யோக வாழ்க்கை – 12

  1. பிரம்மத்தை எட்ட இரு படிகளுண்டு. ஒன்று பின்னால் போவது. அடுத்தது உயரச் சொல்வது. சாட்சியிடம் போவது போல், ஈஸ்வரனிடமும் போகலாம். அங்கிருந்து அர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் பிரம்மத்தை எட்டலாம்.
     
  2. எதிரியைக் கொல்வது போன்றது பிரம்மச்சரியத்தை இழப்பது. நாகரீகம், கொலையைக் கைவிட்டது போல், சாதகன் உடல் இன்பத்தை விட வேண்டும். ஆதிமனிதன் எதிரியைக் கொல்லும் நேரம், வாழ்வின் உச்சகட்டத்தை எட்டி இன்பம் துய்க்கும் நேரம்.
     
  3. பிரம்மம் தன்னை அறியாத நிலையில் மௌனத்திலாழ்கிறது. நாம் மௌனத்தை நாட நம்மை மறக்க வேண்டும், எண்ணம் அழிந்தால் போதாது.
     
  4. ஜீவன் முழுவதும் நிலைப்பது, விழிப்பில் ஏற்படுவது, தியானத்திலல்ல.
     
  5. அதைப் பெற, செயலை யோகமாக்கும் திறன் பெற வேண்டும்.
     
  6. தன்னை மறந்த நிஷ்டை, அறியாமையில் ஏற்படும் நிலை. விழிப்பில் அதே நிலை ஏற்படுவது அறிவால் பெறுவது – ஜீவிய சக்தியின் ஞானம் – சைத்திய புருஷனை மேல்மனத்திற்கு நிரந்தரமாகக் கொண்டு வரும்.
     
  7. தொடு உணர்வின் இன்பம், உணர்வின் கிளர்ச்சி, உள்ளத்தின் ஆர்வ வேட்கை, அறியாமை மனத்தின் அறிவு வேட்கை ஆகியவை ஜீவன் முழுவதும் பரவி நிலவும் தியானத்திற்குத் தடை.
     
  8. மேலிருந்து உள்ளே போவது – கண் மூடிய நிலை விழிப்புறுவதாகும். புருஷனையோ, சைத்திய புருஷனையோ நாடினால் உள்ளே போகலாம்.
     
  9. அல்ஜீப்ரா ஓர் உண்மையைக் குறிக்கிறது. கம்ப்யூட்டரில் உள்ள குறியீடுகள் ஓர் எலக்ட்ரானிக் உண்மையைக் குறிக்கின்றன. பிரம்மம் பிரபஞ்சத்தைத் தன்னுள் கொண்டது. பிரம்மத்தின் குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட உண்மையைக் குறிப்பவையில்லை. எதையும் சிருஷ்டிக்கும் சக்தியைக் குறிப்பவை. இது பிரம்மத்தின் தன்மை. சிருஷ்டி போல் (fixed) மாற்றமில்லாதது இல்லை.
     
  10. சரணாகதியை, பகவான் கண்டுபிடித்ததை அன்னை பிரமாதமானது என்கிறார். எம்முறைக்கும் மனிதத் திறமையுண்டு. ஆன்மாவும், பிரகிருதியும் அர்ப்பணத்தின் மூலம் சரணடைந்தால், மனிதத் திறமை வெளிப்பட வழியில்லை. மனிதத் திறமை மறைந்த நேரம் இறைச் சக்தி வெளிப்படுகிறது. எனவே, அதுவே மிகக்குறுகிய வழி.
     
  11. அடுத்தவர் உன் சுயநலத்திற்கு உதவவில்லை எனில், அவரைச் “சுயநலம்” என்பதுண்டு.
     
  12. அறியாமையே ஞானம்.அது மாறும் நேரம் நாம் காண்பது ஞானோதயமாகும். பொதுவாக நம் குணத்தின் அன்றாட வெளிப்பாட்டில் அந்நேரம் இருக்கும். அது தலைகீழேயும் காணப்படும்.
     
  13. மனத்தாலும், அகந்தையின் தலைகீழ் வெளிப்பாடு வருகிறது. அகந்தையற்ற முயற்சியும், மனத்தைக் கடக்க விழைவதும், ஒரு க்ஷணமானாலும் மறைபொருளைத் தெரிவிக்கும்.
     
