யும். அச்செயல் எவர் மனதையும் புண்படுத்தாது.
- கொடுக்க ஆசைப்படுவதும், பெற ஆசைப்படுவதும் யோகத்தைப் பொருத்தவரை ஆசையே.
- உணவு, உறக்கம், இனஉணர்வு போன்றவை இன்றியமையாதவை. இலட்சியத்தை ஏற்றுக்கொண்டபின் இவை தவிர்க்க முடியாத தடையாக இருக்காது. உயர்ந்த உணர்வுகள் வந்தபின், தாழ்ந்தவை தடையாக இருப்பதில்லை. கடுமையான தடை, மென்மையாக மாறுவதும் மேலும் உயர்ந்த நிலையில் இனிமையாக மாறுவதும் உண்டு.
- உலகம் என்று நாம் சொல்வது, நமக்கு முக்கியமானவர்களும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுமேயாகும்.
- உன்னுடைய சந்தோஷம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உரியவர்களே உன் உலகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் சொல்லப் போனால், இது போன்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒருவரே முக்கியமாக இருப்பார்கள். அந்த நான்கு, ஐந்து பேரே “என் உலகம்” என நீ பேசுவதாகும்.
- வேறு வகையாகச் சொன்னால், யார் நம் மனதை நிரப்புகிறார்களோ அவர்களே நம் உலகமாகும். அவர்கள் முக்கியமானவர்களாவோ, உயர்ந்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு நண்பர், ஒரு கணக்குப்பிள்ளை, டிரைவர், சமையல்காரனும் ஏதோ ஒரு காரணத்தால் மனதை நிரப்பி உனக்கு முக்கியமானவனாகி, உன் உலகமாவதும் உண்டு.
- அநேகமாக, பிரார்த்தனை என்பது இறைவனை அவனுடைய கடமையிலிருந்து திருப்பும் முயற்சியாக இருப்பதுண்டு. இறைவனின் செயலிலிருந்து மனிதன் மாறுபட்ட விருப்பத்தை நாடுவதாலும் அந்த விருப்பம் பூர்த்தியாகாத போது, இறைவனைப் பூர்த்தி செய்யும்படி கேட்பதாலும் பிரார்த்தனைக்கு இக்குணம் ஏற்படுகிறது.
- இறைவன் மனிதனையும், அவன் ஆத்மாவையும் மீண்டும் தன் பாதைக்குக் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளில் அவனுடைய பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வதும் ஒன்றாகும்.
மனிதனுடைய பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வதால் இறைவன் தன் பாதையை விட்டு விலகுவதும் உண்டு, தன் குறிக்கோளை அழிப்பதும் உண்டு.
- தன் இலட்சியத்தை அழிப்பதன் மூலம் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் தன்மை இறைவனுக்குண்டு.
- ஒரு செயல், அது உள்ள நிலையில் (in its own plane) சந்தோஷத்தை உற்பத்தி செய்யுமானால், அந்நிலைக்கு அது சரியான செயலாகும்.
- தவறு என்பது, அடுத்த உயர்ந்த நிலையில் சரி என்றாவதுண்டு. ஒரு நிலை தாழ்ந்தபோதும், தவறு, சரி என்று மாறுவதுண்டு.
- பொங்கி வழியும் சக்தி நிறைவளிக்கின்றது. நம் நிலைக்குரிய சக்தி தாழ்ந்த நிறைவையளிக்கும். அடுத்த உயர்ந்த நிலைக்குரிய சக்தி, இந்நிலையில், உயர்ந்த நிறைவைத் தரும்.
(உ.ம்.) 1) வயிறு நிறைய உணவு – அன்போடு பரிமாறும் உணவு
2) எண்ணங்கள் நிறைந்த மனம் – மௌனம் குடி கொண்ட மனம்.
- அதிகபட்ச அறிவு, அதிகபட்ச சந்தோஷம், அதிகபட்சத் திறமை ஆகியவை உயர்ந்தவை. நாமுள்ள நிலையில் இவை தெய்வத்திற்கு நிகரானவை. நாமுள்ள நிலையில் அதிகபட்சமான அறிவு, சந்தோஷம், திறமை பெறுவது இறைவனை அடைவதாகும்.