  14. இந்த இரகஸ்யம் ஞானம்.இதன் மூலம் அடுத்த பக்கத்திற்குப் போவது யோகம். முதலில் சொல்லியது மனத்தின் முயற்சி; அடுத்தது ஆன்மாவின் முயற்சி.
     
  15. ஜடம் வேகம் பெற்றால், உணர்வாகும்.
     
  16. அரிய பொருளான உணர்வின் வேகத்திற்குரிய ஞான வேட்கை, சிந்தனையாகிறது.
     
  17. மேலும் பல நிலைகளைக் கடந்த சிந்தனை, ஞானத்தைத் தன்னுள்ளே காண்கிறது. அது சத்தியஜீவியம்.
     
  18. ஆன்மா மேலே வந்து எட்டிப் பார்த்தால் அது புதுமை உணர்வு. செடிகளுக்கு மழை தரும் மன நிறைவாகும்.
     
  19. அகந்தை என்பது உயர்ந்த ஜீவியத்தின் புதுமையான உடல். அது உருவம் பெற்ற பின் சூட்சும பார்வைக்குத் தெரியும்.
     
  20. உள்ளே எந்நேரமும் அற்புதமான உணர்விருந்தால், அன்னை ஜீவியம் உருவாகிறது எனப் பொருள்.
     
  21. தொடர்ந்த புது எண்ணங்கள், இடைவிடாத உற்சாகம், ஆத்ம திருப்தி ஆகியவை கரணங்களில் அன்னை ஜீவியத்தை வெளிப்படுத்துபவை. ஜீவன், “அற்புதம்” என்று அதை அறிகிறது.
     
  22. புதுமை உணர்வு, உற்சாகம், ஆச்சரியம், மின்னலான ஜோதி ஆகியவை அடிக்கடி சூட்சுமத்தில் ஏற்படும். எளிதாகவும் நிகழும். ஜட வாழ்வில் அரிது.
     
  23. சமர்ப்பணத்தின் உச்சத்தில் ஆசைப்பட்டவையும், உணர்ச்சி வயப்பட்டவையும் விலகியதை நாம் காண்பதில்லை.
     
  24. ஒரு விஷயத்தின் சமர்ப்பணம் நம் சமர்ப்பண நிலையைப் பொருத்தது. எல்லாச் சிறு விஷயங்களையும் சமர்ப்பணம் செய்யாமல் ஒரு விஷயத்தைப் பூரணமாகச் சமர்ப்பணம் செய்ய முடியாது.
     
  25. விஸ்வாசத்தை இரு வகைகளாகச் சொல்லிஇரண்டையும் போற்றுகிறோம். ஒன்று, ஒருவருக்கு மட்டும், மற்றது, அனைவருக்கும் உரியது. எல்லாக் குழந்தைகளிடமும் அன்பு செலுத்துவது ஒரு வகை. மனைவி மீது மட்டும் பிரியமாக இருப்பது அடுத்த வகை.
     
  26. ஒருவருக்கு மட்டும் உரித்தான விஸ்வாசம் சிறப்பான உயர்வை, தரத்தால் எட்டினால், அது மற்றவர் எவரையும் விலக்காது. அந்நிலையில் அது தன் அனந்தனின் குணத்தையும், விஸ்வாசத்தின் தன்மையையும் வெளிப்படுத்தும்.
     
  27. ஆன்மா சித்தித்த பின்னரே சரணாகதி ஆரம்பிக்கிறது. ஏனெனில் சரணாகதியைச் செய்ய வேண்டியது ஆன்மா. அது வரை சமர்ப்பணத்தால், சரணாகதிக்கு நாம் நம்மைத் தயார் செய்து கொள்கிறோம்.
     
  28. ஆன்மாவும், பிரகிருதியும் பரமாத்மாவுக்குச் சரணாகதியை அளிக்க வேண்டும் என்பதால் ஜீவாத்மா ஆரம்பித்த சரணாகதி முதிர்ந்து, பிரகிருதியால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
     
  29. நாம் சரணாகதி என அழைப்பது மனம் நினைவாகச் சமர்ப்பணம் செய்து தன்னால் தன் இருண்ட நிலையில் முடிந்தவரை முயலுவதாகும்.
     
  30. சமூகம் அனுமதிக்காத இன்பங்களை மனிதன் மனதால் கற்பனை செய்து அனுபவிக்கிறான். அதைச் சமர்ப்பணத்தால் மாற்றி அமைத்தால்தான் யோகமுண்டு. கற்பனையில் காணும் இன்பத்தைச் சமர்ப்பணத்தில் காண்பவனுக்கு யோகத் தகுதியுண்டு.
     
  31. நெடுநாளாகக் கடவுளையறிய முயன்று தோற்றவன், திடீரென “எப்படி இச்சிறுமை அந்த வானளாவிய பெரியதை அறிய முடியும்” என உணர்கிறான். அதே நேரம் நெடுநாள் கிடைக்காத ஞானம் கிடைக்கும். ஏனெனில் தன்னால் முடியாது என்ற ஞானம் அடக்கமாகும்.
     
  32. பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகளை, பேசாமல் தீர்க்க முடியும். அனுபவமில்லாமல் எழுப்பிய பிரச்சினைகளை அனுபவம் வந்தபின் தீர்க்கலாம். அதை பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக மௌனத்தால் தீர்க்கலாம். ஏனெனில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டபின் அதை வெளியிடும் அளவுக்கு அறிவு வளர்ந்திருப்பதில்லை.
     
  33. தம்முடைய குறைகளை மட்டும் திருத்திக்கொள்ள முன்வருபவர்களுக்கு, பிறரால் குறையோ தொந்தரவோ வராது.
     
  34. மன்னிக்க முடியாத பாவமான குற்றத்தை உனக்கிழைத்தவர் அதைச் செய்யும் காரணமாக நீயே இருந்தாய் என அறிவது உணர்வின் உண்மை.
     
  35. உணர்வு சிந்தித்தால் எதிர்பார்க்கிறோம்.
     
  36. எண்ணத்தை உணர்வு பலவந்தப்படுத்தினால் படபடப்பு வருகிறது.
     
  37. அறிவில்லாத உடல் அறிய முற்பட்டால், பொறுமையிழந்துவிடுகிறோம்.
     
  38. உணர்வால் முடியாது என்பதை மனம் அறிவது ஏமாற்றம்.
     
  39. தன்னால் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது என அறிவில்லாத உணர்வுக்கு வரும் ஞானோதயத்திற்கு, “எரிச்சல்” என்று பெயர்.
     
  40. ஞானம், சக்தி, பலன் ஒரு செயலில் நிதானமாகக் கலந்திருந்தால் நிறைவு ஏற்படும்.
     
  41. அடிமட்டத்திலுள்ள திறமையைக் கைவிட முன்வராவிட்டால், உயர்ந்த திறமை புதியதாக எழாது. மனம் சிந்தனையின்றி ஞானம் பெற, உடல் உணர்வின் தற்போதைய தீவிரம் அழிய வேண்டும்.
     
  42. மனிதனின் (uniqueness) தனித்தன்மை உச்சத்தை அடைய, இறைவனோடு அவன் ஐக்கியமாக வேண்டும்.
     
  43. அனந்தம் அளவு இல்லாத விசாலம். (Uniqueness) தனித்தன்மை அளவு இல்லாத செறிவு (concentration).
     
  44. அனந்தமும், தனித்தன்மையும் சிருஷ்டியில் சந்திக்கின்றன. எல்லா நிலைகளிலும் அச்சந்திப்புண்டு.
     
  45. அனந்தமான ஏகமும், தனித்த பலவும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. எல்லா நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் அச்சந்திப்பு எழுகிறது.
     
  46. ஒன்றைப் பலவாகவும், பலவற்றை ஒன்றாகவும் ஆன்மீகத் திருஷ்டி காண்கிறது.
     
  47. பல காலங்களிலும், ஒன்று காலம் கடந்தும் உள்ளது. இவை (eternity) காலத்தைக் கடந்து சந்திக்கின்றன.
     
  48. ஒன்றைப் பலவாக அறியும் மனிதன், காலத்தைக் கடந்தவன்.
     
  49. இரண்டாவதில்லாத ஒன்றும், சர்வம் பிரம்மமும் சந்திப்பது சிருஷ்டியின் (process) வழிவகையில்.
     
  50. சிருஷ்டியின் வழிவகையை அறிய சச்சிதானந்தம் ஜடமாவதையோ, அல்லது ஜடம் சச்சிதானந்தமாவதையோ அறிய வேண்டும். ஜடம் சச்சிதானந்தத்தை அடைவதை அறியாமல் சிருஷ்டியின் இரு முனைகள் தெரியும். வழிவகை புரியாது.
     