- கயமையுடன், பெருந்தன்மை எந்த அளவில் தொடர்பு கொண்டாலும் ஏதாவது ஓரளவில் கறைபடாமலிருக்க முடியாது.
- பற்று விடல்:
பிரச்சினையைப் பொருட்படுத்தாமல், அதில் உள்ள சிரமத்தைப் பொறுத்துக்கொண்டால் (equality) சமத்துவம் ஏற்பட உதவும். பற்றை விட முயல்பவர் ஆரம்பத்தில் பற்றை விலக்கிப் பொருட்படுத்தாமல் இருக்க முயல வேண்டும். அதனால் பற்று அறுபட்டால், யார் மீது நமக்குப் பற்றுள்ளதோ அவர் தம் மனநிலையை மாற்றிக்கொள்வதால் சமத்துவம் ஏற்பட்டு நிலைக்க உதவும்.
- ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குயர இலட்சியம் உதவும். உயர்ந்த பின் அந்நிலையில் நிரந்தரமாக நிற்க (pragmatism) யதார்த்த வாதம் உதவும்.
இருப்பதை விட்டு இல்லாத உயர்வை நாடுவது இலட்சியவாதம்.
இருப்பதன் உயர்வையும், அவசியத்தையும் பாராட்டுவது யதார்த்த வாதம்.
- உன்னுடைய நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உனக்கு முக்கியமானவர்கள், உன் எதிரிகள் ஆகியவர்கள் நீ இன்றுள்ள மனநிலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எதிரிடையாகவோ சுட்டிக்காட்டுபவர்கள்.
- சமயோசித புத்தி, பவித்திரமான சத்தியமாகவோ, இருண்ட பொய்யின் உருவகமாகவோ இருக்க முடியும்.
- எண்ணங்கள் அற்றுப்போவது மௌனத்தையடைய அவசியம். பேச வேண்டும் என்ற ஆசை அழிவதும் மௌனத்தை நிரந்தரமாகப் பெற அவசியம்.
- மனித வாழ்வு முறைப்படுத்தப்பட்டு, அம்முறைகளுக்குரிய பண்புகளால் பாதுகாக்கப்படுகிறது. இவை உயர்ந்தவை, தாழ்ந்தவை என்ற இரு நிலைகளிலுள்ளன. தாழ்ந்த நிலையில் மனிதன் கஷ்டப்படுகிறான். தெய்வீக வாழ்வு என்பது உயர்ந்த நிலைக்குரியது. அதிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற இரு நிலைகள் உள்ளன. தெய்வீக வாழ்வில் தாழ்ந்த நிலையிலிருந்தாலும் மனிதன் நஷ்டமடைவதில்லை, தண்டனை பெறுவதில்லை (in the physical plane). இது செயலால் நிறைந்த நிலை. உணர்வால் நிறைந்த நிலையில் இக்குறைகள் மாறும் காலத்துமட்டுமிருக்கும்.
மனித வாழ்வின் உயர்ந்த நிலைக்குச் சென்று, அங்கிருந்து தெய்வீக வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முயல்வதே சிறந்தது.
- பூரண யோகத்தின் சூட்சும இரகஸ்யங்கள்:
பிரபஞ்சம் மனிதனாகத் தன்னைச் சுருக்க முயல்கிறது.
மனிதன் பிரபஞ்சமாக மலர்ந்து விரிய முயல்கிறான்.
வாழ்வில் (surface) மனிதன் இதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
ஆழத்தில் முடிவு தெரிகிறது. (மேலெழுந்த வாழ்வில் தயாரான சிருஷ்டி ஆழத்தில் உருவாகிறது).
மேலெழுந்த வாழ்விலிருந்து ஆழத்திற்குச் சென்றால் ஆன்மா விடுதலை அடைந்து, 3 சந்தர்ப்பங்கள் எழுகின்றன.
முதல் நிலை : நிர்வாணம் எய்தி ஆன்மா கரையும்.
இரண்டாம் நிலை : ஆன்மா புருஷனாகக் காட்சியளிக்கும். (மனோமய புருஷனைக் காணுதல்)
மூன்றாம் நிலை : சைத்திய புருஷன் வெளிப்படுதல்.