  51. தியானத்தின் திருஷ்டி பிரம்மத்தை மனத்தால் அறிய உதவும். ஜடம் – சச்சிதானந்த யாத்திரையை (ascent or descent) அறிய ஏதாவது ஒரு நிலையில் பூரண அனுபவம் வேண்டும்.
     
  52. கல்லூரி மாணவன் மக்களின் கடமை, சர்க்காரின் கடமைகளை அறிவதைப் போல் ரிஷிகள் பிரம்மத்தை அறிந்தனர்.
     
  53. முன்னாள் மந்திரி சர்க்கார் மக்களுக்கு எந்த அளவு கடமைப்பட்டுள்ளது என அறிவார்; பொதுஜனம் அறிவதில்லை.
     
  54. சக்தி (force) தன்னையறிய ஈஸ்வரன் சக்திக்குப் (shakthi) பணிகிறான். பரிணாமத்தைத் துவங்க அவன் செய்வது அது. அதன் மூலம் பரிணாமம் பூர்த்தியாகிறது.
     
  55. உடலளவில் பூரணத்தை வேத ரிஷிகள் கண்டனர். ஆன்மீகத் திருஷ்டியால் அதைக் கண்டனர்.
     
  56. உடலின் சைத்திய புருஷன் வெளிவந்து எல்லாப் பகுதிகளும் சைத்திய புருஷனுடன் பூரண ஐக்கியமடைவதைக் கண்டு, ஜீவாத்மா பரமாத்மா, பிரபஞ்சத்தின் ஆத்மாக்கள் இணைவதைச் சாதிப்பது, சத்தியஜீவியத்தால்தான் முடியும்.
     
  57. எதிரி, வாழ்வில் ஆன்மீகத் தோழன்.
     
  58. வைரி உணர்வின் வாழ்வுக்குக் குரு.
     
  59. பகவானை அன்னை மூலமே அடையலாம்.ஏனெனில் பகவான் அன்னையைச் சரணடைந்துவிட்டார்.
     
  60. பகவானை நேரடியாக அடைய, அவர் செய்தது போன்ற யோகத்தை மேற்கொள்ள வேண்டும்.
     
  61. மனம் பிரம்மத்தை மேலும் அறிந்தால், உணர்வின் சிம்மசொப்பனமான பயம் மறையும்.
     
  62. தாராள மனப்பான்மை தன் உண்மையை இழந்து அகந்தைக்குப் பரோபகாரமாக, சேவை செய்கிறது.
     
  63. உண்மையற்ற நல்ல குணம் எந்த உருவத்திலிருந்தாலும் அகந்தையின் கருவியாகும்.
     
  64. எண்ணத்தையோ, உணர்வையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரணம் மனமும், உணர்வும் விழிப்பாக உள்ளன. ஆன்மாவில் ஜீவன் விழிப்புற்றால் எண்ணங்களையும், உணர்வையும் மறுக்கும் திறன் எழும்.
     
  65. ஒரு விஷயம் புரிந்தால் அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை, துரோகம் செய்தவரை நினைப்பதில்லை எனில் அனுபவத்தால் ஆன்மா விழிப்படைகிறது.
     
  66. மனத்திலும், உணர்விலும் அனுபவமின்றி ஆன்ம விழிப்படைய ஆன்மா நிஷ்டையில் தீவிரமடைய வேண்டும்.
     
  67. மனிதன் ஆன்மாவில் நிஷ்டையில் நிலைப்பது, பிரபஞ்சம் அவனில் நிலைப்பதைச் சற்று நீட்டுவதாகும்.
     
  68. தவசியின் முயற்சி, பிரபஞ்சத்தின் முயற்சியைப் போன்றது, ஆனால் சிறியது.
     
  69. நல்லது செய்ய முனைவதில் நல்லதைவிட முனைப்பு அதிகமிருப்பதால் அது தேவையில்லை.
     
  70. கடமைக்குப் புறம்பாக முனைய எவருக்கும் சட்டமில்லை. அந்த வகையில் கடமை நல்லது. அதுவே முடிவு.
     
  71. தனக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இறைவனுக்கும் கடமையுண்டு. உயர்ந்த கடமைகள் தாழ்ந்தவற்றைத் தனக்குள் அடக்கும்.
     
  72. கடமையேயில்லை என அறிவதே உயர்ந்த கடமை. அந்நிலையில் உலகைக் கடவுள் காண்பது போல் காண்கிறோம். அவருக்குக் கடமையில்லை.
     
  73. சத், பிரம்மம், புருஷன், ஈஸ்வரனாகிறது. மனம் சத்தியத்தைப் பிரம்மமாகவும், தெய்வ மனம் புருஷனாகவும், சத்தியஜீவியம் ஈஸ்வரனாகவும் காண்கின்றன.
     
  74. பிரம்மம், யோகிக்குச் சச்சிதானந்தமாகத் தெரிவது போல், சத்தியம், மனம், தெய்வ மனம், சத்தியஜீவியத்திற்குப் பிரம்மம், புருஷன், ஈஸ்வரனாகத் தெரிகிறது.
     
  75. முனிவர், ரிஷி, யோகி, தெய்வத்திற்குப் பிரம்மமும் சிருஷ்டியும் தனித்துத் தெரிகின்றன. சத்தியஜீவியம் அவற்றை ஒன்றாகப் பார்க்கின்றது.
     
  76. மனம், உணர்வு, ஆன்மாவுக்கு ஆனந்தம், அன்பு, சந்தோஷம், அழகாகத் தெரிகின்றன.
     
  77. நியாயமாகவும் நேர்மையாகவுமிருக்கும் பொழுது நமக்குத் தீங்கிழைத்தால், கோபம் பீறிட்டெழுகிறது. நேர்மையின் தோற்றமிருந்து உண்மையில் நேர்மையில்லாவிட்டால் அடுத்தவர் தீங்கிழைக்க முடிகிறது. அதனால் உணர்வு புரட்சி செய்கிறது.
     
  78. சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஆதாயமாகவும், உலகுக்கு நல்லதாகவும் இருந்தால் ஒரு வேலை வெற்றியாக முடியும். பரமாத்மா, ஜீவாத்மா, பிரபஞ்சம் சந்திக்குமிடத்தில் வாழ்விருப்பதால் அதன் பலன் அனைவருக்கும் உண்டு.
     
  79. ஞானமும் கல்வியும் பல நிலைகளிலுள்ளன :

    செய்த கவனம்; எண்ணம், சிந்தனை; கருவான சிந்தனை; தெளிவான எண்ணம்; புதிய சொந்தமான எண்ணம்; சிக்கல் நீங்கிய சிறப்பான சிந்தனை; கற்பனைக் கருவூலம்; ஒன்றை மற்றதால் அறிவது (செய்தியைக் கரு மூலம் அறிவது); புதிய படைப்பு; நடக்கக்கூடியதை நடைமுறை வெற்றியாகக் கருதும் முதிர்ச்சி; சிந்தனையற்ற விவேகம்.
     
  80. யோக முயற்சி மேலே செல்லும் கட்டத்தில் அடக்க முடியாத ஆசை குறுக்கிடும். வாழ்வின் சாதனைகட்கு அதுவே அளவு. அது போன்றவர் உலகில் குறிப்பிட்ட உச்சகட்டத்தைச் சாதித்துள்ளனர். யோக சக்தி அதன் காலத்தை வெகுவாகச் சுருக்கும்.
     
  81. சச்சிதானந்தத்தையும், ஆழ்மனத்தையும் ஒன்றாக்க வித்தை பயன்படுகிறது. அதற்கு அவ்வித்தை ஒத்துழைக்க வேண்டும். ஜீவாத்மா, பிரபஞ்சம், பரமாத்மாவை ஒன்றாக்க உள் மனமடைந்து உயரே செல்ல வேண்டும்.
     
  82. அறியாமையைக் கடந்தால் சச்சிதானந்தம் ஆழ்மனதுடன் சேரும். மனதைத் தாண்டினால் மூன்று புருஷர்களும் ஒன்று சேர்வார்கள் – ஜீவன், பிரபஞ்சம், பரமாத்மா.
     