புருஷனைக் கண்டபின், புருஷோத்தமனை அடைந்து மோட்சம் பெறுவது கீதை வழி. சைத்திய புருஷனைக் கண்டு, ஈஸ்வரனை அடைந்து தெய்வத்தை உலகுக்குக் கொண்டு வருவது பூரண யோகம்.
- பிரகிருதியில் மறைந்துள்ள ஆத்மா வெளிவந்து தன் யாத்திரையைப் பூர்த்தி செய்யும் முதற்படி ஆத்ம சமர்ப்பணம்.
- சிருஷ்டியின் முடிவை ஆரம்பமாகக் கொண்டு, ஆன்மீக வளர்ச்சியைத் தொடங்குவது ஆத்ம சமர்ப்பணம்.
- உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று 4 பகுதிகளாகப் பிரிந்து ஜீவன் செயல்படுவதாலும், அவற்றிற்குள் தொடர்பு முழுமையாக இல்லாததாலும், முழுமையான வாழ்வுக்கும், முழு ஜீவனுக்கும் பிரச்சினைகளும், சிக்கல்களும் எழுகின்றன.
- நம்முடைய அழகைப் போற்றினால், அறிவை மெச்சினால், செல்வத்தைப் பாராட்டினால் நமக்கு ஏற்படும் சந்தோஷம் பெருமை என்ற உருவில் வருகிறது.
நம் நல்ல குணத்தை மற்றவர் பாராட்டும் பொழுது நம்முள் எழும் சந்தோஷம் அடக்கவுணர்வை அளிக்கிறது.
- அடக்கம், சந்தோஷத்திற்குச் சிறப்புள்ள நிறைவைத் தரும்.
- கடுமையான விரதங்களுக்குப் பதிலாக இனிமையான பண்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது.
- பக்தி அருளை எட்டித் தொடுகிறது. நம்பிக்கை அருளை அழைக்கின்றது. தூய்மை அருளைப் பலிக்கச் செய்கிறது.
- முழு முன்னேற்றத்திற்கு, முழு முயற்சியை, முழு நேரமும் எடுப்பதே பூரண யோகம். எல்லாக் கரணங்களும் சேர்ந்ததே முழுமை.
- முழு முயற்சியின் தவம் போன்ற கடுமையை முழு அன்பின் எழுச்சியாகிய நிறைவை அளிப்பது அன்னைக்கு நாம் செய்யும் சரணாகதி.
- மனதை அன்னை மீது நிறுத்தி, முயற்சியை முழுவதும் முறைப்படுத்தினால், அன்பின் எழுச்சியைப் பூர்த்தி செய்யும்.
- எந்தக் காரியத்தைச் செய்ய ஆர்வமும், அறிவும், வேகமும் இருக்கின்றதோ, அது பூர்த்தியாக, மனம் நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. அந்தக் காரியம் எந்த நிலையிலிருக்கிறதோ, அதுவே நாம் உறையும் மனநிலை.
- “சொன்னால் செய்யமாட்டான்”,
“பெரிய திட்டங்களைக் கைவிட்டால் ஆன்மீக அனுபவம் ஏற்படும்“, அன்னை,
ஒரு நிலையில் (level) மௌனம் சித்தித்தால், அடுத்த நிலைக்குப் போக முடியும்.
- நம்முடைய உலகம் என்பது, நம் உணர்வால் உருவானது. அவ்வுணர்வுகளை நிர்ணயிப்பது நம் பண்புகள்.
பண்புகள் ஒன்று முதல் நூறுவரை நூறு நிலைகளில் உள்ளன. நம் பண்புகள் எவை? அவை உள்ள நிலை எது? என அறிவது முன்னேற்றத்திற்கு உதவும்.
- மேல்நாட்டார், பெரியவர்களுக்கு நன்றி சொல்லும் சந்தர்ப்பங்களில், நாம் நமஸ்காரம் செய்கிறோம்.
- முக்கியம் என்பது மனிதனுக்கு மட்டும் உண்டு; பொருளிலும் இல்லை, செயலிலும் இல்லை.
- சம்பளத்திற்கு வேலை செய்பவன், தானே கடமைகளைப் பூர்த்தி செய்வான் என்று எதிர்பார்ப்பது தவறு. அவன் கடமையை, சம்பளம் கொடுப்பவர் நினைவுபடுத்த வேண்டும். நட்பிலும், உறவிலும் உள்ள கடமைகளை நினைவுபடுத்தக்கூடாது. அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது.