  83. மாயை சத்தியத்திலாரம்பிக்கிறது.பிரம்மத்திற்குக் குணமளித்துச் சிருஷ்டிக்கிறது. அறியாமை தெய்வ மனத்தில் அறிவு மறைவதால் எழுகிறது. மனம் சத்தியஜீவியத்தின் கருவி, பிரிவினையால் ஜடத்தையும் உணர்வையும் ஏற்படுத்தி அறியாமையின் கருவியாகிறது. அகந்தை மனிதனுக்கு மட்டும் உண்டு. சிருஷ்டியிலிருந்து பிரித்து, பாதையைத் திருப்பி, புதிய அமைப்பை ஏற்படுத்துகிறது.
     
  84. எண்ணமும், உணர்வும், உடலுணர்வும் ஓரிடத்தில் மட்டும் செயல்படுபவை. மேல்மனத்தில் அவற்றால் ஒன்று சேர இயலாது, ஆழத்தில் சேரும். அவை சேருவது உள்ளே போகும் வழி.
     
  85. மனத்தின் அபிப்பிராயம், உணர்வின் நோக்கம், உடலின் ஆழ்ந்த நோக்கம் ஆகியவை சொரணையாகின்றன. ஆழ்ந்த நோக்கம் உடலின் சொரணையானால், ஆழத்திலிருந்து செயல்படலாம், தோல்வியில்லை.
     
  86. பொதுவாக அன்னையை நம்பினால் வாழ்வின் சிறு விஷயங்களைப் பாதுகாக்கலாம். பக்தியுடனும், அர்ப்பணத்துடனும் சிறு விஷயங்களை அன்னைக்குச் சமர்ப்பித்தால் ஆன்மீக நிறைவுண்டு. அது இல்லாமல் செய்தால் வாழ்வு சிறுமையில் நிலைப்படும்.
     
  87. வாழ்வு நிலைக்கு மேற்பட்ட முன்னேற்றம் பிரச்சினையற்றிருக்கும். அல்லது நம் சக்திக்குட்பட்டு முயற்சி அமையும். வாழ்வு நிலையை முன்னேற்றம் மீறினால், சக்திக்குட்பட்ட முயற்சியானாலும் பிரச்சினை எழும்.
     
  88. ஆசையை அடக்குவது நடத்தை. ஆசையைப் புரிந்து அழிப்பது பண்பு. பீறிடும் சக்தியை மனதால் அடக்குவது நடத்தை. உணர்வின் பக்குவம் பண்பு. ஆசையின் ஆன்மாவை எழுப்பி திசையை மாற்றுவது திருவுருமாற்றம்.
     
  89. திருவுருமாற்றத்திற்கு ஆழ்மன ஆசையைவிட, மேல்மன ஆசை அடங்கும். சட்டம் ஒன்றே. சோகமானவர் சோகத்தை விரும்புகிறார். ஆழ்மனப்பற்று அது.
     
  90. மரியாதை நாமறிவது. உடலுணர்வானால் மானம் ஆழ்மனத்திலுள்ளது. திருவுருமாற்றத்திற்கு அதிக சக்தி தேவை. அது அதிக சக்தியையும் தரவல்லது.
     
  91. மானம் திருவுருமாற்றமடைந்தால் உணர்வைக் கடக்கிறோம். சமூகத்தினின்று, பெற்றோர் மூலம் உடலில் பெற்றவை இயற்கையானவை. சோதனை செய்வது நல்லது.
     
  92. ஆபாசமான தொந்தரவுக்கும் யோகப் பலனுண்டு. என் உடலுணர்வு சத்தியஜீவிய ஆனந்தமாகட்டும் என்ற பிரார்த்தனை கடைசித் தடையை நீக்கி, அழைப்பை உள்ளிருந்து எழுப்பும்.
     
  93. இடைவிடாத பிரார்த்தனையால் காரியம் பலிக்கும். இடைவிடாத நினைவால் அன்னை பலிக்கும்.
     
  94. ஆர்வம் நமக்குரியது. அருள் அன்னைக்குரியது.
     
  95. இதயத்தின் அக்னி ஆர்வம்.
     
  96. அகந்தையிலுள்ள ஒளி தானழிய பிரார்த்திக்கும். அகந்தை தன் அழிவை நாடாது.
     
  97. விழிப்பானது அகந்தையா, அதன் கருவான ஒளியா என்பதே கேள்வி.
     
  98. தமஸ், அக்னியை அழிக்கும்.
     
  99. அக்னியை வளர்ப்பது, யோகம்.
     
  100. ஜீவன் அக்னியாவது, யோக சித்தி.