- முன்னேற்றம், புதியதைக் கற்றுக்கொள்வது, கற்றுக்கொண்டதைப் பூர்த்தி செய்வது என்பதற்கு இரு பாதைகளுண்டு. கையால் கற்றுக்கொண்டு அதன் மீது ஆசை கொண்டு பிறகு மனதால் பூர்த்தி செய்வது முதற்பகுதி. மீண்டும் மனதில் ஆரம்பித்து உணர்வாலும், உடலாலும் பூர்த்தி செய்தால் காரியம் முழு நிறைவு பெறும்.
ஆதிநாள் மனிதன் உடலில் ஆரம்பித்து மனதை நோக்கி முன்னேறுகிறான். இன்றைய மனிதன் அறிவாளியாக இருப்பதால் அறிவால் ஆரம்பித்து உடலாலும் பூர்த்தி செய்கிறான்.
நம்பிக்கை – வழிபாடு – பணிவு என்பது மனதில் ஆரம்பித்து உடலில் பூர்த்தியாவது, மனிதனால் அறிவில் ஆரம்பிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
- சமர்ப்பணம், ஜோதியை நாடுவதால் ஆரம்பம் – விரிவு – முடிவு என்ற மூன்று நிலைகளை சுருக்கி முடிவான பலனை முதலில் கொடுக்கிறது.
- பூரண யோகத்தின் சுருக்கம் ஆத்ம சமர்ப்பணம். யோகம் என்ற கட்டத்தில் ஆத்ம சமர்ப்பணம் ஒரு செங்கல்.
- ஜீவன் முழுதும் நிறைந்த தியான நிலையைச் செயலில் வெளிப்படுத்துவது எப்படி? பரம்பொருள் பரவெளியில் நிறைந்துள்ளது. அதற்குச் சட்டங்களில்லை. சிருஷ்டிக்குச் சட்டம் உண்டு. மனிதனுக்குரிய சட்டங்களை, பண்புகள் என அறிவோம்.
ஒவ்வொரு நிலைக்கும், வேலைக்கும் உரிய பண்புகள் உண்டு.
வேலை என்பது ஒரு யோசனையாக ஆரம்பிக்கின்றது.
அதை ஒரு கொள்கையாக மாற்றி ஸ்தாபனத்தில் பயன்படுத்துகிறோம்.
கொள்கை அடுத்த கட்டத்தில் திட்டமாகிறது.
திட்டத்தைப் பல பகுதிகளாக்குகின்றோம்.
கம்பெனியின் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்குரிய திட்டம் போகிறது.
எண்ணம் ஓர் இலட்சியமாகவோ, இலக்காகவோ வெளிப்படுகிறது. ஸ்தாபனத்திற்குரிய நடைமுறைக்குத் தேவையான திட்டமாக இலட்சியத்தை மாற்ற வேண்டும். நிர்வாகத்தின் தேவைக்கேற்ப திட்டத்தைப் பல பகுதிகளாக்க வேண்டும். உற்பத்தி செய்ய, வேலைக்கு உகந்த பண்புகள் தேவை.
தூய்மை, மௌனம், நிஷ்டை ஆகிய யோக முறைகளால் ஜீவன் முழுதும் நிறைந்த தியான நிலையை எய்துகிறோம். பழைய பண்புகளான நிர்வாகத்திற்குரியவை, வேலைக்குரியவை ஆகியவற்றைப் புதிய நிலைகளான மௌனம், தூய்மை, நிஷ்டை ஆகியவற்றைப் பெறும் வகையில் அமைக்க வேண்டும். அதன் மூலம் ஜீவன் நிறைந்த தியான நிலை வேலையில் வெளிப்படும்.
(உ.ம்.) ஒரு கம்பெனியின் உற்பத்தியை டெலிவரிக்குத் தகுந்தாற்போல் அமைக்க (punctual) நேரத்தில் வேலையை முடிக்க முயல்கிறோம்.
இது டென்ஷனில் முடிகிறது. அதையே சாந்தமாகச் செய்ய முயன்றால் ஜீவன் நிறைந்த தியானம் வெளிப்படும்.